‘வடபகுதி தமிழ்ப் பெண்ணாக தோன்றும் என்னை நிர்வாணமாகக் குளிக்கும் காட்சியொன்றில் நடிக்கும்படி என்னிடம் இயக்குநர் கேட்டுக் கொண்டார். தமிழ் பெண்கள் குளியல் ஆடை இல்லாமல் நீராடும் வழக்கம் இல்லை என்றும் அது யதார்த்தத்துக்கு புறம்பானது என்றும் அவரிடம் விளக்கியதும் அவர் காட்சியை மாற்றிவிட்டார்’
இலங்கை சிங்கள திரையுலகில் ரொம்பவும் பிஸியாக இருக்கும் நடிகைதான் நிரஞ்சனி சண்முகராஜா, கண்டியை பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஒரு தமிழச்சிதான் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
இலங்கையின் முன்னணி இயக்குநர் சோமரத்ன திஸாநாயக்க இயக்கியுள்ள ‘சுனாமி’ படத்தில் நாயகியாக இவர் நடித்துள்ளார்.
“அடுத்தடுத்து ஐந்து படங்களில் நாயகியாக நடித்திருக்கிறேன். விரைவில் திரைக்கு வரவுள்ள சுனாமியை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். அந்த படத்திற்கு பிறகு நம்ம ரேஞ்சே வேற” என்று நம்பிக்கையோடு கெத்துக் காட்டும் நிரஞ்சனி தனது ‘சுனாமி’ படத்தின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
2000 ம் ஆண்டு சோமரத்னவின் ‘சரோஜா’ திரைப்படம் வெளியானது. அந்தப் படத்தில நித்தியவாணி என்ற ஒரு குழந்தை நட்சத்திரம் அறிமுகமாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து ‘சின்ன தேவதை’ என்று ஒரு படம் அந்தப் படத்திலையும் நித்தியவாணிதான் நடித்திருந்தாள். அப்போ நானும் சின்னப் பொண்ணுதான். எனக்கு நித்தியவாணியை பார்க்கும் போது ஒரு பொறாமை ஏற்பட்டது. ‘அந்தப் பொண்ண விட என்னால நல்லா நடிக்க முடியுமே’ என்று நினைச்சேன்.
ஆனால் நடிகையாவேன் என்று கனவில கூட நினைச்சுப் பார்த்ததில்ல. என் அதிர்ஷ்டம் திடீர்னு நடிகையாயிட்டேன். எல்லோரும் நினைப்பது போல நானும் இயக்குநர் சோமரத்னவின் படத்தில் நடிக்கனும்னு ஆசையோடுதான் இருந்தேன். சினிமா சம்மந்தப்பட்ட நிகழ்வுகளில் சோமரத்னவை சந்திக்கும் போது ‘நாங்களும் நடிப்போம், எங்களுக்கும் ஒரு சான்ஸ் தாங்களேன்’ என்று கிண்டலாக கேட்பதுண்டு.
ஆனால் இவ்வளவு சீக்கிரமாக அவரின் படத்தில நாயகியாவேன்னு நான் கனவிலேயும் நினைக்கவில்லை.
ஒரு நாள் 2017ல் நான் ‘கிரிவெசிபுர’ படத்தின் படப்பிடிப்பு இடைவேளையில் இருந்தபோது எனக்கு ஒரு போன் கோல் வந்தது அழைப்பில் இயக்குநர் சோமரத்ன, “நீ அடிக்கடி கேட்பியே ‘நானும் உங்க படத்தில் நடிக்கலாமா’ன்னு, நீதான் என்னோட அடுத்த படத்தின் நாயகி” என்று அவர் சொன்னதும் நான் அப்படியே ஒரு கனம் ஷொக்காகி நின்னுட்டேன்.
“நான்தான் சோமரத்னவின் படத்தில் கதாநாயகி!!” என்று ‘கிரிவெசிபுர’ படப்பிடிப்பு தளத்திலேயே சந்தோசத்தில் கத்தி துள்ளிக் குதிச்சேன்.
ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இன்னொரு பெரிய இயக்குநரின் படத்தில் எனக்கு கதாநாயகி சான்ஸ் கிடைத்ததை கிரிவெசிபுர படக்குழு என்னை ‘அதிர்ஷ்டசாலி’ என்று பாராட்டினார்கள்.
இலங்கையின் பெரிய டைரக்டரின் படத்தில் நடிக்கப்போவதை நினைத்து எனக்குள் ஒரு கர்வமும் வந்துவிட்டது.
அதன் பிறகு பல மாதங்கள் ஆகியும் சோமரத்னவிடமிருந்து எந்தவித தகவலும் இல்லை, அதன் பிறகு சோமரத்னவை பல நிகழ்வுகளில் நான் பார்த்தாலும் திரைப்படம் பற்றி எதுவும் கேட்கவில்லை. அதன் பிறகு நானும் அதை மறந்துவிட்டேன்.
ஓராண்டுக்கு பிறகு ஒருநாள் சோமரத்னவிடமிருந்து அழைப்பு வந்தது. “திரைக் கதை ஸ்கிரிப்ட் வேலைகள் முடிவடைந்து விட்டன. இனி சூட்டிங்தான். நீ என்னை நேரில் வந்து சந்தி. கோல்சீட் பற்றி பேசணும்”என்றார். என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு தொலைபேசி அழைப்பாகவும் அது அமைந்துவிட்டது" என்று நிரஞ்சனி சிலீர்த்து கொண்டார்.
“நிரஞ்சனி குடும்பப் பாங்கான வேடத்தில் மட்டும்தான் நடிப்பீங்களா, அல்லது கிளாமரும் பண்ணுவீங்களா..?”என்று கேட்டதும்,
“எனக்கு அதில் அப்படியொன்றும் வரையரை கிடையாது. நிர்வாணமா இருந்தால்தான் அந்தக் காட்சிக்கும், அந்தக் கதைக்கும் நூற்றுக்கு நூறு வீதம் உயிரோட்டம் வரும் என்றால் நான் நிர்வாணமாக நடிக்கவும்; தயார்! ஒரு நடிகையோ, நடிகரோ தண்ணீர் மாதிரி இருக்கணும், அப்போதுதான் நாம் நடிக்கும் பாத்திரத்துக்குள் புகுந்து அப்படியே நாங்களும் அந்த பாத்திரம் மாதிரியே மாற முடியும். அப்போதுதான் அந்த முழு வடிவத்தை நாங்கள் திரையில் காட்ட முடியும்.
சமீபத்தில் நான் நடித்த ‘ரது சமனல சிஹினய’ என்ற படத்தில் நான் நிர்வாணமாக குளிப்பது போல ஒரு காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
இயக்குநர் காட்சியை எனக்கு விபரித்தார், ‘இந்த காட்சியின் கதாபாத்திரமான ராகினி ஒரு சுத்த தமிழ்ப் பெண். அதுவும் வடக்கில் போர் சூழலில் வளர்ந்து, இறுதி யுத்தத்தில் தன் தங்கையை தொலைத்துவிட்டு, பிறகு தங்கையை தேடிக்கொண்டு கொழும்பிற்கு வருகிறாள். அவளுக்கு சிங்களம் பேச வராது. அந்த சூழலில் தமிழ் பேசக்கூடிய ஒரு சிங்கள நண்பனை நம்பி அவன் வீட்டில் வந்து தங்குகிறாள். அந்த வீட்டில் இன்னொரு ஆணும் தங்கியிருக்கிறான்.
ஒருநாள் ராகினி குளிப்பதை அவர்கள் இருவரும் ஒளிந்திருந்து பார்க்கிறார்கள்” என்றார்.
அதற்கு நான் அவரிடம், “வடக்கில் வாழும் ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த தமிழ்ப் பெண் அப்படி நிர்வாணமாக குளிக்க வெட்கப்படுவாள், பொதுவாக நாங்கள் வீட்டில் குளிக்கும் போது மார்பு வரை ஒரு துண்டை கட்டிக்கொண்டுதான் குளிப்போம். தமிழர் கலாச்சாரம் அப்படிதான் சொல்லித்தந்திருக்கிறது. எனவே வேறு ஒரு வீட்டில் தங்கும் தமிழ்ப் பெண் அப்படி நிர்வாணமாக குளிப்பது சாத்தியமில்லை.
எனவே இந்தப் படத்தில் எனக்கு நிர்வாணமாக நடிப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் யதார்த்தத்துக்கு பொருந்தாமல் காட்சி அமைக்கப்பட்டால் நீங்கள் கஷ்டப்பட்டு உருவாக்கிய அந்த ராகினி பாத்திரம் வீணாகிவிடுமே” என்றேன்.
நான் சொன்னதை கேட்டு உண்மையை உணர்ந்து கொண்ட அந்த இயக்குநர் உன்னோடு பணியாற்ற கிடைத்தது எனக்கு ரொம்ப சந்தோசம். நல்ல நேரத்தில் அந்த காட்சியின் தன்மையை புரிய வைத்தாய் என்று அந்தக் காட்சியில் உடனே மாற்றத்தை ஏற்படுத்தினார்.
எனவே நிர்வாணமாக நடிக்கணும் என்பதற்காக எல்லாக் காட்சியிலும் அவர்கள் சொல்வதை கேட்டு நடித்துவிட முடியாது.” என்று ரொம்பவே தைரியமாகவும், தெளிவாகவும் பேசும் நிரஞ்சனியிடம்,
“தென்னிந்திய திரையுலகுக்குச் சென்று சாதிக்க வேண்டும் என்ற ஆசையில் நம்மவர்கள் தமிழகத்துக்கு செல்வது பற்றி என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டோம்,
“அப்படியான எண்ணத்தோடு போறவங்கள பற்றி தப்பு சொல்லுவதற்கு எனக்கு உரிமையில்லை. அது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம். ஆனால் நிரஞ்சனி என்கிற இந்த மனுஷி பிறந்தது இலங்கையில்தான், எனக்கான அத்திவாரமும், அங்கீகாரமும் இங்கேதான் கிடைத்தது.
எனக்கு கிடைத்த அத்திவாரத்தை உறுதியாக வைத்துக்கொள்வதும், கொள்ளாததும் என் கையில்தான் இருக்கிறது. என்னைப் பொருத்தவரையில் நான் எனக்கான அஸ்த்திவாரத்தை இன்றைய நாள் வரையிலும் நான் ரொம்பவும் உறுதியாக போட்டுவைத்திருக்கிறேன். அதோடு என்னை நடிகையாக்கிய இந்த மண்ணுக்கும், என்னை ஒரு நடிகையாக ஏற்றுக்கொண்ட என் மக்களுக்கும் நான் முதலில் ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும் என்பதுதான் என் ஆசை. ஆனாலும் எல்லோருக்கும் இருப்பது போல தென்னிந்திய சினிமா மீதான மோகம் எனக்கும் இருந்தது. நான் அதற்கான முயற்சியையும் செய்தேன்.
ஆனால் பிறகுதான் நான் ஒன்றை புரிந்துகொண்டேன். பெரிய ஒரு கடலில் நான் நெத்திலியாக இருப்பதைவிட, ஒரு சின்னக் குளத்தில் நான் திமிங்கிலமாக இருப்பது எவ்வளவோ மேல். என்பதை இப்போது இந்த சிறிய நாட்டில் ஒரு திமிங்கலமாகத்தானே இருக்கிறேன். இது எனக்கு பெரிய மன நிறைவைத் தருகிறது.
ஆனாலும் நல்ல வாய்ப்புகள், நல்லவிதமாக எந்த நாட்டிலிருந்து வந்தாலும் ஏற்றுக்கொள்வேன்” என்று யதார்த்தம் புரிந்து பேசும் அவரின் முகத்தில் ஆளுமை அப்படியே பளீச்சிடுகிறது….
நிரஞ்சனி திரைத்துறையில் சாதனைகள் பல கண்டு, சரித்திரம் படைத்திட, நெஞ்சார்ந்த எமது வாழ்த்துக்களையும் கூறி விடைப் பெற்றோம்.🔴















