Monday, May 5, 2014

கொழும்பின் சைவ உணவக வரலாறு -5

"ருசியான உணவை சாமானியனும் சாப்பிட வேண்டும் என்பதே என் வர்த்தக லட்சியம்"


கோல்டன் கபே ராமனுடன் ஒரு விரிவான உரையாடல்


மணி  ஸ்ரீகாந்தன்

கோல்டன் கபே ராமனின் குலதெய்வத்தின் பெயர் அக்னி அம்மாள். திருநெல்வேலி மூலைக்கரைப் பட்டியில் குடியிருக்கும் காவல் தெய்வம்.

"எனக்கும், என் குடும்பத்திற்கும் நல்லது கெட்டதுன்னா எல்லாத்தையும் அக்கினி அம்மாளிடம்தான் பகிர்ந்து கொள்வேன். அவள்தான் எங்கள் குடும்பத்தைக் காக்கும் கடவுள். நான் ஒரு நல்ல நிலைக்கு உயர்ந்த பிறகு அக்கினி அம்மாளின் கோயிலை மாற்றியமைக்க வேண்டும் என்று என் மனதில் ஒரு தீர்மானம் போட்டேன். அதன்படியே அக்கினி அம்மாள் எனக்கு வழிவிட, பிற்காலத்தில் என் குலதெய்வம் அக்னி அம்மாளின் கோவிலுக்கு திருப்பணி செய்யும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது" என்று சொல்லும் போதே ராமனின் கண்கள் பனிக்கின்றன. சைவ உணவகம் பற்றிய சில கேள்விகளை ராமனிடம் முன் வைத்தோம்.
"உணவகங்களில் வளர்ச்சி கொழும்பில் எப்படி தொடங்கியிருக்கும்?" என்பதே நாம் தொடுத்த முதற் கேள்வி.

"உணவகங்களின் தொடக்கம், கொழும்பில் தற்செயலாக அமைந்ததாகத்தான் இருக்க வேண்டும். ஏனென்றால், கொழும்பிற்கு தூர இடங்களிலிருந்து வேலைக்கு வந்த தொழிலாளர்களுக்கு உணவை சமைத்து சாப்பிட கால அவகாசம் இல்லை. அதனால், கொழும்பில் இருந்த வீடுகளில் உணவை தயாரித்து அந்த தொழிலாளர்களுக்கு கொடுத்திருப்பார்கள். பிறகு படிப்படியாக வேலையாட்கள் அதிகரிக்கவே தயார் செய்யப்பட்ட உணவுத் தேவையும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கலாம். அதன் பிறகே சிறிய கொட்டில்களில் தொடங்கப்பட்ட உணவகங்கள் இன்று பெரிய ஸ்டார் ஹோட்டல்கள் அளவுக்கு உயர்ந்திருக்க வேண்டும" என்ற ராமனிடம்,

சகல வசதிகளுடன் கூடிய சைவ உணவகம் அமைக்கும் உத்தேசம் கொழும்பு சைவ உணவக உரிமையாளர்களுக்கு இருக்கிறதா? யாழ்ப்பாணத்தில் வசதியான முழு அளவிலான சைவ உணவகம் இல்லை. அங்கு சமைக்கும் உத்தேசம் உள்ளதா? என்பதே நாம் தொடுத்த  அடுத்த கேள்வி.

"யாழ்ப்பாணத்தில் சைவ உணவகம் நடத்த எனக்கு அழைப்பு வந்தது. ஆனால் என்னால் அதை பொறுப்பேற்று நடத்த முடியாத சூழலில் இருக்கிறேன். ஏனென்றால் ஒரு பார்ட்னருடன் இணைந்து ஒரு தொழிலை நேர்த்தியாக செய்ய முடியாது. அதனால் அதை தவிர்க்கிறேன். உயர்தரமான ஒரு சைவ உணவகம் அமைக்கலாம்தான். ஆனால் அதில் ஐந்து இடியப்பம் ஒரு சாம்பாரையும் நூற்றி ஐம்பது ரூபாவுக்கும் ஒரு தோசை இருநூற்றி ஐம்பது ரூபாவுக்கும் விற்க வேண்டியிருக்கும். அப்படி விற்றால்தான் கட்டுபடியாகும்.

அந்த உணவை ஒரு சாதாரண ஏழையால் சாப்பிட முடியாது. காரில் வந்திறங்கும் பணக்காரர்கள் மட்டுமே பயனடைவார்கள். எனவே ஏழைகள் பயனடையாத ஒரு உணவகத்தை நடத்துவதில் எனக்கு துளிகூட உடன்பாடில்லை. நான் நடத்தும் ஹோட்டலில் ஏழையும், பணக்காரர்களும் சாப்பிட வேண்டும். சாப்பாடும் தரமாக இருக்கும். அதுவே எனக்கு மகிழ்ச்சி. பணத்துக்கு ஆசைப்பட்டு பெரிய த்ரீ ஸ்டார் சைவ உணவகத்தை தொடங்கி சாதாரண மக்களின் அன்பை இழக்க நான் விரும்பவில்ல" என்கிறார் ராமன். பாருங்கள், வர்த்தகத்திலும் அவர் சோஷலிஸ்டாகவே இருக்க விரும்புகிறார்.
நம்மைப் போல அல்ல தமிழகத்தில் அவர்கள் ஒரு முறையில் சாப்பிடுவார்கள். சைவ உணவை எந்த முறைப்படி சாப்பிட வேண்டும் என்பதை சொல்லித்தர முடியுமா?

"அது ரொம்ப சின்ன விஷயம். முதலில் சாதத்தைப் போட்டு அதனோடு சாம்பார் சேர்த்து சாப்பிடணும் அதன் பிறகு ரசம், சேர்க்கணும் அப்புறம் மோர், பிறகு கடைசியாக பாயாசம் சாப்பிட வேண்டும். இதில் ஒரு விசயத்தை நீங்கள் கவனிக்கணும்.

ஒரு முழுமையான சைவ உணவு என்பது சாம்பார், ரசம், மோர், கூட்டு, பொரியல், அவியல், பப்படம், மோர் மிளகாய், ஊறுகாய், பாயாசம் உள்ளிட்டவை அடங்கும். இந்த சாப்பாட்டு முறைதான் தமிழகத்திலும் நம் நாட்டிலும் இன்றுவரை இருந்து வருகிறது. சாப்பிடும் போது முதலில் சாம்பாரோடு, கூட்டு, பொரியல், அவியல் உள்ளிட்ட கறி ஐட்டங்களை சேர்த்துக் கொள்ள மறக்க வேண்டாம். அதோடு பப்படம், மோர் மிளகாய், ஊறுகாயையும் தொட்டுக் கொள்ளுங்கள். குழம்பு வகைகளை இங்கே கறி என்றுதான் பொதுவாக அழைக்கிறார்கள். ஆனால், தமிழகத்தில் கறி என்றால் அது இறைச்சி வகையை குறிக்கிறது. எனவே தமிழகத்திற்கு செல்பவர்கள், சைவ உணவகங்களில் கறி என்று கேட்காதீர்கள். அப்புறம் பிரச்சினை ஆகிவிடும்" என்று சொல்லி சிரிக்கிறார் ராமன்.

தமிழர்களை விட சைவ உணவகங்களுக்கு சாப்பிட வருபவர்கள் சிங்களவர்களா? அவர்கள் அதிகம் விரும்பி உண்பது என்ன?

"ஆமாம், தமிழர்களை விட சிங்களவர்கள்தான் அதிகமாக சைவ கடைகளுக்கு வருகிறார்கள். அவர்கள் சோறு சாப்பிடுவது ரொம்பவும் குறைவு. இட்லி, தோசை, பூரி போன்றவற்றை விரும்பி சாப்பிடுவார்கள். அவர்கள் முக்கியமாக உணவின் தரத்தையும் கடையின் சுத்தத்தையும் ரொம்பவே எதிர்பார்ப்பார்கள். அதை நான் முடிந்தளவிற்கு பூர்த்தி செய்திருக்கிறேன்" என்கிறார் ராமன் பூரிப்போடு.

மரவள்ளி, பொலஸ், சர்க்கரை வள்ளி, வாழைப்பூ, கொஹில போன்ற பண்டங்களை சைவ உணவில் ஏன், சேர்ப்பதில்லை?

"அப்படி அல்ல. கட்டாயம் நீங்கள் குறிப்பிட்ட வகைகளை சைவ உணவில் சேர்க்கிறோம். ஆனால் வாரத்திற்கு ஒரு முறைதான். நீங்கள் குறிப்பிட்டவற்றில் ஒன்று உணவில் இடம்பெறுமாறு பார்த்துக்கொள்கிறோம். அதனால் உங்களுக்கு அவை பற்றித் தெரியவில்லை. மேற்கூறிய உணவு வகைகளை தினசரி சாப்பாட்டில் சேர்த்தாலும் வாடிக்கையாளர்கள் முகம் சுழிப்பார்கள். அதனால் வாரத்திற்கு ஒருமுறை என்று தீர்மானித்து இருக்கிறேன். அதோடு நல்ல பொலஸ் கிடைப்பது அரிது அப்படி கிடைத்தால், சமைப்போம், கோலிபிளவர் மலிவாகக் கிடைக்கும் காலத்தில் அதனையும் சேர்த்துக் கொள்கிறோம்" என்ற ராமன், "மலிவு விலையில் தரமான உணவுகள் கிடைத்தால் சமைத்துக் கொடுக்கலாம். அதற்காக அதிக விலையில் உணவுப் பொருட்களை வாங்கி விலையையும் கூட்டி வாடிக்கையாளரை கஷ்டப்படுத்தக் கூடாது" என்று திரும்பவும் சோஷலிசம் பேசினார்.
வெஸ்ட்டன், சைனீஸ் சமையலுக்கு கற்கை நெறிகள் உள்ளன. சைவ உணவகத்துக்கு, குறிப்பாக சமையல் கலைக்கு இந்தியாவிலாவது கற்கை நெறி உள்ளதா? பார்த்துப் பழகும் அனுபவ குக்கிங்தான் இன்றைக்கும் உள்ளதா? என்ற ஒரு பெரிய சந்தேகத்தை கிளப்பினோம்.

"சைவ உணவில் பெரிய மாற்றங்கள் ஏதும் இன்றுவரை ஏற்பட்டதில்லை. தமிழர் பாரம்பரிய முறையிலேயே அவை இன்று வரை சமைக்கப்பட்டு வருகிறது. அதனால் சைவ உணவிற்கான கற்கை நெறிகள் என்று ஏதும் இல்லை. இனியும் வரப்போவதுமில்லை. சைவத்தை புதுசுக்கு மாற்ற முடியாது. சைவம் என்றால் வாழை இலைதான். அதற்காக புதுசுக்கு மாறுகிறோம் என்று பிளாஸ்டிக் இலைகளை போட்டால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சூடு பறக்க வாழை இலையின் மனத்தோடு சோறு சாப்பிடவே எல்லோரும் விரும்புகிறார்கள் என்று ஒரு நியாயமான விளக்கம் தந்தார் ராமன்.

வாழை இலை, சோறு, சூடு, வாசம் நினைத்தாலே இனிக்கிறதா.... உடனே கோல்டனுக்கு போய் சாப்பிட்டு பாருங்க...

( சுபம்)

Sunday, May 4, 2014

வேடந்தாங்களில் அதிரும் பறை 04

"காஞ்சி சங்கர மடம் ஒரு காலத்தில் பௌத்த மடமாக இருந்ததாம்"


மணி  ஸ்ரீகாந்தன்

'நெருப்புச் சூட்டில் பறை மேளம்
நேசத்தோடு சிரிக்குது
நெஞ்சு கூட்டில் உந்தன் முகம்
நெதமும் என்னை வதைக்குது
வட்ட நிலா வட்டப்பறை வட்டப்பொட்டு
அதை வச்சிட மாட்டியா என்னை தொட்டு'


என்ற மணிமாறனின் பாடல் வரிகளோடு, மகிழினியின் குரலும், பறையோசையும் காஞ்சிபுரம் வேடந்தாங்கல் பகுதியை அதிரவைத்துக் கொண்டிருக்க,

புத்தர் கலைக்குழு என்ற பெயர் எப்படி வந்தது என்ற எமது சந்தேகத்தை மணிமாறனிடம் கேட்டோம்.
"நான் வாழ்கிற இந்த காஞ்சிபுரம் மாவட்டம் பௌத்த வரலாற்றை பின்னணியாகக் கொண்டிருப்பதற்கான நிறைய ஆதாரங்கள் உள்ளனகாஞ்சி சங்கரமடம் முற்காலத்தில் பௌத்த பீடமாக இருந்ததாகவே சொல்கிறார்கள். அதோடு உலகத்தினுடைய மானுட சிந்தாந்தத்தை வலியுறுத்திய தலைவனாக புத்தர் விளங்குகிறார்.

இன்றைக்கு மணிமாறன் பேண்ட், சட்டை போட்டு ஏன் நீங்க்ள கூட காலுக்கு காலணி போட்டு நாற்காலியில் சரிசமமாக நாம் உட்கார்ந்து பேசுவதற்கு டாக்டர் அம்பேத்கார்தான் காரணம். அவர் இல்லையென்றால் நான் இன்று தமிழ் நாட்டில் ஒரு மூலையில் செத்த மாட்டுக்கு தோல் உரித்திருப்பேன். அல்லது மலம் அள்ளியிருப்பேன். அந்த மகத்தான புத்தனை தமது ஆசான் என்கிறார் அம்பேத்கார். அம்பேத்காருக்கு முன்னோடியாக இருந்தவர் அயோத்திதாச பண்டிதர். அவரின் உறவினர் பெயர் ரெட்டை மலை சீனிவாசன். அவரின் வீடு இங்கிருந்து (வேடந்தாங்கல்) 7 கிலோமீட்டர் தள்ளித்தான் இருக்கிறது. இப்படி யார் யாரெல்லாம் சாதி என்கிற சிறைக்கம்பியை உடைத்து என்னை வெளியே எடுத்தார்களோ, அவர்கள் எல்லோருக்கும் புத்தனை பிடித்திருக்கிறது. அதனால் எனக்கும் பிடித்தது. இங்கே இருக்கிற இசைக்குழுக்கள் மாரியம்மா, செல்லியம்மா, ஒண்டி வீரன், கருப்புசாமின்ணு பெயர் வைக்கும் போது நான் ஏன் புத்தர்ணு வைக்கக் கூடாது?
நிறையப் பேர் ஜீசஸ் கலைக்குழுன்ணு வச்சிருக்கலாமே என்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒரு உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும். இயேசுவுக்கு புத்தன் தாத்தா. இந்திய பெருநிலத்தில் பிறந்தவன். இயேசு இந்தியாவுக்கு வந்த போது பௌத்தத்தை அறிந்து கொண்டதாக ஒரு செய்தி இருக்கிறது. அதோடு புத்தன் என் சொந்தக்காரன். என் பாட்டன். அவரின் பெயரை வைத்ததில் எனக்கு மகிழ்ச்சிதான்" என்று மணிமாறன் சொன்ன போது அவரின் முகத்தில் ஒரு பூரிப்பு பிரகாசமாக...

நீங்கள் கடந்து வந்த பாதையில் அவமானங்களை சந்தித்திருக்கிறீர்களா...? என்று கேட்டோம்.

"நான் கடந்து வந்த பாதை கரடு முரடானது. அதில் அவமானங்கள்தான் அதிகம். அவமானத்தின் அடையாளம் என்று ஆதி கருவியை சாதிக் கருவியாக ஒதுக்கிய இந்த சமூகத்திடமே மீண்டும் அந்த பறையைக் கொண்டு சென்றிருக்கிறேன் என்றால் நான் எவ்வளவு அவமானங்களைக் கடந்திருப்பேன்!" என்று சொல்லி பெருமூச்சோடு நிறுத்திய மணிமாறன் சில நிமிட அமைதிக்குப் பிறகு மீண்டும் தொடர்ந்தார்.
"அசிங்கத்தையும் ஆபாசத்தையும் பேசினால் ஆயிரம் பேர் கூடுவார்கள் கேட்பதற்கு. ஆனால் அம்பேத்கர் பற்றி பேசினால் இரண்டு தலைதான் தெரியும். எனினும் நான் இந்த சமூகத்தை விடவில்லை. என்னை விட்டால் இவர்களுக்கு ஒரு நாதியும் இல்லை என்று நினைத்து மனதை திடப்படுத்திக் கொண்டு, தொடர்ந்து பயணிக்கிறேன். அவமானங்களால் நான் சோர்ந்து விடவில்லை" என்று சொல்லும் போது அந்த வார்த்தைகளில் இந்த பாழாய்ப் போன சமூகத்தை சிந்தனையோட்டத்தை மாற்றத் துடிக்கும் ஒரு வெறி தீயாக எரிவதைப் பார்க்க முடிகிறது.
 புத்தர் கலைக்குழுவின் பறை இசைப்  பயிற்சி வகுப்புகளில் வழங்கப்படும் முதல் பயிற்சியே, மாட்டுத் தோலை தொட்டு எடுத்து வட்டத்தில் வைத்துக் கட்டுவதுதான்.

"இறந்த மாட்டின் துர்நாற்றம் அடிக்கும். தோளிலிருந்து பிறப்பதுதான் பறை என்பதையும், அதனை கட்டுவது எவ்வளவு சிரமமானது என்பதையும் புரிய வைப்பதற்காகத்தான் அப்படி ஒரு பயிற்சியைக் கொடுக்கிறேன். அந்தப் பாடத்தை பூர்த்தி செய்த பிறகுதான் அவர்கள் கையில் சிண்டு குச்சியும், அடிக்குச்சியையும் கொடுத்து பறை முழங்க வைப்போம்" என்று சொல்லும் மணிமாறனுக்கு பக்க பலமாக அவரின் மகன்கள் இனியனும், சமரனும் இருக்கிறார்கள். பறை இசையில் அப்பாவை மிஞ்சு விடுமளவுக்கு பறையை பிய்த்து உதறுகிறார்கள்.

"பறையில் எந்தளவிற்கு அடி, அடி என்று சொல்கிறேனோ அந்தளவிற்கு படி, படின்ணு சொல்கிறேன். அதே மாதிரி நன்றாக படிக்கிறார்கள். படிப்பில் பட்டம் பெற்ற பின்பும் பறை இசைப்பார்கள்" என்று நம்பிக்கையோடு பேசும் அவர் பறை ஆட்டத்திற்கான சில தாள வகைகளையும் குறிப்பிட்டார்.

'தக்கு உக்கு தா
தக்கு உக்கு தக்கதின்
ஜங் ஜங் நகுரி நகா'

இவற்றோடு ஒத்தையடி என்பது,

'தும் தக்கு.....தா.....தக்கு
தா தக்கு.... தா.... ஜன ஜன
தும் தக்கு..... தா.....தக்கு.....தா'

அவரின்  தாளக்கட்டு
கேட்பவரை ஆட்டம் போடத்தான் செய்கிறது.
எமது இந்த உரையாடலுக்கு இடையில் இணைந்து கொண்டவர், வனவேந்தன். ஓசூரிலிருந்து தனது ஏழு வயது மகனையும் அழைத்து வந்திருந்தார்.

"நான் அண்மையில் வேப்பேரி பெரியார் திடலுக்கு போயிருந்தேன். அங்கே விடுதலை பத்திரிகையை பார்த்த போது அதில் மணிமாறனின் பறை  இசை பற்றிய விளம்பரம் வந்திருந்தது. இந்த இசையை எனக்கு பிறகு அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகத் தான் என் மகனையும் அழைத்து வந்தேன்" என்று சொல்லும் வனவேந்தன் ஒரு பெரியாரிஸ்ட். அதாவது பகுத்தறிவுவாதி.

பறை கற்க வந்திருந்த மதுரையை சேர்ந்த சமுத்திர பாண்டியன், "நான் இப்போ இரண்டாவது தடவையாக பறை இசை படிக்க வந்திருக்கேன். வேப்பேரி
பெரியார் திடலில் நடந்த பறை வகுப்பிலும் கற்றேன். இன்னும் நிறைய பறை நுட்பங்களை தெரிந்துகொள்ள வேண்டும்" என்று ஆர்வத்தோடு பேசும் அந்த இளைஞனை பார்க்க எமக்கு வியப்பாக இருந்தது. தமிழகத்தில் மணிமாறன் செய்து வரும் சேவையை பாராட்டியபடி வேடந்தாங்கலில் இருந்து பறந்தோம்.

(முற்றும்)

Saturday, May 3, 2014

சினிமானந்தா பதில்கள்-13

மான் கராத்தே ஊத்திக்கிச்சாமே? 

எம். எஸ். எப். சுக்னா, காத்தான்குடி

சகிக்கவில்லை அதனால்தான் ஊத்திக் கொண்டது. நகைச்சுவை என்ற பெயரில் நையாண்டி செய்திருக்கிறார்கள். தமிழ் சமூகம் எந்த அளவுக்கு மானம் இழந்த சமூகமாக மாறி வருகிறது என்பதற்கு இந்த திரைப்படம் ஒரு சான்றாக அமைந்துள்ளது. கதாநாயகியை திருமணம் செய்ய வேண்டுமானால்
பத்து திருக்குறள் தெரிந்திருக்க வேண்டும் என்று ஒரு போட்டியாம். பத்து திருக்குறள் கூடத் தெரியாமல் ஒரு பெரிய கூட்டமே நாயகியின் வீட்டின் முன் வரிசையில் நிற்கிறது. அந்தக் கூட்டம் திருக்குறளை மனப்பாடம் செய்து கொண்டிருப்பதாக காட்டப்படுகிறது. ஆனால் ஒரு குறளை கூட

அவர்களால் சொல்ல முடியவில்லை.

அதில் ஒருவரின் குறள் இது.

'ஆட்டலில் சிறந்த ஆட்டல் மாவாட்டல் அவ்வாட்டல் ஹோட்டலில் ஆட்டப்படும்'

இப்படி யாராவது திருக்குறள் சொல்வார்களா. இது திருக்குறளை திட்டமிட்டு அவமதிக்கும் செயல் அல்லவா?
கதாநாயகனுக்கு திருக்குறள் என்றால் என்னவென்றே தெரியவில்லை அதற்குப் பதில் 10 பேரின் குரல்களை மிமிக்ரி செய்கிறார். தமிழ் நாட்டில் பஸ்ஸில் கூட திருக்குறள் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருக்குறள் பற்றி எதுவுமே தெரியாது என்று கூறுவது தமிழ் சமூகத்தின் மீது வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாக உள்ளது.

அதே நேரம் திருக்குறளை எழுதியவர் வைரமுத்து, குறளரசன் என்றும் கூறுகிறார்கள். இப்படி சொல்பவர்கள் தமிழர்களா என்று சந்தேகமல்லவா ஏற்படுகிறது!

அக்காட்சியின் இன்னொரு இடத்தில் திருக்குறள் அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால் என்று மூன்று வகைப்படும் என்கிறார் ஒருவர். உடனே நாயகன் அப்ப அந்த அமலா பால் என்று நையாண்டி செய்கிறார். அருகில் இருக்கும் பெண் காமத்துப்பால் என்றால் என்ன என்று கேட்கையில் அது ஆண்பால் + பெண்பால் கூட கொஞ்சம் பாதாம் பால். அதுதான் காமத்துப்பால் என்கிறார். அதன்பின் கதாநாயகன் திருக்குறளின் முதல் பாடலை சொல்கிறார்.

அகர முதல எழுத்தெல்லாம் குமரன் சன் ஆப் மகாலட்சுமியே உலகு என்கிறார்.

இந்தப் படத்தை இயக்கியவர் ஒரு தமிழர். பெயர் திருக்குமரன் இந்த படத்தின் கதையை எழுதியவர். பிரபல இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ். தமிழர்களின் ஒப்பற்ற திருக்குறளை இவ்வாறு கேவலப்படுத்தியுள்ளார்கள்.

தமிழக தணிக்கை சபை இதனை எவ்வாறு அனுமதித்தது. தமிழர்கள் மானம், மரியாதை இல்லாதவர்கள் என்று தணிக்கை சபை தீர்மானித்துவிட்டதா?

மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நடிகர் என்ற ரீதியில் வானவில் சஞ்சிகை நடிகர் சிவகார்த்திகேயனுக்கு 'டொப் ஸ்டார் சிவாகி' என்று அண்மையில் பட்டம் கொடுத்து கௌரவித்திருந்தது. சிவகார்த்திகேயன் விஜய் டி. வியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவர். இப்போது கூட சினிமா நடிகர் என்பதை விட விஜய் டி. வி. நிகழ்ச்சித் தொகுப்பாளர் என்ற பட்டம்தான் அவரது பெயரை சொல்லி வருகிறது. அவ்வாறான விஜய் டி. வி. நிகழ்ச்சியொன்றில் திருக்குறளை பற்றி அவர் இவ்வளவு கேவலமாக சொல்வரா?

நடிக்கும் போது அவருக்கு கொடுக்கப்படும் காட்சி பேச வேண்டிய வசனம் இதையெல்லாம் சீர்தூக்கி பார்க்கும் அளவுக்கு கொஞ்சம் கூட அறிவு இல்லாத 'லூச'அவர்.

படித்தவர்தானே பண்புள்ளவராக இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை. தமிழன் என்ற உணர்வுகூட இல்லாதவரா அவர்!

தமிழை அவமதிக்கும் இப்படியான ஒரு படத்தில் நடிப்பதை விட அவர்....................?? தமிழ் தாயை இப்படி அவர் அவமதித்திருக்க வேண்டாம். எனக்கென்று சுயமரியாதை, மானம் என்று எதுவுமில்லை. இயக்குநர் எதைச் சொன்னாலும் அதைச் செய்வேன். பணம் கிடைக்கிறதல்லவா? பணம் கிடைத்தால் தான் எதனையும் செய்வேன் என்கிறாரா சிவா? 

கேவலமான சிவகார்த்திகேயனுக்கு கொடுத்த பட்டத்தை நாம் மிகுந்த மனக்கவலையுடன் திரும்பப் பெற்றுக்கொள்கிறோம்.

நகைச்சுவை என்றால் சிரிக்க வைக்கும் அதே நேரம் சிந்திக்கவும் வைக்க வேண்டும். கலைவாணர் அதைத்தான் செய்தார். அதனை விட்டு விட்டு வேதனையை ஏற்படுத்தும் வகையில் தமிழர்களின் பொக்கிஷங்களில் ஒன்றான திருக்குறளை அவமானப்படுத்தும் வகையில் நகைச்சுவை நையாண்டியை தமிழ் படமொன்றில் தன்னிச்சையாக புகுத்தி ஏ. ஆர். முருகதாஸ், திருக்குமரன் ஆகிய இயக்குநர்களும் சிவகார்த்திகேயன் என்ற காமெடி பபூனும் நடத்தும் தமிழ் விரோத செயற்பாடுகளை பார்த்துவிட்டு எந்தக் கண்டனமும் தெரிவிக்காமல் திரையரங்கில் இருந்து சிரித்துக் கொண்டு வெளியேறும் தமிழ் சமூகத்தை பார்க்கும் போது வேதனையளிக்கிறது.

தமக்கு அத்தகைய செல்வாக்கை ஏற்படுத்திக் கொடுத்த ரசிகர்கள் மற்றும் அபிமானிகள் தலைகுனியும் வகையில் வேண்டும் என்று தெரிந்தே அவமானத்தை ஏற்படுத்தியுள்ள நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் முருகதாஸ் ஆகியோர் இல்லாமலே தமிழ் சினிமா சிறக்கும் என்பது தெரிந்ததே.

தங்க மீன்கள், தலைமுறைகள் போன்று தமிழுக்கு தேசிய விருதுகளை வாங்கித்தர இந்த வித்தை காட்டிகளால் முடியுமா? எனவே அவர்கள் தமிழ் சினிமாவில் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன. தூக்கி வீசுவதே சரியானது.

திரிஷா வீட்டு நாய் குட்டி போட்டிருக்காமே. அதில் எத்தனை ஆண் குட்டி என்று சொல்ல முடியுமா?

ஆர். சுகந்தா, வாழைச்சேனை

இந்தமுறை திரிஷா வீட்டு நாய் போட்ட குட்டிகளில் மூன்று ஆண். அதில் இரண்டு குட்டிகளை திரிஷாவின் தோழியர் எடுத்துச் சென்று 'திரிஷ்' என்று
பெயர் வைத்துள்ளார்களாம். இதைப் பார்த்த திரிஷாவுக்கு வாயெல்லாம் பல். தனது தோழிகளுக்கு நன்றி கூறுவதுடன் தனது பெயரை நாய்க்கு வைப்பதை பெரிதும் விரும்புவதாகவும் கூறுகிறார் திரிஷா. திரிஷாவுக்கு அந்த அளவுக்கு நாய்களை பிடிக்கும்.


ரோட்டில் தவிக்கும் நாய்களுக்கு அடைக்கலம் கொடுப்பதுடன் நாய்களின் சேவை அமைப்பான பிட்டாவிலும் திரிஷா ஒரு தீவிர அங்கத்தவர்


ஆர்யா, நயன் காதல் சிம்புவால் முறியுமா, வளருமா?

அருண் - நீர்கொழும்பு

ஆர்யாவை நைசாக அகற்றிவிட்டுதான் நயனை வளைத்தார் சிம்பு

டார்லிங், டார்லிங் என்று பாடிக்கொண்டே வி(ஜி) ல்லை வளைத்து முறித்து விடுவார் மன்மதன் சிம்பு




சினிமா நடிகைகள் எல்லோரும் தண்ணி அடிப்பாங்களாமே? உண்மையா?

எல். லோஜினி, அக்கரைப்பற்று

ஊத்தி வைத்துக்கொண்டு 'தப்பேயில்ல அடி' என்று கூறும் சக நடிகர்கள் அவர்களுக்கு இருக்கிறார்கள். உங்களுக்கு இல்லை. அதனால்தான் அவர்களுக்கு தண்ணி அடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.

அடித்தால்தான் மார்க்கட்டில் விலை போகலாம் என்பதும் அவர்களுக்கு தெரியும்.





சினிமா நடிகையை திருமணம் செய்ய நமக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்?

வி.கார்த்திக், நுவரெலியா

தொழிலதிபராக இருக்க வேண்டும். எந்த நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும் பரவாயில்லை.

உங்களுக்கு இருக்கிறதா? இல்லாவிட்டால் சீக்கிரமே ஆகிவிடுங்கள். வருடாந்தம் தமிழ் சினிமாவில் மட்டும் சுமார் 75 நடிகைகள் அறிமுகமாகின்றனர். எனவே உங்களுக்கும் சான்ஸ் கிடைக்கலாம்.