Sunday, March 8, 2020

தமிழர்களின் அந்தக்கால ஆபரணங்கள்

மணி  ஸ்ரீகாந்தன்

இந்திய தமிழர்கள் இலங்கைக்கு தொழிலாளர்களாக அழைத்து வரப்பட்ட போதே பாம்படமும் அவர்களின் காதுகளில் தொங்கியபடி இலங்கைக்கு புலம் பெயர்ந்து வந்திருக்கிறது.


நவீன காலமாற்றம் நமது பண்பாட்டு விழுமியங்களை அழித்து வருவதில் தீவிரம் காட்டி வருகிறது. தமிழர் பாரம்பரிய பழங்கால பொருட்கள் பல காணாமல் போய்கொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள் அந்த பட்டியலில் இணைந்து கொண்டிருக்கும் பொருள்தான் பாம்படம்.

‘அது என்னப்பா பாம்படம் புதுசா இருக்கே’ என்று நீங்கள் கேட்பது புரிகிறது. பாம்படம் என்பது அந்தக் காலத்து இளம் பெண்களின் காதுகளை அலங்கரிக்கும் தங்க ஆபரணம்.
நம் பாட்டிகளின் காதுகளில் மட்டும் அது தொங்கியதால் அது பாட்டிகளுக்கு மட்டுமே உரித்தானதாக நாம் நினைத்து விட்டோம்.
பாம்படம் அந்தக் காலத்து ஃபேஷன் ஆபரணமாக இருந்திருக்கிறது. ஆனால் இன்றைய துரதிஷ்டம் பாம்படம் அருங்காட்சியகத்திலும், அதை அணிந்து அழகு பார்த்த பாட்டிகள் முதுயோர் இல்லத்தில் மட்டுமே உள்ளன.
பாம்படங்கள்  முருக்கச்சி, தண்டட்டி, கொப்பு, ஓணப்பு தட்டு, எதிர்தட்டு, குறுக்கு தட்டு, நாகவட்டம், முடிச்சு உள்ளிட்ட பெயர்களில் இந்த கனமான காதணி ஆபரணம் அழைக்கப்படுகிறது.
இந்த ஆபரணங்கள் உடல் அமைப்புக்கும், காதின் உறுதிக்கும் ஏற்றவாறே அணியப்பட்டது. பாம்படம் சில பாட்டிகளுக்கு தோள் வரையும், சில பாட்டிகளுக்கு மார்பு வரையும் தொங்குவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
பாம்படம் குறிப்பாக திராவிட கலாசாரம், தமிழ்நாட்டு பாரம்பரிய அடையாளங்களில் ஒன்று. ஆனால் நம் நாட்டில் இந்த ஆபரணம் அணியும் முறை புழக்கத்தில் இருந்ததில்லை. இந்திய தமிழர்கள் இலங்கைக்கு தொழிலாளர்களாக அழைத்து வரப்பட்ட போதே பாம்படமும் அவர்களின் காதுகளில் தொங்கியபடி இலங்கைக்கு புலம் பெயர்ந்து வந்திருக்கிறது.

அப்படி வந்த நம்மவர்களின காதுகளை சிங்கள சமூகம் ஆச்சர்யமாக பார்த்து வியந்ததெல்லாம் ஒரு தனி வரலாறுதான். என்றாலும் இந்த பாம்படம் அணியும் முறையை கௌதம புத்தனும் பின்பற்றியிருக்கிறார் என்பதை புத்தனின் நீளமான காதுகளை பார்த்தாலே புரிந்து விடும்.
தமிழகத்தில் அந்தக் காலத்தில் எல்லா வீடுகளிலும் இந்த பாம்படம் பாட்டிகள் இருந்திருக்கிறார்கள். இப்போது அவர்களை பார்ப்பது ரொம்பவும் அரிதாக இருக்கிறது.

கருப்பாயி
தமிழகத்திலேயே இந்த நிலை என்றால் நம் நாட்டில் அவர்கள் இருப்பதற்கான வாய்ப்பு  மிக, மிக குறைவுதான். ஆனாலும் சில காலமாகவே இந்த பாம்படம் பாட்டிகள் எங்காவது இருப்பார்களா என்று தேடி வலைவீசி, அலைந்ததில், ஒரு நாள் களுத்துறை நகருக்கு அருகில் ஒரு வீதியின் ஓரத்தில் நடந்து சென்ற ஒரு பாட்டியின் காதுகளை கவனித்த எனக்கு ஆச்சரியம் காத்திருந்தது.
ஓர் காது வளர்த்த பாட்டி காது அவரின் தோளை தொட்டுவிடும் நிலையில்தான் இருந்தது. நான் அவரிடம் சென்று அவரின் இந்த பாம்படக் கதையை கேட்டறிந்தேன்.

“எங்க பூர்வீகம் திருநெல்வேலிதான், எங்க பாட்டி, அம்மா எல்லோரும் பாம்படம், தண்டட்டி என்ற நிறைய நகைகளை காதுகளில் அணிந்து ரொம்பவும் அழகாக இருப்பார்கள். எனக்கு அந்த நகை போடணும் என்று ஆசை. நான் வயசுக்கு வந்ததும், எனக்கு பாம்படம் போட்டாங்க ஆனாலும் அதனை நினைத்தவுடன் போட முடியாது அதுக்கு முதலில் காது வடிப்பாங்க, அதாவது மரத்துண்டு, ஈயக்குண்டு போன்ற கனமான பொருட்களை காதில் மாட்டி தொங்க விடுவார்கள் அது பல நாட்களுக்கு அப்படியே தொங்கிக் கொண்டிருக்கும். பிறகு அந்தக் காதுல பாம்படம் போட்டு விடுவாங்க.” என்று சொல்லும் கருப்பையா கருப்பாயிக்கு இப்போது வயது எண்பதை கடந்திருக்கும் அவருக்கு சரியாக வயதை சொல்ல முடியவில்லை.
காதுல தொங்கிய பாம்படத்துக்கு என்ன நடந்தது என்று பாட்டியிடம் கேட்டதும்,

“இன்னைக்கு சின்ன தம்மா துண்டு கம்மல் காதுல கிடந்தாலே அதை கொண்டு போய் வங்கியில அடமானம் வச்சுடுறானுங்க, நம்ம காதுல கிடந்தது எப்படியும் நூறு கிராம் தேறும் அந்தக் காலத்துலேயே வித்து திண்ணுட்டானுங்க” என்று சொல்லிவிட்டு கருப்பாயி பாட்டி ஏக்கமாக பார்க்கிறார்.

பாம்படம் போட்டு விடுவதற்காக அந்தக் காலத்தில் அதற்கென்று கைதேர்ந்த குறவர்கள் பெரிய ஊசிகளுடன் வீடுகளுக்கு வந்து காது குத்தி விடுவார்களாம். கூடவே அவர்களின் பைகளில் காது இழுப்பட்டு நீளமாக வளர்வதற்கு போடும் கனமான இரும்புத் துண்டுகள், ஈயக்குண்டுகள், மரக்குச்சு போன்றவற்றை காதுமடலில் போட்டு காதுத் துளையை பெரிதாக்குவார்கள். சில காது குத்தும் குறவர்கள் பனையோலையை சுருட்டி அதனை காது துளையில் நுழைத்தும் வைப்பார்களாம். இப்படி காது மடல்களில் துளையை பெரிதாக்க பல வழிகளை பின்பற்றியிருக்கிறார்கள்.

இப்படி செய்யும் முறையை காது வடிப்பது என்று கூறியிருக்கிறார்கள். பாம்படம் என்பது பந்து, கனசதுரம், வட்டங்கள் மற்றும் எதிர் எதிர் பக்கங்களும், கோணங்களும் ஒன்றாக இருக்கும் இணைவக வடிவங்கள் கொண்ட ஒரு வடிவியல் வடிவமைப்பில் செய்யப்படுபவை. இது ஒரு பறவை அல்லது ஒரு பாம்பு போல தோற்றம் அளிக்கும். அரிதுளுவன், பன்னீர் செம்பு, தாமரை கால், சுண்ணா கலயம் என இதில் பல வகைகள் உண்டு.
தண்டட்டி என்பது செவ்வகங்கள் மற்றும் முக்கோண வடிவங்கள், அரைவட்டம், கோளங்கள் கொண்ட ஒரு வடிவியல் அமைப்பைக் கொண்டது. இது முப்பரிமாண அமைப்பில் இருக்கும்.
கிட்டத்தட்ட ஒரு பாம்படத்தின் எடை ஐம்பது கிராமுக்கு மேல் இருக்குமாம், இரண்டு காதுகளிலும் நூறு கிராமுக்கு மேல் கனமான குண்டுகள் தொங்குமாம். ‘இந்தப் பாம்படம் பிகருகளை அல்லேக்கா தூக்கிட்டு போயிருந்தா ஐந்து தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாம்’ என்று எண்ணம் வருகிறதா…?

அந்தக் காலத்தில் இந்த பாம்படம் ஆபரணத்துக்கு அதிக மவுசு இருந்ததால் இதனை வடிக்கவும் பரம்பரை, பரம்பரையாக கைதேர்ந்த பொற்கொல்லர்கள் ஒவ்வொரு நகரத்திலும் இருந்திருக்கிறார்கள்.
அவரவர் வசதிக்கேற்ப பாம்படங்கள் உருவாக்கப்படும், சிலர் அந்த குண்டுகளை அப்படியே தங்கத்தில் வார்த்தெடுத்திருப்பார்கள். சிலர் அந்த ஆபரணத்தின் உள்ளே ஒருவித மெழுகு வைத்து மேலே தங்கத்தால் வார்த்தெடுத்திருப்பார்களாம்.

சில வசதி குறைந்த பாட்டிகள் வெறும் ஈயக்குண்டுகளை அணிந்திருப்பார்களாம். இந்த பாம்படங்கள் அழகுக்காக மட்டுமல்லாது அந்தஸ்த்திற்காகவும் இதனை அணிந்திருக்கிறார்கள். காதுமடலின் நீளத்தை வைத்து அவரின் செல்வாக்கை புரிந்து கொள்வார்களாம்.
இதில் முக்கியமாக தமிழ்ச் சமூகத்துக்குள் இருக்கும் சாதி பிரிவையும் இந்த பாம்படங்கள் வெளிப்படையாக சொல்லும் தன்மையில் இருந்திருக்கிறது. அதாவது ஒவ்வொரு பாம்படத்தின் வடிவமும் ஒரு சாதிக்குரியதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
தண்டட்டி, முடிச்சு, பாம்படம் உள்ளிட்ட நகைகளை தமிழ்நாட்டில் மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள வேளாளர் இனப் பெண்கள் அதிகளவில் அணிந்திருக்கிறார்கள்.
பாம்படத்தின் வடிவமைப்பு உலகத்தின் வேறு எந்த நாகரிகத்திலும் பார்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. பந்து, கனசதுரம், முக்கோணம், வளையம் மற்றும் எதிர் எதிர் பக்கங்களும், கோணங்களும் ஒன்றாக இருக்கும் இணைவக வடிவங்களும் கொண்ட வடிவில் உருவங்களால் செய்யப்பட்டிருக்கிறது. இது போன்று வடிவமைக்கப்பட்ட ஓர் அணிகலன் உலகில் வேறு எங்கும் காணப்படவில்லை என்று வரலாற்று ஆய்வாலர்கள் குறிப்பிடுகிறார்கள்.

நமது செவிமடலின் கீழ் பகுதியில் உள்ள சில புள்ளிகள் அழுத்தப்பட்டால் மூளையின் நினைவாற்றல் செல்கள் தூண்டப்படும் அதனால் ஞாபக சக்தி அதிகரிக்கும் என்பது வர்மக் கலை பாடம். இந்த கருத்து இன்றைய அறிவியலாலும் நிரூபணமாகியிருக்கிறது. அந்தக் காலத்தில் பள்ளிக் கூடத்தில் சரியாக பாடம் படிக்காத மாணவனை தோப்புக்கரணம் போடும்படி ஆசிரியர் சொல்வாராம். அந்த சமயத்தில் அந்த மாணவனின் காதுமடல் இழுப்படும் போது நினைவாற்றல் அதிகரிக்கும் என்பது அறிவியலாக பார்க்கப்பட்டது.

எனவே அந்தக் காலத்து பெண்களின் நினைவாற்றல் ரொம்பவும் அதிகமாக இருந்ததுக்கு இந்த பாம்படங்கள் அணிந்ததும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது.
எனவே இப்படி உடல் ரீதியான மருத்துவ தன்மையும் கலை அம்சத்தில் ஒரு தனித்துவமும் ஒருங்கே அமையும் விதத்தில் பாம்படத்தை வடிவமைத்த நமது முன்னோர்களின் அறிவு செழுமையை என்னவென்று சொல்வது.
உலகத்தில் இன்று புதுவகை டிசைன் ஆபரணங்கள் பல சந்தைக்கு வந்திருந்தாலும் அவற்றுக்கு ஓரிரண்டு பெயர்களே இருக்கும். ஆனால் பண்டைய தமிழர்கள் எண்ணிலடங்காத நகைகளை உருவாக்கி அதற்கு 
அழகான தமிழ்ப் பெயர்களையும் சூட்டியிருக்கிறார்கள்🔵

 தலையணி

     தாழம்பூ
     தாமரைப்பூ
    சொருகுப்பூ
    சாமந்திப்பூ
    அடுக்குமல்லிப்பூ
    இலை
    அரசிலை
    இராக்குடி
    இலம்பகம்
    கடிகை
    கன்னசரம்
    குச்சம்
    குஞ்சம்
    கொண்டைத்திருகு
    கோதை
    சடாங்கம்
    சடைநாகம்
    சடைத்திருகு
    சந்திரப்பிரபை
    சரம்
    சுடிகை
    சுட்டி
    சுரிதம்
    சூடிகை
    சூடாமணி
    சூடை
    சூட்டு
    சூரியப்பிரபை
    சூழி
    சூளாமணி
    சேகரம்
    சொருகுப்பூ
    தலைப்பாளை
    தெய்வ உத்தி
    தலைப்பட்டம்
    பதுமம்
    பிறை
    புல்லகம்
    பூரப்பாளை
    பொலம்பூந்தும்பை
    பொற்பூ
    பொற்றாமரைப்பூ
    பொன்வாகை
    பொன்னரிமாலை
    மாராட்டம்
    முகசரம்
    முஞ்சம்
    வயந்தகம்
    வலம்புரி.
    திருகு பூ

காதணி

    தோடு
    கொப்பு
    ஓலை
    குழை
    இலை
    குவளை
    கொந்திளவோலை
    கன்னப்பூ
    முருகு
    விசிறி முருகு
    சின்னப்பூ
    வல்லிகை
    செவிப்பூ
    மடல்
    டோலாக்கு
    தண்டட்டி.
    பாம்படம்

கழுத்தணிகள்


    கொத்து
    கொடி
    தாலிக்கொடி
    கொத்தமல்லி மாலை
    மிளகு மாலை
    நெல்லிக்காய் மாலை
    மருதங்காய் மாலை
    சுண்டைக்காய் மாலை
    கடுமணி மாலை
    மாங்காய் மாலை
    மாதுளங்காய் மாலை
    காரைப்பூ அட்டிகை
    அரும்புச்சரம்
    மலர்ச்சரம்
    கண்டசரம்
    கண்டமாலை
    கோதை மாலை
    கோவை.
    பவளத்தாலி

புய அணிகலன்கள்

    கொந்திக்காய்.

கை அணிகலன்

    காப்பு
    கொந்திக்காய்ப்பூ
    கொலுசு.


கைவிரல் அணிகலன்கள்

     சிவந்திப்பூ
    மோதிரம்
    அரும்பு
    வட்டப்பூ.


கால் அணிகலன்கள்


    மாம்பிஞ்சுக் கொலுசு
    அத்திக்காய்க் கொலுசு
    ஆலங்காய்க் கொலுசு

கால்விரல் அணிகள்


    கான் மோதிரம்
    காலாழி
    தாழ்
    செறி
    நல்லணி
    பாம்பாழி
    பில்லணை
    பீலி
    முஞ்சி
    மெட்டி

ஆண்களின் அணிகலன்கள்

    வீரக்கழல்
    வீரக் கண்டை
    சதங்கை
    அரையணி
    அரைஞாண்
    பவள வடம்
    தொடி
    கங்கணம்
    வீரவளை
    கடகம்
    காப்பு
    பதக்கம்
    வகுவலயம்
    கழுத்தணி
    வன்னசரம்
    முத்து வடம்
    கடுக்கண்
    குண்டலம்

நகைகள் பட்டியல்

    நெற்றிப் பட்டம்
    சடைநாகம்
    மூக்குத்தி
    தோடு
    கடுக்கன்
    தொங்கட்டான்
    சங்கிலி
    அட்டியல்
    தாலி
    பாம்படம்
    பதக்கம்
    காப்பு, வளையல்
    மோதிரம்
    ஒட்டியானம்
    வளை
    சதங்கை
    காற் சங்கிலி
    சிலம்பு
    மெட்டி

No comments:

Post a Comment