Saturday, April 13, 2013

வேலூரின் ஒளிரும் பொற்கோவில்

1500 கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்ட திருக்கோவில் இது!


நேரடி ரிப்போர்ட்- மணி ஸ்ரீகாந்தன்

தமிழ் நாட்டில் உள்ள சில முக்கிய நகரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஏதாவது ஒரு தனிச்சிறப்பு இருக்கும்.குறிப்பாக மதுரை,சிதம்பரம்,தஞ்சாவூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட நகரங்கள் கோயில்களுக்கு புகழ் பெற்ற இடங்களாக விளங்கி வருகின்றன.
இந்த கோயில் நகரங்கள் பட்டியலில் புதிதாக சேர்ந்துள்ள நகரம் வேலூர்.இங்குதான் உலகப்புகழ்பெற்ற  பொற்கோவில் அமையப்பெற்றிருக்கிறது.
இந்திய நகரங்களில் வேலூர் வரலாற்று சிறப்புமிக்க நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது.முதல் சிப்பாய் கலகம் வேலூர் கோட்டையில்தான் நடைப்பெற்றதாக வரலாறு குறிப்பிடுகிறது.பொம்மி நாயக்கர்,ஆர்க்காட்டு நவாப் உள்ளிட்ட மன்னர்கள் வேலூரை ஆட்சி செய்திருக்கிறார்கள்.
அவர்களின் ஆட்சியைப் பறைசாற்றி வேலூர் மாநகரில் நிமிர்ந்து நிற்கிறது வேலூர் கோட்டை அதோடு ஆசியாவில் புகழ் பெற்ற சி.எம்.சி.மருத்துவமனை,வேலூரின் டிரேட் மார்க் முத்திரையான மத்திய சிறைச்சாலை போன்றவை வேலூருக்கு அழகு சேர்த்திருந்தாலும் இவை சுற்றுலாப் பயணிகளை பெரியளவில் கவரவில்லை.அதனால் வேலூரின் பெயர் பெரியளவில் இந்தியாவில் பேசப்படவில்லை. 
ஆனால் திடீர் பிரவேசம் செய்திருக்கும் பொற்கோவில் வேலூரின் புகழை உலகமெங்கும் பேசவைத்திருக்கிறது.
வேலூரில் இருந்து 7கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது அரியூர்.இங்கு ஸ்ரீமா-சாஸ்த்திரி ஒப்பந்தத்தில் நாட்டை விட்டு சென்ற மலைநாட்டு தமிழர்கள் ஆயிரக்கணக்கில் வாழ்ந்து வருகிறார்கள்.அரியூர் என்பதைவிட சிலோன்காரன் ஊர் என்றாலே எல்லோருக்கும் தெரிந்து விடுகிறது.இங்குள்ள மலைக்கோடி என்ற இடத்தில்தான் பொற்கோவில் அமையப்பெற்றுள்ளது.பொற்கோவில் அமையப்பெற்றுள்ளதால் அந்த இடத்திற்கு ‘ஸ்ரீபுரம்’என்ற புதிய பெயரும் சூட்டப்பட்டுள்ளது.1500 ஏக்கர் பரப்பளவுள்ள கோயில் நிலத்தில் மொத்தமாக நூறு ஏக்கர் பரப்பளவில் கோயில் நட்சத்திர வடிவில் அமைந்திருக்கிறது.

பெங்களுர்,ஆந்திரா,கேரளா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களிருந்தெல்லாம்  ஸ்ரீபுரத்திற்கு சிறப்பு பஸ் சேவை  நடத்தப்பட்டு வருகிறது.நாம் சென்னையிலுருந்து வேலூர் செல்லும் பஸ்சில் ஏறி மூன்று மணி நேர பயணத்திற்கு பிறகு சுமார் நூற்றி ஐம்பது கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் வேலூர் பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் இறங்கி அங்கிருந்து ஒரு ஆட்டோவில் சென்றோம்.

இருவருக்கு பதினைந்து ரூபா கொடுத்தோம்.வேலூர் மத்திய சிறைச்சாலையை ஒட்டியே ஸ்ரீபுரம் வழி அமைந்திருக்கிறது.வழி நெடுகிலும் புளிய மரங்கள் வானுயர வளர்ந்திருக்கிறது.பொற்கோவில் அமைந்திருக்கும் மலைக்கோடி ஒரு காலத்தில் ஆள் அரவமற்ற காடாக இருந்ததாம்.அங்குதான் சித்தர்களும்,யோகிகளும் தியானம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
அதே இடத்தில் நாராயணியை நினைத்து சக்தி அம்மா தியானம் செய்து அம்மனின் அருளைப்பெற்று தங்கக் கோயில் அமைத்தார்.என்று ஆட்டோக்காரர் ஆறுமுகம் எம்மிடம் உணர்ச்சிப்பொங்க கூறினார்.

கோயில் வாசலில் வந்திறங்கி பிரதான வாயிலுக்கு சென்றோம்.அங்கே மெட்டல் டிடக்டர் கருவிகளோடு கோட் சூட் போட்ட காவலர்கள் பாதுகாப்பில் இருந்தார்கள்.உலோகத்தை கண்டுப்பிடித்துக் காட்டும் பெரிய வாசலில் நுழைந்துதான் கோயிலுக்குள் செல்ல வேண்டும்.செல்போன்,கேமரா கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

ஸ்ரீநாராயணி அம்மன்
ஆயிரத்து ஐந்நூறு கிலோ தங்கத்தால் நிர்மாணிக்கப்பட்டுள்ள இக் கோவிலை சுற்றிலும் சிறிய அகழி அமைக்கப்பட்டுள்ளது.கோவிலில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீநாராயணி அம்மனை தரிசிக்க வேண்டுமென்றால் கோவிலை சுற்றியுள்ள நட்சத்திர வடிவத்தில் சுமார் இரண்டு கிலோ மீற்றர் தூரத்திற்கு பயணிக்க வேண்டும்.நவீன முறையில் கூரை அமைக்கப்பட்டு நிலத்திற்கு மாபிள்,கிறைனைட்  கல் பதிக்கப்பட்டு மிகவும் நேர்த்தியான முறையில் கோவில் அமைக்கப்பட்டுள்ளது.களைப்புக்கு குளிர்பாணம் அருந்த இடைக்கிடையே குளிர்பான கடைகளும் உள்ளன.கோயிலின் இரு பக்கங்களிலும் அடர்ந்து வளர்ந்த மரங்கள்,தரையை போர்த்தியிருக்கும் பச்சை புல்வெளி, நீர் வீழ்ச்சி என்று சொர்க்கப்புரியாகவே ஸ்ரீபுரம் காட்சியளிக்கிறது.தமிழ்நாட்டில் வெயில் சுட்டெரிக்கும் இடமென்றால் அது வேலூர் தான்.வெயிலூர் என்பதுதான் மருவி காலப்போக்கில் வேலூராக மாறிவிட்டதாம். புழுதிவாரி தெளித்திருக்கும் வீதிகள்,உயர்ந்த மலைகள் எல்லாம் வெயில் சூட்டை தாங்க முடியாமல் பொட்டல் காடாக கிடப்பதுதான் வேலூரின் அழகு.அங்கே இப்படி ஒரு குளு,குளு ஏரியாவை பார்க்க பிரமிப்பாக இருக்கிறது.

சக்தி அம்மா குறி சொன்ன
பாம்பு புற்று

கோடிக்கணக்கான ரூபாய்களை வாரி இறைத்து இப்படியொரு கண்கவர் இடத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.வழி நெடுகிலும் ஸ்ரீநாராயணி அம்மனின் பக்தராகவும,; பொற்கோவிலின் தர்மகர்த்தாகவும் இருக்கும் ஸ்ரீ சக்தி அம்மாவின் படங்கள் மாலைகளோடு காட்சியளிக்கின்றன.படங்களுக்கு இடை இடையே சக்தி அம்மாவின் ஆன்மீக சிந்தனை எழுதப் பட்ட பதாதைகளை பார்க்க முடிகிறது.

‘மற்றவர்களைச் சந்தோசப்படுத்தும் போது உங்களுக்கு கிடைக்கும் சந்தோசம் ஒரு சிறப்பு தன்மையுடையது. அதுதான் ஆனந்தம் அதுதான் உங்களை தெய்வம் ஆக்குகிறது.’என்ற சிந்தனை வாக்கியத்தை வாசித்தப்படியே நடந்தோம்.வழமையாக கோயில்கள் என்றால் உண்டியல்தானே இருக்கும்!ஆனால் இங்கே கோட் சூட் அணிந்த டிப்டொப் இளம் பெண்கள் கணனி மொனிட்டர்களுக்கு முன்னால் அமர்ந்து கிரெடிட் கார்ட் மூலமாக கிடைக்கும் நன்கொடைகளை சேமித்து கொண்டிருந்தார்கள்.

கோயில் வளவுக்குள்ளேயே அன்னலட்சுமி சைவ உணவகம் நிமிர்ந்து நிற்கிறது.நாலு மாடி கட்டிடத்தை கொண்ட அந்த சைவ உணவகத்தில் நாவுக்கு ருசியாக விருந்து படைக்கிறார்கள்.நாராயணி அம்மனின் லட்டு ஒன்று ரூபா பத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. நட்சத்திர வட்டத்தை சுற்றி முடித்து இறுதியாக தங்கக் கோயிலை அண்மித்தோம்.சூரிய ஒளிபட்டு அந்த இடமே ஜொலித்து கொண்டிருந்தது.

சக்தி அம்மா
சொர்க்கபுரி என்று கதைகளில் படித்திருக்கிறோமே,அதை நிஜத்தில் பார்க்க வேண்டும் என்றால் வேலூருக்கு தான் வரவேண்டும்.பழனி ஆண்டவர் தங்கம் என்பதால் அவரை விழுந்து கும்பிட்டு அவரின் காலையே கடித்து எடுத்து சென்றவர்கள் தானே நம்மவர்கள்!இந்த தங்க கோவிலை சும்மா விடுவார்களா என்ற கேள்வி என் மனதில் எழ இன்னும் கொஞ்சம் அருகில் சென்று பார்த்தேன்.நான் நினைத்தபடி எதுவும் நடந்து விடவில்லை.
பொற்கோவில்காரர்கள் ரொம்பவும் உசாராகத்தான் இருக்கிறார்கள்.நம்மவர்களுக்கு கோவிலை தொட்டுப் பார்க்கவே முடியாது.சாமியை கும்பிட்டோமா திரும்பினோமா என்றுதான் இருக்க முடியும்.தங்கச் சுவரை சுற்றிலும் தடுப்பு வேலி அமைத்து நம்மவர்களிடம் இருந்து தங்கத்தை காப்பாற்றி வருகிறார்கள்.

பொற்கோவிலின் கொள்ளை அழகை ரசிக்கவே உலக முழுவதிலிருந்தும் சகல மதத்தினரும் வருகை தருகிறார்கள்.இங்கு வரும் பக்தர்கள்,பார்வையாளர்களில் குறிப்பாக தமிழர்களைவிட வெளி மாநிலத்தவர்களே அதிகமாக வருகை தருவதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது.வேலூருக்கு பக்கத்தில் ஆந்திரா இருப்பதால் திருப்பதிக்கு மொட்டை போட வருபவர்கள்,அங்கு மொட்டை போட்டு முடிந்ததும் நேராக கோல்டன் டெம்பலுக்கு ஒரு விசிட் அடித்து விடுகிறார்கள்.

காலை 7மணி முதல் இரவு 8மணி வரை திறந்திருக்கும் பொற்கோவிலில் தினமும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.இரண்டாயிரம் ஆண்டில் தொடங்கிய பொற்கோவிலின் கட்டுமான பனிகள் 2007 ஆம் ஆண்டில்தான் முடிவடைந்திருக்கிறது.மொத்தமாக ஏழு ஆண்டுகளில் பொற்கோவிலை உருவாக்கி இருக்கிறார்கள்.மொத்தமாக 300 கோடி செலவானதாக கோயில் நிர்வாகத்தினர் சொல்கிறார்கள்.

1500 கிலோ தங்கத்தை எப்படிங்க வெளியில இருந்து கொண்டு வந்தீங்க?என்று கோயில் நிர்வாக சபையில் அங்கத்தினராக இருக்கும் கார்த்திக்கிடம் கேட்டோம்
“எல்லாம் நாராயணி அம்மனின் அருளால் நடந்தது.இந்த கோவில் உருவானது ஒரு கனவு மாதிரி…ஆனால் சட்டப்படி அரசாங்கத்தின் அனுமதியோடுதான் நடந்தது.அப்துல் கலாம்,கலைஞர்,அத்வானி என்று பெரிய பெரிய தலைவர்கள் எல்லோரும் தங்கக் கோயிலுக்கு வந்திருக்கிறார்கள்.இதற்க்கான பணம் அனைத்தையும் வெளிநாடுகளில் வாழும் சக்தி அம்மாவின் பக்தர்கள் வழங்கியது என்று சுருக்கமாக பதிலளித்தார் அவர்.

சக்தி அம்மா தொண்ணூறாம் ஆண்டுகளின் தொடக்க காலத்தில் மலைக்கோடியில் ஒரு பாம்பு புற்றின் அருகில் அமர்ந்து நாராயணி அம்மனின் சக்தியோடு பக்தர்களுக்கு அருள்வாக்கு வழங்கி வந்திருக்கிறார்.அவரின் பெரும் முயற்சியால்தான் இந்தியாவுக்கு ஒரு தங்கக் கோயில் கிடைத்திருக்கிறது. இந்தியாவில் ஏற்கனவே இருந்த அமிர்தசரஸ் தங்கக் கோயிலை இப்போது இரண்டாம் இடத்திற்கு தள்ளியிருக்கிறதாம் இந்த வேலூர் தங்கக் கோயில்.

கோயில் வளாகத்திற்கு வெளியே உள்ளே நிலப்பரப்பில் நூற்றி ஐம்பது கட்டில்களோடு நூறு வைத்தியர்களைக் கொண்ட பெரிய வைத்தியசாலை ஒன்றும் இயங்குகிறது .இந்த வைத்தியசாலையில் 24மணி நேரமும் பிரசவம் பார்க்க படுகிறதாம்.ஒருவருக்கு ரூபா 500 கட்டணமாக பெறுகிறார்களாம்.இதுவரை 320 சிறுவர்களுக்கு சக்தி அம்மாவின் கருணையால் இலவச இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது.
இது தவிர தாதியர் பயிற்சிக் கல்லூரி,ஆராச்சிக்கூடம்,பாடசாலை,தங்கும் விடுதி என்று எங்கு பார்த்தாலும் பொற்கோவிலுக்கு சொந்தமான
கட்டடங்கள்தான்.இதில் வரும் வருமானம் தற்போதைக்கு சக்தி அம்மாவுக்கு சொந்தம் என்றாலும்,அவருக்கு பிறகு அவை அரசுடமை ஆக்கப்படுமாம்.
இக்கோவில் பற்றி சாதாரன மக்களிடம் கேட்டோம்.பொற்கோவிலின் வருகைக்கு பிறகுதான் இந்திய வரை படத்தில் வேலூர் தெரிகிறது.அது நமக்கு பெருமை தானே!என்றார் கருப்பையா என்ற வேலூர் வாசி.சி.எம்.சி மருத்துவமனையில் தொழில்புரியும் மருதநாயகம் என்பவர் “பொற்கோவில் வேலூருக்கு கிடைத்த ஒரு பெரிய சுற்றுலா தளம்”என்கிறார்.
“இதனால் பலர் வயிறுபிழைக்கிறார்கள்.ஆட்டோகாரர்கள்,வியாபாரிகள்,விடுதி உரிமையாளர்கள் என்று பலருக்கும் வேலை கிடைத்திருக்கிறது.இந்த நகருக்கு பெருமளவில் வருமானம் வருகிறது.ஆனாலும் ஒரு குறை.சக்தி அம்மா நாராயணி அம்மாவின் பக்தர்தானே பின் எதற்காக அவரின் படத்தை நாராயணி அம்மாவுக்கு சமமாக போட்டு கோயில் தெருவெங்கும் மாட்டி வைத்திருக்கிறார்கள்?அவர் ஆண்டவனின் அவதாரமா?”என்ற கேள்வியை எம்முன் வைத்தார்.இதற்க்கான பதிலை இந்திய பக்தர்கள்தான் சொல்ல வேண்டும்.நாம் அல்ல என்று கூறியவாறே அவரிடமிருந்து விடைபெற்றோம்.

Saturday, April 6, 2013

வேலூரில் நிகழ்ந்த கண்டி ராஜசிங்கன் குருபூசை

"தமிழருக்கு மட்டுமல்ல, சிங்களவருக்கும் அவர் மன்னர்தான் என்றார் ஒரு சிங்களப் பயணி"


வேலூரில் ஒரு நேரடி அனுபவம்: மணி ஸ்ரீகாந்தன்.


கரிகாலன் கட்டி வைத்த கல்லணை பண்டைய தமிழகத்தின் பொறியியல் மேலாண்மையை வெளிப்படுத்துவதாக விளங்குகிறது. இதுபோலவே கண்டி மாநகரின் எழிலுக்கு கண்டி வாவியும் தலதா மாளிகையின் எண்கோண பத்திரிப்பு மண்டமும் மெருகூட்டி வருவதை நீங்கள் அறிவீர்கள். இவற்றை எழிலுற திட்டமிட்டு அமைத்தவர் கண்ணுசாமி நாயக்கர் என்கிற ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கன் என்பது இன்றைக்கு பலரும் அறியாத உண்மை.

சுமார் இருநூறு வருடங்களுக்கு முன்னர் கண்டியை அரசாண்ட நம் நாட்டின் கடைசி மன்னன். வெள்ளையர்களின் ஆக்கிரமிப்பால் மணிமுடி இழந்து குடும்பத்தோடு கைது செய்யப்பட்டு இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டான் என்பது வரலாறு. நாடு கடத்தப்பட்ட மன்னர் தமிழ் நாட்டின் வேலூர் நகரின் கோட்டையில் குடும்பத்தோடு பல ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டு பின்னர் அங்கேயே இறந்துபோனார். அதன் பின்னர் மன்னரின் மனைவி பிள்ளைகள் விடுதலை செய்யப்பட்டர்கள். அப்படி விடுதலை செய்யப்பட்ட மன்னரின் பரம்பரையில் வந்தவர்கள் இன்றும் தமிழகத்தில் பல இடங்களில்  வாழ்;ந்து வருகிறார்கள். கால மாற்றத்தால் நம் நாட்டவர்கள் கண்டி மன்னரை மறந்து விட்டாலும் மன்னரின் வாரிசுகள் அவரை இன்று வரை நினைவில் வைத்து மன்னரின் இறந்த தினத்தை இன்றுவரை ஒவ்வொரு ஆண்டும் குருபூஜை நிகழ்வாக வேலூரில் அமைக்கப்பட்டுள்ள மன்னரின் நினைவு இல்லமான முத்து மண்டபத்தில் நடாத்தி வருகிறார்கள்.
இந்நிகழ்வு வருடந்தோறும் ஜனவரி 30ம் திகதி  நடைபெறுகிறது. இவ்வருடம் நடைப்பெற்ற மன்னரின் 182வது வருட நினைவு தின குரு பூஜை விழா மதுரையைச் சேர்ந்த மன்னரின் வாரிசு அசோகனின் ஏற்பாட்டிலும் சென்னை சீனு மற்றும் வேலூர் சரவணன் ஆகியோரின் ஒழுங்கமைப்பில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

வேலூர் புது பஸ் நிலையத்தின் பின்புறமாக அமைந்திருக்கும் ஒரு சேரிப்புறத்தின் நடுவில் தான் இந்த முத்து மண்டபம் அமைப்பட்டிருக்கிறது. மண்டபத்தை சுற்றிலும் கண்ணுக்கெட்டிய தூரம் குடிசை வீடுகள், மேல் சட்டை அணியாத, கால் சட்டை போடாத சிறுசுகள் மண்டபத்திற்கு வெளியே பறந்து கிடக்கும் புழுதி மண்ணில் விளையாடிக்கொண்ருந்தார்கள்.

நாயக்கர் சங்க கூட்டம்
"மண்டபத்தை சுற்றி இருக்கிற இந்த இடங்களெல்லாம் முத்து மண்டபத்திற்கு சொந்தமான இடம்தான். 1990ம் ஆண்டு முத்து மண்டபம் கட்டத் தொடங்கும் போதே இந்த குடிசைவாசிகளுக்கு அரசாங்கம் வேறு ஒரு இடத்தில் இடம் ஒதுக்கி கொடுத்து விட்டது. ஆனால் இவர்கள் இன்றுவரை இடத்தை விட்டு வெளியேறவில்லை"என்று கவலை தெரிவிக்கிறார். சென்னையை சேர்ந்த சீனு. இவர் சாவித்திரி தேவியின் ஐந்தாவது வாரிசாம்.

பட்டத்துராணி வெங்கட ரங்கம்மாவின்
ஐந்தாவது வாரிசான மீனாட்சி அம்மாளும்
இன்னொரு வாரிசான ப்ருதிவிராஜனும்.
காலை ஒன்பது மணிக்கு தொடங்கிய மன்னரின் நினைவு தின குரு பூஜை விழாவின் ஆரம்ப நிகழ்வாக அணைக்கும் கரங்கள் பா. சரவணனின் ஏற்பாட்டில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் வேலூர் சுற்று வட்டாரத்திலிருந்து ஏராளமான பொது மக்கள் கலந்துகொண்டு பயன் அடைந்தார்கள்.

"இது ஒவ்வொரு தமிழ் மகனும் செய்ய வேண்டிய வேலைங்க... நம்ம ராஜா கடல் தாண்டி போய் நல்லாட்சி நடத்தியதை கௌரவிக்கவே இதுபோன்ற நிகழ்வுகளை நாம் நடாத்துகிறோ"; என்கிறார் பா. சரவணன்.

மாலை ஐந்து மணிக்கு பொதுக்கூட்டத்தோடு நடைபெற்ற நிகழ்வில் நாயக்கர் சங்கத்தை சேர்ந்த வர்த்தகர்கள் மற்றும் வேலூர் மாவட்ட துணை மேயர் தர்மலிங்கம் உள்ளிட்டோர் கலந்து மன்னரின் பெருமைகளை எடுத்துரைத்தார்கள்.

ராஜசிங்கன் வாரிசுகள்.
கூட்டத்தில் கட்ட பொம்மனின் வாரிசு வீமராஜா, கண்டி மன்னரின் வாரிசு பிரிதிவ் ராஜா, மதுரையிலிருந்து வந்திருந்த வாரிசுகளான அசோகன், மீனாட்சி அம்மாள் ஆகியோரும் உடன் இருந்தார்கள்.

"பண்டார நாயக்கா காலம் வரைக்கும் எங்களுக்கு இலங்கை அரசாங்கம் மானியம் கொடுத்தார்கள். அதற்குப் பிறகு வந்தவர்கள்தான் மானியத் தொகையை நிறுத்தி விட்டார்கள்,"என்று எம்மை பார்த்ததும் மன்னரின் ஐந்தாவது வாரிசான மீனாட்சி அம்மாள் படபடக்கத் தொடங்கினார். தியேட்டரில் டிக்கட் கிழித்துக்கொண்டிருக்கும் ப்ரிதிவ்ராஜன் ஒரு ஓரமாக நின்றுக்கொண்டிருந்தார். அவரை யாரும் பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை. அவரிடம் பேச்சுக்கொடுத்ததில், "இப்போ தியேட்டரில் வேலை இல்லீங்க. ஒரு கடையில் வாட்ச்மேனாக வேலைப் பார்க்கிறேன். எல்லாம் விதிங்க..." என்று பெருமூச்சு விட்டார்.

கூட்டத்தில் பேசிய நாயக்க சமூகத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் "கண்டி ராஜாவால் நாயக்க சமூகத்துக்குதான் பெருமை. இன்று நாயக்கர்கள்தான் சமூகத்தில ;உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள். அதற்கு அவர்களின் உழைப்பும், ஒழுக்கமும்தான் காரணம்,"என்று நாயக்க பெருமைகளை மட்டுமே மேடையில் முழங்கிக்கொண்டிருந்தார்கள்.

அருங்காட்சியக உதவி
இயக்
குனர்
திருமலை கமலநாதன்.
அந்த வீரமுழக்கத்தை கேட்டுக்கொண்டிருந்த வேலூர் அருங்காட்சியகத்தில் பணியாற்றும் திருமலை கமலநாதன் என்னிடம் வந்து,
 "ஒரு தடவை எங்கள் அருங்காட்சியகத்திற்கு இலங்கையிலிருந்து ஒரு சிங்கள சகோதரர் வந்திருந்தார். அவர் நாங்கள் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைத்திருந்த மன்னரின் பொருட்களை பார்த்துவிட்டு என்னிடம் வந்து ஒரு விடயத்தை சொன்னார். 'மன்னர் பாவித்த பொருட்களுக்கு கீழே கண்டியின் கடைசி தமிழ் மன்னன் என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள். அது தவறு. மன்னர் தமிழர்களுக்கு மட்டும் ராஜாவாக இருக்கவில்லை. எங்களுக்கும் அவர்தான் ராஜாவாக இருந்தார்,' என்று தெளிவாக குறிப்பிட்டபோது நாம் விட்ட தவறு எமக்கும் புரிந்தது. அந்த சகோதரர் மன்னரை எப்படி மதித்திருக்கிறார் என்பதையும் புரிந்துக்கொண்டேன். ஆனால் இங்கே நடப்பதை பார்த்தீர்களா? இலங்கைக்கு மன்னராக இருந்த ராஜா, 12 கோடி தமிழர்களின் பிரதிநிதியாக முன்னர் பார்க்கப்பட்டார். தமிழ்ச் சமூகத்தின் பெருமைச் சின்னமாகக் கொள்ளப்பட்டார். இது இன்று கூனிக் குறுகி நாயக்கர்களின் ராஜா என்ற அளவுக்கு கடுகாகிவிட்ட அவலத்தைப் பாருங்கள் மிஸ்டர்," என்றார். ஒரு பேரரசனை ஒரு குழுவின் சிற்றரசனாக இந்த சாதித் திமிர் மாற்றி விடுகிறதே என்று நானும் கவலைப்பட்டேன். இது நமது தலைவிதி தவிர வேறென்ன!

ராஜசிங்கனின் குருபூசை
மன்னரின் முத்து மண்டபம் நீண்ட நாட்களுக்கு பிறகு பளிச்சென்று அலங்கார விளக்குகளால் ஜொலித்துக்கொண்டிருந்தது. மண்டபத்தை கூட்டிப் பெருக்கும் முனியம்மா ஒரு ஓரத்தில் அமர்ந்து புலம்பிக்கொண்டிருந்தார்.
"இன்னமும் மாதம் 150 ரூபாதாங்க கொடுக்கிறாங்க. கலைஞர் மண்டபத்தை திறந்து
வருமானம் போதவில்லை
என்று புலம்பும்
முனியம்மா
வைத்ததிலிருந்து அதுதான் எனக்கு சம்பளம். யார் யாரெல்லாம் பெரிய ஆளுங்க வந்தாங்க. நானும் எத்தினையோ முறை சொல்லிட்டேன் சாமீ... ஆனா ஒன்னும் நடக்க மாட்டேங்குது"என்பது முனியம்மாவின் வேதனை. சுமார் 10 வருடங்களுக்கு முன்னால் அந்த அம்மா என்னிடம் இதே கதையைத்தான் சொன்னார். அவருக்கும் மீட்சியில்லை.

நாங்களும் இந்தியாவுக்கு போனோமுங்க…01

போண்டா சாப்பிட ஆசையா..


மணி ஸ்ரீகாந்தன்.


சுமார் நூற்றி ஐம்பது வருடங்களுக்கு முன்பு தென்னிந்தியாவிலிருந்து கூலித் தொழிலாளர்களாக இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட தமிழர்கள் மலைநாடுகளில் குடியேற்றப்பட்டனர்.பின்னர் இவர்கள் அவ்வப்போது தமிழகம் செல்வதும் வருவதுமாக இருந்தனர்.மேலும் அன்று இலங்கையும்,இந்தியாவும் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்ததால் போக்குவரத்தில் பிரச்சனைகள் தோன்றவில்லை.தலைமன்னார் சென்று தங்கியிருந்து முன்னர் பெரிய படகுகளிலும் பின்னர் பிரிட்டிஷ் நிராவிக் கப்பல்களிலுமாக அக்கரைக்குப் பயனமாகினர்.அதன் பின்னர் ரயில் சேவை வரவே பயணம் மேலும் சுலபமானது.
இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்து,வம்சாவளி தமிழர்கள் நாடற்றவர்களாக ஆக்கப்பட்ட பின்னர்.இந்த போக்குவரத்து மிகவும் குறைந்து போனது.ஏறக்குறைய தொப்பூள்கொடி அறுந்த மாதிரித்தான்.நாடற்றவர் காலப்பகுதியிலும் இலங்கை பிரஜாவுரிமை வைத்திருந்தவர்கள் இந்தியாவுக்கு ராமானுஜத்தின் ஊடாக சென்று வந்தனர்.
மேலும்சிங்களவியாபாரிகள்,முஸ்லிம்கள்(பெரும்பாலும் வியாபார நோக்கத்துடன்)தமிழகம் சென்றனர்.முன்னர் அடிக்கடி தமிழகம் சென்று வந்த பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இப்போது தமிழக பயணம் லண்டன் பயணம் மாதிரி ஆகிவிட்டது.
ஐம்பது அறுபதுகளில் கையில் பாஸ்போர்ட வைத்திருப்பது ஒருவருக்கு விஐபி அந்தஸ்த்து மாதிரி.கையில் அரிசிக் கூப்பன் வைத்திருந்தால் அவன் பிரஜை,பாஸ்போர்ட் வைத்திருந்தால் சூப்பர் பிரஜை.எனினும் 1964ல் ஸ்ரீமா-சாஸத்திரி ஒப்பந்தத்தின் பின்னர் இந்திய தமிழர்கள் பலருக்கு குடியுரிமையும்,அதன் மூலம் பாஸ்போர்ட்டும் கிடைக்க இந்தியாவுக்கு செல்லும் தமிழர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

இரண்டாம் தலைமுறையினர்,இந்தியக் கரையையே பார்க்காதவர்கள்.கடலையே காணாதவர்கள்.எல்லாம் கப்பல் ஏறி தமிழ் நாட்டில் இறங்கியதும் அங்கே பார்த்து பேசி,அதிசயத்தவையும் அலாதியான குட்டிக் கதைகள் சுவையானவை.எனினும் இந்த இனிப்பான மேற்பூச்சுகளின் கீழ் வரலாற்று நிகழ்வுகளையும் நாம் காணலாம்.

இங்கே ‘நாங்களும் இந்தியாவுக்கு போனோமுங்க’என்ற சிறு உண்மை அனுபவ சம்பவத் திரட்டு தொடராக வெளிவரவுள்ளது.இது கேலிச் சித்திரமல்ல.ஐம்பது அறுபதுகளின் பின்னர் ராமானுஜம் கப்பலில் எறி இந்தியக் கரையை அடைந்த பெருந்தோட்ட தொழிலாளர் குடும்பங்களின் அனுபவங்கள்.இவை பதியப்பட வேண்டியவை.
ராமானுஜம் கப்பலில் அந்த நேரத்தில் பெரும்பாலும் வியாபாரிகளே பயணம் செய்தனர்.
இலங்கையிலிருந்து அதிகளவில் பொருட்களை கொண்டு செல்வதற்காக  சில முதலாளிமார்கள் சிலருக்கு இலவசமாக பாஸ்போர்ட்,வீசா,டிக்கட் செய்து கொடுத்து அவர்களை இந்தியாவுக்கு அழைத்து செல்வார்கள்.குறிப்பிட்ட அந்த நபர்களுக்கு வேலை முதலாளிகள் இக்கரையில் தரும் பொருட்களை அக்கறையில் கொண்டு சென்று கொடுப்பதுதான் பிறகு குறிப்பிடும் இடத்தில் சில நாட்கள் தங்கி இருந்து விட்டு முதலாளி இந்தியாவில் வாங்கித் தரும் பொருட்களை இலங்கைக்கு கொண்டுவந்து கொடுப்பார்கள்.
அப்படி முதலாளிகளின் சலுகையில் இந்தியாவை பார்த்தவர்கள் வந்து சொல்லும் கதைகள் ஒரு காலத்தில் தோட்டப்பகுதிகளில் நட்சத்திர அந்தஸ்த்து பெற்றிருந்தது.

இந்தியாவில் ஆசைக்கு ஒரு கல் பார்க்க முடியாது.எங்கு பார்த்தாலும் ஒரே சமமான மணல் தரைதான் என்று ஏதோ சந்திர மண்டலத்தை பார்த்தவர்கள் வந்து சொன்ன கதை மாதிரி கதை அளந்தார்கள்.
அவர்களை சொல்லியும் குற்றமில்லை.ஏனெனில் இந்தியாவிற்கு அழைத்துச் சென்ற முதலாளிகள் அவர்களுக்கு காட்டிய இடம் ராமேஸ்வரம்.சில மாதங்களுக்கு முன்பு சுப்பையா என்ற ஒரு நபரை வழியில் சந்தித்தேன்.அவரும் ராமானுஜம் கப்பலில் இந்தியா சென்று வந்தவராம்.

“நாங்க பயணம் செய்த கப்பல் ரொம்ப பெரிசு அதாவது,மேட்டு லயத்தையும்,பனிய லயத்தையும் ஒண்ணா ஒட்ட வச்சா வருமே பெருசு அந்த மாதிரி.அதிலதான் எங்க முதலாளியோடு நான்,எங்கப்பா,என் அக்கா மற்றும் சில நண்பர்களோடும் போனோம்.கப்பல் பயணம் ரொம்ப ஜாலியா இருந்தது.எங்களை அழைத்து சென்ற அந்த முதலாளி ரொம்ப நல்லவரு.கப்பலில் நாங்கள் ஏறியதுமே எங்களுக்கு சில அறிவுரைகளையும் சொன்னாரு.கப்பலை விட்டு இறங்கியதும் ரொம்ப கவனமா இருக்கனும் அங்கு நிறைய களவானி பயலுங்க இருப்பாங்க!அதனால பணம்,பை கவனம்.அதோட முக்கியமா ஒண்ணு….அங்கு ரோட்டோர பெஞ்ச் கடைகளில் விற்கிற போண்டாவை யாரும் வாங்கி சாப்பிடாதீங்க!என்று ஒரு எச்சரிக்கையும் செய்தார்.

அதற்கு பிறகு என் அப்பா அந்த போண்டாவை பற்றியே கேட்டுட்டு வந்தாரு.நாங்களும் அதை பெரிசா எடுத்துக்கல்ல.இராமேஸ்வரத்தில் இறங்கியதும் என் அப்பாவின் கவனம் முழுவதும் முதலாளி சாப்பிட வேண்டாம்னு சொன்ன அந்த போண்டாவின் மீதுதான் இருந்திருக்கு.பிறகு எங்களுக்கு தெரியாம திருட்டுத்தனமா அந்த போண்டாவை வாங்கி சாப்பிட்டிருக்காரு!

அதன் பிறகு எங்களிடம் வந்தவர் ‘அந்த முதலாளி நம்மள நல்லா ஏமாத்த பார்த்தான்டா..ஐந்து சததிற்கு நல்ல பெரிய போண்டா விற்கிறாங்க…அதை வாங்க வேணான்னு சொல்லி இருக்கான்.நான் அதை வாங்கி சாப்பிட்டு பார்த்திட்டேன்.ஒரு ஆளுக்கு ஒண்ணு சாப்பிட முடியல என்று போண்டா புராணம் பாடிய என் அப்பா சில நிமிடங்களில் வயிறு கலக்குவதாக கூறி பாத்ரூமுக்கு ஓடினார்.
அதன் பிறகு இலங்கை திரும்பும் வரை அவரின் பாத்ரூம் ஓட்டம் நிற்கவில்லை.முதலாளி சொன்னதின் அர்த்தம் லேட்டாகித்தான் என் அப்பாவுக்கு புரிந்தது” என்றார் சுப்பையா!.