அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்
என்று சொல்கிறது வள்ளுவனின் குறள். 'அழிவு வராமல் காக்கும் கருவியாகும் அறிவு. அது பகைவரால் அழிக்க முடியாத கோட்டையுமாகும். என்று கல்வியின் முக்கியத்துவத்தை இந்தக் குறள் பறைசாற்றி நிற்கின்றது. கல்விதான் நம் சமூகத்தில் மாற்றத்தை கொண்டுவரப் போகும் பேராயுதம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதன் அவசியம் உணர்ந்துதான் கல்வி அனைவருக்கும் போய்ச் சேரவேண்டும் என்பதற்காக பல நாடுகள் கல்வியை இலவசமாக வழங்கி வருகின்றன.
“பாறையை உடைத்து நீர்
எடுப்பதால்ல கல்வி
ஓடையைத் தோண்டி நீரெடுப்பது
போன்றதுதான் கல்வி"
என்பது போன்று கல்வி மிகவும் இலகுவானதாக இருக்க வேண்டுமே தவிர அது கற்கும் மாணவனை மன உளைச்சளுக்கு ஆளாக்கும் ஒரு வில்லனாக அமைந்துவிடக் கூடாது. ஆனால் இன்று நம் நாட்டில் நடைபெறும் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகளை அவதானிக்கும் போது அப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது. 5ம் ஆண்டு படிக்கும் பத்து வயது சிறுவன் மீது ‘ஸ்கொலசிப்’ எனும் பெருஞ் சுமை ஏற்றப்பட்டு விடுகிறது.
| அய்யாக்குட்டி தேவராஜா |
மூன்றாம் ஆண்டிலிருந்தே அந்த மாணவனை ஸ்கொலசிப் பரீட்சைக்கு ஆயத்தம் செய்வதற்காக அந்த குழந்தை பருவத்தின் சுதந்திரம் பறிக்கப்பட்டு பெற்றோர்களால் மாணவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள், காலையில் எழுந்து 04 மணி தொடக்கம் அன்றிரவு 09 அல்லது 10 மணி வரையும் மாணவர்களுக்கு கற்பித்தல்கள், பாடசாலை, பிரத்தியேக கல்வி நிலையங்களில் நடைபெறுகிறது. இதனால், கல்வி இலகுவானது என்ற கோட்பாடு உடைக்கப்பட்டு அது மிகவும் கடினமானது, கொடுமையானது எனும் கருத்து ஒரு மாணவனின் எண்ணத்தில் பதிந்து விடுகிறது. விளையாடுவதற்கு, சக உறவினர்களுடன் கதைத்துபேசி மகிழ்வதற்கு, விரும்பிய இடங்களுக்கு சென்று வருவதற்கு, விரும்பியதை செய்வதற்கு அனுமதியற்றவர்களாக வகுப்பு வகுப்பு, படிப்பு, படிப்பு என்று அதனுள்ளே சிக்கி தமது சுயவிருப்பு வெறுப்பை அடைய முடியாதவர்களாக பெற்றோர்களின் திணிப்பு, போட்டி மாணவர்களின் மனதினை நொறுக்குகின்றது.
காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
படிப்பு முக்கியம். அதற்காக எப்போது பார்த்தாலும் படித்துக் கொண்டே இருந்தால் மனம் மரத்துப் போய் விடும். மாலை முழுதும் விளையாட்டு - என்று வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா. படிப்பு, பாட்டு, உடல் உழைப்பு என்று இருக்க வேண்டும். அறிவும், மனமும் மட்டும் வேலை செய்தால் போதாது. உடலும் வேலை செய்ய வேண்டும். இல்லை என்றால் வேண்டாத நோய் எல்லாம் வந்து சேரும் என்று சிறுவர்களுக்கான அறிவுரையை மகாகவி பாரதி இப்படிச் சொல்லியிருக்கிறார். இந்த புலமைப் பரிசில் பரீட்சையை இலவசக்கல்வியின் தந்தையாக கூறப்படுகின்ற சீ. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரவினால் 1940ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதிற்கான நோக்கம் வறிய குடும்பங்களைச் சேர்ந்த, திறமையான மாணவர்களை கல்வியில் ஊக்கப்டுத்துவதற்கும், அவர்களை சிறந்த வசதிகளை கொண்டிருக்கின்ற தேசிய பாடசாலைகளில் அனுமதி பெறுவதற்குமே ஆனால் அந்த நோக்கம் நிறைவேற்றப்படவில்லை என்றுதான் கூற வேண்டும்.
மாறாக சமூக அந்தஸ்த்துக்காகவும், பெற்றோர்களின் வெட்டி பந்தாவுக்காகவும் மட்டுமே இந்த புலமைப் பரிசில் பரீட்சை நடப்பதாக எண்ணத் தோன்றுகிறது. தமது பிள்ளை பரீட்சையில் சித்திப் பெற்றால்தான் வெளியில் தலைக்காட்ட முடியும்...என்ற பெற்றோர்களுக்கிடையே ஏற்பட்டுள்ள போட்டி வெறியாக மாறும்போது பிஞ்சுக் குழந்தைகள் கசக்கி பிழிந்தெடுக்கப்படுகிறார்கள். இதனால் ஒரு குழந்தையின் அந்த வயதுக்கான மழலை மனசு சிதைக்கப்பட்டு அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதுடன் தோல்வி மனப் பான்மையினால் உயர்தர கல்வியிலும் கவனம் செலுத்த முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள். மாணவர்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்த வேண்டிய இந்தப் போட்டிப் பரீட்சை பெற்றோர்களின் மத்தியிலேயே அதிகளவில் செல்வாக்கு செலுத்துகிறது.பெற்றோர்கள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் செலுத்தும் ஆர்வம் ஏனைய பரீட்சைகளில் செலுத்தாததினால் எத்தனையோ மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தும் கல்விப்பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை, உயர்தரப்பரீட்சைகளில் கோட்டை விட்டு விடுகின்றனர். மாணவர்களின் மீது புலமைப்பரிசில் பரீட்சைக்காக பெற்றோர் காட்டுகின்ற அக்கறை அனைத்து பரீட்சைகளிலும் காட்டுகின்ற போது ஒவ்வொரு மாணவனிதும் எதிர்கால ஒளிமயமானதாக அமையும். 5ம் ஆண்டு பரீட்சை பெற்றோர்களின் போட்டிப் பரீட்சையாக மாறிப்போனதால் இதனை வைத்து நன்றாகவே பணம் சம்பாதிக்கலாம் என்று கணக்குப் போட்ட கல்வி வியாபாரிகளின் கல்லாப் பெட்டி நிரம்பிக் கிடக்கிறது.
இலவச் கல்வியை பண மையக் கல்வியாக மாற்றி வரும் சில கல்வி வியாபாரிகளினால் புலமைப் பரிசில் பரீட்சை மாதிரி வினா விடை புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு ஆண்டு தோறும் விற்பனைக்கு விடப்படுகிறது. இதன் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் வசூல் செய்யப்படுவதாகவும் கொழும்பிலுள்ள ஒரு புத்தக நிலையத்தின் அதிபர் எம்மிடம் தெரிவித்தார். இது தவிர இப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளை நடத்தும் ஆசிரியர்களும் கொள்ளை லாபம் பார்க்கின்றனர். தமது வகுப்புகளில் கற்கும் பிள்ளைகள் அனைவரும் இத் தேர்வில் வெற்றிப் பெற்றால்தான் அடுத்த ஆண்டுக்கான தமது வகுப்பிற்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை மேலும் பல மடங்காக அதிகரிக்கும் என்ற பணத்தாசையினால் தமது வகுப்புகளுக்கு வரும் பிள்ளைகளுக்கு அவர்கள் ஒரு சிறப்பு அனுமதி பரீட்சையை நடத்தி அதன் மூலம் நன்றாக படிக்கக் கூடிய மாணவர்களை மட்டும் வடிக்கட்டி தேர்வு செய்து தமது தனியார் வகுப்புகளில் இணைத்துக் கொள்கிறார்களாம் ஆசிரியர்கள். இதன் அடிப்படையில் அந்த ஆசிரியரிடம் கல்வி கற்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் போட்டிப் பரீட்சையில் வெற்றிப் பெற்றுவிட அதற்குப் பிறகு சொல்லவா வேண்டும்! “அந்த டீச்சருக்கிட்ட நம்ம புள்ளையையும் படிக்க அனுப்பிச்சா 'கொலசிப்ல வெற்றிப் பெறுவான்" என நம்பி அனைத்து பெற்றோர்களும் அந்த டீச்சரின் வகுப்புக்கு படையெடுக்க அவர் தமது கட்டணத்தையும் இரட்டிப்பாக்கி விடுவாராம்.
இந்த கொலசிப் அவலம் குறித்து களுத்துறை மாவட்டத்தில் கடந்த 36 வருடங்களாக ஆசிரியராக, அதிபராக பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றிருக்கும் அய்யாக்குட்டி தேவாராஜாவுடன் பேசினோம். “உலகில் வெற்றிப் பெற்ற அறிஞர்களும், ஆய்வாளர்களும் ஸ்கொலசிப் பரீட்சையில் வெற்றிப் பெற்றவர்கள் அல்ல என்ற உண்மையை நாம் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். உண்மையைச் சொல்லப் போனால் இது மாணவர்களுக்கான ஒரு தகமையே கிடையாது, இதில் சித்தி பெறும் மாணவன் உயர் தரத்தில் சித்தியடைவான் என்று உறுதியாக சொல்ல முடியாது. இதில் வெற்றிப் பெற்ற எத்தனையோ மாணவர்கள் உயர் தரத்தில் தோல்வியடைந்ததை நான் பார்த்திருக்கிறேன். அதனால் இத் தேர்வு ஒரு தகமையோ, கட்டாயமோ அல்ல. இது மனப்பாடம் செய்து வினாத்தாளில் ஒப்புவிப்பது அவ்வளவுதான், கல்வி என்பது ஒரு மாணவன் சுயமாக சிந்தித்து அறிவை மேம்படுத்துவது, என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.![]() |
| c.w.w.கன்னங்கர |
இதையெல்லாம் விட புலமைப்பரிசில் தேர்வில் வெற்றிப் பெறும் மூன்று பிள்ளைகளும் உயர் பதவியில் இருக்கும் வசதிப் படைத்த ஒருவரின் பிள்ளைகளாக இருக்கும் பட்சத்தில் இதில் எங்கோ ஓர் இடத்தில் இடர் இருப்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே வகுப்பறை கற்பித்தலின் அடிப்படை சரியாக அமைந்தால் நாற்பது மாணவர்கள் கற்கும் வகுப்பில் ஒரு மூன்று பிள்ளைகளாவது சித்தி பெற வேண்டும். மாறாக ஒரு ஆசிரியரின் மகள் மட்டும் சித்திப் பெறுகிறாள் என்றாள் அவளுக்கான கல்வி மேலதிகமாக எங்கோ வழங்கப்படுகிறது என்பதையும், இந்த வகுப்பறை கற்பித்தலில் தவறு இருப்பதையும் இந்த களுத்துறை மாவட்ட பாடசாலைகளிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறதுதானே என்று வெளிப்படையாகவே பேசுகிறார் அய்யாக்குட்டி தேவராஜா.
“நன்றாக மனப் பாடம் செய்யக்கூடிய மாணவன் இத் தேர்வில் சித்திப் பெற்றுவிடுவான். ஆனால் உயர் தரம் என்பது சுயமாக சித்தித்து பதில் எழுத வேண்டிய ஒரு இடம்.எனவே புலமைப் பரிசிலில் சித்தி பெறும் மாணவர்கள் அனைவருமே உயர் தரத்தில் சித்திப் பெறுவார்கள் என்று நிச்சயமாக எதிர்பார்க்க முடியாது. எனவே இவ் விடயத்தில் அரசு நேரடியாக கள ஆய்வு செய்து, போட்டிப் பரீட்சைகளை தவிர்த்து விட்டு நன்றாக படிக்கக் கூடிய, பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் உள்ள மாணவர்களை தெரிவு செய்து அவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்குவது. சிறப்பானதாகவும் அதே நேரத்தில் அரசு எதற்காக இந்தத் திட்டத்தை கொண்டு வந்ததோ அது நிறைவேற்றப்பட்தாகவும் அமையும்!” என்று சொல்லும் ஆசிரியர், ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தையும் எம்மிடம் பகிர்ந்து கொண்டார். “புலமைப்பரிசில் தேர்வின் பெறுபேறுகள் வெளியாகியிருந்த நேரத்தில் நான் வசிக்கும் பகுதியிலுள்ள ஒரு வீட்டுக்குச் சென்றிருந்தேன்.
அந்த வீட்டில் ஒரே ஒப்பாரி சத்தம் கேட்ட வண்ணமாக இருந்தது. என்ன நடந்தது என்ற பதட்டத்துடன் வீட்டுக்குள் நுழைந்து பார்த்தேன். அங்கே ஒரு சிறுவன் ஒருப்பக்கமாக கதறி அழுது கொண்டிருக்க மறுப்பக்கத்தில் அவனது அம்மா, அப்பா, பாட்டி என்று அனைவரும் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்தார்கள். “எங்க நம்பிக்கையில் இப்படி மண்ண போட்டுட்டானே, கொலசிப்ல பெயிலாகிட்டானே"ன்னு அந்த அம்மா அழுதப் போதுதான் எனக்கு விஷயமே புரிந்தது. சரி அந்த சிறுவனையாவது ஆறுதல்படுத்தலாமே என்று, “தம்பி இந்த கொலசிப்ல தோல்வியடைந்திட்டன்னு அழக் கூடாது இன்னும் இதைவிட பெரிய பரீட்சைகள் இருக்கு. அதுக்கு உன்ன தயார்படுத்து" என்று புத்தி சொன்னேன். அதற்கு அவன், “சும்மா இருங்க சேர். இனி எனக்கு எங்கே சைக்கில் வாங்கித் தரப் போறாங்கன்னுதான் அழுகிறேன்"ன்னு பதில் சொல்லி என்னை அவன் அதிர வைத்தான். இரவு பகல் பாராது பிள்ளைகளை மன அழுத்தத்துக்குள்ளாக்கி தாங்களும் மன அழுத்தத்துக்கும் மனச்சோர்வுக்கும் உள்ளானதன் விளைவு கடந்த காலங்களில் உரிய வெட்டுப் புள்ளியைப் பெறாத பிள்ளைகளைத் திட்டித்தீர்த்தமை, விரட்டியடித்தமை, குறைந்த புள்ளிகளைப் பெற்றமைக்காக சூடுவைத்தமை, செல்லப்பிராணிகளை அடைக்கும் கூடுகளில் குறைந்த புள்ளி பெற்றமைக்காக பிள்ளையை அடைத்து வைத்தமை போன்ற பல சம்பவங்கள் இந்த நாட்டில் நடைபெற்றுள்ளன. பரீட்சையில் சாதித்தவர்கள் வாழ்த்தப்படுவதும் சாதிக்காதோர் சாதிப்பதற்காக ஊக்கப்படுத்தப்படுவதும்தான் பரீட்சைப் பெறுபேறுகளின் எதிர்பார்ப்பாகும். மாறாக சித்தியடைந்தோரின் சார்பில் மமதை கொள்வதோ அல்லது சித்தியடையாதோரை ஏறி மிதிப்பதும் ஏற்றுகொள்ளத்தக்கதல்ல. அவை மன அழுத்தங்களையே உருவாக்கும்🔴





No comments:
Post a Comment