Saturday, May 11, 2013

தொழிலதிபர் தெ.ஈஸ்வரனின் நினைத்தாலே இனிக்கும்…

அந்த ஈரானியர் அருளிய 'கீதோபதேசம்'


மணி ஸ்ரீகாந்தன்


இலங்கையில் பல மெகா தமிழ்க் கோடீஸ்வரர்களும் தொழிலதிபர்களும் இருக்கின்ற போதிலும் தமிழ்க் கலை இலக்கிய உலகுக்கு ஈந்து மகிழக்கூடிய புரவலர்களை தேடிப்பிடிப்பது மிகவும் கஷ்டம். இவ்வகையில் தொழிலபதிபராக இருந்து கொண்டே தமிழுக்கும் சைவத்துக்கும் தொண்டு செய்து வருபவர், எளிமையுடனும் எவருடனும் பழகக்கூடிய தெ.ஈஸ்வரனார் என்பது குறித்துச் சொல்லப்பட வேண்டிய ஒன்று. இவரைத் தவிர வேறு எந்தத் தமிழ்த் தொழிலதிபரைத்தான் நீங்கள் பட்டி மன்றங்களிலும் நூல் வெளியீட்டு விழாக்களிலும் காண முடியும்? இவர் அழகு தமிழில் ஆற்றோட்டமாகப் பேசக் கூடியவரும்கூட. எமது பத்திரிகையாளரை வீட்டுக்கு அழைத்து காலை உணவளித்ததோடு செவிக்கும் உணவளித்துத் தந்த தகவல்களை இங்கே தருகிறோம், தொழிலதிபரின் இன்னொரு சுவையான பக்கத்தையும் தெரிந்து கொள்வதற்காக.


“அப்போ நான் சென்பெனடிக்ஸ் பாடசாலையில் ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தேன். மகேஷ் என்ற ஒரு மாணவன் என்னோடு படித்தான். அவன் இப்போது அவுஸ்திரேலியாவில் டொக்டரா இருக்கான். அவங்க அப்பா இங்கு சட்டத்தரணியாக பணிபுரிந்தார். ஒரு முறை மகேஷ் என்னிடம் வந்து, ‘எங்கப்பா தினமும் இரவில மது குடிப்பாரு... எனக்கும் உடம்புக்கு நல்லது என்று கொஞ்சம் கொடுப்பாரு.... அது கொஞ்சம் கசக்கும். பிறகு சிறிது நேரம் செல்லச் செல்ல உடம்புக்கு புது தெம்பு வந்த மாதிரி இருக்கும்” என்று சொன்னான்.

வகுப்பிலும் மகேஷ்தான் முதல் மாணவனாக வருவான். அவன் அந்த சம்பவத்தை கூறிய சில நாட்களில் பள்ளியில் ஒரு விவாதம் நடைபெற்றது. மது மனிதனுக்கு அழிவா, ஆக்கமா? என்ற தொனிப் பொருளில் அந்த விவாதம் நடந்தது. நான் மது ஆக்கமே என்ற அணியில் பேசினேன். அப்போது நான் ஒரு விடயத்தை குறிப்பிட்டேன். ‘நம்ம பள்ளியில் படிக்கிற மகேஷ் கூடத்தான் பியர் குடிக்கிறார். அவர் என்ன அழிஞ்சா போயுட்டாரு! இல்லையே! பள்ளியில் முதல் மாணவனாத்தானே வருகிறார்’ என்று பகிரங்கமாக ஒரு ரகசியத்தைப் போட்டு உடைத்ததும் அந்த மாணவன் அழ ஆரம்பித்து விட்டான். பள்ளி ஆசிரியர்களும் என்னை, ‘இப்படியா விவாதம் பேசுறது’ என்று திட்டினார்கள். பிறகு அந்த மாணவன் பள்ளியில் நடந்த சம்பவத்தை வீட்டில் கூற அவர் அப்பா பாடசாலைக்கு வந்து என்னைப் பார்த்து, ‘ஏன்டா அப்படிச் சொன்ன? அவன்தான் ஏதோ பொய் சொல்றானா இப்படியா பொது மேடையில் பேசுறது?’ என்று கத்திவிட்டுப் போனார். அதன் பிறகு விவாதமேடைகளில் கலந்து கொள்வதென்றால் ரொம்பவும் அவதானமாகத்தான் பேசுவேன்’ என்று தமது பள்ளி வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை சுவாரஸ்யமாக சொன்னார் ஈஸ்வரன்.

தலை நகரில் தமிழ்த் தொழிலதிபர் பட்டியலில் முதல் வரிசையில் இடம் பிடித்திருக்கும் தெ. ஈஸ்வரனின் பூர்வீகம் பற்றி கேட்டோம்.

“தமிழ் நாட்டில் திருநெல்வேலிதான் என் சொந்த ஊர். டோனாவூர் வைத்தியசாலையில் தான் நான் பிறந்தேன். வளர்ந்தது எல்லாமே என் அம்மாவின் ஊரான வள்ளநாடுதான். வள்ளநாடு விவசாயத்தை நம்பி வாழ்கிற ஊர். இப்போதான் அந்த ஊருக்கு வங்கி கட்டடங்களே வந்திருக்கு! அங்குள்ள வள்ளநாடு பாலர் பாடசாலையில தான் நான் அரிவரி படித்தேன். சுப்பையா மாஸ்டர்தான் எனக்கு அகரம் கற்றுக்கொடுத்த ஆசான்.

இளமையில்..
அந்தப் பள்ளியில் எனக்கு வேலு என்ற ஒரு நண்பர் இருந்தார். வகுப்பில் அவர்தான் நம்ம பக்கத்தில அமர்ந்திருந்த மாணவன். குற்றாலம் நகராட்சியில் வேலைபார்த்து வந்தவர். எப்போது நான் திருநெல்வேலிக்கு சென்றாலும் என்னைப் பார்க்க வந்து விடுவார். இப்போ அவர் உயிரோடு இல்லை” என்ற ஈஸ்வரன், தனது பெற்றோர் பற்றி இப்படிச் சொல்கிறார்.

“அப்பா வி.டி.வி. தெய்வநாயகம். அம்மா சிதம்பரத்தம்மாள். அப்பா உழைப்பால் உயர்ந்தவர். தனது பதினோராவது வயதில் தமிழகத்திலிருந்து அனாதையாக கொழும்புக்கு வந்தவர்தான் என் அப்பா. இங்கு வந்து கடைகளில் மூட்டை தூக்கி, கடையை கூட்டிப் பொருக்கி எடுபிடி வேலையெல்லாம் செய்திருக்கிறார். பிறகு படிப்படியாக உயர்ந்து கொழும்பில் பெரிய கம்பனிகளுக்கு சொந்தக்காரரானார் என்பது வரலாறு. அப்பா இங்கு ஒரு நல்ல இடத்திற்கு வந்ததும் அவரின் சொந்த ஊரான திருநெல்வேலியில் வி.டி.வி. தெய்வநாயகம் பிள்ளை உயர் நிலை பள்ளியை கட்டிக்கொடுத்திருக்கிறார்.

பிறகு வள்ள நாட்டில் சிறிய வீட்டிலிருந்த நாங்கள் திருநெல்வேலியில் ஒரு பெரிய வீடு வாங்கி அதில் குடியேறினோம். நான் பிறந்த அந்த சிறிய வீட்டை வாடைக்கு கொடுத்திருக்கிறோம். அது மாதிரி நான் படித்த அரிவரி பாடசாலையும் இன்று கல்யாண மண்டபமாக மாறிவிட்டது’ என்று கடந்து போன வாழ்க்கையை நினைத்து பெருமூச்சு விடும் ஈஸ்வரனிடம், சின்ன வயதுக் குறும்பு பற்றிக் கேட்டோம்.

“எங்கப்பா ரொம்பவும் கண்டிப்பானவர். பிறகு நான் எப்படி குறும்பு செய்ய முடியும்? அப்பா காலையில் கடைக்குச் சென்றால் இரவு ஒன்பது மணிக்குத்தான் வீட்டிற்கு வருவார். அதனால் நான் எங்கு சென்றாலும் மாலை ஆறு மணிக்குள் வீட்டில் ஆஜராகி விட வேண்டும். ஒருநாள் எனது நண்பர் செல்வரத்தினம் செல்லமஹால் தியேட்டரில் புதுப் படம் ஒன்று வெளியாகி இருப்பதாக சொல்லி என்னை அழைத்துச் சென்றார். நான் முடியாது என்றுதான் சொன்னேன். ஆனால் நண்பரின் வற்புறுத்தலில் செல்ல வேண்டியதாயிற்று. படம் முடிந்து வீடு திரும்பும் போது மாலை ஆறரை மணியிருக்கும். வழமையாக இரவு ஒன்பது மணிக்கு வீட்டுக்கு வரும் அப்பா அன்று ஏதோ ஒரு காரணத்திற்காக நேரத்தோடு வீட்டிற்கு வந்திருந்தார். என்னைக் கண்டதும் எங்கே சென்றாய் என்று கேட்டார். எனக்கு உடனடியாக வாயில் பொய் வரவில்லை. நான் விக்கித்து நிற்க அப்பா பிரம்பை எடுத்து விளாசித் தள்ளினார்.

தற்போது அமெரிக்காவில் வசிக்கும் அவரது
இனிய நண்பர் சம்பத் குமாருடன் ஈஸ்வரன்
வீட்டில் நான் தான் மூத்தவன். அதனால் என்னை அடித்து வளர்த்தால்தான் எனக்கு கீழே உள்ள சகோதரர்கள் நன்றாக வளர்வார்கள் என்பது அப்பாவின் எண்ணம். அதனால் எப்போதும் அடிவாங்குவது நான்தான். எனக்கு அடிவிழும் போது அதைத் தடுக்க வரும் அம்மாவிற்கும் ஓரிரு அடி விழும். அப்பாவிடம் அதிகமாக அடிவாங்கியதால்தான் நான் இன்று ஒரு நல்ல மனிதனாக இந்த சமூகத்தில் நிற்கிறேன் என்று இப்போது நினைக்கிறேன். ‘ரோல் மொடல்’ அப்பாதான்” என்று தந்தையின் பெருமையை புகழும் ஈஸ்வரனின் படிப்பு பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்பட்டோம். சென்பெனடிக்ஸில் படித்த போதுதான் கே.வி.எஸ். மோகன், வைரவநாதன், ரட்ணராஜா ஆகியோர் எனக்கு நண்பர்களானார்கள். என் படிப்பு வருடத்தில பரீட்சை ஆரம்பமாகிற அந்த மூன்று மாதங்களைத்தவிர மற்ற நாட்களில் எல்லாம் ஊர் சுற்றுவது, பட்டிமன்றங்களில் பேசுவது என்று தான் இருப்பேன். இறுதி மாதங்கள் ஏதோ படித்துவிட்டு பாஸாகி விடுவேன். சென்பெனடிக்ஸில படித்த காலம் போக உயர் கல்விக்காக சென்னை பச்சையப்பாவில் படித்த அந்த நான்கு ஆண்டுகளும் பொன் எழுத்துக்களால் பதிக்கப்பட வேண்டிய காலங்கள். தமிழகத்திற்கு நிறைய வி.ஐ.பிக்களை உருவாக்கி தந்த பெருமை பச்சையப்பாவுக்கு உண்டு. நான் படித்த போது இன்றைய அமைச்சராக இருக்கும் வேலவேந்தன், ஆற்காடு துரைமுருகன் உள்ளிட்டோர் எம்மோடு படித்தார்கள். அந்த இனிமையான நாட்களில் வருடத்திற்கு ஒரு முறை ‘ஹொஸ்டல்டே’ என்று ஒரு தினத்தை கொண்டாடுவோம்.

கிரிக்கெட் போட்டி, கச்சேரி, நாடகம், என பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் அங்கே அரங்கேறும். போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவிப்பார்கள். வருடந்தோறும் நடக்கும் இவ் விழாவை வேடிக்கை பார்ப்பதோடு இலங்கை மாணவர்கள் ஒதுங்கிக் கொள்வார்கள். தமிழ் நாட்டுக்காரர்களை வெல்ல முடியுமா என்ற ஒரு பயம்.

இருந்தாலும் அந்தப் போட்டிகளில் பங்கு பற்றி வெற்றிபெற வேண்டும் என்ற வெறியும் எமக்குள் இருந்தது.

ஒரு முறை நாங்களும் அவர்களுடன் போட்டியிடத் தயாரானோம். அந்த நாட்களில் இலங்கையில் கிடைக்கும் சில பொருட்கள் இந்தியாவில் கிடைப்பதில்லை. இங்கே ஐந்து ரூபாவிற்கு விற்கப்பட்ட பைலட் பேனாவுக்கு அங்கு ஏகப்பட்ட கிராக்கி இருந்த காலம். எனவே நாங்கள் இங்கிருந்து பைலட் பேனா சொக்லட்டுகள் போன்றவற்றை வாங்கிச் சென்று சென்னையில் ஹொஸ்டலில் தங்கியிருந்த விளையாட்டில் திறமையான மாணவர்களுக்கு அவற்றைப் பரிசாக கொடுத்து அவர்களை எங்களின் கிரிக்கெட் அணிக்காக வாங்கினோம். அப்படி எல்லா விளையாட்டிலும் சிறந்த மாணவர்களை இலங்கைப் பொருட்களைக் கொடுத்து விலையாக வாங்கினேன். அதன் பிறகு அந்த அணிகளுக்கு நான் தலைமை தாங்கினேன். விளையாட்டில் நான் ஒரு வீரன் கிடையாது. சொல்லப்போனால் மட்டை பிடிக்கவே தெரியாது. சுமாராக விளையாடுவேன். அப்படி அவர்கள் கஷ்டப்பட்டு விளையாடி ஜெயிக்க அணித்தலைவரான நான் வெற்றிக் கிண்ணத்தை வாங்கிக் கொள்வேன்.

 அந்த கல்லூரி நிகழ்வுகளில் இறுதியாக நடைபெறும் விநோத உடை போட்டிக்கு நாங்கள் கல்யாண ஊர்வலம் செல்வதாகத் தீர்மானித்தோம். 
அதற்கு மேலும் நாதஸ்வரம் ஒரிஜினலாக இருக்க வேண்டும். பச்சையப்பா கல்லூரிக்கு அருகில் மேளநாதஸ்வரம் வாடகைக்கு கொடுக்கும் ஒரு கடை இருந்தது. அவரிடம் சென்று மேள நாதஸ்வரம் வாடகைக்கு கேட்டோம். அதற்கு அவர் ‘மேளம் வாசிக்க கூடியவராக இருந்தால் தரலாம் உங்களுக்கு எப்படி தரமுடியும்? பலமாக தட்டி இதை உடைத்து விடுவீர்கள்’ என்று மறுக்க நாங்கள் விடாது அவரிடம் கெஞ்சினோம். “அரை மணி நேரத்திற்கு அறுபது ரூபா. மெதுவாகத்தான் அடிக்க வேண்டும். நிகழ்ச்சி நடக்கும் போது கல்லூரியின் வாசலில் நான் வாத்தியங்களோடு வந்து நிற்பேன். அப்போது நீங்கள் அதை வாங்கிக் கொள்ளலாம். அரை மணித்தியாலயத்துக்குள் கொண்டு வந்து தர வேண்டும்’ என்று ஏகப்பட்ட கண்டிசன் போட்டார்.

பிறகு நிகழ்ச்சி ஆரம்பமாகியது. மேள, நாதஸ்வரம் எமது கைகளுக்குக் கிடைத்தது. நான்தான் மேளம் அடித்தேன். இப்படியொரு கல்யாண ஊர்வலத்தை பச்சையப்பா கல்லூரி முதல் முறையாக பார்த்த போது விக்கித்து நின்றது. மாணவர்களின் ஏகப்பட்ட கைதட்டல் விசில் என அரங்கம் அதிர எனக்கு உற்சாகம் வந்துவிட மேளக்காரன் போட்ட நிபந்தனையை மீறி மேளத்தை பலமாக அடிக்க ஆரம்பித்தேன். கல்லூரி வாசலில் காத்திருந்த மேளக்காரனுக்கு மேளத்தின் ஓசை பலமாக கேட்க, அவன் குய்யோ முறையோ எனக் கத்திக்கொண்டு அரங்கத்துக்குள் ஓடி வந்தான். அவனை நாலைந்து மாணவர்கள் தடுக்க அவன் கத்த.... ஒரே அமளி! பிறகு அவனை சமாளிக்க போதும் போதுமென்கிறாகி விட்டது. பிறகு நேரம் கடந்துவிட்டதாகவும் நிபந்தனையை மீறியதாகவும் கூறி நூறு ரூபா கேட்டான். அவனை ஒரு வாறு சமாதானப்படுத்தி எண்பது ரூபாவை கொடுத்து அனுப்பினோம்” என்று பச்சையப்பா கல்லூரியின் பழைய ஞாபகங்களை மீண்டும் நினைவுப்படுத்தி மகிழ்கிறார். (இந்த சம்பவத்தை கூறும் போது ஈஸ்வரன் விழுந்து விழுந்து சிரித்தார்)

அப்பாவின் நிறுவன ஊழியர்கள்: சோமசுந்தரம்,
(அடுத்தவர் பெயர் ஞாபகம் இல்லை)
சந்திரன்,(உறவினர்),ஈஸ்வரன்,
திருநாவுக்கரசர்(மாமா)
மறக்க முடியாத ஒரு சம்பவம் சொல்லுங்களேன் என்று ஈஸ்வரனின் ஆர்வத்தை இன்னும் அதிகமாக்கினோம்.

“தேயிலை ஏற்றுமதி வேலையாக நான் தெஹரான் சென்றிருந்தேன். என் முதல் வெளிநாட்டு பயணமும் அதுதான்.

அங்கே ஒரு சிறிய ஹோட்டலில் தங்கியிருந்தேன். அங்குள்ள பலருக்கு ஆங்கிலம் தெரியாது. அதனால் வெளியே எங்கும் சுற்றுவதில்லை. எனது பக்கத்து அறையில் ஒரு ஆங்கிலேயர் தங்கியிருந்தார். நான் நான்கு நாள் அங்கிருந்ததால் அவருடன் நல்ல பழக்கம் ஏற்பட்டது. ஒருநாள் அவரும் நானும் ஹோட்டலின் கீழ் தளத்துக்கு வந்தோம். அங்கே உள்ள ஒரு மண்டபத்தில் ஈரான் நாட்டு திருமணம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நானும் அந்த ஆங்கிலேயரும் ஈரான் நாட்டு திருமணம் எப்படி நடக்கிறது என்பதை அறியும் ஆவலில் வெளியே நின்று பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது மண்டபத்தில் இருந்த ஒரு ஆள் எங்களையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். எனக்கு அவரை பார்க்க கொஞ்சம் பயமாக இருந்தது.

“அவருக்கு நாம் இங்கிருந்து பார்ப்பது பிடிக்கவில்லை போல” என்று ஆங்கிலேயரிடம் சொன்னேன். அதற்கு அவர் ‘நம்மள ஒன்றும் சொல்லவில்லையே’ என்றார். பிறகு அந்த ஆள் உள்ளே சென்று ரிசப்சனில் இருந்த நபரை அழைத்துக் கொண்டு நேராக எங்களிடம் வந்தார்.

ரிசப்சனில் உள்ள அந்த நபர், ‘இவர் மணப் பெண்ணின் தகப்பன். உங்களை உள்ளே வந்து திருமணத்தை பார்க்கச் சொல்கிறார்’ என்றார். நாமும் அவருடன் உள்ளே சென்று அங்கிருந்த கதிரைகளில் அமர்ந்து ஈரானிய திருமண சடங்குகளை பார்த்தோம். திருமணம் முடிந்ததும் நாம் வெளியே வந்தோம். உடனே மணப் பெண்ணின் தகப்பன் ஓடி வந்து எங்களை சாப்பிட அழைத்தார். நாமும் சங்கடப்பட்டு கொண்டு சென்றோம். அங்கே எங்களுக்கு விஷேசமான கவனிப்பு. அதை வார்த்தைகளில் சொல்ல முடியாது. எல்லாமே கை சாடையில்தான் நடந்தது. நான் திக்குமுக்காடி போனேன். அவர் ஏன் எங்களை அப்படி கவனிக்க வேண்டும்? மொழியால், இனத்தால், தேசத்தால் நான் ஒரு அந்நியன். நான் திரும்ப அவரைச் சந்திப்பேனா என்றே தெரியாது.

திருமணத்தன்று..
எங்களுக்கிடையே எந்த உறவும் இல்லை. நான் ஒரு சாதாரண வழிப்போக்கன் மாதிரி. ஆனால் அந்த மனிதரோ எந்த எதிர்ப்பார்ப்புமின்றி எம்மை உபசரித்தது எங்களை பிரமிப்புக்குள்ளாக்கியது.

எனினும் ஒன்றை மட்டும் தெளிவாகப் புரிந்து கொண்டேன். ஒருவரை உபசரிப்பதற்கு இனம், மொழி, தேசம் பார்க்கத் தேவையில்லை என்பதுதான் அது. விருந்தோம்பலுக்கு அதுதான் இலக்கணம். இன்னும் அந்த ஈரானியரின் அன்பு என் மனதில் பசுமையாக நிற்கிறது” என்று தெஹ்ரான் பயணம் பற்றி விவரித்த ஈஸ்வரன் அந்த பயணத்தின் தொடர்ச்சியாக சோமாலியாவில் நடந்த ஒரு அதிர்ச்சியான சம்பவத்தை இப்படி சொல்கிறார்.

“ஆபிரிக்க நாடான சோமாலியாவிற்கு ஏடனின் இருந்து விமானம் ஏறினேன். அது ஒரு சிறிய விமானம். மொத்தம் இருபது பேர்தான் பயணிக்க முடியும். ஒரு கறுப்பினத்தவர் தான் அந்த விமானத்தை செலுத்தினார். பெரிய சத்தத்துடன் புறப்பட்ட அந்த விமானம் சில மணித்தியாலங்களில் சோமாலியாவில் தரையிறங்கியது. விமான ஓடுபாதை வெறும் மண்தரையாக காணப்பட்டதால் புழுதி விமானத்தை மறைத்து விட்டது. புழுதி அடங்கிய பின்பே நாம் தரையில் இறங்கினோம். ஆரம்பமே இப்படி என்பதால் எனக்கு இந்தப் பயணம் வெறுத்துப் போயிருந்தது. அந்த சிறிய விமான நிலையத்தில் என் பாஸ்ட்போட்டை பார்த்து விட்டு எங்கே வீசா என்று கேட்டார்கள். அதற்கு நான் “இந்த நாட்டுக்கு வீசா தேவையில்லை. விமான நிலையத்தில் இறங்கியதுமே பதினைந்து நாளைக்கு வீசா தருவார்கள்” என்று இலங்கையில் சொன்னதாக அவர்களிடம் கூறினேன். அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளாது என்னை கைது செய்தார்கள்.

இராணுவம் துப்பாக்கிகளுடன் சூழ்ந்து கொள்ள என்னை ஒரு ஜீப்பில் ஏற்றி அழைத்துச் சென்றார்கள். நான் சோமலியாவில் தரை இறங்கிய போது அங்கே எனது ஏஜன்ட் என்னைக் கண்டு கையசைத்தான். இப்படியொரு சம்பவம் நடந்த பிறகு அவனைக் காணவில்லை. நான் உடம்பெல்லாம் வேர்த்து வெல வெலத்து போயிருந்தேன். சிறிது நேரப் பயணத்தின் பின் ஒரு காவல் நிலையத்தினுள் நான் அழைத்து செல்லப்பட்டேன். அங்கே அமர்ந்ததும் என்னை ஒரு உயர் அதிகாரி பார்க்க வந்தார். அவர் பெயர் நாசர். அவர் வந்து என்னை விசாரித்தார். நான் ஆரம்பத்தில் சொன்னதையே சொன்னேன். பிறகுதான் அந்த அதிகாரி, ‘நீ ஒரு வாரத்திற்கு முன்பு வந்திருந்தால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டிருக்காது. ஏனென்றால் இப்போது இந்த நாட்டை இராணுவப் புரட்சியின் மூலம் கைப்பற்றி விட்டோம்’ என்றார். பிறகு அவர் எனக்கு பதினைந்து நாள் வீசா தருவதாகவும் என் வியாபாரத்தை கவனிக்கும் படியும் கூறினார்.

நான் என்னை விட்டால் போதும். எனக்கு இந்த வியாபாரமே வேண்டாம். என்று சொல்லிவிட்டு, அடுத்த பிளேன் எப்போது உள்ளது என விசாரிக்கத் தொடங்கினேன். அதிகாரியோ, ‘இல்லை நீங்கள் இங்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் பிசினஸ் செய்யலாம்’ என்று வாக்குறுதி தந்தார். அப்போது என்னை அழைத்துச் செல்ல விமான நிலையம் வந்திருந்த என் ஏஜன்டும் ஓடி வந்தான். பிறகு அவருடன் ஒரு டெக்ஸியில் ஏறி ஹோட்டலுக்குச் செல்லலாம் என்றேன். அப்போதுதான், அந்த நாட்டில் ஹோட்டலே கிடையாது என்பது தெரிந்தது. பிறகு எப்படியோ ஆங்கிலேயர்கள் தங்குகின்ற ஒரு தங்கு விடுதியை கண்டு பிடித்தோம். அங்கே பத்து அறைகள் தான் இருந்தன. அதை ஒரு பிரிட்டிஸ் பெண்மணிதான் நிர்வகித்து வந்தார். என்னைக் கண்டதும் கறுப்பர்களுக்கு இங்கே இடம் கிடையாது என்று கூறிவிட்டார் அந்தப் பெண். முதல் தடவையாக ஒரு பெண்ணிடம் கருப்பன் என்று பெயர் வாங்கியதில் எனக்கும் கொஞ்சம் அதிர்ச்சிதான். ஆனாலும் என்னோடு வந்த ஏஜன்ட் விடவில்லை. மேலிடத்தில் புகார் செய்வதாக கூற பிறகு அவள் எனக்கு ஒரு அறை தர ஒப்புக்கொண்டாள். ஒதுக்குப் புறமான இடத்தில் இருந்த ஒரு அறையைத் தந்தாள்.

அதன் பிறகு எனது வியாபாரத்தைப் பார்க்க வெளியே கிளம்பினேன். காரில் பயணிப்பதே பெரிய பயங்கரம். டமடம என்று சத்தம் வரும். பழைய காலத்து கார். ஆபிரிக்கன்தான் காரை செலுத்தினான். ரோடும் ஒரே குண்டும் குழியுமாக இருந்தது. அங்கே இரவில் பயணிப்பது ரொம்ப ஆபத்தானது. வழியில் கார் நின்று விட்டால் உதவி என்று கேட்க அங்கே ஒருவரும் இல்லை. அப்படி நான் காரில் பயணித்துக் கொண்டிருந்த போது அந்த கார் சாரதி ஒரு வகை புல் கற்றையை கையில் வைத்துக்கெண்டு தின்றுகொண்டே வந்தான். நான் அவனிடம் அது பற்றி கேட்க அவன் ‘உனக்கு வேனுமா’ என்று கேட்டான். மேலதிக தகவல் எதையும் அவன் தரவில்லை. பிறகுதான் என் ஏஜன்ட் மூலமாக அது பற்றி தெரிந்து கொண்டேன். அந்தப் புல் சோமாலியாவில் மதுவுக்கு நிகரான ஒரு போதை பொருளாம். அதன் பிறகு இந்த விடயத்தை என் பக்கத்து அறையில் தங்கியிருந்த ஜெர்மன் காரனிடம் சொன்னேன். அதற்கு அவன் ‘நாமும் அந்த புல்லை சாப்பிட்டு பார்ப்போம் வாங்கி வா’ என்றான். நானும் ஐந்து டொலரை கார் சாரதியிடம் கொடுத்து புல்லை வாங்கி வரச் சொன்னேன். அதை நானும் அந்த ஜெர்மனியனும் சாப்பிட்டோம். அது சுவையில் புளிப்பாக இருந்தது. நாங்கள் எதிர்பார்த்த போதை ஏற்படவில்லை. அந்த ஆபிரிக்கன் நம்மை ஏமாற்றி விட்டான். என்றும் ஐந்து டொலரை வீனாக்கிவிட்டோம் என்றும் நினைத்துக் கெண்டோம்.

அதன் பிறகு படுத்துத் தூங்கி விட்டோம். அடுத்த நாள் பதினொரு மணிக்கு ஏஜண்ர்ட் வந்து கதவை தட்டும் வரை தூங்கியிருக்கிறோம். நாம் சாப்பிட்ட அந்த புல் சில மணி நேரங்களுக்கு பிறகுதான் வேலை செய்திருக்கிறது என்பது அப்போதுதான் புரிந்தது” என்று நாற்பதாண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தை சுவைபட சொன்னார் ஈஸ்வரன்.

யாரையாவது சந்திக்க ஆசைப்பட்டு சந்திக்க முடியாமல் போன சந்தர்ப்பம் ஏதேனும் உள்ளதா? என்று அவரிடம் கேட்டோம்.
“ஒரு முறை நான் பூனே போனபோது (ஒஷோ என இப்போது அறியப்படும்) ரஜனீஷ் சாமியை சந்திக்க ஆசைப்பட்டு அவரின் ஆசிரமத்திற்கு சென்றேன். அங்கே அவரைச் சந்திக்க வேண்டுமென்றால் ‘எய்ட்ஸ் தடுப்பூசி’ போட்டுக்கொண்டுதான் வரவேண்டும் என்பது நிபந்தனை. அந்த ஆசிரமத்தில் செக்ஸ் விடயங்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. உலகத்தில் உனக்கு இதுதான் இன்பமொன்றால் அதை முழுவதுமாக அனுபவித்த விட்டு ‘சீ’ என்று வெறுப்பு வரும் போது என்னிடம் வா என்பது ரஜனீஷ் தத்துவம். அதனை ஏற்ற நான் அவரை சந்திக்கும் ஆர்வத்தில் ஊசிபோட சம்மதித்தேன். இது என் மனைவிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இது போக அந்த ஆசிரமத்தில் ஆணும் பெண்ணும் ஜோடி ஜோடியாக இருப்பதைப் பார்த்த என் மனைவி முகத்தை சுளித்துக் கொண்டு இப்படியான ஒருத்தரை நீங்கள் சந்திக்க வேண்டுமா? என்றார். ஆனால் நான் எதையுமே கேட்பதாகவே இல்லை. பிறகு ஊசி போடுவதற்கு போன போதுதான், இந்த ஊசி போட்டு மூன்று நாள் கழித்துதான் நீங்கள் அவரைப் பார்க்க வேண்டும் என்றார்கள். ஆனால் குறித்த நேரத்தில் நாம் நாடு திரும்ப வேண்டும் என்ற காரணத்தினால் அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் ரஜனீஷை சந்திக்கவிருந்த அந்த நல்ல வாய்ப்பு கை நழுவி போனது’ என்று இப்போதும் வருத்தப்படும் ஈஸ்வரனிடம் வாழ்க்கையைப் பற்றி சில வார்த்தைகள் கேட்டோம்.
“வாழ்க்கை சந்தோசமானது. வாழ்க்கையின் முக்கியத்துவத்தை தெரிந்து வாழ்ந்தால் அது இனிமையானதுதான். வாழ்க்கையில் பிறருக்கு கொடுக்கும் பாக்கியமும் இருந்தால் அது மேலும் மகிழ்ச்சிகளைக் கொடுக்கும். நான் இறைவனிடம் இன்றும் வேண்டுவது, வாழும் கடைசி காலம் மட்டும் கேட்டு வருபவர்களுக்கு இல்லையென்று சொல்லாது கொடுக்கின்ற வல்லமை வேண்டும் என்ற வரத்தைத்தான். நிறைய பேருக்கு இந்த உண்மை தெரியாது. கொடுக்க கொடுக்கத் தான் செல்வம் பெருகும். ஒருவனுக்கு நாம் எந்த உபகாரமும் எதிர்ப்பார்க்காமல் செய்யும் உதவி பல மடங்காக பெருகி நமக்கு மீண்டும் வந்து சேரும் என்பதுதான் அந்த உண்மை” என்று கூறி முடித்தார் ஈஸ்வரன்.

Saturday, May 4, 2013

ரேடியோ வீட்டுக்கு வந்த கதை

"வானொலி பெட்டிக்குள்  குள்ள மனிதர்கள் இருக்கிறார்களா என நோட்டம் விட்டேன்."


மணி  ஸ்ரீகாந்தன்

இன்று நம் வீடுகளில் கம்பியூட்டர் சிறிதும் பெரிதுமாக வந்து உட்கார்ந்து சண்டித்தனம் பண்ணுகிறது. 1940களின் கடைசியில் இந்த சண்டியன் வரிசையில் முதல் சண்டியன் நம் வீட்டுக்குள் புகுந்தான். அன்றைய மக்கள் அதை எப்படிப்பார்த்தார்கள், எப்படி வரவேற்றார்கள் என்பதை இச்சிறு கட்டுரைத் தொடர் சொல்கிறது. நீங்கள் ஐம்பதைத் தாண்டியவராக இருந்தால் உங்கள் ரேடியோ அனுபவங்களை இரை மீட்டிப் பார்த்துக்கொள்ளுங்கள்.
தொலைக்காட்சி பெட்டிகளின் வருகை ரேடியோ பெட்டிக்கு சாவு மணி அடித்து விட்டது என்றுதான் சொல்லவேண்டும். தொலைக்காட்சியின் வருகைக்கு முன்பு ஒவ்வொரு வீட்டிலும் நடுவீட்டில் சண்டியராக இருந்து வானொலி பெட்டிகள் ஆட்டிப்படைத்து வந்தன. இன்றோ ஒவ்வொரு வீட்டு பரணிலும், மூலை முடுக்குகளிலும் கவனிப்பாரற்று, தூசி படிந்து கிடக்கின்றன. பழைய ரேடியோ திருத்தும் கடைகளுக்கு சென்று பார்த்தால் நூற்றுக்கணக்கான பழைய ரேடியோக்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.

"அந்தக்காலத்தில் ஒரு வீட்டுக்கு ரேடியோ பெட்டி வந்துவிட்டால் கூடவே டெய்லரும் வந்திடுவார். ரேடியோ பெட்டியை அளவெடுத்து அதுக்கு ஒரு சிற்றாடை தைத்து கொடுக்க. அதை ரேடியோவிற்கு அணிவித்து ஜம்முன்னு நடுவீட்டில்  உட்கார வைப்பாங்க" என்று சொல்கிறார் மருதமுத்து. றைகம் தோட்டத்தை சேர்ந்த  மருதமுத்துக்கு இப்போ 70 வயதாகிறது. அந்தக் காலத்தில் றைகம் தோட்டத்திற்கு ரேடியோவை கொண்டு வந்தவர்களில் முதலாம் இடம் இவர்களின் குடும்பத்துக்குத்தானாம்.

ஆரம்பத்தில் றைகம் தோட்டத்தின் இன்ஜின் டிரைவர் பீட்டர் சிங்கம் வீட்டில்தான் ரேடியோ இருந்தது. அந்த சமயத்தில்தான் மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார். மகாத்மா காந்தியின் இறுதி அஞ்சலி நிகழ்வுகளை ரேடியோவில் ஒலிபரப்பினாங்க... றைகம் தோட்டத்து சனமே இன்ஜின் டிரைவர் வீட்டை முற்றுகை இட்ட மாதிரிதான் நிறைஞ்சு இருந்தாங்க... பாபுஜி.... பாபுஜின்னு டெல்லியில் மக்கள் போடுற சத்தத்தை வானொலியில் கேட்டபோது எல்லோருக்கும் ஆச்சர்யம்... சிலையாகிப் போனாங்க...

சில மாதங்கள் கழித்து என் மச்சான் செல்லையா டிரைவர் ஒரு ரேடியோ வாங்க முடிவு செய்தார்... எனக்கு ஒரே சந்தோசம். எங்க வீட்டுக்கு ரேடியோ வரப்போற கதையை நான் பலரிடம் பரப்பி விட்டேன். அதனால் எல்லோருடைய பார்வையும் எங்க வீட்டு மீதுதான் இருந்தது. என் மச்சான் சொன்னபடியே இங்கிரிய எட்மன்  ஸ்டோர்சில் 300 ரூபாய்க்கு பிலிப்ஸ் கம்பனி ரேடியோவை வாங்கி வந்தார்... அந்தக் காலத்தில் ரேடியோவிற்கு அண்டனா (அதை அப்போது ஏரியல்) கட்டினால் தான் வேலை செய்யும்.

பெரிய மூங்கில்கள் கொண்டு வந்து நட்டு அதில் ஒரு வயரை கட்டி அதன் மறுமுனையை எதிர்புரத்தில் இருக்கும் ஒரு மரத்தில் இணைத்துக்கட்டி அந்த வயரின் நடுமத்தியில் மற்றொரு வயரை இணைத்து அந்த வயரை ரேடியோவில் இணைக்கவேண்டும். எங்க வீட்டு ரேடியோவிற்கு அண்டனா கட்ட ஆள் ஆளுக்கு போட்டி போட்டுக்கொண்டு மூங்கில் வெட்டி வந்து கட்டினாங்க

றைகமை தோட்டத் தொழிலாளர் வீட்டில் முதல் ரேடியோ என்பதால் எங்க வீட்டு ரேடியோவுக்கு பெரிய மவுசு. ஊர் சனமே வீட்டுக்கு முன்னால் நின்று அதில் வரப்போகும் சத்தத்திற்காக காத்திருந்தார்கள். அது ஒரு பெரிய ரேடியோ. இப்போ இருக்கிற டீவி மாதிரி இருந்தது. ரேடியோவை என் மச்சான் ஒன் பண்ணி மீட்டரை கரகரவென்று ஓசை வர திருப்பி மீட்டரை பிடித்தார். ரேடியோவில் பாட்டு சத்தம் கேட்டதும் எல்லோருக்கும் ஒரே ஆச்சர்யம். ஆனந்தம். அந்த மாதம் முழுவதும் றைகம் தோட்டதில் எல்லா இடங்களிலும் எங்க வீட்டு ரேடியோவை பற்றிய பேச்சுதான். ரேடியோவிற்கு சாமுவேல் கங்காணிதான் சட்டை தைத்து போட்டார்!

அப்புறம் எங்க மச்சான் செல்லையா ஒரு விசயத்தையும் சொன்னார். “இந்தாப் பாருங்கப்பா. இந்த ரேடியோவில் குள்ள மனிதர்கள் உள்ள இருக்காங்க. அதனால் நான் வீட்டுல இல்லாத சமயத்தில் ;யாரும் ரேடியோவை தொட்டுறாதீங்க. அப்படி தொட்டுட்டா உங்களை அடிச்சிடுவாங்க" என்று அவர் சொல்ல எனக்கு பயமா போய்விட்டது.

அதனால் நான் ரேடியோ இருக்கும் அறைக்குள் நுழைய மாட்டேன். ரொம்ப தூரத்தில் இருந்து அந்தக் குள்ள மனிதர்கள் வெளியே வருகிறார்களா என்று நோட்டம் விட்டுக்கொண்டே இருந்தேன். கடைசி வரைக்கும் அவர்கள் வெளியே வரவேயில்லை. பிறகு நான் கொஞ்சம் வளர்ந்த பிறகுதான் மச்சான் செல்லையா ரேடியோவை சின்னப் பசங்க உடைச்சிடாம பாதுகாக்கத்தான் அப்படி ஒரு பொய்யை சொன்னார் என்பதை புரிந்துக் கொண்டேன்.







வேலாயுதம் வினோதரன்:

சிங்கள இசைத்துறையில் பண்னிசைக்கும் தமிழ் இளைஞர்




'தமிழ் அல்பம் ஒன்றை வெளியிட வேண்டும் என்பதுதான் என் ஆசை'

 

'கரண்ட் கட் ஆனதும் எங்கள் வீட்டில் பாட்டு பாடத் தொடங்கி விடுவார்கள். என் பாட்டு இப்படி ஆரம்மானதுதான்'

 

'அதிகாலையில் கழுத்துவரை தண்ணீரில் நிறுத்தி பாடச் சொல்வார்கள்'



மணி  ஸ்ரீகாந்தன்

சிங்கள இசை ரசிகர்களுக்கு நன்கு பரிச்சியமான பெயர் வேலாயுதம் வினோதரன். தெரண தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'தெரண ட்ரீம்ஸ் ஸ்டார்'  நிகழ்ச்சியில் போராடி தோற்ற ஒரு தமிழன் இவர். "நான் இந்த போட்டியில் ஜெயிக்க முடியும் என்று எப்போதும் நினைக்கலை... நினைக்கவும் கூடாது. ஏனென்றால் நான் ஒரு தமிழன்," என்று நச்சென்று வினோதரனிடமிருந்து வார்த்தைகள் வந்து விழுகின்றன.

தெரண ட்ரீம்ஸ் ஸ்டார் நிகழ்ச்சிக்கு விண்ணப்பித்திருந்த ஒன்றரை லட்சம் போட்டியாளர்களில் வேலாயுதம் வினோதரன் ஐந்தாவதாகத் தெரிவு செய்யப்பட்டதே இமாலய சாதனைத்தான்.

கண்டி தெல்தெனியவை பிறப்பிடமாகக் கொண்ட வினோதரன், சிங்கள மொழியிலேயே  கல்வி கற்றிருக்கிறார். "என் குடும்பம் ஒரு இசைக்குடும்பம். என் அப்பா நன்றாக டொலக் வாசிப்பார். என் அம்மா பாடுவார். எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து அந்த பாட்டுக் கச்சேரியை பார்த்து வளர்ந்தவன் நான். இரவு நேரங்களில் கரண்ட் கட் ஆனால் மெழுகுதிரியை கொளுத்தி வைத்து அதன் வெளிச்சத்தில் அம்மா பாட அப்பா டொலக் வாசிக்க ரொம்பவும் வேடிக்கையாக இருக்கும். நானும் அந்த சந்தர்ப்பங்களில் பாட்டுப்பாடுவேன். என் இசை ஆர்வத்திற்கு வித்திட்டது என் வீட்டில் நடந்த பாட்டு கச்சேரிகள்தான்," என்று சொல்லும் வினோதரன், சங்கீதத்தை முறையாக பயின்றிருக்கிறார்.

சென்னை இசைக் கல்லூரியில் இசைப் பயிற்சியை நிறைவு செய்திருக்கும் இவருக்கு தற்போது இருபத்திரண்டு வயதாகிறது.

"வட இந்திய இசைக் கலைஞர் லைனா பாத்தைதான் நான் என் குருவாக மதிக்கிறேன். எனக்கு பிடித்த பாடகர்கள் என்றால் எஸ்.பி பாலசுப்ரமணியம்,  ஹரிஹரனை குறிப்பிடுவேன். நம் நாட்டில் ஆத்மா லியனகேயும் எனக்குப் பிடிக்கும்," என்ற வினோதரன் சிங்கள மொழியிலேயே சரளமாக பேசுகிறார். தமிழில் பேச கொஞ்சம் சிரமப்படுகிறார். அம்மா பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர். அப்பா வவுனியாவைச் சேர்ந்தவர். சிங்களச் செல்வாக்கில் வளர்ந்தவரானாலும் தமிழ் மீதான பற்று இவரை விட்டுப் போகவில்லை. எஸ்.பி, ஹரிஹரன் பாடல்களையே ரொம்பவே விரும்பிப் பாடுகிறார், கேட்கிறார், இருவருமே அருமையான சங்கதிகளைத் தமது குரலில் வைத்துப் பாடுகின்ற உன்னதக் கலைஞர்கள் என்று கிலாகிக்கும் இவர் தமது இசை வெற்றிக்கு தமிழ் பாடல்கள்தான் முக்கிய காரணம் என்று சொல்கிறார் வேலாயுதம். இன்றுவரை இந்து மதத்தையே கடைப்பிடித்து வருவது இவருக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது.

"எனக்கு எஸ்.பி. பாலசுப்பரமணிம்னா ரொம்பப் பிடிக்கும். கேளடி கண்மணி படத்தில ;மண்ணில் இந்த காதல்... என்ற பாடலை அடிக்கடி முணுமுணுப்பேன். 2007ல் தான் சென்னை இசைக் கல்லூரியில் சேர்ந்தேன். அங்கே இசைப் பயிற்சி ரொம்பவும் கடுமையாக இருக்கும். அதிகாலை 4. மணிக்கெல்லாம் எழும்பி கழுத்தளவு தண்ணீரில் 5 மணி வரை நிற்க வைத்து பாட்டுப் பாடி சாரீரத்தை சரி செய்யும் பயிற்சியை அளிப்பார்கள். இசைன்னா அது இந்தியாதான் நா அவங்ககிட்டே கற்க வேண்டி சங்கதிகள் நிறைய  இருக்கு!" என்ற வினோதரன் தனது நண்பர் சசிந்து விஜேஸ்ரீ பற்றியும் இப்படி கூறுகிறார்.

"சசிந்து அனுராபுரம், பதவிய என்ற இடத்தைச் சேர்ந்தவர். அவர் தெரணவில் ஐம்பதாயிரத்தில் போட்டியாளராக கலந்து கொண்டப்போதிலிருந்து எனக்கு நண்பராக இன்று வரை இருக்கிறார் சசிந்து. ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவர். அவர் போட்டியாளராக கலந்து கொண்ட அந்தக் காலப்பகுதியில் ஒரு நாள் பாட்டு ஒளிப்பதிவிற்காக எல்லோரும் கருப்பு டெனிம் அணிந்து வர வேண்டும் என்று ஏற்பாட்டுக குழு கூறியிருந்தது. நான் கருப்பு டெனிம் வாங்கி வந்திருந்தேன்.  ஆனால் சசிந்து டெனிம் வாங்க வழியின்றி தடுமாறினார். நிலைமையை அறிந்த நான் எனது டெனிமை அவருக்கு கொடுத்து விட்டு,  நான் வேறு ஒன்று வாங்கிக்கொண்டேன். இதை அறிந்த டீவி நிர்வாகம், அந்த சம்பத்தை தொலைக்காட்சியில் காட்டி விபரித்தார்கள் சசிந்து கண்கலங்கினான். நான் கடைசி தேர்வில் தோற்றப்போது எனக்காக அழுவனும் அவன்தான்," என்று சொல்லும் வேலாயுதம் வினோதரன் தனது நான்கு ஆண்டு கால காதலியைப் பற்றி இப்படி கூறுகிறார்.

"எனக்கு பெண் ரசிகைகள் அதிகம். ஆனால் என் மனசை தொட்ட அவள் கண்டியில் தான் வசித்தாள். எங்கள் இருவருக்கும் நான்கு ஆண்டுகால காதல் ஆலவிருட்சம் மாதிரி வளர்ந்திருந்தது. அவளை எனக்கு நீண்டகாலமாக தெரியும். எனக்கு பிடித்தமானவள்.

ஒருநாள் தெரண பாட்டு நிகழ்ச்சியில் எனக்கு புதுமணத்தம்பதிகளின் பாட்டுக் காட்சியை கொடுத்திருந்தார்கள். அதாவது புதுமணத் தம்பதியினரைப் போலவே நாங்கள் நடிக்கவேண்டும். நான் அந்த விசயத்தை என் காதலியிடம் கூறியபோது அவள் அதிர்ந்துப்போனாள். என்னை அந்தக் காட்சியில் பங்குபற்றக் கூடாது என்று கட்டளைப்போட்டாள். ஆனால் அது ஒரு போட்டி என்ற வகையில் நான் பங்குபற்றாமல் முடியாது. எனவே அதை என்னால் தவிர்க்க முடியவில்லை. நான் அந்த நிகழ்ச்சியில் என்னுடன் மனமகளாக நடித்த பெண்ணின் கழுத்தில் தாலி கட்டினேன். இதை பார்த்த என் காதலியின் கோபம் தலைக்கேறியது. காச்மூச்சென்று கத்தி என்னுடனான உறவை துண்டித்தாள். நான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அதை அவள் புரிந்துகொள்ளவில்லை. இறுதியில் எங்கள் காதல் முறிந்தது. என் காதலி என்னை விட்டு விட்டு கனடாவிற்கு சென்று விட்டார். ஒரு அற்ப விஷயத்துக்கு என்னோடு இவ்வளவு முரண்படுகிறவள் என் வாழ்நாள் துணைவியாக இருக்கமுடியுமா? என்று நான் நினைக்கிறேன்.

சரி, இனி காதல்? "நோ! வேண்டாம். இப்போது அந்த எண்ணமே கிடையாது. இப்போதுதான் நான் ஒரு இசை அல்பம் ஒன்றை (DVD) சாந்தினி என்ற பெயரில் வெளி வெளியிட்டிருக்கிறேன். மற்றொரு வீடியோ (சிங்களம்) அல்பம் ஒன்றையும் வெளியிடும் திட்டம் உள்ளது. அதன் பின்னர் தமிழ் வீடியோ பாடல் அல்பம் ஒன்றை வெளிடவிருக்கிறேன். தமிழகத்தில் பாடும் வாய்ப்பு கிடைக்குமானால் சந்தோஷம்" என்று தமிழிலும் சிங்களத்திலும் பேசும் இவருக்கு, இவர் ஐந்தாம் இடத்தில் இருக்கும்போது போட்டியில் இருந்து நீக்கபட்டதும் மொபிடெல் இவரை அழைத்து பொறுப்பான பதவியொன்றை வசதிகளுடன் வழங்கியிருக்கிறது.

இலட்சியம்?

"தெரிந்ததுதானே! இசைத் துறையில் உச்சங்களைத் தொடவேண்டும் என்பதும் புதியவற்றை படைக்கவேண்டும் என்பதும்தான்!"

சிரிக்கிறார்.

Friday, May 3, 2013

பழம்பெரும் கலை வடிவம் இங்கே பிரமாண்டம் கட்டுகிறது

றைகம் காமன் கூத்து

 
மணி  ஸ்ரீகாந்தன்

தமிழர்களின் பாரம்பரிய நாட்டார் கலை வடிவங்களில் கூத்துக் கலையும் ஒன்று.

கிராமத்தின் மண்வாசனையும், கிராம மக்களது வாழ்வாதாரங்களையும் அவர்கள் மதம் மீது கொண்ட பற்றுதலையும் வெளிப்படுத்தும் வகையில் அமைவது கூத்துக்கலை. கூத்துக்கள் பல்வேறு செய்திகளை சமூகத்திற்கு கொண்டு செல்கின்றன.

அந்த காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் பொழுது போக்குக்காகவும். உழைத்த களைப்பை போக்கி இளைப்பாறவும் ஒரு முற்றத்தில் ஒன்று கூடி ஆடிப்பாடி மகிழ்ந்தார்கள். அதுவே நாளடைவில் பல்வேறு பரிமாணங்களைப் பெற்று கலைகளாகத் தோற்றம் பெற்றது. அன்று அவர்கள் பொது முற்றத்தில் ஆடிப்பாடியதே இன்று கூத்து என்ற பெயரைப் பெற்று வளர்ந்து நிற்கிறது. இயல், இசை, நாடகம் மூன்றும் சேர்ந்த தமிழை முத்தமிழ் என்கிறோம். நாடகம் என நாம் கூறுவதை பழந்தமிழ் கூத்து என்கிறது.
கூத்துக்களில் அகக்கூத்து, புறக்கூத்து என இருவகைகள் உண்டு. புறக்கூத்து என்பதே பொதுமக்கள் முன்னிலையில் ஆடப்படும் கூத்தாகும். அகக்கூத்து ஒரு இல்லத்தில் ஆடப்படுவது. கோவலனை மாதவி எட்டு வகையான வரிக்கூத்துக்களால் மயக்கினாள் என்று சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக உருவாக்கப்பட்டு ஆடப்பட்ட இந்தக் கூத்துக்களிடையே சொல்லப்படும் விசயங்களும்,  வினோதங்களும் இன்றைய சமூகத்தை ஈர்த்து வருவது ஆச்சர்யத்துக்குரியதாகும். கூத்துக்களில், பொன்னர் சங்கர், அர்ச்சுனன் தபசு,  சத்தியவான் சாவித்திரி, குரவைகூத்து என்பன பிரபலமாக விளங்கினாலும் இன்றைய காலக்கட்டத்தில் இடம் தெரியாமல் மறைந்து போய்விட்டது. ஆனால் மலைநாட்டில் மட்டும் இன்றும் 'காமன் கூத்து' ஆடப்பட்டு வருகிறது.

சிவன், மதன் போர் தமிழகத்தில் உள்ள திருக்குறுக்கை என்ற ஊரில்  நடந்ததாகவும் அங்கே உள்ள வீரட்டேஸ்வரர் ஆலயத்திற்கு அருகில் தோண்டத் தோண்ட கிடைக்கும் சாம்பல் சிவன்- மதனை எரித்ததற்கு சான்றாக இருப்பதாகவும் அந்த ஆலயத்தில் உள்ள வீரட்டேஸ்வரர் சிவலிங்கத்தில் மதன் வீசிய பத்மபானம் ஏற்படுத்திய வடு இருப்பதாகவும் கதை இருக்கிறது.

இதுதவிர கந்தபுராண கிளைக் கதைகளில் வரும் ஒரு பாடலில்

"நுண்ணிய உணர்வின் மிக்கீர்!
நுமக்கிது புதல்வனே! எங்கோன்
கண்ணுதல் உமிழ்ந்த செந்நீர் காமனைப் பொடித்தது அன்றால்
அண்ணலை எய்வன் என்னா அனையன் துணிவிற் கூறித்
துள்ளென ஈண்டு வந்த செயற்கையே சுட்டபோதும்." என்கிறது.

சிவபெருமானின் வலிமையைப்பற்றி விளக்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள காமதகன கதையின் பாடலின்படி மன்மதனை எரித்தது சிவனின் நெற்றிக்கண் நெருப்பு அல்ல என்றும் அது சிவபெருமானின் மீது அம்பு எய்ய அவன் கொண்ட துணிச்சலே அவனைச் சுட்டது என்கிறது.

இவ்வாறு கந்தபுராணத்தை சார்ந்தும், வேறுப் பல கதைகளும் காமன் கூத்துப் பற்றி சொல்கிறது. வருடந்தோறும் மாசி மாதத்தில் வரும் அமாவாசை முடிந்து மூன்றாம் நாளில் காமன்கூத்து ஆரம்பமாகிவிடும். மலையகத்தில் பல இடங்களில் இந்தக் கூத்து சிறப்பாக நடந்தாலும் பிரமாண்டத்துடன் நடப்பது களுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள றைகமையில்தான்.

மாசி மாதம் வந்து விட்டாலேயே இங்குள்ள இளைஞர்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான். பறை ஓசை  விண்ணைப் பிளக்க ஒரு மாதத்திற்கு ஆட்டம் பாட்டம்தான்.

விழா கடைசி நாளில் லட்சக்கணக்கான ரூபாய்களை இறைத்து மின்விளக்கு, அலங்காரம் என்று கூத்துத் திடல் களை கட்டும். இம்முறை நடந்த காமன் கூத்திற்கு இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட பார்வையாளர்கள் திரண்டு வந்திருந்தார்கள். ஏராளமான வாகனங்கள் திடலின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்ததால் அந்த திடல் திணறிக்கொண்டிருந்தது. கொத்து பரோட்டா டங்கடடக்கு, ஐஸ்கிறீம் பீப்பீக்க பாதையோரம் ஒரு நாள் உணவுக் கடைகளில் சனம் முண்டியடித்து தின்று தீர்த்துக்கொண்டிருந்தது. விலைகள் கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் குளிருக்கு குடித்த தேனீர் மட்டும் இதமாகத்தான் இருந்தது.

பரமேஸ்வரன் சர்மாவினால் வேத மந்திரங்கள் ஓத ரதி- மதன் திருமணத்தோடு விழா சூடு பிடிக்க தொடங்கியது. றைகம் காமன் கூத்திற்கு பிந்தன பறை இசைக்க குழுவினர் இசை வழங்கினர். ஆனால் குறவன், குறத்தியோடு ஆடுகளத்திற்குள் பறைகளோடு புகுந்து  விக்னேஷ் குழுவினர் செய்த அழிச்சாட்டியத்தால் அரங்கம் பறை ஓசையால் அதிர்ந்தது.

இதுதவிர, தீயோடு விளையாடிய வீரபத்திரன், காளி- பார்வையாளர்களை மிரட்டியது என்று சொல்லலாம். பார்வையாளர்களை பரவசப்படுத்திய விடயத்தில் நீதிபதியின் சிவன் வேடம் முக்கியமானது. அனுபவம் வாய்ந்த கூத்துப்பாடகர்கள் பலர் களத்தில் இறங்கியிருந்தாலும், அனைவரையும் தன் பாட்டால் கட்டிப் போட்டு பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தவர் லிதுஷன்
ஹரி, சின்னப் பையன். வயது 14.  ஆண்டு ஒன்பதில் கல்வி  கற்கிறாராம். சரணத்திற்கு   இடையே அவர் போடும் சங்கதி அப்பப்பா... ஒரு தேர்ந்த  முதிர்ந்த கலைஞருக்கு உள்ள எல்லாத் தகுதியும்  அந்த தம்பிக்கு இருக்கிறது. ஆனால் அவருக்கு சரியாக வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. பெரும் பாடகர்களின்  வயிற்றில் புளியைக் கரைத்திருக்கும் லிதுஷன் ஹரி இன்னும் நிறைய பாடல்களை கற்கவேண்டும்.

விழாவை திறம்பட செய்த கஜேந்திரன், அருண லொக்கா, ரவி, ஸ்ரீகாந்த உள்ளிட்ட இளைஞரணி குழுவினர் பாராட்டுக்குரியவர்கள். ஆனாலும், இரண்டாயிரத்திற்கு அதிகமான பார்வையாளர் கூடும் இடத்தில் கழிப்பிட வசதி இல்லாதது பெருங்குறை. குறிப்பாக பெண்கள் இயற்கை கடன்களை முடிக்க மறைவிடங்களை தேடிச்சென்று சிரமமப்படுவதை அவதானிக்க கூடியதாக இருந்தது.

"இது காலாகாலமாக இப்படியான விழாக்களில் இருக்கின்ற பெரும் குறை. இது நிச்சயம் தவிர்க்கப்படவேண்டிய ஒன்று. இதற்கு தற்காலிகமாக டொய்லட் செட்டுகளை வாடகைக்கு எடுத்து வைத்து கட்டண கழிப்பிடங்களை தயார் செய்தால் அதில் வருமானமும் கிடைக்கும். அதோடு கூத்து பார்க்க வரும் மக்களுக்கும் நாம் ஒரு பெரிய சேவையை வழங்கிய புண்ணியமும் கிடைக்கும் என்கிறார்;" கூத்துப் பார்க்க வந்திருந்த பிரதாபன் ஆசிரியர்.

கூத்து மேடைக்கு அருகிலேயே நீர் ஓடையும் ஒடுவதால் தண்ணீர் பிரச்சினையும் இருக்காது. சிறிய தண்ணீர் பம்பை வைத்து பாத்ரூம் வசதியை சிறப்பாக செய்து கொடுத்து விடலாம். அதோடு பெண்கள், குழந்தைகள் அமர்ந்திருக்கும் இடத்திற்கு மட்டும் பெரிய கூரை அமைத்தால் பாதுகாப்பானதாக இருக்கும். ஏனென்றால் கூத்து நடைபெறும் சமயத்தில் அடை மழை வந்து விட்டால் அவர்களின் கதி நினைத்துப் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது.

எனவே அடுத்த ஆண்டிலாவது இந்த குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டால் காமன் கூத்து மென்மேலும்  சிறப்பாக அமையும்.