பிடித்த பேயை போத்தலில் அடைப்பதுதான் சரி!
வீரசிங்கம் பூசாரி சொல்கிறார்
மணி ஸ்ரீகாந்தன்
கடந்த சில மாதங்களாக 'இலங்கையில் காவல் தெய்வ வழிபாடு' என்ற கட்டுரை தொடர்ச்சியாக வானவில்லில் வெளியாகி வந்தது. அதைப் படித்தவர்கள் பலர் மெய்சிலிர்த்து பாராட்டவும் செய்தார்கள். ஆனால், கடந்த மாதம் வெளியான 'பேய்களை பிடித்து ஆற்றில் கரைப்பதுதான் புதிய டெக்னிக்' என்ற கட்டுரையை வாசித்த இங்கிரிய றைகமையைச் சேர்ந்த வீரசிங்கம் பூசாரி தமது கருத்தை தெரிவிப்பதற்காக எம்மோடு தொடர்பு கொண்டு பேசினார்.
"பேய் பிடித்தவரை ஆட்டுவித்து அவருக்குள் எத்தனை பேய்கள் உள்ளன என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
பின்னர் அந்தப் பேய்களின் பெயர்களை பேய் பிடித்த நபர் உச்சரிக்கும் போது அந்த நொடிப்பொழுதை பயன்படுத்தி, முதலில் தலை மயிரை பிடித்து முடிச்சுப் போட்டுவிட வேண்டும். இதே முறையில் பேய்களை ஒவ்வொன்றாக கட்டிவிட்டு பிறகு அந்த மயிரை முடிச்சோடு சேர்த்து வெட்டி எடுத்து போத்தலில் போட்டு காற்று புக முடியாதபடி அடைத்து விட்டு சுடுகாட்டுக்கு எடுத்துச்செல்ல வேண்டும்.
அதன்பிறகு ஐந்தடி ஆழத்துக்கு குழிதோண்டி அதற்குள் சிக்கிக் கொண்ட பேய்கள் இருக்கும் போத்தலை போட்டு அதன் மேல் எழுமிச்சை, திருநீறு உள்ளிட்ட பலவிதமான மந்திரப் பொருட்களைப் போட்டு அதன் மேல் மண் போட்டு மூடி விட வேண்டும். அப்படி செய்தால் எந்தப் பேயும் வெளியே வர முடியாது. சிலர் ஆற்றில் வீசி எறிவார்கள். ஆனால் சுடுகாட்டில் புகைப்பதுதான் பாதுகாப்பானது. ஏனென்றால் சுடுகாட்டில் புதைத்த பொருளை யாரும் தோண்ட மாட்டார்கள். அந்த தைரியமும் யாருக்கும் கிடையாது என்று பேய்களை பிடிப்பது எப்படி என்ற வித்தையை அவர் சொல்லும் போது தமக்கு எல்லாம் தெரியும் என்கிற ஒரு கெத்து வீரசிங்கத்தின் முகத்தில் வெளிப்பட்டது.
"பேயை பிடித்து ஆற்றில் கரைக்கிறது பாதுகாப்பானது என்று சொன்னாலும் அதில் ஒரு அபாயமும் இருக்கிறது. ஏனென்றால் மாவு நீரில் கரையும் போது அந்த மாவு துண்டுகளை மீன்கள் உண்ணும் வாய்ப்பு இருக்கிறது. அந்த மீனை மனுசன் சாப்பிட்டால் என்ன நடக்கும்? என்று ஒரு கேள்வியை எம் முகத்தில் வீசி புன்னகைக்கிறார் வீரசிங்கம். கேட்டுக் கொண்டிருந்த எமக்கு தலை சுற்றியது.


No comments:
Post a Comment