
களஆய்வு, படப்பிடிப்பு- ஒளிப்படக் காதலன் ஈஸ்வர்.
இந்து சமயத்தவர்களால் கொண்டாடப்படும் ஒரு பெரு நிகழ்வுதான் கும்பமேளா!
இந்தியாவில் லட்சக்கணக்காண மக்கள் ஒன்று கூடும் ஒரு பிரமாண்ட திருவிழாவாக கும்பமேளா நிகழ்வு பார்க்கப்படுகிறது.
பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தியாவின் அலகாபாத், ஹரித்வார், உஜ்ஜைன் மற்றும் நாசிக் ஆகிய நான்கு ஊர்களில் உள்ள ஆற்றுப்படுகையில் இந்த பிரமாண்ட விழா நடைபெறுகிறது.
வேத நம்பிக்கைகளின்படி, சாகாவரம் தரக்கூடிய அமிருதம் என்ற பானத்தின் துளிகள் திருமாலின் வாகனமான கருடன் சுமந்துசென்ற போது பானையிலிருந்து (கும்பம்) இந்த நான்கு இடங்களிலும் விழுந்தன என்று இந்துக்கள் நம்புகிறார்கள். இதனால் அவ்விடங்களில் கும்பமேளா நேரத்தில் நீராடுவது தங்கள் அக, புற அழுக்குகளை நீக்கும் என்றும் நம்புகிறார்கள்.
இவ் விழாவிற்கான சரியான திகதியை இந்து சோதிட சாத்திரத்தில் சொல்லப்படுவதை அடிப்படையாக வைத்து தீர்மானிக்கப்படுகிறது. அதாவது குருபகவான் கும்ப ராசியிலும், சூரியபகவான் மேச ராசியிலும் பிரவேசிக்கின்ற நாளில் கும்பமேளா கொண்டாடப்படுவது வழக்கமாகும்.
பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே கொண்டாடப்படும் இந்த திருவிழா ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை சிறிய அளவிலும் கொண்டாடப்படுமாம்.
அந்த கொண்டாட்டத்தை ‘அர்த் கும்ப்’ என்று அழைக்கிறார்கள். அரை கும்பமேளா என்பது அதன் அர்த்தம்.
பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த விழா கடந்த மார்ச் முதலாம் திகதியிலிருந்து சித்திரை 14 வரை ஹரித்துவாரில் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் பண்டைய நகரமான ஹரித்துவாரில் கங்கை நதியின் ஆற்றுப்படுகையிலே இந்த விழா நடைபெற்றது.
கொரோனா தொற்று காரணமாக மக்கள் கூட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது. ஆனாலும் ஏறக்குறைய 4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள் என்று கும்பமேளா நிகழ்வில் புகைப்படப்பிடிப்பாளாரக கலந்து கொண்டிருந்த சென்னையை சேர்ந்த ஈஸ்வர் எம்மிடம் தெரிவித்தார்.
சென்னை நாளிதழ்களில் சுதந்திர புகைப்படக்கலைஞராக பணியாற்றும் ஈஸ்வர் ஒளிப்படக் காதலனின் நீண்டநாள் கனவுகளில் ஒன்றுதானாம் கும்பமேளாவுக்கு செல்வது. அந்தக் கனவு இந்த ஆண்டு நிறைவேறியதில் ஈஸ்வர் ரொம்பவே மகிழ்ச்சியோடு இருக்கிறார்.
“கும்பமேளாவின் பெரிய ஹைலைட்டான விசயம் அகோரிகளின் வருகைதான். அகோரிகளின் மர்மம் நிறைந்த வாழ்க்கை பதிவுகளை நிறைய வாசித்திருக்கின்றேன். ஆனாலும் அவர்களை நேரில் பார்த்து படம் எடுத்தது ரொம்பவே வித்தியாசமான அனுபவம்தான்.
ஆட்டம், பாட்டம் என்று நிர்வாண அகோரிகள் ரொம்பவே ஜாலியாக இருக்கிறார்கள். கஞ்சா சுருட்டை வாயில் வைத்து அடி வயிறு வரை மூச்சை இழுத்து புகையை வெளிவிடும் அழகு அலாதியானது. அவர்கள் விடும் கஞ்சா புகையில் அவர்களின் அகோரமான முகமும் மறைந்து விடுகிறது.
அந்த காட்சிகளை எனது கேமராவில் க்ளிக் செய்த போது சில அகோரிகள் இங்கேவா என்னைப் புகைப்படம் எடு என்று கூறி போஸ்சும் கொடுத்து நான் எடுத்த புகைப்படத்தை பார்த்து கறை படிந்த பற்கள் காட்டி சிரித்தப்படியே, நன்றாக வந்துள்ளது என்று ஆசிர்வதித்தனர்.
அகோரிகள் ஆசீர்வதித்தில் மகிழ்ச்சிதான் என்றாலும், அவர்களின் தோற்றம் எனக்கு ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியது.”
என்று சொல்லி ஈஸ்வர் சிலீர்த்துப் போகின்றார்.
மகா சிவராத்திரிக்கு முந்தைய பத்து நாட்களும் சாதுக்களும், அகோரிகளும் ஹரித்துவாரின் வீதிகளில் ஊர்வலமாக சென்று மக்களுக்கு ஆசீர்வாதம் வழங்குவார்களாம். தலைமை குரு தேரில் வலம் வரும்போது அவரோடு அகோரிகளும் வீதி உலா வருகிறார்கள்.
சாதுக்கள் மக்களுக்கு ஆசீர்வாதம் வழங்கும் போது பக்தர்கள் காணிக்கைகள் உள்ளிட்ட பூஜை பொருட்களையும் சாதுக்களுக்கு வழங்குகிறார்கள். ஆனாலும் சாதுக்கள் அதனை பெற்றுக் கொள்ளவதில்லை சாதுக்களோடு வரும் உதவியாளர்கள் அவற்றை பெற்று கொள்வதையும் அவதானிக்க முடிக்கிறதாம்.
சென்னையிலிருந்து ஹரித்துவாருக்கு நேரிடையாக ரயில் சேவை இல்லை. அதனால் சென்னையிலிருந்து தில்லி நிஜாமுதீனுக்கு ரயிலில் சென்று அங்கிருந்து ஹரித்துவாருக்கு மற்றொரு ரயிலில் பயணிக்க வேண்டும்.
கோரோனா மெடிக்கல் ரிசால்ட் பெற்றவர்கள் மட்டுமே ஹரித்துவாருக்கு பயணிக்க முடியும் எனவே நானும் அதற்கு தயாராக அனைத்து மருத்துவ சான்றிதழ்களையும் முறையாக எடுத்துக் கொண்டு எனது பயணத்தை ஆரம்பித்தேன்.“கடந்த மார்ச் 7ம் திகதி ஞாயிறு இரவு 7.30க்கு எமது ஹரித்துவார் பயணம் சென்னையிலிருந்து தொடங்கி ஒன்பதாம் திகதி காலை 8 மணிக்கு ஹரித்துவாரை சென்றடைந்தோம்.
இந்தியாவின் மிகவும் பழமையான நகாரங்களில் ஒன்றுதான் ஹரித்துவார். அங்கே ஒரு ஹோட்டலில் தங்கியிருந்து விட்டு மஹா சிவராத்திரியான 11ம் திகதி அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழும்பி குளித்துவிட்டு அகோரிகளும், சாதுக்களும் புனித நீராடும் கங்கை நதிக்கரையில் அந்த குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றேன். அந்த அதிகாலையிலும் அத்தனை கூட்டம் அந்த கங்கை ஆற்றின் பாலத்தின் மேலிருந்து பார்க்கையில் கட்டெறும்பு கூட்டம் ஊர்ந்து செல்வது போல் தோன்றியது அவ்வளவு கூட்டம்.
இந்தியாவில் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதி குரு சங்கராச்சாரியார் இந்துக்களையும், அவர்களது கோயில்களையும் காக்க வேண்டி ஏழுவகையான சாதுக்கள் சபைகளை அமைத்தார். அதன் பிறகு அப்பட்டியலில் மேலும் ஆறு சபைகள் இணைக்கப்பட மொத்தம் 13 வகையான சபைகள் உருவானதாக சொல்லப்படுகிறது.
கோவிட் நேரம் என்பதால் அஹாடா என்ற இடத்தில் ஒரு திறந்த வெளியில் சபைகளைச் சேர்ந்த சாதுக்கள் தங்குவதற்காக சமூக இடைவெளியுடன் கூடாரங்களை இந்திய அரசு அமைத்து கொடுத்திருந்தது. அந்த கூடாரங்களில் அகோரிகள் குழுக்களாக தங்கியிருந்ததை அவதானிக்க முடிந்தது.
அந்த கூடாரத்துக்குள் கஞ்சா போதையிலேயே அகோரிகள் இருந்தார்கள், சிவனின் நினைவாக இருப்பதற்காகவே அவர்கள் கஞ்சாவை புகைப்பதாக ஒரு அகோரி அவருக்கு தெரிந்து உடைந்த ஆங்கிலத்தில் என்னிடம் சொன்னார்.
அகோரிகளில் பெரும்பாலும் இந்தி மொழி பேசுகிற அகோரிகளே அதிகமாக இருந்தார்கள், தமிழ் அகோரிகள் யாராவது இருப்பார்களா என்று அகோரிகள் கூட்டத்திற்குள் புகுந்து தேடிப் பார்த்தேன் மருந்துக்கு கூட தமிழர்கள் அதில் இல்லை.
நாம் அறிந்து நான் கடவுள் ஆர்யா மட்டும்தான் தமிழ் அகோரியா இருக்கணும், என்று சிரித்துவிட்டு ஈஸ்வர் தொடர்ந்தார்.
“அகோரிகள் பெரும்பாலும் இந்தி, உருது, உள்ளிட்ட அவர்களின் தாய் மொழியிலேயே பேசுவதால் அவர்களிடம் எந்த தகவலையும் பெற்றுக் கொள்ள முடியவில்லை.நாம் ஒரு திருமண நிகழ்ச்சிக்கோ அல்லது ஒரு சுப நிகழ்ச்சிக்கு செல்லும்போது எப்படி உற்சாகமாக புறப்பட தாயாராவோமோ அதைப் போல் சாதுக்களும் அவர்களின் குருமார்களும் புனித நீராட தயாராகி கொண்டிருந்தனர் அவர்களை புகைப்படம் எடுத்து கொண்டிருந்தபோது மணி காலை 7.30 அப்போது ஒரு தலைமை சாது அந்த இடத்திற்கு வந்து அனைவரிடமும் ‘எல்லோரும் தயாராகுங்கள் கங்கா நதிக் கரைக்கு புனித நீராட செல்லலாம் என்று கூறியதும் சாதுக்களும் அகோரிகளும் பெரும் ஆரவாரத்துடன் கங்கா நதிக் கரையை நோக்கிய உற்சாகமாக நடக்கத் தொடங்கினார்கள்.
குருமார்கள் அலங்கரித்த குதிரை வண்டியில் அமர்ந்து பயணித்தார்கள்.
பொது மக்கள் சாலையின் இரு புறங்களிலும் கூடி இருந்தனர் அவர்களை காவல் துறையினர் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் மக்கள் சாதுக்களின் ஊர்வலத்தைக்காண ஆவலுடன் ஆரவாரம் செய்து உற்சாகத்துடன் இருந்தனர்.
சரியாக காலை எட்டு பதினைந்துக்கு ஒரு ஹெலிகாப்டர் வானில் நான்கு முறை பறந்து லட்சக்கணக்கில் கூடியிருந்த சாதுக்கள் மீது மலர் தூவி விட்டு சென்றது.
காவல்துறையினர் ராணுவ வீரர்கள் மற்றும் சிறப்பு அதிரடி படையினரின் பாதுகாப்போடு கங்கா ஆரத்தி நடைபெறும் அர்கி பொடி எனும் இந்த இடத்திற்கு அதாவது இரண்டு கிலோமீட்டர் தூரம் இந்த ஊர்வலம் நடந்தது.
கங்கை ஆற்றினை நெருங்கிய உடன் குருமார்கள் கங்கை ஆற்றின் படியில் நிர்வான சாதுக்கள் சூழ்ந்து நிற்க கங்கை ஆற்றிற்கு பூஜை செய்து ஒரே நேரத்தில் அனைவரும் புனித நீராடினர்.
சாதுக்கள் நீராடும் இடத்திற்குள் பொது மக்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
கங்கையில் சாதுக்களின் நீராடல் காட்சிகளை விதவிதமான கோணத்தில் எனது கேமராவில் க்ளிக் செய்து கொண்டேன்.
நீராடல் முடிந்தது சாதுக்களும், அகோரிகளும் சிவனின் ஆலயத்தை நோக்கி ஆரவார ஆட்டத்துடன் நடக்க ஆரம்பித்தார்கள்…
நிர்வாண ஆட்டம் தொடரும்…




No comments:
Post a Comment