Wednesday, June 15, 2022

நித்தியானந்தாவுக்கு நடந்தது என்ன?



‘தன்னை தாழ்த்துகிறவன் எவனோ
அவன் உயர்த்தப்படுகிறான்’ என்பது ஒரு வேத நூல் சொல்லும் அழகான வார்த்தை.  அதை அப்படியே, அச்சுப் பிழைக்காமல் நகலெடுத்ததுபோல் தமது வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தி இன்றைய இளைய தலைமுறையினரிடம் பெரும் வரவேற்பைப் பெற்றவர்தான் நம்ம நித்தியானந்தா.
“நான் ஒரு எச்ச சோறு. நான் ஒரு பொறம்போக்கு. என்னையெல்லாம் யாரும் கண்டுக்கப்படாது. அப்படியே ஓடுகாலி ஓடட்டும்னு வேடிக்கை மட்டும்தான் பார்க்கணும்”ன்னு நித்தி என்னதான் சொன்னாலும் அவர் என்ன செய்கிறார், அவர் சாப்பிட்டாரா, தூங்கினாரான்னு அவரைப் பற்றி என்ன செய்தி வந்திருக்குதுன்னு நெட்டில் தேடும் நெட்டிசன்களின் ஆர்வத்தை அவ்வளவு ஈசியாக கட்டுப்படுத்திவிட முடியாது. இப்படி தினமும் நித்தி பற்றிய செய்திகளை தேடும் நெட்டிசன்களுக்கு பேரிடியாக வந்த செய்திதான் அவரின் மரணச் செய்தி.

சுவாமி நித்தியானந்தா கோமா நிலைக்குச் சென்றுவிட்டார், அவர் சமாதி நிலையில் இருக்கிறார் என்பது போன்ற செய்திகளின் உண்மைத்தன்மைதான் என்ன என்பதை கொஞ்சம் அலசி ஆராய்ந்து பார்த்தோம்.நித்தியானந்தா தினமும் தமது ‘சத்சங்’ உரைகளை தமது உத்தியோகபூர்வ யூடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்துவிடுவதை வழமையாக கொண்டிருந்தார். நித்தியின் ‘சத்சங்’ உரைகளை கேட்பதற்காக உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள், பக்தர்கள் என பலரும் காத்துக்கிடந்தார்கள். இந்த நிலையில்தான் கடந்த சில மாதங்களாக நித்தியின் ‘சத்சங்’ உரை திடீரென நிறுத்தப்பட்டிருந்தது, இதனையடுத்து நித்தியின் மீது ஆர்வமுள்ள ரசிகர்கள் அவரைப் பற்றிய செய்திகளை பலவிதமாக திரிபுபடுத்தி தமது வலைத்தளங்களின் டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிப்பதற்காக புகுந்து விளையாடத் தொடங்கினார்கள்.இந்திய தொலைக்காட்சிகளும் இதே வேலையைதான் செய்து வருகின்றனவாம். “செய்தி நிறுவனங்கள் பரப்பும் பொய்களை நம்பவேண்டாம். எத்தனை விளக்கம் கொடுத்தாலும் வாங்கிய பணத்திற்காக கூவியே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ள இந்து விரோத ஊடகங்கள், பகவான் நித்தியானந்தா பரமசிவத்தின் உடல்நிலை பற்றிய வதந்தியைப் பரப்பி, மக்களிடம் வெறுப்பு பிரசாரம் செய்து வருகின்றார்கள்" என்று நித்தியானந்தாவின் கைலாசா பிரதிநிதிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.

கர்நாடக மாநிலத்தின் பெங்களூருக்கு அருகே அமைந்திருக்கும் பிடதி ஆசிரமம் மற்றும் அகமதாபாத் ஆசிரமங்களில் நடைபெற்றதாக கூறப்படும் பெண் சிஷ்யைகள் மீதான பாலியல் சீண்டல்கள், சிறுமிகள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் தேடப்பட்டுவரும் நித்தியானந்தா, வடிவேலு ஸ்டைலில் கோயில் கட்டுவதாக சொல்லியும், தம்மை நம்பி வந்தவர்களிடம் சித்து வேலைக் காட்டியும் வசூலித்த பல கோடி ரூபா பணத்தையெல்லாம் தங்கக்கட்டிகளாக மாற்றி, நேபாளம் வழியாக இந்தியாவை விட்டு வெளியேறியதாகவும் அதன்பிறகு அவர் பசுபிக் பெருங்கடலில் ஒரு தீவை சொந்தமாக வாங்கி அதற்கு ‘கைலாசா’ என்று பெயர் வைத்து தனிக் கொடி, தனிப் பாஸ்ப்போட், கைலாசா ரூபா நோட்டுகள் என்றெல்லாம் செய்திகளைப் பரவவிட்டு நம்மை அதிரவைத்ததெல்லாம் சுவாரஸ்யமான தனிக் கதை.


என்னதான் நித்தியானந்தா கிரிமினல் குற்றவாளி என்றாலும் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
அந்தளவுக்கு வசீகரமான கலகலப்பு நிறைந்ததுதான் அவரது ஆன்மீகப் பேச்சு. தமது உரையில் மிகவும் எளிய தமிழ் சொல்லாடல்களைப் பயன்படுத்தி சோஷியல் மீடியா மாம்சுகளின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர்தான் நித்தி.

சாமியார்களுக்கு சூடு, சொரணை இருக்கவே கூடாது என்பதை நோ சூடு, நோ சொரணை என்று நகைச்சுவையாக பேசிய நித்தி, தற்போது ஒரு மரக்கட்டையை போல் மெலிந்த தேகத்துடன் உணர்வில்லாமல் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், நித்தி, தாம் வேறொரு உலகத்தில் சஞ்சாரம் செய்வதாகவும் அவ்வப்போது பூமிக்கு வந்து செல்வதாகவும் சொல்கிறார்.சமாதி நிலையில் இருக்கும் அவரின் உடம்புக்குள் நித்தியின் ஆத்மா உள்ளே வந்ததும் திடுக்கிட்டு விழித்துக்கொள்வதாகவும் அப்போது அவரின் பக்கத்தில் இருக்கும் சிஷ்யைகளை (குறிப்பாக ரஞ்சிதாவை) அடையாளம் தெரிவதில்லை என்றும், தாம் ஒரு பலூன்போல மிதப்பதை உணர்வதாகவும் சொல்கிறார். இரண்டு, மாதங்களாக உணவு, தண்ணீர் என்று எதுவுமே இல்லாமல் இருக்கும் நித்திக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் மருத்துவர்கள் குழம்பியிருப்பதாகவும் 27 மருத்துவர்கள் பரிசோதனை செய்தும் நித்தியின் உடம்பில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் கண்டுபிடிக்க முடியாதுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, நித்தியானந்தாவின் முகநூல் கணக்கில் முகம் காட்டாத அவரின் பிரதிநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், பதினெட்டு வயது இளைஞனைபோல் இதயம் துடித்து, உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்குவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள் என்றும், நித்திய சிவ பூஜையும் தொடர்ந்து நடைபெறுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
சிறு வயதில்


இந்நிலையில், நித்தியானந்தா ஒரு புதிய அறிவிப்பை
வெளியிட்டிருக்கிறார் அதில், தன்னால் முழுமையாக தூங்க முடியவில்லை என்றும் ஒரு இட்லியை கூட சாப்பிட முடியவில்லை எனவும் எனவே தமது ஆசிரமத்தின் நிர்வாகத்தை சிஷ்யர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார்.
“நான் தற்போது பெரிய காற்று பலூனாக உணர்கிறேன். அத்தோடு எனது அடையாளங்கள் பிரபஞ்சத்துடன் நகர்வதை உணர முடிகிறது. முழுமையான தனிமை. நான் என்பதைத் தவிர, வேறு எதுவும் இல்லை. ஆனால், தனிமையின் சோர்வு, சளிப்பு இல்லை. இப்போது நான் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் போது அனைத்து நாடிகளும் சமாதிக்குள் இறங்குகின்றன. சுவாசம் இல்லை, விசித்திரம் இல்லை, விசித்திரமே இல்லாத அனுபவம் ஏற்படுகிறது. நான் என் உடலை வலுவாக வைத்திருப்பதாக என்னை கவனித்துக்கொள்ளும் மருத்துவர் சொல்கிறார்” என்று குறிப்பிட்டுள்ள நித்தி,
“இன்னும் சில மருத்துவ சோதனை முடிவுகள் வந்துள்ளன. மருத்துவ அறிக்கையின்படி உடல் முழுமையான ஆரோக்கியமாக உள்ளது. ஆனால், இன்னும் ஒரு இட்லி சாப்பிட வரல. 21 நிமிசம் தூங்க வரல. பனி மூடிய மலைகள் என்னை மிகச் சிறந்த ஆற்றல் உள்ளவனாக உயிரோடு வைத்திருக்கிறது. நான் குரு பராம்பராவுக்கு விருப்பமான முழு பாவ வாழ்க்கையை வாழ்ந்து விட்டேன்.
நான் நீண்டகாலமாக வாழ வேண்டும் என்று விரும்பியிருந்தேன். இந்த உலகிலிருந்து வெளியேற வேண்டுமென்று விரும்பியதில்லை.
நான் முற்றிலும் நிறைவடைந்து விட்டேன். சமாதியை பற்றிய ஒவ்வொரு விபரமும் தெளிவாகப் புரிகிறது. நீங்கள் அனைவரும் என்னுடன் இருப்பதால் இதை அனுபவிக்கலாம்” என்ற நித்தி, தம்மை பரமசிவன் மக்களுடன் பேசுவதற்கான ஒரு ஒலிப்பெருக்கியைப் போன்று பயன்படுத்த எண்ணுகிறார் என்று அந்தப் பதிவில் நித்தியானந்தா ஒரு குழப்ப நிலையில் பதிவிட்டுள்ளதை நாம் அவதானிக்கலாம்.
கடந்த ஏப்ரல் 13ஆம் திகதிதான் நித்தி சமாதி நிலையை
அடைந்துவிட்டதாக செய்திகள் உலா வந்தன. அதனைத் தொடர்ந்து நித்தியானந்தாவின் சீடர்கள் தமது இணையப் பக்கங்களிலும், ஆசிரமத்திலும் நித்தியானந்தாவின் புகைப்படங்களை வைத்து விளக்கேற்றி பிரார்த்தனைகளில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.
குறிப்பாக, ராஜமாதா என்றழைக்கப்படும் நடிகை ரஞ்சிதாவின் இணையப் பக்கத்திலும் பிரார்த்தனைப் படங்களே பகிரப்பட்டுள்ளதால் நித்தியானந்தா விடயத்தில் ஒரு சலசலப்பு எழுந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பாக நித்தியானந்தா, தாம் 200 வருடங்கள் வாழப்போவதாகவும் அதற்கான வழிமுறைகளை தாம் செய்துவிட்டதாகவும், வேப்பிலை, அருகம்புல், கடுக்காய், ஏலக்காய், கிராம்பு உள்ளிட்டவைகளை உணவில் சேர்த்து, நீராகாரத்தை உண்டு வருவதாகவும். தாம் ஐந்து தலைமுறைகளை பார்க்கப்போவதாகவும் தாம் சொல்லும் ஆயுர்வேத மருத்துவ முறைகளை நம்பாமல் மீம்ஸ் போட்டு கிண்டலடிப்பவன் செத்துப் போவான்னு நித்தி சொல்லியிருந்ததை நாம் சமூக வலைத்தளங்களில் பார்த்தோம்.


எனவே, நித்தியானந்தா தமது வழமையான உணவு
முறைகளிலிருந்து மாறி 200 வருடங்கள் உயிர் வாழ்வதற்கான முயற்சியில் இறங்கி, உடலை வருத்தி செய்த உணவுப் பயிற்சிகளில் ஏற்பட்ட மாற்றத்தினாலேயே அவருக்கு கல்லீரல் அலர்ஜி, சிறுநீரகத் தொந்தரவு என ஏற்பட்டதோடு தற்போது நுரையீரல் தொற்று ஏற்பட்டு மூச்சுவிடவே கஷ்டப்படுவதாகவும் அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சுவாசம் வழங்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.



இதனை மறுத்துள்ள நித்தியானந்தாவின் சிஷ்யை மாணிக்க ஜோதியானந்தா சுவாமி, பரமசிவம் சமாதி நிலையில் இருப்பதாகவும் அவர் விரைவில் நம் முன்னே வந்து ‘சத்சங்’ உரையாற்றுவார் என்றும் தாங்கள் வெறும் பாவாடை சாமியார்கள் அல்ல என்றும், பரமசிவனிடமிருந்து நேரிடையாக தீட்சை பெற்றவர்கள் என்றும் தாங்கள் ஆசிரம புனர்நிர்மாணப் பணிகளை தொடர்ந்து முன்னெடுக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.
சமாதி நிலை என்றால் என்ன? என்று தமிழகத்தில் வசிக்கும் நித்தியானந்தாவின் ஆதரவாளர் ஒருவரிடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டோம்,
“சமாதி நிலை என்பது பிரபஞ்ச சக்திகளை உள்வாங்குவது. இந்த நிலை முற்றிலும் ஆரோக்கியமான விடயம்தான். உடலுக்கு எந்த தீங்கும் ஏற்படாது. அது உண்மையிலேயே பிரபஞ்ச ஒழுங்கு முறை. ஞானிகள், மகான்கள் ஆழ்ந்த தவத்தில் இருக்கும்போது இந்த உடலின் வெளிப்புறம் எந்த செயலையும் செய்ய முடியாத ஒரு மரக்கட்டைபோன்றுதான் இருக்கும். அந்தக் காலத்தில் வாழ்ந்த சதாசிவ பிரமேந்திர சுவாமிகள் சமாதி நிலையில் இருந்தவர்தான், ஒரு முறை சதாசிவ பிரமேந்திர சுவாமிகள் காவிரி கரையின் ஓரத்தில் சமாதி நிலையில் தவமிருந்தார்.

அப்போது பெரிய காட்டாற்று வெள்ளம் வந்ததில் பிரமேந்திர சுவாமிகளும் அந்த வெள்ளத்தில் சிக்குண்டு அடித்துச் செல்லப்பட்டார். அந்தக் காட்சியை நேரில் பார்த்த மக்களும் “அய்யோ சாமியாரை வெள்ளம் கொண்டு போயிடுச்சே"ன்னு பதறினார்கள். இந்த சம்பவம் நடந்து சில மாதங்களுக்கு பிறகு காவிரி ஆறும் வற்றிப்போனது அப்போது ஓர் இடத்தில் விவசாயிகள், விவசாயத்துக்காக பூமியை மண் வெட்டியால் வெட்டிக்கொண்டிருந்தார்கள்.
அப்போது ஒருவரின் மண்வெட்டி வேறு எதையோ வெட்டியதை உணர்ந்த விவசாயி, மண்வெட்டியை உற்றுப் பார்த்தார்.
அப்போது மண்வெட்டியின் ஓரத்தில் இரத்தம் இருந்ததை அவதானித்த அவர், பதறிப் போனார். பிறகு மற்றவர்களும் வந்துவிட கைகளாலேயே மண்ணை அப்புறப்படுத்திய போது அங்கே சில மாதங்களுக்கு முன்னாள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சதாசிவ பிரமேந்திர சுவாமிகள் தியான நிலையில் அமர்ந்திருந்ததையும். அவரின் தலையிலிருந்து ரத்தம் கசிந்து கொண்டிருப்பதையும் அவதானித்தார்கள். அதன் பிறகு சுவாமி சுய நினைவுக்கு வந்து அந்த இடத்திலிருந்து நடந்து சென்றிருக்கிறார். இதே நிலையில்தான் தற்போது நித்தியானந்தா இருப்பதாகவும் அவரால் எந்த செயலையும் செய்ய முடியாது என்றும் அவர் சமாதி நிலையிலிருந்து பூரணமாக மீண்டதற்கு பிறகே நமக்கு அவர் அருள்பாலிப்பார்”ன்னு அந்த நண்பர் மெய்சிலிர்த்து சொன்னார்.
திருவண்ணாமலையில் நித்தியானந்தாவுக்கு 16ஆவது வயதில் யோக பட்டாபிஷேகம் நடத்தப்பட்டு அவரை குருபீடத்தில் அமர்த்தியிருக்கிறார்கள். அன்றிலிருந்து இன்றுவரை சமாதி நிலைக்கான பயிற்சிகளை எடுத்துவந்த நித்தியானந்தா தமது 44ஆவது வயதில் சமாதி நிலையை அடைந்துள்ளதாகவும் அவரின் பக்தர்கள் பெருமிதம் கொள்கிறார்கள்.


இந்நிலையில், தமிழகத்தின் பிரபலமான சமூக ஆர்வலரும், டாக்டருமான சர்மிலா பாலாஜியிடம் நித்திக்கு என்ன வியாதி வந்திருக்கும் என்று கேட்டதற்கு, “அவர் செய்த அழிச்சாட்டியங்களுக்கு யாருக்கும் வரக்கூடாத வியாதி வந்திருக்கும். அவர் உடல் மெலிந்து கிடப்பதைப் பார்த்தால் அப்படித்தான் தோணுகிறது” என்று நக்கலாகவே பதிலளித்திருக்கிறார்.
இதேவேளை, நித்தியின் பாலியல் வழக்கு, கைலாசா கணக்கு மற்றும் பண பரிமாற்றம் என்று அத்தனையையும் நித்தியானந்தா குருபீடத்தின் ராஜமாதாவான ரஞ்சிதாவின் கண் அசைவிலேயே நடப்பதாகவும், நித்திக்குப் பிறகு அவரின் ஆசிரமப் பணிகளை தொய்வின்றி தொடர்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அவர் செய்திருப்பதாகவும் நம்பகமாக செய்திகள் கிடைத்திருக்கின்றன.
இருந்தாலும் இந்திய பொலிஸ் ஒரு புதுக் கணக்கு போடுகிறது. அதாவது, நித்தி இறந்துவிட்டதாக ஒரு பொய் செய்தியை நம்பவைத்து நித்தியின் ஃபைலை மூடிய பிறகு நித்தி இன்னொரு கெட்டப்பில் மொட்ட பாஸ் ‘சிவாஜி’ பட ரஜினிபோல் இந்தியாவுக்குள் புதிய சாமியாராக ரீஎன்ரீ கொடுக்கலாம். என்று நம்புகிறார்கள்.
யாருக்குத் தெரியும் பக்த கோடிகள் சொல்வதைபோல் திரும்ப வந்துட்டேன்னு சொல்லுன்னு நாளை அவர் கிறீன் மேட் உதவியுடன் ‘சத்சங்’ செய்யலாம்.
எது எப்படியோ, நித்தியின் ரசிகர்கள் அவரின் செய்திகளை கூகுலில் தேடிப்படித்து குஜாலாகவே இருக்கிறார்கள்🔴
一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一
எனது கட்டுரைப் பதிவு, தமிழன்  நாளிதழில் 2022, ,ஜூன், 05ம் திகதி வெளியானது.

Friday, June 3, 2022

மஹிந்த வெளியேறியதற்கு காரணம் மாந்திரீகமா?



லங்கை அரசுக்கு எதிராக மக்கள் புரட்சி ‘கோட்டா கோ கம’ எனும் தொனிப்பொருளில் மக்களை அணித்திரளச் செய்து அவர்களை காலிமுகத்திடலில் ஒன்றிணைத்திருக்கிறது.
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்று வரும் இந்த மக்கள் எழுச்சிப் போராட்டம் ‘மைனா கோ கம’ மற்றும் ‘நோ டீல் கோ கம’ உள்ளிட்ட பல பரிணாமங்களை கடந்து பயணிக்கிறது.
இந்தப் பாரிய போராட்டம் மஹிந்த ராஜபக்ஷவின் வெளியேற்றத்தினால் முதல் வெற்றியை தந்திருக்கிறது.


இது கோல்பேஸ், மக்கள் புரட்சியாளர்களுக்கு உற்சாகத்தையும் புதிய உத்வேகத்தையும் அவர்கள் மத்தியில் விதைத்திருக்கிறது என்றே சொல்லலாம். ஆளுந்தரப்பை வெளியேற்றுவதற்காக இரவுப் பகல் பாராது நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த மக்கள் புரட்சியில் எழுச்சி உரைகளுடன், உற்சாகம் தரும் அரசுக்கு எதிரான புரட்சி பாடல்களும், கருத்தோவிய பேனர் தட்டிகளும் காலி முகத்திடலை அலங்கரிக்க மறுபக்கத்தில் சிங்கள பாரம்பரிய 18 சன்னிகளை (தா அட்ட சன்னிய) வைத்து தொவில் பூஜைகளும் நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில் மலையக தமிழர்களின் மாபெரும் காளி பூஜை தமிழர் பாரம்பரிய பறை இசையுடன் நடைபெற்று மிகப் பெரிய அதிர்வலையை அது உருவாக்கியிருந்தது.

மே 7ஆம் திகதி இரவு நடைபெற்ற காளி பூஜையை அடுத்து, மறுநாள் 8ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷ பரிகார பூஜைக்காக அநுராதபுரம் சென்றதுடன் ஞானக்காவையும் சந்தித்ததாக சொல்லப்படுகிறது.
இதேவேளை, காலிமுகத்திடலில் நடைபெற்ற காளி பூஜை முடிந்த மூன்றாவது நாளில் நாட்டில் ஏற்பட்ட கலவரங்களை அடுத்து மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியிருந்தார்.  இந்த அதிர்ச்சியான சம்பவங்களுக்குப் பின்னணியில், காளி பூஜையும் ஒரு காரணமாக இருக்குமோ என்ற அச்சம் நம்மவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. குறிப்பாக தமிழர்களும், சிங்களவர்களும் பில்லி, சூனியத்தில் அசைக்க முடியாத அதீத நம்பிக்கை கொண்டவர்கள். எனவே, காலிமுகத்திடலுக்கு காளி வந்ததிற்கு பிறகே கதை முடிந்ததாகவும் ஒரு செய்தி அரசல் புரசலாக எமது காதுகளுக்கு வந்து சேர்ந்திருக்கிறது.ஒரு அரசை அசைத்துப் பார்க்கக்கூடிய சக்தி குலதெய்வ பரிகார பூஜைகளுக்கு இருக்கிறதா? பில்லி, சூனியத்திற்கு அப்படி என்னதான் பெரிய பவர் இருக்கிறது என்று தேடிப் பார்த்தோம்,
குறிப்பாக குலதெய்வ வழிபாடுகள் இலங்கையில் மலையகப் பகுதிகளிலேயே இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது. வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இந்த முறையிலான வழிபாடுகள் அறவே இல்லை என்றே சொல்லலாம். இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்து வந்த தமிழர்களோடு இந்தப் பாரம்பரிய குல தெய்வ வழிபாடுகளும் நம் நாட்டுக்கு வந்து சேர்ந்திருக்கிறது.
இந்த குல தெய்வங்களில் ருத்ர காளி, மதுரை வீரன், மாடசாமி, கறுப்புசாமி, சென்டாக்கட்டி, முனீஸ்வரன் உள்ளிட்ட டஜன் கணக்கிலான குலதெய்வங்கள் ஊருக்கு பத்து என்ற எண்ணிக்கையில் பெருந்தோட்டப் பகுதிகளில் காணக்கூடியதாக இருக்கின்றது.

இந்த குலதெய்வங்களின் உதவியுடன் பில்லி, சூனியம், செய்வினை போன்ற செயல்களை சில பூசாரிகள் செய்து வருகிறார்கள் இதனடிப்படையிலேயே ‘கோட்டா கோ கம’ போராட்டக்குழுவைச் சேர்ந்த ஒருவரின் வேண்டுக்கோளுக்கமைய இங்கிரிய, றைகமையிலிருந்து காளி பூஜைக்காக விக்கி பறையிசைக் குழுவினர் காலிமுகத்திடலில் முகாமிட்டு தமது மந்திர பூஜைகளை செய்திருந்தார்கள்.


சாட்சாத் மகாகாளி, மாடன், ருத்ர காளி போன்று வேடம் தரித்த சாமியாடிகளால் காலிமுகத்திடல் களைக்கட்டியது. விக்னேஷ் பறையிசைக் குழுவினரின் பறையோசை விண்ணைப்பிழக்க சாமியாடிகள் அந்தத் திடலை அதகளம் செய்திருந்தார்கள். தமிழர் பாரம்பரிய உடுக்கு பாடலை கீகியேனகந்தையைச் சேர்ந்த மாயகிருஷ்ணன் உச்சஸ்த்தாயில் பாடி சாமியாடிகளுக்கு உற்சாகம் கொடுத்திருந்தார்.


“கோட்டா கோ கம நிகழ்வுக்கு என்னை, விக்னேஷ் குழுவினர்கள் தொலைபேசியில் அழைத்து விடயத்தை சொன்னதும் கொஞ்சம் அச்சமாகத்தான் இருந்தது. நான் களுத்துறை மாவட்டத்து தோட்டங்களில் பேய் விரட்டுறதும், சாமி அழைக்கிறதையும்தான் தொழிலாக செய்துகிட்டு வருகின்றேன்.  கொழும்புக்கு போய் இவ்வளவு பெரிய வேலையெல்லாம் செய்ததில்லை. அதுவும் இவங்க விரட்ட சொன்னது ரொம்ப பெரிய ஆளுன்னு சொன்னதும் பயம் ரொம்ப அதிகமாயிடுச்சு. ஆனாலும், என்னப் பண்ணுறது ஏற்பாட்டுக்குழு உடுக்குப் பாட்டுப் பாடி உடுக்கு அடிக்கும் பூசாரி ஒருத்தர் தேவைன்னு அந்தப் பூஜைப் பணியில் உடுக்கின் அவசியம் குறித்து எனக்கு ரொம்ப தெளிவாக சொல்லி கட்டாயப்படுத்தவும், வேறு வழியில்லாமல் என்னோட குலதெய்வத்துக்கிட்டே குறிக் கேட்பதற்காக காளி தாயீக்கிட்டே மண்டிப்போட்டு அமர்ந்தேன். அப்போ நான் எதிர்பார்க்காத ஒரு விசயம் நடந்துச்சு, தாயோட தலையில ஏறி நின்ற ஒரு பல்லி என்னைப் பார்த்து கத்தியது.  அப்போது, ‘நீ அந்தக் களத்துக்கு போகலாம்’னு
ஒரு அசரீரி கேட்பது போன்ற உணர்வை நான் உணர்ந்தேன். இனியும் தாமதிக்க கூடாதுன்னு விக்னேஷ்கிட்டே கோல்பேஸ் போகலாம்னு எனது சம்மதத்தை சொன்னேன்.

அதுக்குப் பிறகு அனைவரும் புறப்பட்டு அங்கே சென்று காளி பூஜையை வெற்றிகரமாக நடத்தினோம்”ன்னு பூசாரி மாயகிருஷ்ணன் தனக்கு நடந்த அமானுஷ்யமான விடயத்தை பூரிப்போடு பகிர்ந்து கொண்டார்.
கோல்பேஸில் அரசுக்கு எதிராக நடைபெற்ற இந்த சூனிய சடங்கு சமீபகாலமாக சமூக ஊடகங்களில் வைரல் செய்தியாக வலம் வருவதையும் நீங்கள் அவதானித்திருப்பீர்கள். 


“நல்லா வாழ்ந்த மனுசனுக்கு சூனியம் வச்சிட்டாங்க”னு பலர் சொல்லக் கேட்டிருக்கின்றோம். பில்லி, சூனியம் என்றால் என்ன, அது அப்படி என்ன செய்து விடும்? என்று ஒரு பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு பூசாரியிடம் கேட்டோம். அதற்கு அவர்,“ஒருவரின் சிந்தனைகளை நம் கட்டுக்குள் கொண்டு வந்து அவரை நம் விருப்பப்படி ஆட்டுவிக்கும் மாந்திரீக முறையே பில்லி எனப்படுகிறது. சூனியம் என்றால் ஒரு மனிதனை ஒன்றுமில்லாமல் போகச் செய்வதன் மூலம், அவனை முடக்குவது அல்லது அழிப்பதே இந்த வகை மாந்திரீகமுறை.
செய்வினை என்றால், தனக்கு விருப்பமில்லாத ஒருவன் எல்லா வழிகளிலும் கெட்டு அழிந்து போகச் செய்ய வேண்டி செய்யப்படும் மாந்திரீக முறையே செய்வினை எனப்படுகிறது.


மிகவும் கொடுமையான மாந்திரீக முறைகளில் இதுவும் ஒன்று. மந்திர சக்தியூட்டப்பட்ட பொருட்களை ஒருவரின் இருப்பிடத்தில் அவருக்கு தெரியாமல் வைத்து அதன் மூலமாக அவருக்கு கெடுதல் செய்வதே வைப்பு முறையாகும்.


காலிமுகத்திடலில் நடைபெற்ற பரிகாரம் தமக்கு பிடிக்காத ஒருவரை அவரின் சிந்தனையை நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அவரின் செயலை செயலிழக்கச் செய்யும் பில்லி, சூனிய முறையாகவே நடத்தப்பட்டது.
இதன்போது பூஜையின் பிரதான பூசாரியாக செயல்பட்ட கசுன் பூசாரியின் உடம்பிற்குள் அவரின் குலதெய்வமான மாடன் பிரவேசம் செய்து உயிர் பலிக்கு மாற்றீடாக வெட்டப்படும் பூசணிக்காயை வெட்டி அருள் வாக்கு வழங்கியிருந்தார்.


குல தெய்வம் மாடனின் அருள் வாக்குப்படி இன்னும் “சில தினங்களில் ஆட்சிப் பீடத்திலிருக்கும் அதிகாரமிக்கவர்கள் தமது பதவிகளை விட்டு, நாட்டை விட்டு வெளியேறி விடுவார்கள்” என்ற சாமி வாக்கு அங்கு கூடியிருந்த போராட்டக்குழுவை மகிழ்ச்சிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுபற்றி கசுன் பூசாரியிடம் கேட்டோம், “15 வயசுலயிருந்தே மாடன் என் உடம்புக்குள்ள அவ்வப்போது வந்துவிடும், எங்க குல தெய்வமும் மாடன்தான் அதிகாரமிக்கவர்களை விரட்டனும்னு சொல்லி என்னிடம் கேட்டப்போது எல்லாம் சாமி விட்ட வழின்னு நினைச்சுக்கிட்டே என் குல தெய்வத்துக்கு செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை பரிகார பூஜைகளை எனது பாதுகாப்புக்காகவும், எனது குழுவினரின் பாதுகாப்புக்காகவும் செய்தப் பிறகே கோல்பேஸ்ஸ{க்கு சென்று பூஜைகளை செய்து முடித்திருந்தோம்” என்றார்.
என்னதான் விஞ்ஞான அறிவு மேம்பட்டிருந்தாலும் பில்லி, சூனிய முறைகளை நம்மவர்கள் இப்போதும் நம்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இன்றைக்கு பல திரைப்படங்களும், தொலைக்காட்சி சீரியல்களும், பில்லி, சூனியம், செய்வினையை வைத்துதான் கதையை உருவாக்கி வெற்றிகரமாக ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். அந்தளவுக்கு மக்கள் மாந்திரீகத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஐரோப்பிய நாடுகளில் வாழும் மக்கள் மாந்திரீகத்தில் நம்பிக்கையற்றவர்களாக இருந்தாலும் பேய், பிசாசுகள் மீதான நம்பிக்கை அவர்களிடம் அதிகமாகவே இருக்கிறது.


ஹொலிவூட்டில் வெளிவந்து வசூலில் சாதனை செய்த பல திரைப்படங்கள் பேய், பிசாசுகளின் கதைக்கருவை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்கள் என்பதையும் யாரும் மறுக்க முடியாது.மாந்திரீக முறைகள் பெரும்பாலும் ஒரு மனிதன் தான் விரும்பிய அல்லது விரும்பாத மனிதனை தன்னுடைய இச்சைப் படி ஆட்டுவிப்பதாகவே இருக்கிறது. இவை பில்லி, சூனியம், ஏவல், வைப்பு, வசியம் என்பதாக தேவையை முன்னிட்டு மாறுபடுகின்றன.
பில்லி, சூனியம், செய்வினை எல்லாம் பொய் என்று சிலர் சொல்வார்கள். ஆனாலும் முருகனுக்காக பாடப்படும் கந்தசஷ்டி கவசத்தில் ‘பில்லி சூனியம் பெரும்பகை அகல’ என்ற வரிகள் வருகின்றன. இதனைப் படிக்கும்போது செய்வினை செய்வதெல்லாம் உண்மைதானோ என்று எண்ணவும் தோன்றுகிறது.

இதுபோன்ற சூனிய சடங்குகள் மனிதரைப் பாதிக்கும் என்பதை உறுதி செய்யும் என்பதற்கு இன்னொரு உதாரணத்தையும் குறிப்பிடலாம். திருச்செந்தூரில் ஸ்ரீசங்கரர் செய்வினை கோளாறினால் பாதிக்கப்பட்டதாக கூறுகின்றார். அவரிடம் வாதத்தில் தோற்றுப்போன அபிநவ குப்தன் செய்த செய்வினையால் பாதிக்கப்பட்ட ஸ்ரீசங்கரர் திருச்செந்தூர் வந்து முருகப்பெருமானை வணங்கி, ஸ்ரீசுப்ரமண்ய புஜங்கம் பாடி தன் நோய் நீங்கப் பெற்றதாகவும், ஞான சம்பந்தரும் கூட செய்வினை கோளாறு நீங்க இறைவனை சரணடைந்தவர்தான் என்றும் தமிழகத்தின் ஸ்ரீபாம்பன் சுவாமிகள் தனது சண்முக கவசத்தில் தெரிவித்திருக்கிறார். ஆனாலும் இந்த செய்வினை, சூனியம் அனைவருக்கும் பலிக்காது என்று ஒரு மாந்திரீக நூல் குறிப்பிடுவதையும் நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.


ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் பாதிக்கப்பட்டால், அதாவது சந்திரன் நீச்சம் அடைந்திருந்தால், 6-8-12ஆம் இடங்களில் மறைந்திருந்தால் இந்த பாதிப்புக்கு ஆளாகின்றனர். சந்திரன் நீச்சம் அடைந்து, அந்த வீட்டுக்குரிய கிரகம் பலம் பெற்றால் பயம் இல்லை . 6-8-12 இல் சந்திரன் சுபர் சேர்க்கை பெற்றதாலும் பயம் இல்லை, பாதிப்பு இல்லை. பூர்வ புண்ணியஸ்தானம் என்கிற 5ஆம் இடம் பலம் குறைந்தாலும் கண் திருஷ்டி, செய்வினை பாதிப்பு உண்டாகும். இன்னும் ஆழமாக இந்த செய்வினை பற்றி ஆராய்ந்தால், பூர்வீகத்தில் செய்தவினைதான் தற்பொழுது செய்வினையாக பாதிக்கிறது. ஒருவன் தெரியாமல் அல்லது தெரிந்து செய்த வினையே அவனை பாதிக்கிறது. அப்பன் வாங்கிய கடன் பிள்ளையை பாதிப்பதுபோல் பூர்வீகத்தில் செய்த தவறு இந்த ஜென்மத்தில் நல்லவனாக இருந்தாலும் அது சற்று தண்டித்துவிட்டு செல்லுமாம். 


“நல்லது நடக்கனும், தப்பு செய்றவங்களுக்கு தண்டனை கிடைக்கனும்னுதான் தைரியத்துடன் இந்த பூஜை பரிகாரங்களுக்கு நாம் சம்மதித்து அதிரடியாக இறங்கினோம், நான் நடத்தும் விக்கி பறை இசைக் குழுவுக்கு காலிமுகத்திடலில் முன்னுரிமை வழங்கப்பட்டது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. நமது தமிழர் பாரம்பரிய இசையான, பறை இசையை அந்த இடத்தில் எமது குழுவினருடன் இசைத்து சாமி ஆட்டத்தை நடத்தினோம். அங்கே கூடியிருந்த போராட்டக்காரர்கள் எமக்கு பேராதரவை வழங்கியிருந்தார்கள்.
அவர்களுக்கு எமது பாரம்பரிய, பரிகார சடங்கு முறைகள் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருந்தது. அவர்களின் முழுமையான ஆதரவுடன் பூஜை நிகழ்வுகள் நள்ளிரவு பத்து மணிக்கு தொடங்கப்பட்டு மூன்று மணி நேரம் நடைபெற்று முடிந்தது. எல்லாமே சாமி வாக்குப்படிதான் நடக்கும், அதை மாற்ற யாரால முடியும்” என்று சாமியை துணைக்கு வைத்துக்கொண்டே தைரியமாக பேசுகிறார் விக்னேஷ்.


மாந்திரீக கலை என்பது மனிதர்கள் நன்மையான பலன்களை பெறுவதற்கு சித்தர்களாலும் மகான்களாலும் உருவாக்கப்பட்ட ஒரு அற்புதமான கலை ஆகும். பிறருக்கு செய்வினை செய்தல் என்பது இத்தகைய தீய மாந்திரீக கலையில் ஒரு பகுதியாகும். இவற்றில் எல்லாம் நம்பிக்கையற்றவர்கள் பலர் உள்ளனர். அதே நேரம் இவற்றை நம்புகிறவர்களும் இருக்கின்றனர். அப்படி இந்த செய்வினை, தீய மாந்திரீகம் போன்றவற்றில் நம்பிக்கை உள்ளவர்கள் தங்களுக்கு பிறர் செய்வினை, மாந்திரீக ஏவல்கள் செய்துள்ளனரா என்பதை அறிந்து கொள்வதற்கான வழிகள் என்ன என்பதை நிகழ்வில் கலந்து கொண்டிருந்த ஒரு பூசாரி சில டிப்ஸ்களையும் எமக்கு வழங்கினார்.

“சூனிய முறைகளை பயன்படுத்தி எதிராளிகளால் நமக்கும் செய்வினை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கும் நபர்கள், மருதாணி செடியின் காய்ந்த விதைகளை பொடி செய்து கொண்டு, அதனுடன் சாம்பிராணி பொடியையும் கலந்து 3 நாட்களுக்கு வீடு முழுவதும் தொடர்ந்து புகை போட்டு வந்தால் உங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தில் எவருக்கேனும் உடல் நிலை பாதிப்பு ஏற்படுமாம். அப்படி ஏற்பட்டால் உங்களுக்கு செய்வினை செய்யப்பட்டிருக்கிறது என்பதை கண்டுபிடிக்கலாம். அதேபோல், முருங்கை இலைச்சாறு சிறிதளவு எடுத்து உங்களின் உள்ளங்கையில் சிறிது நேரம் வைத்துக்கொள்ள வேண்டும். உள்ளங்கையில் இருக்கும் அந்த முருங்கை இலைச்சாறு உறைந்து கட்டியாக மாறினால் உங்களுக்கு செய்வினை பாதிப்பு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்” என்றார்.
பூசாரி, மாந்திரீகம், ஏவல், பில்லி, சூனியம் உள்ளிட்ட விடயங்கள் இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்த பூமியில் வெற்றிகரமாக பயணிக்கும் என்பதுதான் நிதர்சன உண்மை!🔴

一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一
எனது கட்டுரைப் பதிவு, தமிழன்  நாளிதழில் 2022, மே, 29ம் திகதி வெளியானது.