Thursday, May 26, 2022

வேலூர் பூக்காரம்மாவிடம் பேசிய போது…



மிழகத்தில் பூ வியாபாரம் மிகப் பெரியளவில் நடைபெற்று வரும் ஒரு வர்த்தகம். தினமொன்றுக்கு மில்லியன் ரூபா பூ வியாபாரம் நடைபெறும் நாடு அது. சென்னை, கோயம்பேடு சுப்பர் மார்க்கட்டுக்கு அதிகாலை வேளையில் சென்றால் வெளிமாநிலங்களில் இருந்து வரும் பூக்கள் மூடை மூடையாக இறக்கி ஏற்றப்படுவதைக் காணலாம். தமிழர் கலாசாரத்தோடு பூக்கள் இணைந்து பிணைந்திருப்பதால் பூ வியாபாரம் ஒவ்வொரு ஊரிலும் அமோகமாக நடக்கிறது. தமிழ்ப் பெண்கள் ஒவ்வொரு நாளும் தலையில் பூக்களை சூடிக் கொள்வதை வழமையாகக் கொண்டிருக்கிறார்கள்.

தாம்பத்திய வாழ்க்கைக்கும் பூக்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உண்டு. பல சுவையான ரகசியங்களும் உண்டு. இதனால் தமிழகத்தில் பூ வியாபாரம் படுப்பதில்லை. தெருவோரங்களில் கூடையில் பூக்களை கோர்த்து முழம் கணக்கில் விற்பனை செய்யும் பெண்களில் அநேகரை நாம் சென்னைத் தெருக்களில் காணலாம். அதிகாலையில் வீடு தேடிவரும் பேப்பர்காரன், பால்காரன் போன்று அங்கே பூக்காரியும் வந்து விடுவாள். அப்படி பூக்கூடையோடு வேலூர் சங்கரன் பாளையம் வழியாக வந்த பூக்காரப் பெண் அன்னம்மாவை வழி மறித்தோம். சென்னையில் இருந்து 145 கி. மீ. தூரத்தில் வேலூர் அமைந்துள்ளது. “அடுக்கு மல்லியா, குண்டு மல்லியா எத்தினை முழம்?” என்றவாறே தலையில் இருந்தது கூடையை இறக்கினார் அன்னம்மா. ஒரு முழும் எவ்வளவு என்றோம். மூன்று ரூபாய் என்றார். “எங்களுக்கு இரண்டு முழம் தாங்க” என்றோம். இடுப்பில் சொருகி இருந்த கத்திரியை எடுத்து நீளமாக இருந்த அந்த பூமாலையை தனது உள்ளங்கைக்கும் முழங்கைக்கும் இடையே வைத்து இரண்டு முழமாக அளந்து 'கட்” பண்ணிக் கொடுத்தார். 

இருபது ரூபாவை எடுத்து நீட்டினோம். “சில்லறை இல்லியே சாமீ!” என்றவரிடம் “மிச்சத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்” என்று அன்பாகச் சொல்ல, அதிர்ந்து போனார் அன்னம்மா... நாம் பேட்டி காண வந்த விடயத்தைச் சொன்னதைக் கேட்டு, “அதானே பார்த்தேன் என்னடா சோழியன் குடுமி சும்மா ஆடுதேன்னு...” என்றவர் தன் கதையை அவிழ்த்து விட்டாள். “நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே இதே வேலூர்தான். மழைக்காகக் கூட நான் பள்ளிக்கூடப் பக்கமா ஒதுங்கியது இல்லை. எங்க அப்பன், ஆயீ செய்த தவறு அது. என்னை படிக்கவைக்கலை. இல்லன்னா எனக்கும் இன்னைக்கு எழுத படிக்கத் தெரிஞ்சிருக்குமே..... என்ன செய்ய, நம்ம தலையெழுத்து இப்படி அமைஞ்சி போச்சி. புருசனும் செத்து போயி இப்போ ஒரு ஆறு மாசமாகிறது.... என் மகனுக்கு ஒரு பதினைந்து வயதிருக்கும். அவனும் கூலி வேலைக்குத்தான் போறான். படி படின்னு எவ்வளவோ சொன்னேன் கேட்குறான் இல்லை . இன்னைக்கு உள்ள புள்ளைங்க எதுதான் பெத்தவங்க சொல்றத கேட்குது! அது அது நெனச்சபடிதான் எல்லாம் நடக்குது.. எல்லாம் கலிகாலம்...” என்று கைகளை உயர்த்தி விரக்தியில் பேசும் அன்னம்மாவிடம் உங்களுக்கு சொந்த வீடா? என்றோம் “ஆமாங்க ஒரு பொறம்போக்கு  எடத்தை புடிச்சி வீடுகட்டினோம். இன்னைக்கு அது சொந்தமாயிடுச்சி. இங்கே நிறைய பேரு அப்படித்தான் வீடு கட்டுறாங்க. பொறம்போக்கு நிலத்திலே ஒரு குடிசை போட்டுட்டா அடுத்து வரும் அரசாங்கம் பட்டா (காணி உறுதி) கொடுத்திடும்...” என்றவரிடம் “பூ வியாபாரம் எப்படிப் போகிறது? என்றோம், “என்னதான் நாகரிகம் வளர்ந்தாலும் தமிழர்கள் கலாசாரத்தை மறந்து வர்றாங்கன்னு நம்ம ஊரு பத்திரிகையில எழுதுறாங்களாம். ஆனா அதுவெல்லாம் சுத்தப் பேத்தலுங்க...... இன்னைக்கும் நம்மகிட்டே பூ வாங்குறவங்க தொகை அதிகமாத்தான் இருக்கு. எப்படியும் ஒரு நாளைக்கு ஐம்பது ரூபாய்க்கு குறையாமல் இலாபம் கிடைக்கிறது. காலையிலேயே மார்க்கட்டுக்குப் போய் கிலோ கணக்கில் பூக்களை வாங்கி வந்து அதை சிறிய மாலையாகக் கட்டி முழங் கணக்கில் விற்கிறேன். நிறைய துரம் நடக்க வேண்டியிருக்கு. இதைத்தவிர இது நல்ல தொழில்தான். யாருக்கும் நம்ம அடிமையில்லை. நமக்கு நாமே முதலாளி” என்று தனது தொழில் மென்மையை நினைத்துப் பூரிக்கிறார் அன்னம்மா.

“உங்க வீட்டுக்கு கலர் டிவி வந்து விட்டதா?” என்றோம். “தலைவரு செய்றதைத்தான் சொல்லுவாறு சொல்றதைத்தான் செய்வாருன்னு டிவியில் சொன்னாங்க அது மாதிரியே இரண்டு ரூபாய்க்கு அரிசியும் கலர் டிவியும் கொடுத்திருக்காரு. ஆனா நம்ம ஊருக்குத்தான் இதுவரை கலர் டிவி வரலை. கரண்ட் மட்டும் இலவசமா கொடுத்திருக்காங்க. அதுல ஒரு பல்ப் போட்டிருக்கோம். கலர் டிவி வந்திட்டா டிவியை போட்டுப் பார்க்கலாம். ஆனா அந்த டிவியை எப்போ தருவாங்களோ…”ன்னு ஏக்கமாக பேசும் அன்னமாவிடம்,
“இரண்டு ரூபா அரிசி சாப்பிடவே முடியலை என்றும் விதை விதையா சோறு இருப்பதாகவும் சொல்றாங்களே? நீங்க எப்படி சாப்பிடுறீங்க?” என்றதும், “குறை சொல்றவங்க ஏதாவது சொல்லிட்டுத்தான் இருப்பாங்க. பணக்காரங்களுக்கு நல்ல அரிசி தான் சாப்பிட முடியும். ஆனா எங்கள மாதிரி ஏழைகளுக்கு இந்த மாதிரி இரண்டு ரூபா அரிசிதான் அமிர்தம். நம்ம ஊர்ல இருந்து (ரேசன் அரிசியை) இரண்டு ரூபா அரிசியை கேரளாவுக்கும், ஆந்திராவுக்கும் கடத்துறாங்களாம். ருசியில்லா அரிசியை எப்படிக் கடத்த முடியும்?” என்று அவரும் பதிலுக்குக் கொக்கி போட்டார். பின்னர் நிதானமாக எம்மைப் பார்த்த அன்னம்மா, கிளம்புவதற்கு தயாரானார்.
“உங்ககிட்டேயே பேசிட்டிருந்தா நம்ம கிட்டே பூ வாங்குறவங்க வேறுயாரிட்டவாவது வாங்கிடப் போறாங்க. அதனால நான் கிளம்புறேங்க” என்றவர் பூக் கூடையைத் தலையில் சுமந்தவராக மல்லி ... மல்லி... மல்லி.... என்று கூவிக் கொண்டே நடந்தார்⚫

一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一
எனது கட்டுரைப் பதிவு, இலங்கை தினகரன் நாளிதழில் 2008, ஜூன் 15ம் திகதி வெளியானது.

No comments:

Post a Comment