Saturday, February 16, 2013

ஹமீதுடன் அந்தக்கால நினைவுகள்…


அம்மா அடித்த அடிகள் அப்போது வலித்தாலும் இப்போது சுகமான அனுபவங்கள்...

சந்திப்பு: மணி ஸ்ரீகாந்தன்

“முப்பத்திரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு- நடிப்புலக மாமேதையைச் சந்தித்த முதல் இரு தினங்களிலேயே அவர் தன்நெஞ்சார நேசிக்கும் ஒரு நண்பனாகும் பாக்கியம் பெற்றேன். அவர் என்னை எனது ரசிகர் என்று பகிரங்கமாய் வானொலியில் சொன்னதால், தொழில் ரீதியாக பலரது எரிச்சல் பொறாமைகளுக்கு நான் பலியானாலும், மறுபுறம் ‘பைலட் பிரேம்நாத்’ படப்பிடிப்புக் குழுவினர் மத்தியில், எனக்குப் பெரும் மதிப்பும் சர்வசுதந்திரமும் கிடைத்தது. ஒருநாள், நடிகர் திலகம் தன் அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்க ரண்முத்து ஹோட்டலின் 3ம் மாடியில் கடற்கரைப் பக்கமாக அமைந்துள்ள ‘டெரஸ்’ எனப்படும் திறந்த வெளித்தளத்தில் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது.

வேடிக்கை பார்க்கச் சென்றிருந்த என்னுடன் அன்றைய இளம் நடிகை ஸ்ரீதேவி பேசிக் கொண்டிருந்தார். மொட்டை மாடியிலிருந்து இயக்குநர் திருலோகச்சந்தர் கேமரா கோணத்தைச் சரி பார்த்துக் கொண்டிருக்க நேரமும் ஓடிக்கொண்டிருந்தது.

நானும் ஸ்ரீதேவியும் கடற்கரைப்பக்கமாக அமைந்த கட்டைச்சுவரில் சாய்ந்து கடலலைகளைப் பார்த்தபடி பேசிக் கொண்டிருந்தோம். சிறிது நேரத்தில் ஏதோ சந்தடி கேட்டுத் திரும்பிப்பார்த்தால் புகைப்படக் கலை நிபுணர் ஸ்டில்ஸ் சாரதி ஒரு ‘ட்ரைபொட்டில்’ தன் கமராவைப் பொருத்தி எங்கள் இருவரையும் படமெடுக்க ஆயத்தமாகவும் அருகில் நடிகர் திலகம் கமரா கோணத்தைச் சரிபார்த்துக் கொண்டும் இருப்பதையும் கண்டு திகைத்துவிட்டோம்.

நாம் திரும்பியதும், நடிகர் திலகம் “ஐயய்யோ திரும்பிட்டாங்களே... திரும்பிட்டாங்களே... அருமையான இந்தக் காதல் காட்சியைப் படம்பிடித்து ஹமீத்தோட பொண்டாட்டிக்கு காட்டி ஒரு கலாட்டா பண்ணலாம்னு இருந்தேனே...” என்று ஒரு குழந்தையைப் போல் குதிக்க ஆரம்பித்தார். எத்தனை பெரிய கலைமேதை. அவருக்குள்ளும் ஒரு குறும்புக்காரக் குழந்தை மனம் இருப்பதைக் கண்டு வியந்தேன்.

அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு “அப்படியொரு படத்தை விட உங்களோடு சேர்ந்து ஒரு படம் எடுத்துக்கொள்ள ஆசைப்படுகிறேன் என்று கூறியதும் அன்போடு என் தோளில் கைபோட்டு அரவணைத்தபடி போஸ் கொடுத்தார். அப்படத்தை என் மனைவிக்கும் காட்டி நடந்ததைச் சொல்லி சிரித்து மகிழ்ந்தோம்”
என்று தமது ஃப்ளாஷ்பேக் அனுபவங்களை ஹமீத் சொல்லத் தொடங்கினார்.
                       “என் குடும்பத்தில் நான்தான் கடைக்குட்டி. அதனால் அம்மாவிடம் அதிகம் பால்குடிக்கும் உரிமை எனக்குத்தான் இருக்கிறது. அம்மாவை எப்போதும் நான் பிரிந்திருப்பதில்லை. அரிவரி தொடங்கியதும் தான் அந்த இரண்டுமணி நேரப் பிரிவு வந்தது. தெமட்டகொடை தமிழ் மகா வித்தியாலயத்தில் முதலாவது தினத்தன்று நான் பிரவேசம் செய்தது இன்றும் என் ஞாபகத்தில் இருக்கிறது. அம்மாவை முதல் தடவையாக நான் பிரிந்ததை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனக்கு அழுகை அழுகையாக வந்தது.

எப்படியோ அங்கிருந்த ஆசிரியருக்கு போக்கு காட்டிவிட்டு ஓடி வந்து விட்டேன். வீட்டுக்கு வந்த என்னை அம்மா தடியை ஒடித்து அடித்தார். அது ஒரு பசுமையான நினைவு. அந்தப் பள்ளியில் எனக்கு அகரம் தொடக்கியவர் ஆ. பொன்னுத்துரை. இவர் தினகரன் பத்திரிகையில் ஏராளமான சிறுகதைகளை எழுதியிருக்கிறார்.

பிறகு கனகசபை ஆசிரியர் என்னை சாரண இயக்கத்தில் சேர்த்து அதன் சாரணர் கீதத்தை பாட வானொலி நிலையத்திற்கு என்னை அழைத்துச் சென்றார். எனக்கு அதுதான் வானொலி நிலையம் என்று தெரியாது. அந்த அறையில் ஏதோ ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது.

அதைப் பார்த்துப் பாடினோம். அந்தப் பாடலுக்கு இசையமைத்தவர்களை எனக்கு யாரென்று தெரியாது. பிறகு நான் வளர்ந்து வாலிபனான போதுதான் அவர்களை நான் அடையாளங் கண்டேன். அவர்கள் எம். கே. ரொக்சாமி, சகோதரர்கள் என்பது தெரியவந்தது.
இளமைத் தோற்றம் /
மாணவனாக





எனது பள்ளி வாழ்க்கையில் ஆ. பொன்னுத்துரை மறக்க முடியாத ஒருவர். அம்மாவைவிட்டு நான் பிரிந்திருக்கும் அந்த இரண்டு மணித்தியாலங்களில் அவரின் அன்பும், அரவணைப்பும்தான் எனக்கு ஒரே ஆறுதல். அது தவிர எனக்குள் கலையார்வத்தை விதைத்தவரும் அவர்தான். பாடசாலை கலை விழாக்களில் என்னை மேடையேறி நடிக்க செய்தவரும் அவர்தான். முதன்முதலாக நான் சிறுவர் மலர் நிகழ்ச்சியில் பங்குபற்றச் சென்ற போது என்னுடன் பள்ளித்தோழர் யோசப் எட்வட் வந்தார். அதே போல் பள்ளி வாழ்க்கையில் மறக்க முடியாத ஒருவர்தான் அதிபர் பண்டிதர் சிவலிங்கம்.

நான் வானொலி நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவதை பெருமையாக பாடசாலையில் சொல்லிவந்தார். மிகவும் கண்டிப்பானவர்தான். ஆனால் என்னிடத்தில் நிறையவே அன்பு காட்டினார். எனக்குள் இலக்கிய அறிவை விதைத்தவரும் அவர்தான். பண்டிதர் சிவலிங்கம், ஆ. பொன்னுத்துரை ஆகியோர் எனக்குள் விதைத்த தமிழறிவுதான் எனக்கு இன்று சோறு போடுகிறது” என்று தமது வளர்ச்சிக்கு உந்துசக்தியாக விளங்கிய பள்ளிவாழ்க்கையை பற்றி விபரிக்கும் அறிவிப்பாளர், அரிவரி முதல் உயர்தரம் வரை தம்மோடு படித்த கே. சந்திரசேகரனைப் பற்றி இப்படிச் சொல்கிறார்.

“சந்திரசேகரன் எம். ஜி. ஆர். கட்சி. நான் சிவாஜி கட்சி. இப்படி எமக்குள்ளேயே ஒரு அணியை உருவாக்கிக் கொண்டு காரசாரமாக விவாதிப்போம். ஒரு முறை நான் அடித்த அடியால் அவர் மூர்ச்சையாகி போனார். ஆனாலும் எமது சகோதர வாஞ்சை எம்மை பிரித்துவிட முடியாதபடி பாச கயிறு போட்டு கட்டியிருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
ஹமீதின் ஒளிப்பதிவில்
கே. சந்திரசேகரன்.
ஒரு முறை நானும் சந்திரசேகரனும் பள்ளிக் கலைவிழா நாடகங்களையும் தாண்டித் திரைப்படத் தயாரிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு என எங்களை நாங்களே சுயமாக வளர்த்துக் கொண்டதாக கற்பனைவானில் மிதந்த காலம். அபூர்வமாக ஒரு பெரியவரின் இரவல் கமரா (சாதாரண, ஸ்டில் கமராதான்) கிடைத்தது. பிலிம்ரோல் வாங்கக் காசு இல்லை.

தினந்தோறும் பள்ளி இடைவேளையில் சிற்றுண்டி வாங்கித்தின்ன அம்மா பல சிரமங்களுக்கு மத்தியில் கொடுக்கும். 25 சதக் குற்றிகளை பட்டினி கிடந்து சேமித்து படச்சுருள் வாங்கியதும், ஒரே மகிழ்ச்சி. கமராவுக்கோ ஃபிளாஷ் இல்லை. எங்கள் வீட்டிலோ மின்சாரம் இல்லை. சேகரது அப்பா ரயில்வேயில் கடமையாற்றியதால் அவர்கள் வீட்டில் மின்வசதி இருந்தது. அவரது அப்பா வேலைக்குப் போக அம்மா சந்தைக்கு கறிகாய் வாங்கப் போன நேரம்பார்த்து அவரது வீடு சென்று ஒரு நாற்காலி வைத்து விட்டத்தில் இருந்த பல்பைக் கழற்றி ஒரு வயரை இணைத்து வெளிச்சம் பெற்றோம்.

இயல்பாகவே ஓவியத்திறமை பெற்றிருந்த சந்திரசேகரன் ஏதோ சில பொடிகளையும், பவுடரும் கலந்து தனக்குத்தானே ஒப்பனை செய்து கொண்டார். முகத்தில் ஒரு வாள்வெட்டு, அப்பாவின் மழைக்கோட்டு, யாரோ கொடுத்த ஒரு தொப்பி, அடடா ஒரு பயங்கர தமிழ்ப்பட வில்லன் தயார். கதை? அதைப்பற்றி யார் கவலைப்பட்டார்!

அந்த ஒரே ஒரு பல்பு வெளிச்சத்தில் மாறி மாறி புகைப்படங்களை சுட்டுத் தள்ளினேன். பிறகு படச்சுருளை நாம் வாழும் பகுதியிலிருந்த சென்றல் ஸ்டுடியோவில் கழுவக் கொடுத்துவிட்டு, ஒருவாரம் நெஞ்சம் படபடக்க காத்திருந்தோம். படப்பிரதிகள் கிடைத்ததும் முதல் நாள் ரிலீkன் பெறுபேறு அறியக்காத்திருக்கும் தயாரிப்பாளர், இயக்குனர் போல் ஆவலுடன் பிரித்துப் பார்த்தோம். அதிர்ச்சிதான்! 12ல் ஒன்றே ஒன்றைத் தவிர மற்றவையெல்லாம் மங்கலாக இருட்டுக்குள் குருட்டாட்டமாகவே இருந்தன. அந்த ஒருபடம் ஏதோ ‘டென்கொமன்ட்மென்ஸ்’ தயாரித்து இயக்கியவரின் மகிழ்ச்சிக்கு ஒப்பானதாக இருந்தது. 1963ல் நான் எடுத்த அந்த போட்டோவை இன்றும் என் நண்பர் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறார்”
உலக அறிவிப்பாளரின் சின்ன வயது குறும்பு பற்றி கேட்டோம்.

“அது நான் செய்த ஒரு திருட்டு சம்பவம். என் மூத்த அண்ணனுக்கும் எனக்கும் ஒரு நான்கு ஆண்டுகள் தான் வித்தியாசம். ஒருநாள் அவர் எங்கோ கால்வாயிலிருந்து ஒரு மீனைப் பிடித்து வந்து தண்ணீர் நிரப்பிய ஒரு போத்தலில் போட்டு அதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார். எனக்கும் அப்படியொரு மீனைப் பிடித்து போத்தலில் போட்டு அழகு பார்க்க வேண்டும் என்று ஆசை. அங்கும் இங்கும் தேடிப் பார்த்தேன். எனக்கு மீன் கிடைக்கவில்லை. பிறகு அண்ணன் இல்லாத நேரம் பார்த்து போத்தலில் இருந்த அந்த மீனைத் திருடி வீட்டிற்கு முன்னால் குழிதோண்டி அதில் தண்ணீர் ஊற்றி அதில் அந்த மீனை போட்டு வைத்திருந்தேன்.
கோமாளிகளில்

சிறிது நேரத்தில் அண்ணன் வந்துவிட அவரிடம் “ஹாய் இதோ என் மீன்” என்று நான் குழியில் போட்டு வைத்திருந்த மீனைக் காட்டினேன். நிலைமையைப் புரிந்து கொண்ட அண்ணன் அம்மாவிடம் விசயத்தைக் கூற அம்மா என்னை அடித்தார்.

இப்படி என்னை அம்மா, அப்பா அடித்த அடி அப்போது வலித்தது. ஆனால் இன்று நினைத்துப் பார்த்தால் அது ஒரு சுகமான அனுபவம். எத்தனை கோடி கொடுத்தாலும் அந்த சுகத்தை மீண்டும் கொண்டு வர முடியாது. என்று பெருமூச்சு விடும் ஹமீதிடம் காதல் பற்றிக் கேட்டதும்.

“பள்ளியில் படிக்கும்போதே கலையில் அதிகம் ஆர்வம் காட்ட ஆரம்பித்துவிட்டேன். நான் நாடகங்களில் கட்டபொம்மன், ஜான்சிராணி, கர்ணன் வேடங்களில் சிறப்பாக நடித்ததினால் எனக்கு பாடசாலைகளில் கதாநாயகன் அந்தஸ்து வந்துவிட்டது.

அதனால் எனக்கு கொஞ்சம் திமிரும் கூடவர காதல் வலையில் நான் விழவில்லை. ஆனால் என் கல்யாணமே காதல் கல்யாணம்தான். ஆனால் அது காதல் என்று நீண்ட காலத்திற்கு பிறகுதான் எனக்கு தெரியவந்தது. இருவருக்கிடையில் இருந்த அந்த நேசம் ஒருவரை ஒருவர் விட்டு பிரியமுடியாத பந்தம் என்பது கல்யாணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னேயே தெரியவந்தது.

இதில் குறிப்பிடத்தக்க விடயம் எனது தீவிர ரசிகையே எனக்கு மனைவியானது. எமது திருமணம் கொம்பனி வீதியில் உள்ள ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடைபெற்றது. திருமணத்திற்கு பைலா சக்கரவர்த்தி எம். எஸ். பெர்னாண்டோ உள்ளிட்ட பல கலைஞர்கள், நண்பர்கள் என்று நிறையப் பேர் வந்திருந்தனர். திருமணத்திற்கு எனக்கு எம். அஸ்வர்கான் சகோதரர்கள் இருவரும்தான் பக்கபலமாக இருந்து உதவினார்கள். திருமணத்தில் சம்பிரதாயங்களைப் பார்த்து திருமணத்தை சிறப்பாக நடத்தியது நண்பர் எம். ஜே. எம். அன்ஸாரின் குடும்பம்தான்.

முழுக்க முழுக்க என் திருமணத்தை என் நண்பர்கள் இணைந்து நடாத்தி வைத்தார்கள். திருமணப் போட்டோவை அன்று பிரபலமாக விளங்கிய புகைப்படப்பிடிப்பாளர் மைக்கல் விக்டோரியா எடுத்தார்” என்று தமது திருமண நினைவுகளை மீட்டிய ஹமீதிடம். உங்கள் வாழ்வில் மறக்க முடியாத நபர்கள் யார் யார் என்று கேட்டோம்.

“நிறையப் பேர் இருக்கிறார்கள். வானொலி அண்ணா வ. அ. ராசையா. எஸ். கே. பரராஜசிங்கம், என் கலையுலக முயற்சிகளுக்கு ஆதரவும் உற்சாகமும் தந்த எஸ். ராமதாஸ், ரமேஷ்பிரபா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இலங்கையில் மட்டுமே ஒலிபரப்புத் துறையில் பிரபலமாக இருந்த என்னை தமிழக மக்களுக்கு அறிமுகம் செய்தவர் மதுரா டிராவல்ஸ் உரிமையாளர் வி. கே. டி. பாலன்தான். இன்று எனக்கு கிடைத்திருக்கும் பெயருக்கும் புகழுக்கும் காரணமான அவரை மறக்கவே மாட்டேன்.

சென்னையில் 1992ம் ஆண்டில் நடைபெற்ற கலை விழாவில் தான் தமிழக மக்களுக்கு வி. கே. டி. பாலன் என்ன அறிவிப்பாளராக அறிமுகம் செய்தார். அப்போது நடந்த ஒரு சம்பவத்தையும் இங்கே குறிப்பிட்டால் சிறப்பாக இருக்கும்.

வானொலி மூலம் என்மீது அன்பும் அபிமானமும் கொண்ட தமிழக நேயர்களில் ஏ. ஆர். ரஹ்மானின் அம்மாவும் ஒருவராம். அந்த இசை விழாவைக் காண வேண்டும் என்று ஆசைப்பட்டு கவிஞர் வைரமுத்துவிடம் வேண்டுகோள் விடுக்க அவரும் பாலனிடம் கூறி ஏற்பாடு செய்துவிட்டார்.

நிகழ்ச்சி முடிந்ததும் ஏ. ஆர். ஆரின் அம்மா என்னைச் சந்தித்து தங்கள் வீட்டுக்கு ஒரு மதியபோசன விருந்துக்கு வரவேண்டும் என்று அன்போடு அழைத்தார். அதற்கிணங்கி முதன் முதலாக ரஹ்மானைச் சந்தித்த போது முதல் படத்திலேயே தேசிய விருது பெற்ற சாதனையின் சுவடு துளியேனும் இல்லாமல் வீட்டுக்குள் ஒரு சின்னப்பிள்ளை போல் ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்தார். எத்தனை பெருமைகள் வந்தாலும் அதனைத் தலையில் சுமக்காமல் இறைவனுக்கே அத்தனை புகழையும் சமர்ப்பித்து சாதாரண மனிதனாய்ப் பழகும் அதே றஹ்மானையே இன்றும், ஒன்றுக்கு இரண்டாய் ஆஸ்கார் விருதுகளைப் பெற்ற பின்னரும் காண்கின்றேன்.
வி.கே.டி பாலன் பி.எச்.சுக்கு விருது வழங்குகிறார்.


“ஆரம்ப காலத்தில் அவரது வெற்றிகளைச் சகிக்க முடியாத திரை இசைத்துறை சார்ந்த சில
 முன்னோடிகளைத் திருப்திப்படுத்துவற்காகவோ என்னவோ சில முன்னணி சஞ்சிகைகள் அவரது அடுத்தடுத்த படங்களின் இசையை வேண்டுமென்றே மட்டமாகவும் அவரது படைப்பாற்றல் திறைமையைக் கண்டு கொள்ளாமல், இந்த இசைக்கு கம்ப்யூட்டரைத்தான் பாராட்ட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தன.

அதே நேரம் சன் டிவி நிறுவனத்தினர், பொங்கல் விசேட நிகழ்ச்சியொன்றைத் தயாரித்துத்தரும்படி ரமேஷ்பிரபா அவர்கள் மூலமாக என்னைக் கேட்டிருந்தார்கள். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ‘றஹ்மான் ஒரு புதிர்’ எனும் தலைப்பில் ஒருமணிநேர நிகழ்ச்சியைத் தயாரித்தேன். ரஹ்மானின் இல்லத்தையும் ஸ்டூடியோவையும் தொலைக்காட்சி நேயர்கள் அந்த நிகழ்ச்சியில்தான் முதன் முதலாகப் பார்த்தார்கள். றஹ்மானின் செயற்கைத் தன்மையில்லாத இயல்பான எளிமையான பேச்சும் அதில் பொதிந்திருந்த ஆழமும், அதே நிகழ்ச்சியின் கவிஞர் வைரமுத்து, எஸ். பி. பாலசுப்பிரமணியம், இயக்குநர் சிகரம் பாலச்சந்திரன் போன்றவர்கள் சொன்ன நியாயமான கருத்துக்களும், மற்றும் சமூகத்தின் பலமட்டங்களைச் சார்த்தவர்கள் சொன்ன கருத்துக்களை நான் தொகுத்த விதமும், பாடல்களும் சேர்ந்து பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளிலே அமோக வரவேற்பினைப் பெற்ற நிகழ்ச்சியாக அதனை உயர்த்தியது.
நடிகர் தியாகராஜன் எடுத்த புகைப்படத்தில்
இளையராஜாவுடன்.


அதன்பின்னர் அதே சஞ்சிகைகளின் மற்றும் பத்திரிகைகளின் போக்கில் திடீர் மாற்றம். அதன் பிறகு ஏறுமுகம்தான். அந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து ஒருசில வரிகளில் தன் உள்ளத்து நன்றியைக் கொட்டி றஹ்மான் எழுதிய கடிதம் இன்றும் அன்புக்குரிய சேமிப்பாக என்னிடம் இருக்கிறது. ஆரம்ப காலத்தில் முதன் முதலாக அவர் வாங்கியிருந்த ஒலித் தொகுப்புக் கருவியை (மிக்ஸர்) எனக்கு அவர் அன்பளிப்பாக வழங்கிய போது நான் பதறிப் போய் “என்ன றஹ்மான் இது? நீங்கள் வாழ்நாள் எல்லாம் நினைவுமாறாமல் பேணிப்பாதுகாக்க வேண்டிய பொக்கிஷமல்லவா? இதைப்போய் எனக்குக் கொடுக்கிaர்களே?” என்று கேட்டேன்.

“அவரோ ஒரு மெல்லிய புன்னகையுடன் ‘நான் வேறு யாருக்கு கொடுக்குறேன்...?’ என்று மட்டும் சொன்னார். அது என் நெஞ்சை வெகுவாகத்தாக்கியது. மறுபேச்சுப்பேசாமல் அந்த அன்புச் சுமையை சுமந்து இலங்கை வந்தேன்”

மகிழ்ச்சியான ஒரு சம்பவம்? பற்றி கேட்டதற்கு ஹமீத் இப்படிச் சொல்கிறார்:

“இதை மகிழ்ச்சி என்று சொல்வதா அல்லது துன்பம் என்று சொல்வதா என்றே தெரியவில்லை. 83 ஜுலை கலவரம் அரங்கேறிய சமயம் அது. என்னையும் என் மனைவியையும் காரில் வைத்து பெற்றோல் ஊற்றி எரித்து விட்டார்கள் என்ற செய்தி தமிழக பத்திரிகைகளில் செய்தியாக வெளிவந்து மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருந்தது. இந்த வதந்தி எப்படி பரவியது என்று தெரியவில்லை.

இலங்கையில் இனி தமிழர்கள் வாழ முடியுமா? என்னை போன்றவர்கள் தமிழ்பேசி எப்படி பிழைப்பு நடத்துவது என்ற ஏக்கம் என்னை வாட்ட, வானொலி நிலையம் செல்லாது வீட்டிலேயே இருந்து விட்டேன். அந்த வதந்தி உண்மையென உறுதியாகி விட்ட சூழ்நிலையில்தான் இலங்கை அரசு உடனடியாக என்னை வானொலி நிலையத்திற்கு அழைத்தது. எனது பெயரை முதலிலேயே குறிப் பிட்டுவிட்டு விசேட செய்தியை வாசிக்க சொன்னார் கள். அதன் பிறகுதான் நான் உயிரோடு இருக்கும் விடயம் மக்களுக்கு தெரிய வந்தது. “ஹா சப்தம் மீண்டும் கேட்டு’ என்ற தலைப்பில் மலையாள பத்திரிகையில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. அதன் பிரதி கூட என்னிடம் இன்னும் இருக்கிறது.

வாழ்க்கையில் எதையாவது இழந்து விட்டு வருத்தப்பட்டிருக்கிறீர்களா என்று கேட்டோம்.

“சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜ். டி. வி. யில் நடிகை ஊர்வசி ‘டேக் இட் ஈஸி’ என்ற நிகழ்ச்சியை நடாத்தினார். பிரபலங்களை அழைத்து குண்டக்க மண்டக்க கேள்விகளைக் கேட்டார்கள். அப்போது நீங்கள் கேட்ட இதே கேள்வியை கேட்டார்கள். அதற்கு நான் என் தலையை பார்த்தாலே புரிந்திருக்குமே என்று பதில் சொன்னேன். சிரிப்பொலியால் அரங்கமும் அதிர்ந்தது. இதை வேடிக்கைக்காகத்தான் சொன்னேன். இளமையும் முதுமையும் ரொம்பவும் இயற்கையானது. அதை தாங்கித்தான் ஆகவேண்டும்.

“ம்... அது ஒரு காலம்... என்று சொல்லி ஏங்குவது?”

“தெமட்டகொடையில் பேஸ்லைன் வீதிக்கருகில் இருந்தது. நான் பிறந்து வளர்ந்த வீடு. அங்கே எட்டு வீடுகள் இருந்தன. அதில் மின்சார வசதியில்லாத ஒரு சாதாரண ஓட்டு வீடு எங்களுடையது. அந்த வீட்டுக்கு முன்னால் ஒரு மருதோன்றி மரம் இருந்தது. அப்புறம் பெரிய மாமரம். இந்த மரத்தில் ஏறி அமர்ந்திருக்கும் போதுதான் என் மனசு கற்பனை வானில் சிறகடித்து பறக்கும். இவை எதுவும் இன்று அந்த இடத்தில் இல்லை. எங்கள் வீட்டு பக்கத்தில் ஒரு தோட்டம் இருந்தது. அங்கே ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து வந்து குடியேறிய இந்தியத் தமிழர்கள் வாழ்ந்தார்கள்.

அவர்கள் அனைவருமே கிறிஸ்தவர்கள். கொச்சிக்கடை அந்தோனியார் திருவிழாவுக்கு வருடாவருடம் அன் னதானம் போடுவார்கள். சுமார் ஒரு கிலோ மீட் டருக்கு வாழை இலை போட்டு சோறு பறிமாறுவார்கள். ‘பிச்சைக்காரர்கள் சாப்பிடுவார்கள். அங்கெல்லாம் போகக் கூடாது’ என்று அம்மா எனக்குத் தடைபோடுவார். ஆனால் அந்த குழம்பு வாசனை காற்றில் வந்து மூக்கைத் துளைக்கும். நாக்கை அடக்க முடியாமல் அம்மாவை ஏமாற்றி விட்டு பந்தியில் அமர்ந்து சாப்பிட்டுவிட்டுத்தான் வருவேன்.

Tuesday, February 12, 2013

மனம் திறக்கிறார் கோபிநாத்

  'இன்று ஊடகங்களின் வழியாகத்தான் மொழி கற்பிக்கப்படுகிறது. இன்று பொதுத்தமிழ், வட்டார வழக்குகளை மீறி வந்திருக்கிறது.'

'ஆங்கிலம் கலந்து தமிழ் பேசுவது மிகப்பெரும் குற்றமாகாது'

'ஒருவர் நல்ல தமிழில் பேசும்போது அவர் நல்ல தமிழில் பேசுகிறார் என்று பாராட்ட வேண்டாம்'


'தமிழ் மொழியை ஒரு உணர்வு பூர்வமான ஒரு சடங்காக பார்ப்பதை நிறுத்தவேண்டும். மொழி கற்றலின் அடிப்படையில் பார்க்கவேண்டிய ஒன்று'


கடந்தவாரம் ஒரு மாலை வேளை சென்னை கோடாம்பாக்கத்தின் ரங்கராஜன்புரம் ஓரிரு வாகனங்களை மட்டுமே உள்வாங்கி கொண்டு அமைதியாக இருந்தது. பெல்லவி அடுக்குமாடி கட்டிடத்தின் அருகே கீழே தமிழகத்திற்கே  உரித்தான ஒரு சிறிய பெட்டிக்கடை பெஞ்சு, மடித்து கட்டிய வேட்டியோடு டீயை ருசித்து கொண்டிருக்கும் மனிதர்களோடு விஜய் டீவி புகழ் கோபிநாத்தும் டீ கிளாசோடு நின்றுகொண்டிருக்கிறார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு இளைஞன் கோபியை பார்த்து "ஆ... கோபி சார் நீங்களா உங்களை பேஸ்புக், டுவிட்டர்னு தேடிக்கிட்டிருக்கிறேன். நீங்க எங்கே சார் இங்கே?" என்கிறார் ஆச்சரியத்தோடு. "டேய் உன்ன யாருடா அங்கெல்லாம் தேடச்சொன்னது? நேரா ரங்கராஜபுரத்திற்கு வா நான் இந்த பெட்டிக்கடையில்தான் இருப்பேன்," என்று அலட்டல் இல்லாமல் பதில் வந்து விழுந்தது.










கோபிநாத் புதுக்கோட்டை அறந்தாங்கியை பிறப்பிடமாக கொண்டவர். அறந்தாங்கி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆரம்பகல்வியை கற்றிருக்கிறார். அதற்குப் பிறகு சென்னையில் சில காலம் படித்திருக்கிறாராம்.
"செய்தியாளர் என்பதுதான் என்னுடைய அடையாளம். மற்றவைகள் எல்லாம் அதில் இருந்து வந்த பிற அடையாளங்கள்தான். திரைக்கு முன்னாலும் பின்னாலும் பணியாற்றி வருகிறேன். ஆரம்பத்தில் என்.டீவி, சி.என்.பி.சீ ஆகியவைகளில் செய்தியாளராக பணியாற்றியிருக்கிறேன்.

நான் தொலைக்காட்சிகளில் செய்த நிகழ்ச்சிகள் பெரும்பாலும் சமூகத்தின் பின்புலத்தை ஒட்டியதாகவே இருக்கிறது. சிகரம் தொட்ட தமிழர்கள், சிகரம் தொட்ட மனிதர்கள், மக்கள் யார் பக்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை குறிப்பிடலாம்," என்று சொல்லும்போது அவர் முகத்தில் ஒரு புன்னகை.

ஏழு வருடங்களைக் கடந்து வெற்றிகரமாக பயணிக்கும் நீயா, நானா? பற்றி கேட்டோம். "நீயா நானா ஒரு டீம் வொர்க். இரு துருவங்களைச் சேர்ந்த மனிதர்கள் அறிவு ரீதியாக மோதினால் எப்படி இருக்கும் என்ற எண்ணம்தான் அந்த நிகழ்ச்சி. மக்களின் மன ஓட்டத்தை முழுவதுமாக வெளிப்படுத்த ஒரு பொது மேடை அமைத்து கொடுத்திருக்கிறோம்.

பொசிடிவ்வை, நெகடிவ் வெறுப்பதும், நெகடிவ்வை பொசிட்டிவ் வெறுப்பது வாடிக்கையாகிவிட்ட இந்தக் காலத்தில் இந்த நிகழ்ச்சி பலவிதமான கருத்துக்களின் சங்கமம் என்றுதான் சொல்லவேண்டும். மறுத்து சொல்ல ஆளில்லாத நிலையில் நான் சொல்லும் கருத்தெல்லாம் சரியாகத்தான் தெரியும். ஆனால் ஒருத்தர் அந்தக் கருத்தை மறுத்துச் சொல்லும்போது எனது கருத்து மறுபரிசீலனை செய்யப்படுகிறது. அந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளவும் நாம் தயாராகவும் இருக்கிறோம். பொசிடிவ்வும், நெகடிவ்வும் சேராமல் நமக்கு மின்சாரம் வருமா? அது மாதிரிதான் இதுவும்.

ஆரம்பத்தில் ஒரு மணிநேரமாக தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி பிறகு 2 மணி நேரமாக மாற்றப்பட்டது. பேசுவதற்கு நிறைய விசயங்கள் இருப்பதால் நேரமும் அதிகரிக்கப்பட்டது. தமிழர்கள் இயல்பாகவே கருத்துக்களை முன்வைப்பதில் கில்லாடிகள். அதனால் நமது மக்கள் பேசுவதை பார்த்து நாம் ஆச்சரியப்பட அவசியமில்லை. அவர்களுக்கு இப்போது பேசுவதற்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது, அவ்வளவுதான். நாங்கள் பேச்சாளர்களை தேர்வு செய்வதில்லை. சாதாரண மனிதர்களைத்தான் தெரிவு செய்கிறோம். அப்படி தெரிவு  செய்பவர்களிடம் பேச வைத்து ஒத்திகை எதுவும் பார்ப்பதில்லை. ஒத்திகையில் அவர்கள் எல்லாவற்றையும் பேசிவிட்டால் பிறகு அவர்கள் எப்படி மேடையில் பேசுவார்கள்? நான் அவர்களை நேரிடையாக நிகழ்ச்சியில்தான் சந்திக்கிறேன்," என்று சொல்லும் கோபியிடம், ஆச்சர்யம், அமானுஷ்யம் ஆகிய சொற்களை நீங்கள் உச்சரிக்கும்போது அது தனி அழகாக இருக்கிறதே, எப்படி கண்டு பிடித்தீர்கள்? என்று கேட்டோம்.

"அந்த வார்த்தையே ஒரு மிரட்சியானதுதான். நடந்தது என்ன இயக்குனர் சாய்ராம்தான் அந்த வார்த்தையை என்னிடம் சொன்னார். பிறகு அந்த வார்த்தையை பேசிய பிறகு அவரே என்னை பாராட்டவும் செய்தார். நான் எனது எழுத்துக்களிலும், பேச்சிலும் நிறைய தமிழ் வார்த்தைகளை பயன்படுத்துகிறேன். நீங்கள் உட்பட எல்லோரும் இந்த ஆர்ச்சர்யம், அமானுஷ்யம் பற்றிதான் பேசுகிறீர்கள். flexiblity நெகிழ்வுத்திறன் என்ற வார்த்தையை நான் மட்டும்தான் ஊடகத்தில் பயன்படுத்துகிறேன்.

ஏனென்றால் இன்று ஊடகத்தின் வழியாகத்தான் மொழி கற்பிக்கப்படுகிறது. வட்டார வழக்குகள் குறைந்துப்போய் பொதுத் தமிழ் வந்து விட்டது. ஊடகம் சொல்வதுதான்  தமிழென்று ஆகிவிட்டது. அப்படி பார்த்தீர்கள் என்றாள் நெகிழ்வுதிறனில் தொடங்கி, சமூக விழுமியங்கள் வரை நான் நிறைய தமிழ் சொற்களை அறிமுகம் செய்கிறேன். இப்படியான வார்த்தைகளை நான் பயன்படுத்தவதற்கு காரணம், ஊடகத்தின் வழியாகத்தான் மொழி எல்லோருக்கும் போய்ச் சேருகிறது. திசைவழி என்ற வார்த்தையை கோபிநாத் சொல்கிறாரே என்று கோபிநாத்தை விரும்புகிறவர்கள். அதைப் பற்றி பேசுகிறார்கள். அந்த சொல்லைப் பற்றி ஆராயவும் செய்கிறார்கள். அதனால் அமானுஷ்யம் மட்டும் கோபிநாத் அறிமுகம் செய்தது அல்ல, அதை விட அழகான பல வார்த்தைகளை நான் அறிமுகம் செய்திருக்கிறேன்," என்று படபடத்தவர் மீண்டும் பேசினார்.
"தமிழில் நல்ல தமிழ் கெட்ட தமிழ் என்று எதுவும் கிடையாது. தமிழே நல்ல தமிழ்தான். புலம்பெயர் நாடுகளில் வாழ்பவர்கள் பேசினால் ஆங்கிலத்தில் பேசுவார்கள். அல்லது தமிழில் மட்டுமே பேசுவார்கள். ஆனால் நாம் ஆங்கிலம் கலந்த ஒரு தமிழை பேசுகிறோம். அது மிகப் பெரிய குற்றமாகாது. ஏன் என்றால் எனக்கு ஆங்கிலத்தை விட தமிழ் பலமான மொழி என்பது தெரியும். இதனால் தமிழுக்கு ஒன்றும் ஆகிவிடாது. இது ஒரு செம்மொழி. இதற்கு தன்னை காப்பாற்றி கொள்கிற, தன்னை தற்காத்துக் கொண்டு தன்னை மென்மேலும் வலுப்படுத்திக்கொள்கிற தன்மை உள்ளது. எல்லா இலக்கண அளவுகளும் அதுக்குள்ளேயே இருக்கு. அதனால் இந்த மொழியையெல்லாம் நாம் காப்பாற்ற முடியாது.

மொழிதான் நம்மள காப்பாற்றும். அதனால் யாரும் தமிழில் பேசும்போது நீங்கள் ரொம்ப அருமையாக நல்ல தமிழில் பேசுகிறீர்கள் என்று யாரையும் பாராட்டுவதை முதலில் நிறுத்தனும். ஏனென்றால் அது ஒரு கூடுதல் சிறப்பு மாதிரி தெரிகிறது. தமிழ்நாட்டில் மட்டும் தான் தமிழ் பேசினால் பாராட்டுகிறார்கள். தாய்மொழியை பேசுவதற்கு எதற்கு பாராட்டனும்? ஆங்கிலம் கலந்து தமிழ் பேசுகிறவர்கள் என்ற விமர்சனத்தை ஒரு பக்கம் வைத்து விட்டு முடிந்தவரை தமிழில் பேசுங்கள். தானாகவே மற்றவனும் பேசுவான்.

ரஷ்யன் லத்தீன் மொழியில் பேசனும் என்றுதான் ஆசைப்படுகிறான். ஒவ்வொருவரும் மற்ற மொழிகளின் மீது தீராத காதலோடுதான் இருக்கிறார்கள். அடுத்தவன் வீட்டு மல்லிகை அதிகம் மணக்கும் என்பதுபோல. இது யதார்த்தத்தில் இருக்கக்கூடிய உண்மை. ஏனென்றால் தன் மொழியின் மீது உள்ள ஆளுமை தெரியாதவர்களாக இருப்பதால், இந்த பிறமொழி காதல் உண்டாகிறது. மொழிக்கலப்பு என்பது இப்போது வந்த ஒன்றல்ல. அது கால காலமாக இருந்து வருகிறது. இனிமேலாவது மொழியை உணர்வுபூர்வமான ஒரு சடங்காக பார்க்காதீர்கள். அது கற்றலின் அடிப்படையில்தான் பார்க்கவேண்டியது.

கணனிக்குள் தமிழை கொண்டு வருவது, கணனி வழியாக தமிழை கொண்டுபோய் சேர்ப்பது என்ற காலக்கட்டத்தில நாம் இருக்கிறோம். இப்போ அதைதான் செய்யவேண்டும். அதை விட்டு விட்டு எல்லோரும் செந் தமிழில் பேசுங்கள் என்பதெல்லாம் எவ்வளவு தூரம் சரிபட்டு வரும் என்பது எனக்குப் புரியவில்லை. எனக்கு என் மொழியை அழகாக பேச முடியும் என்கிற ஒரு நம்பிக்கை இருக்கிறது. ரொம்பவும் மொடர்னாக தமிழை பேசமுடியும். அதற்கான முன்னுதாரணங்கள் எவ்வளவோ இருக்கின்றன. மயில்வாகனம், கே.எஸ். ராஜா, அப்துல் ஹமீத் போன்றவர்கள் தமிழில் மிக அழகாக பேசுபவர்கள். இவ்வளவு ஸ்டைலாக எவனுக்கு தமிழ் பேச முடியும்? ஆனால் ஆங்கிலத்தில்தான் அழகாக பேச முடியும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

தமிழ் என்பது ஒரு இசை மொழி. அதைப் பயன்படுத்த வாய்மொழியால் அந்த பழக்கத்தை நீங்கள் உருவாக்கவேண்டும். ஒவ்வொருத்தருக்கும் ஒரு கொள்கை இருக்கிறது. மொழி என்பது புரிதலுக்கானது என்று ஒருத்தன் நினைக்கிறான். மொழி என்பது எனது அடையாளம் என்று இன்னொருத்தன் நினைக்கிறான். மொழி என்பதை அடையாளமாக நினைப்பவன் மற்றவனுக்கு அந்த உணர்வை ஏற்படுத்தவேண்டும்.

நான் மொழியை எனது அடையாளமாக நினைக்கவில்லை. என் மொழி மற்ற மொழிகளை விட சிறப்பானதாக இருப்பதனால் நான் தமிழில் பேசுகிறேன். எனினும் இந்த சிறப்பை ஒரு தகுதியாக பார்க்கவேண்டிய அவசியமில்லை. இதை சிறப்பு தகுதியாக பார்க்கவேண்டும் என்பதுதான் எனக்கு பிரச்சினையாக தோன்றுகிறது," என்ற கோபி செல் மணியடிக்க ஒரே வரியில் பதிலளித்துவிட்டு நம்மிடம் தொடர்ந்தார்.
"நிறைய தேடல் என்னிடம் இருக்கிறது. ஸ்கிரிப்ட் எழுதி வைத்து பாடமாக்கி பிறகு கெமராவுக்குள் முன்பாக சொல்வது என் அகராதியிலேயே கிடையாது. டைரக்டர் விசயத்தை சொல்வார்,நான் அதை உள்வாங்கி கொண்டு பேச ஆரம்பிப்பேன் அவ்வளவுதான். என்னிடம் ஸ்கிரிப்ட் தந்தால் எனக்கு பேச்சே வராது", என்றவரிடம், உங்களுக்கு மற்றவர்களின் தாக்கம் இருக்கிறதா என்று வினவினோம்.

"நான் ஒன்றும் சுயம்பு இல்லை நிறைய பேரின் தாக்கம் எனக்குள் இருக்கிறது மனிதனே குரங்கோட தாக்கம்தானே!
இத்தனை நூற்றாண்டுகளுக்கு பிறகும் மனிதன் குரங்கின் தாக்கமாகத்தானே இருக்கிறான். ரவி பெர்ணாட்சாவில் தொடங்கி, கே.எஸ்.ராஜா, உதுமான்கனி, அப்துல் ஹமீது என்று எல்லோருடைய தாக்கமும் எனக்குள் இருக்கிறது. இதை தாண்டி முன்னால் உள்ள டீக் கடையில் கறிவேப்பிலை விற்கிற பாட்டி, பக்கத்து கடையில் வடை சுடுகிற அண்ணன், பரோட்டா மாஸ்டர் இவங்களுடைய தாக்கமும் என்னிடம் இருக்கிறது. தாக்கம் என்பது பெரிய மனிதர்கள், தலைவர்கள் ஏற்படுத்துவது அல்ல. எதிர்வீட்டுக்காரராகவோ, பக்கத்து வீட்டுக்காரராகவோ கூட இருக்கலாம்," என்றவரிடம் உங்களின் நிகழ்ச்சிகள் சிலவற்றில் உலக நாயகன் கமலை நீங்கள் கொஞ்சம் அதிகமாக புகழ்வதாக தெரிகிறதே என்று கோபியின் வாயைக் கிளறினோம். விழிகளை அகல விரித்த கோபி எம்மை நிமிர்ந்து பார்த்தார்.

"தமிழ் திரையுலகில் ஐம்பது ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ள ஒரு பெரிய கலைஞன். இந்தப் படம் ஓடுமா ஓடாதா என்று ஒரு சாதாரண ரசிகனுக்குத் தெரியும்போது அது கமலுக்கு தெரியாதா? ஆனால் அப்படியும் அவர் அதில் சில ரிஸ்க் எடுக்கிறார் என்றால் தான் நிற்கிற ஊடகத்தின் வழியாக ஒரு தகவலை சொல்ல வேண்டும் என்கிற தவிப்பு அவரிடம் இருக்கிறது. அந்த வகையில் அவர் பாராட்டுக்குறியவர்," என்று சொல்லி தமது நேர்காணலை கோபிநாத் நிறைவு செய்தார்.


Sunday, February 10, 2013

இனி அவன் நாயகி சுபாஷினியுடன் ஒரு ஸ்பெஷல் சந்திப்பு


'இனி அவன்' இலங்கைத் தமிழ்ப் படத்தின் மூலம் இலங்கை தமிழ் சினிமாவில் களமிறங்கி இருக்கும் இளமை துள்ளும் இனிமையான நடிகை சுபாஷினி. தென்னிந்திய, இலங்கை சிங்கள சினிமா, தொலைக்காட்சி நாடக வாய்ப்புகள் தம்மை தேடி வந்தாலும் ரொம்பவும் கவனமாக வாய்புகளைத் தேர்வு செய்து அம்மா, அப்பாவுடன் கலந்தாலோசித்தே முடிவுகளை எடுப்பதாக கூறுகிறார் சுபா.
"நமக்கென்று ஒரு கலாசாரம் பண்பாடு இருக்கிறது. அதற்கு அமைவாகவே நடந்துகொள்ள வேண்டும் என்பதில் ரொம்பவும் கவனமாக இருக்கிறேன். இயக்குனர் அசோக ஹந்தகமை என்னிடம் நடிக்கச் சொல்லி கேட்டப்போது என் பெற்றோரிடம் அனுமதி பெற்ற பிறகே ஓகே சொன்னேன்" என்கிறார் சுபாஷினி.


இலங்கை சிங்கள பட உலகில் அசோக ஹந்தகம சர்ச்சைக்குறிய இயக்குநர். இவர் இயக்கிய ஒரு படம் இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளது. ஏனைய படங்கள் சர்ச்சைக்குரியனவாக சிங்களக் கலையுலகில் பேசப்படுவை. இவரது சிந்தனைப் போக்கு பலருக்கு புரிவதில்லை. சிலர் புரிந்துகொள்ள முயல்வதில்லை. வித்தியாசமான பார்வை கொண்ட ஒரு இயக்குநர் இவர். இவர் கையால்தான் சுபாவுக்கு மோதிரக்குட்டு கிடைத்திருக்கிறது!
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர் இயக்கி வெளியிட்டு இருக்கும் தமிழ் படமான 'இனி அவன்' மண் திரைப்படத்தின் பின்னர் தமிழ்த் திரையுலகுக்கு மீண்டுமொரு எழுச்சியை உருவாக்கி இருக்கிறது. அதற்காக படத்தில் உள்ள குறைகளை எல்லாம் தவிர்த்து விட்டு அசோகவை பாராட்டலாம். ஒரு சிங்களவர் தமிழ்த் திரைப்படமொன்றை இயக்கி வெளியிட முன்வந்ததே பெரிய விஷயம்தான்.

"இயக்குனர் அசோகவின் படத்தில் நடிப்பதை கேள்விப்பட்ட சிலர் அவர் படத்திலா? என்று கேட்டார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் அவர் ரொம்பவும் நல்ல இயக்குநர்" என்று அசோக ஹந்தகமவுக்கு நற்சான்றிதழ் கொடுக்கிறார் சுபாஷினி.

இந்த இளம் நடிகையின் பிறப்பிடம் கொழும்பு வத்தளை. ஆரம்பத்தில் நேத்ராவில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக தொடங்கிய பயணம் சக்தியில் சங்கமித்து இப்போது வசந்தம் டீ.வியில்... வர்ண ஜாலம் காட்டுகிறது இவர் குரல்.
இனி அவன் பட வாய்ப்பு பற்றி சுபாஷினி எம்மிடம் பேசினார்.
"'யா' டிவியில் 'கண்ணகிபுரம்' என்ற ஒரு நாடகம் தயாரித்தார்கள்.  அதில் 'சுபா'என்ற பாத்திரத்தில் நான் நடித்தேன். அந்த நாடகத்தின் இணை இயக்குநராக இருந்தவர் வத்தீஸ் வருண். அவரும் அப்போது வசந்தம் டீவியில் பணியாற்றி; கொண்டிருந்தார். அவர் என்னிடத்தில் சினிமாவில் நடிக்க ஒரு கதாநாயகியை தேடுகிறார்கள்... உங்கள் பெயரைக் கொடுக்கவா என்று கேட்டார். நான் அம்மா, அப்பாவிடம் கேட்டு,விட்டு; சொல்கிறேன் என்றேன். அதோடு அந்த விசயத்தை நானும் மறந்து விட்டேன். பிறகு ஒரு நாள் நான் அலுவலகம் விட்டு வெளியே வரும்போது ஒரு காரில் இருந்த இருவர் என்னை கை காட்டி அழைத்தார்கள். நான் பயத்தில் உள்ளே ஓடி ஒளிந்து விட்டேன். சக ஊழியர்களிடம் காரில் வந்தவர்கள் என்னை அழைக்கிறார்கள் என்று விஷயத்தைச் சொன்னேன். என்னை பஸ் தரிப்பிடம் வரை வந்து விடுங்கள் என்று கேட்டேன். அப்போது அங்கே வந்த வதீஸ் வருண் காரில் வந்திருப்பவர்தான் இயக்குநர் அசோக ஹந்தகம என்ற விபரத்தை சொன்னார். என் பயமும் தெளிந்தது.

வெளியே வந்த என்னைப் பார்த்த ஹந்தகம"இந்தப் பொண்ணு அந்த வேடத்துக்கு பொருந்தாது. ஏன் என்றால் போரில் பாதிக்கப்பட்ட ஒரு பெண் இப்படி ஹேர் ஸ்டைல் பண்ணியிருக்க மாட்டாள். நீங்க ஹேர் ஸ்டைலை சாதாரணமாக மாற்றினால் நடிக்கலாம்"என்றார் என்னிடம். அதன் பின்னர் ஹந்தகம தந்த திரைக் கதையை வாங்கிச் சென்று அம்மாவிடம் கொடுத்து படித்து பார்க்கச் சொன்னேன்.
ஆரம்பத்தில் என் வீட்டார் எவருக்கும் நான் சினிமாவில் நடிக்க போவதில் இஷ்டம் இல்லை. கதையை பார்த்த பிறகு அம்மா ஓகே சொல்ல என் கேச ஸ்டைலையும் மாற்றி இனி அவனில் நாயகி ஆனேன்"என்று விவரம் சொன்னார் சுபா.

"இனி அவன் படப்பிடிப்பு முழுவதையும் யாழ்ப்பாணத்திலேயே நடத்தி இருக்கிறார்கள். மொத்தமாகவே பட்டப்பிடிப்புக்கு பத்து நாட்கள் பிடித்தன. அதிகாலையில் தொடங்கும் படப்பிடிப்பு நள்ளிரவு ஒரு மணி வரை நடைபெறும். எனக்கும் இது முதல் படம் என்பதால் புது அனுபவம். படத்தில்  வசனங்கள் குறைவாக இருந்ததால் நிறைய டேக்குகள் போகவில்லை," என்று சொல்லும் சுபாஷினி, படப்பிடிப்பில் நடந்த சில சுவாரஷ்யமான சம்பவங்களை எம்முடன் பகிர்ந்து கொண்டார்.

"ஒரு காட்சியில் நான் தூணில் தலை முட்டிக்கொண்டு அழவேண்டும். அதற்காக ஒரு தூணை செட் போட்டு நான் தலையை முட்டும் அந்த இடத்தில் 'ரெஜிபோம்' ஒட்டி பெயிண்ட் செய்து இருந்தார்கள். ஆக்ஷன் சொன்னதும் நான் வேகமாக சென்று தூணில் மோதினேன். 'டமார்'என்ற சத்தம்! என் நெற்றி அடிபட்டு வீங்கி விட்டது. காட்சி இயற்கையாக வரவேண்டுமே என்ற ஆர்வத்தில் ரிஜிபோமில் சரியாக முட்டாமல் தூணில் முட்டியதால் வந்த வினை இது! அதனால் அன்று படப்படிப்பு ரத்தானது.

படத்தின் மற்றொரு காட்சியில் நான் ஓடி வரும்போது இரண்டு பக்கமும் தீப்பற்றி எரிவதாக காட்டியிருப்பார்கள். அந்தக் காட்சியில் நான் ஓடி வரும்போது தடுக்கி கீழே விழுந்து விட்டேன். அய்யோ திரும்பவும் ஆரம்பத்திலிருந்தே ஓடி வரவேண்டுமே என்று நினைத்தபோது இயக்குநர் அசோக்க, 'நீ கீழே விழுந்து வந்ததுதான் நல்லா இருக்கு. அதனால் திரும்பவும் விழுந்து விழுந்து ஓடி வா' என்றார். அந்த காட்சியில் நடித்து முடித்த போதுதான், இதற்கு கீழே விழாமலேயே இருந்திருக்கலாமே என்று நினைத்தேன்."

'இனிஅவன்'படத்தின் சிறப்புக் காட்சியை அம்மாவுடன் சென்று பார்த்த சுபாஷினிக்கு தான் வெள்ளித் திரையில் தோன்றியதைப் பார்க்க பெரிய ஆச்சரியமாக இருந்ததாம். அம்மாவின் பாராட்டு தனக்கு இரட்டை சந்தோஷத்தை கொடுத்ததாக மகிழும் சுபாஷினியின் ரோல்மாடல் நடிகை ப்ரியாமணிதானாம். துடுக்குத்தனமாக பருத்தி வீரனில் நடித்திருக்கும் ப்ரியாமணியைத்தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்று சொன்ன சுபா, கடந்த வானவில் இதழில் வெளியாகி இருந்த ப்ரியாமணி ஆல்பத்தை தடவிக் கொடுத்து முத்தமிடவும் செய்தார்.

"நான் வத்தளை புனித அன்னம்மாள் பாடசாலையில் கல்வி கற்றப்போது பள்ளி விடுமுறை நாட்கள் நெருங்கிக் கொண்டிருந்த நேரம் அது. வகுப்பில் டீச்சரும் இல்லை, சிஸ்டரும் இல்லை. எனக்கு ஒரே குஷி. உடனே வகுப்பறை பெஞ்சுகளை ஒதுக்கி வைத்து விட்டு வகுப்பறையை குட்டி மைதானமாக்கி விட்டு அங்கே இருந்த ஒரு மேசையின் பழகையை கழற்றி எடுத்து பேட் மாதிரி செய்து நண்பிகளோடு கிரிக்கெட் விளையாடினேன். நண்பி வீசிய பந்தை நான் விலாசித்தள்ள, பந்து கூரையில் தொங்கி கொண்டிருந்த அந்த லொட லொட ஃபேனில் பட்டு ஃபேனின் ஒரு சிறகு கழன்று விழுந்தது.

நானும் நண்பியும் அதிர்ந்து போனோம். அடுத்த நிமிடம் அந்த விடத்தை விட்டு எஸ்கேப். பிறகு அடுத்த நாள் காலையில் எங்களின் வகுப்புக்கு வந்த கமலா சிஸ்டர் முதல் நாள் நடந்த கூத்துக்களை குடைய ஆரம்பித்தார். நானும் நண்பிகளும் மேசையை சேதப்படுத்தியதை மட்டும் ஒப்புக்கொண்டோம். ஃபேனை நாங்கள் உடைக்கவில்லை என்று சத்தியம் செய்தோம். எங்கள் மீது சிஸ்டருக்கு நம்பிக்கை வரவில்லை. அதனால் எங்களை மண் தரையில் முட்டிப் போட்டு உட்கார செய்து விட்டார். ஃபேனை உடைத்தவர் உண்மையை ஒத்துக்கொண்டால் எழும்பிப் போகலாம் என்றார். நாங்களும் பிடிவாதமாக மூன்று மணி நேரம் அப்படியே முட்டி போட்டிருந்தோம். சிஸ்டருக்கு எங்கள் மீது இரக்கம் வந்து எழும்பி போக சொல்லி விட்டார். உண்மையில் ஃபேனை உடைத்தது நான்தான் என்று புன்னகைக்கிறார் சுபாஷினி. அவரின் புன்னகை 'நாங்கள் அப்பவே அப்படி' என்பது போல இருந்தது.