Monday, September 4, 2017

சீதாவக்க ராஜசிங்கன் காலத்தில்…..


சி. கே.முருகேசு

ண்டி இராச்சியத்தின் முடிக்குரியவனாக விளங்கிய டொனாகத்தரினா தனது முதலாவது  கணவனான வீரம் மிகுந்த முதலாம்  விமலதர்ம சூரியன் (கோனப்பு பண்டரா)  மரணமடைந்த பின்னல் இராச்சியத்தைப் பாதுகாக்கும் பொருட்டு விமலதர்ம சூரியனின் உடன்பிறவா சகோதரனாகிய செனரத் என்பவனை மணந்து அரசனாக்கினாள். அவர்களின் புதல்வனாகிய மகா அஸ்தான குமார, இரண்டாம் இராஜசிங்கன் என்னும் பெயரில் தந்தைக்கு பின்னர் அரசுரிமை பெற்றான்.

சீதாவக்கை இளவரசன் முதலாம் இராஜசிங்கன் மாவீரனாக போற்றப்பட்டமையினால் கீர்த்திமிக்க இராஜசிங்கன் என்னும் பெயரை இவன் சூட்டிக்கொண்டான்.

முன்கோபமும் தயவு தாட்சண்யமின்றி தண்டனைகள் வழங்குவதிலும் இவன் ஏனைய அரசர்களை மிஞ்சியவனாக விளங்கினாலும் வாரி வழங்குவதில் தாராள மனம் படைத்தவனாகவும் நாலடி கவிதைகள் யாப்பதில் வல்லவனாகவும் இருந்தான். இவனது ஆட்சியை மக்கள் நல்லாட்சியென புகழ்ந்தனர். மன்னனை தெய்வமாக (ராஜசிங்கதெவியோ) மதித்தனர்.  ‘அரசர்’ எனக்கூறலாம்.’
‘தெவியோ’ என்றே குறிப்பிடலாயினர் மன்னனின் மறைவின் பின்னர் கோவில் கட்டி கும்பிட்டுவந்தனர்.
மக்கள் மனமறிந்து ஆட்சி செய்து வந்த இரண்டாம் இராஜசிங்கன் பற்றிய தகவல்கள் மக்கள் மத்தியில் ஜனரஞ்சக கதையாக வழக்கத்தில் உள்ளன. இது வேறெந்த அரசனுக்கும் இல்லாத பெருஞ் சிறப்பெனலாம்.
இரண்டாம் இராஜசிங்கன் ஒருநாள் சாதாரண உடையில் காடு சார்ந்த பிரதேசமொன்றில் சென்று கொண்டிருந்தான்.

அவன்  சென்றுகொண்டிருக்குக்கும் வழி மக்களின் பாவனைக்குத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. அக்காட்டுப்பிரதேசத்தில் மூர்க்கத்தனமான காட்டெருமையொன்று தென்படுபவர்களை கொடூரமாக தாக்கி வந்ததே இதற்குக் காரணம். இராஜசிங்கன்  அவ்வழியே காட்டுக்குள் பிரவேசிக்கும் இடத்தில் கித்துள் மரமொன்றின் உச்சியில் பதநீர்  பெறுவதற்காக கித்துள் பூவைச் சீவும் பணியில் ஒருவன் ஈடுபட்டிருந்தான். காட்டுப்பாதையில் சென்றுக்கொண்டிருக்கும் இனம்தெரியாத மனிதனைப் பார்த்த அவன் இப்பாதை வழியே பயணிக்க வேண்டாமெனவும் அரசர் இவ்வழியே செல்வதைத் தடை செய்திருப்பதாகவும் காட்டெருமையொன்று இங்கு தொல்லை தருவதாகவும் கூறி எச்சரிக்கை விடுத்தான். காட்டுப்பாதையில் சென்றுகொண்டிருப்பது அரசன் என அவன் அறிந்திருக்கவில்லை.
மரத்தின் உச்சியிலிருப்பவன் விடுத்த எச்சரிக்கையை பொருட்படுத்தாத மன்னன் முன்னோக்கிச் சென்று கொண்டிருந்தான். அப்போது சற்றும் எதிர்பார்த்திரா வண்ணம் மூர்க்கத்தனம் கொண்ட காட்டெருமை மன்னன் மீது பாய்ந்து தாக்கத்தொடங்கிது.அத்தாக்குதலால் மன்னன் நிலை குலைந்தானெனினும் திடகாத்திரமான உடல்வாகுடன் பலசாலியாக இருந்த இளைஞனான மன்னன் காட்டெருமையுடன் முடிந்தவரை சண்டையிட்டான். எனினும் காட்டெருமையின் பலத்த தாக்குதல்களினால் அரசன் தரையில் விழப்போகும் தறுவாய் நெருங்கிவிட்டதை மரத்தின் உச்சியில் இருந்த மனிதன் புரிந்து கொண்டான். இதுவரை காட்டெருமையும் வழிப்போக்கனும் முட்டிமோதி சண்டையிட்டுக்கொண்டிருந்ததை பார்த்துக் கொண்டிருந்த அவன் வெற்றி காட்டெருமையின் பக்கம் இருப்பதைக் கண்டு மரத்தின் உச்சியிலிருந்தவாறே. ‘அடே மடையா’ எனக் கத்தினான்.

தனது வாழ்நாளில் தன்னைப்பார்த்து ‘மடையன்’  என்றும் ‘அடே’ என்றும் அவமரியாதையாக பேசியதைக் கேட்டறியாத இராஜசிங்கனின் இரத்தம் கொதித்தது. கண்களில் கோபாக்கினி வீசியது. நாடி நரம்புகளனைத்தும் வீரியம் கொண்டு புடைத்தன. தனது முழு பலத்தையும் பிரயோகித்து. காட்டெருமையின் கொம்புகளை இறுகப்பற்றி எருமையை ஒரு சுற்றி சுற்றி நிலத்தில் புரட்டியெடுத்தான்.காட்டெருமையின் கழுத்து முறிந்து அதன்  உயிர் பிரிந்தது.

எவராலும் எதிர்கொள்ள முடியாதிருந்த காட்டெருமையை  தனிமனிதனாக நின்று போராடி வெற்றி கொண்ட வழிப் போக்கனாகிய இளைஞனை மரத்தை விடடிறங்கி ஓடிவந்த மனிதன் மகிழ்ச்சிப்பெருக்கினால் அவனைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தான்.

‘உன்னைப்போன்ற வீரமிக்க இளைஞர்களே  இந்த நாட்டுக்குத் தேவை. உனது வீரச் செயலை நமது ஆண்டவராகிய இராஜசிங்க மன்னன் கேள்விப்பட்டால் உனக்கு பரிசுகளும் பாராட்டுகளும் நிச்சயம் குவியும்’ எனக்கூறினான்.
செத்துக்கிடந்த  காட்டெருமையின் தலையைத் துண்டித்த மன்னன் கித்துள் மரத்திலிருந்து இறங்கி வந்த மனிதனின் கையில் கொடுத்து ‘இதனை நாளை அரச சபையில் நீயே கொண்டுபோய் கொடுத்து விளக்கமாக மன்னரிடம் சொல்’ என கூறிவிட்டுச் சென்றான்.
மறுநாள் காலையில் காட்டெருமை கொல்லப்பட்ட விடயம் காட்டுத்தீயாக பரவியது. மக்களுக்கு தடை விதிக்கப்பட்ட அப்பாதை வழியே இலகுவாக பயணங்களை தொடரலாம் என்ற மகிழ்ச்சி சுற்றுவட்டார கிராம மக்களுக்கு ஏற்பட்டது. கொல்லபபட்ட கொடிய விலங்கின் தலையுடன் அவன் அரச சபையை அடைந்தான். கித்துள்மரத்தில் பதநீர் பெற பூ சீவிக் கொண்டிருந்தது முதல் வழிப்போக்கன் காட்டெருமையை கொன்றது வரையிலான முழு விபரத்தையும் மன்னன் முன்னால் ஒப்புவித்தான். அனைத்தையும் அமைதியாக செவிமடுத்துக் கொண்டிருந்த அரசன்: “அடே மடையா!” என நீ அவமதித்து விழித்தது யாரையெனத் தெரியுமா? எனக் கேட்டு சாதாரண உடையில் அங்கு சென்றதும் காட்டெருமையைக் கொன்றதும் தாமேயென தெரிவித்தான்.

மன்னனை அவமதித்துப் பேசிய குற்றத்துக்காக அடையப்போகும் தண்டனை குறித்து நடுங்கும் உடலோடு வெட வெடக்கத் தொடங்கினான் மனிதன். வெகு நேரம் செல்லவில்லை. அரசன் தீர்ப்பை அறிவித்தான். “நீ எனது ஆத்திரத்தை அதிகரிக்கச் செய்ததன் காரணமாகவே காட்டெருமையை எளிதில் என்னால் வெற்றிக்கொள்ள முடிந்தது. வீரத்தையும், துணிச்சலையும் நீ எனக்குள் செலுத்தினாய்” என அவனைப் பாராட்டியதோடு அன்பளிப்பாக காணி நிலம் வழங்கி ‘ரண் பன்ஹிந்த’ என்னும் கௌரவ பட்டத்தைச் சூட்டினான். காட்டெருமையின் கொம்புகளுடன் தலையைக் கொண்டுவந்தமையால் ‘அங்கம்மன்’ என்னும் நாமம் பெற்றான். அவனது சந்ததியினர் கண்டி மாநிலத்திலும் ஏனைய மலையக பிரதேசங்களிலும் இன்றும் தமது பெயரின் முன்னால் ‘அங்கம்மனகே’ என்னும் முதற்பெயரை பெருமையுடன் சேர்த்துக்கொள்கின்றனர்.

No comments:

Post a Comment