இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் புரட்சி ‘கோட்டா கோ கம’ எனும் தொனிப்பொருளில் மக்களை அணித்திரளச் செய்து அவர்களை காலிமுகத்திடலில் ஒன்றிணைத்திருக்கிறது.
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்று வரும் இந்த மக்கள் எழுச்சிப் போராட்டம் ‘மைனா கோ கம’ மற்றும் ‘நோ டீல் கோ கம’ உள்ளிட்ட பல பரிணாமங்களை கடந்து பயணிக்கிறது.
இந்தப் பாரிய போராட்டம் மஹிந்த ராஜபக்ஷவின் வெளியேற்றத்தினால் முதல் வெற்றியை தந்திருக்கிறது.
இது கோல்பேஸ், மக்கள் புரட்சியாளர்களுக்கு உற்சாகத்தையும் புதிய உத்வேகத்தையும் அவர்கள் மத்தியில் விதைத்திருக்கிறது என்றே சொல்லலாம். ஆளுந்தரப்பை வெளியேற்றுவதற்காக இரவுப் பகல் பாராது நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த மக்கள் புரட்சியில் எழுச்சி உரைகளுடன், உற்சாகம் தரும் அரசுக்கு எதிரான புரட்சி பாடல்களும், கருத்தோவிய பேனர் தட்டிகளும் காலி முகத்திடலை அலங்கரிக்க மறுபக்கத்தில் சிங்கள பாரம்பரிய 18 சன்னிகளை (தா அட்ட சன்னிய) வைத்து தொவில் பூஜைகளும் நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில் மலையக தமிழர்களின் மாபெரும் காளி பூஜை தமிழர் பாரம்பரிய பறை இசையுடன் நடைபெற்று மிகப் பெரிய அதிர்வலையை அது உருவாக்கியிருந்தது.
இதேவேளை, காலிமுகத்திடலில் நடைபெற்ற காளி பூஜை முடிந்த மூன்றாவது நாளில் நாட்டில் ஏற்பட்ட கலவரங்களை அடுத்து மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியிருந்தார். இந்த அதிர்ச்சியான சம்பவங்களுக்குப் பின்னணியில், காளி பூஜையும் ஒரு காரணமாக இருக்குமோ என்ற அச்சம் நம்மவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. குறிப்பாக தமிழர்களும், சிங்களவர்களும் பில்லி, சூனியத்தில் அசைக்க முடியாத அதீத நம்பிக்கை கொண்டவர்கள். எனவே, காலிமுகத்திடலுக்கு காளி வந்ததிற்கு பிறகே கதை முடிந்ததாகவும் ஒரு செய்தி அரசல் புரசலாக எமது காதுகளுக்கு வந்து சேர்ந்திருக்கிறது.ஒரு அரசை அசைத்துப் பார்க்கக்கூடிய சக்தி குலதெய்வ பரிகார பூஜைகளுக்கு இருக்கிறதா? பில்லி, சூனியத்திற்கு அப்படி என்னதான் பெரிய பவர் இருக்கிறது என்று தேடிப் பார்த்தோம்,
குறிப்பாக குலதெய்வ வழிபாடுகள் இலங்கையில் மலையகப் பகுதிகளிலேயே இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது. வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இந்த முறையிலான வழிபாடுகள் அறவே இல்லை என்றே சொல்லலாம். இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்து வந்த தமிழர்களோடு இந்தப் பாரம்பரிய குல தெய்வ வழிபாடுகளும் நம் நாட்டுக்கு வந்து சேர்ந்திருக்கிறது.
இந்த குல தெய்வங்களில் ருத்ர காளி, மதுரை வீரன், மாடசாமி, கறுப்புசாமி, சென்டாக்கட்டி, முனீஸ்வரன் உள்ளிட்ட டஜன் கணக்கிலான குலதெய்வங்கள் ஊருக்கு பத்து என்ற எண்ணிக்கையில் பெருந்தோட்டப் பகுதிகளில் காணக்கூடியதாக இருக்கின்றது.
இந்த குலதெய்வங்களின் உதவியுடன் பில்லி, சூனியம், செய்வினை போன்ற செயல்களை சில பூசாரிகள் செய்து வருகிறார்கள் இதனடிப்படையிலேயே ‘கோட்டா கோ கம’ போராட்டக்குழுவைச் சேர்ந்த ஒருவரின் வேண்டுக்கோளுக்கமைய இங்கிரிய, றைகமையிலிருந்து காளி பூஜைக்காக விக்கி பறையிசைக் குழுவினர் காலிமுகத்திடலில் முகாமிட்டு தமது மந்திர பூஜைகளை செய்திருந்தார்கள்.
சாட்சாத் மகாகாளி, மாடன், ருத்ர காளி போன்று வேடம் தரித்த சாமியாடிகளால் காலிமுகத்திடல் களைக்கட்டியது. விக்னேஷ் பறையிசைக் குழுவினரின் பறையோசை விண்ணைப்பிழக்க சாமியாடிகள் அந்தத் திடலை அதகளம் செய்திருந்தார்கள். தமிழர் பாரம்பரிய உடுக்கு பாடலை கீகியேனகந்தையைச் சேர்ந்த மாயகிருஷ்ணன் உச்சஸ்த்தாயில் பாடி சாமியாடிகளுக்கு உற்சாகம் கொடுத்திருந்தார்.
“கோட்டா கோ கம நிகழ்வுக்கு என்னை, விக்னேஷ் குழுவினர்கள் தொலைபேசியில் அழைத்து விடயத்தை சொன்னதும் கொஞ்சம் அச்சமாகத்தான் இருந்தது. நான் களுத்துறை மாவட்டத்து தோட்டங்களில் பேய் விரட்டுறதும், சாமி அழைக்கிறதையும்தான் தொழிலாக செய்துகிட்டு வருகின்றேன். கொழும்புக்கு போய் இவ்வளவு பெரிய வேலையெல்லாம் செய்ததில்லை. அதுவும் இவங்க விரட்ட சொன்னது ரொம்ப பெரிய ஆளுன்னு சொன்னதும் பயம் ரொம்ப அதிகமாயிடுச்சு. ஆனாலும், என்னப் பண்ணுறது ஏற்பாட்டுக்குழு உடுக்குப் பாட்டுப் பாடி உடுக்கு அடிக்கும் பூசாரி ஒருத்தர் தேவைன்னு அந்தப் பூஜைப் பணியில் உடுக்கின் அவசியம் குறித்து எனக்கு ரொம்ப தெளிவாக சொல்லி கட்டாயப்படுத்தவும், வேறு வழியில்லாமல் என்னோட குலதெய்வத்துக்கிட்டே குறிக் கேட்பதற்காக காளி தாயீக்கிட்டே மண்டிப்போட்டு அமர்ந்தேன். அப்போ நான் எதிர்பார்க்காத ஒரு விசயம் நடந்துச்சு, தாயோட தலையில ஏறி நின்ற ஒரு பல்லி என்னைப் பார்த்து கத்தியது. அப்போது, ‘நீ அந்தக் களத்துக்கு போகலாம்’னு
ஒரு அசரீரி கேட்பது போன்ற உணர்வை நான் உணர்ந்தேன். இனியும் தாமதிக்க கூடாதுன்னு விக்னேஷ்கிட்டே கோல்பேஸ் போகலாம்னு எனது சம்மதத்தை சொன்னேன்.
கோல்பேஸில் அரசுக்கு எதிராக நடைபெற்ற இந்த சூனிய சடங்கு சமீபகாலமாக சமூக ஊடகங்களில் வைரல் செய்தியாக வலம் வருவதையும் நீங்கள் அவதானித்திருப்பீர்கள்.
“நல்லா வாழ்ந்த மனுசனுக்கு சூனியம் வச்சிட்டாங்க”னு பலர் சொல்லக் கேட்டிருக்கின்றோம். பில்லி, சூனியம் என்றால் என்ன, அது அப்படி என்ன செய்து விடும்? என்று ஒரு பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு பூசாரியிடம் கேட்டோம். அதற்கு அவர்,“ஒருவரின் சிந்தனைகளை நம் கட்டுக்குள் கொண்டு வந்து அவரை நம் விருப்பப்படி ஆட்டுவிக்கும் மாந்திரீக முறையே பில்லி எனப்படுகிறது. சூனியம் என்றால் ஒரு மனிதனை ஒன்றுமில்லாமல் போகச் செய்வதன் மூலம், அவனை முடக்குவது அல்லது அழிப்பதே இந்த வகை மாந்திரீகமுறை.
செய்வினை என்றால், தனக்கு விருப்பமில்லாத ஒருவன் எல்லா வழிகளிலும் கெட்டு அழிந்து போகச் செய்ய வேண்டி செய்யப்படும் மாந்திரீக முறையே செய்வினை எனப்படுகிறது.
மிகவும் கொடுமையான மாந்திரீக முறைகளில் இதுவும் ஒன்று. மந்திர சக்தியூட்டப்பட்ட பொருட்களை ஒருவரின் இருப்பிடத்தில் அவருக்கு தெரியாமல் வைத்து அதன் மூலமாக அவருக்கு கெடுதல் செய்வதே வைப்பு முறையாகும்.
காலிமுகத்திடலில் நடைபெற்ற பரிகாரம் தமக்கு பிடிக்காத ஒருவரை அவரின் சிந்தனையை நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அவரின் செயலை செயலிழக்கச் செய்யும் பில்லி, சூனிய முறையாகவே நடத்தப்பட்டது.
இதன்போது பூஜையின் பிரதான பூசாரியாக செயல்பட்ட கசுன் பூசாரியின் உடம்பிற்குள் அவரின் குலதெய்வமான மாடன் பிரவேசம் செய்து உயிர் பலிக்கு மாற்றீடாக வெட்டப்படும் பூசணிக்காயை வெட்டி அருள் வாக்கு வழங்கியிருந்தார்.
குல தெய்வம் மாடனின் அருள் வாக்குப்படி இன்னும் “சில தினங்களில் ஆட்சிப் பீடத்திலிருக்கும் அதிகாரமிக்கவர்கள் தமது பதவிகளை விட்டு, நாட்டை விட்டு வெளியேறி விடுவார்கள்” என்ற சாமி வாக்கு அங்கு கூடியிருந்த போராட்டக்குழுவை மகிழ்ச்சிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுபற்றி கசுன் பூசாரியிடம் கேட்டோம், “15 வயசுலயிருந்தே மாடன் என் உடம்புக்குள்ள அவ்வப்போது வந்துவிடும், எங்க குல தெய்வமும் மாடன்தான் அதிகாரமிக்கவர்களை விரட்டனும்னு சொல்லி என்னிடம் கேட்டப்போது எல்லாம் சாமி விட்ட வழின்னு நினைச்சுக்கிட்டே என் குல தெய்வத்துக்கு செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை பரிகார பூஜைகளை எனது பாதுகாப்புக்காகவும், எனது குழுவினரின் பாதுகாப்புக்காகவும் செய்தப் பிறகே கோல்பேஸ்ஸ{க்கு சென்று பூஜைகளை செய்து முடித்திருந்தோம்” என்றார்.
என்னதான் விஞ்ஞான அறிவு மேம்பட்டிருந்தாலும் பில்லி, சூனிய முறைகளை நம்மவர்கள் இப்போதும் நம்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஹொலிவூட்டில் வெளிவந்து வசூலில் சாதனை செய்த பல திரைப்படங்கள் பேய், பிசாசுகளின் கதைக்கருவை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்கள் என்பதையும் யாரும் மறுக்க முடியாது.மாந்திரீக முறைகள் பெரும்பாலும் ஒரு மனிதன் தான் விரும்பிய அல்லது விரும்பாத மனிதனை தன்னுடைய இச்சைப் படி ஆட்டுவிப்பதாகவே இருக்கிறது. இவை பில்லி, சூனியம், ஏவல், வைப்பு, வசியம் என்பதாக தேவையை முன்னிட்டு மாறுபடுகின்றன.
பில்லி, சூனியம், செய்வினை எல்லாம் பொய் என்று சிலர் சொல்வார்கள். ஆனாலும் முருகனுக்காக பாடப்படும் கந்தசஷ்டி கவசத்தில் ‘பில்லி சூனியம் பெரும்பகை அகல’ என்ற வரிகள் வருகின்றன. இதனைப் படிக்கும்போது செய்வினை செய்வதெல்லாம் உண்மைதானோ என்று எண்ணவும் தோன்றுகிறது.
இதுபோன்ற சூனிய சடங்குகள் மனிதரைப் பாதிக்கும் என்பதை உறுதி செய்யும் என்பதற்கு இன்னொரு உதாரணத்தையும் குறிப்பிடலாம். திருச்செந்தூரில் ஸ்ரீசங்கரர் செய்வினை கோளாறினால் பாதிக்கப்பட்டதாக கூறுகின்றார். அவரிடம் வாதத்தில் தோற்றுப்போன அபிநவ குப்தன் செய்த செய்வினையால் பாதிக்கப்பட்ட ஸ்ரீசங்கரர் திருச்செந்தூர் வந்து முருகப்பெருமானை வணங்கி, ஸ்ரீசுப்ரமண்ய புஜங்கம் பாடி தன் நோய் நீங்கப் பெற்றதாகவும், ஞான சம்பந்தரும் கூட செய்வினை கோளாறு நீங்க இறைவனை சரணடைந்தவர்தான் என்றும் தமிழகத்தின் ஸ்ரீபாம்பன் சுவாமிகள் தனது சண்முக கவசத்தில் தெரிவித்திருக்கிறார். ஆனாலும் இந்த செய்வினை, சூனியம் அனைவருக்கும் பலிக்காது என்று ஒரு மாந்திரீக நூல் குறிப்பிடுவதையும் நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் பாதிக்கப்பட்டால், அதாவது சந்திரன் நீச்சம் அடைந்திருந்தால், 6-8-12ஆம் இடங்களில் மறைந்திருந்தால் இந்த பாதிப்புக்கு ஆளாகின்றனர். சந்திரன் நீச்சம் அடைந்து, அந்த வீட்டுக்குரிய கிரகம் பலம் பெற்றால் பயம் இல்லை . 6-8-12 இல் சந்திரன் சுபர் சேர்க்கை பெற்றதாலும் பயம் இல்லை, பாதிப்பு இல்லை. பூர்வ புண்ணியஸ்தானம் என்கிற 5ஆம் இடம் பலம் குறைந்தாலும் கண் திருஷ்டி, செய்வினை பாதிப்பு உண்டாகும். இன்னும் ஆழமாக இந்த செய்வினை பற்றி ஆராய்ந்தால், பூர்வீகத்தில் செய்தவினைதான் தற்பொழுது செய்வினையாக பாதிக்கிறது. ஒருவன் தெரியாமல் அல்லது தெரிந்து செய்த வினையே அவனை பாதிக்கிறது. அப்பன் வாங்கிய கடன் பிள்ளையை பாதிப்பதுபோல் பூர்வீகத்தில் செய்த தவறு இந்த ஜென்மத்தில் நல்லவனாக இருந்தாலும் அது சற்று தண்டித்துவிட்டு செல்லுமாம்.
“நல்லது நடக்கனும், தப்பு செய்றவங்களுக்கு தண்டனை கிடைக்கனும்னுதான் தைரியத்துடன் இந்த பூஜை பரிகாரங்களுக்கு நாம் சம்மதித்து அதிரடியாக இறங்கினோம், நான் நடத்தும் விக்கி பறை இசைக் குழுவுக்கு காலிமுகத்திடலில் முன்னுரிமை வழங்கப்பட்டது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. நமது தமிழர் பாரம்பரிய இசையான, பறை இசையை அந்த இடத்தில் எமது குழுவினருடன் இசைத்து சாமி ஆட்டத்தை நடத்தினோம். அங்கே கூடியிருந்த போராட்டக்காரர்கள் எமக்கு பேராதரவை வழங்கியிருந்தார்கள்.
அவர்களுக்கு எமது பாரம்பரிய, பரிகார சடங்கு முறைகள் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருந்தது. அவர்களின் முழுமையான ஆதரவுடன் பூஜை நிகழ்வுகள் நள்ளிரவு பத்து மணிக்கு தொடங்கப்பட்டு மூன்று மணி நேரம் நடைபெற்று முடிந்தது. எல்லாமே சாமி வாக்குப்படிதான் நடக்கும், அதை மாற்ற யாரால முடியும்” என்று சாமியை துணைக்கு வைத்துக்கொண்டே தைரியமாக பேசுகிறார் விக்னேஷ்.
மாந்திரீக கலை என்பது மனிதர்கள் நன்மையான பலன்களை பெறுவதற்கு சித்தர்களாலும் மகான்களாலும் உருவாக்கப்பட்ட ஒரு அற்புதமான கலை ஆகும். பிறருக்கு செய்வினை செய்தல் என்பது இத்தகைய தீய மாந்திரீக கலையில் ஒரு பகுதியாகும். இவற்றில் எல்லாம் நம்பிக்கையற்றவர்கள் பலர் உள்ளனர். அதே நேரம் இவற்றை நம்புகிறவர்களும் இருக்கின்றனர். அப்படி இந்த செய்வினை, தீய மாந்திரீகம் போன்றவற்றில் நம்பிக்கை உள்ளவர்கள் தங்களுக்கு பிறர் செய்வினை, மாந்திரீக ஏவல்கள் செய்துள்ளனரா என்பதை அறிந்து கொள்வதற்கான வழிகள் என்ன என்பதை நிகழ்வில் கலந்து கொண்டிருந்த ஒரு பூசாரி சில டிப்ஸ்களையும் எமக்கு வழங்கினார்.
“சூனிய முறைகளை பயன்படுத்தி எதிராளிகளால் நமக்கும் செய்வினை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கும் நபர்கள், மருதாணி செடியின் காய்ந்த விதைகளை பொடி செய்து கொண்டு, அதனுடன் சாம்பிராணி பொடியையும் கலந்து 3 நாட்களுக்கு வீடு முழுவதும் தொடர்ந்து புகை போட்டு வந்தால் உங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தில் எவருக்கேனும் உடல் நிலை பாதிப்பு ஏற்படுமாம். அப்படி ஏற்பட்டால் உங்களுக்கு செய்வினை செய்யப்பட்டிருக்கிறது என்பதை கண்டுபிடிக்கலாம். அதேபோல், முருங்கை இலைச்சாறு சிறிதளவு எடுத்து உங்களின் உள்ளங்கையில் சிறிது நேரம் வைத்துக்கொள்ள வேண்டும். உள்ளங்கையில் இருக்கும் அந்த முருங்கை இலைச்சாறு உறைந்து கட்டியாக மாறினால் உங்களுக்கு செய்வினை பாதிப்பு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்” என்றார்.
பூசாரி, மாந்திரீகம், ஏவல், பில்லி, சூனியம் உள்ளிட்ட விடயங்கள் இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்த பூமியில் வெற்றிகரமாக பயணிக்கும் என்பதுதான் நிதர்சன உண்மை!🔴
一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一
எனது கட்டுரைப் பதிவு, தமிழன் நாளிதழில் 2022, மே, 29ம் திகதி வெளியானது.









No comments:
Post a Comment