Thursday, August 4, 2022

அம்பாளுக்கு ஊர் சுற்றி காண்பித்த ஜெகஜால கில்லாடிகள்!




நூறு வருடங்களை கடந்து இன்றும் இங்கிரிய, றைகம பகுதியில் ராஜகம்பீரத்துடன் ராஜ்ஜியம் அமைத்து பல்லாயிரக்கணக்காண மக்களை தன் வசம் ஈர்த்து அருள்பாலிக்கும் ஸ்ரீகுறிஞ்சி மகாமாரியின் வரலாற்று அற்புதங்கள் ஏராளம்.அந்த வரிசையில் 1977ல் இரத்தினபுரி, கலபொட தோட்டத்துக்கு அம்பாள் திடீர் விஜயம் செய்தது சுவாரஸ்யம் நிறைந்த தனிக் கதை.பழமையான வரலாற்றை கொண்ட ஸ்ரீகுறிஞ்சி மகாமாரி அம்மன் ஆலயத்தின் உற்சவ மூர்த்தி ஐம்பொன்களினால் உருவாக்கப்பட்டு இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டது.

சுற்றுலா சென்று வந்த உற்சவர்
அந்தக் காலத்தில், விலைமதிப்பில்லாத இந்த உற்சவ மூர்த்தியின் புகழ் அந்த பிரதேசம் முழுவதும் பரவலாக பேசப்பட்டு வந்தது.
அப்போதுதான் இங்கிரியாவிலிருந்து பல கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருக்கும் கலபொட தோட்டத்தில் ஒரு புதிய ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டு வந்தது. அந்த ஆலயத்தில் எழுந்தருளுவதற்காக ஒரு உற்சவ மூர்த்தி தேவை என்ற செய்தியும் அந்த பிரதேசத்தில் உலா வந்தது.

பலவிதமான திருட்டு செயல்களில் ஈடுபட்டு அந்தப் பகுதியில் ஜெகஜால கில்லாடிகளாக இருந்த முனியனுக்கும், சின்ன சாந்தனுக்கு “கோயிலுக்கு சிலை வேண்டும்”
என்ற செய்தி காதில் தேனாக வந்து பாய்ந்தது.
அன்று முதல் தனது கழுகு கண்களை கூர்மையாக்கி எங்காவது சிலை கிடைக்குமா என்று வலை வீசி தேட ஆரம்பித்திருக்கிறார்கள். அப்போதுதான் அவர்களின் கழுகுப் பார்வையில்இங்கிரிய, றைகம் மேற்பிரிவில் அருள்பாலிக்கும் அம்பாள் சிக்கியிருக்கிறாள்.
இங்கிரிய பிரதேசத்தில் உள்ள தமது உறவினர்களின் வீடுகளுக்கு வந்து தங்கியிருந்து ஆலயத்தை நோட்டமிட்டு காலம் கனிந்து வரும்வரை இந்த மெகா கள்ளர்கள் காத்திருந்து இருக்கிறார்கள்.

மின்சாரம் வசதி தோட்ட குடியிருப்புகளுக்கு வராத அந்தக் காலம். குப்பி விளக்குகள் அணைக்கப்பட்டு விட்டால் இருள் சூழ்ந்து அந்தப் பகுதி மயான அமைதியாகி விடும்.
அன்று மாலை இருள் சூழ்வதற்கு முன்பாகவே குறிஞ்சி மாரி கோயிலில் விளக்கேற்றி வைத்த கோயில் பூசகர் சீர்பாதம் அவசர அவசரமாக கோயில் கதவுகளை பூட்டிவிட்டு தீப்பந்தத்தை கொழுத்தி கையிலெடுத்தவர், கோயில் வளாகத்தை விட்டு வெளியேறி வீடு நோக்கி நடக்கத் தொடங்கினார்.
பூசாரி கோயில் கதவை அடைக்கும் போது வழமைக்கு மாறாக அன்று பல்லி விடாமல் தொடர்ந்து கத்தும் சத்தம் பூசாரிக்கு அபசகுணமாக தெரிந்திருக்கிறது.
சீர்பாதம் பூசாரி

ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்ற உள் உணர்வு பூசாரியின் நாளங்களுக்குள் புகுந்து அவரை பதற வைத்திருக்கிறது.
மனதை திடமாக்கிய சீர்பாதம் பூசாரி “எல்லாத்தையும் ஆத்தா பார்த்துக்குவா!”ன்னு கோயிலை கையெடுத்து கும்பிட்டுவிட்டு திரும்பி பார்க்காமல் நடந்தார்.
திருட்டு செயல்களுக்கு உகந்த நாள் அம்மாவாசை நாள்தான் என்பதை ஜெகஜால எம்டன்களான முனியனும், சின்ன சாந்தனும் புரிந்து வைத்திருந்தார்கள்.
அந்த கும்மிருட்டுக்குள் கோயிலை நோக்கி நடந்தார்கள்.
கோயில் வளாகத்தில் நிமிர்ந்து நின்ற ஆலவிருட்சத்தின் சருகுகள் கோயில் முற்றத்தில் கொட்டிக் கிடந்தது. அதில் அந்த இருவரும் அடிமேல் அடியெடுத்து வைத்த போது “சர..சர” என்ற சத்தம் அந்த நிசப்த்த அமைதியை குலைத்தது.
“இந்த கோயில் சுவரில் கன்னம் வைத்து உள்ளே செல்வதை விட கோயில் கூரையை பிரித்து உள்ளே இறங்குவது வசதியாக இருக்கும்” என்பதை சின்ன சாந்தன் முனியனுக்கு தெளிவுப்படுத்தினான்.
இரண்டே பாய்ச்சலில் லாவகமாக கோயில் சுவற்றில் ஏறிய முனியன் கூரையை பிரித்து உள்ளே இறங்கினான்.


பூசாரி சீர்பாதம் ஏற்றி வைத்த விளக்கு நின்று எரிந்து கொண்டிருந்தது. அந்த வெளிச்சத்தில் அம்பாள் உற்சவ மூர்த்தி ஜொலித்துக் கொண்டிருந்தாள். அந்தக் காட்சியை பார்த்த போது ஒரு நிமிடம் ஜெகஜால கில்லாடியான முனியன் கொஞ்சம் ஆடித்தான் போனானாம்.
“ஆத்தா ஆவேசப்பட்டு ஏதாவது பண்ணிடுவாளோ”னு பயந்துப் போன முனியன், “தாயீ உன்ன நாங்க திருடுறதே இதைவிட ஒரு பெரிய கோயில்ல உன்ன வச்சி பூஜிக்கதான். உனக்கும் புதுசா ஒரு ஊரை சுத்திப்பார்த்த மாதிரி இருக்கும்”னு ஆத்தாவின் காலில் விழுந்து கும்பிட்ட முனியன் உற்சவ மூர்த்தியை கொத்தாக தூக்கி கோணிப் பையில் போட்டுக் கொண்டு கோயிலுக்குள்ளிருந்து வெளியே வந்தான்.
ஆலயத்தின் பழைய தோற்றம்
“போன காரியத்தை நண்பன் வெற்றிகரமாக முடித்து விட்டான்” என்பதில் உச்சிக்குளிர்ந்து போன சின்ன சாந்தன் நண்பனின் கையிலிருந்த கோணிப் பையை வாங்கி தோளில் போட்டுக் கொண்டு நடந்தான் ஆரம்பத்தில் கனம் குறைவாக இருந்த கோணிப் பையின் எடை கூடிக் கொண்டே சென்றிருக்கிறது ரொம்ப சிரமப்பட்டு சிலையை தூக்கிச் சென்று றைகம் கீழ் பிரிவு இறப்பர் தொழிற்சாலைக்கு அருகாமையில் இருக்கும் பஸ் நிறுத்துமிடத்தில் வைத்துவிட்டு மூச்சு வாங்க நின்றார்கள்.
சின்ன சாந்தன் அப்போது நேரத்தை பார்த்தான் அதிகாலை 3மணியை சின்ன முள் தொட்டுவிட சில நிமிடங்களே இருந்தது. “இந்த நேரத்தில் இங்கிரியாவுக்கு பஸ் செல்வதற்கு வாய்ப்பு இல்லை. அப்படியே இங்கிரியாவுக்கு சென்றாலும் இரத்தினபுரிக்கு இந்த அதிகாலை வேளையில் பஸ் வருவதற்கு வாய்ப்பே இல்லை, விடிந்து ஆள் நடமாட்டம் வந்து விட்டால் நம்மை அமுக்கி விடுவார்கள்” என்று பீதியடைந்த ஜெகஜால கில்லாடிகள் முதலில் அந்த இடத்தை விட்டு வெளியேறி விட வேண்டும் என்பதில் குறியாக இருந்திருக்கிறார்கள்.

அப்போது கொழும்பை நோக்கி அந்த இருளை கிழித்து கொண்டு ஒரு வாகன வெளிச்சம் முந்திக்கொண்டு வர, கூடவே பஸ் சத்தமும் பின்னாலேயே வந்தது. இடத்தை காலிப் பண்ணுவதில் குறியாக இருந்த ஜெகஜாலர்கள்
இருவரும் குதித்து ஓடி பஸ்சில் ஏறி சிலை இருக்கும் கோணிப்பையை பாதுகாப்பாக வைத்துவிட்டு ஆசனத்தில் அமர்ந்து நிம்மதி பெருமூச்சு விட்டார்கள்.




“கொழும்புக்கு போய் நம்ம அடுத்த திட்டத்தை அமைக்கலாம்”னு இருவரும் கொழும்புக்கு டிக்கட் வாங்கினார்கள்.
சீட்டுக்கடியில் அடிக்கடி கோணிப்பையை தொட்டுப் பார்த்தப்படி வந்த சின்ன சாந்தன் “ஆத்தா எங்களை மன்னிச்சுக்க எல்லாம் நல்லதுக்குதான் பண்ணுறோம்”னு மனதுக்குள் வேண்டிக்கொண்டான்.
சில மணி நேரங்களில் பஸ் கொழும்பை வந்தடைந்தது. அப்போது எம்.ஜி.ஆரின் “நீதிக்கு தலைவணங்கு” திரைப்படம் கொழும்பில் திரையிடப்பட்டிருந்தது.எம்.ஜி.ஆர் ரசிகர்களான இந்த கில்லாடிகளுக்கு படம் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. உடனே தமது நண்பர் சமையல்காரராக பணியாற்றும் ஆமர் வீதி வாணிவிலாஸ் ஹோட்டலுக்குச் சென்று அவரின் உதவியோடு கோணிப்பையை ஒரு மூலையில் பாதுகாப்பாக வைத்துவிட்டு கெப்பிட்டல் பட மாளிகையில் தமது ஆசை நாயகன்      எம். ஜி.ஆரை விசிலடித்து தரிசித்து இருக்கிறார்கள்.


வாணி விலாஸ் ஹோட்டலின் மூலையில் அண்ட சராசரங்களையெல்லாம் சர்வசாதாரணமாக ஆட்டுவிப்பவள் அமைதியாக அமர்ந்திருக்கிறாள் என்ற விடயம் ஹோட்டல் அதிபருக்கோ அல்லது அந்த அப்பாவி சமையல்காரருக்கோ கடைசி வரை தெரியாதாம்.
எம்.ஜி.ஆர் என்ட் கார்டு போட்டதும் திரையரங்கிலிருந்து சாவகாசமாக வெளியே வந்த ஜெகஜாலர்கள் வாணி விலாசில் பகல் உணவை முடித்து விட்டு அங்கிருந்து நேராக  இரத்தினபுரிக்கு புறப்பட்டார்கள்.

வீட்டில் கொண்டு சிலையை வைப்பது ஆபத்து என்பதை உணர்ந்த அந்த இருவரும் அவர்களின் வீட்டுக்கு அருகில் இருக்கும் யானை வளர்க்கும், யானைக்காரனின் வீட்டுக்குச் சென்று கோணிப் பையில் சில இரும்பு பொருட்கள் இருப்பதாகவும் இன்னும் சில நாட்களில் அவற்றை எடுத்துச் செல்வதாகவும் கூறி யானைக்காரன் படுக்கும் கட்டிலுக்கு அடியில் வைத்து விட்டு சென்று விட்டார்கள்.
றைகம், மேற்பிரிவு மகாமாரி ஆலயத்தில் வழமைப்போல விளக்கேற்றுவதற்காக ஆலயத்தை திறந்த சீர்பாதம் பூசாரிக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
பூசாரி எழுப்பிய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பதறியடித்துக் கொண்டு ஓடி வந்து பார்த்து அம்பாள் சிலை திருடு போனதை கண்டு வெலவெலத்து, உறைந்து போய் நின்றார்கள்.
சில நிமிடங்களிலேயே அம்பாள் சிலை திருடுப்போன அந்தச் செய்தி காட்டுத்தீப்போல றைகம் பிரதேசம் முழுவதும் பற்றிக் கொண்டதால் ஊர் மக்கள் அனைவரும் ஆலயத்தை சூழ்ந்து கொண்டார்கள்.
“ஆலயம் அமைந்திருக்கும் ஏழாம் நம்பர் மலையில் எங்காவது சிலையை திருடர்கள் பதுக்கி வைத்திருக்கலாமோ” என்ற கோணத்தில் சிந்தித்த மக்கள் அந்தப் பகுதியை சல்லடைப் போட்டு தேடியும் சிலை கிடைக்காததால் விரக்தியடைந்தார்கள்.
எம்.டீ.எஸ்.மருதமுத்து
தலைவர்


ஊருக்கு ஏதாவது கெடுதல் நடக்கப் போகிறதோ என்ற அச்சம் அந்தப் பகுதியில் குடிக்கொண்டது. எதையோ இழந்துவிட்ட மாதிரி மக்களின் அன்றாட நடவடிக்கைகளும், ஊரும் ஸ்தம்பித்துப்போயிருந்தது.
ஆனால் சிலையை கபளீகரம் செய்து கலபொடைக்கு எடுத்துச் சென்ற முனியனுக்கு அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துகொண்டு அவன் வீட்டுக்குள் குதித்திருந்ததாம். சிலையை ஊருக்கு எடுத்துச் செல்லும் போது அவன் அந்த சந்திக்கடை டிக்கட் கவுண்டரில் அதிர்ஸ்ட சீட்டு வாங்கி இருக்கிறான். அந்த சீட்டுக்கு அவனுக்கு பரிசு விழுந்திருக்கிறது.
அந்தப் பணத்தில் ஓரிரு நாட்களிலேயே அந்த ஊரில் ஒரு கடையை போட்ட முனியன் கல்லாவில் உட்கார்ந்து விட்டான்.
“எல்லாம் சாமி வந்த அதிர்ஷ்டம்தான் இப்படி தாறுமாறா நல்லது நடக்குது”ன்னு கணக்குப்போட்ட முனியன் “சிலையை கலபொட கோயிலுக்கு கொடுக்கக்கூடாது, நாமே ஒரு சின்ன கோயில் கட்டி அதுல இந்த சிலையை வச்சுடலாம்”னு புதுக்கணக்கு  போட ஆரம்பித்தான்.
இதே வேளை, றைகமையில் வசித்த பெரும் பூசாரிகள் தமது சித்து விளையாட்டின் மூலம் சிலை இருக்கும் இடத்தை அறிய சோழி உருட்டிக்கொண்டிருந்தார்கள். வெற்றிலையில் மை பார்ப்பது. பெரிய கோடாங்கிகளை வைத்து ஆருடம் பார்க்கும் வேலைகள் உள்ளிட்ட சிலையை மீட்பதற்கான முன்னெடுப்புகள் பரவலாக அந்தப் பகுதியில் நடைபெற்று வந்தது.
அப்போதைய றைகம், தோட்ட தலைவரான,    எம்.டீ.எஸ்.மருதமுத்து உள்ளிட்ட தொண்டர்கள் அனைவரும் சிலையை எப்படியும் மீட்டுவிட வேண்டும் என்பதில் தீயாய் வேலைசெய்தார்கள்.
ஆலயத்தின் இன்றைய தோற்றம்

யானைக்காரன் வீட்டின் கட்டிலுக்கு அடியில் கோணிப் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அம்பாள் சில திருவிளையாடல்களையும் அங்கே அரங்கேற்ற தொடங்கியிருந்தாள்.
இரண்டு மூன்று நாட்களாக நள்ளிரவில் பயந்து அலறிக்கொண்டிருந்த யானைக்காரன் முடிவில் பைத்தியமாக வீட்டுக்கு வெளியே வந்து கத்திக்கொண்டிருந்தான்.
இதே போன்ற அமானுஷ்ய நிகழ்வுகள் சிலவும் கலபொட தோட்டத்தில் அறங்கேறியதால் விசயம் விஸ்பரூபம் எடுக்க தொடங்கி விட்டதை முனியன் புரிந்து கொண்டு சின்ன சாந்தனின் உதவியோடு யானைக்காரன் வீட்டுக் கட்டிலுக்கு அடியில் இருந்த சிலையை பத்திரமாக வெளியே எடுத்து அந்த ஊரில் ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு பாழடைந்த கிணற்றுக்குள் இறக்கினான்.

அம்பாளை குளிரவைத்து காரியம் சாதிக்கலாம் என்ற நப்பாசையில் முனியன் இருந்தான். ஆழ் கிணற்று ஜலத்துக்குள் அம்பாள் உச்சியும், உள்ளமும் குளிர்ந்த நிலையில் தியானத்தில் இருந்திருக்கிறாள்.
இதே வேளை அந்த பாழடைந்த கிணற்றுக்கு அருகில் இருக்கும் கிணறுகளில் குளிக்கச் சென்றவர்களுக்கு சில அதிர்ச்சியான சம்பவங்கள் நடந்தேறி இருக்கிறது.
கிணற்றில் தண்ணீரை அள்ளி உடம்பில் ஊற்றும் போது உடலில் மின்சாரம் பாய்ந்தது போன்ற ஒரு பிரம்மை ஏற்பட்டதாகவும். சில பெண்கள் அருள் வந்து ஆடியதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் கலபொடயில் வசிக்கும் மக்கள் செய்வதறியாது திகைத்து வந்தார்கள்.
ஒருநாள் சின்ன சாந்தன் மூக்கு மூட்ட குடித்துவிட்டு குடிபோதையில் தாம் செய்த சாகசத்தை தமது நண்பர்களிடம் உலறி, அவிழ்த்துக் கொட்டியதால் றைகம மகாமாரி அம்பாள் கலபொடைக்கு வந்த செய்தி வைரலாக பரவத் தொடங்கியது.
சிலைகளை கடத்துபவர்கள் பெரும்பாலும் கிணறுகளில் அவற்றை பதுக்கி வைப்பார்கள் என்பதை மோப்பம் பிடித்து தெரிந்து கொண்ட போலீசுக்கு, கலபொடை கிணற்றில் அம்பாள் இருக்கும் விடயமும் தெரிந்து விட முனியனையும், சின்ன சாந்தனையும் போலீஸ் அல்லேக்காக தூக்கிச் சென்று கும்மியதில் அவர்கள் விசயத்தை திகில் பட காட்சிகளாக விபரித்து இருக்கிறார்கள்.
அடுத்த நொடியே கலபொடையில் அவர்கள் சொன்ன கிணற்றுக்குள் இறங்கி அம்பாளை பத்திரமாக வெளியே எடுத்திருக்கிறார்கள்.
அதன் பிறகு இங்கிரிய போலிஸ் நிலையத்தில் அம்பாள் வைக்கப்பட்டதும். அதிரடியாக களத்தில் இறங்கிய றைகம் தோட்ட தலைவர் எம்.டீ.எஸ் மருதமுத்து, அம்பாளை தற்காலிகமாக றைகம் கீழ் பிரிவு ஆலயத்தில் வைக்கலாம் என்று முடிவெடுத்து அம்பாளை றைகம் கீழ் பிரிவு ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தில் அமரவைத்தார்.
அதன் பிறகு ஒரு நல்ல நாளில் தாரை,தப்பட்டை, மேளம் முழங்க மகாமாரி அம்பாளை ஊர்வலமாக றைகம் மேற்பிரிவு ஸ்ரீகுறிஞ்சி மகாமாரி அம்மன் ஆலயத்துக்கு எடுத்து வந்து அதற்கான கிரியைகள் அனைத்தையும் முடித்து கோயிலுக்குள் அமரவைத்தார்கள்.
அம்பாள் விருப்பப்பட்டு ஒரு இன்பச் சுற்றுலா சென்றதாக கருதிய மக்கள் குற்றவாளிகளையும் மன்னித்து விடும்படி சொல்லிவிட்டார்கள். ஊரை விட்டுப்போன அம்பாள் ஊர் திரும்பிய சந்தோசம் றைகமைக்கு புது உற்சாகத்தையும், மட்டற்ற மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
தனது திருவிளையாடல் பயணத்தை வெற்றிகரமாக முடித்த திருப்தியில் அம்பாள் அன்றிலிருந்து இன்றுவரை ஒரு சில அற்புதங்களோடு றைகமையிலேயே அமைதியாக வீற்றிருக்கிறாள். அவள் மீண்டும் ஒரு பெரிய அதிசயத்தையும், மகிமையையும் செய்வாள் என்கிற எதிர்பார்ப்பில் குறிஞ்சியூர் காத்துக்கிடக்கிறது🔴
一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一
கட்டுரைக்கான ஓவியங்கள், வேலூர் நிர்மல்குமார்.


எனது கட்டுரை பதிவு இங்கிரிய, றைகம ஸ்ரீ குறிஞ்சி அம்மன் ஆலய ‘மகா கும்பாபிஷேக பெருவிழா நூலில் 2020ம் ஆண்டு வெளியானது.

No comments:

Post a Comment