கி.மு. 2600 ஆண்டுகாலப் பகுதிகளில் மாயன் நாகரிகம் தோன்றியதாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். அதன் பிறகு கி.பி.1500ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் மாயன்கள் உச்சத்தில் இருந்தார்கள் என்றும்,
ஸ்பானியர்களின் படையெடுப்புக்கு பிறகு மாயன்கள் 90 சதவீதமானோர் கொல்லப்பட்டாலும் அவர்களின் வழி வந்த இனத்தவர்களில் 70 லட்சம் பேர் மத்திய அமெரிக்காவின் பல பகுதிகளில் வாழ்ந்து வருவதாகவும், மாயா மொழிகளில் 31 வகையான மொழிகள் இன்று வரை புழக்கத்தில் இருப்பதாகவும் சொல்கிறார்கள். விவசாயத்தில் தமிழர்கள் எப்படி தன்னிறைவான சமூகமாக இருந்தார்களோ அதேப் போன்று மாயன்களும் விவசாயத்தில் உச்சம் தொட்டிருந்தார்கள் எந்த மாதத்தில் எதை விதைக்காலம் என்பதை மாயன்கள் மிகவும் துல்லியமாக கணித்திருந்தார்கள். பாணன், பறையன், கடம்பன், துடியன் என்ற நான்கு குடிகளைத் தவிர வேறில்லை என்று தமிழர்களின் இனக்குழுவை 2000 ஆயிரம் வருட பழைமையான மாங்குடி மருதநாரின் புறநானூறு குறிப்பிடுகிறது.
அதேப் போன்று மாயன்களிடமும் சாதீய கோட்பாடு இருந்திருக்கிறது. மேல் நிலை, கீழ் நிலை என்று இரண்டு பிரிவுகளில் அந்த மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். மேல்நிலை வர்க்கம் குடிகளை ஆள்பவர்களாகவும், கடவுளுக்கு பூஜை செய்பவர்களாகவும், கீழ் நிலை வர்க்கம் ஏனைய தொழில்கள் செய்பவர்களாகவும் இருந்திருக்கிறார்கள் அதாவது பிராமணரும், சூத்திரரையும் போல. மாயன்களின் பேரழிவுக்கு அவர்கள் நகரங்களை அமைப்பதற்கு காடுகளை அழித்ததால் ஏற்பட்ட வரட்சியும், ஸ்பானிய படையெடுப்புக்குப் பிறகு அந்தப் பகுதியில் ஏற்பட்ட பால்வினை நோய் உட்பட நோய் தொற்று, அவர்களுக்குள் இருந்த ஆண்டான் அடிமை என்ற பாகுபாடு காரணமாக இருந்திருக்கலாம் என்பதையும் மறுப்பதற்கில்லை. மத்திய அமெரிக்காவின் டார்ஜின் என்ற ஊரில் மாயன்களால் அமைக்கப்பட்டுள்ள கோயில்களின் அமைப்பு தமிழகத்தின் குமரி, தூத்துக்குடி, கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் கண்ணனூர், கோழிக்கோடு பகுதிகளில் உள்ள கோயில் கட்டடங்களோடு ஒத்துப்போகிறது.
டார்ஜின் கோயிலின் தோற்றம் மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தின் தோற்றத்தை நமக்கு ஞாபகப்படுத்துவதோடு அதில் உள்ள சிற்பங்களில் ஓகம் என்று சொல்லப்படுகிற யோகக்கலையை பிரதிபலிக்கும் சிற்பம், பத்மாசனம், கந்த பேராசனம் உள்ளிட்டவைகளின் சிற்பங்களும் காணப்படுவதாலும் அவைகள் தமிழகத்தில் உள்ள யோகக்கலையை சேர்ந்தவையாக இருப்பதும் மாயன்கள் ஆதி திராவிடர்களாக இருப்பதற்கு அதிகமான வாய்ப்பு இருப்பதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றார்கள். மாயன்கள் சூரியனை கடவுளாக வழிபட்டதோடு, இறப்புக்கான கடவுள், மகிழ்ச்சிக்கான கடவுள், மழைக்கான கடவுள் என்று 166 கடவுள்களை அவர்கள் வழிபட்டதாக கூறப்படுகிறது. மத்திய அமெரிக்க பகுதிகளில் சிவலிங்கம் போன்ற தோற்றத்தில் கிடைத்த கற்கள் அவர்கள் சிவனை வழிபட்டார்களா என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது.சோழர்கள் எப்படி தங்களை சூரிய குலத்தவர்கள் என்று சொன்னார்களோ அதே போன்று மாயன்களும் தங்களை சூரிய குல வம்சமாகவே குறிப்பிட்டிருக்கிறார்கள். பொழுது போக்கு விளையாட்டுகளை எடுத்துக் கொண்டால், தமிழர்களைப் போன்று தாயம், ஆடுப்புலி ஆட்டம் உள்ளிட்ட விளையாட்டுகளை மாயன்களும் ஆடியிருப்பதாகத் தெரிகிறது.
குமரிக் கண்டத்தை கடல் கொண்டபோது, தமிழர்கள் கட்டுமரங்களில் தப்பி பல்வேறு தேசங்களுக்கு புலம் பெயர்ந்திருக்கலாம் என்று கூறப்படும் வரலாற்றுக் கதையில், உலக மொழிகளில் கட்டுமரம் என்ற வார்த்தை மட்டும் அப்படியே மாற்றம் செய்யப்படாமல் இருப்பது தமிழர்கள் பல்வேறு நாடுகளில் பரவியிருந்ததற்கு சான்றாக அமைகிறது. பெரும்பாலான உலக மொழிகள் பேச்சு வழக்கில் மட்டுமே உள்ளன. அவற்றுக்கு எழுத்து வடிவம் இல்லை. ஆனால் மாயன்கள் பேச்சு மொழியை உருவாக்கியதோடு அவற்றுக்கு எழுத்து வடிவத்தையும் உருவாக்கி இருக்கிறார்கள். பூச்சியத்தை இந்தியர்கள் உருவாக்கினார்கள் என்றாலும் மாயன்களே பூச்சியத்தை உலகுக்கு அறிமுகம் செய்தார்கள் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மாயன்கள் நூல்களையும் எழுதியிருக்கிறார்கள். ஸ்பானியர்களின் படையெடுப்பில் அந்த நூல்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. அவற்றில் நான்கு நூல்கள் மட்டுமே தப்பியதாக சொல்லப்படுகிறது அவற்றில் ஒன்றுதான் 'சில்லம்பலம்” (chilam balam) மாயன்களின் நாகரிகம் மர்மங்கள் நிறைந்தது என்பதை விளக்குவதற்கு அவர்கள் சிதம்பரம் (ரகசியம்) என்பதையே சில்லம்பலம் என்று குறிப்பிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.
மத்திய அமெரிக்காவின் மெக்சிக்கோ, ஹொன்டுரஸ், கவுதமாலா, எல் சல்வடோ, பெலிஸ் உள்ளிட்ட ஐந்து பெரு நிலப்பரப்புகளில் மாயன்கள் சுமார் 5000 ஆண்டுகளாக வாழ்ந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. மாயன்களின் எழுச்சியில் கி.மு. 700இல் விவசாயத்தில் அவர்கள் முன்னேற்றம் கண்டதாகவும், அதன் பிறகு கி.மு.300இல்
அவர்கள் எழுத்துக்களை உருவாக்கியதாகவும், கி.மு.100லிருந்து அவர்கள் நகரங்களை அமைக்கத் தொடங்கியதாகவும் டியோட்டி வாக்கன் என்ற இடத்தில் தமது முதலாவது நகரத்தை அவர்கள் அமைத்ததாகவும் சொல்கிறார்கள். மாயன்களில் ஒரு பிரிவினர் தமது பெயரோடு முதல் எழுத்தாக ‘எல்’ என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார்கள் உதாரணத்துக்கு, எல் கார்க்கோ, எல் லினர், எல் சலவடோ உள்ளிட்டவைகளை குறிப்பிடலாம். தமிழில் ‘எல்’ என்றால் சூரியன், ஒளி என்று அர்த்தம் உள்ளது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இதேப்போல் மாயன்களில் யுகாட்டோ, சோலன் எனும் இரண்டு பிரிவினர் வாhழ்ந்திருக்கிறார்கள். இவர்களில் கரையோரத்தில் வாழ்ந்த ஒரு பிரிவினர் ‘சேரோ’ என்ற சொல்லை தமது குடும்பப் பெயராகவும் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். மாயன் இனப் பெண்களிடையே சடைப்பின்னி தலையில் பூ வைக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. அதோடு தமிழகத்தில் அந்தக் காலத்தில் போரில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு நடுக்கல் அமைத்து வழிப்படும் முறை அவர்களிடமும் இருந்திருக்கிறது. அதே நடுக்கல் வழிப்பாட்டு முறையையும் மாயன்கள் பின்பற்றி வந்ததாகவும் தெரிகிறது. நாகர்கள்தான் ஆதித் தமிழர்களின் இனம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். நாகர்களின் தலைவன் தச்சன் என்று இந்து புராணங்கள் கூறுகிறது. நாகர் கூடி வாழ்ந்த இடம் நகரம் ஆனதாகவும் நாகரிகம் என்ற தமிழ் வார்த்தைக்கு ‘நாக - அகம்’ நாகர்களின் ஒழுக்கம் என்றும் சொல்கிறார்கள்.
இதேவேளை தமிழ் மன்னன் என்று போற்றப்படும் இராவணனின் தம்பி நாகலோகம் ஆண்டதாகவும், நாகர்கள் வாழ்ந்த இடத்தை அழித்து விட்டு அங்கே இந்திர பிரஸ்தத்தை பாண்டவர்கள் அமைத்ததாகவும் வரலாறுகள் கூறுகின்றது. ஐரோப்பிய நாடுகளிலும் மற்றும் வட நாட்டு புராணங்களிலும் பாம்பு ஒரு கொடூரமான உயிரினமாகவே சித்தரிப்பட்டு வந்திருக்கும் நிலையில் தமிழர்கள் நாக வழிபாடு செய்து வந்திருக்கிறார்கள். தேவர்களுக்கு தேவாமிர்தம் கிடைக்க உதவி செய்த வாசுகி என்ற பெண் நாகர் குலத்தை சேர்ந்த தமிழச்சிதான் என்பது தமிழ் ஆர்வலர்களின் கருத்தாகவும் இருக்கிறது. சங்க இலக்கிய நூல்களில் இருபதுக்கும் மேற்ப்பட்ட பாடல்களில் நாகர்கள் பற்றி கூறப்பட்டுள்ளது. கார்க்கோடகன் என்ற நாகம் வானிலையை ஆராயும் தன்மை கொண்டிருந்தது என்று வட நாட்டு புராண நூல்கள் குறிப்பிடுகிறதாம். இதேப் போல் கிருஷ்ணன் காலிங்கன் என்ற ஒரு கொடூரமான பாம்பை கொன்றதாகவும் கூறப்படுகிறது. எனவே இவர்கள் புராணங்களில் கூறும் அந்த கொடூர நாகம், நாகர் இன மக்களையே குறிப்பிடுவதாகவும் நாகர்கள் வெறுக்கத்தக்க மக்களாகவே வட நாட்டு புராணங்களில் கூறப்பட்டு இருப்பதையும் வரலாற்று ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். தமிழர்களின் வழிப்பாடுகளில் முருகன், சிவன், இந்திரன் உள்ளிட்ட கடவுளருக்கு மாற்றாக ஒரு கடவுளை உருவாக்கியதாகவும் அவர்தான் கிருஷ்ணன் என்றும் மாயன்களின் கடவுள்களின் தலையில் இறகு இருப்பது போலவே கிருஷ்ணன் தலையிலும் இறகு இருக்கிறது என்பது ஒரு சிலர் முன் வைக்கும் கருத்தாகவும் இருக்கிறது. மாயன் கட்டடங்களில் பாம்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளதாகவும், மாயன்களின் அறிவு வளர்ச்சிக்கு அடிப்படை காரணமாக இருந்தவர் ‘குக்கில்கன்’ என்ற பாம்பு அரசர் என்றும் இவரையே மாயன்கள் கடவுளாகவும் வழிப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த ‘குக்கில்கன்’ பாம்பு அரசன் கிழக்குப் பகுதியிலிருந்து வந்ததாக கூறப்படுவதால் அவர் ஒரு வேளை சுமேரியாவிலிருந்து வந்திருக்கலாம் அல்லது தென் இந்தியாவிலிருந்து வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிது. மாயன்களின் மன்னர்கள் பாம்பு அரசர்கள் என்று அழைக்கப்படுவதால் அவர்கள் நாகர் இனமாக இருப்பார்கள் என்பதும் ஒரு சாராரின் கருத்தாகவும் உள்ளது. சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் தலைவர் நா. சஞ்சீவி, மாயன்களின் கலாசாரங்களில் தமிழர் மரபு இருப்பதாகவும் அவர்கள் இந்திய நிலப்பரப்பை சேர்ந்தவர்கள் என்பதை மறுக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். அதே போன்று கன்யாகுமரி கடலில் திருவள்ளுவர் சிலை அமைத்த கணபதி என்ற தலைமை ஸ்தபதி மாயன்கள் தமிழர்கள்தான் என்று ஆணித்தரமாக சொல்கிறார். சிவன் புலித்தோல் மீது அமர்ந்து இருப்பது போலவே மாயன்களின் மன்னர்கள் புலியாசனம் அமைத்து அதில் அமர்ந்து ஆட்சி செய்திருக்கிறார்கள்.
இது தவிர மாயன்களின் நாட்காட்டி தமிழர்களின் திருக்கணித பஞ்சாங்கத்தை ஒத்து இருப்பதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இது தவிர தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் கருமாத்தூரில் ஓச்சாண்டம்மன் கோவில் அமைந்துள்ளது. அந்தக் கோவிலில் வழிப்பாடு செய்யும் ஒரு பிரிவு மக்கள் மாயன் என்ற பெயரை தமது குலப் பெயராக கொண்டிருக்கிறார்கள் சின்ன மாயன், பெரிய மாயன், மொக்க மாயன், கூழ் மாயன், நல்ல மாயன், சண்டி மாயன், காசி மாயன்,முத்து மாயன் போன்ற பெயர்களை கொண்டவர்களை இன்றும் அந்தப் பகுதியில் காணலாம். அந்தக் கோவிலில் பூஜை நடக்கும் போது அந்தக் கோவில் பூசாரிக்கு சாமி வந்து ஆடும்போது மாயா... மாயா என்று சத்தம் போட்டு விண்ணைப்பார்த்து சொல்வது இன்று வரை வழமையாக உள்ளதாம். 1514ல் மாயன் இனத்தவர்கள் காணமல் போனதாக சொல்லப்பட்டாலும் இன்று வரை அவர்கள் பற்றிய மர்மக் கதைகள் தொடந்து கொண்டுதான் இருக்கிறது🔵







மிக்க நன்றி!! குமரிக்கண்டம் தொடர்பாகவும் அறியத்தரவும்..
ReplyDeleteவிரைவில் குமரிக்கண்டம் பற்றிய ஒரு ஆய்வு கட்டுரையை மணி விகடனில் எதிர்பார்க்கலாம்..
ReplyDelete