Wednesday, December 23, 2020

கண்டி இராச்சியத்தின் கடைசி மன்னன் :

மணி ஸ்ரீகாந்தன்.

இலங்கையை கடைசியாக ஆட்சி செய்தவர் ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கன் என்பது எல்லோரும் அறிந்த விடயம்தான். ஆனால் இந்த கண்டி மன்னனை இலங்கையின் பெரும்பான்மை மக்கள் கடைசி சிங்கள மன்னன் என்றும், தமிழர்கள் கண்ணுசாமி என்கிற இயற் பெயரை இவர் கொண்டிருப்பதால் கடைசி தமிழ் மன்னன் என்றும் அழைக்கிறார்கள்.

ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கன் தன்  ஆட்சிக் காலத்தில் கண்டி நகரை மெருகேற்றி அழகிய நகராக மாற்றியமைத்தான். இம் மன்னன் கண்டியின் ஆட்சி மொழியாக தமிழையும், சிங்களத்தையும் பயன்படுத்தியிருக்கின்றான்.
ஆனால் உண்மையில் இந்த மன்னன் தமிழரோ, சிங்களவரோ அல்ல. தெலுங்கை தாய் மொழியாக கொண்ட ஒரு நாயக்கர் வம்சத்தை சேர்ந்தவர்.
இப்போது கூட சிங்களத்தை கொச்சையாக பேசும் தமிழர்களின் பேச்சு வழக்கை ‘அந்தர தெமல’ என்று சிங்களர்கள் அழைப்பார்கள். அதன் உண்மையான அர்த்தம் ஆந்திரத் தமிழ் என்பதாகும்.  
கண்டியின் கடைசி மன்னனான கண்ணுசாமி நாயக்கர் பிறப்பால் ஒரு தெலுங்கர். 

தினகரனில் பணியாற்றிய
சுக்குராஜா

 

கண்ணுசாமி நாயக்கருக்கு சகோதரர்கள் யாரும் கிடையாது. ஒரே ஒரு அக்கா மட்டும்தான். அம்மா பெயர் சுப்பம்மாள் வெங்கடபெருமாள்.
கண்டி மன்னரின் பூர்வீக மண், என்றால் அது மதுரைக்கு பக்கத்தில் இருக்கும் வெள்ளிக்குறிச்சி என்ற ஊர்.  அந்த ஊரில்தான் கண்ணுசாமி நாயக்கரின் இரத்த உறவுகள் வாழ்ந்திருக்கிறார்கள்.
அதன் பிறகு அவர்களுக்குள் ஏற்பட்ட வாரிசு போட்டியின் காரணமாக கண்ணுசாமி குடும்பம் மதுரையிலிருந்து வெளியேறி புதுக்கோட்டை மகாராஜாவின் பாதுகாப்பில் பூலான் பட்டியில் சிறிது காலம்  வாழ்ந்திருக்கிறார்கள். இதற்கு ஆதாரமாக இன்றைக்கும்  அந்த ஊரில் கண்டி ராஜாவுக்கு மரியாதை வழங்கப்படுகிறது. அந்த ஊரின் பெயர் விராச்சிலை. அங்குள்ள அம்மன் கோவிலில் கண்டி மன்னரின் வாரிசுகளுக்கு புதுக்கோட்டை சமஸ்த்தானத்தின் மூலமாக முதல் மரியாதை கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது. இன்று வரை அங்கே அது வழக்கத்தில் இருந்து வருகிறது.


அந்தக் காலத்தில் தமிழகம் தனி மாநிலமாக இருக்கவில்லை. தெலுங்கர்களும் தமிழர்களும் ஒரே நிலப்பரப்பில் செரிந்து வாழ்ந்த காலக் கட்டம். அதனால் அந்த நாட்களில் நாயக்கர்கள் எல்லோரும் சரளமாக தமிழ் பேசுவார்கள்.
பூலான் பட்டியில் வாழ்ந்த கண்ணுசாமி குடும்பத்தினர் ஒரு கட்டத்தில் ராமேஸ்வரத்துக்கு சென்று அங்கே ராமேஸ்வர பெரிய கோவிலில் தெய்வீக பணியில் ஈடுப்பட்டிருக்கிறார்கள்.அதன் பிறகு கண்ணுசாமியின் தந்தை இறந்துவிடவே கண்டியை ஆட்சி செய்த இராஜாதி ராஜசிங்கனின் மனைவியின் தம்பியான கண்ணுசாமியை கண்டிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.


அதன் பிறகு கண்ணுசாமி நாயக்கர் ஸ்ரீவிக்கிரமராஜசிங்கனாக 1798 ல் முடிசூடிக் கொண்டார். ஆங்கிலேயேர் 1815ல் கண்டியை கைப்பற்றும் வரை பதினேழு வருட காலம் மன்னன் ஆட்சி நடத்தியிருக்கிறான்.
மன்னரை கைது செய்த ஆங்கிலேயே அதிகாரிகள் மீண்டும் ஒரு புரட்சியை நாயக்கர்கள் செய்துவிடக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு மன்னரின் இரத்த உறவுகள் அனைவரையும் கூண்டோடு இந்தியாவிற்கு நாடு கடத்திவிட முடிவு செய்தார்கள் அதன்படி கண்டி ஒப்பந்தமும் நிறைவேற்றப்பட்டது.
1815 பெப்ரவரி 2 ம் திகதி கண்டி ஒப்பந்தம் ஆங்கிலேய அதிகாரிகள் தலைமையில் கைச்சாத்திடப்பட்டது. எஹலபொல நிலமே உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அந் நிகழ்வில் கலந்துக் கொண்டார்கள். ஒப்பந்தத்தின் ஆங்கில நகலை ஆளுனரின் சார்பில் கலந்துக் கொண்ட டொய்லி வாசித்தார். அதைத் தொடர்ந்து சிங்களத்தில் ஏப்ரகாம் டி. சேரம் வாசித்தார்.
ஒப்பந்தத்தில் 14 சிங்களத் தலைவர்கள் கைச்சாத்திட்டனர். அவர்களில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் முப்பாட்டன் உட்பட ஏழு பேர் தமிழில் ஒப்பமிட்டனர். ஒப்பந்தத்தில் முக்கியமாக மன்னன் ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கனுக்கு இனி கண்டியில் எந்த அரசுரிமையும் கிடையாது அதே போல் அவரது வாரிசுகளுக்கும் எந்த உரிமையையும் கோர முடியாது, மன்னரின் வம்சத்தை சேர்ந்த, உறவினர்களான ஆண்கள் எவரும் கண்டியில் தங்கக் கூடாது. கண்டி அரசுக்கு உட்பட்ட பகுதிகள் அனைத்தும் இனி பிரிட்டிஸ் ஆட்சியின் கீழ் இயங்கும். ஆளுனரின் எழுத்து மூல உத்தரவின்றி எவருக்கும் மரணதண்டனை வழங்கப்படக் கூடாது உள்ளிட்ட பல விடயங்கள் அந்த ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தன.

மத்திய வங்கியில்
பணியாற்றிய
யோகானந்தராஜா



கண்டி ஒப்பந்தம் நிறைவுபெற்றவுடனேயே மன்னரின் உறவினர்கள் அனைவரும் இந்தியாவுக்கு கப்பலில் அனுப்பி வைக்கப்படடார்கள். மன்னரும், மகா ராணிகளும் சில மாதங்களுக்கு பிறகு 1816ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் திகதி கோல்பேசிலிருந்து ‘கோர்ஸ்வலிஸ்’ என்ற கப்பலில் இலங்கையை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். அதோடு இலங்கையின் ராஜாக் கதை நிறைவு பெற்று விட்டது.


வேலூர் சிறைச்சாலையில் 14 ஆண்டுகளை கழித்த மன்னன் சிறையிலேயே 1832 ஜனவரி 30 ஆம் திகதி மரணமடைந்தான். மன்னரின் மனைவிகளில் இருவருக்கு சிறைச்சாலையிலேயே குழந்தையும் பிறந்திருக்கிறது.
அதன் பிறகு மன்னரின் வாரிசுகள் தமிழகத்தில் பல பகுதிகளில் குடியேறி வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அவர்களின் வாரிசுகளால் வருடந்தோறும் ஜனவரி 30ம் திகதி மன்னருக்கு குருபூஜை விழாவும் வேலூரில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
கண்டி மன்னர் இலங்கையை விட்டு வெளியேறி 205 வருடங்களை கடந்திருக்கும் இந்த காலத்தில் அவரின் 6வது வாரிசு என்று இலங்கையில் குருநாகலை சேர்ந்த நபர் ஒருவர் சில ஊடகங்களுக்கு பேட்டியளித்து வருகிறார்.

இதுக் குறித்து மன்னரின்  வாரிசுகளில் ஒருவரான மதுரையில் வசித்து வரும் அசோக்ராஜாவிடம் கேட்டோம்.
“தாங்கள் தான் மன்னரின் வாரிசு என்று ஆளாளுக்கு கிளம்பி வருவது ஒன்றும் எமக்கு புதுசு இல்லை. ஆனாலும் அவர்களால் தங்களை உண்மையான வாரிசுதான் என்று நிரூபிக்க முடிவதில்லை.
நான் சரியான குறிப்புகளையும், ஆவணங்களையும் வைத்திருக்கிறேன். எனது தாத்தா சுப்புசாமி ராஜா 1965வரை கண்டி பென்ஷன் பெற்று வந்திருக்கிறார். அதற்கான ஆவணங்கள் என்னிடம் உள்ளது. எனது பாட்டன் சுந்தரராஜாவின் மகன்தான் சுப்புசாமிராஜா. அவரின் மனைவியின் பெயர் மீனாட்சி அம்மாள். அவர் சமீபத்தில்தான் காலமானார். அவருக்கு நான்கு மகன்கள். அவர்களில் மூத்தவர் குட்டிச்சாமிராஜா. இவர் மதுரை டி.எஸ்.பியாக பணியில் இருந்திருக்கிறார். அவருக்கு பிறகு எனது அப்பா வெங்கடாசலபதிராஜா, இவர்கள் இருவரும் இப்போது உயிரோடு இல்லை. அவர்களுக்கு இளையவர்களான கிருஸ்ணராஜாவும், பால்ராஜாவும் இப்போது பால்ராஜா மாத்திரமே உயிருடன்  இருக்கிறார்.''
என்று தொடர்ந்த அசோக்ராஜா, 

அசோக்ராஜா

“இலங்கையில் எமது உறவினர்கள் யாரும் இருப்பதற்கு வாய்ப்பு அறவே இல்லை” என்று திட்டவட்டமாக மறுக்கிறார், “அந்தக் காலத்தில் அரண்மனையில் சமையல்காரர்கள், மன்னரின் மெய்பாதுகாவலர்கள், வைத்தியர்கள், உதவியாளர்கள் என்று நிறையபேர் பணியில் இருந்திருப்பார்கள் அவர்களில் எங்கள் இனத்தை சேர்ந்த (நாயுடு) நாயக்கர்களும் இருந்திருப்பார்கள். மன்னரின் கைதுக்கு பிறகு அவர்கள் பல இடங்களுக்கு சென்றிருக்கலாம். அப்படி சென்றவர்களின் வழித்தோன்றல்கள் இலங்கையில் இப்போதும் வசிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே அவர்களும் எமது நாயக்கர் இனத்தவர்கள்தான். ஆனால் மன்னரின் இரத்த உறவு, வாரிசு என்பது வேறு. முதலில் அதை இவர்கள் சரியாக புரிந்துகொள்ள வேண்டும்.
இந்தியா முழுவதும், ஏன் உலகம் முழுவதும் கூட தெலுங்கர்கள் வாழலாம். அதற்காக அவர்கள் எல்லோரும் கண்டி மன்னரின் வாரிசுகளாகவோ எங்களின் ராஜ பரம்பரையைச் சேர்ந்தவர்களாகவோ இருந்துவிட முடியாது.
அதோடு கண்டி மன்னரின் இரத்த உறவுகளை ஆங்கிலேயர்கள் ஒட்டு மொத்தமாக நாடு கடத்தும் போது, அப்படி எமது உறவினர்கள் அங்கே யாராவது தலைமறைவாகியிருந்தால் அதுப் பற்றிய தகவல் எமது முப்பாட்டன்களால் வெளியாகியிருக்கும். அதுப்பற்றிய செய்தியும் வழி வழியாக இன்று வரை எங்கள் மத்தியில் உலவியிருக்கும். ஆனால் இன்று வரை அப்படியொரு செய்தியை நாங்கள் கேள்விப்படவே இல்லை” என்கிறார்.
அதாவது, கண்டி மன்னனின் உறவினர்கள் என்று சொல்லப்படுகின்றவர்கள் எவருமே இலங்கையில் இல்லை. அதற்கான வாய்ப்பு இல்லை. நாயக்கர் பரம்பரையின் எச்சங்கள் வேண்டுமானால் அங்கிருக்கலாம் என்பதே அவர் சொல்லும் செய்தி.

இலங்கை வெளிநாட்டு அமைச்சில்
இருந்து 57ஆம் ஆண்டு மதுரையில்
வாழ்ந்த சுப்புசாமிக்கு அனுப்பப்பட்ட
கடிதத்தின் பிரதி

கண்டி மன்னரின் ஆட்சி நிறைவடைந்து சுமார் நூற்றிஐம்பது ஆண்டுகளுக்கு பிறகுதான் மன்னரின் வாரிசுகளான சுக்குராஜசிங்கன், மற்றும் அவரின் சகோதரர் யோகானந்தராஜா ஆகியோரை இலங்கைக்கு அழைத்த அப்போதைய பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவலை, அவர்களுக்கு இலங்கையில் பணி செய்வதற்கான அனுமதியை வழங்கியிருக்கிறார். அதன்படி யோகானந்தராஜா இலங்கை மத்திய வங்கியிலும், சுக்குராஜசிங்கன் லேக் ஹவுஸ் நிறுவனத்தின் தினகரன் நாளிதழிலும் பணியாற்றியிருக்கிறார்கள்.
உயர்மட்ட செல்வாக்குடன் வலம்வந்த யோகானந்தராஜா தமது அரசியல் நண்பர்களின் துணையுடன் தமது ராஜ பரம்பரையை முன்வைத்து அரசியலிலும் ஈடுபடுவதற்கு அவர் முயற்சி செய்த போதுதான் துரதிஷ்டவசமாக அவர் இறந்து போனார்.
இப்போது நாம் எழுப்பும் கேள்வி இதுதான் கண்டி மன்னரை நாடு கடத்தியவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள். அதன் பிறகு இலங்கை சுதந்திரத்திற்கு பிறகுதான் மன்னரின் வாரிசுகளும் இலங்கைக்கு வந்திருக்கிறார்கள்.

எனவே குருநாகலையில் தலைமறைவாகியிருந்தவர்கள் ஏன் சுதந்திரத்திற்குப் பிறகும் வெளியே வரவில்லை தம்மை அடையாளப்படுத்தவில்லை என்பதே.
இப்போது நாங்களே மன்னரின் வாரிசு என்ற கதையை சொல்வதற்கான அவசியம் என்ன இதுவரைக் காலமும் மௌனமாக இருந்ததிற்கான காரணம் என்ன என்பதை சம்பந்தப்பட்டவர்கள் விளக்க வேண்டும். மன்னரின் பரம்பரை என்பதை நிரூபிக்கும் ஆதாரங்களை முன்வைக்க வேண்டும். மன்னரின் நினைவு நாளில் அவரின் படத்திற்கு பூஜை செய்கிறோம் என்றால் அந்த பூஜை நிகழ்வின் ஒரு பழைய படத்தையும் ஆதாரங்களையும் அனுப்பி வைத்தால் நாம் அவற்றை பிரசுரிப்போம்.
இராஜசிங்கன் வாழ்க்கை, வாரிசுகள், அவர்களின் இன்றைய நிலை ஆகிய தகவல்களை படங்களுடன் முதன் முதலாக தமிழில் வெளிக்கொண்டு வந்த பத்திரிகைகள் தினகரன் வாரமஞ்சரியும் வண்ண வானவில்லுமாகும். எனவே ஆதாரங்களை பிரசுரிக்க நாம் தயாராகவே இருக்கிறோம்.⚫

No comments:

Post a Comment