Friday, July 29, 2022

பறை தன்னை அடையாளப்படுத்த போராடும் ஓர் இசைக் கருவி!




மிழ் இசைக் கருவிகளில் மிகவும் தொன்மையானதும், உலகில் முதன்முதலில் தோன்றிய இசைக் கருவியும் பறை இசைதான் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.
இத்தனை சிறப்புகள் கொண்ட பறை இசைதான் தமிழர்களின் ஆதி இசைக் கருவி, ஆனால், அது சாதி கருவியாகவும், சாவுக்கு இசைக்கும் கருவியாகவும் பார்க்கப்படுவதுதான் வேதனை.
பறை இசைக் கருவி எப்போது தோன்றியது, பறை இசைக் கருவியை யார் கண்டுபிடித்தது எனும் தேடலுக்கு பலர் பலவிதமாய் கருத்து கூறினாலும் பொதுவாய் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து இதுதான்,
ஆதிகால மனிதன் வேட்டையாடிய விலங்கின் தோலை தூக்கி எறிந்தான். வீசப்பட்ட தோலானது மரத்தின் மேல் விழுந்தது. மழையில் உறைந்து வெயிலில் காய்ந்த விறைப்பான தோலின் மீது காற்று மரக்கிளையைத் தனது கரங்களாக்கிக்கொண்டு வாசித்தது. 

மரக்குச்சிக்கும் தோலுக்கும் ஏற்பட்ட உரசலிலிருந்து வெளிவந்த ஒலியில் பறவைகள் பயந்து கூச்சலிட்டபடி பட படவென ப(ய)றந்தோடின. அப்போதுதான் தோலிசைக் கருவிக்கான கரு தோன்றியது. மனிதன் ஓட்டத்தைக் காட்டிலும் ஒலியின் வேகம் கூடுதலானது. அந்த ஒலிக்கு விலங்குகள் மிரள்கின்றன என்பதனை அறிந்துகொண்டதோடு, அதனை இசையாகவும் தகவல் பரிமாற்றக் கருவியாகவும் ஆதி மக்கள் பயன்படுத்தத் தொடங்கினார்கள். இயற்கையின் இயங்குதலிருந்தே மனிதன் தன் வாழ்விற்கான சூத்திரத்தை அறிந்து கொண்டான்.
பறை இசை சாவுக்கானது எனும் கோட்பாடு இன்றைய தமிழகத்தில் சில புரட்சியாளர்களால் தகர்க்கப்பட்டு, திருமண வீடு, பிறந்த நாள், சீமந்தம், சீர்வரிசை விழா, பூப்பெய்தல், கோவில் திருவிழா, மாடு பிடி, பொதுக் கூட்டத்துக்கான அறிவிப்பு, இயற்கை வழிபாடு, போராட்டங்கள், மாநாடுகள், பேரணிகள், கலைவிழாக்கள், நூல் வெளியீடு உள்ளிட்ட நிகழ்வுகளில் இன்று பறை முழங்க தொடங்கியிருக்கிறார்கள்.
ஆனாலும் தம்மை அடையாளப்படுத்தி முன்னிறுத்த பறை இசை தொடர்ந்து போராடிக்கொண்டுதான் இருக்கிறது.
பறையை ஏன் குறிப்பாக சாவுக்கு இசைக்கிறார்கள், வேறேதும் கருவிகளை இசைக்கலாமே என்ற கேள்வி எழலாம் இசைப் பேரறிஞர்களில் ஒருவரான தியாகராய பாகவதர் பிறந்தநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் சென்னையில் திருவையாறு எனும் தலைப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் வீணை மற்றும் வயலின் இசைக்கிறார்கள். இவர்களில்
பறை இசைக் கலைஞரின்
கால் சலங்கையை கட்டிவிடும்
கனிமொழி


எவரையேனும் வரவழைத்து நம் பாட்டி, தாத்தா பிணத்தின்
முன் மென்மையான இசைக் கருவிகளான வீணையையோ வயலினையோ வாசித்தால் பிரிவின் சோகம் கூடுதலாய் மேலோங்குமே! இதனை விடுத்து ஏன் பறையை அடிக்க வேண்டும் என்ற கேள்விக்கு சமூக ஆய்வாளர்கள் மற்றும் கலை ஆர்வலர்கள் அளிக்கும் பதில், பறையின் ஒலியை கேட்டும் ஒரு மனிதன் இயங்கவில்லை அல்லது அசையவில்லை என்றால், அம்மனிதனின் இறப்பு உறுதி செய்யப்படுகிறது. ஆதலால்தான் இது ஆதி மனிதன் கண்டுபிடித்த ஸ்டெத்தாஸ் கோப் கருவியென வரலாற்று அறிஞர்கள் புகழாரம் சூட்டுகிறார்கள்.
இன்று பாதையில் பயணிக்கும் எவரையேனும் இடைமறித்து பறை இசைக் கருவியை எதற்கு இசைப்பார்கள் என வினவினால், சிலர் சட்டென சாவுக்கு இசைப்பது என பதிலளிப்பர். அப்படி அலறுவோரின் பதில் அரைவேக்காட்டுத்தனமேயன்றி அடிப்படை ஆதாரமற்றது. உண்மையிலேயே பறையின் பயணம் மிக நுட்பமானது, ஆழமானது.
புனலை அடைக்க, உழவர்களை அழைக்க, உழுவோரை ஊக்குவிக்க, விதைக்க மற்றும் அறுவடை செய்ய, விலங்குகளை வேட்டையாட அல்லது விரட்ட, மன்னனின் செய்திகளை மக்களுக்குத் தெரிவிக்க, போர் வீரர்களை அணிதிரட்ட, வெற்றியைக் கொண்டாட, திருடனைப் பிடிக்க, கூட்டம் கூட்ட மேலும் கூத்து, திருவிழா, இயற்கை வழிபாடு என்பதாய் பறையின் பயன்பாடு நீள்கிறது.
பறை இசைக் கலைஞர் மணிமாறனிடமிருந்து
தொல்லிசை சுடர் விருது பெறும் விக்னேஷ்வரன்.






உலகில் முதன்முதலில் தோன்றிய தொடர்பு சாதனக் கருவி பறைதான். ஆதிமனிதன் கண்டுபிடித்த அலைபேசி என்று நாம் கவிதை பாடலாம். இன்று நாளிதழ், தொலைக்காட்சி, வானொலி, அஞ்சல், அலைபேசி என செய்திகளை பரிமாறவும் ஒருவரையொருவர் தொடர்புகொள்ளவும் பல வழிகள் உள்ளன. இன்றைய கணினி யுகத்தில் தகவல் தொடர்பு என்பது மிக அசாதாரண ஒன்றாய் ஆகிவிட்டது.
அமெரிக்காவில் உள்ளவரை அடுத்த நொடியில் அழைத்துப் பேச முடிகிறது. எங்கிருந்தும் எங்கிருப்பவரையும் எப்படியேனும் நினைத்த நேரத்தில் தொடர்பு கொள்ள முடிகிறது. இது, மன்னராட்சி காலத்திலோ அதற்கும் முன்போ சாத்தியமில்லாத ஒன்று. தாத்தா இறந்த செய்தி வெளியூரிலுள்ள பேரனுக்கு வந்துசேர்வதற்குள் பேரன் இறந்தே விடுவான். ஆனால், இன்று அப்படியில்லை . நான் இன்னும் கொஞ்ச நேரத்தில் இறந்து விடுவேன் போலிருக்கிறது என்று மரணம் தழுவும் நிலையிலும் மற்றவர்களுக்கு வீடியோ தகவலாக அனுப்பும் அளவிற்கு தகவல் தொடர்பு சாதனங்கள் வளர்ந்து வருகின்றன.
இப்படி எந்த வாய்ப்பும் இல்லாத அந்தக் காலத்தில் நாடு முழுக்க முரசு மண்டபங்கள் இருந்திருக்கின்றன. இன்று எங்கு திரும்பினாலும் பேரிரைச்சல், குக்கரின் சத்தம், கூவும் சேவலின் குரல்வளையை நெறித்துவிட்டது.
பறை இசைக்கும், கனிமொழி,
ஜி.வி.பிரகாஸ்,பா.ரஞ்சித்

இரைச்சல்களுக்கிடையில் மனிதன் தான் இழந்த அமைதியை தேடிக்கொண்டிருக்கிறான். வழிபாடு என்பது ஆண்டவனுக்கும் பக்தனுக்குமான இரகசிய உடன்பாடு என்பதைக் கடந்து ஆலயங்கள் ஆர்ப்பரிக்கின்றன.
மனிதனுக்கு இயற்கை அளித்த வாகனம் தனது இரண்டு கால்கள் எனும் கருத்தின் அடிப்படையில் நடையை மட்டுமே நம்பி, நாடே நகர்ந்த அக்காலச்சூழலில், ஒரு பறையின் ஒலி ஐந்து கிலோ மீற்றரிலிருந்து பதினொரு கிலோ மீற்றர் வரை கேட்குமாம். தமிழகத்தில் பல இடங்களில் முரசு மண்டபம் அமைத்து செய்தி அறிவிக்கும் முறை இருந்துவந்துள்ளது. அறிவித்தலுக்கு அதிகாலை அல்லது அந்திப்பொழுது உகந்த வேளையாய் இருந்துள்ளது. முரசு மண்டபங்கள் வழியாகவே ஓர் அரசன் அல்லது ஒரு நாடு படையெடுத்து வருகிற செய்தியை பரிமாறியிருக்கிறார்கள். பறையன் அறையும் செய்திகேட்டு மற்றொரு பறையன் அச்செய்தியை முழங்க செய்திகளை விரைந்தும் நெடுந்தொலைவிற்கும் அனுப்பி உள்ளனர்.
திருச்செந்தூரில் பூசை முடிந்த செய்தியை பறை அறைந்து பாஞ்சாலங்குறிச்சிவரை தெரிவித்துள்ளனர். அச்செய்தி தன்னை வந்தடைந்த பிறகே கட்டபொம்மன் உணவு உட்கொண்டாராம். திருவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்கு பூசை முடிந்த செய்தி பறையொலி மூலமாய் வந்த பின்பே மதுரையில் திருமலை நாயக்கர் உணவு உண்டாராம். இன்றும் கூட பல பகுதிகளில் வாழும் மக்கள். இறப்பு. திருமணம், திருவிழா இன்னும் பிற நிகழ்வுகளை பறை இசையின் வழியே அறிந்துகொள்கிறார்கள்.
திருகோணமலையில் மணிமாறனின்
பறை இசை பயிற்சிப்பட்டறை




ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஓர் அடி என்ற இசை குறியீட்டு முறையை அந்தக் காலத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதை பின்பற்றிய மக்கள் இசை தாளக்கட்டை கேட்டு இந்த விடயத்தைத்தான் சொல்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டார்களாம்.
மேலும் தாங்கமுடியாத துயரம், வெளிப்படுத்த முடியாத சோகம் போன்றவற்றின் வெளிப்பாடாகவும் பறை அழுகிறது.
அசுணமா என்னும் காட்டு விலங்கு யாழ் ஒலியை கேட்கும்போது மென்மை அடையுமாம். ஆனால், பறை ஓசையை கேட்டால் இறந்துவிடுமாம். அசுணமா விலங்கை யாழினையும் பறையினையும் ஒன்றன் பின் ஒன்றாக இசைத்து வழிப்போக்கர்கள் கொன்றனர் என்று  
“காலந்தோறும் தமிழர் கலைகள்” எனும் நூலில் தமிழர் சமயம் கா.சுப்பிரமணிய பிள்ளை குறிப்பிட்டுள்ளதாக தமிழகத்தின் முன்னணி பறை இசைக் கலைஞரும் 'புத்தர் கலைக்குழுவின் நிறுவனருமான மணிமாறன் ஆதாரங்களுடன் 'மறுவாசிப்பு” எனும் பறை இசை பற்றிய தமது ஆய்வு நூலில் குறிப்பிட்டிருக்கிறார். பறை இசை ஒரு சாதிக்கான இசைதான். அதனை மற்றவர்கள் தொடுவதே தீட்டு எனும் கருத்தியல் இந்தியாவில் மட்டுமல்ல, இலங்கையிலும் வேரூன்றி வளர்ந்திருக்கிறது.
குறிப்பாக, வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட பகுதிகளில் பறை இசை வாசிக்கப்பட்டு வந்தாலும் அதனை இசைப்பவர்கள் கல்லாதவர்களாகவும், (படிக்காதவர்கள்) கள் அருந்துபவர்களாகவுமே பார்க்கப்பட்டுவந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்திலிருந்து இலங்கை

வந்திருந்த பறை இசைக் கலைஞர் மணிமாறன் தமது பறை இசைப் பயிற்சி வகுப்புகளை யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் நடத்தியிருந்தார் இதன்போது யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் என்று பல்துறையைச் சேர்ந்த பலரும் பறை இசையை கற்றுக்கொள்வதில் ஆர்வம் செலுத்தியிருந்தார்கள்.
அந்தவகையில் பறை இசையை இலங்கையில் இளையவர்களிடம் கொண்டுசேர்த்த பெருமை மணிமாறனுக்கு இருக்கிறது. மணிமாறனின் பறை இசை வகுப்புகளில் பயின்று சான்றிதழும், தொல்லிசை சுடர் விருதும் வென்றவர்தான்
இங்கிரிய, றைகமையைச் சேர்ந்த முருகேசு விக்னேஷ்வரன், பறை இசை மீதான காதலில் அதனை தமது தோளில் ஆசையாய் சுமந்து விக்னேஷ்வரன் பட்ட அவலங்கள் ஏராளமாம். அதுபற்றி அவர் எம்மிடம் சொன்ன விடயங்கள் சுவாரஸ்யமானவை. – “பறை மீதான எனது ஆர்வம் அதனை வெறின்னு கூட சொல்லலாம், ஆனால், அதனை என் தோளில் சுமக்க நான் ரொம்ப ரொம்ப அவமானங்களை சந்தித்திருக்கிறேன். பறை ஒரு குறிப்பிட்ட சாதிக்கான கருவின்னு அதனை அடையாளப்படுத்திருப்பதால் நான் அதனை தொட்டபோது எனது குடும்பத்தினர் முகம் சுளித்தார்கள். நமக்கான தொழில் இது இல்லன்னு எனது
குடும்ப உறுப்பினர்கள் என்னை வாய்க்கு வந்தபடி திட்டினார்கள், நான் அதனை கண்டுகொள்ளாமல் கடந்தேன், என் எதிரே வந்த என் சித்தப்பா என்னை “சீ”ன்னு காறித் துப்பினார்.
அது மட்டுமல்ல, ஒரு முறை எனது மனைவியை அழைத்துக்கொண்டு ஒரு திருமண வீட்டுக்கு போனேன். அங்கே வந்த ஒருவர் என்னைப் பார்த்து சத்தமாக “ஏய் இங்கே பாருடா நம்ம சாதிக்குள்ளே ஒரு “....” டேய் பறையடிக்கிறவன் “....” பேண்ட் அடிக்கிறவன் “.....” “அப்போ நீ யாருடா?" என்று என்னைப் பார்த்து கேட்டாருங்க! எனக்கு ரொம்ப அவமானமாப் போச்சு. ஆனாலும் நான் சரஸ்வதியா மதிக்கிற அந்த பறைக்காக அந்த அவமானத்தை தாங்கிக்கொண்டேன்”ன்னு சொல்லும் விக்னேஷ்வரன்,
“எனது பறை இசை ஆர்வத்துக்கு பக்கபலமாக இருப்பவர் எனது அப்பாதான், அவரு ஒரு காலத்துல இசைக் கலைஞரா இருந்திருக்கிறாரு. அதனால் அவருக்கு பறை மீது சாதி சாயம் பூசுவதில் உடன்பாடில்லை.
புத்தர் கலைக்குழுவின் தலைவர் தோழர் மணிமாறன் ஐயாவிடம் பறை பயின்றது என் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு. அவரிடம் பறை பயின்றதுக்கு பிறகுதான் எனது பறை இசைப் பயணம் ஒரு புதிய பரிணாமத்தில் பயணிக்கத் தொடங்கியது என்பதை மறுப்பதற்கில்லை.
பறை இசையை ஓர் இழிவான இசைக் கருவியாக மக்கள் பார்ப்பதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. இந்த பறை இசைக் கருவியை இசைத்தவர்கள் இந்த தொழிலுக்கு முறையாக ஊதியம் எதனையும் வாங்காமல் வெறுமனே சாராயத்திற்காகவும், பீடிகளுக்காகவுமே இசைத்திருக்கிறார்கள்.
அதனால் நம்மவர்கள் இந்த இசைக்கு உரிய கௌரவம் வழங்கவில்லை, அதனை ஒரு கேவலமான இசைக் கருவியாக பார்த்திருக்கிறார்கள். இந்த தவறான பார்வையை எனது தலைமையிலான பறை இசைக்குழு மாற்றியமைத்திருக்கிறது, எனது குழுவில் பறை இசைப்பவர்களுக்கென்று சீருடை, கால் சலங்கை உள்ளிட்டவைகளை வழங்கியிருக்கிறேன். அதோடு நிகழ்வுகளுக்கான கட்டணமும் கௌரவமாக பெறுகின்றோம், சாவு வீட்டில் இசைப்பதற்காக பதினைந்தாயிரம் வாங்குகின்றோம், அதேபோல் கலாசார நிகழ்வுகள், கோயில் திருவிழா, குல தெய்வ வழிப்பாட்டு நிகழ்வுகள் என்று பறை வாசிக்கும் நேரத்தையும் நாட்களையும் பொறுத்து கட்டணம் நிர்ணயிக்கப்படும்.
நாம் செய்யும் வேலைக்கு கௌரவமான கட்டணம் கேட்கலன்னா யாரும் அந்த தொழிலுக்கு மதிப்பு கொடுக்கிறதில்லை. அதனாலதான் நாமும் பறை இசைக்கான கட்டணத்தை வேலைக்கு தகுந்தபடி வைத்திருக்கின்றோம்.
இனி பறை இசையை ஓர் இழிவான - தீண்டத்தகாத கருவியாக யாரும் பார்க்க முடியாது! அந்தக் காலம் மலையேறிவிட்டது."
என்று சொல்லும் விக்னேஷின் முகத்தில் மகிழ்ச்சி ரேகை படர்கிறது.
விக்னேஷ்வரன் சொல்வதுபோல், பறை இசை மீதான கறையை துடைக்கும் பணியில் பல முற்போக்குவாதிகள் முனைப்புடன் களப்பணியாற்றி வருகிறார்கள்.

சென்னையில் மார்கழியில் திருவையாறு கர்நாடக இசைக் கச்சேரிகள் தொடர்ச்சியாக நடைபெறும். இந்த நிகழ்வு நடைபெறும் மியூசிக் அகாடமியில் நாட்டுப்புற கலைகளை அரங்கேற்றுவது என்பது நினைத்துப் பார்க்கக்கூட முடியாத ஒரு விடயம், ஏனென்றால், கர்நாடக இசைக் கச்சேரிகளை குறிப்பாக, பிராமணர்கள் நடத்துவதால் அவர்களின் பார்வையில் நாட்டுப்புற இசை தீண்டத்தகாத ஒரு விடயமாக பார்க்கப்பட்டு வந்தது. எனவே, என்னதான் பண வசதி இருந்தாலும் நாட்டுப்புறக் கலை நிகழ்வுகளுக்காக அந்த அரங்குகளை வாடகைக்கு எடுக்க முடியாத ஒரு சூழல் இருந்தவந்த நிலையில் அதனை ஆளும் திமுகவின் ஆதரவுடன் அந்த பழைமையான கோட்பாடு தகர்க்கப்பட்டு, 'மார்கழியில் மக்கள் இசை” என்றப் பெயரில் பறை இசை உள்ளிட்ட கிராமிய கலைகளை இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கமைப்பு செய்து நடத்தியிருந்தது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், இயக்குநர் பா.இரஞ்சித் ஆகியோர் பறை இசைத்து நிகழ்வினை தொடங்கிவைத்திருந்தார்கள்.
அதோடு, சமீபத்தில் மணிமாறனின் பறை இசை நிகழ்ச்சியில் ஒரு பறை இசை பெண்ணின் கால் சலங்கையை அந்தப் பெண்ணின் காலைத் தொட்டு சலங்கையை கனிமொழி கட்டி விட்ட புகைப்படம் வைரலாக பரவியது.
இத்தனை காலமாக இருந்துவந்த பறை இசை மீதான நீண்டகால ஒடுக்கு முறை, தற்போதைய புரட்சி பிரபலங்களால் தகர்க்கப்பட்டு வருவது, பறை இசைக்கு ஒரு ஆரோக்கியமான காலம் மலர்ந்துள்ளது என்பதை நமக்கு உணர்த்துகிறது.🔴


பறை இசை கச்சேரிகளை நடத்த விரும்பும் அன்பர்கள் பறை இசை கலைஞர் விக்னேஸ்வரனுடன் தொடர்பு கொள்ளலாம்.
அவரின் தொடர்பு இலக்கம்: 076 057 7830
一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一
எனது கட்டுரைப் பதிவு, தமிழன்  நாளிதழில் 2022, ,ஜூன், 26 ம் திகதி வெளியானது.

Friday, July 22, 2022

இலங்கையில் மு.க.ஸ்டாலின்


 பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஒருங்கமைப்பில் பெருந்தொகையான நிவாரணப் பொருட்கள் நாடு முழுவதும் தமிழ், சிங்கள மக்களுக்கு கையளிக்கப்பட்டு வருகிறது.


இதேவேளை, “நம் இனத்தை மறக்காமல் நீங்கள் செய்த உதவி மகத்தானது” என்று, தமிழக முதல்வருக்கு, இலங்கை தமிழர்களும், சிங்களவர்களும் மகிழ்ச்சிகரமான வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
தமிழக அரசினால் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ள நிவாரணப் பொருட்களை மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் நிகழ்வு தற்போது இலங்கை முழுவதும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இலங்கையில் உணவுப் பற்றாக்குறையும் குறிப்பாக அரிசி பஞ்சமும் ஏற்பட்டுள்ள இந்த வேளையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களினால் அனுப்பப்பட்டுள்ள அரிசி, பால்மா உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மக்கள் பெருமளவில் ஆர்வம் காட்டிவருகிறார்கள்.
இந்திய வம்சாவளி தமிழர்களும், சிங்களவர்களும் அதிகம் வசிக்கும் களுத்துறை மாவட்டம், இங்கிரிய, றைகம, விபுலானந்தா உயர்நிலைப் பள்ளியில் சமீபத்தில் தமிழக அரசின் நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.


இதன் போது உலர் உணவுப் பொருட்களை பெற்றுக்கொள்ள வந்த பொதுமக்களில் பலர் முதல்வர் ஸ்டாலினுக்கு தமது வாழ்த்துகளையும் தமது அன்பினையும் வெளிப்படுத்தியிருந்தார்கள்.


“இக்கட்டான சூழலில் இலங்கை மக்களின் தேவை அறிந்து சேவை செய்யும் தமிழக முதல்வருக்கு கடவுளின் ஆசிர்வாதம் கிடைக்கும் என்றும் முதல்வருக்கு நாங்கள் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம் என்றும் சிங்களவர்களும், தமிழர்களும் பெருமிதமாக தமது கருத்துகளை பகிர்ந்திருந்தார்கள்.
தமிழக அரசின் நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணி, தற்போது இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.





















Wednesday, June 15, 2022

நித்தியானந்தாவுக்கு நடந்தது என்ன?



‘தன்னை தாழ்த்துகிறவன் எவனோ
அவன் உயர்த்தப்படுகிறான்’ என்பது ஒரு வேத நூல் சொல்லும் அழகான வார்த்தை.  அதை அப்படியே, அச்சுப் பிழைக்காமல் நகலெடுத்ததுபோல் தமது வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தி இன்றைய இளைய தலைமுறையினரிடம் பெரும் வரவேற்பைப் பெற்றவர்தான் நம்ம நித்தியானந்தா.
“நான் ஒரு எச்ச சோறு. நான் ஒரு பொறம்போக்கு. என்னையெல்லாம் யாரும் கண்டுக்கப்படாது. அப்படியே ஓடுகாலி ஓடட்டும்னு வேடிக்கை மட்டும்தான் பார்க்கணும்”ன்னு நித்தி என்னதான் சொன்னாலும் அவர் என்ன செய்கிறார், அவர் சாப்பிட்டாரா, தூங்கினாரான்னு அவரைப் பற்றி என்ன செய்தி வந்திருக்குதுன்னு நெட்டில் தேடும் நெட்டிசன்களின் ஆர்வத்தை அவ்வளவு ஈசியாக கட்டுப்படுத்திவிட முடியாது. இப்படி தினமும் நித்தி பற்றிய செய்திகளை தேடும் நெட்டிசன்களுக்கு பேரிடியாக வந்த செய்திதான் அவரின் மரணச் செய்தி.

சுவாமி நித்தியானந்தா கோமா நிலைக்குச் சென்றுவிட்டார், அவர் சமாதி நிலையில் இருக்கிறார் என்பது போன்ற செய்திகளின் உண்மைத்தன்மைதான் என்ன என்பதை கொஞ்சம் அலசி ஆராய்ந்து பார்த்தோம்.நித்தியானந்தா தினமும் தமது ‘சத்சங்’ உரைகளை தமது உத்தியோகபூர்வ யூடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்துவிடுவதை வழமையாக கொண்டிருந்தார். நித்தியின் ‘சத்சங்’ உரைகளை கேட்பதற்காக உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள், பக்தர்கள் என பலரும் காத்துக்கிடந்தார்கள். இந்த நிலையில்தான் கடந்த சில மாதங்களாக நித்தியின் ‘சத்சங்’ உரை திடீரென நிறுத்தப்பட்டிருந்தது, இதனையடுத்து நித்தியின் மீது ஆர்வமுள்ள ரசிகர்கள் அவரைப் பற்றிய செய்திகளை பலவிதமாக திரிபுபடுத்தி தமது வலைத்தளங்களின் டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிப்பதற்காக புகுந்து விளையாடத் தொடங்கினார்கள்.இந்திய தொலைக்காட்சிகளும் இதே வேலையைதான் செய்து வருகின்றனவாம். “செய்தி நிறுவனங்கள் பரப்பும் பொய்களை நம்பவேண்டாம். எத்தனை விளக்கம் கொடுத்தாலும் வாங்கிய பணத்திற்காக கூவியே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ள இந்து விரோத ஊடகங்கள், பகவான் நித்தியானந்தா பரமசிவத்தின் உடல்நிலை பற்றிய வதந்தியைப் பரப்பி, மக்களிடம் வெறுப்பு பிரசாரம் செய்து வருகின்றார்கள்" என்று நித்தியானந்தாவின் கைலாசா பிரதிநிதிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.

கர்நாடக மாநிலத்தின் பெங்களூருக்கு அருகே அமைந்திருக்கும் பிடதி ஆசிரமம் மற்றும் அகமதாபாத் ஆசிரமங்களில் நடைபெற்றதாக கூறப்படும் பெண் சிஷ்யைகள் மீதான பாலியல் சீண்டல்கள், சிறுமிகள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் தேடப்பட்டுவரும் நித்தியானந்தா, வடிவேலு ஸ்டைலில் கோயில் கட்டுவதாக சொல்லியும், தம்மை நம்பி வந்தவர்களிடம் சித்து வேலைக் காட்டியும் வசூலித்த பல கோடி ரூபா பணத்தையெல்லாம் தங்கக்கட்டிகளாக மாற்றி, நேபாளம் வழியாக இந்தியாவை விட்டு வெளியேறியதாகவும் அதன்பிறகு அவர் பசுபிக் பெருங்கடலில் ஒரு தீவை சொந்தமாக வாங்கி அதற்கு ‘கைலாசா’ என்று பெயர் வைத்து தனிக் கொடி, தனிப் பாஸ்ப்போட், கைலாசா ரூபா நோட்டுகள் என்றெல்லாம் செய்திகளைப் பரவவிட்டு நம்மை அதிரவைத்ததெல்லாம் சுவாரஸ்யமான தனிக் கதை.


என்னதான் நித்தியானந்தா கிரிமினல் குற்றவாளி என்றாலும் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
அந்தளவுக்கு வசீகரமான கலகலப்பு நிறைந்ததுதான் அவரது ஆன்மீகப் பேச்சு. தமது உரையில் மிகவும் எளிய தமிழ் சொல்லாடல்களைப் பயன்படுத்தி சோஷியல் மீடியா மாம்சுகளின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர்தான் நித்தி.

சாமியார்களுக்கு சூடு, சொரணை இருக்கவே கூடாது என்பதை நோ சூடு, நோ சொரணை என்று நகைச்சுவையாக பேசிய நித்தி, தற்போது ஒரு மரக்கட்டையை போல் மெலிந்த தேகத்துடன் உணர்வில்லாமல் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், நித்தி, தாம் வேறொரு உலகத்தில் சஞ்சாரம் செய்வதாகவும் அவ்வப்போது பூமிக்கு வந்து செல்வதாகவும் சொல்கிறார்.சமாதி நிலையில் இருக்கும் அவரின் உடம்புக்குள் நித்தியின் ஆத்மா உள்ளே வந்ததும் திடுக்கிட்டு விழித்துக்கொள்வதாகவும் அப்போது அவரின் பக்கத்தில் இருக்கும் சிஷ்யைகளை (குறிப்பாக ரஞ்சிதாவை) அடையாளம் தெரிவதில்லை என்றும், தாம் ஒரு பலூன்போல மிதப்பதை உணர்வதாகவும் சொல்கிறார். இரண்டு, மாதங்களாக உணவு, தண்ணீர் என்று எதுவுமே இல்லாமல் இருக்கும் நித்திக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் மருத்துவர்கள் குழம்பியிருப்பதாகவும் 27 மருத்துவர்கள் பரிசோதனை செய்தும் நித்தியின் உடம்பில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் கண்டுபிடிக்க முடியாதுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, நித்தியானந்தாவின் முகநூல் கணக்கில் முகம் காட்டாத அவரின் பிரதிநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், பதினெட்டு வயது இளைஞனைபோல் இதயம் துடித்து, உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்குவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள் என்றும், நித்திய சிவ பூஜையும் தொடர்ந்து நடைபெறுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
சிறு வயதில்


இந்நிலையில், நித்தியானந்தா ஒரு புதிய அறிவிப்பை
வெளியிட்டிருக்கிறார் அதில், தன்னால் முழுமையாக தூங்க முடியவில்லை என்றும் ஒரு இட்லியை கூட சாப்பிட முடியவில்லை எனவும் எனவே தமது ஆசிரமத்தின் நிர்வாகத்தை சிஷ்யர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார்.
“நான் தற்போது பெரிய காற்று பலூனாக உணர்கிறேன். அத்தோடு எனது அடையாளங்கள் பிரபஞ்சத்துடன் நகர்வதை உணர முடிகிறது. முழுமையான தனிமை. நான் என்பதைத் தவிர, வேறு எதுவும் இல்லை. ஆனால், தனிமையின் சோர்வு, சளிப்பு இல்லை. இப்போது நான் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் போது அனைத்து நாடிகளும் சமாதிக்குள் இறங்குகின்றன. சுவாசம் இல்லை, விசித்திரம் இல்லை, விசித்திரமே இல்லாத அனுபவம் ஏற்படுகிறது. நான் என் உடலை வலுவாக வைத்திருப்பதாக என்னை கவனித்துக்கொள்ளும் மருத்துவர் சொல்கிறார்” என்று குறிப்பிட்டுள்ள நித்தி,
“இன்னும் சில மருத்துவ சோதனை முடிவுகள் வந்துள்ளன. மருத்துவ அறிக்கையின்படி உடல் முழுமையான ஆரோக்கியமாக உள்ளது. ஆனால், இன்னும் ஒரு இட்லி சாப்பிட வரல. 21 நிமிசம் தூங்க வரல. பனி மூடிய மலைகள் என்னை மிகச் சிறந்த ஆற்றல் உள்ளவனாக உயிரோடு வைத்திருக்கிறது. நான் குரு பராம்பராவுக்கு விருப்பமான முழு பாவ வாழ்க்கையை வாழ்ந்து விட்டேன்.
நான் நீண்டகாலமாக வாழ வேண்டும் என்று விரும்பியிருந்தேன். இந்த உலகிலிருந்து வெளியேற வேண்டுமென்று விரும்பியதில்லை.
நான் முற்றிலும் நிறைவடைந்து விட்டேன். சமாதியை பற்றிய ஒவ்வொரு விபரமும் தெளிவாகப் புரிகிறது. நீங்கள் அனைவரும் என்னுடன் இருப்பதால் இதை அனுபவிக்கலாம்” என்ற நித்தி, தம்மை பரமசிவன் மக்களுடன் பேசுவதற்கான ஒரு ஒலிப்பெருக்கியைப் போன்று பயன்படுத்த எண்ணுகிறார் என்று அந்தப் பதிவில் நித்தியானந்தா ஒரு குழப்ப நிலையில் பதிவிட்டுள்ளதை நாம் அவதானிக்கலாம்.
கடந்த ஏப்ரல் 13ஆம் திகதிதான் நித்தி சமாதி நிலையை
அடைந்துவிட்டதாக செய்திகள் உலா வந்தன. அதனைத் தொடர்ந்து நித்தியானந்தாவின் சீடர்கள் தமது இணையப் பக்கங்களிலும், ஆசிரமத்திலும் நித்தியானந்தாவின் புகைப்படங்களை வைத்து விளக்கேற்றி பிரார்த்தனைகளில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.
குறிப்பாக, ராஜமாதா என்றழைக்கப்படும் நடிகை ரஞ்சிதாவின் இணையப் பக்கத்திலும் பிரார்த்தனைப் படங்களே பகிரப்பட்டுள்ளதால் நித்தியானந்தா விடயத்தில் ஒரு சலசலப்பு எழுந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பாக நித்தியானந்தா, தாம் 200 வருடங்கள் வாழப்போவதாகவும் அதற்கான வழிமுறைகளை தாம் செய்துவிட்டதாகவும், வேப்பிலை, அருகம்புல், கடுக்காய், ஏலக்காய், கிராம்பு உள்ளிட்டவைகளை உணவில் சேர்த்து, நீராகாரத்தை உண்டு வருவதாகவும். தாம் ஐந்து தலைமுறைகளை பார்க்கப்போவதாகவும் தாம் சொல்லும் ஆயுர்வேத மருத்துவ முறைகளை நம்பாமல் மீம்ஸ் போட்டு கிண்டலடிப்பவன் செத்துப் போவான்னு நித்தி சொல்லியிருந்ததை நாம் சமூக வலைத்தளங்களில் பார்த்தோம்.


எனவே, நித்தியானந்தா தமது வழமையான உணவு
முறைகளிலிருந்து மாறி 200 வருடங்கள் உயிர் வாழ்வதற்கான முயற்சியில் இறங்கி, உடலை வருத்தி செய்த உணவுப் பயிற்சிகளில் ஏற்பட்ட மாற்றத்தினாலேயே அவருக்கு கல்லீரல் அலர்ஜி, சிறுநீரகத் தொந்தரவு என ஏற்பட்டதோடு தற்போது நுரையீரல் தொற்று ஏற்பட்டு மூச்சுவிடவே கஷ்டப்படுவதாகவும் அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சுவாசம் வழங்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.



இதனை மறுத்துள்ள நித்தியானந்தாவின் சிஷ்யை மாணிக்க ஜோதியானந்தா சுவாமி, பரமசிவம் சமாதி நிலையில் இருப்பதாகவும் அவர் விரைவில் நம் முன்னே வந்து ‘சத்சங்’ உரையாற்றுவார் என்றும் தாங்கள் வெறும் பாவாடை சாமியார்கள் அல்ல என்றும், பரமசிவனிடமிருந்து நேரிடையாக தீட்சை பெற்றவர்கள் என்றும் தாங்கள் ஆசிரம புனர்நிர்மாணப் பணிகளை தொடர்ந்து முன்னெடுக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.
சமாதி நிலை என்றால் என்ன? என்று தமிழகத்தில் வசிக்கும் நித்தியானந்தாவின் ஆதரவாளர் ஒருவரிடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டோம்,
“சமாதி நிலை என்பது பிரபஞ்ச சக்திகளை உள்வாங்குவது. இந்த நிலை முற்றிலும் ஆரோக்கியமான விடயம்தான். உடலுக்கு எந்த தீங்கும் ஏற்படாது. அது உண்மையிலேயே பிரபஞ்ச ஒழுங்கு முறை. ஞானிகள், மகான்கள் ஆழ்ந்த தவத்தில் இருக்கும்போது இந்த உடலின் வெளிப்புறம் எந்த செயலையும் செய்ய முடியாத ஒரு மரக்கட்டைபோன்றுதான் இருக்கும். அந்தக் காலத்தில் வாழ்ந்த சதாசிவ பிரமேந்திர சுவாமிகள் சமாதி நிலையில் இருந்தவர்தான், ஒரு முறை சதாசிவ பிரமேந்திர சுவாமிகள் காவிரி கரையின் ஓரத்தில் சமாதி நிலையில் தவமிருந்தார்.

அப்போது பெரிய காட்டாற்று வெள்ளம் வந்ததில் பிரமேந்திர சுவாமிகளும் அந்த வெள்ளத்தில் சிக்குண்டு அடித்துச் செல்லப்பட்டார். அந்தக் காட்சியை நேரில் பார்த்த மக்களும் “அய்யோ சாமியாரை வெள்ளம் கொண்டு போயிடுச்சே"ன்னு பதறினார்கள். இந்த சம்பவம் நடந்து சில மாதங்களுக்கு பிறகு காவிரி ஆறும் வற்றிப்போனது அப்போது ஓர் இடத்தில் விவசாயிகள், விவசாயத்துக்காக பூமியை மண் வெட்டியால் வெட்டிக்கொண்டிருந்தார்கள்.
அப்போது ஒருவரின் மண்வெட்டி வேறு எதையோ வெட்டியதை உணர்ந்த விவசாயி, மண்வெட்டியை உற்றுப் பார்த்தார்.
அப்போது மண்வெட்டியின் ஓரத்தில் இரத்தம் இருந்ததை அவதானித்த அவர், பதறிப் போனார். பிறகு மற்றவர்களும் வந்துவிட கைகளாலேயே மண்ணை அப்புறப்படுத்திய போது அங்கே சில மாதங்களுக்கு முன்னாள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சதாசிவ பிரமேந்திர சுவாமிகள் தியான நிலையில் அமர்ந்திருந்ததையும். அவரின் தலையிலிருந்து ரத்தம் கசிந்து கொண்டிருப்பதையும் அவதானித்தார்கள். அதன் பிறகு சுவாமி சுய நினைவுக்கு வந்து அந்த இடத்திலிருந்து நடந்து சென்றிருக்கிறார். இதே நிலையில்தான் தற்போது நித்தியானந்தா இருப்பதாகவும் அவரால் எந்த செயலையும் செய்ய முடியாது என்றும் அவர் சமாதி நிலையிலிருந்து பூரணமாக மீண்டதற்கு பிறகே நமக்கு அவர் அருள்பாலிப்பார்”ன்னு அந்த நண்பர் மெய்சிலிர்த்து சொன்னார்.
திருவண்ணாமலையில் நித்தியானந்தாவுக்கு 16ஆவது வயதில் யோக பட்டாபிஷேகம் நடத்தப்பட்டு அவரை குருபீடத்தில் அமர்த்தியிருக்கிறார்கள். அன்றிலிருந்து இன்றுவரை சமாதி நிலைக்கான பயிற்சிகளை எடுத்துவந்த நித்தியானந்தா தமது 44ஆவது வயதில் சமாதி நிலையை அடைந்துள்ளதாகவும் அவரின் பக்தர்கள் பெருமிதம் கொள்கிறார்கள்.


இந்நிலையில், தமிழகத்தின் பிரபலமான சமூக ஆர்வலரும், டாக்டருமான சர்மிலா பாலாஜியிடம் நித்திக்கு என்ன வியாதி வந்திருக்கும் என்று கேட்டதற்கு, “அவர் செய்த அழிச்சாட்டியங்களுக்கு யாருக்கும் வரக்கூடாத வியாதி வந்திருக்கும். அவர் உடல் மெலிந்து கிடப்பதைப் பார்த்தால் அப்படித்தான் தோணுகிறது” என்று நக்கலாகவே பதிலளித்திருக்கிறார்.
இதேவேளை, நித்தியின் பாலியல் வழக்கு, கைலாசா கணக்கு மற்றும் பண பரிமாற்றம் என்று அத்தனையையும் நித்தியானந்தா குருபீடத்தின் ராஜமாதாவான ரஞ்சிதாவின் கண் அசைவிலேயே நடப்பதாகவும், நித்திக்குப் பிறகு அவரின் ஆசிரமப் பணிகளை தொய்வின்றி தொடர்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அவர் செய்திருப்பதாகவும் நம்பகமாக செய்திகள் கிடைத்திருக்கின்றன.
இருந்தாலும் இந்திய பொலிஸ் ஒரு புதுக் கணக்கு போடுகிறது. அதாவது, நித்தி இறந்துவிட்டதாக ஒரு பொய் செய்தியை நம்பவைத்து நித்தியின் ஃபைலை மூடிய பிறகு நித்தி இன்னொரு கெட்டப்பில் மொட்ட பாஸ் ‘சிவாஜி’ பட ரஜினிபோல் இந்தியாவுக்குள் புதிய சாமியாராக ரீஎன்ரீ கொடுக்கலாம். என்று நம்புகிறார்கள்.
யாருக்குத் தெரியும் பக்த கோடிகள் சொல்வதைபோல் திரும்ப வந்துட்டேன்னு சொல்லுன்னு நாளை அவர் கிறீன் மேட் உதவியுடன் ‘சத்சங்’ செய்யலாம்.
எது எப்படியோ, நித்தியின் ரசிகர்கள் அவரின் செய்திகளை கூகுலில் தேடிப்படித்து குஜாலாகவே இருக்கிறார்கள்🔴
一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一
எனது கட்டுரைப் பதிவு, தமிழன்  நாளிதழில் 2022, ,ஜூன், 05ம் திகதி வெளியானது.