Thursday, March 4, 2021

அம்மை நோயாளர்களை தனிமைப்படுத்திய

மணி  ஸ்ரீகாந்தன்

கொரோனாவின் கோரத் தாண்டவம் முழு உலகையும் ஆட்டிப் படைத்து நாளுக்கு நாள் அதிர்வலையை உருவாக்கி வருகிறது.
இந்த மனித இனம் கொள்ளை நோயிலிருந்து எப்படி தப்பிக்கப்போகிறது என்பது வைரல் கேள்வியாக எழுப்பட்டுக்கொண்டிருக்கிறது.
கோடிக்கணக்கான வருடங்களை கடந்து வந்த இந்த பூமிப் பந்தின் வரலாற்றில் இந்த மனித இனம் பல கொள்ளை நோய்களை வென்று வந்திருக்கிறது என்பதுதான் இரத்தக்கறை படிந்த வரலாறு.


பெரியம்மை, சின்னம்மை, தட்டம்மை, பிளேக், கொலரா, எபோலா, காசநோய் என்று காலத்துக்கு காலம் லட்சக்கணக்கான மனித உயிர்களை காவு வாங்கிய இந்த கொள்ளை நோய் இன்று கொரோனாவாக நம் முன்னே விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.
பல நூற்றாண்டுகளை கடந்துவிட்ட இந்த கொள்ளை நோய்களை நினைவு கூறும் பல வரலாற்றுச் சின்னங்கள் மேலைத்தேய நாடுகளில் காட்சிக்கு வைக்கப்பட்டு அந்த கொள்ளை நோய்களின் தீவிரத்தை நமக்கு இன்று வரை ஞாபகப்படுத்திகொண்டே இருக்கிறது.

 பத்து காம்பரா மாதிரி தோற்றம்


நம் நாட்டில் அப்படியான சின்னங்கள், வரலாற்று பதிவுகள் ஏதாவது கிடைக்குமா என்று தேடிப்பார்த்ததில் ஒரு புதுத் தகவல் கிடைத்தது.  பெரியம்மை நோய் உலகம் முழுவதும் மனித உயிர்களை கொத்து கொத்தாக காவு வாங்கிய போது, அதன் தீவிரம் இலங்கையிலும் இருந்திருக்கிறது.
இந்தியாவிலிருந்து கூலித் தொழிலாளர்களாக ஆங்கிலேயேர்களால் அழைத்து வரப்பட்டு பெருந்தோட்டங்களில் குடியமர்த்தப்பட்ட தமிழர்களை பெரியம்மை நோய் காவு வாங்கத்தொடங்கியிருக்கிறது.
அப்போது அந்த நோய்க்கு மருந்து கிடையாது. அதோடு பெருந்தோட்டங்களில் அதற்கான மருத்துவ வசதிகளும் இல்லை. அதனால் நோய் தொற்றுக்குள்ளானவர்களை தனிமைப்படுத்துவதே நோய் பரவலை தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கையாக கருதப்பட்டது.
இப்போது போன்று நோய் தொற்றுக்காளனவர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படவில்லை. மாறாக அவர்களை மக்கள் நடமாட்டமில்லாத பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வீடுகளில் அடைத்து வைத்து அவர்களை மரணிக்க செய்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

 

சில ஆண்டுகளுக்கு முன்னால் நடிகர் சூர்யா நடித்து வெளியான ‘ஏழாம் அறிவு’ படத்தை பார்த்தவர்கள் அந்த விபரீதத்தை புரிந்திருப்பார்கள். நோய் தொற்றுக்குள்ளானவர்களை அடர்ந்த காட்டில் துணியால் சுற்றி கட்டிப்போட்டுவிட்டு வந்துவிடுவார்கள். அப்படி விடப்படுபவர்கள் அந்த வனப்பகுதியிலேயே இறந்து போவார்கள்.
உலகின் எல்லா இடங்களிலும் இந்த முறையே பின்பற்றபட்டு வந்திருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் பிளேக் பரவியபோது ஒரு வீட்டில் ஒருவருக்கு நோய் கண்டிருந்தால் அவர் படுத்திருக்கும் அறையை செங்கற்கள் வைத்து சீமந்து பூசி அந்த அறைக்குள்ளேயே சிறைப்படுத்தி மரணிக்க செய்து நோய் பரவலை தடுத்தார்களாம்! 


இதே முறைதான் நம் நாட்டிலும் இருந்தது. அந்தக்காலத்தில் மக்களை தனிமைப்படுத்திய இடங்கள் எங்காவது இருக்கிறாதா என்று தேடிப்பார்த்ததில் கொழும்புவிற்கு அருகில் அமைந்திருக்கும் இங்கிரிய, றைகம தோட்டத்தில் ஒரு தனிமைப்படுத்தல் முகாம் இருந்ததற்கான தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து அங்கே ஒரு விசிட் அடித்து தேடிப்பார்த்தோம்.

பழைய கிணறு


றைகம், தோட்டம் அமைந்திருக்கும் பகுதி அந்தக்காலத்தில் ‘மாகெலே’ என்ற சிங்களப் பெயரில் அழைக்கபட்டிருக்கிறது. மாகெலே என்றால் பெரிய காடு என்பது அர்த்தம். ஆங்கிலேயர்களால் தமிழ்நாட்டிலிருந்து அழைத்துவரப்பட்ட தமிழர்கள் பெரியகாட்டை வளமான பூமியாக மாற்றியதன் பின்னர்  ஆங்கிலேயர்களால் மாகெலே எஸ்டேட் என்ற பெயரிலும், றைகம என்ற பெயரிலும் அந்த தோட்டம் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது.
அந்த தோட்டத்தில் தேயிலை பயிற்செய்கை செய்யப்படாத சில பகுதிகள் பெருங்காடகவே இருந்திருக்கின்றன. அப்போதுதான் மனித இனத்தை கபளீகரம் செய்யும் வேகத்துடன் பெரியம்மை நோய் வீரியத்துடன் பரவத்தொடங்கியது. இதனால் அதிர்ந்து போன வெள்ளையர்கள் தொழிலாளர்களை காப்பாற்றுவதற்காக நோய் தொற்றாளர்களை வேறு இடத்திற்கு மாற்றி அவர்களை தனிமைப்படுத்தினார்கள். அதற்காக பத்து அறைகளைக்கொண்ட ஒரு குடியிருப்பை அந்தப்பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாத ஒரு காட்டுப் பகுதியில் அமைத்திருக்கிறார்கள். 


வெள்ளையர்களால் தனிமைப்படுத்தல் முகாமாக அமைக்கப்பட்ட இடம் இன்றும் ‘பத்து காம்பரா’ என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது. அந்த இடத்தை தேடிப் போனோம் அந்த இடத்தின் ஒரு பகுதி காடாகவே இன்றும் இருக்கிறது.

திரவியராஜா
ஆள் நடமாட்டமில்லாத ஒரு நிசப்தம் அங்கே நிலவுகிறது. இப்போதே இப்படி என்றால் நூறு ஆண்டுகளுக்கு முன்னால் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்து பார்க்கவே உள்ளுர ஒரு பயம் தொற்றிக்கொள்கிறது.
அம்மை நோய் வந்தவர்களை பாடை கட்டி அதில் அவர்களை படுக்க வைத்து இந்த பத்து காம்பரா பகுதிக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.
நோய் தொற்று அடையாளம் காணப்பட்டதும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் ஊர் மக்களும் இணைந்து அவர்களை தனிமைப்படுத்தல் இடத்திற்கு கொண்டு வந்து அவர்களை அறைகளில் போட்டுவிட்டு அழுகையும், ஒப்பாரியுமாக அந்த இடத்தை விட்டு அகன்று விடுவார்களாம்.
அதன் பிறகு அந்த அறைகளில் அடைந்து கிடக்கும் நோயாளிகளின் மரண ஓலங்கள் அவர்களின் உடலில் உயிர் இருக்கும் வரை பெருங் கதறலாக ஒலித்து ஓய்ந்து போகுமாம்.


அப்படி மரண ஓலம் அந்தப் பகுதியில் அடிக்கடி கேட்பதால் அந்தப் பகுதிகளுக்கு மக்கள் போகவே அஞ்சுவார்களாம். எண்ணிக்கையில் அடங்காத பெரு மரணங்கள் அந்த இடத்தில் சம்பவித்துள்ளதால் ‘மரண கந்த’ (மரண மலை) என்ற பெயரும் அந்தக்காலத்தில் வழங்கப்பட்டிருக்கிறது.
அந்த மரண கூடாரம் அமையப்பெற்றிருந்த இடத்திற்கு அருகிலேயே இன்று ‘மெரேகந்த’ என்ற சிங்கள கிராமம் ஒன்று அமையப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


பத்து அறைகள் கொண்ட தனிமைப்படுத்தல் வீடுகள் அமையப்பெற்றிருந்த இடத்தில் இன்று தேயிலை செடிகள் காணப்படுகிறது. 

“சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த இடத்தில் குடியிருப்பு இருந்ததற்கான கட்டட அஸ்திவாரம் இருந்தது. தேயிலை பயிரிடப்பட்டப்போது அவற்றைப் பெயர்த்து அப்புறப்படுத்தி விட்டார்கள், கிணறு ஒன்று இருந்ததற்கான அடையாளம் ஒன்று இருக்கிறது” என்று கூறிய அந்தப் பகுதியில் வசிக்கும் திரவியராஜா, எம்மிடம் அதனை காண்பித்தார்.
அவர் காண்பித்த இடம் புதர் மண்டிக் கிடந்தது. அம்மை நோய்க்கு பலியானவர்களின் அவலச் சாவுகளை கண்டவர்கள் இன்று எவரும் உயிரோடு இல்லைதான் என்றாலும் பத்து காம்பராவின் மரண ஓலங்களையும், கதறல்களையும் கேட்டுக்கொண்டிருந்த மெரேகந்த மலைப் பகுதி மட்டும் மௌன சாட்சியாக அங்கே நின்று கொண்டிருக்கிறது🔴 
 

Saturday, January 16, 2021

தொலைந்த உறவுகளைத் தேடும் ஆயிஷா பரமேஸ்வரியின் கதை

மணி ஶ்ரீகாந்தன்


எட்டு வயதில் தமது உறவுகளை தொலைத்து விட்டு அவர்கள் எங்கிருக்கிறார்களோ என்று கனத்த இதயத்துடன் இன்று வரை தேடிக் கொண்டிருக்கிறார். 

 

சிறுவயதில் காணாமல் போனவர்கள் பல வருடங்களுக்குப் பிறகு தமது உறவுகளை சந்தித்து அகமகிழ்ந்து போகும் சம்பவங்கள் உலகில் பல நாடுகளில் தினமும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
போரில் தொலைந்து போன தமது குழந்தைகள் அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆனப் பிறகு பெற்றோர்களுடன் இணைவது, சுனாமியில் தொலைந்த சிறுவனின் பெற்றோர்களை அடையாளம் காணும் முயற்ச்சி, வறுமையின் காரணமாக ஆங்கிலேயருக்கு தமது குழந்தையை விற்ற தமிழ்த் தாயை தமது 30வது வயதில் சந்திக்கும் பிரிட்டிஷ் தம்பதியரின் புதல்வன் உள்ளிட்ட செய்திகளை நாம் அவ்வப்போது படித்துக்கொண்டுதான் இருக்கிறோம். இப்படியான நிகழ்வுகள் இன்று வரை தொடர் கதையாக நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன.


இந்த பரமேஸ்வரி என்ற ஆயிஷாவின் கதையும் அப்படித்தான் தொடங்குகிறது.
எட்டு வயதில் தமது உறவுகளை தொலைத்து விட்டு அவர்கள் எங்கிருக்கிறார்களோ என்று கனத்த இதயத்துடன் இன்று வரை தேடிக் கொண்டிருக்கிறார்…

1971ல் கண்டி மாவட்டத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் பிறந்தவர்தான் இந்த பரமேஸ்வரி. இவர் பிறக்கும் போதே அவரின் அம்மா இறந்து விட்டாராம். அவரின் அப்பா ஆறுமுகம். பரமேஸ்வரி சிறு வயதாக இருக்கும் போதே அவரும்  இறந்து விட்டதாக கூறும் பரமேஸ்வரி,
“அப்பாவின் மரணம் வரை நான் என் வீட்டில்தான் இருந்தேன். அதன் பிறகு என்னையும் என் அண்ணன் கலியப் பெருமாளையும்  எனது அக்கா செல்லம்மா அவரின் வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டார். அதன் பிறகு அவர்களின் வீட்டிலேயே நானும் அண்ணனும் வளர்ந்தோம்.


அதன் பிறகு எனது அண்ணன் கலியப் பெருமாளை எனது மாமா தலமலை நாயுடு எங்கேயோ வேலைக்கு அழைத்துச் செல்வதாக கூறி அவரை அழைத்துச் சென்று விட்டார். அப்போது எனக்கு ஏழு, அல்லது எட்டு வயது இருக்கலாம்.
எனது அக்காவின் வீட்டில் எனது பெற்றோரின் கறுப்பு, வெள்ளை திருமணப் புகைப்படம் அந்த வீட்டுச் சுவரில் மாட்டப்பட்டிருக்கும். சில சமயங்களில் நான் அந்தப் புகைப்படத்தை ஆசையுடன் பார்த்து ரசிப்பேன். அப்போது ஒரு இனம் புரியாத சோகம் என்னைச் சூழ்ந்து கொள்வதை உணர்ந்திருக்கின்றேன்…”
என்று சொல்லும் பரமேஸ்வரி, தமது சோகக்கதையை மேலும் தொடர்ந்தார்.


“அக்காவின் வீட்டிலிருந்த என்னை சில நாட்களுக்குப் பிறகு எனது மாமா தலமலை நாயுடு அவரின் வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டார்.
அந்த தோட்டத்தின் பெயர் ‘கடுதாசி’ தோட்டமாம். எனக்கு அது மட்டும் கொஞ்சம் ஞாபகத்தில் இருக்கிறது. அதோடு நான் இருந்த வீட்டுக்கு பக்கத்திலேயே ஒரு கோயில் அமைந்திருந்து. எனது மாமாவின் வீட்டு சமையலறையில் இருந்த ஜன்னல் வழியே பார்த்தால் அந்த தோட்டத்தின் தொழிற்சாலை பளிச்சுன்னு தெரியும்.
எனது மாமா தலமலை நாயுடு ஒரு சீப்பு, சோப்பு, கண்ணாடி, வலையல் விற்கும் ஒரு பொட்டணிக்காரர் என்பதும் எனக்கு நினைவிருக்கிறது.” என்ற பரமேஸ்வரி தமது ஊரையும், உறவையும் பிரிந்த சம்பவத்தையும் கண்ணீருடன் எம்மிடம் பகிர்ந்து கொண்டார்.


“எனக்கு அப்போது பத்து வயதிருக்கும். என் அண்ணா கலியப்பெருமாள் கொழும்பு பங்களாவில் வேலை செய்து வந்தார். அவரை அந்த பங்களாவில் எனது மாமாதான் வேலைக்கு சேர்த்திருந்தார். ஒரு நாள் அவரை எனது மாமா வீட்டிற்கு அழைத்து வந்தார். அண்ணா பஸ்சில் போனக் கதையையும், கொழும்பு புதினம் பற்றிய கதைகளையும் சொல்வதைக் கேட்க எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது. அந்த மகிழ்ச்சியோடு இருந்த என்னை சில நாட்களுக்குப் பிறகு எனது மாமா கொழும்புக்கு அழைத்துச் சென்றார்.
பஸ்சில் போகும் ஆசையில் நானும் மாமாவோடு சென்றேன். கொழும்புவில் ஒரு பெரிய பங்களா வீட்டில் என்னை விட்டார்.
அந்த வீட்டில் நிறைய குழந்தைகள் இருந்தார்கள். அந்த வீட்டு உரிமையாளர்களிடம் பேசிய எனது மாமா சில நிமிடங்களில் எதையோ வாங்கிக் கொண்டு என்னை திரும்பி பார்க்காமலேயே புறப்பட்டு சென்றார்.
எதுவும் புரியாத அந்த வயசில் நான் கனத்த இதயத்துடன் அவர் செல்வதை அந்த பெரிய வீட்டு கேட்டின் துவாரம் வழியாக பார்த்துக் கொண்டிருந்தேன்.
அந்த ஒழுங்கையில் அவர் மறையும் வரை நான் பார்த்துக் கொண்டிருந்தேன், அவர் அந்த ஒழுங்கை முடிவில் மறைந்து போனார்.
அவரோடு, எனது உறவுகள் அனைவரும் மறைந்து போவார்கள் என்று எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.

தனிமை என்னை சூழ்ந்து கொண்டாலும் அந்த வீட்டில் இருந்த குழந்தைகளால் சில நாட்களிலேயே அந்த தனிமை என்னை விட்டு கடந்து போய்விட்டது.
சில சந்தர்பங்களில் அந்த வீட்டில் என்னை அடிக்கும் போது என் வீட்டுக்கு போயிட மாட்டோமா, என் மாமா வந்து என்னை அழைத்துச் செல்ல மாட்டாரா என்ற ஏக்கத்துடன் என் மாமா சென்ற வழியையே பார்த்துக்கொண்டிருப்பேன்.
பல நாட்கள் அப்படி வழிமேல் விழி வைத்து பார்த்துக் கொண்டிருந்தேன். பிறகு அதுவும் கடந்து போனது. காலங்கள் வெகு சீக்கிரமாகவே உருண்டுப் போனது. அந்த வீட்டுக்காரர்கள் இசுலாமியர்கள் என்பதால் என்னை ஆயிஷா என்றே அழைத்தார்கள். அந்தப் பெயரே இன்று வரை நிலைத்து விட்டது.
நான் வேலை செய்த வீடு கிருளப்பனை என்ற இடத்தில்தான் இருந்தது. அந்த வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் வேலை செய்யும் மலைநாட்டு பிள்ளைகள் தீபாவளி, பொங்கலுக்கு அவங்க வீட்டுக்கு செல்லும் போது எனக்கு ரொம்ப கவலையாக இருக்கும். நமக்கும் சொந்தம் என்று யாராவது இருந்தால் நாமும் பெருநாளைக்கு போகலாமே என நினைத்து ரொம்ப வேதனையோடு பல நாட்களை கழித்திருக்கிறேன்.
நான் கடைக்கு செல்லும் போதுதான் அந்த வியாபார நிலையத்தில் பணி செய்த ஒரு இளைஞனை விரும்பி சில நாட்களிலேயே கல்யாணம் முடித்து விட்டேன். அதன் பிறகு 1989ம் ஆண்டு இங்கிரிய, றைகமைக்கு வந்து என் கணவரின் வீட்டிலேயே வாழத் தொடங்கி விட்டேன். திரும்பவும் புது உறவு கிடைத்ததில் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.

சுமார் எட்டு வருடங்களாக ஊதியம் பெறாமல் அந்த பங்களா  வீட்டில் வேலை செய்ததால் அந்த வீட்டில் எனக்கு ஏதாவது கிடைக்குமா என்ற நப்பாசையில் நானும் எனது கணவரும் அந்த பங்களாவுக்குச் சென்றோம்.
அந்த வீட்டில் எனக்கு அப்படி ஒன்றும் கிடைக்கவில்லை. எனது மாமா கொடுத்துச் சென்றாக கூறி ஒரு பாஸ்போர்ட்டை கொடுத்தார்கள்.
அது ஸ்ரீமா, சாஸ்த்திரி ஒப்பந்தத்தில் வழங்கப்பட்ட இந்திய பாஸ்ப்போர்ட். அதில் எனது சிறு வயது போட்டோ ஒட்டப்பட்டு எனது பெயரும் ஊரின் பெயரும் இருந்தது. அந்த பாஸ்போர்ட்தான் எனது பழைய ஞாபகங்களை மீண்டும் மீட்டியெடுப்பதற்கு காரணமாக இருந்தது.” என்று சொல்லும் பரமேஸ்வரிக்கு தற்போது 51 வயதாகிறது.
“எனக்கு ஒரு ஆசை. நான் இறப்பதற்கு முன்பாக எனது உறவுகள் எங்காவது இருந்தால் அவர்களை ஒரு தடவையாவது பார்த்திடணும்…”ன்னு ஏக்கத்துடன் சொல்லும் பரமேஸ்வரி கண் கலங்கினார்.
இதைப் படிக்கும் வாசகர்களுக்கு மேலதிக தகவல்கள் ஏதேனும் தெரியும் என்றால் தயவு செய்து வண்ண வானவிலுடன் அல்லது கட்டுரையாளரின் மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொள்ளவும். ஆயிஷா பரமேஸ்வரியை அவரது இரத்த உறவுகளுடன் சேர்த்து வைப்போம்.🔴


படப்பிடிப்பு உதவி:  எஸ். சுசாந்தி