Monday, February 6, 2023

வேலூர் முத்து மண்டபத்தில் கண்டி ராஜா விழா




கண்டியை கடைசியாக ஆட்சி செய்த மன்னன்  ஸ்ரீ விக்கிரமராஜசிங்கன் என்பது நாம் அனைவரும் அறிந்த வரலாற்று உண்மை!
நமது பாடப் புத்தகத்திலும் கண்டி மன்னர் பற்றிய பாடம் பதிவு செய்யப்பட்டுள்ளதால் புதிய அறிமுகம் தேவையில்லைதான் ஆனாலும், மன்னரின் கைதுக்குப் பிறகு ஸ்ரீ விக்கிரமராஜசிங்கனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் என்ன நடந்தது என்பது நம்மில் பலருக்குத் தெரியாத விடயம்.

இலங்கையில் எழுதப்பட்டுள்ள வரலாற்றுகளின்படி சிங்களவர்கள் கண்டி மன்னனை கடைசி சிங்கள மன்னன் என்றும், கண்ணுசாமி நாயக்கர் என்ற இயற் பெயர் மன்னருக்கு இருப்பதால் தமிழர்கள் அவரை கண்டியின் கடைசி தமிழ் மன்னன் என்று அழைத்தார்கள்.
ஆனால் உண்மை அதுவல்ல கண்டியில் தமிழை ஆட்சி மொழியாக கொண்டு ஸ்ரீவிக்கிரமராஜசிங்கன் ஆட்சி செய்திருந்தாலும் அவர் பிறப்பால் ஒரு தெலுங்கர் என்பதுதான் உண்மை.
அந்தக் காலத்தில் சிங்களத்தை கொச்சையாக பேசும் தமிழர்களின் பேச்சு வழக்கை ‘அந்தர தெமல’ என்று அழைப்பார்கள். அதன் உண்மையான அர்த்தம் ஆந்திர தமிழ் என்பதாகும்.  
கண்ணுசாமி நாயக்கருக்கு சகோதரர்கள் யாரும் கிடையாது. ஒரே ஒரு அக்கா மட்டும்தான் அம்மா பெயர் சுப்பம்மாள் வெங்கடபெருமாள்.
கண்டி மன்னரின் பூர்வீக மண் என்றால் அது மதுரைக்கு பக்கத்தில் இருக்கும் வெள்ளிக்குறிச்சி என்ற ஊர்தான், அந்த ஊரில்தான் கண்ணுசாமி நாயக்கரின் இரத்த உறவுகள் வாழ்ந்திருக்கிறார்கள்.
அதன் பிறகு அவர்களுக்குள் ஏற்பட்ட வாரிசு போட்டியின் காரணமாக கண்ணுசாமி குடும்பம் மதுரையிலிருந்து வெளியேறி புதுக்கோட்டை மகாராஜாவின் பாதுகாப்பில் பூலான் பட்டியில் சிறிது காலம் கண்ணுசாமியின் குடும்பத்தினர் வாழ்ந்திருக்கிறார்கள். இதற்கு ஆதாரமாக இன்றைக்கும்  அந்த ஊரில் கண்டி ராஜாவுக்கு மரியாதை வழங்கப்படுகிறது. அந்த ஊரோட பேரு விராச்சிலை. அங்குள்ள அம்மன் கோவிலில் கண்டி மன்னரின் வாரிசுகளுக்கு புதுக்கோட்டை சமஸ்த்தானத்தின் மூலமாக முதல் மரியாதை கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது. இன்று வரை அங்கே அது வழக்கத்தில் இருந்து வருகிறது.


அந்தக் காலத்தில் தமிழகம் தனி மாநிலமாக இருக்கவில்லை தெலுங்கர்களும் தமிழர்களும் ஒரே நிலப்பரப்பில் செரிந்து வாழ்ந்த காலக்கட்டம். அதனால் அந்த நாட்களில் நாயக்கர்கள் எல்லோரும் சரளமாக தமிழ் பேசுவார்கள்.
பூலான் பட்டியில் வாழ்ந்த கண்ணுசாமி குடும்பத்தினர் ஒரு கட்டத்தில் ராமேஸ்வரத்துக்கு சென்றவர்கள் அங்கே ராமேஸ்வர பெரிய கோவிலில் தெய்வீக பணியில் ஈடுப்பட்டிருக்கிறார்கள்.அதன் பிறகு கண்ணுசாமியின் தந்தை இறந்துவிட கண்டியை ஆட்சி செய்த இராஜாதி ராஜசிங்கனின் மனைவியின் தம்பியான கண்ணுசாமியை கண்டிக்கு அழைத்து வந்திருக்கிறார்கள்.


அதன் பிறகு கண்ணுசாமி நாயக்கர் ஸ்ரீவிக்கிரமராஜசிங்கனாக 1798 ல் முடிசூடிய மன்னன் ஆங்கிலேயேர்கள் 1815ல் கண்டியை கைப்பற்றும் வரை பதினேழு வருட காலம் ஆட்சி நடத்தியிருக்கிறார்.

மன்னரை கைது செய்த ஆங்கிலேயே அதிகாரிகள் மீண்டும் ஒரு புரட்சியை நாயக்கர்கள் செய்துவிடக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு மன்னரின் இரத்த உறவுகள் அனைவரையும் கூண்டோடு இந்தியாவிற்கு நாடு கடத்திவிட முடிவு செய்தார்கள் அதன்படி கண்டி ஒப்பந்தமும் நிறைவேற்றப்பட்டது.

1815 பெப்ரவரி 2 ம் திகதி கண்டி ஒப்பந்தம் ஆங்கிலேய அதிகாரிகள் தலைமையில் கைச்சாத்திடப்பட்டது. எஹலபொல நிலமே உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அந் நிகழ்வில் கலந்துக் கொண்டார்கள். ஒப்பந்தத்தின் ஆங்கில நகலை ஆளுனரின் சார்பில் கலந்துக் கொண்ட டொய்லி வாசித்தார். அதைத் தொடர்ந்து சிங்களத்தில் ஏப்ரகாம் டி. சேரம் வாசித்தார்.
ஒப்பந்தத்தில் 14 சிங்களத் தலைவர்கள் கைச்சாத்திட்டனர். அவர்களில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் முப்பாட்டன் உட்பட ஏழு பேர் தமிழில் ஒப்பமிட்டனர். ஒப்பந்தத்தில் முக்கியமாக மன்னன் ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கனுக்கு இனி கண்டியில் எந்த அரசுரிமையும் கிடையாது அதே போல் அவரது வாரிசுகளுக்கும் எந்த உரிமையையும் கோர முடியாது, மன்னரின் வம்சத்தை சேர்ந்த, உறவினர்களான ஆண்கள் எவரும் கண்டியில் தங்கக் கூடாது. கண்டி அரசுக்கு உட்பட்ட பகுதிகள் அனைத்தும் இனி பிரிட்டிஸ் ஆட்சியின் கீழ் இயங்கும். ஆளுனரின் எழுத்து மூல உத்தரவின்றி எவருக்கும் மரணதண்டனை வழங்கப்படக் கூடாது உள்ளிட்ட பல விடயங்கள் அந்த ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தன.
கண்டி ஒப்பந்தம் நிறைவுபெற்றவுடனேயே மன்னரின் உறவினர்கள் அனைவரும் இந்தியாவுக்கு கப்பலில் அனுப்பி வைக்கப்படடார்கள். மன்னரும், மகா ராணிகளும் சில மாதங்களுக்கு பிறகு 1816ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் திகதி கோல்பேசிலிருந்து ‘கோர்ஸ்வலிஸ்’ என்ற கப்பலில் இலங்கையை விட்டு வெளியேறினார்கள்.

இலங்கை அப்போது மதராஸ் கவர்னரின் ஆளுகையிலே இருந்திருக்கிறது. வெலிக்கடை சிறைச்சாலை அமைவதற்கு முன்பாகவே அமைக்கப்பட்ட பெரிய சிறைச்சாலைதான் தமிழகத்திலுள்ள வேலூர் சிறைச்சாலை, அப்போது இலங்கையில் பெரிய குற்றங்களை செய்த கைதிகளை வேலூருக்கு அனுப்பியிருக்கிறார்கள்.
எனவே கண்டி மன்னரை கைது செய்த ஆங்கிலேயர்கள் அவரை வேலூருக்கு குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தார்கள்.
வேலூர் சிறைச்சாலையில் 16 ஆண்டுகளை கழித்த மன்னர் சிறையிலேயே 1832 ஜனவரி 30 ஆம் திகதி இறந்துவிட்டார். மன்னரின் மனைவிகளில் இருவருக்கு சிறைச்சாலையிலேயே குழந்தையும் பிறந்திருக்கிறது.
அதன் பிறகு மன்னரின் வாரிசுகள் தமிழகத்தில் பல பகுதிகளில் குடியேறி வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.


மன்னர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் வேலூர் பாலாற்றங்கரையிலேயே அடக்கம் செய்து, அந்த இடத்தில் ஆங்கிலேயர்கள் மன்னருக்கு ஒரு கல்லறையை அமைத்திருந்தார்கள் கால ஓட்டத்தில் கல்லறை கவனிப்பாரற்று சிதிலமடைந்து போக, 1990களில் அப்போதைய தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி முத்து மண்டபமாக கட்டியெழுப்பி அதனை உத்தியோகப்பூர்வமாக திறந்துவைத்தார்.
கண்டி மன்னர் உயிர் நீத்த ஜனவரி- 30ம் திகதியை மன்னரின் நினைவு நாளாக குருபூஜை விழா என்ற பெயரில் அவரின் வாரிசுகள் மன்னரின் கல்லறை அமையப் பெற்றுள்ள முத்து மண்டபத்தில் விழா எடுத்து வருகிறார்கள்.
இலங்கையின் பஞ்சாங்க கலண்டர்களில் ஜனவரி 30ம் திகதியை ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கன் நினைவு நாள் என்று குறிப்பிடப்பட்டிருப்பதை நீங்கள் அவதானித்திருக்கலாம்.


ஆனால் இலங்கையை பொருத்தவரையில் மன்னரின் நினைவு நாள் கலண்டரில் மட்டுமே அச்சிடப்பட்டிருக்கிறதே தவிர மன்னரின் நினைவு நாள் விழா இங்கே கொண்டாடப்படுவதில்லை.
தமிழ் நாட்டில் இந்த நிகழ்வு பெரிய விழாவாக கொண்டாடப்படுவது இங்குள்ள அனேகருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
மன்னரின் உறவினர்கள் தமிழ்நாடு, ஆந்திரா, மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் வாழ்ந்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் வாழும் மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் தமிழர்களாவே வாழ்ந்து வருகிறார்கள். ஒரு சிலரை தவிர மற்றவர்களுக்கு தமது தாய் மொழியான தெலுங்கு பேச முடியவில்லை.

கர்நாடகா, ஆந்திராவில் வாழ்பவர்கள் தெலுங்கிலேயே பேசுகிறார்கள் அவர்களால் தமிழ் பேச முடியவில்லை.

கண்டி மன்னரின் உறவினர்கள் அனைவரின் வீட்டிலும் மன்னரின் போட்டோ பூஜை அறைகளில் வைக்கப்பட்டிருக்கிறது. மன்னரின் குருபூஜை நடைபெறும் ஜனவரி 30ம் திகதி கண்டி மன்னரின் ரத்த உறவுகள் அனைவரும் தவறாமல் வேலூர்,  முத்து மண்டபத்திற்கு வந்து விடுகிறார்கள்.
இந்த ஆண்டும் மன்னரின் 191வது நினைவு நாள், குரு பூஜை விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கண்டி மன்னரின் ஏழாவது தலைமுறை வாரிசான மதுரைச் சேர்ந்த அசோக்ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அவரின் உறவினர்கள் பலர் கலந்து கொண்டிருந்தார்கள்.
அசோக்ராஜா மதுரையை வசிப்பிடமாகவும் பிறப்பிடமாகவும் கொண்டவர் பிறப்பால் தெலுங்கர் என்றாலும்,  தமிழை தாய் மொழியாக கொண்டு வாழ்ந்து வருகிறார்.

அசோக்ராஜாவின் தாத்தா இலங்கை அரசாங்கத்தால் அனுப்பப்பட்ட கண்டி பென்சன் பெற்றவர் பல ஆண்டுகளாக கண்டி பென்சன் பெற்றதற்கான பத்திரம் அவரிடம் இருக்கிறது.
அந்தக் காலத்தில் மன்னர்களின் ஆட்சிப் பகுதியை ஆங்கிலேயர்கள் கைப்பற்றியதற்கு பிறகு மன்னர் குடும்பத்தினர் சிறை வைக்கப்பட்டாலும் அவர்கள் ராஜபோகமாக வாழ்வதற்காக மாதாந்தம் மானிய தொகையாக மன்னர் குடும்பங்களுக்கு பென்சன் அனுப்பப்படுவது வழமைதான் அதன்படியே கண்டி மன்னர் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து இலங்கை திரைச் சேரியில் இருந்து இந்தியாவுக்கு  பணம் தொடர்ச்சியாக அனுப்பட்டு வந்த நிலையில் 1964ல் ஆட்சியில் இருந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க கண்டி பென்சன் முறைமையை அடியோடு நிறுத்தினார்.

“கண்டி பென்சன் இல்லேனாலும் கௌரவமாக வாழ்கிறோம் தொடர்ச்சியாக எமது பாட்டனான கண்ணுசாமி நாயக்கரின் நினைவு விழாவை சிறப்பாக கொண்டாடி வருகின்றோம்.
ஸ்ரீ விக்கிரமராஜசிங்கனின் பரம்பரை என்பதில் பெருமை கொள்கின்றோம்.
கண்டி மன்னர் நினைவு நாளை, அரசு விழாவாக அறிவிக்கும்படி  தமிழக அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம்.  
விரைவில் அதற்கான அரசாணை கிடைக்கும்னு எதிர்பார்க்கின்றோம் என்று” என்று தமிழன் நாளிதழுக்கு கண்டி மன்னர் வாரிசு அசோக்ராஜா தெரிவித்தார்.🔴

நன்றி: தமிழன் நாளிதழ்- 05-02-2023

Saturday, February 4, 2023

அகோரிகளின் ஆட்டம் - 1

 

களஆய்வு, படப்பிடிப்பு- ஒளிப்படக் காதலன் ஈஸ்வர்.

இந்து சமயத்தவர்களால் கொண்டாடப்படும் ஒரு பெரு நிகழ்வுதான் கும்பமேளா!
இந்தியாவில் லட்சக்கணக்காண மக்கள் ஒன்று கூடும் ஒரு பிரமாண்ட திருவிழாவாக கும்பமேளா நிகழ்வு பார்க்கப்படுகிறது.
பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தியாவின் அலகாபாத், ஹரித்வார், உஜ்ஜைன் மற்றும் நாசிக் ஆகிய நான்கு ஊர்களில் உள்ள ஆற்றுப்படுகையில் இந்த பிரமாண்ட விழா நடைபெறுகிறது.
வேத நம்பிக்கைகளின்படி, சாகாவரம் தரக்கூடிய அமிருதம் என்ற பானத்தின் துளிகள் திருமாலின் வாகனமான கருடன் சுமந்துசென்ற போது பானையிலிருந்து (கும்பம்) இந்த நான்கு இடங்களிலும் விழுந்தன என்று இந்துக்கள் நம்புகிறார்கள். இதனால் அவ்விடங்களில் கும்பமேளா நேரத்தில் நீராடுவது தங்கள் அக, புற அழுக்குகளை நீக்கும் என்றும் நம்புகிறார்கள்.


இவ் விழாவிற்கான சரியான திகதியை இந்து சோதிட சாத்திரத்தில் சொல்லப்படுவதை அடிப்படையாக வைத்து தீர்மானிக்கப்படுகிறது. அதாவது குருபகவான் கும்ப ராசியிலும், சூரியபகவான் மேச ராசியிலும் பிரவேசிக்கின்ற நாளில் கும்பமேளா கொண்டாடப்படுவது வழக்கமாகும்.

பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே கொண்டாடப்படும் இந்த திருவிழா ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை சிறிய அளவிலும் கொண்டாடப்படுமாம்.
அந்த கொண்டாட்டத்தை ‘அர்த் கும்ப்’ என்று அழைக்கிறார்கள். அரை கும்பமேளா என்பது அதன் அர்த்தம்.

பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த விழா கடந்த மார்ச் முதலாம் திகதியிலிருந்து சித்திரை 14 வரை ஹரித்துவாரில் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் பண்டைய நகரமான ஹரித்துவாரில் கங்கை நதியின் ஆற்றுப்படுகையிலே இந்த விழா நடைபெற்றது.
கொரோனா தொற்று காரணமாக மக்கள் கூட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது. ஆனாலும் ஏறக்குறைய 4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள் என்று கும்பமேளா நிகழ்வில் புகைப்படப்பிடிப்பாளாரக கலந்து கொண்டிருந்த சென்னையை சேர்ந்த ஈஸ்வர் எம்மிடம் தெரிவித்தார்.



சென்னை நாளிதழ்களில் சுதந்திர புகைப்படக்கலைஞராக பணியாற்றும் ஈஸ்வர் ஒளிப்படக் காதலனின் நீண்டநாள் கனவுகளில் ஒன்றுதானாம் கும்பமேளாவுக்கு செல்வது. அந்தக் கனவு இந்த ஆண்டு நிறைவேறியதில் ஈஸ்வர்  ரொம்பவே மகிழ்ச்சியோடு இருக்கிறார்.

“கும்பமேளாவின் பெரிய ஹைலைட்டான விசயம் அகோரிகளின் வருகைதான். அகோரிகளின் மர்மம் நிறைந்த வாழ்க்கை பதிவுகளை நிறைய வாசித்திருக்கின்றேன். ஆனாலும் அவர்களை நேரில் பார்த்து படம் எடுத்தது ரொம்பவே வித்தியாசமான அனுபவம்தான்.
ஆட்டம், பாட்டம் என்று நிர்வாண அகோரிகள் ரொம்பவே ஜாலியாக இருக்கிறார்கள். கஞ்சா சுருட்டை வாயில் வைத்து அடி வயிறு வரை மூச்சை இழுத்து புகையை வெளிவிடும்  அழகு அலாதியானது. அவர்கள் விடும் கஞ்சா புகையில் அவர்களின் அகோரமான முகமும் மறைந்து விடுகிறது.
அந்த காட்சிகளை எனது கேமராவில் க்ளிக் செய்த போது சில அகோரிகள் இங்கேவா என்னைப் புகைப்படம் எடு என்று கூறி போஸ்சும் கொடுத்து நான் எடுத்த புகைப்படத்தை பார்த்து  கறை படிந்த பற்கள் காட்டி சிரித்தப்படியே, நன்றாக வந்துள்ளது என்று ஆசிர்வதித்தனர்.
அகோரிகள் ஆசீர்வதித்தில் மகிழ்ச்சிதான் என்றாலும், அவர்களின் தோற்றம் எனக்கு ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியது.”
என்று சொல்லி ஈஸ்வர் சிலீர்த்துப் போகின்றார்.

மகா சிவராத்திரிக்கு முந்தைய பத்து நாட்களும் சாதுக்களும்,  அகோரிகளும் ஹரித்துவாரின் வீதிகளில் ஊர்வலமாக சென்று மக்களுக்கு ஆசீர்வாதம் வழங்குவார்களாம். தலைமை குரு தேரில் வலம் வரும்போது அவரோடு அகோரிகளும் வீதி உலா வருகிறார்கள்.
சாதுக்கள் மக்களுக்கு ஆசீர்வாதம் வழங்கும் போது பக்தர்கள் காணிக்கைகள் உள்ளிட்ட பூஜை பொருட்களையும் சாதுக்களுக்கு வழங்குகிறார்கள். ஆனாலும் சாதுக்கள் அதனை பெற்றுக் கொள்ளவதில்லை சாதுக்களோடு வரும் உதவியாளர்கள் அவற்றை பெற்று கொள்வதையும் அவதானிக்க முடிக்கிறதாம்.

சென்னையிலிருந்து ஹரித்துவாருக்கு நேரிடையாக ரயில் சேவை இல்லை. அதனால் சென்னையிலிருந்து தில்லி நிஜாமுதீனுக்கு ரயிலில் சென்று அங்கிருந்து ஹரித்துவாருக்கு மற்றொரு ரயிலில் பயணிக்க வேண்டும்.
கோரோனா மெடிக்கல் ரிசால்ட் பெற்றவர்கள் மட்டுமே ஹரித்துவாருக்கு பயணிக்க முடியும் எனவே நானும் அதற்கு தயாராக அனைத்து மருத்துவ சான்றிதழ்களையும் முறையாக எடுத்துக் கொண்டு எனது பயணத்தை ஆரம்பித்தேன்.
“கடந்த மார்ச் 7ம் திகதி ஞாயிறு இரவு 7.30க்கு எமது ஹரித்துவார் பயணம் சென்னையிலிருந்து தொடங்கி ஒன்பதாம் திகதி காலை 8 மணிக்கு ஹரித்துவாரை சென்றடைந்தோம்.

இந்தியாவின் மிகவும் பழமையான நகாரங்களில் ஒன்றுதான் ஹரித்துவார். அங்கே ஒரு ஹோட்டலில் தங்கியிருந்து விட்டு மஹா சிவராத்திரியான 11ம் திகதி அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழும்பி குளித்துவிட்டு அகோரிகளும், சாதுக்களும் புனித நீராடும் கங்கை நதிக்கரையில் அந்த குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றேன். அந்த அதிகாலையிலும் அத்தனை கூட்டம் அந்த கங்கை ஆற்றின் பாலத்தின் மேலிருந்து பார்க்கையில் கட்டெறும்பு கூட்டம் ஊர்ந்து செல்வது போல் தோன்றியது அவ்வளவு கூட்டம்.
இந்தியாவில் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதி குரு சங்கராச்சாரியார் இந்துக்களையும், அவர்களது கோயில்களையும் காக்க வேண்டி ஏழுவகையான சாதுக்கள் சபைகளை அமைத்தார். அதன் பிறகு அப்பட்டியலில் மேலும் ஆறு சபைகள் இணைக்கப்பட மொத்தம் 13 வகையான சபைகள் உருவானதாக சொல்லப்படுகிறது.


கோவிட் நேரம் என்பதால் அஹாடா என்ற இடத்தில் ஒரு திறந்த வெளியில் சபைகளைச் சேர்ந்த சாதுக்கள் தங்குவதற்காக சமூக இடைவெளியுடன் கூடாரங்களை இந்திய அரசு அமைத்து கொடுத்திருந்தது.  அந்த கூடாரங்களில் அகோரிகள் குழுக்களாக தங்கியிருந்ததை அவதானிக்க முடிந்தது.

அந்த கூடாரத்துக்குள் கஞ்சா போதையிலேயே அகோரிகள் இருந்தார்கள், சிவனின் நினைவாக இருப்பதற்காகவே அவர்கள் கஞ்சாவை புகைப்பதாக ஒரு அகோரி அவருக்கு தெரிந்து உடைந்த ஆங்கிலத்தில் என்னிடம் சொன்னார்.
அகோரிகளில் பெரும்பாலும் இந்தி மொழி பேசுகிற அகோரிகளே அதிகமாக இருந்தார்கள், தமிழ் அகோரிகள் யாராவது இருப்பார்களா என்று அகோரிகள் கூட்டத்திற்குள் புகுந்து தேடிப் பார்த்தேன் மருந்துக்கு கூட தமிழர்கள் அதில் இல்லை.
நாம் அறிந்து நான் கடவுள் ஆர்யா மட்டும்தான் தமிழ் அகோரியா இருக்கணும், என்று சிரித்துவிட்டு ஈஸ்வர் தொடர்ந்தார்.
“அகோரிகள் பெரும்பாலும் இந்தி, உருது, உள்ளிட்ட அவர்களின் தாய் மொழியிலேயே பேசுவதால் அவர்களிடம் எந்த தகவலையும் பெற்றுக் கொள்ள முடியவில்லை.
நாம் ஒரு திருமண நிகழ்ச்சிக்கோ அல்லது ஒரு சுப நிகழ்ச்சிக்கு செல்லும்போது எப்படி உற்சாகமாக புறப்பட தாயாராவோமோ அதைப் போல் சாதுக்களும் அவர்களின் குருமார்களும் புனித நீராட தயாராகி கொண்டிருந்தனர் அவர்களை புகைப்படம் எடுத்து கொண்டிருந்தபோது மணி காலை 7.30  அப்போது ஒரு தலைமை சாது அந்த இடத்திற்கு வந்து அனைவரிடமும் ‘எல்லோரும் தயாராகுங்கள் கங்கா நதிக் கரைக்கு புனித நீராட செல்லலாம் என்று கூறியதும் சாதுக்களும் அகோரிகளும் பெரும் ஆரவாரத்துடன் கங்கா நதிக் கரையை நோக்கிய உற்சாகமாக நடக்கத் தொடங்கினார்கள்.
குருமார்கள் அலங்கரித்த குதிரை வண்டியில் அமர்ந்து பயணித்தார்கள்.
பொது மக்கள் சாலையின் இரு புறங்களிலும் கூடி இருந்தனர் அவர்களை காவல் துறையினர் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் மக்கள் சாதுக்களின் ஊர்வலத்தைக்காண ஆவலுடன் ஆரவாரம் செய்து உற்சாகத்துடன் இருந்தனர்.
சரியாக காலை எட்டு பதினைந்துக்கு ஒரு ஹெலிகாப்டர் வானில் நான்கு முறை பறந்து லட்சக்கணக்கில் கூடியிருந்த சாதுக்கள் மீது மலர் தூவி விட்டு சென்றது.


காவல்துறையினர் ராணுவ வீரர்கள் மற்றும் சிறப்பு அதிரடி படையினரின் பாதுகாப்போடு கங்கா ஆரத்தி நடைபெறும் அர்கி பொடி எனும் இந்த இடத்திற்கு அதாவது இரண்டு கிலோமீட்டர் தூரம் இந்த ஊர்வலம் நடந்தது.
கங்கை ஆற்றினை நெருங்கிய உடன் குருமார்கள் கங்கை ஆற்றின் படியில்  நிர்வான சாதுக்கள் சூழ்ந்து நிற்க கங்கை ஆற்றிற்கு பூஜை செய்து ஒரே நேரத்தில் அனைவரும் புனித நீராடினர்.
சாதுக்கள் நீராடும் இடத்திற்குள் பொது மக்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
கங்கையில் சாதுக்களின் நீராடல் காட்சிகளை விதவிதமான கோணத்தில் எனது கேமராவில் க்ளிக் செய்து கொண்டேன்.
நீராடல் முடிந்தது சாதுக்களும், அகோரிகளும் சிவனின் ஆலயத்தை நோக்கி ஆரவார ஆட்டத்துடன் நடக்க ஆரம்பித்தார்கள்…

நிர்வாண ஆட்டம் தொடரும்…

Thursday, August 4, 2022

அம்பாளுக்கு ஊர் சுற்றி காண்பித்த ஜெகஜால கில்லாடிகள்!




நூறு வருடங்களை கடந்து இன்றும் இங்கிரிய, றைகம பகுதியில் ராஜகம்பீரத்துடன் ராஜ்ஜியம் அமைத்து பல்லாயிரக்கணக்காண மக்களை தன் வசம் ஈர்த்து அருள்பாலிக்கும் ஸ்ரீகுறிஞ்சி மகாமாரியின் வரலாற்று அற்புதங்கள் ஏராளம்.அந்த வரிசையில் 1977ல் இரத்தினபுரி, கலபொட தோட்டத்துக்கு அம்பாள் திடீர் விஜயம் செய்தது சுவாரஸ்யம் நிறைந்த தனிக் கதை.பழமையான வரலாற்றை கொண்ட ஸ்ரீகுறிஞ்சி மகாமாரி அம்மன் ஆலயத்தின் உற்சவ மூர்த்தி ஐம்பொன்களினால் உருவாக்கப்பட்டு இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டது.

சுற்றுலா சென்று வந்த உற்சவர்
அந்தக் காலத்தில், விலைமதிப்பில்லாத இந்த உற்சவ மூர்த்தியின் புகழ் அந்த பிரதேசம் முழுவதும் பரவலாக பேசப்பட்டு வந்தது.
அப்போதுதான் இங்கிரியாவிலிருந்து பல கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருக்கும் கலபொட தோட்டத்தில் ஒரு புதிய ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டு வந்தது. அந்த ஆலயத்தில் எழுந்தருளுவதற்காக ஒரு உற்சவ மூர்த்தி தேவை என்ற செய்தியும் அந்த பிரதேசத்தில் உலா வந்தது.

பலவிதமான திருட்டு செயல்களில் ஈடுபட்டு அந்தப் பகுதியில் ஜெகஜால கில்லாடிகளாக இருந்த முனியனுக்கும், சின்ன சாந்தனுக்கு “கோயிலுக்கு சிலை வேண்டும்”
என்ற செய்தி காதில் தேனாக வந்து பாய்ந்தது.
அன்று முதல் தனது கழுகு கண்களை கூர்மையாக்கி எங்காவது சிலை கிடைக்குமா என்று வலை வீசி தேட ஆரம்பித்திருக்கிறார்கள். அப்போதுதான் அவர்களின் கழுகுப் பார்வையில்இங்கிரிய, றைகம் மேற்பிரிவில் அருள்பாலிக்கும் அம்பாள் சிக்கியிருக்கிறாள்.
இங்கிரிய பிரதேசத்தில் உள்ள தமது உறவினர்களின் வீடுகளுக்கு வந்து தங்கியிருந்து ஆலயத்தை நோட்டமிட்டு காலம் கனிந்து வரும்வரை இந்த மெகா கள்ளர்கள் காத்திருந்து இருக்கிறார்கள்.

மின்சாரம் வசதி தோட்ட குடியிருப்புகளுக்கு வராத அந்தக் காலம். குப்பி விளக்குகள் அணைக்கப்பட்டு விட்டால் இருள் சூழ்ந்து அந்தப் பகுதி மயான அமைதியாகி விடும்.
அன்று மாலை இருள் சூழ்வதற்கு முன்பாகவே குறிஞ்சி மாரி கோயிலில் விளக்கேற்றி வைத்த கோயில் பூசகர் சீர்பாதம் அவசர அவசரமாக கோயில் கதவுகளை பூட்டிவிட்டு தீப்பந்தத்தை கொழுத்தி கையிலெடுத்தவர், கோயில் வளாகத்தை விட்டு வெளியேறி வீடு நோக்கி நடக்கத் தொடங்கினார்.
பூசாரி கோயில் கதவை அடைக்கும் போது வழமைக்கு மாறாக அன்று பல்லி விடாமல் தொடர்ந்து கத்தும் சத்தம் பூசாரிக்கு அபசகுணமாக தெரிந்திருக்கிறது.
சீர்பாதம் பூசாரி

ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்ற உள் உணர்வு பூசாரியின் நாளங்களுக்குள் புகுந்து அவரை பதற வைத்திருக்கிறது.
மனதை திடமாக்கிய சீர்பாதம் பூசாரி “எல்லாத்தையும் ஆத்தா பார்த்துக்குவா!”ன்னு கோயிலை கையெடுத்து கும்பிட்டுவிட்டு திரும்பி பார்க்காமல் நடந்தார்.
திருட்டு செயல்களுக்கு உகந்த நாள் அம்மாவாசை நாள்தான் என்பதை ஜெகஜால எம்டன்களான முனியனும், சின்ன சாந்தனும் புரிந்து வைத்திருந்தார்கள்.
அந்த கும்மிருட்டுக்குள் கோயிலை நோக்கி நடந்தார்கள்.
கோயில் வளாகத்தில் நிமிர்ந்து நின்ற ஆலவிருட்சத்தின் சருகுகள் கோயில் முற்றத்தில் கொட்டிக் கிடந்தது. அதில் அந்த இருவரும் அடிமேல் அடியெடுத்து வைத்த போது “சர..சர” என்ற சத்தம் அந்த நிசப்த்த அமைதியை குலைத்தது.
“இந்த கோயில் சுவரில் கன்னம் வைத்து உள்ளே செல்வதை விட கோயில் கூரையை பிரித்து உள்ளே இறங்குவது வசதியாக இருக்கும்” என்பதை சின்ன சாந்தன் முனியனுக்கு தெளிவுப்படுத்தினான்.
இரண்டே பாய்ச்சலில் லாவகமாக கோயில் சுவற்றில் ஏறிய முனியன் கூரையை பிரித்து உள்ளே இறங்கினான்.


பூசாரி சீர்பாதம் ஏற்றி வைத்த விளக்கு நின்று எரிந்து கொண்டிருந்தது. அந்த வெளிச்சத்தில் அம்பாள் உற்சவ மூர்த்தி ஜொலித்துக் கொண்டிருந்தாள். அந்தக் காட்சியை பார்த்த போது ஒரு நிமிடம் ஜெகஜால கில்லாடியான முனியன் கொஞ்சம் ஆடித்தான் போனானாம்.
“ஆத்தா ஆவேசப்பட்டு ஏதாவது பண்ணிடுவாளோ”னு பயந்துப் போன முனியன், “தாயீ உன்ன நாங்க திருடுறதே இதைவிட ஒரு பெரிய கோயில்ல உன்ன வச்சி பூஜிக்கதான். உனக்கும் புதுசா ஒரு ஊரை சுத்திப்பார்த்த மாதிரி இருக்கும்”னு ஆத்தாவின் காலில் விழுந்து கும்பிட்ட முனியன் உற்சவ மூர்த்தியை கொத்தாக தூக்கி கோணிப் பையில் போட்டுக் கொண்டு கோயிலுக்குள்ளிருந்து வெளியே வந்தான்.
ஆலயத்தின் பழைய தோற்றம்
“போன காரியத்தை நண்பன் வெற்றிகரமாக முடித்து விட்டான்” என்பதில் உச்சிக்குளிர்ந்து போன சின்ன சாந்தன் நண்பனின் கையிலிருந்த கோணிப் பையை வாங்கி தோளில் போட்டுக் கொண்டு நடந்தான் ஆரம்பத்தில் கனம் குறைவாக இருந்த கோணிப் பையின் எடை கூடிக் கொண்டே சென்றிருக்கிறது ரொம்ப சிரமப்பட்டு சிலையை தூக்கிச் சென்று றைகம் கீழ் பிரிவு இறப்பர் தொழிற்சாலைக்கு அருகாமையில் இருக்கும் பஸ் நிறுத்துமிடத்தில் வைத்துவிட்டு மூச்சு வாங்க நின்றார்கள்.
சின்ன சாந்தன் அப்போது நேரத்தை பார்த்தான் அதிகாலை 3மணியை சின்ன முள் தொட்டுவிட சில நிமிடங்களே இருந்தது. “இந்த நேரத்தில் இங்கிரியாவுக்கு பஸ் செல்வதற்கு வாய்ப்பு இல்லை. அப்படியே இங்கிரியாவுக்கு சென்றாலும் இரத்தினபுரிக்கு இந்த அதிகாலை வேளையில் பஸ் வருவதற்கு வாய்ப்பே இல்லை, விடிந்து ஆள் நடமாட்டம் வந்து விட்டால் நம்மை அமுக்கி விடுவார்கள்” என்று பீதியடைந்த ஜெகஜால கில்லாடிகள் முதலில் அந்த இடத்தை விட்டு வெளியேறி விட வேண்டும் என்பதில் குறியாக இருந்திருக்கிறார்கள்.

அப்போது கொழும்பை நோக்கி அந்த இருளை கிழித்து கொண்டு ஒரு வாகன வெளிச்சம் முந்திக்கொண்டு வர, கூடவே பஸ் சத்தமும் பின்னாலேயே வந்தது. இடத்தை காலிப் பண்ணுவதில் குறியாக இருந்த ஜெகஜாலர்கள்
இருவரும் குதித்து ஓடி பஸ்சில் ஏறி சிலை இருக்கும் கோணிப்பையை பாதுகாப்பாக வைத்துவிட்டு ஆசனத்தில் அமர்ந்து நிம்மதி பெருமூச்சு விட்டார்கள்.




“கொழும்புக்கு போய் நம்ம அடுத்த திட்டத்தை அமைக்கலாம்”னு இருவரும் கொழும்புக்கு டிக்கட் வாங்கினார்கள்.
சீட்டுக்கடியில் அடிக்கடி கோணிப்பையை தொட்டுப் பார்த்தப்படி வந்த சின்ன சாந்தன் “ஆத்தா எங்களை மன்னிச்சுக்க எல்லாம் நல்லதுக்குதான் பண்ணுறோம்”னு மனதுக்குள் வேண்டிக்கொண்டான்.
சில மணி நேரங்களில் பஸ் கொழும்பை வந்தடைந்தது. அப்போது எம்.ஜி.ஆரின் “நீதிக்கு தலைவணங்கு” திரைப்படம் கொழும்பில் திரையிடப்பட்டிருந்தது.எம்.ஜி.ஆர் ரசிகர்களான இந்த கில்லாடிகளுக்கு படம் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. உடனே தமது நண்பர் சமையல்காரராக பணியாற்றும் ஆமர் வீதி வாணிவிலாஸ் ஹோட்டலுக்குச் சென்று அவரின் உதவியோடு கோணிப்பையை ஒரு மூலையில் பாதுகாப்பாக வைத்துவிட்டு கெப்பிட்டல் பட மாளிகையில் தமது ஆசை நாயகன்      எம். ஜி.ஆரை விசிலடித்து தரிசித்து இருக்கிறார்கள்.


வாணி விலாஸ் ஹோட்டலின் மூலையில் அண்ட சராசரங்களையெல்லாம் சர்வசாதாரணமாக ஆட்டுவிப்பவள் அமைதியாக அமர்ந்திருக்கிறாள் என்ற விடயம் ஹோட்டல் அதிபருக்கோ அல்லது அந்த அப்பாவி சமையல்காரருக்கோ கடைசி வரை தெரியாதாம்.
எம்.ஜி.ஆர் என்ட் கார்டு போட்டதும் திரையரங்கிலிருந்து சாவகாசமாக வெளியே வந்த ஜெகஜாலர்கள் வாணி விலாசில் பகல் உணவை முடித்து விட்டு அங்கிருந்து நேராக  இரத்தினபுரிக்கு புறப்பட்டார்கள்.

வீட்டில் கொண்டு சிலையை வைப்பது ஆபத்து என்பதை உணர்ந்த அந்த இருவரும் அவர்களின் வீட்டுக்கு அருகில் இருக்கும் யானை வளர்க்கும், யானைக்காரனின் வீட்டுக்குச் சென்று கோணிப் பையில் சில இரும்பு பொருட்கள் இருப்பதாகவும் இன்னும் சில நாட்களில் அவற்றை எடுத்துச் செல்வதாகவும் கூறி யானைக்காரன் படுக்கும் கட்டிலுக்கு அடியில் வைத்து விட்டு சென்று விட்டார்கள்.
றைகம், மேற்பிரிவு மகாமாரி ஆலயத்தில் வழமைப்போல விளக்கேற்றுவதற்காக ஆலயத்தை திறந்த சீர்பாதம் பூசாரிக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
பூசாரி எழுப்பிய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பதறியடித்துக் கொண்டு ஓடி வந்து பார்த்து அம்பாள் சிலை திருடு போனதை கண்டு வெலவெலத்து, உறைந்து போய் நின்றார்கள்.
சில நிமிடங்களிலேயே அம்பாள் சிலை திருடுப்போன அந்தச் செய்தி காட்டுத்தீப்போல றைகம் பிரதேசம் முழுவதும் பற்றிக் கொண்டதால் ஊர் மக்கள் அனைவரும் ஆலயத்தை சூழ்ந்து கொண்டார்கள்.
“ஆலயம் அமைந்திருக்கும் ஏழாம் நம்பர் மலையில் எங்காவது சிலையை திருடர்கள் பதுக்கி வைத்திருக்கலாமோ” என்ற கோணத்தில் சிந்தித்த மக்கள் அந்தப் பகுதியை சல்லடைப் போட்டு தேடியும் சிலை கிடைக்காததால் விரக்தியடைந்தார்கள்.
எம்.டீ.எஸ்.மருதமுத்து
தலைவர்


ஊருக்கு ஏதாவது கெடுதல் நடக்கப் போகிறதோ என்ற அச்சம் அந்தப் பகுதியில் குடிக்கொண்டது. எதையோ இழந்துவிட்ட மாதிரி மக்களின் அன்றாட நடவடிக்கைகளும், ஊரும் ஸ்தம்பித்துப்போயிருந்தது.
ஆனால் சிலையை கபளீகரம் செய்து கலபொடைக்கு எடுத்துச் சென்ற முனியனுக்கு அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துகொண்டு அவன் வீட்டுக்குள் குதித்திருந்ததாம். சிலையை ஊருக்கு எடுத்துச் செல்லும் போது அவன் அந்த சந்திக்கடை டிக்கட் கவுண்டரில் அதிர்ஸ்ட சீட்டு வாங்கி இருக்கிறான். அந்த சீட்டுக்கு அவனுக்கு பரிசு விழுந்திருக்கிறது.
அந்தப் பணத்தில் ஓரிரு நாட்களிலேயே அந்த ஊரில் ஒரு கடையை போட்ட முனியன் கல்லாவில் உட்கார்ந்து விட்டான்.
“எல்லாம் சாமி வந்த அதிர்ஷ்டம்தான் இப்படி தாறுமாறா நல்லது நடக்குது”ன்னு கணக்குப்போட்ட முனியன் “சிலையை கலபொட கோயிலுக்கு கொடுக்கக்கூடாது, நாமே ஒரு சின்ன கோயில் கட்டி அதுல இந்த சிலையை வச்சுடலாம்”னு புதுக்கணக்கு  போட ஆரம்பித்தான்.
இதே வேளை, றைகமையில் வசித்த பெரும் பூசாரிகள் தமது சித்து விளையாட்டின் மூலம் சிலை இருக்கும் இடத்தை அறிய சோழி உருட்டிக்கொண்டிருந்தார்கள். வெற்றிலையில் மை பார்ப்பது. பெரிய கோடாங்கிகளை வைத்து ஆருடம் பார்க்கும் வேலைகள் உள்ளிட்ட சிலையை மீட்பதற்கான முன்னெடுப்புகள் பரவலாக அந்தப் பகுதியில் நடைபெற்று வந்தது.
அப்போதைய றைகம், தோட்ட தலைவரான,    எம்.டீ.எஸ்.மருதமுத்து உள்ளிட்ட தொண்டர்கள் அனைவரும் சிலையை எப்படியும் மீட்டுவிட வேண்டும் என்பதில் தீயாய் வேலைசெய்தார்கள்.
ஆலயத்தின் இன்றைய தோற்றம்

யானைக்காரன் வீட்டின் கட்டிலுக்கு அடியில் கோணிப் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அம்பாள் சில திருவிளையாடல்களையும் அங்கே அரங்கேற்ற தொடங்கியிருந்தாள்.
இரண்டு மூன்று நாட்களாக நள்ளிரவில் பயந்து அலறிக்கொண்டிருந்த யானைக்காரன் முடிவில் பைத்தியமாக வீட்டுக்கு வெளியே வந்து கத்திக்கொண்டிருந்தான்.
இதே போன்ற அமானுஷ்ய நிகழ்வுகள் சிலவும் கலபொட தோட்டத்தில் அறங்கேறியதால் விசயம் விஸ்பரூபம் எடுக்க தொடங்கி விட்டதை முனியன் புரிந்து கொண்டு சின்ன சாந்தனின் உதவியோடு யானைக்காரன் வீட்டுக் கட்டிலுக்கு அடியில் இருந்த சிலையை பத்திரமாக வெளியே எடுத்து அந்த ஊரில் ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு பாழடைந்த கிணற்றுக்குள் இறக்கினான்.

அம்பாளை குளிரவைத்து காரியம் சாதிக்கலாம் என்ற நப்பாசையில் முனியன் இருந்தான். ஆழ் கிணற்று ஜலத்துக்குள் அம்பாள் உச்சியும், உள்ளமும் குளிர்ந்த நிலையில் தியானத்தில் இருந்திருக்கிறாள்.
இதே வேளை அந்த பாழடைந்த கிணற்றுக்கு அருகில் இருக்கும் கிணறுகளில் குளிக்கச் சென்றவர்களுக்கு சில அதிர்ச்சியான சம்பவங்கள் நடந்தேறி இருக்கிறது.
கிணற்றில் தண்ணீரை அள்ளி உடம்பில் ஊற்றும் போது உடலில் மின்சாரம் பாய்ந்தது போன்ற ஒரு பிரம்மை ஏற்பட்டதாகவும். சில பெண்கள் அருள் வந்து ஆடியதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் கலபொடயில் வசிக்கும் மக்கள் செய்வதறியாது திகைத்து வந்தார்கள்.
ஒருநாள் சின்ன சாந்தன் மூக்கு மூட்ட குடித்துவிட்டு குடிபோதையில் தாம் செய்த சாகசத்தை தமது நண்பர்களிடம் உலறி, அவிழ்த்துக் கொட்டியதால் றைகம மகாமாரி அம்பாள் கலபொடைக்கு வந்த செய்தி வைரலாக பரவத் தொடங்கியது.
சிலைகளை கடத்துபவர்கள் பெரும்பாலும் கிணறுகளில் அவற்றை பதுக்கி வைப்பார்கள் என்பதை மோப்பம் பிடித்து தெரிந்து கொண்ட போலீசுக்கு, கலபொடை கிணற்றில் அம்பாள் இருக்கும் விடயமும் தெரிந்து விட முனியனையும், சின்ன சாந்தனையும் போலீஸ் அல்லேக்காக தூக்கிச் சென்று கும்மியதில் அவர்கள் விசயத்தை திகில் பட காட்சிகளாக விபரித்து இருக்கிறார்கள்.
அடுத்த நொடியே கலபொடையில் அவர்கள் சொன்ன கிணற்றுக்குள் இறங்கி அம்பாளை பத்திரமாக வெளியே எடுத்திருக்கிறார்கள்.
அதன் பிறகு இங்கிரிய போலிஸ் நிலையத்தில் அம்பாள் வைக்கப்பட்டதும். அதிரடியாக களத்தில் இறங்கிய றைகம் தோட்ட தலைவர் எம்.டீ.எஸ் மருதமுத்து, அம்பாளை தற்காலிகமாக றைகம் கீழ் பிரிவு ஆலயத்தில் வைக்கலாம் என்று முடிவெடுத்து அம்பாளை றைகம் கீழ் பிரிவு ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தில் அமரவைத்தார்.
அதன் பிறகு ஒரு நல்ல நாளில் தாரை,தப்பட்டை, மேளம் முழங்க மகாமாரி அம்பாளை ஊர்வலமாக றைகம் மேற்பிரிவு ஸ்ரீகுறிஞ்சி மகாமாரி அம்மன் ஆலயத்துக்கு எடுத்து வந்து அதற்கான கிரியைகள் அனைத்தையும் முடித்து கோயிலுக்குள் அமரவைத்தார்கள்.
அம்பாள் விருப்பப்பட்டு ஒரு இன்பச் சுற்றுலா சென்றதாக கருதிய மக்கள் குற்றவாளிகளையும் மன்னித்து விடும்படி சொல்லிவிட்டார்கள். ஊரை விட்டுப்போன அம்பாள் ஊர் திரும்பிய சந்தோசம் றைகமைக்கு புது உற்சாகத்தையும், மட்டற்ற மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
தனது திருவிளையாடல் பயணத்தை வெற்றிகரமாக முடித்த திருப்தியில் அம்பாள் அன்றிலிருந்து இன்றுவரை ஒரு சில அற்புதங்களோடு றைகமையிலேயே அமைதியாக வீற்றிருக்கிறாள். அவள் மீண்டும் ஒரு பெரிய அதிசயத்தையும், மகிமையையும் செய்வாள் என்கிற எதிர்பார்ப்பில் குறிஞ்சியூர் காத்துக்கிடக்கிறது🔴
一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一
கட்டுரைக்கான ஓவியங்கள், வேலூர் நிர்மல்குமார்.


எனது கட்டுரை பதிவு இங்கிரிய, றைகம ஸ்ரீ குறிஞ்சி அம்மன் ஆலய ‘மகா கும்பாபிஷேக பெருவிழா நூலில் 2020ம் ஆண்டு வெளியானது.