Wednesday, May 22, 2024

நரேந்திரா விவேகானந்தன் பேட்டி

 நரேந்திரா விவேகானந்தன் எனும் இவர், கனடா நாட்டில் வசித்துவரும் ஒரு சமூக தன்னார்வலர் மட்டுமன்றி, தமிழ் வளர்ச்சி, தமிழர்களின் எதிர்காலம் பற்றிய சிந்தனையும் கரிசனையும் கொண்ட ஒரு உயர்ந்த மனிதரும் கூட, ‘விழித்தெழு பெண்ணே’ என்ற பெண்களுக்கான உலகளாவிய தமிழ் அமைப்பை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். சமீபத்தில் இலங்கை வந்திருந்த டாக்டர் நரேந்திரா விவேகானந்தனை கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் சந்தித்தோம். அவர் ‘தமிழன்’ நாளிதழுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணல். அவருடனான முழுமையான நேர்காணல்: வருமாறு,

உங்களைப் பற்றிய சில பொதுவான தகவல்களை அறிய ஆவல். இளமை முதல் இன்றுவரை? 


எனது பெயர் நரேந்திரன் விவேகானந்தன. நான் கனடா நாட்டில் வசித்து வருகின்றேன். நானொரு சமூக சேவையாளர். எனது தொழில் வேறு. அதேநேரத்தில், உலகளாவிய ரீதியில் தமிழர்களின் எதிர்காலம், தமிழ் வளர்ச்சி உள்ளிட்ட விடயங்களில் நான் கவலையும், கரிசனையும் கொண்டிருந்தேன். அதன் காரணமாக நம் மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் நானும் எனது மனைவி சசிகலாவும் இணைந்து உலகளாவிய தமிழர்களை ஒன்றிணைத்து ‘விழித்தெழு பெண்ணே’ என்ற ஓர் அமைப்பை உருவாக்கி, நடத்தி வருகின்றோம்.
எனது மனைவி சசிகலா பல்வேறு சிரமத்திற்கு மத்தியில் இந்த சர்வதேச விழித்தெழு பெண்ணே அமைப்பை மிகவும் சிறப்பாக வழிநடத்தி வருகிறார். ஆண்டுதோறும் தமிழ் ஆளுமைப் பெண்களைத் தேர்வுசெய்து அவர்களில் சிறப்பாகக் களப்பணியாற்றும் பெண்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கிறார். இந்த மாபெரும் விருது விழா இந்த ஆண்டுடன் இலங்கையில் மூன்றாவது தடவையாகவும் நடைபெற்றது. ஓர் ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் என்றுதான் நாம் காலாகாலமாக சொல்லிப் பழகியிருக்கிறோம். ஓர் ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பது போன்று ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பலமான வலுவான ஆண் இருக்க வேண்டும். அது மாதிரிதான் எனது மனைவியின் வெற்றிகளுக்குப் பலமாகவும் வலுவாகவும் நான் இருந்து செயற்படுகின்றேன்.
எமது அமைப்பில் 18 நாடுகளைச் சேர்ந்த பெண்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அந்த அமைப்பின் நிறைவேற்று அதிகாரியாக நான் இருக்கின்றேன்.
குறிப்பாக, தையல் வேலை தெரிந்த ஒரு பெண்ணுக்கு ஒரு தையல் இயந்திரம் வாங்கிக்கொடுப்பது, ஓவியம் வரையத் தெரிந்த ஒரு பெண்ணுக்கு ஓவியக் கருவிகள் வாங்கிக்கொடுப்பது மட்டுமே அவர்களுக்கான நிரந்தரத் தீர்வாகுமா என்று சிந்தித்தோம்.
குறிப்பாக, இலங்கையிலும் இந்தியாவிலும் வாழுகிற பெண்களுக்கு ஓர் அழகான ஆடையைத் தைத்து அதனை மார்க்கெட் பண்ணத் தெரிவதில்லை அதனை எங்கே எப்படி விற்பனை செய்வதென்று தெரிவதில்லை பொருளாதாரத்தோடு போட்டியிடும் திறமை அவர்களிடம் இல்லை பத்து ரூபாவுக்கு ஓர் ஆடையைத் தைத்து அதனை இருபது ரூபாவுக்கு மார்க்கெட் செய்கிறார்கள் அவ்வளவுதான். ஆனா வெளிநாட்டில் வாழும் ஒரு பெண் இருபது ரூபாவுக்கு தைத்த ஆடையை நூறு டாலருக்கு விற்பனை செய்து விடுகிறாள்.
எனவே இப்படியான தடங்கல்களிலிருந்து அவர்களை வெளியே கொண்டு வந்து சரியான மார்க்கட்டிங் பற்றிய புரிதலை ஏற்படுத்துவது. அதோடு ஆண்களால் பெண்களுக்கு ஏற்படும் இடையூறுகள், புரிந்துகொள்ளாமை இப்படியான விடங்கள் குறித்து அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது. இதையெல்லாம் ஏன் செய்கின்றோம் என்றால் சில குக் கிராமங்களிலிருந்து நகரங்கள் வரையிலும் சில பெண்களால் கலாச்சார கட்டுபாடுகளிலிருந்து வெளியே வரமுடிவதில்லை. அந்த கட்டுபாடுகளை அவர்களின் குடும்பமோ, அல்லது அவர்களை சுற்றி வாழும் சமூகமோ வெளியே வர விடுவதில்லை. அப்படியானவர்கள் பெண்களாகவும் இருக்கலாம் அல்லது ஆண்களாகவும் இருக்கலாம். அப்படியான பெண்களுக்கு அறிவூட்டல், அவர்களுக்கு அவர்களை யாரென்று புரியவைப்பது, அவர்களுக்குள் இருக்கும் திறமைகளை வெளியே கொண்டு வருவது போன்ற விடயங்களை வைத்துதான் எமது விழித்தெழு பெண்ணே அமைப்பை மேற்கொண்டு வருகின்றோம்.

எத்தனை நாடுகளில் இப்படியான சமூக பணிகளை நீங்கள் செய்து வருகிறீர்கள்?

 
எமது இந்த சமூக பணி, ஒன்று எமது அமைப்பின் ஊடாகவும் மற்றது
எனது தனிப்பட்ட குடும்ப ரீதியாகவும்  செய்து வருகின்றோம்.
தனிப்பட்ட குடும்ப ரீதியாக என்று சொல்வது பகிர்ந்து வாழ்தல் என்பதே எனது குடும்பத்தின் நோக்கம். அதாவது என்னிடம் இரண்டு ஆடைகள் இருந்தால் அதில் ஒன்றை இல்லாவனுக்கு கொடுப்பது. இது உதவியல்ல பகிர்ந்து வாழ்தல். தானத்துக்கும் தர்மத்திற்கும் உள்ள வித்தியாசமும் இதுதான்.
தனிப்பட்ட ரீதியாக நான் யாரையும் குறை சொல்லவில்லை, அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் தானம் செய்வதை விட தர்மம் செய்வது மிகச் சிறப்பானது என்று நான் நினைக்கின்றேன்.
ஆயிரம் பேருக்கு தானம் கொடுத்து விட்டு அதை படம்பிடித்து ஃபேஸ்புக்குல போடுறதுக்கு பெயர் தானமல்ல. ஆனாலும் அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம்.
நம்மில் நிறைய பேரு சொல்லுற விசயம் “நான் லைப்ல செட்டில் ஆகிட்டேன்” னு, ஆனா யாரும் லைப்ல செட்டில் ஆகிட்டதா சொல்ல முடியாது டொனால்ட் டிரம்பில் இருந்து நரேந்திர மோடி, ஜோ பைடன்னு எல்லோருக்கும் இன்னும் ஏதோ ஒரு தேவை இருந்துகிட்டுதான் இருக்கும் அதை யாரும் மறுக்க முடியாது.
இரண்டு காரு, மூணு பங்களா இருந்தாளும் ஒரு வீட்டுலதான் படுத்து தூங்க முடியும் அதுக்குன்னு மூணு வீட்டுலயும் ஒரே நேரத்துல தூங்கத்தான் முடியுமா..?
அதனால் இந்த உலகத்துல யாரும் செட்டில் இல்லை, இந்த உண்மையை அனைவரும் புரிந்து கொண்டு சிந்திக்க தொடங்கினால் இந்த உலகத்தில் ஏழ்மை என்று ஒன்றிருக்காது!
எமது இந்த சமூக சேவையில் எனது குடும்பத்தின் சார்பில் சொந்த வருமானத்தில் செய்வதை நாங்கள் வெளியில் சொல்வதில்லை.
சொல்ல விரும்புவதும் இல்லை. எனவே எமது இந்த மக்கள் பணியில் குறிப்பாக நான் இலங்கையில் உள்ளவர்களுக்கு உதவி செய்யும் போது ஒரு விசயம் இருக்கிறது அதாவது எனது பெற்றோர்கள் இலங்கை மண்ணைச் சேர்ந்தவர்கள் என்றால் ஒரு பூர்வீக ஜெனடிக் தொடர்பில் நான் அந்தப் பணியை செய்வதாக நினைக்கலாம் அதுவே ஐதராபாத்தில் உள்ள ஒருவருக்கு செய்யும் போது அவரை எனக்கு யாரென்று தெரியாது அதே மாதிரி அவர்களுக்கும் என்னைத் தெரியாது  எனவே இப்படியான விசயத்தைதான் நாங்கள் கூடுதலாக விரும்புகிறோம்.
எனவே இலங்கை, இந்தியாவில் செய்யும் போது இந்த அமைப்பின் ஊடாக செய்கின்றோம் மற்ற இடங்களில் தனிப்பட்ட ரீதியில் செய்யும் போது யாருக்கும் தெரியாத இடத்தில் செய்கின்றோம்.
இதனை சிலபேர் ஏற்றுக்கொள்வார்கள் சிலர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் தனிப்பட்ட ரீதியில் நான் சொல்வதாக இருந்தால் என்னால் யாருக்கும் உதவி செய்ய முடியாது ஏனென்றால் என்னுடைய தேவைகள் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை, எனக்கே உதவி தேவை எனும் போது நான் எப்படி மற்றவர்களுக்கு  உதவ முடியும் அதனால்  பகிர்ந்து வாழலாம். இது அந்தக் காலத்தில் இருந்த பண்ட மாற்று முறை மாதிரி அரிசி வைத்திருப்பவன் அதனை பருப்பு வைத்திருப்பவனிடம் கொடுத்து விட்டு மாற்றி கொள்வது போல அனைவரும் பகிர்ந்து வாழலாம் அதுதான் இந்த நவீன காலத்தில் வாழும் வாய்ப்புகள் இல்லாத மக்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கும் நல்ல வழி என்று நான் நினைக்கின்றேன்.

தனது துணைவியாருடன்

கனடாவை வாழ்விடமாக கொண்டுள்ளீர்கள் ஏன்?

இந்த உலகம் தோன்றி அதில் மனித இனம் உருவாகி அறிவுப்பூர்வமாக சிந்திக்க தொடங்கிய போதே இந்த நகர்தல் தொடங்கி விட்டது. தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவன் இந்தியாவுக்கு வந்து குடியேறியதும் இந்தியன் லெபனானில் குடியேறியதும் நடந்திருக்கிறது ஆனால் தமிழ் சமூகத்திற்கு இந்த புலம் பெயர்தல் புதுசு மிகக் குறுகிய காலத்தில்தான் நம் சமூகம் நகர்ந்து வாழப் பழகியிருக்கிறார்கள்.
என்னைக் கேட்டால், கனடா மிகச் சிறந்த நாடு என்றுதான் சொல்வேன். ஒரு தனிப்பட்ட ஒரு நபரோ, ஒரு குடும்பமோ நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்க்கூடிய நாடு.
நான் இந்தியாவுக்கு நிறைய தடவைகள்  சென்றிருக்கிறேன். அங்கே நான் கவனித்த ஒரு விடயம் பிரதான வீதிகளின் சிகப்பு விளக்கு எரியும் போது அதை யாரும் கவனிப்பதில்லை. கனக்கில் எடுப்பதே இல்லை ஆனாலும் இந்தியாவில் வீதி சமிக்சைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்ற சட்ட இருக்கிறது ஆனால் அதனை யாரும் மதிப்பதில்லை. நான் வாழும் கனடாவில் அப்படி அல்ல வாகன நடமாட்டம் இல்லாத நள்ளிரவு நேரத்தில் கூட வீதி விளக்கு சமிக்ஞைகளை மதித்து வண்டிகள் நிற்கும். யாரும் வீதியில் இல்லையே என்று வண்டியை யாரும் நகாத்துவதில்லை. வீதி கட்டுப்பாட்டு விதிகளை அந்தளவுக்கு அங்கே பின்பற்றுகிறார்கள்.
எனக்கு தொழில் ரீதியாக நல்ல வாய்ப்பு அமையப்பெற்ற நாடு அதனால் நான் வாழ்வதற்கு அந்த நாட்டை தேர்ந்தெடுத்தேன்.

இளைய தலைமுறையினர் தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் எவ்வாறு காக்க வேண்டும்?

இளைய தலைமுறையினர் காக்கனும்னு சொல்கிறோம் ஆனா நாம் காக்குறது இல்லையே..இப்போ என்னையே எடுத்துக்கோங்க ஐந்து தமிழ் வார்த்தைக்கு இடையில் நாலு ஆங்கில வார்த்தையை கலந்துதான் பேசுறேன்.
முதலில் இளைய தலைமுறைக்கு கலாசாரம் என்றால் என்னன்னு தெரியனும். வாழ்வியல்தான் கலாசாரம், வாழ்வியல் வேறு கலாசாரம் வேறுன்னு நாம் தேவையில்லாமல் குழம்பிக்கொண்டிருக்கின்றோம்.
இப்போ கனடாவுக்கு வாரவங்க மைனஸ் தர்ட்டீ குளிரில வேட்டிதான் கட்டிட்டுப் போவேன்னு அதை உடுத்திட்டு போனா நாம செத்துதான் போவோம். எனவே அங்கே கலாசாரம் மாறவில்லை, சூழல் அவ்வளவுதான். சென்னைக்கு வந்தவன் 34டிகிரியில் கோர்ட் சூட்தான் போடுவேன்னு அடம்பிடிச்சா அவுஞ்சி செத்துடுவான். எனவே இடத்துக்கு அமைய நாம் நமது வாழ்வியலை அமைத்துக்கொள்ள வேண்டும். ஆனா கலாசாரம் என்பது நமது குடும்பத்தில் இருக்கணும்.
தமிழர்கள் மத்தியில் டாட்டூ பச்சை குத்தும் கலாசாரம் காலாகாலமாக அவ்வையார் காலத்திலிருந்து இருந்து வருகிறது. அது நமது கலாசாரம்தான் ஆனால் அந்த பச்சையை ஒரு பெண் அவள் உடம்பில் எந்த இடத்தில் குத்துகிறாள் அது எப்படி வெளியே தெரிகிறது என்பதில்தான் கலாசாரம் மாற்றம் ஏற்படுகிறது.

சில சமூக அமைப்புகளுடன் தாங்கள் செய்யும் தமிழ்ப்பணி குறித்து சொல்லுங்க?
சமூக பணி என்பது மற்றைய அமைப்புகளுடன் சேர்ந்துதான் செய்ய வேண்டும் என்பதல்ல ஏதோ ஒரு வகையில் நாம் எல்லோரும் ஒரு சமூகப்பணியை செய்து கொண்டுதான் இருக்கின்றோம்.
சமூகப்பணி என்பது அந்தந்த சமூகம் சார்ந்த மனிதனின் காலத்தின் கட்டாயம் அதை செய்துதான் ஆகணும்.
எமது விழித்தெழு பெண்ணே என்ற அமைப்பு அரசாங்கமோ அல்லது அரசு சார்பற்ற நிறுவனங்களிடம் இருந்து நிதியினை பெற்று நாம் இந்தப் பணியை செய்வதில்லை. அது சமூகப் பணி இல்லை அது ஒரு ஏஜன்ட் மாதிரி அங்கே காசு வாங்கி இங்கே கொடுப்பது.
எனவே எமது விழித்தெழு பெண்ணே அமைப்புக்கான நிதியை பெறுவதற்கு நாம் வேறு ஒரு திட்டம் வைத்திருக்கின்றோம்.
அதுதான் ஒல்வொரு வருடமும் கனடாவில் நடத்துகின்ற மிஸ் தமிழ் யுனிவர்சல் அழகு ராணி போட்டி இந்த போட்டியானது 2005ம் ஆண்டிலிருந்து இன்று வரை நடைபெற்ற வருகிறது.
இது ஒரு வியாபாரம்தான் இலாப நோக்கில் செய்யப்படும் ஒரு போட்டிதான் இந்த நிகழ்ச்சியின் மூலமாக கிடைக்கும் இலாபம் எமது அமைப்புக்கு செல்கிறது.
இதனால் எமது அமைப்புக்கான நிதியை நாங்கள் வேறு யாரிடமும் கேட்பதில்லை இந்த போட்டியின் ஊடாக கிடைக்கும் இலாபத்தை எமது சுய தேவைகளுக்கு பயன்படுத்தாமல் இந்த அமைப்புக்கு கொடுத்து விடுகின்றோம். அதை அந்த அமைப்பு மக்களுக்கு கொடுக்கிறது.
இந்த அழகு ராணி போட்டி என்று சொல்லும் போது தமிழ் கலாசாரத்தில் அந்த வார்தை உங்களை ஏதோ பண்ணும் சங்கடத்தை ஏற்படுத்தும் ஆனால் இந்தப் போட்டி அப்படி அல்ல
உலகலாவிய ரீதியில் நடைபெறும் போட்டிக்கும் இதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது.
இந்த அழகுராணி போட்டியில் தமிழ் காலாசார உடையணிவது கட்டாயம் இதேவேளை எமது பாரம்பரிய அணிகலன்களான ஒட்டியானம், தண்டட்டி, ஒண்ணப்பு, உள்ளிட்ட ஆபரணங்கள் மீது ஆர்வமுள்ள பெண்கள் இதில் கலந்து கொள்வதோடு அந்த ஆபரணங்கள் பற்றிய தெளிவை விளக்கத்தை எடுத்து சொல்வது முக்கியமாகும்.
இந்தப் போட்டியில் டூபீஸ் டிரஸ், நீச்சல் உடைகளுக்கு அனுமதி இல்லை. மற்றது இந்த மிஸ் தமிழ் யுனிவர்சல் போட்டியின் உத்தியோகப்பூர்வ மொழி தமிழ். இந்தப் போட்டியில் தமிழர், மலையாளி, கன்னடர், தெலுங்கர், சிங்களவர் என்று இந்த உலகத்தில் எவரும் கலந்து கொள்ளலாம்.
ஆனால் அவர்களுக்கு தமிழ் பேச தெரிந்திருக்க வேண்டும்.
உலக அழகுராணி போட்டியில் ஆங்கிலம் பேசினால் யாருக்கும் கலந்து கொள்ளலாம். அதுமாதிரி நாங்கள் நடத்தும் போட்டியில் தமிழ் பேசத் தெரிந்தால் யாரும், எந்த நாட்டவரும் கலந்து கொள்ளலாம்.

சமூகப் பணிகளில்
உங்க குடும்பம் பிள்ளைகள் குறித்து?

எனது மூத்த மகனுக்கு திருமணம் ஆகிவிட்டது அவருக்கு மூன்று குழந்தைகள். இரண்டாவது மகன் திருமணத்துக்கு தயாராக இருக்கிறார். எனது மூன்றாவது மகன் ஒரு டிகிரியை முடித்து விட்டு அடுத்த டிகிரிக்கு படிக்கிறார். எனக்கு மூன்று பேரப்பிள்ளைகள் அவர்களும் நன்றாக தமிழ் பேசுவார்கள். எனது குடும்பத்தின் உத்தியோகப்பூர்வ மொழி தமிழ்தான். நான் நன்றாக ஆங்கிலம் பேசுவேன் சிங்களம் பேசுவேன் ஆனால் நான் என் வீட்டுக்கு சென்றவுடன் அங்கே தமிழ்தான் பேசுவேன்.
இதைதான் எனது பிள்ளைகளும் கடைப்பிடிக்கிறார்கள். இப்படி பிள்ளைகளை வளர்த்த எனது மனைவிக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் எத்தினை சிரமமாக இருந்தாலும் சமைத்து வைத்து விட்டே செல்வாள் அதனால் கடையில் சாப்பிட்டு அந்த ருசிக்கு பழக மாட்டார்கள் அதனால் நமது உணவு பழக்கங்களையே அவர்கள் கடைப்பிடிக்கிறார்கள். எனவே உணவு, உடையும்தான் நமது கலாசாரத்தையும் மொழியையும் கடைப்பிடிப்பதற்கான ஆணிவேர். உணவை விட்டுவிட்டால் அப்புறம் நமது மொழியையும் விட்டுவிடுவோம்.

எங்கள் குழந்தைகளுக்கு தமிழ் தெரியாது ஆங்கிலம்தான் தெரியும் என்று பெருமை பேசும் வெளிநாட்டு வாழ்  தமிழர்கள் பற்றி?  

அவர்கள் ஆங்கிலம் பேசுவதை ஒரு கவுரவமாக கருதுகிறார்கள். அது தவறு ஆங்கிலம் என்பது அறிவல்ல அது ஒரு மொழி அவ்வளவுதான்.
இதேவேளை இன்னொரு விடயத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும் தமிழன் வேறு தமிழ் வேறு தமிழன் என்பது அது நமது இனம் தமிழ் என்பது அது ஒரு மொழி அதனை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். எப்படி தமிழ்நாட்டில் ஆங்கிலம் பேசிக்கொண்டு தமிழனாக இருக்குறீர்களோ அதுமாதிரிதான். ஆங்கிலம் பேசுபவன் எல்லாம்  வெள்ளைக்காரன் இல்ல, தமிழன் ஆங்கிலம் பேசினாலும் அவன் தமிழன்தான் அதனால் மொழியையும் இனத்தையும் போட்டு நாம் குழப்பிக்கொள்ள கூடாது!

சாதித்துக் காட்டவேண்டும் என உங்கள் மனதில் தோன்ற காரணம்?
பகிர்ந்து வாழ்ந்துவிட்டு போவோம் இதில் என்ன சாதிக்க இருக்கிறது.
உலகத்தில் ஏழ்மையே இல்லாமல் ஒழித்துவிட்டால் அது நான் செய்த சாதனையாக கருதலாம். அதை யாராலும் செய்ய முடியாது.


கடும் முயற்சிக்கும், சிரமத்திற்கும் கிடைத்த வரவேற்பும் அங்கீகாரமும் எதிர்பார்த்த அளவில் இருந்ததா?

இப்போ இந்தக் கேள்விக்கு அர்த்தமே இல்ல ஏனென்றால் நான்தான் எதையும் எதிர்பார்க்கலையே.. எனக்கு விருப்பமானதை நான் செய்துவிட்டு போகிறேன் இதில் என்னத்த நான் எதிர்பார்க்க. எதிர்பார்த்து செய்தால் அது பகிர்ந்து வாழ்தல் அல்ல. எதிர்பார்த்து ஒரு உதவி செய்தால் அது தானமல்ல அது தர்மமல்ல.

தமிழ்ச் சமூகத்திற்காக நீங்க சொல்ல விரும்புவது என்ன?

 
நீங்கள் ஜப்பான்ல இருந்தாலும் ஜப்பான் மொழியை பேசிவிட்டு தமிழனாக இருங்கள். பிரான்சில் இருந்தாலும் பிரெஞ்சு மொழி பேசிவிட்டு தமிழனாக இருங்கள்🔴


No comments:

Post a Comment