Saturday, October 19, 2019

ஜெயலலிதாவின் வாழ்க்கை படமாகிறதாமே, ஜெயலலிதாவின் வேடத்துக்கு நடிகை ஷகீலா பொருத்தமாக இருப்பார் என்பது எனது கணிப்பு…?

MANI SRIKANTHAN
ஆர்.சுதர்ஷன்- வவுனியா.

என்ன சுதர்ஷன் ஜெயலலிதாவை இப்படி சொல்லிட்டீங்களே…
‘ஒரே முறைதான் உன்னோடு பேசி பார்த்தேன்’ என்ற பாடல் காட்சியை பாருங்கள். அப்புறம் உங்களின் கருத்தை சொல்லுங்கள். நீங்கள் சொல்லும் ஷகீலா ஒரு வேளை வயதான ஜெயலலிதாவின் வேடத்துக்கு பொருந்தலாம்.
இயக்குநர் விஜய் இயக்கத்தில் ‘தலைவி’ என்ற பெயரில் படமாகும் ஜெயலலிதாவின் வேடத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் இந்த படம் தயாராகிறது.
கங்கனா ரணாவத் ஜெயலலிதாவின் வேடத்தில் நடிப்பதற்காக 20 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம்.
MANI SRIKANTHAN
தலைவி படத்தில் கங்கனா ரணாவத் நான்கு காலகட்டங்களில் நான்கு விதமான தோற்றங்களில் வருகிறார் என்றும் அவரது தோற்றங்களை ஹங்கர் கேம்ஸ், கேப்டன் மார்வல், பிளேட் ரன்னர் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய ஒப்பனை கலைஞர் ஜேசன் கொலின்ஸ் வடிவமைக்கிறார்.
சமீபத்தில் இவருக்கு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் மேக்கப் போட்டு பார்க்கப்பட்டதாம்.
ஜெயலலிதாவின் வேடம் கங்கனா ரணாவத்துக்கு கனகச்சிதமாக பொருந்தியும் விட்டிருக்கிறதாம். ஆகவே உங்கள் ஷகீலா தெரிவு சரிபட்டு வராது!

திரிஷாவுக்கு அடுத்த இடத்தில் மூத்த நடிகை அந்தஸ்தை யாருக்கு கொடுக்கலாம்.?
ஆர். கீதா- கிராண்பாஸ், கொழும்பு-14

சந்தேகமேயில்லாமல் தமன்னாவுக்கு கொடுக்கலாம். 13 வருடங்களாக திரைத்துறையில் இருக்கிறார். சைரா நரசிம்மா ரெட்டி, பெட்ரோமாக்ஸ், ஆக்ஷன் என்று அடுத்தடுத்து படங்கள் வெளியாக உள்ள நிலையில் இப்போதும் பிஸியாக அவர் இருப்பது சாதனைதானே!
MANI SRIKANTHAN
“எல்லாரையும் போல நானும் லட்சியத்தோடுதான் சினிமா துறைக்கு வந்தேன். அந்த லட்சியத்தை முதல் படத்திலேயே அடைந்து விட்டேன். 13 வருடங்கள் கதாநாயகியாக எனது பயணம் நீடித்துக் கொண்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வளவு பெயரையும் புகழையும் முன்பே எதிர்பார்க்கவில்லை. சினிமா என்றால் எனக்கு விருப்பம். அதனால்தான் நடிகையானேன்.
நட்சத்திர அந்தஸ்து என்பது சினிமாவுக்கு வந்த புதிதில் என் மனதில் இருக்கவில்லை. நடிகையாக கேமரா முன்னால் வந்ததுமே எனது லட்சியம் நிறைவேறி விட்டது. மற்றதெல்லாம் போனஸ்தான். எந்தத் துறையாக இருந்தாலும் செய்கிற வேலையை விருப்பத்தோடு செய்தால் எல்லாமே நம்மை தேடி வரும்.” என்று சமீபத்தில் தமன்னா ஒரு நேர்காணலில் சொல்லியிருக்கும் பொன் மொழிகள்.

வரலாற்று படங்கள் வெற்றிப் பெறுமா..?
கே.எப்.எச். அஸ்னா- கெக்கிராவை.

இந்தியாவில் அதிக பொருள் செலவில் தயாரிக்கப்பட்ட பாகுபலி திரைப்படங்கள் இரண்டும் மெகா வெற்றியை கொடுத்ததே மறந்து விட்டீர்களா…
இப்போது இந்திய பெறுமதியில் 800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை படமாக்கும் வேலையும் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் நடிக்க அனைத்து மொழிகளில் இருந்தும் 14 முன்னணி நடிகர்-நடிகைகள் தேர்வாகி இருப்பதாக கூறப்படுகிறது.
பொன்னியின் செல்வன் படத்துக்காக தலைமுடியை நீளமாக வளர்க்கும்படி கதாநாயகர்களிடம் மணிரத்னம் கேட்டுக்கொண்டு இருக்கிறார். சரித்திர காலத்து கதை என்பதால் மன்னர் உள்பட அனைத்து ஆண் கதாபாத்திரங்களுக்கும் தலை முடி நீளமாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த அறிவுரையை வழங்கி இருக்கிறார். அதன்படி நடிகர்கள் தலைமுடியை நீளமாக வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்களை வைரமுத்து எழுதுகிறார்.
தாய்லாந்தில் உள்ள காடுகளில் 100 நாட்கள் படப்பிடிப்பை நடத்தப் போகிறார்கள்.
MANI SRIKANTHAN
இதே வேளை பாகுபலியை மிஞ்சும் கிராபிக்ஸ் காட்சிகளுடன் அதிக பொருட் செலவில் இராமாயணம் படத்தை மலையாளத்தில்  எடுக்கின்றனர். இது மூன்று பாகங்களாக மூன்று மொழிகளில் தயாராகிறது.
பிரபல தெலுங்கு பட அதிபர் அல்லு அரவிந்த், மது மஞ்சனா, நமித் மல்கோத்ரா ஆகியோர் தயாரிக்கின்றார்கள்.
இந்த படத்தில் இராமன் கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் நடிக்கிறார். சீதையாக நடிக்க சினேகாவிடம் பேசி வந்தனர். தற்போது அவருக்கு பதில் தீபிகா படுகோனே நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ராவணன் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபாசிடம் படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ராவணன் வேடத்துக்கு பிரபாசின் தோற்றம் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறார்கள்.

பராட்டா சூரி நாயகனாக நடிக்கப் போகிறாராமே, சரிபட்டு வருமா?
என்.ரேகா-  மொரட்டுவை.

MANI SRIKANTHAN
கதாநாயகர்களாக மாறிய நகைச்சுவை நடிகர்கள் கவுண்டமணி, வடிவேல், விவேக், கருணாஸ், சின்னி ஜெயந்த், சந்தானம், ஆர்.ஜே.பாலாஜி, யோகிபாபு வரிசையில் இப்போது சூரியும் சேர்ந்து இருக்கிறார்.
நாயகர்களாக நடிக்க ஆசைப்பட்டு காணாமல் போன நகைச்சுவை நடிகர்கள்தான் அதிகம். அந்த லிஸ்டில் சூரி வருவாரா என்பதை காலம் தான் முடிவு செய்யும். ஆனாலும் சூரி ரொம்பவும் உசாரான பேர்வழி, ரொம்ப கவனமாக இருப்பார் என்று கோடம்பாக்க நண்பர்கள் சொல்கிறார்கள்.
வெண்ணிலா கபடிக் குழு படத்தில் அறிமுகமான சூரி இதுவரை 60 பது படங்களில் நடித்துள்ளார். இப்போது வெற்றிமாறன் இயக்கவுள்ள படத்திலேயே இவர் நாயகனாக நடிக்க இருப்பதாகக் கேள்வி.🔴

No comments:

Post a Comment