Monday, December 24, 2018

அஜித் நயன்தாரா ஜோடியாக நடிப்பார்களா?

எஸ். சண்முகம், கொழும்பு 14.

பில்லா, ஏகன், ஆரம்பம் ஆகிய படங்களிலே அஜித் நயன்தாரா ஜோடி சேர்ந்திருந்தார்களே. நீங்கள் பார்க்கவில்லையா?
உங்கள் ஆவலை பூர்த்தி செய்ய அஜித் - நயன் ஜோடி விஸ்வாசம் படத்தில் 4 ஆவது முறையாக நடித்துள்ளனர். இவருவம் கணவன் மனைவியாக அப்பாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. எதிர்வரும் பொங்கல் வரும் வரை காத்திருங்கள். அஜித் நயன் ஜோடியை மீண்டும் திரையில் காணலாம்.


தேவயானியின் தம்பி நகுலை காணவில்லையே!
சோமநாதன், கண்டி

‘செய்’ என்ற புதுப் படத்தில் நடிக்கிறார் நகுல். வித்தியாசமான கதைகளில் நல்ல பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்பதால் தான் இந்த தாமதம் என்கிறார் நகுல்.
‘நாக்க முக்க’ என்ற ஒரேயொரு பாடல் எனக்கு உலகப் புகழைத் தேடிக் கொடுத்திருக்கு என்று நன்றியோடு நினைவு கூரும் நகுல் ‘எரியும் கண்ணாடி’ என்ற புதிய படத்திலும் நடிக்கவிருக்கிறார்.



சினிமாவில் நடிகைகள் உடுத்தும் உடைகளைத் தான் கல்லூரி மாணவிகள் வெளியில் உடுத்துகிறார்களாமே?
மஜாசபின் - கொழும்பு

மும்மையில் நடக்கும் பொது விழாக்களுக்கு நடிகைகள் எல்லை மீறிய கவர்ச்சி உடைகளில் வருகிறார்கள். இந்தி நடிகை மலைக்கா அரேரா அண்மையில் படவிழா ஒன்றுக்கு அணிந்து வந்த ஜீன்ஸ் எல்லை மிறும் வகையில் இருந்தது.
பொது இடங்களில் இவ்வாறு மோசமான உடை அணியலாமா என்று ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழ் நடிகை ரெஜினாவும் இதுபோல் எல்லை மீறிய கவர்ச்சி உடையில் வந்து  நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார், ஒரு தடவை!
(படத்திலிருப்பவர் ரெஜினா)

இத்தாலியில் நடந்த விராட் கோலி-அனுஷ்கா சர்மா திருமணத்தை மிஞ்சி விட்டதாமே பொலிவுட்டின் ரன்வீர்சிங்-தீபிகா படுகோன் திருமணம்?
கவிதா – பாதுக்க

கடந்த மாதம் வட இந்தியா முழுவதும் ‘தீப் வீர்’ திருமணம் பற்றித்தான் பேச்சு.
வெனிஸ் நகரம், பைசா கோபுரம் போன்ற அதிசயங்கள் லியனார்டோ டாவின்சி, மைக்கல்; எஞ்சலோ போன்றோரின் ஓவியங்கள் மற்றும் பியானோ இசைக்கருவி, பீட்சா, பாஸ்தா உணவுகளின் பிறப்பிடம் என்பதால் இத்தாலிக்கு எப்போதுமே மவுசு உண்டு. அங்குள்ள லேக் கோமா உலகப் பிரசித்தம். அங்குதான் நடந்தது ‘தீப் வீர்’ திருமணம்.  அம்பானியின் மகள் இஷாவின் நிச்சயதார்த்தம் இங்குதான் நடைபெற்றதாம்.
மொத்தம் 30 பேர் மட்டுமே இந்தத் திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். பொலிவுட்டில் இருந்து ஷாருக்கான், இயக்குநர் சஞ்சய் லீலா பன்கசாலி, நடன இயக்குநர் பாராகான் ஆகியோருக்கு மட்டுமே அழைப்பு. மற்றவர்கள் பெங்களுரிலும், மும்பையிலும் நடந்த வரவேற்பு விழாவுக்குத்தான் அழைக்கப்பட்டிருந்தனர்.
பொலிவுட் வரலாற்றிலேயே ‘தீப் வீர்’ திருமண பட்ஜட் தான் மிகவும் பெரியதாம்.
மணமேடையை அலங்கரிக்க மட்டும் 12 பேர். தீபிகாவுக்கு பிடித்த லில்லி மலர்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டருந்தது மணமேடை. தீபிகாவின் தாலிக்கு மட்டும் 20 லட்சம் ரூபா செலவாம். திருமணத்தின் போது தீபிகா அணிந்திருந்த மோதிரத்தின் விலை 2 கோடி ரூபாவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்தியாவில் திருமணம் நடந்தால் பிரச்சினை வரலாம் என்பதால்தான் இத்தாலியில் திருமணம் நடத்தப்பட்டதாம். என்ன பிரச்சினை?
‘பத்மாவத்’ திரைப்படத்துக்கு ராஜபுதன (ராஜ்புத்) இனத்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். தீபிகாவின் தலையை வெட்டுவோம் என்றும் எச்சரித்திருந்தனர். இதனால் தான் இவர்களது திருமணம் இத்தாலியில் நடத்திருக்கிறது.

Saturday, August 4, 2018

இருள் உலகக் கதைகள்



முத்து பூசாரி சொன்ன பேய்க் கதை

கேட்டு எழுதுபவர் : மணி ஸ்ரீகாந்தன்

ஹவத்தை பெருநகரத்தை அண்டிய ஒரு இறப்பர் தோட்டம். விடாது பெய்து கொண்டிருந்த மழை ஓரளவுக்கு குறைந்து விட்டிருந்தது. பெரியகாடு இறப்பர் மலையில் வேலை செய்துகொண்டிருந்த வேலுசாமி வெற்றிலையை வாயில்போட்டு குதப்பி கொண்டிருந்தான். மாலை நாலு மணியை நேரம் நெருங்கிகொண்டிருந்ததால் வேலையை முடித்துவிடுவதில் வேலுச்சாமி அவசரம் காட்டினான்.
mani srikanthan
முத்து பூசாரி
வேலுவுக்கு முப்பது வயதிருக்கும் இருபத்திரெண்டு வயதில் திருமணம் முடித்த அவனுக்கு இதுவரை குழந்தைகள் இல்லை. தோட்டத்தின் 'தலைவர் லயத்தில்' குடியிருக்கும் வேலுவின் வீடு அந்தக்காலத்தில் உள்ள லயத்து வீடுகளைப்போலவே உடைந்து சிதிலமாக காணப்பட்டது.
வேலுவின் உழைப்பு சாராயத்துக்கும், உணவுக்குமே போதுமானதாக இருப்பதால் வீட்டை கட்டி முடிப்பது என்பது அவர்களால் நினைத்தும் பார்க்க முடியாதது. அதனால் வேலுச்சாமியின் மனைவி காமாட்சி வெளிநாடு செல்ல முடிவெடுத்து அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டிருந்தாள்.
வேலுவின் மனைவி காமாட்சி விதவிதமாக சமைப்பதில் சிறந்தவள். ஆனாலும் வேலுவுக்கு தினமும் சோற்றில் எது இருக்கிறதோ இல்லையோ கருவாடு கட்டாயம் இருக்க வேண்டும், அப்படி இல்லையென்றால் குடும்பத்தில் பெரிய ரகளையே நடந்துவிடும்.
அப்படி ரகளை நடப்பதற்கு காமாட்சி இடம்வைப்பதும் இல்லை. தோட்டத்தில் வேலை செய்யும் வேலுவுக்கு பகல் உணவை பார்சலாக கட்டித்தரும் காமாட்சி சோற்றில் கருவாட்டுத் துண்டை வைக்கும் போது பார்சலின் ஒரு ஓரத்தில் அடுப்பு கரித்துண்டையும்,ஆணியையும் சேர்த்து வைப்பதற்கும் மறப்பதில்லை.
mani srikanthan
“இந்த ஆணியையும், கரித்துண்டையும் கருவாட்டுடன் சேர்த்து சாப்பிடவா”ன்னு வேலு கேட்பதும் “ அது பேய் பிசாசு அண்டாம இருக்கிறதுக்கு” என்று காமாட்சி சொல்வதும் வழமை. 
பெரிய காட்டு மலை புளிய மரத்தின் அடியில் அமர்ந்து பகல் உணவை சாப்பிடும் வேலு பார்சலை பிரித்ததும் அதில் இருக்கும் கருவாட்டை பிய்த்து ஒரு சிறு துண்டை வீசிவிட்டு சாப்பிடுவதை வழமையாக கொண்டிருந்தான்.
வீட்டுக்கு வெளியே வைத்து எந்த சாப்பாட்டை சாப்பிட்டாலும் அதில் ஒரு துளியை எடுத்து வீசிவிட வேண்டும். என்பது வேலுச்சாமியின் மனைவியின் கட்டளை. வேலு என்னதான் குடிகாரனாக இருந்தாலும் மனைவி சொல்லே மந்திரமாக நினைப்பவன்.

வெட்ட வெளியில் உணவு சாப்பிடும்போது நம்மைச் சுற்றி எச்சினிகள் ஜொள்ளுவிட்டபடி நிற்குமாம். அப்படி அவை நிற்கும்போது அதுகளுக்கு நாம் சாப்பிடும் உணவில் ஒரு சிறு துளியை கொடுத்துவிட்டால் எச்சினிகள் அந்த இடத்தை விட்டு போய்விடுமாம். காமாட்சி, வேலுசாமியிடம் விவரமாக  சொல்லியிருப்பதால் வேலு எப்போது சாப்பிட உட்கார்ந்தாலும் முதலில் சாப்பாட்டின் ஒரு துளியை எடுத்து வெளியே வீசிவிடுவதை வழமையாக கொண்டிருந்தான்.

வேலுச்சாமி மலைக்காட்டில் அமர்ந்து சாப்பிடும் போது அவன் சாப்பிடுவதை ஒரு கருப்பு பூனை அங்கே நிற்கும் மரத்தில் மறைந்திருந்து எப்போதும் அவனை கூர்மையாக பார்த்துக் கொண்டிருக்கும். வேலுச்சாமியும் தான் சாப்பிட்டு முடிந்ததும் மிஞ்சும் உணவை அங்கேயே கொட்டிவிட்டு விடுவான்.
mani srikanthan
அடுத்த நாள் அந்த இடத்தில் பார்த்தால், வேலு கொட்டிய சோற்றில் ஒரு பருக்கையை கூட பார்க்க முடியாது. “அந்த கருப்பு பூனைதான் சாப்பிட்டிருக்கும்” ன்னு வேலுவும் மனதுக்குள் நினைத்துக்கொள்வான்.
சில நாட்களில் காமாட்சியும் வெளி நாட்டுக்கு பயணமாகிவிட வேலுச்சாமியின் உணவு இருவேளையாக குறைந்துவிட்டது. பகல் சாப்பாட்டை ரெடி பண்ணி கொடுக்க காமாட்சி இல்லாததால் அவன் தண்ணீரை மட்டுமே குடித்து பசியை போக்கினான்.
வேலுச்சாமி பகல் உணவுக்காக அமரும் அந்த புளிய மரத்தின் கிளையில் அமர்ந்திருக்கும் அந்த கருப்பு பூனை மட்டும் தினமும் தனக்கு கிடைக்கும் அந்த சிறிய உணவுக்காக எதிர்பார்ப்புடன் காத்திருந்தது. ஆனால், வேலுச்சாமி தண்ணீரை மட்டும் குடித்து விட்டு பணியில் ஈடுபட்டான்.
ஒரு வாரம் காத்திருந்த பூனை ஒருநாள் பயங்கரமாகக் கத்த ஆரம்பித்தது. கடுப்பான வேலுச்சாமி ஒரு கல்லை எடுத்து அடித்து அந்த பூனையை விரட்டினான்.
அப்போது அவனை பின் மண்டையில் யாரோ படார் என்று அடித்தது போலிருக்கவே வேலுச்சாமி திரும்பிப் பார்த்தான். அந்த இடம் ஆள் அரவமில்லாது வெறிச்சோடி காணப்பட்டது.
தன்னை அடித்தது யாராக இருக்கும் என்பதை பற்றிய சிந்தனையிலேயே வீட்டுக்கு சென்ற வேலுச்சாமி பக்கத்து லயத்தில் இருக்கும் தமது அக்காவின் வீட்டில் இரவு சாப்பாட்டை முடிக்கு முன் கொஞ்சம் சாராயத்தையும் ஊற்றி தனது தொண்டையை நனைத்துக் கொண்டான். சாப்பாடு முடிய வீடு வந்து படுத்துக்கொண்டான்.

அடுத்த நாள் வேலுச்சாமியின் நடவடிக்கைகளில் சில மாற்றங்கள் தெரிந்தது. தினமும் வேலைக்கு சென்றுவிடும் அவன் அன்று வீட்டில் இருந்ததோடு, சித்தம் பேதலித்தவனைப் போல உளறிக் கொண்டிருந்தான். ‘மனைவி வெளிநாடுபோன சோகத்தில் வேலுச்சாமி இப்படி ஆகிவிட்டான்’ என்று அக்கம்பக்கத்தார் நம்பத் தொடங்கினார்கள். ஆனாலும் சில நாட்களிலேயே வேலுச்சாமியின் சேட்டைகள் அதிகமாகிவிட்டதால் அவனுக்கு எதுவோ ஒன்று அண்டிவிட்டது என்பதை உறுதிசெய்த அவன் நண்பர்கள் அந்த பகுதியில் பிரபல பூசாரியாக இருக்கும் முத்து பூசாரியை அழைத்துவந்து பரிகார பூஜையை போட்டார்கள்.

வேலுச்சாமியை முத்து பார்த்த ஒரே பார்வையில் அவரின் ஸ்கேனர் கண்கள் வேலுவை ஸ்கேன் பண்ணி எடுத்துவிட்டது. அப்போது முத்துவின் முகத்தில் நமட்டுச் சிரிப்பு வெளிப்பட்டது. உடுக்கை எடுத்து தாளத்தோடு முத்து பாடத் தொடங்கினார். அப்போதே வேலுச்சாமியின் பேயாட்டமும் வெடித்துக் கிளம்பியது.
mani srikanthan
பூனை உருவத்தில் ஒரு எச்சினி வேலுச்சாமியை பின் தொடர்ந்து வந்திருப்பதாகவும்  அதற்கு தொடர்ச்சியாக வேலுச்சாமியும் உணவு வைத்து வளர்த்து வந்திருப்பதாகவும், பிறகு திடீரென்று அந்த எச்சினிக்கு உணவு வைப்பதை வேலுச்சாமி நிறுத்திவிட்டதால், கோபம் கொண்ட அந்த தீய சக்தி அவனை பின் மண்டையில் அடித்திருப்பதாகவும், அவன் கும்பிட்ட தெய்வம்தான் அவனை காப்பாற்றியதாகவும் சொன்ன முத்து, பரிகார பூஜையை முடித்து வேலுச்சாமியின் கழுத்தில் ஒரு நூலை கட்டி அவனின் சித்தப் பிரம்மைக்கு வெற்றிகரமாக முடிவு கட்டினார்.🔴

Thursday, August 2, 2018

உணவும் உழவும் 100 நாள் விவசாயம்

            
தமிழகத்தின் நிலத்தடி நீரை உறிஞ்சி தமிழகத்தை பாலைவனமாக மாற்றப்போகும் சீமைக் கருவேல மரங்களை கூண்டோடு வேரறுத்து தமிழகத்தை வளமான விவசாய பூமியாக மாற்ற போராடுகிறார் வேலூர் அணைக்கும் கரங்கள் ப. சரவணன்.
இவரின் களப்பணிகள் குறித்து சமீபத்தில் வேலூர் சதுப்பேரி என்கின்ற ஒரு கிராமத்தில் 100 நாள் விவசாயப் பணியிலிருந்த அவரை ஒரு இனிய காலை வேளையில் சந்தித்துப் பேசினோம்.

face பக்கம்

MANI SRIKANTHAN

Tuesday, July 31, 2018

கூத்துப் பாடகர் சுப்ரமணியம் ராமர் மனந்திறந்து பேசுகிறார்

           மலையகத்தின் பாரம்பரிய கூத்துக்கலைகளில் ஒன்றான காமன் கூத்து வரலாறு பற்றி இலங்கை மஸ்கெலிய லங்கா டிவிசனை சேர்ந்த கூத்துப் பாடகர் திரு.சுப்ரமணியம் ராமருடனான ஒரு சுவாரஸ்யமான சந்திப்பு.

‘வம்சம்’ சீரியல் இயக்குநர் அருள்ராய் பேசுகிறார்.


நேர்காணல் : மணி ஸ்ரீகாந்தன்

தென்னிந்திய தொலைகாட்சிகளின் மெகா சீரியல்களின் மகா இயக்குனர் அருள்ராய். இவர் சித்தி, நாதஸ்வரம், உள்ளிட்ட மெகா சீரியல்களில் இணை இயக்குநராக பணியாற்றிவர். அதன் பிறகு சமீபத்தில் ‘சன்’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘வம்சம்’ மெகா சீரியலின் இயக்குநராகவும், ‘கலர்ஸ்’தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘வேலுநாச்சி’தொடரின் இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார். கடந்த வாரம்   சென்னை ஈக்காட்டுத்தாங்களில் உள்ள அவரின் இல்லத்தில் வைத்து வண்ண வானவில் சஞ்சிகைக்காக ஒரு இனிய காலை வேளையில் சந்தித்துப் பேசினோம்.
mani srikanthan

“மதுரைக்கு பக்கத்திலுள்ள ஒரு கிராமத்திலிருந்து சினிமா கனவுகளோடு எல்லோரையும் போல நானும் சென்னைக்கு வந்தேன். 1993ல் எனது சென்னை வாழ்க்கை ஆரம்பமானது ஒரு நாளைக்கு மூன்று நாலு காட்சிகளாக சினிமா பார்த்திருக்கிறேன். ஆனாலும் என் கனவு சினிமாவில் இயக்குநராக வரவேண்டும் என்பதில்தான் இலக்காக இருந்தது.
நான் அப்போதே நன்றாக கவிதை எழுதுவேன். அப்போது எனக்குள் ஒளிந்திருந்த சில கதைகளை என் நண்பர்களிடம் சொன்னேன். அவர்கள் சொல்லும் கதைகளை நான் அப்படியே மாற்றி வேறு வடிவத்திலும் கதைச் சொல்லும் திறமையை வளர்த்துக் கொண்டேன். நாளடைவில் ஒரு கதை சொல்லி என்னிடம் இருப்பதை உணர்ந்து கொண்டேன். சென்னை ரங்கநாதன் தெருவில் அன்னம்மாள் கட்டடிடத்தில் ரூம் எடுத்து தங்கினேன். அப்போ நான் தங்கியிருந்த ரூமுக்கு பக்கத்திலிருந்த கீதாஞ்சலி ரெஸ்டோரண்டில் வேலை கிடைத்தது அதுல ஒரு நாளைக்கு முந்நூறு ரூபா டிப்ஸ் கிடைத்தது. ஒரு நாளைக்கு ரூம் வாடகை நூற்றி ஐம்பது போக மிச்ச பணத்தை ஜொலியா செலவு பண்ணிட்டு இருந்தேன்.அப்போ சென்னையில கிடைச்ச சின்ன சின்ன வேலை எல்லாம் செய்தேன்.
சினிமா கனவோட வந்த நான் அதை மறந்து சென்னையில் ஜொலியாக சுற்றியதால் நான் வந்த வேலையின் நோக்கம் தாமதமாகியது.
ஒரு சமயத்தில் நானும் சமுத்திரகனியும் ஒரே அறையில் தங்கியிருந்தோம். அப்போ சமுத்திரகனி சுந்தர் கே. விஜயனிடம்  இணை இயக்குநராக பணியாற்றி வந்தார்.அப்போ இயக்குனர் சி.ஜே. பாஸ்கர் சார் கவிதாலயாவுக்காக சீரியல்கள் செய்து கொண்டிருந்தாராம். அந்த சமயத்தில் அவருக்கு உதவிக்கு ஆள் தேவைபட்டிருக்கு அதை அவர் சமுத்திரகனியிடம் சொல்ல அவர் என்னிடம் வந்து சொல்லி என்னை சி.ஜே.பாஸ்கரிடம் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது ராதிகா மேடம் சித்தி தொடர் செய்வதற்காகான பேச்சுவார்த்தை போயிட்டு இருந்தது. இயக்குனர் சி.ஜே.பாஸ்கர் அந்த தொடரை இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டபோது நானும் அதில் இணைந்து கொண்டேன்.
mani srikanthan
கலைஞர் கையில் விருது, 
அருகே சரத்குமார் மற்றும் ராதிகா

அதன் பிறகு திருமுருகன்  சாரிடம் இணைந்து ‘மெட்டி ஒலி’ சீரியலில் பணியாற்றினேன். அந்தக் காலக்கட்டத்தில் எனக்கும் திருமுருகன் சாருக்கும் நல்ல நெருக்கம் ஏற்பட்டது. இயக்குனர் சி.ஜே.பாஸ்கரிடம் எப்படி டைரக்ஷன் இருக்கனும் எப்படி நடிகர்களிடம் வேலை வாங்கணும் என்பதை கற்றுக்கொண்டேனோ அதுமாதிரி திருமுருகனிடம் எப்படி காட்சிகளை அமைப்பது, எப்படி நடிகர்களோடு ஐக்கியமாக இருப்பது போன்ற விசயங்களை கற்றுக் கொண்டேன். அதன் பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் கே.பி சார் எழுதி இயக்கிய தேன்மொழியாள் சீரியலை சமுத்திரக்கனி செய்தார் நான் இணை இயக்குநராக இருந்தேன். அதன் பிறகு சமுத்திரக்கனி சினிமாவுக்கு போய்விட, நானே அந்த நாடகத்தை இயக்கினேன் அந்த வகையில் கே.பி சாரிடம் நானும் சிஷ்யனாக பணியாற்றினேன் என்பது ஒரு பெரிய வரப்பிரசாதம்.அதன் பிறகு சமுத்திரக்கனியோடு சில படங்களில் பணியாற்றியும் நடித்தும் இருக்கிறேன். தென்றல், நாதஸ்வரம். பத்து மணிக் கதைகள் என்று நிறைய சீரியல்களில் பணியாற்றியிருக்கிறேன்.
mani srikanthan
கே.பாலச்சந்தருடன் 
அருள்ராய் குடும்பம்.
அதன் பிறகு ரம்யா கிருஷ்ணனின் ‘வம்சம்’ சீரியலை இயக்கி  பெரு வெற்றியோடு முடித்தேன். இப்போ கலர்ஸ் தொiலைக்காட்சியில் ‘வேலுநாச்சி’ தொடரை செய்து வருகிறேன். அடுத்து படம் செய்வதற்கான பேச்சு வார்த்தையும் நடைபெறுகிறது என்னிடம் ஒரு நல்ல கதை இருக்கிறது. இந்த கதை ஓகே ஆனால் நிச்சயமாக எனது படத்தில் சமுத்திரக்கனி நாயகனாக நடிப்பார்.”
என்ற அருளிடம்,

“தமிழக தொலைக்காட்சி சீரியல்களில் ஒரு குடும்பத்தை கலைப்பது, சூனியம் வைப்பது, விஷம் கொடுப்பது, அடியாள் வைத்து அடிப்பது கொல்வது என்று எல்லா கெட்ட வேலைகளையும் பெண்களே செய்வது போன்று காட்சிப் படுத்துகிறார்களே, தமிழக பெண்கள் அவ்வளவு கொடூரமானவர்களா?” என்று கேட்டோம்.

“நீங்கள் அப்படி தப்பா நினைக்கக் கூடாது, பெண்கள் இல்லாத உலகமே இல்லை.ஒரு சின்ன குடும்பத்தை எடுத்துக் கொண்டாலே அதில் பெண்களின் மேற்பார்வையும்,அவர்களின் ஆளுமையுமே ரொம்பவும் அதிகமாக இருக்கும். பெண்களிடம் குடும்ப பொறுப்பை ஒப்படைச்சிட்டாலே ஆண்கள் நிம்மதியாக இருக்கலாம். நமது வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். அப்போ பெண்களுக்கு பெண்கள் சார்ந்த விசயம் எடுத்தால்தான் அது அவர்களுக்கு பிடிக்கும். நாயகன் நல்லவனாக இருக்கும் போது ஒரு பெரிய வில்லனை கெட்டவனை காட்டினால்தான் கதையில் சுவாரஸ்யம் இருக்கும் அது மாதிரிதான் இதுவும் ஒரு குடும்பத்தை சுற்றி கதை நடப்பதால் அம்மாவுக்கு மருமகளை பிடிக்காது, மகளுக்கு அன்னியை பிடிக்காது. மகளுக்கு மாமியாரை பிடிக்காது. அப்போ அவங்கள மையமாக வைத்து கதை செய்யப்படுகிறது. இதுல போட்டுத் தள்ளுரதெல்லாம் யதார்த்தத்துக்கு பொருந்தாது என்பது உண்மைதான் ஆனால் இது கதை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாடகத்தை ஒரு கதையாக பார்க்க வேண்டும் அவ்வளவுதான். அடிப்படையில் தமிழக பெண்கள் மிகவும் நல்லவர்கள்” என்று நற்சான்றிதழ் தந்தார் (இந்த பதிலை அருள் எம்மிடம் சொல்லும் போது அவரின் துணைவியாரும் பக்கத்திலேயே ஏதோ வீட்டு வேலையில் இருந்தார் அவரின் காதில் பேசுவது விழுந்துவிடும் என்று அருள் ஜாக்கிரதையாக பதில் சொன்னாரோ தெரியவில்லை…)

mani srikanthan
அருளுடன் மணி ஸ்ரீகாந்தன்
சீரியல்களில் நடிக்கும் பெண்களுக்கு அழுகைதான் சிறப்பு தகுதியா” என்று கேட்டதும், அருள் கலகலன்னு சிரித்து விட்டு,
“அப்படி கிடையாது, அதுவும் வாழ்க்கையில் நடக்கிற வாழ்க்கையோடு, சம்மந்தப்பட்ட விடயம்தானே! அதனால் அழுகையும் வாழ்க்கையில் ஒரு பகுதிதான்.இப்போ நாம இனிப்பும் சாப்புடுகிறோம் காரமும் சாப்பிடுகிறோம். அதுமாதிரிதான் துக்கமும் சந்தோசமும் மாறி மாறி வருகிறது. சீரியல்களை பொறுத்தவரையில் அழுகை என்பது ஒரு சிறப்பு தகுதி அல்ல. காட்சிக்கு தேவைப்படும் இடத்தில் நாம் அழுகையை வைக்கிறோம். ஒரு தொலைக்காட்சியின் ‘டீ.ஆர்.பி’க்காகவும் இது அவசியமாகிறது.” என்று விளக்கம் தந்தார் அருள்ராய்.

“நாடகங்களில் இவருக்கு பதில் இவர் என்று நடிக நடிகைகள் மாற்றப்படுவது எதற்காக என்பது அடுத்த கேள்வி.

 “இது நாடகங்களை பொறுத்தவரையில் தவிர்க்க முடியாத விசயம். படத்தை எடுத்து முடித்து விட்டு கொடுக்கிற சினிமா போன்றது இல்லை. இங்கே தினமும் சூட்டிங் இருக்கும் ஒரு நாடகம் வருடக்கணக்கில் செல்லும். அதனால் அந்த நாடகத்தில் நடிக்கும் நபருக்கு இதை விட பெரிய ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கலாம், அல்லது கல்யாணமாகி இருக்கலாம், உடம்பு முடியாமல் இருக்கலாம் இப்படி ஏதாவது பிரச்சினை வரும்போது நடிகர்களை மாற்றுவது கட்டாயமாகிறது ”
mani srikanthan
என்ற அருளிடம், “ஆயிரம் பகுதிகளை கடந்த நாடகங்களில் சில முடியும் போது நிறைய கிளைக்கதைகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாமலேயே போய்விடுவதாக சொல்கிறார்கள். உண்மையில் என்ன நடக்கிறது. உங்களை அறியாமலேயே தவற விட்டு விடுகிறீர்களா?”
(“நல்லாவே வலை விரிக்கிறீங்க..”ன்னு சொல்லி சிரித்து விட்டே தொடர்ந்தார்)
“இப்போ ராமசாமி  சுப்புலட்சுமியை லவ் பண்றான். இது மக்களுக்கு எந்தளவுக்கு பிடிக்குது என்று பார்ப்போம். ‘டீ.ஆர்.பி.’எகிறவில்லை என்றால் அடுத்து ராமசாமி, மகாலட்சுமியை லவ் பண்ணுற மாதிரி காட்சியை அமைப்போம். ஆனால் பிரதான கதைச்சுவடு மட்டும் மாறாமல் அப்படியே இருக்கும். கிளைக்கதைகளை மட்டும் அப்படியே ஜம்ப் பண்ண வைத்து வேறு டிராக்குக்கு நகாத்தி விடுவோம். ‘டீ.ஆர்.பி’யை இலக்காக வைத்துதான் நாடகங்களை இயக்குகிறோம்.” என்ற உண்மையை அருள் போட்டு உடைத்தார்.

இருள் உலகக் கதைகள்

 
முத்து பூசாரியின் பேய்க் கதை
 
கேட்டு எழுதுபவர் : மணி ஸ்ரீகாந்தன்

ன்னியில் பெரும்போர் முடிந்து அந்த செந்நிற பூமி அமைதியின் களமாக மாறிப்போயிருந்தது. துப்பாக்கி சூடு வாங்கிய வீட்டு மனைகள். குண்டுப்பட்டு தகர்ந்து போன ஆலயங்கள். ஊனமாகிப்போன மனிதர்கள் என்று போரின் வடுக்கள் மட்டும் அப்படியே ஆறாத ரணமாக இருந்தது.
தாரணிக்கு அவைகளை பார்த்த போது எதையோ பறிக்கொடுத்த மாதிரி மனது வலித்தது. தாரணி கொழும்பிலுள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் பல வருடங்களாக தொழில் செய்து வருபவள்.
போருக்கு முன்பாகவே அவளின் நண்பியின் துணையோடு கொழும்புவிற்கு வந்து தங்கிவிட்டாள். ஆரம்பத்தில் தாரணிக்கு சிங்களம் சரியாக பேச வராது, இப்போது சரளமாக சிங்களவர்களுக்கு சமமாக சிங்களம் கதைக்க பழகிவிட்டாள்.
mani srikanthan
பார்ப்பதற்கு நல்ல அழகியாகவும் ஒரு தைரியமான பொண்ணு மாதிரியான தோற்றமும் கொண்டவள். ஆடைத் தொழிற்சாலையில் அவளின் நண்பிகளுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் தாரணிதான் முதல் ஆளாக நிற்பாள். அவள் ஓங்கி அடித்தால் ஒன்றரை தொன் வெயிட் என்பதை அவளின் நண்பிகளும் நன்றாகவே அறிவார்கள். அதனால் அவள் சண்டைக் களத்துக்கு வந்து விட்டால் எல்லோரும் அமைதியாகி விடுவார்கள்.
தாரணியின் அறிமுகம் இப்படிதான் என்றாலும் அவளின் இன்னொரு முகம் ரொம்ப பலவீனமானது. என்றால் நீங்கள் நம்ம மாட்டீர்கள். எப்படி  ‘பில்டிங் ஸ்ட்ரோங்கு, பேஸ்மன்ட் வீக்’ என்று ’ வடிவேலு சொல்லுவாரே அது மாதிரிதான். ஆடைத் தொழிற்சாலையில் இவ்வளவு வாய் சவடால் காட்டும் அந்தப் பெண்னை ஆறு மணிக்கு பிறகு எங்கேயேயும் பார்க்க முடியாது.
இரவாக போகிறது என்றாலே எங்கிருந்தாலும் ஓடி வந்து ரூமுக்குள் வந்து விடுவாள். அவளுக்கு பேய் பயம் ரொம்பவும் அதிகம். அவளின் பயத்தை அதிமாக்குவது போல சமீபத்தில் அவளின் நண்பியின் வீட்டில் நடந்த தொவில் பூஜையில் ஒரு பூசாரி அவள் மணிக்கட்டில் மந்திரித்த கயிறு கட்டும் போது அந்தக் பூசாரி “உனக்கு களுக்குமார தோசம்” இருக்கு என்று சொல்ல, அன்றிலிருந்து தாரணியின் பயம் மேலும் பல மடங்கானது.
இரவில் அவள் தூங்கும் போது அவளை யாரோ அமுக்குவது போலவும் பக்கத்தில் யாரோ படுத்திருப்பது போலவும் உணர்ந்து பயத்தில் அவள் ‘வீல்’  என்று அலறுவது வாடிக்கையாகிவிட்டது. இந்த நிலையில் அவளுக்கு கைகூடி வந்த எத்தனையோ திருமணங்களும் கடைசி நேரத்தில் கைவிட்டு போவதும் தொடர் கதையாகி இருந்தது.

தாரணிக்கு காதல் என்றாலும் பிடிக்காதாம். அப்படி யாராவது நெருங்கினாலும் ‘போடா லூசு’ன்னு திட்டி விரட்டி விடுவாளாம். அவள் இப்படி நடந்து கொள்வதற்கெல்லாம் காரணம் களுக்குமார தோசம்தான் என்று உணர்ந்து கொண்ட அவள் ஒரு நாள் தமது சொந்த ஊரில் இருக்கும் பூசாரியிடம் சொல்லி தனக்குள்ள பிரச்சினைக்கு ஏதாவது பரிகாரம் கிடைக்குதா என்று பார்ப்பதற்காக வேலைக்கு லீவு போட்டுவிட்டு பூநகரியில் இருக்கும் அவளின் வீட்டுக்கு சென்றிருந்தாள்.
mani srikanthan
முத்து பூசாரி
தமது மண்ணில்  யுத்தம் தின்று துப்பிய மிச்சத்தை பார்த்து மனம் நொந்தவளாக இரண்டு நாட்கள் வீட்டில் ஓய்வில் இருந்தவள். தமது அண்ணனை அழைத்துக் கொண்டு பக்கத்து ஊரில் இருக்கும் ஒரு பூசாரியை பார்த்து வரலாம் என்று கிளம்பினாள்.
அந்த ஊரில் உள்ள பூசாரியை சந்திப்பதென்றால் இரவில்தான் சந்திக்கணுமாம். பகலில் கூட்டம் அதிகமாக இருக்குமாம். அதனால் அவளின் அண்ணனின் ஆலோசனையின் படி இரவு பத்து மணிக்கு அண்ணனின் பைக்கில் அமர்ந்த தாரணி பயணத்தை தொடர்ந்தாள்.
சில நிமிடங்களில் அந்தக் காட்டு பாதையின் ஓரத்தில் ஒரு பெண்மணி கையில் குழந்தையுடன் நின்று கொண்டு லிப்ட் கேட்டாள். அவளை பார்த்து பரிதாபப்பட்ட தாரணி அண்ணனிடம் சொல்லி வண்டியை நிறுத்தி அவளையும் பின்னால் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார்கள்.
பைக் சீட்டில் அமார்ந்த அந்தப் பெண் ‘இந்த நேரத்துல எங்கே போறீங்க’ என்று பேச்சு கொடுத்து வளவளன்னு பேசிட்டே வந்திருக்கிறாள். சில நிமிடங்களில் அவள் பேச்சை நிறுத்தியிருக்கிறாள். என்னாச்சு ஏன் இப்படி அமைதியானாள்னு சந்தேகப்பட்ட தாரணி பைக்கின் சைட் கண்ணாடியின் வழியாக பார்த்தவள் அப்படியே உறைந்து போனாள்.

பின்னாள் இருந்த அந்தப் பெண் தமது கையிலிருந்த குழந்தையை பிய்த்து கடித்து தின்றுக் கொண்டிருந்தாள். அவளின் வாயிலிருந்து இரத்தமும் வழிந்து கொண்டிருந்தது. குலை நடுங்கிப் போன தாரணி பின்னால் திரும்பினாள் ஆபத்தாகிவிடும் என்பதை உணர்ந்து அவளின் அண்ணனின் காதில் ‘பின்னாடி ஒரு பிரச்சினை நடக்குது கொஞ்சம் தள்ளி ஏதாவது கோயில் இருந்தா பைக்கை நிறுத்து என்று சொல்லியிருக்கிறாள். நிலமையை புரிந்து கொண்ட அவளின் அண்ணன் பைக்கை வேகமாக குளக்கட்டு பகுதியில் இருக்கும் எல்லை தெய்வமான ஆஞ்சனேயர் ஆலயத்தை நோக்கி வேக மெடுத்தான்.

ஆலயம் தொட்டடுவிடும் தூரத்தில் இருந்த போது உசாரான அந்த தீய சக்தி தாரணியின்  முதுகில் ஓங்கி ஒரு அடிப்போட்டிருக்கிறது. அந்த நிமிடத்தில் பைக்கும் கட்டுப்பாட்டை இழந்து ஒரு மரத்தில் மோதி குப்புற விழுந்தது. மயக்க முற்ற தாரணியை அவளின் அண்ணன் பூசாரியிடம் சேர்த்திருக்கிறான். ஆனாலும் தாரணி ஏழு நாட்கள் மயக்த்திலேயே இருந்திருக்கிறாள்.

அவளை ஆஞ்சநேயர் ஆலயத்திலேயே குரங்கு குடித்துவிட்டு வைக்கும் மிச்ச இளநீரை இவளுக்கு ஆகாரமாக கொடுத்து காப்பாற்றி இருக்கிறார்கள். அதன் பிறகு உள்ளம் கலங்கிய நிலையிலேயே தாரணி கொழும்பு வந்திருக்கிறாள்.

வந்தவளை பேய் பயம் தொடர்ச்சியாக வாட்டி எடுத்திருக்கிறது. கடைசியில் தாரணியின் நண்பிகள் இரத்தினபுரியிலுள்ள முத்து பூசாரியை அழைத்து வந்து ஒரு பரிகார பூஜையை நடத்த தாரணியின் கழுத்தில் ஒரு மந்திரித்த தாயத்தை கட்ட வைத்திருக்கிறார்கள்.
‘தாரணிக்கு ஆஞ்சநேயர் துணை இருக்கிறதால இவளை தேடி வார எந்த தீய சக்திக்கும் இவளை நெருங்க முடியாது அப்படியே நெருங்கினாலும் இவளின் உடம்புக்குள் நுழைய முடியாது. என்று உத்தரவாதம் கொடுத்த பூசாரி, ''ஆனாலும் சீக்கிரமாக இவளுக்கு ஒரு கல்யாணத்தை நடத்தி விட்டால் எல்லா பிரச்சினையும் முடிந்து விடும்,'' என்று அருள் வாக்கு சொல்லிவிட்டு கிளம்பினார்.

இந்தக்கதையை ஒரு உளவியலாளரிடம் சொன்னபோது, இக்கதையில் சில ஓட்டைகள் இருப்பதால் தான் இதை நம்பப் போவதில்லை என்றார்.ஆனால் தாரணி விரைவிலேயே திருமணம் செய்து கொள்வதன் மூலம் ‘களுகுமாரயா’ பிரச்சினையிலிருந்து விடுபட முடியும் என்ற அவர், உளவியல் சிக்கல் தீர்ந்துபோகும் என்ற விளக்கத்தையும் தந்தார்.

Thursday, April 5, 2018

இலங்கையிலும் மாதம் ஒரு இலங்கைத் தமிழ்ப் படம் வரத்தொடங்கிவிட்டதே!

ராஜேஸ், கொழும்பு

2018 மலர்ந்த போது இப்படி ஒரு அதிசயம் நடக்குமென்று கனவில் கூட நினைத்திருக்கவில்லை. இலங்கை சினிமா துளிர் விடுகிறது என்று சினிமானந்தா பதில்களில் அடிக்கடி எழுதியிருந்தோம். ஆனால் அது வடக்கு பிராந்தியத்துக்கு மட்டுமே பொருத்தமாக இருந்தது.

வடக்கில் மாதம் ஒரு படம் திரையிடப்படுகிறது. அதில் லாபமோ, நாட்டமோ தெரியவில்லை. ஆனால், ஒரு திரையரங்கில் மூன்று காட்சிகளுடன் பெரும்பாலும் ஒரு படம் முடிந்து விடுகிறது. ஆனால் அந்த முயற்சிகள் பெரிதும் பாராட்டுக்குரியவை. தலைநகரான கொழும்பிலும் நாட்டின் மலையகம் மற்றும் ஏனைய பகுதிகளில் இப்படங்கள் ஏன் திரையிடப்படுவதில்லை என்று தெரியவில்லை.

இலங்கை தமிழ் படங்கள் திரையிடப்படுவதற்கென்றே ஒரு திரையரங்கை கொழும்பில் நிரந்தரமாக வைக்கவேண்டும் என்று இதே பகுதியில் எழுதியிருக்கிறோம்.

இப்போது அடுத்தடுத்த மாதங்களில் கோமாளி கிங்ஸ் இதுகாலம் என்று வெளிவந்து மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

இருட்டு மறைந்து பொழுது விடிந்துவிட்ட நிலையை இது ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஒன்று தெரியுமா?

குறிப்பிட்ட ‘கோமாளி கிங்ஸ்’ , ‘இது காலம்’ ஆகிய இரு படங்களும் மூன்று வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டவை. அப்போது இருந்த TREND வேறு. இப்போது நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர்கள் திரைக்கதைகளை தட்டச்சு செய்து அழகாக பைண்ட் செய்து வைத்துக் கொண்டு தயாரிப்பாளர்களைத் தேடியலைகின்றனர். இவர்களில் அநேகமானோர் திறமைசாலிகள்.
தென்னிந்திய தமிழ்ச் சினிமாவில் இப்போது மறுமலர்ச்சியை ஏற்படுத்திவரும் இளைய தலைமுறை இயக்குனர்களுடன் போட்டி போடக்கூடியவர்கள். ஆனால் தயாரிப்பாளர்கள் அவர்களுக்கு கை  கொடுப்பார்களா? அவர்களது திறமைகளை அங்கீகரிப்பார்களா என்பது தான் இப்போது கேள்வியாக உள்ளது.

தென்னிந்திய தமிழ்ப்படங்களே இங்கு மூன்றாவது வாரத்தை எட்டுவதற்கு சிரமப்படும் நிலையில் ‘கோமாளி கிங்ஸ்’ ஒரு மாதத்தை கடத்திருக்கும் இந்த நேரத்தில், இலங்கையில் அதிக வசூலை பெற்ற இலங்கை தமிழ்ப்படம் என்ற பெருமையை பெற்றுள்ள நிலையில் தயாரிப்பாளர்கள் கொஞ்சம் யோசிக்கலாமே!

தென்னிந்திய தமிழ்சினிமா இப்போது பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறது. இனிமேல் அங்கு சிறிய படங்கள் ஒடுவது பெருஞ் சிரமம். சில புதிய இயக்குனர்கள் திரையரங்குகளை நம்பாமல் NETFIXக்கு மாறியுள்ளனர். அபோபோல் இலங்கையின் எதிர்கால தமிழ்பட இயக்குனர்கள் தென்னிந்திய சினிமா பாணியை பின்பற்றாமல் வேறு வழிகளில் சிந்திப்பார்களேயானால் வெற்றி பெறலாம்.
இதேநேரம் இப்போதைக்கு இல்லையென்றால் இலங்கை தமிழ்சினிமா எதிர்காலத்தில் பிரச்சினைகளை எதிர்நோக்கக் கூடும்.

திரைப்படங்களின் வெளியீடு விநியோகம்  மற்றும் தயாரிப்பாளர்களை ஊக்குவித்தல் ஆகியவையே முக்கியமாகும். இதர பிரச்சினைகள் இருந்தாலும் இந்த முக்கிய பிரச்சினைகளை சுமூகமாக தீர்ப்பதற்கும் சரியான முடிவுகளை எடுப்பதற்கும் குழுவொன்றை அமைத்து இயங்குவது நல்லது.

இலங்கை தமிழ் படத்துறையில் முன்னர் கலைஞர்களிடையே இருந்த பொறாமை காலை வாரி விடுவதல் என்பன பெருமளவு பாதிப்புகள் ஏற்பட்டது. இனிமேல் அவ்வாறு ஏற்படாமல் இருப்பதை இப்போதே உறுதி செய்து கொண்டால்தான் எதிர்காலம் சிறக்கும். 


கண் சிமிட்டி நடிகை பிரியா வாரியர் ஹிந்திக்கு போய் விட்டாரா?
ஜான்ஸிராணி, வவுனியா

அவர் தயார்தான். ஆனால் அதில் ஒரு சிக்கல், மலையாளத்தில் உருவாகும் ஒரு அடார் லவ் என்ற படத்தில் கண்சிமிட்டியும் விரல்களால் துப்பாக்கி சூடு நடத்தியும் ஒரே நாளில் உலகம் முழுவதும் பிரபலமானவர் பிரியா வாரியர்.

அவரை தெலுங்கு படத்தில் நடிக்க கேட்டுள்ளனர். அதேவேளை  ஹிந்தியில் தீபிகா படுகோனின் காதலர் ரன்வீர் சிங்சின் ஜோடியாக ‘சிம்பா’ படத்தில் நடிக்க இரண்டு கோடி ரூபா சம்பளத்துடன் அவரை கேட்டுள்ளனர். அவரும் சம்மதம் சொல்லி விட்டார். ஆனால் ‘ஒரு அடார் லவ்’ வெளியிடப்படும் வரை வேறு படங்களில் நடிப்பதில்லை என்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதால் தவிப்பில் இருக்கிறார் பிரியா.

ஒரு அடார் லவ்’ வெளியிடப்பட்டால் தான் அவருக்கு விடுதலை!

இந்திய சினிமாவில் என்ன புதுசு?
ஜானகி , பதுளை
ஹொலிவூட்டின் புகழ்பெற்ற டைரக்டர் கிறிஸ்தோபர் நோலன் சமீபத்தில் இந்தியா வந்ததுதான் இப்போதைய பேசுபொருள். இன்செப்சன், மெமன்டோ,டன்கர்க் ஆகிய படங்களை இயக்கி பெயர் பெற்ற இவர் ‘டிஜிட்டல் மயத்தில் சினிமாவின் எதிர்காலம்’ என்ற கருத்தரங்கில் பங்குபற்ற மும்பாய் வந்திருக்கிறார்.

அமிதாப் பச்சன், கமல்ஹாசன், அமீர்கான்,ஷாருக்கான், இயக்குனர்கள், மணிரத்தம், அனுராக் சாஷியப் ஆகியோரும் இந்த கருத்தரங்கில் பங்குபற்றுகின்றனர்.