Friday, May 20, 2022

தொடரும் விவாதங்களுக்கு மத்தியில் ஒரு பகுப்பாய்வு




நாராயணசாமி ஜெயரட்ணம்,  களுத்துறை

இலங்கையில் கஞ்சா பயிர் செய்கையை ஊக்குவித்து அதனை ஏற்றுமதி செய்வதன் மூலம் தற்போது நாட்டில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடி தீர்வுக்கு உதவலாம் என பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே அண்மையில் நாடாளுமன்றத்தில் முன்வைத்த சர்ச்சைக்குரிய யோசனையை பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார சபையில் வழிமொழிந்ததை தொடர்ந்து இன்று கஞ்சா தொடர்பிலான பல்வேறு விமர்சனங்கள், கருத்து முரண்பாடுகள் மற்றும் வாதப் பிரதி வாதங்களுக்கு மத்தியில் நாட்டின் மூலை முடுக்கெங்கும் முக்கிய பேசு பொருளாக மாறியிருக்கிறது. இந்த யோசனை தொடர்பில் பாராளுமன்றத்தின் அனுமதியுடன் சட்டமா அதிபர் திணைக்களம், நீதி அமைச்சு, ஆயுர்வேத வைத்திய சபை, தேசிய போதைப்பொருள் ஆய்வகம் மற்றும் தேசிய அபாயகரமான ஒளடதங்கள் கட்டுப்பாடு சபை என்பன ஆராய்ந்து புதிய சட்டமூலம் ஒன்றை தயாரித்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ள நிலையில் இது தொடர்பாக விரிவான கலந்துரையாடல் ஒன்றை ஆரம்பிக்குமாறு எதிர்க்கட்சியினர் கோரி வருகின்றனர்.

மத்திய ஆசியா மற்றும் இந்திய துணைக் கண்டத்தையும் தாயகமாகக் கொண்டது என நம்பப்படும் கஞ்சா Cannabis குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் இரு வித்திலை தாவரமாகும். கேனபிஸ் சட்டிவா(Cannabis Sativa) கேனபிஸ் இண்டிக்கா (Cannabis Indica) மற்றும் கேனபிஸ் ருடோலிஸ் (Cannabis Ruderalis) எனப்படும் மூன்று சிற்றினங்களைக் கொண்டது. இயற்கையிலேயே இது ஓர் அரியவகை மூலிகைத் தாவரம். இத்தாவரம் இலங்கையில் பொதுவாக எல்லாப் பகுதிகளிலும் காணப்படுகின்ற போதிலும் தனமல்வில, மித்தெனிய, வெல்லவாய, புத்தல மற்றும் எல்பிட்டிய போன்ற பகுதிகளில் நன்கு செழித்து வளர்கின்றது. கஞ்சா சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே பயன்பாட்டில் இருந்ததாக பழங்கால மேற்கு சீன கல்லறைகளில் ஆய்வாளர்கள் மேற்கொண்ட சில ஆய்வுகள் மூலம் கண்டறிந்துள்ளனர். அதேபோல் 483 தனித்தனி வேதிக் கூட்டுப் பொருட்கள் அடங்கியுள்ளதென அறியப்படும் இத்தாவரம் ஆரம்பகாலத்தில் இதன் நார், எண்ணெய் என்பன வாசனைத் திரவியங்கள் தயாரிப்புக்கு பயன்படுத்தப்பட்டன. கிராமப்புற கை மருந்தாகவும், ஆயுர்வேத மற்றும் சித்த வைத்திய மருத்துவ மூலப் பொருட்களாகவும் பொழுதுபோக்கு போதைப் பொருளாகவும், பண்டைய கால போர்க் களங்களில் போர் வீரர்களை ஊக்குவிக்கும் ஊக்க மருந்தாகவும் பயன்பட்டு வந்துள்ளது.

எனினும் காலப்போக்கில் போதை ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு அதிகளவிலானோர் பாவனையில் ஈடுபட்டு வந்ததன் காரணமாகவும் இதனால் ஏற்படும் ஒரு சில பக்க விளைவுகளை கருத்தில் கொண்டும் ஐக்கிய நாடுகள் சபையின் சிபாரிசுக்கு இணங்க இலங்கை உட்பட உலகில் பல நாடுகள் அபாயகரமான போதைப் பொருள் சட்டத்தின் கீழ் கஞ்சாவை தடை செய்து இன்றுவரை
நடைமுறைப்படுத்தி வருகின்றது. இலங்கையில் பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் அவர்களுக்கு எதிராக கண்டி இராச்சியம் எதிர்த்தாக்குதலில் வெற்றிகரமாக ஈடுபட்டு வந்த போது, அவர்கள் போரிடும் முறையை அவதானித்த பிரிட்டிஷார், வீரர்கள் கஞ்சா புகைத்துவிட்டு மரணபயமின்றி யுத்தம் செய்வதை புரிந்து கொண்டார்கள். கஞ்சாவை தடை செய்ய இதுவே காரணமானது. இதற்கு முன்னர் கஞ்சாவுக்கு இலங்கையில் தடை இருக்கவில்லை. மேலும் சிகரட் பாவனையை இலங்கையில் அறிமுகப்படுத்தி அதன் மூலம் பாரிய வருமானத்தை ஈட்டும் இலாப நோக்கிலும் 1929 ஆண்டு திருத்தப்பட்ட அபாயகரமான போதைப் பொருள் கட்டளை எண் 17 என்ற (Poddo) சட்டத்தின் கீழ் அபின் மற்றும் கஞ்சா (Cannabis Sativa) பயிரிடுதல், விற்பனை செய்தல், கைவசம் வைத்திருத்தல், பாவனை, இறக்குமதி  மற்றும் ஏற்றுமதி என்பன தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டது. இத்தகைய குற்றங்களின் அடிப்படையில் (பிரிவு 54 A (C)) உரிய சட்டபூர்வ உரிமம்  அல்லது ஆவணங்கள் மூல அனுமதி BHANG SHOP இல்லாத ஒருவருக்கு ரூபாய் 25,000 தண்டம் அல்லது ஒரு வருடத்திற்கு மேற்படாத எளிய அல்லது கடுமையான சிறை தண்டனை வழங்கப்பட முடியும். அதேவேளை  5 கிலோகிராமுக்கு மேல் கைவசம் இருக்கும் பட்சத்தில் 25,000 - 50,000 வரையிலான தண்டம் அல்லது 5 ஆண்டுகளுக்கு உட்பட்ட சிறைத் தண்டனை வழங்கப்படலாம்.

ஐக்கிய அமெரிக்கா, மொரோக்கோ, ஆப்கானிஸ்தான், மெக்சிகோ, கொலம்பியா, பெரகுவே, ஜமேய்க்கா , கனடா, நைஜீரியா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் பெருமளவில் கஞ்சா உற்பத்தி செய்து அவற்றை ஏற்றுமதி செய்வதன் மூலம் பாரிய அந்நிய செலாவணியை ஈட்டி வருகின்றன. அதேசமயத்தில் கனடா, உருகுவே, கம்போடியா, சிலி ஐக்கிய அமெரிக்காவின் கொலராடோ மற்றும் வாஷிங்டன் மாநிலங்கள், இந்தியாவின் காசி என்றழைக்கப்படும் வாரணாசி பகுதி உள்ளிட்ட மேலும் சில நாடுகளிலும் கஞ்சா பாவனைக்கு சில நிபந்தனைகளின் அடிப்படையில் சட்டபூர்வமான முறையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் 2014 ஆம் ஆண்டில் 15-64 வயதுக்கு இடைப்பட்ட 182.5 மில்லியன் பேர் கஞ்சா பாவனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இது உலக மக்கள் தொகையில் சுமார் 3.8 வீதம் எனவும் ஐக்கிய நாடுகள் சபையின்    (United Nations Office On Drugs and Crime - UNODC) ஆய்வு அறிக்கைகளில் இருந்து தெரிய வருகின்றது. எனினும், மருத்துவ குணங்கள் கொண்ட இந்த மூலிகையை இன்றைய இளைய தலைமுறையினர் பெருமளவில் போதையை ஏற்படுத்தக் கூடிய வகையில் செயற்கையான முறையில் அதிக விஷமூட்டப்பட்ட கேரள கஞ்சா போன்றவற்றை தவறான முறையில் அதிகளவில் பயன்படுத்துவதன் காரணமாக மூளை செயல்திறன் இழந்து மனநிலை பாதிக்கப்படும் நிலைக்கு உள்ளாகின்றனர்.


அதேசமயத்தில் நினைவாற்றலை இழந்து சுயமாக முடிவெடுக்கும் திறனும் பாதிப்புக்கு உள்ளாகிறது. இளமைப் பருவத்தில் ஆண்கள் அதிக அளவில் கஞ்சா பயன்படுத்துவதன் காரணமாக விந்து அணுக்களின் வடிவம், அளவும் மற்றும் அதன் செயல்பாடுகள் மாறுபடுவதால் ஆண்மைத் தன்மையை இழக்க நேரிடுகிறது. இதனைத் தவிர நரம்புத் தளர்ச்சி, பக்கவாதம், கண்பார்வை என்பனவும் பாதிப்புக்குள்ளாவது மட்டுமின்றி கொலை, கொள்ளை, திருட்டு போன்ற பல்வேறு சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர் என வைத்தியர்கள் கூறுகின்றனர். எனினும் வைத்தியர்களின் ஆலோசனைக்கு அமைய விஷம் நீக்கப்பட்ட கஞ்சாவை உரிய முறையில் பயன்படுத்துவதன் மூலம் நுரையீரல் செயற்பாட்டு திறனை மேம்படுத்தலாம். உடல் எடை குறையும். இன்சுலின் மீதான தாக்கத்தால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும். இரத்த அழுத்தத்தைக் குறைத்து இரத்த ஓட்டத்தை சீராக்கும். புற்றுநோயை எதிர்த்துப் போராடும் வேதிப் பொருட்கள் கஞ்சாவில் காணப்படுகின்றன.


மனச் சோர்வு, உற்சாகம் இன்மை மற்றும் மனக்கவலையை (Depression and Anxiety) நீக்கும், எழும்புகளை வலுப்படுத்தும், கண் (Glaucoma) சிகிச்சைக்கு உதவும். மூளை அழற்சியை (Alzheimer's) எதிர்த்துப் போராடும் சக்தி வாய்ந்தது. பார்கின்சன்(Parkinson's and Bowel Disease) நோயால் பாதிக்கப்பட்டவர்களின் நடுக்கம் மற்றும் வலி வேதனையை குறைக்க சிறந்த மருத்துவ குணங்களை கொண்ட மருத்துவ நிவாரணியாக கஞ்சா பெரிதும் உதவுவதாக சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆகையால் போதைப்பொருள் பாவனையாளர்கள் இடையே இருமல் சிரப் வகைகள் மற்றும் நரம்புகள் மூலம் செலுத்தப்படும் ஒரு சில வலி நிவாரணிகளையும் போதைப்பொருளாக பயன்படுத்திவரும் இன்றைய காலத்தில் கஞ்சா ஏற்றுமதியின் மூலம் அந்நிய செலாவணியை பெற முடியும். இன்றைய இளம் தலைமுறையினரிடையே பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் அதிக போதைப்பொருள் பாவனைக்கு தீர்வொன்றை பெற்றுத் தரும் வகையில் விஷம் நீக்கப்பட்ட, மருத்துவ குணங்களை அதிகம் கொண்ட கஞ்சா - உற்பத்தி பொருட்களை அதன்  பாவனையாளர் இடையே அறிமுகம் செய்து அவர்களை ஓரளவாவது அபாயகரமான போதைப் பொருட்களின்
கோரப்படியில் இருந்து மீட்டெடுக்கும் முயற்சிகளை முன்னெடுப்பதில் தவறில்லை என்றொரு வலுவான வாதமும் முன்வைக்கப்படுகிறது🔴

📷  முகப்பு படம்: ஈஸ்வர் ஒளிப்படக் காதலன்

Thursday, May 19, 2022

மாயன்கள் தமிழர்களா?




மாயன் என்ற இனம் இன்று வரை மர்மங்கள் நிறைந்த இனமாகவே இருந்து வருகிறது. மாயன்களின் கலண்டரின்படி இந்த உலகம் 2012லேயே அழிந்து விடும் என்று ஒரு சாரார் அடித்துச் சொன்னக் கதைகளை நாம் கேட்டிருக்கின்றோம்.
ஆனாலும் மாயன் கலண்டரில் சொல்லப்பட்ட இரகசியம் இன்று வரை விடைத் தெரியாத புதிராகவே இருந்து வருகிறது.
மாயன்கள் பற்றிய பல புதிர்கள் இன்று வரை உலகம் முழுவது உலா வந்துக்கொண்டுதான் இருக்கிறது. அதில் ஒன்றுதான் மாயன் என்போர் யார் அவர்கள் உண்மையிலேயே அமெரிக்க மண்ணின் பூர்வீக குடிகளா அல்லது தமிழகத்தைச் சேர்ந்த ஆதி திராவிடர்களா என்ற கேள்வியும் பலராலும் இன்று வரை பேசப்பட்டு வருகிறது.

மாயன் இனத்தோடு தமிழர்களை இணைத்து பேசுவதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. தமிழகத்தில் கீழடியில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகளின்படி தமிழர்கள் மிகவும் தொன்மையான இனத்தவர்கள் என்றும் அவர்கள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே நாகரீகத்தின் உச்சத்தில் இருந்திருக்கிறார்கள் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே பெரிய கண்டமாக இருந்த குமரிக்கண்டத்தின் மீது  ஒரு மிகப் பெரிய விண் கல் வீழ்ந்ததால் அதனை கடல் கபளீகரம் செய்து விட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள் இந்த பேரவலத்தின் போது அங்கிருந்த மக்கள் மரக் கலங்களின் உதவியோடு பல் வேறு நாடுகளை நோக்கி புலம் பெயர்ந்து சென்றார்கள் என்று,
‘கர்ணா மிருத சாகரம்’ என்ற இசை நூலை இயற்றிய ஆபிரகாம் பண்டிதரும், ஐயா வைகுந்தரும் பிற்காலத்தில் வந்த தேவநேய பாவணரும் இதனை உறுதிப்படுத்தி சொல்கிறார்கள்.

அதோடு கிரேக்க வரலாற்று ஆய்வாளரான ஹிரோடெட்ஸ் என்பவர் ‘ஹிஸ்ட்ரி’ என்ற நூலில், தமிழர்கள் பழங்காலத்திலேயே கடல் வழி பயணம் மேற்கொள்வதில் திறமையானளர்களாக இருந்தவர் என்றும் அவர்கள் பல்வேறு நாடுகளுக்கு கடல் வழி மற்றும் நில வழியாக பயணம் செய்ததாகவும், பலர் தாயகம் திரும்பாமல் அங்கேயே குடியேறி விட்டதாகவும் அந்தப் புத்தகத்தில் எழுதியிருப்பதாக சொல்லப்படுகிறது.


தமிழில் குமரிக் கண்டம் என்பதை ஆங்கிலேய வரலாற்று ஆய்வாலரான ஸ்கொட் ஹெலியட் என்பவர் லெமூரியா என்று குறிப்பிடுகிறார்.
குமரிக் கண்டத்தை கடல் கொண்டது என்பதை நமது சங்க இலக்கிய நூலான சிலப்பதிகாரமும் கலித்தொகையும் அதற்குப் பிறகு வந்த அடியார்களுக்கு உரித்தான நல்லாரின் விளக்க உரை நூலும் உறுதியாக குறிப்பிடுகின்றன.
குமரிக் கண்டம் அழிந்த போது மரக்கலங்களில் தப்பிய தமிழர்கள் நீண்ட தூர பயணத்தில் அவர்கள் வட அமெரிக்க நிலப்பரப்பில் தரை இறங்கியிருக்கலாம். அங்கே இறங்கியவர்கள் தமக்கான வாழ்விடங்களை அங்கேயே அமைத்துக் கொண்டிருக்கலாம். என்றொரு கோட்பாடு உண்டு.
அவர்கள் வாழ்ந்த இடம்தான் இன்றைய மெக்சிகோ. சுமார் 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக செழுமையாக வாழ்ந்த இவர்கள் கணிதவியல், வானவியல், கட்டடக்கலை உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கினார்கள். அவர்கள் கி.பி.16ம் நூற்றாண்டு வரையும் தமக்கான அடையாளத்துடன் வாழ்ந்ததாக ஆய்வுகளிலிருந்து தெரிய வருகிறது.

mani srikanthan
இதன் அடிப்படையிலேயே மாயர்கள் திராவிடர்களின் பரம்பரையாகத்தான் இருக்க வேண்டும் என்பது சில இந்திய வரலாற்று ஆய்வாலர்களின் கருத்து.
மெக்சிகோவில் வாழ்ந்த இந்த பேரினம் ஸ்பானிய மக்களின் வருகையை அடுத்து அழிந்து போகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பாக ஹொலிவூட்டில் வெளியான ‘அப்பகலிப்டோ’ படத்தின் கடைசி க்ளைமக்ஸ் காட்சியில் ஒரு கப்பல் மாயன்கள் வாழ்விடத்தில் தரை தட்டி நிற்கும். அது ஸ்பானிய கப்பல்தான் என்பதை படத்தின் இயக்குநர் மெல்கிப்ஸன் அழுத்தமாக சொல்லியிருப்பார். அந்தக் காட்சியோடு படம் நிறைவடையும்.
நிஜத்திலும் அப்படிதான் நடந்து இருக்கிறது. ஸ்பானியர்கள் மாயன் இனத்தவர்களில் பல லட்சம் பேரை கூண்டோடு அழித்தாகவும். எஞ்சியவர்களை கிருஸ்தவத்துக்கு மதம் மாற்றியதாகவும் சொல்லப்படுகிறது.இன்று அந்த மக்களில் சிலர் தமது பாரம்பரிய அடையாளங்களை இழந்து மெக்ஸிகோ, கவுதமாலா பகுதிகளில் வாழ்ந்து வருகிறார்கள்.
மாயன்கள் தமிழர்களைப் போலலே கருமை நிறத்திலும், குள்ளமான, திடகாத்திரமான, தடித்த உதடுகளுடன் தமிழர்களின் உருவ ஒற்றுமையிலும் ஒத்துப் போகிறார்கள். அதோடு அவர்கள் மலையோரங்களில் வாழ்ந்து இருக்கிறார்கள். முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பியே அவர்களின் வாழ்வாதாரம் இயங்கியிருக்கிறது. தமிழர்களைப் போலவே அவர்களின் முக்கியமான தானியமாக சோளம் இருந்திருக்கிறது.
தமிழர்கள் பயன்படுத்திய அதே ஏர்கலப்பையை மாயன்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதோடு முக்கியமாக பானை, அம்மிக் குலவி, சட்டி உள்ளிட்டவைகள் பயன்பாட்டில் இருந்திருக்கின்றன.
கீழடி ஆய்வில் கிடைத்த மண் சட்டிகளில் உள்ள ஓவியங்களைப் போலவே மாயன்கள் பயன்படுத்திய மண் பாண்டங்களில் ஓவியங்கள் அமைந்துள்ளன.
பண்டைய தமிழர்கள் சூரியனை வழிப்பட்டவரகள். அவ்வாறே மாயன்களும் சூரியனையே வழிப்பட்டு இருக்கிறார்கள்.
உடலில் பச்சை குத்துவது இந்தக் காலத்தில்  ஃபேஷனாக இருந்தாலும் பண்டைய நாகரீத்தில் பச்சைக் குத்துவது தமிழர்களின் பாரம்பரிய கலாசாரமாக இருந்து வந்திருக்கிறது.
அதேப் போலேவே மாயன்களும் பச்சைக் குத்துவதை தமது பாரம்பரிய கலாசாரமாக கொண்டிருந்தவர்கள். அப்பகலிப்டோ படத்தில் வரும் மாயன்கள் நெற்றியில் பொட்டு வைத்திருப்பதை நீங்கள் அவதானித்து இருப்பீர்கள். இதெல்லாம் அவர்கள் திராவிட இனத்தவர்கள் என்பதையே பறைசாற்றி நிற்கிறது.

சூரிய கடவுளுக்காக மாயன்கள் கட்டியுள்ள கோயில்கள் தஞ்சை பெரிய கோயிலுடன் ஒத்துப்போவதாகவும் சொல்லப்படுகிறது.
மாயன்களின் முக்கிய நகரங்களில் ஒன்றாக விளங்கியது பலே, இங்கு மாயன்களால் எழுப்பப்பட்டுள்ள கோயில்களில் பளிங்கு போன்ற கற்களைப் பயன்டுத்தியிருக்கிறார்கள்.
இந்தக் கோயில்களில் தமிழ்நாட்டில் உள்ளது போலவே சுரங்கப் பாதைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

யுகத்தான் நகரத்தில் தமிழகத்தின் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைப் போன்று ஆயிரங்கால் மண்டபத்தையும் மாயன்கள் அமைத்திருக்கிறார்கள்.
மெக்ஸிகோவின், சியாபஸ் மாகாணத்தில் உள்ள கோணம்பக்கில் தமிழக கோவிலான சித்தன்னவாசல் வடிவில் ஆலயம் அமைக்கப்பட்டு அதேப் போலவே சுவர் ஓவியமும் வரையப்பட்டுள்ளது.
அதில் குறவஞ்சி, கதகளி, ஊர்வலங்கள் உள்ளிட்ட ஓவியங்கள் கோணம்பாக் கோயில் சுவர் ஓவியங்களில் இடம் பெற்றிருப்பது தனிச் சிறப்பு.
இதேவேளை யானைகளே இல்லாத அமெரிக்க கண்டத்தில் இந்திய யானைகளின் சிற்பங்களை மாயன்கள் அமைத்திருக்கிறார்கள்.
மாயன்களின் கட்டடங்களில் யானைகள் விதவிதமான தோற்றங்களில் காட்சியளிக்கின்றன.
அதோடு இந்தியர்களின் சிறப்புகளில் ஒன்றான தாமரை மலர்களை தமது கட்டிடங்களில் மாயன்கள் வடித்திருக்கிறார்கள்.தமிழ் மன்னர்களைப் போலவே வெண்குற்றக் குடையை மாயன்களும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
தமிழர்களின் வாழ்வியலோடு கலந்திருக்கும் பழக்க வழக்கங்கள் மாயன் சமூகத்திடம் காணப்படுவதாலும் மேலும் அவை பெரும்பாலும் ஒத்துப்போவதாலுமே மாயன்கள் பண்டைய திராவிடர்களாக இருக்க வேண்டும் என்பது ஆய்வாளர்களின் கணிப்பாக இருக்கிறது🔴