இசையமைப்பாளர் மீது சீறிப் பாய்ந்த உதவி இயக்குநர்
-மணி ஸ்ரீகாந்தன்-
சிங்களத் திரைப்படத்துறையில் பல வெற்றிப்படங்களை தந்துகொண்டிருக்கும் தயாரிப்பாளர் பேராதனை ஜுனைதீன். தமிழகத்தில் சினிமா ஆர்வத்தில் ஏமாந்து போகும் திறமையான இளைஞர்களின் சில சோகக் கதைகளையும் எம்மோடு பகிர்ந்துக் கொண்டார்.
"நான் படவிசயமாக அடிக்கடி சென்னைக்கு செல்வதுண்டு. அப்போது நிறைய இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என பலதரப்பட்ட கலைஞர்களை சந்திப்பது வழக்கம். அந்த சந்தர்ப்பங்களில் சினிமாவில் பணியாற்றும் துணை இயக்குநர்களை பார்த்திருக்கிறேன். அவர்கள் மிகவும் ஆர்வமான இளைஞர்கள் சினிமாவிற்காக எதையும் செய்ய தயாரானவர்கள். இதோ அப்படிப்பட்ட ஒரு இளைஞனின் கதை:
அந்த துணை இயக்குநராக பணியாற்றிய இளைஞனுக்கு ஒரு இருபத்தைந்து வயதிருக்குமாம். நல்லக்கதையோடு ஒரு தயாரிப்பாளரை சந்தித்து அவரிடம் கதை சொல்லியிருக்கிறார். தமிழக சினிமாவில் உள்ள ஒரு கெட்டப்பழக்கம்தான் கதை சொல்வது. கதை உரிமையாளர் ஒரு கதையை தயார் பண்ணிக் கொண்டு அதை நாயகனிடம் சொல்வதற்காக நேரம் கேட்டு அவர் வீட்டுக்கு நாயாக, பேயாக அலைய வேண்டும். கிடைக்கும் சந்தர்ப்பத்தில் அவருக்குக் கதை சொல்ல வேண்டும். அந்த நேரத்தில் கதைக்கேட்கும் ஹீரோ தமக்கு வரும் தொலைபேசி அழைப்புகளுக்கும் பதில் சொல்லிக்கொண்டே நம் கதையை கேட்டுக்கொண்டிருப்பார். பிறகு நாம் கதையை முடித்தவுடன் அந்த ஹீரோ "நீங்க சொன்னக் கதை எனக்கு புரியவில்லை. மீண்டும் ஒரு தடவை சொல்லுங்க" என்பார்.
