நேர்காணல் : மணி ஸ்ரீகாந்தன்
தென்னிந்திய தொலைகாட்சிகளின் மெகா சீரியல்களின் மகா இயக்குனர் அருள்ராய். இவர் சித்தி, நாதஸ்வரம், உள்ளிட்ட மெகா சீரியல்களில் இணை இயக்குநராக பணியாற்றிவர். அதன் பிறகு சமீபத்தில் ‘சன்’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘வம்சம்’ மெகா சீரியலின் இயக்குநராகவும், ‘கலர்ஸ்’தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘வேலுநாச்சி’தொடரின் இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் சென்னை ஈக்காட்டுத்தாங்களில் உள்ள அவரின் இல்லத்தில் வைத்து வண்ண வானவில் சஞ்சிகைக்காக ஒரு இனிய காலை வேளையில் சந்தித்துப் பேசினோம்.
நான் அப்போதே நன்றாக கவிதை எழுதுவேன். அப்போது எனக்குள் ஒளிந்திருந்த சில கதைகளை என் நண்பர்களிடம் சொன்னேன். அவர்கள் சொல்லும் கதைகளை நான் அப்படியே மாற்றி வேறு வடிவத்திலும் கதைச் சொல்லும் திறமையை வளர்த்துக் கொண்டேன். நாளடைவில் ஒரு கதை சொல்லி என்னிடம் இருப்பதை உணர்ந்து கொண்டேன். சென்னை ரங்கநாதன் தெருவில் அன்னம்மாள் கட்டடிடத்தில் ரூம் எடுத்து தங்கினேன். அப்போ நான் தங்கியிருந்த ரூமுக்கு பக்கத்திலிருந்த கீதாஞ்சலி ரெஸ்டோரண்டில் வேலை கிடைத்தது அதுல ஒரு நாளைக்கு முந்நூறு ரூபா டிப்ஸ் கிடைத்தது. ஒரு நாளைக்கு ரூம் வாடகை நூற்றி ஐம்பது போக மிச்ச பணத்தை ஜொலியா செலவு பண்ணிட்டு இருந்தேன்.அப்போ சென்னையில கிடைச்ச சின்ன சின்ன வேலை எல்லாம் செய்தேன்.
சினிமா கனவோட வந்த நான் அதை மறந்து சென்னையில் ஜொலியாக சுற்றியதால் நான் வந்த வேலையின் நோக்கம் தாமதமாகியது.
ஒரு சமயத்தில் நானும் சமுத்திரகனியும் ஒரே அறையில் தங்கியிருந்தோம். அப்போ சமுத்திரகனி சுந்தர் கே. விஜயனிடம் இணை இயக்குநராக பணியாற்றி வந்தார்.அப்போ இயக்குனர் சி.ஜே. பாஸ்கர் சார் கவிதாலயாவுக்காக சீரியல்கள் செய்து கொண்டிருந்தாராம். அந்த சமயத்தில் அவருக்கு உதவிக்கு ஆள் தேவைபட்டிருக்கு அதை அவர் சமுத்திரகனியிடம் சொல்ல அவர் என்னிடம் வந்து சொல்லி என்னை சி.ஜே.பாஸ்கரிடம் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது ராதிகா மேடம் சித்தி தொடர் செய்வதற்காகான பேச்சுவார்த்தை போயிட்டு இருந்தது. இயக்குனர் சி.ஜே.பாஸ்கர் அந்த தொடரை இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டபோது நானும் அதில் இணைந்து கொண்டேன்.
| கலைஞர் கையில் விருது, அருகே சரத்குமார் மற்றும் ராதிகா |
அதன் பிறகு திருமுருகன் சாரிடம் இணைந்து ‘மெட்டி ஒலி’ சீரியலில் பணியாற்றினேன். அந்தக் காலக்கட்டத்தில் எனக்கும் திருமுருகன் சாருக்கும் நல்ல நெருக்கம் ஏற்பட்டது. இயக்குனர் சி.ஜே.பாஸ்கரிடம் எப்படி டைரக்ஷன் இருக்கனும் எப்படி நடிகர்களிடம் வேலை வாங்கணும் என்பதை கற்றுக்கொண்டேனோ அதுமாதிரி திருமுருகனிடம் எப்படி காட்சிகளை அமைப்பது, எப்படி நடிகர்களோடு ஐக்கியமாக இருப்பது போன்ற விசயங்களை கற்றுக் கொண்டேன். அதன் பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் கே.பி சார் எழுதி இயக்கிய தேன்மொழியாள் சீரியலை சமுத்திரக்கனி செய்தார் நான் இணை இயக்குநராக இருந்தேன். அதன் பிறகு சமுத்திரக்கனி சினிமாவுக்கு போய்விட, நானே அந்த நாடகத்தை இயக்கினேன் அந்த வகையில் கே.பி சாரிடம் நானும் சிஷ்யனாக பணியாற்றினேன் என்பது ஒரு பெரிய வரப்பிரசாதம்.அதன் பிறகு சமுத்திரக்கனியோடு சில படங்களில் பணியாற்றியும் நடித்தும் இருக்கிறேன். தென்றல், நாதஸ்வரம். பத்து மணிக் கதைகள் என்று நிறைய சீரியல்களில் பணியாற்றியிருக்கிறேன்.
| கே.பாலச்சந்தருடன் அருள்ராய் குடும்பம். |
என்ற அருளிடம்,
“தமிழக தொலைக்காட்சி சீரியல்களில் ஒரு குடும்பத்தை கலைப்பது, சூனியம் வைப்பது, விஷம் கொடுப்பது, அடியாள் வைத்து அடிப்பது கொல்வது என்று எல்லா கெட்ட வேலைகளையும் பெண்களே செய்வது போன்று காட்சிப் படுத்துகிறார்களே, தமிழக பெண்கள் அவ்வளவு கொடூரமானவர்களா?” என்று கேட்டோம்.
“நீங்கள் அப்படி தப்பா நினைக்கக் கூடாது, பெண்கள் இல்லாத உலகமே இல்லை.ஒரு சின்ன குடும்பத்தை எடுத்துக் கொண்டாலே அதில் பெண்களின் மேற்பார்வையும்,அவர்களின் ஆளுமையுமே ரொம்பவும் அதிகமாக இருக்கும். பெண்களிடம் குடும்ப பொறுப்பை ஒப்படைச்சிட்டாலே ஆண்கள் நிம்மதியாக இருக்கலாம். நமது வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். அப்போ பெண்களுக்கு பெண்கள் சார்ந்த விசயம் எடுத்தால்தான் அது அவர்களுக்கு பிடிக்கும். நாயகன் நல்லவனாக இருக்கும் போது ஒரு பெரிய வில்லனை கெட்டவனை காட்டினால்தான் கதையில் சுவாரஸ்யம் இருக்கும் அது மாதிரிதான் இதுவும் ஒரு குடும்பத்தை சுற்றி கதை நடப்பதால் அம்மாவுக்கு மருமகளை பிடிக்காது, மகளுக்கு அன்னியை பிடிக்காது. மகளுக்கு மாமியாரை பிடிக்காது. அப்போ அவங்கள மையமாக வைத்து கதை செய்யப்படுகிறது. இதுல போட்டுத் தள்ளுரதெல்லாம் யதார்த்தத்துக்கு பொருந்தாது என்பது உண்மைதான் ஆனால் இது கதை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாடகத்தை ஒரு கதையாக பார்க்க வேண்டும் அவ்வளவுதான். அடிப்படையில் தமிழக பெண்கள் மிகவும் நல்லவர்கள்” என்று நற்சான்றிதழ் தந்தார் (இந்த பதிலை அருள் எம்மிடம் சொல்லும் போது அவரின் துணைவியாரும் பக்கத்திலேயே ஏதோ வீட்டு வேலையில் இருந்தார் அவரின் காதில் பேசுவது விழுந்துவிடும் என்று அருள் ஜாக்கிரதையாக பதில் சொன்னாரோ தெரியவில்லை…)
| அருளுடன் மணி ஸ்ரீகாந்தன் |
“அப்படி கிடையாது, அதுவும் வாழ்க்கையில் நடக்கிற வாழ்க்கையோடு, சம்மந்தப்பட்ட விடயம்தானே! அதனால் அழுகையும் வாழ்க்கையில் ஒரு பகுதிதான்.இப்போ நாம இனிப்பும் சாப்புடுகிறோம் காரமும் சாப்பிடுகிறோம். அதுமாதிரிதான் துக்கமும் சந்தோசமும் மாறி மாறி வருகிறது. சீரியல்களை பொறுத்தவரையில் அழுகை என்பது ஒரு சிறப்பு தகுதி அல்ல. காட்சிக்கு தேவைப்படும் இடத்தில் நாம் அழுகையை வைக்கிறோம். ஒரு தொலைக்காட்சியின் ‘டீ.ஆர்.பி’க்காகவும் இது அவசியமாகிறது.” என்று விளக்கம் தந்தார் அருள்ராய்.
“நாடகங்களில் இவருக்கு பதில் இவர் என்று நடிக நடிகைகள் மாற்றப்படுவது எதற்காக என்பது அடுத்த கேள்வி.
“இது நாடகங்களை பொறுத்தவரையில் தவிர்க்க முடியாத விசயம். படத்தை எடுத்து முடித்து விட்டு கொடுக்கிற சினிமா போன்றது இல்லை. இங்கே தினமும் சூட்டிங் இருக்கும் ஒரு நாடகம் வருடக்கணக்கில் செல்லும். அதனால் அந்த நாடகத்தில் நடிக்கும் நபருக்கு இதை விட பெரிய ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கலாம், அல்லது கல்யாணமாகி இருக்கலாம், உடம்பு முடியாமல் இருக்கலாம் இப்படி ஏதாவது பிரச்சினை வரும்போது நடிகர்களை மாற்றுவது கட்டாயமாகிறது ”
என்ற அருளிடம், “ஆயிரம் பகுதிகளை கடந்த நாடகங்களில் சில முடியும் போது நிறைய கிளைக்கதைகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாமலேயே போய்விடுவதாக சொல்கிறார்கள். உண்மையில் என்ன நடக்கிறது. உங்களை அறியாமலேயே தவற விட்டு விடுகிறீர்களா?”
(“நல்லாவே வலை விரிக்கிறீங்க..”ன்னு சொல்லி சிரித்து விட்டே தொடர்ந்தார்)
“இப்போ ராமசாமி சுப்புலட்சுமியை லவ் பண்றான். இது மக்களுக்கு எந்தளவுக்கு பிடிக்குது என்று பார்ப்போம். ‘டீ.ஆர்.பி.’எகிறவில்லை என்றால் அடுத்து ராமசாமி, மகாலட்சுமியை லவ் பண்ணுற மாதிரி காட்சியை அமைப்போம். ஆனால் பிரதான கதைச்சுவடு மட்டும் மாறாமல் அப்படியே இருக்கும். கிளைக்கதைகளை மட்டும் அப்படியே ஜம்ப் பண்ண வைத்து வேறு டிராக்குக்கு நகாத்தி விடுவோம். ‘டீ.ஆர்.பி’யை இலக்காக வைத்துதான் நாடகங்களை இயக்குகிறோம்.” என்ற உண்மையை அருள் போட்டு உடைத்தார்.


No comments:
Post a Comment