தமிழகத்தின் பட்டிமன்ற பேச்சாளர்களில் சபரிமாலா ஜெயகாந்தனுக்கு என்று ஒரு தனியிடம் இருக்கிறது. இதுவரை ஆயிரத்துக்கு மேற்பட்ட பட்டிமன்றங்களில் பேச்சாளராக, நடுவராக களம் கண்டிருக்கிறார்.
சமீபத்தில், ‘பெண்மைதான் பேராற்றல்’ என்ற தொனிப் பொருளில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்வதற்காக இலங்கை வந்திருந்தவரை சந்தித்துப் பேசினோம்.
“பதினைந்து ஆண்டுகளாக அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியிருக்கிறேன். அப்போது பட்டிமன்ற பேச்சாளராக பல மேடைகளில் பேசியிருக்கிறேன். ஒரு காலகட்டத்தில் நாம் பேசுகிற பேச்சுக்கும் வாழ்கிற வாழ்க்கைக்கும் சம்மந்தமே இல்லாமல் பணத்துக்காக பேசுகிற கூட்டமாகவே இது இருக்கிறது என்பதை புரிந்துகொண்டேன்.
அதன் பிறகு பட்டிமன்றங்களில் பேசுவதை நிறுத்திவிட்டு, எனது முழு பேச்சாற்றலையும் மாணவர்களுக்காக மட்டுமே பயன்படுத்துவது என்று முடிவெடுத்து, பேச்சாற்றலை மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்து அவர்களையே பேச்சாளராக்கி நடுவர் என்ற பொறுப்பை நான் எடுத்து சமூக விழிப்புணர்வுக்கான பட்டிமன்றங்களை தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறேன் இதுவரை தொண்ணூறுக்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை மாணவர்களை மட்டுமே வைத்து நடத்தியிருக்கிறேன்.
அப்போது ஊடகங்கள் எமக்கு வழங்கிய ஆதரவு எனக்கு ஒரு புதிய உத்வேகத்தை கொடுத்தது. பேச்சு என்பது வெறுமனே பணத்துக்காக அல்ல அது சமூக மாற்றத்துக்கானது என்பதை தெரிந்து கொண்டதோடு, சமூக விழிப்புணர்வு களப்பணிகளுக்காக அதனையே கையில் எடுத்தோம். நான் ஒரு ஆசிரியராக இருந்ததினால் இந்த விடயத்தை மாணவர்கள் மத்தியில் பரப்புவதற்கும், அவர்களை உருவாக்குவதற்கும் எனக்கு பெரிய பலமாக இருந்தது. அதன் பிறகு கல்லூரி மாணவர்கள், உள்ளிட்ட நிறைய பேர் எம்மோடு இணைந்தார்கள்.
அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலை ‘நீட்’ தேர்வுக்கான எதிர்ப்பு போராட்டமாக வலுப்பெற்றிருந்த நேரம் அப்போது நான் ‘நீட்’ தேர்வுக்கு எதிராக அனைவருக்கும் ஏற்றத் தாழ்வில்லாத கல்வி முறை இந்தியா முழுவதும் வேண்டும் என்பதை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்தேன். ஆனால் எனது பள்ளியில் அனுமதி மறுக்கப்பட்டது. அதன்போது எனது குழந்தைகள், மாணவர்களின் கல்வி சிக்கல்களுக்கு குரல் கொடுக்க எனது வேலை தடையாக இருக்குமென்றால் அந்த வேலையே தேவையில்லை என்று எனது அரசு ஆசிரியர் வேலையை இராஜினாமா செய்து விட்டு தொடர்ந்து மாணவர்களுக்காக களம் காணுவது என்கிற இலட்சியத்தோடு கடந்த இரண்டு ஆண்டுகளாக களப் பணியில் இறங்கியிருக்கிறேன்.”
என்ற சபரிமாலா பட்டிமன்ற பேச்சுப்போலவே படபடத்தவர் விடாமல் தொடர்ந்தார்,
“தமிழகத்தில் கடந்த ஓராண்டில் முப்பத்தைந்து பள்ளி வயது பெண் பிள்ளைகள் பாலியல் வன்கொடுமையில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். வெளியில் வராத கொடுமைகள் எத்தனையோ, வழக்கு என்று வராத செய்திகள் எத்தனையோ ஆனால் கொல்லப்பட்டது மாத்திரம் முப்பதைந்து குழந்தைகள். அதற்கு எதிராக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து பள்ளிக் கல்லூரி பிள்ளைகளை சந்தித்து வருகிறேன். எனக்கு நானே வீடு திரும்பாத போராட்டம் என்று அறிவித்துக்கொண்டு வீட்டுக்கே போகாமல், இந்த ஓராண்டில் தமிழகம் முழுவதுமாக ஐந்து லட்சம் பிள்ளைகளை சந்தித்து இருக்கிறேன்.
இலங்கைக்கு இதுதான் முதல் வெளிநாட்டு பயணம். இலங்கை வரும்போதுதான் முடிவு செய்தேன் உலகம் முழுவதும் இருக்கும் தமிழ்க் குழந்தைகளிடமும் பெண்மைதான் பேராற்றல் என்னும் பரப்புரையைச் செய்ய வேண்டும். அந்தப் பரப்புரையைத்தான் தமிழ் நாட்டிலும் செய்திருக்கிறேன். இதை உலகம் முழுவதும் உள்ள தமிழ்க் குழந்தைகளிடம் சொல்ல வேண்டும், ஏனென்றால் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான கொடுமைகள் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறுகிறது.
![]() |
| இலங்கையில்... |
இதனை முடிந்த அளவு அடுத்த தலைமுறைக்கு எடுத்து சொல்ல வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. அதனால் எனது முதல் கட்ட வெளிநாட்டு பரப்புரையை உலகத்தின் மிகவும் தொன்மையான ஓலைச் சுவடிகளை கொண்டிருந்த யாழ். நூலகத்திலிருந்து தொடங்குவது என்று முடிவு செய்து. எனது இந்தப் பயணம் யாழ். நூலகத்திலிருந்து தொடங்கப்பட்டிருக்கிறது.
திருகோணமலையில் சென்மேரிஸ் பள்ளி, முள்ளிக்குளம் பள்ளி, தேவிபுரத்தில் உள்ள கணேஷா கல்வி நிலையம் மற்றும் மிகவும் பின் தங்கிய பகுதிகளில் உள்ள குழந்தைகள் என்று மூவாயிரம் பெண் குழந்தைகளை இலங்கையில் சந்தித்து இருக்கிறேன்.” சபரிமாலா முகம் மலர்ந்தார்.
“தங்களின் இலங்கைப் பயணம் திட்டமிட்டப்படி நிறைவுப் பெற்றதா?”என்றதும்,
“உண்மையைச் சொல்லப் போனால் எனக்கு இங்கு யாரையும் தெரியாது. எனது சமூக செயற்பாடுகளை சமூக வலைத்தளங்களில் அறிந்த சமூக ஆர்வலர்கள் இங்கே கொஞ்சம் பேர் இருக்கிறார்கள், அவர்களை சந்தித்து எனது பரப்புரைக்கான திட்டமிடலை செய்து விட்டு பிறகு ஒருநாள் பிள்ளைகளை சந்திக்கலாம் என்றுதான் நினைத்திருந்தேன்.
ஆனால் இங்குள்ள ஆர்வலர்கள் எல்லா ஏற்பாடுகளையும் அதிரடியாக செய்து மூவாயிரம் தமிழ்க் குழந்தைகளுடனும் என்னை கலந்துரையாட வைத்தார்கள். எனக்கு இது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.
எனது அடுத்த பரப்புரை பயணத்தை ஜனவரியில் இலங்கையில் மேற்கொள்ள இருக்கிறேன். அதில் முக்கியமாக மலையகத்தில் உள்ள தமிழ்ப் பிள்ளைகளை சந்திக்க வேண்டும். அவர்களுடன் பத்து நாட்கள் தங்கியிருந்து எனது கல்வி சார்ந்த விழிப்புணர்வு பிரசாரத்தை முன்னெடுக்கணும் என்று நினைக்கிறேன்.” என்றார்
![]() |
| இலங்கை பள்ளியில்.. |
“நான் சாதி மதம் கடந்தவள். எல்லோரையும் பார்க்கும்போது மனிதர்களாக தெரிகிறார்கள். அதனால் நாடுகள், கடல், எல்லைகள், இனம், மொழி அனைத்தையும் கடந்து மனிதர்களாக பார்க்கிறேன். குறிப்பாக பெண் குழந்தைகளை பேராற்றல் மிக்கவர்களாக எல்லா இடத்திலையும் பார்க்கிறேன். அந்த மனநிலையில்தான் நான் வளர்ந்து கொண்டிருக்கிறேன். தனிப்பட்ட ரீதியில் இவர்களை பின்பற்றுகிறேன் என்று சொல்லமுடியாது. ஏனென்றால் நான் பெரியாரையும், விவேகானந்தரையும், அன்னை திரேசாவையும், நபிகளையும் பின்பற்றுகிறேன். எனக்கு யாரெல்லாம் நல்ல செய்திகளை தருகிறார்களோ அவர்களிடமிருந்து நிறைய விசயங்களை எடுத்துக்கொள்கிறேன். அவற்றில் மாற்று இருக்கும் போது அதில் சிலவற்றை விட்டுவிடுகிறேன், அவ்வளவுதான்.” என்ற சபரிமாலாவை இடைமறித்து “அப்படியென்றால் உங்களை ஆன்மீகவாதின்னு சொல்லலாமா?”என்றோம்,
“நிச்சயமாக இல்லை, நான் ஆன்மீகத்தை மனிதர்களுக்குள்தான் பார்க்கிறேன் கோயில்களில் இல்லை, ஆன்மாவுக்குள் இருக்கிற கருணையை பார்க்கும் ஆன்மீகவாதி என்று நீங்கள் சொல்லலாம்.” என்று நச்சென்று பேசும் சபரிமாலாவிடம்,
“நடந்து முடிந்த சட்ட மன்ற இடைத்தேர்தல் முடிவை எப்படி பார்க்கிறீர்கள், தமிழக மக்கள் சரியானதை தெரிவு செய்கிறார்களா, அல்லது தடுமாறுகிறார்களா..?
என்று கேட்டதும்,
“இன்னும் அந்த மக்கள் சரியாக அரசில்படுத்தப்படும் சூழலில் இல்லை. இன்னும் நிறைய மூடப்பழக்கம், பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுப் போடுகிற நிலையிருக்கிறது. கல்வி அறிவு போய் சேரவில்லை, இப்படி நிறைய விசயங்களில் அவங்க பின்தங்கி இருக்கும் போது சரியானதைதான் தெரிவு செய்கிறார்கள் என்று எந்த விடயத்திலும் சொல்லிவிட முடியாது. ஓட்டுக்கு காசு வாங்கிட்டு நம் கண் முன்னாலயே அவங்க ஓட்டுப்போடுறதை நாம் பார்க்கிறோம். அதனால் அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு அந்த தலைமுறை, அந்த நிலம் வளருவதற்கு வாய்ப்பில்லை. ஒரு ஐந்து சதவீத மக்கள்தான் தெளிந்த விழிப்புணர்வோடு அரசியலை அணுகுகிறார்கள். அதனால் அரசியல்வாதிகளை திருத்துவது, மாற்றுவது என்பதனைத் தாண்டி மக்களை அரசியல்படுத்துவதுதான் பெரும் பணியாக இருக்கிறது”
![]() |
| இலங்கை பள்ளியில்.. |
“சரியான சிந்தனையோடு இருக்கும் அவர்களின் சதவீதம் குறைவுதான். இதற்கெல்லாம் முக்கிய காரணம் கல்விதான் கல்வி இன்னும் அவங்களுக்கு சரியாக போய் சேரவில்லை. ஏழைக்கு, பணக்காரனுக்கு, பெரும் பணக்காரனுக்கு, வெளிநாட்டுக்கு போகணும் என்று நினைக்கிறவனுக்கு என்று இங்கே பலவிதமான கல்வியை இந்த நாடு வைத்திருக்கிறது. இலங்கையை பொருத்தவரையில் எனக்கு பெரிய மகிழ்ச்சியான விடயம் இங்கே எல்லோருக்கும் ஒரே வகையான கல்வி வழங்கப்படுவதுதான். இந்தச் சூழல் இந்தியாவில் இல்லை. கல்வியை இப்படி அவர்கள் பிரித்து வைத்ததினால் மக்களும் பிரிந்து, பிரிந்து இருக்கிறார்கள். கருணையின் அளவீடும் குறைந்துவிட்டது.
மூடப்பழக்கங்களை வளர்க்கணும் என்று நினைக்கும் கூட்டம் அப்படி தமக்கு வசதியாக ஒரு கோட்பாட்டை உருவாக்கி இந்த சமூகத்தை பிடித்து வைத்திருக்கிறது. இன்றைக்கும் கூட பெண்களை மாதவிடாயை தீட்டுன்னு சொல்லி ஒதுக்குகிறார்கள். மற்ற நாடுகளில் எல்லாம் பெண் பிள்ளைகளை படிக்க வைத்து விண்வெளிக்கு அனுப்புவோமா, விண்கலத்துக்கு அனுப்புவோமான்னு பேசிக்கொண்டிருக்கும் போது இவர்கள் இந்த காரணத்துக்காக வீட்டுக்குள் வரக் கூடாதுன்னு சொல்கிறார்கள். இந்த மாதிரி இங்கே ஆயிரம் கிராமம் இருக்கு. அந்த ஐந்து நாளும் வீட்டுக்கு வெளியேதான் இருக்கணும்.
இல்லன்னா மரத்தடியில் இருக்கணும், பொதுக் குளத்தில் குளிக்கணும். வீட்டுக்குள்ளேயே ஏன் எல்லா அறைக்குள்ளும் விடமாட்டேங்கிறீங்க என்று நாங்கள் உரத்து கேட்டுக்கொண்டிருக்கும் போது, அவர்கள் வீட்டுக்கு வெளியேதான் இருக்கிறார்கள். அம்மியும், ஆட்டுரலும் வீட்டுக்குள் இருக்கும்போது ஒரு பெண்ணுக்கு இயற்கையான இந்த விடயம் நடக்கும் போது வீட்டுக்குள் வருவதற்கே அனுமதியில்லேன்னா இது குலசாமிக்கு ஆகாது என்பதிலிருந்துதான் வருகிறது.
இதனை அரசியல்வாதிகள் தங்களுக்கான பெருங் கருவியாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். எல்லாமே ஓட்டாகப் பார்க்கப்படுகிறது. ஆன்மீகமும், அரசியலும் தங்களை வளர்ப்பதற்காக இந்த நிலத்தை கெடுத்து வைத்திருக்கிறார்கள். மடத்தனமாக இவர்கள் இருந்தால்தான் பிழைக்க முடியும் என்று ஒரு அரசியல் கூட்டம். இவர்கள் இப்படியே இருந்தால்தான் தான் வளர முடியும் என்று ஒரு மதக் கூட்டம்…”
என்று சமூகத்தின் மீதான சபரியின் கோபம் வார்த்தைகளாக வந்து விழுந்தது.
“மோடியின் ஒரே நாடு ஒரே தேசம் பற்றி என்ன சொல்கிறீர்கள்” என்றதும், (சபரிமாலா சிரித்து விட்டு தொடர்ந்தார்)
“ஒரே நாடு ஒரே தேசம் என்று சொல்கிறவர்கள் ஏன் ஒரே சாதின்னு சொல்லமாட்டேங்கிறாங்க? ஏன் ஒற்றைக் கல்வின்னு சொல்லவில்லை? ஒரே கல்வி என்பது எந்த நிலத்திலும் சாத்தியமில்லை. ஊருக்கு ஊரு உணவு, கலாசாரம் என்று வேறுபடுகிறது அதனால் ஒற்றைக் கல்வியை கொடுத்துவிட்டு அந்தந்த மாநிலங்கள் அவர்களுக்கு அமைவாக பாடத்திட்டத்தை உருவாக்கலாம் என்பது சாத்தியம், அதனை செய்யலாம் ஆனால் அவங்க அதனை செய்யமாட்டார்கள்.
அதனால் ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு, ஒரே ஆதார் கார்டு என்பதெல்லாம் ஒற்றை ஆளுகைக்கு கீழ் வரணும் மீண்டும் ஒரு சர்வாதிகார போக்கு வரணும் என்பதற்கான திட்டமிடல்தான். ஒரு போதும் அது நடக்காது, வெல்லாது!”
என்று குரலை உயாத்தினார் சபரிமாலா.
“இந்தியும், சமஸ்கிரதமும் ஒரு மொழிதானே அதனை கற்றுக்கொள்வதில் என்ன தவறு இருக்க முடியும்..?”
“தவறு இல்லை, இந்தியை, சமஸ்கிரதத்தை கற்றுக்கொள்ளுங்கள் நீங்கள் உலகத்தில் உள்ள எத்தனை மொழியை வேண்டுமானாலும் உங்களின் அறிவுக்கேற்ப கற்றுக்கொள்ளுங்கள். ஆனால் அவற்றை தானாக கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் இவங்க என்னா செய்றாங்கன்னா, எல்லா மொழிகளையும் எடுத்து துடைத்து தூர வாரிப் போட்டுவிட்டு, இந்தியை மட்டும் தேசிய மொழியாக்கணும் என்கிற வேலை நடைபெறுகிறது. சமஸ்கிரதத்தை மட்டும் கோயில்கள் உள்ளிட்ட இடங்களில்
பொது மொழியாக்கணும் சாமிக்கான மொழியாக இருக்கணும் என்று கொண்டு வருகிறார்கள்.
ஆனால் மாநிலங்களில் அவர்களுடைய தாய் மொழியில்தான் மரபணு கடத்தப்பட்டிருக்கும். இப்போ தமிழ் மொழி பத்தாயிரம் ஆண்டுகளாக எங்களின் மரபணுவில் கடத்தப்பட்டிருக்கிறது. கீழடி ஆய்வு இரண்டாயிரத்து அறுநூறு ஆண்டுகள் என்று ஆதாரப்பூர்வமாக கூறியிருக்கிறது.
இன்னும் பல இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. என்றாவது ஒரு நாள் பத்தாயிரம் ஆண்டுகள் பழமையானது தமிழ் மொழி என்று நிறுவுவார்கள்.
இப்படி எங்களின் மொழிக் கொடுத்த உணர்வு, அது கடந்து வந்த பாதை, பண்பாடு என்றெல்லாம் இருக்கும் போது திடீர்னு இந்தி வந்து ஆதிக்கம் செலுத்துகிறது. இப்போதே தமிழ் நாட்டில் எல்லா துறைகளிலும் இந்திக்காரர்கள் வேலைக்கு வந்துவிட்டார்கள். ‘எங்கள் நிலத்தின் வேலைவாய்ப்பு எங்களுக்கு மட்டும்தான்’ என்பதினை இப்போதுதான் வலியுறுத்தி போராட்டம் நடத்த ஆரம்பித்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில் ஒரு மொழியை வலிந்து திணித்து, எங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது!”
என்ற சபரிமாலா மீண்டும் குரலை கம்பீரமாக உயர்த்தினார்.⚫





No comments:
Post a Comment