தமிழ் இசைக் கருவிகளில் மிகவும் தொன்மையானதும், உலகில் முதன்முதலில் தோன்றிய இசைக் கருவியும் பறை இசைதான் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.
இத்தனை சிறப்புகள் கொண்ட பறை இசைதான் தமிழர்களின் ஆதி இசைக் கருவி, ஆனால், அது சாதி கருவியாகவும், சாவுக்கு இசைக்கும் கருவியாகவும் பார்க்கப்படுவதுதான் வேதனை.
பறை இசைக் கருவி எப்போது தோன்றியது, பறை இசைக் கருவியை யார் கண்டுபிடித்தது எனும் தேடலுக்கு பலர் பலவிதமாய் கருத்து கூறினாலும் பொதுவாய் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து இதுதான்,
ஆதிகால மனிதன் வேட்டையாடிய விலங்கின் தோலை தூக்கி எறிந்தான். வீசப்பட்ட தோலானது மரத்தின் மேல் விழுந்தது. மழையில் உறைந்து வெயிலில் காய்ந்த விறைப்பான தோலின் மீது காற்று மரக்கிளையைத் தனது கரங்களாக்கிக்கொண்டு வாசித்தது.
பறை இசை சாவுக்கானது எனும் கோட்பாடு இன்றைய தமிழகத்தில் சில புரட்சியாளர்களால் தகர்க்கப்பட்டு, திருமண வீடு, பிறந்த நாள், சீமந்தம், சீர்வரிசை விழா, பூப்பெய்தல், கோவில் திருவிழா, மாடு பிடி, பொதுக் கூட்டத்துக்கான அறிவிப்பு, இயற்கை வழிபாடு, போராட்டங்கள், மாநாடுகள், பேரணிகள், கலைவிழாக்கள், நூல் வெளியீடு உள்ளிட்ட நிகழ்வுகளில் இன்று பறை முழங்க தொடங்கியிருக்கிறார்கள்.
ஆனாலும் தம்மை அடையாளப்படுத்தி முன்னிறுத்த பறை இசை தொடர்ந்து போராடிக்கொண்டுதான் இருக்கிறது.
பறையை ஏன் குறிப்பாக சாவுக்கு இசைக்கிறார்கள், வேறேதும் கருவிகளை இசைக்கலாமே என்ற கேள்வி எழலாம் இசைப் பேரறிஞர்களில் ஒருவரான தியாகராய பாகவதர் பிறந்தநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் சென்னையில் திருவையாறு எனும் தலைப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் வீணை மற்றும் வயலின் இசைக்கிறார்கள். இவர்களில்
![]() |
| பறை இசைக் கலைஞரின் கால் சலங்கையை கட்டிவிடும் கனிமொழி |
எவரையேனும் வரவழைத்து நம் பாட்டி, தாத்தா பிணத்தின்
முன் மென்மையான இசைக் கருவிகளான வீணையையோ வயலினையோ வாசித்தால் பிரிவின் சோகம் கூடுதலாய் மேலோங்குமே! இதனை விடுத்து ஏன் பறையை அடிக்க வேண்டும் என்ற கேள்விக்கு சமூக ஆய்வாளர்கள் மற்றும் கலை ஆர்வலர்கள் அளிக்கும் பதில், பறையின் ஒலியை கேட்டும் ஒரு மனிதன் இயங்கவில்லை அல்லது அசையவில்லை என்றால், அம்மனிதனின் இறப்பு உறுதி செய்யப்படுகிறது. ஆதலால்தான் இது ஆதி மனிதன் கண்டுபிடித்த ஸ்டெத்தாஸ் கோப் கருவியென வரலாற்று அறிஞர்கள் புகழாரம் சூட்டுகிறார்கள்.
இன்று பாதையில் பயணிக்கும் எவரையேனும் இடைமறித்து பறை இசைக் கருவியை எதற்கு இசைப்பார்கள் என வினவினால், சிலர் சட்டென சாவுக்கு இசைப்பது என பதிலளிப்பர். அப்படி அலறுவோரின் பதில் அரைவேக்காட்டுத்தனமேயன்றி அடிப்படை ஆதாரமற்றது. உண்மையிலேயே பறையின் பயணம் மிக நுட்பமானது, ஆழமானது.
புனலை அடைக்க, உழவர்களை அழைக்க, உழுவோரை ஊக்குவிக்க, விதைக்க மற்றும் அறுவடை செய்ய, விலங்குகளை வேட்டையாட அல்லது விரட்ட, மன்னனின் செய்திகளை மக்களுக்குத் தெரிவிக்க, போர் வீரர்களை அணிதிரட்ட, வெற்றியைக் கொண்டாட, திருடனைப் பிடிக்க, கூட்டம் கூட்ட மேலும் கூத்து, திருவிழா, இயற்கை வழிபாடு என்பதாய் பறையின் பயன்பாடு நீள்கிறது.
![]() |
| பறை இசைக் கலைஞர் மணிமாறனிடமிருந்து தொல்லிசை சுடர் விருது பெறும் விக்னேஷ்வரன். |
உலகில் முதன்முதலில் தோன்றிய தொடர்பு சாதனக் கருவி பறைதான். ஆதிமனிதன் கண்டுபிடித்த அலைபேசி என்று நாம் கவிதை பாடலாம். இன்று நாளிதழ், தொலைக்காட்சி, வானொலி, அஞ்சல், அலைபேசி என செய்திகளை பரிமாறவும் ஒருவரையொருவர் தொடர்புகொள்ளவும் பல வழிகள் உள்ளன. இன்றைய கணினி யுகத்தில் தகவல் தொடர்பு என்பது மிக அசாதாரண ஒன்றாய் ஆகிவிட்டது.
அமெரிக்காவில் உள்ளவரை அடுத்த நொடியில் அழைத்துப் பேச முடிகிறது. எங்கிருந்தும் எங்கிருப்பவரையும் எப்படியேனும் நினைத்த நேரத்தில் தொடர்பு கொள்ள முடிகிறது. இது, மன்னராட்சி காலத்திலோ அதற்கும் முன்போ சாத்தியமில்லாத ஒன்று. தாத்தா இறந்த செய்தி வெளியூரிலுள்ள பேரனுக்கு வந்துசேர்வதற்குள் பேரன் இறந்தே விடுவான். ஆனால், இன்று அப்படியில்லை . நான் இன்னும் கொஞ்ச நேரத்தில் இறந்து விடுவேன் போலிருக்கிறது என்று மரணம் தழுவும் நிலையிலும் மற்றவர்களுக்கு வீடியோ தகவலாக அனுப்பும் அளவிற்கு தகவல் தொடர்பு சாதனங்கள் வளர்ந்து வருகின்றன.
இப்படி எந்த வாய்ப்பும் இல்லாத அந்தக் காலத்தில் நாடு முழுக்க முரசு மண்டபங்கள் இருந்திருக்கின்றன. இன்று எங்கு திரும்பினாலும் பேரிரைச்சல், குக்கரின் சத்தம், கூவும் சேவலின் குரல்வளையை நெறித்துவிட்டது.
![]() |
| பறை இசைக்கும், கனிமொழி, ஜி.வி.பிரகாஸ்,பா.ரஞ்சித் |
இரைச்சல்களுக்கிடையில் மனிதன் தான் இழந்த அமைதியை தேடிக்கொண்டிருக்கிறான். வழிபாடு என்பது ஆண்டவனுக்கும் பக்தனுக்குமான இரகசிய உடன்பாடு என்பதைக் கடந்து ஆலயங்கள் ஆர்ப்பரிக்கின்றன.
மனிதனுக்கு இயற்கை அளித்த வாகனம் தனது இரண்டு கால்கள் எனும் கருத்தின் அடிப்படையில் நடையை மட்டுமே நம்பி, நாடே நகர்ந்த அக்காலச்சூழலில், ஒரு பறையின் ஒலி ஐந்து கிலோ மீற்றரிலிருந்து பதினொரு கிலோ மீற்றர் வரை கேட்குமாம். தமிழகத்தில் பல இடங்களில் முரசு மண்டபம் அமைத்து செய்தி அறிவிக்கும் முறை இருந்துவந்துள்ளது. அறிவித்தலுக்கு அதிகாலை அல்லது அந்திப்பொழுது உகந்த வேளையாய் இருந்துள்ளது. முரசு மண்டபங்கள் வழியாகவே ஓர் அரசன் அல்லது ஒரு நாடு படையெடுத்து வருகிற செய்தியை பரிமாறியிருக்கிறார்கள். பறையன் அறையும் செய்திகேட்டு மற்றொரு பறையன் அச்செய்தியை முழங்க செய்திகளை விரைந்தும் நெடுந்தொலைவிற்கும் அனுப்பி உள்ளனர்.
திருச்செந்தூரில் பூசை முடிந்த செய்தியை பறை அறைந்து பாஞ்சாலங்குறிச்சிவரை தெரிவித்துள்ளனர். அச்செய்தி தன்னை வந்தடைந்த பிறகே கட்டபொம்மன் உணவு உட்கொண்டாராம். திருவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்கு பூசை முடிந்த செய்தி பறையொலி மூலமாய் வந்த பின்பே மதுரையில் திருமலை நாயக்கர் உணவு உண்டாராம். இன்றும் கூட பல பகுதிகளில் வாழும் மக்கள். இறப்பு. திருமணம், திருவிழா இன்னும் பிற நிகழ்வுகளை பறை இசையின் வழியே அறிந்துகொள்கிறார்கள்.
![]() |
| திருகோணமலையில் மணிமாறனின் பறை இசை பயிற்சிப்பட்டறை |
ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஓர் அடி என்ற இசை குறியீட்டு முறையை அந்தக் காலத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதை பின்பற்றிய மக்கள் இசை தாளக்கட்டை கேட்டு இந்த விடயத்தைத்தான் சொல்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டார்களாம்.
மேலும் தாங்கமுடியாத துயரம், வெளிப்படுத்த முடியாத சோகம் போன்றவற்றின் வெளிப்பாடாகவும் பறை அழுகிறது.
அசுணமா என்னும் காட்டு விலங்கு யாழ் ஒலியை கேட்கும்போது மென்மை அடையுமாம். ஆனால், பறை ஓசையை கேட்டால் இறந்துவிடுமாம். அசுணமா விலங்கை யாழினையும் பறையினையும் ஒன்றன் பின் ஒன்றாக இசைத்து வழிப்போக்கர்கள் கொன்றனர் என்று
“காலந்தோறும் தமிழர் கலைகள்” எனும் நூலில் தமிழர் சமயம் கா.சுப்பிரமணிய பிள்ளை குறிப்பிட்டுள்ளதாக தமிழகத்தின் முன்னணி பறை இசைக் கலைஞரும் 'புத்தர் கலைக்குழுவின் நிறுவனருமான மணிமாறன் ஆதாரங்களுடன் 'மறுவாசிப்பு” எனும் பறை இசை பற்றிய தமது ஆய்வு நூலில் குறிப்பிட்டிருக்கிறார். பறை இசை ஒரு சாதிக்கான இசைதான். அதனை மற்றவர்கள் தொடுவதே தீட்டு எனும் கருத்தியல் இந்தியாவில் மட்டுமல்ல, இலங்கையிலும் வேரூன்றி வளர்ந்திருக்கிறது.
குறிப்பாக, வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட பகுதிகளில் பறை இசை வாசிக்கப்பட்டு வந்தாலும் அதனை இசைப்பவர்கள் கல்லாதவர்களாகவும், (படிக்காதவர்கள்) கள் அருந்துபவர்களாகவுமே பார்க்கப்பட்டுவந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்திலிருந்து இலங்கை வந்திருந்த பறை இசைக் கலைஞர் மணிமாறன் தமது பறை இசைப் பயிற்சி வகுப்புகளை யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் நடத்தியிருந்தார் இதன்போது யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் என்று பல்துறையைச் சேர்ந்த பலரும் பறை இசையை கற்றுக்கொள்வதில் ஆர்வம் செலுத்தியிருந்தார்கள்.
அந்தவகையில் பறை இசையை இலங்கையில் இளையவர்களிடம் கொண்டுசேர்த்த பெருமை மணிமாறனுக்கு இருக்கிறது. மணிமாறனின் பறை இசை வகுப்புகளில் பயின்று சான்றிதழும், தொல்லிசை சுடர் விருதும் வென்றவர்தான்
இங்கிரிய, றைகமையைச் சேர்ந்த முருகேசு விக்னேஷ்வரன், பறை இசை மீதான காதலில் அதனை தமது தோளில் ஆசையாய் சுமந்து விக்னேஷ்வரன் பட்ட அவலங்கள் ஏராளமாம். அதுபற்றி அவர் எம்மிடம் சொன்ன விடயங்கள் சுவாரஸ்யமானவை. – “பறை மீதான எனது ஆர்வம் அதனை வெறின்னு கூட சொல்லலாம், ஆனால், அதனை என் தோளில் சுமக்க நான் ரொம்ப ரொம்ப அவமானங்களை சந்தித்திருக்கிறேன். பறை ஒரு குறிப்பிட்ட சாதிக்கான கருவின்னு அதனை அடையாளப்படுத்திருப்பதால் நான் அதனை தொட்டபோது எனது குடும்பத்தினர் முகம் சுளித்தார்கள். நமக்கான தொழில் இது இல்லன்னு எனது
குடும்ப உறுப்பினர்கள் என்னை வாய்க்கு வந்தபடி திட்டினார்கள், நான் அதனை கண்டுகொள்ளாமல் கடந்தேன், என் எதிரே வந்த என் சித்தப்பா என்னை “சீ”ன்னு காறித் துப்பினார்.அது மட்டுமல்ல, ஒரு முறை எனது மனைவியை அழைத்துக்கொண்டு ஒரு திருமண வீட்டுக்கு போனேன். அங்கே வந்த ஒருவர் என்னைப் பார்த்து சத்தமாக “ஏய் இங்கே பாருடா நம்ம சாதிக்குள்ளே ஒரு “....” டேய் பறையடிக்கிறவன் “....” பேண்ட் அடிக்கிறவன் “.....” “அப்போ நீ யாருடா?" என்று என்னைப் பார்த்து கேட்டாருங்க! எனக்கு ரொம்ப அவமானமாப் போச்சு. ஆனாலும் நான் சரஸ்வதியா மதிக்கிற அந்த பறைக்காக அந்த அவமானத்தை தாங்கிக்கொண்டேன்”ன்னு சொல்லும் விக்னேஷ்வரன்,
“எனது பறை இசை ஆர்வத்துக்கு பக்கபலமாக இருப்பவர் எனது அப்பாதான், அவரு ஒரு காலத்துல இசைக் கலைஞரா இருந்திருக்கிறாரு. அதனால் அவருக்கு பறை மீது சாதி சாயம் பூசுவதில் உடன்பாடில்லை.
புத்தர் கலைக்குழுவின் தலைவர் தோழர் மணிமாறன் ஐயாவிடம் பறை பயின்றது என் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு. அவரிடம் பறை பயின்றதுக்கு பிறகுதான் எனது பறை இசைப் பயணம் ஒரு புதிய பரிணாமத்தில் பயணிக்கத் தொடங்கியது என்பதை மறுப்பதற்கில்லை.
பறை இசையை ஓர் இழிவான இசைக் கருவியாக மக்கள் பார்ப்பதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. இந்த பறை இசைக் கருவியை இசைத்தவர்கள் இந்த தொழிலுக்கு முறையாக ஊதியம் எதனையும் வாங்காமல் வெறுமனே சாராயத்திற்காகவும், பீடிகளுக்காகவுமே இசைத்திருக்கிறார்கள்.
அதனால் நம்மவர்கள் இந்த இசைக்கு உரிய கௌரவம் வழங்கவில்லை, அதனை ஒரு கேவலமான இசைக் கருவியாக பார்த்திருக்கிறார்கள். இந்த தவறான பார்வையை எனது தலைமையிலான பறை இசைக்குழு மாற்றியமைத்திருக்கிறது, எனது குழுவில் பறை இசைப்பவர்களுக்கென்று சீருடை, கால் சலங்கை உள்ளிட்டவைகளை வழங்கியிருக்கிறேன். அதோடு நிகழ்வுகளுக்கான கட்டணமும் கௌரவமாக பெறுகின்றோம், சாவு வீட்டில் இசைப்பதற்காக பதினைந்தாயிரம் வாங்குகின்றோம், அதேபோல் கலாசார நிகழ்வுகள், கோயில் திருவிழா, குல தெய்வ வழிப்பாட்டு நிகழ்வுகள் என்று பறை வாசிக்கும் நேரத்தையும் நாட்களையும் பொறுத்து கட்டணம் நிர்ணயிக்கப்படும்.
நாம் செய்யும் வேலைக்கு கௌரவமான கட்டணம் கேட்கலன்னா யாரும் அந்த தொழிலுக்கு மதிப்பு கொடுக்கிறதில்லை. அதனாலதான் நாமும் பறை இசைக்கான கட்டணத்தை வேலைக்கு தகுந்தபடி வைத்திருக்கின்றோம்.
இனி பறை இசையை ஓர் இழிவான - தீண்டத்தகாத கருவியாக யாரும் பார்க்க முடியாது! அந்தக் காலம் மலையேறிவிட்டது."
என்று சொல்லும் விக்னேஷின் முகத்தில் மகிழ்ச்சி ரேகை படர்கிறது.
விக்னேஷ்வரன் சொல்வதுபோல், பறை இசை மீதான கறையை துடைக்கும் பணியில் பல முற்போக்குவாதிகள் முனைப்புடன் களப்பணியாற்றி வருகிறார்கள்.
சென்னையில் மார்கழியில் திருவையாறு கர்நாடக இசைக் கச்சேரிகள் தொடர்ச்சியாக நடைபெறும். இந்த நிகழ்வு நடைபெறும் மியூசிக் அகாடமியில் நாட்டுப்புற கலைகளை அரங்கேற்றுவது என்பது நினைத்துப் பார்க்கக்கூட முடியாத ஒரு விடயம், ஏனென்றால், கர்நாடக இசைக் கச்சேரிகளை குறிப்பாக, பிராமணர்கள் நடத்துவதால் அவர்களின் பார்வையில் நாட்டுப்புற இசை தீண்டத்தகாத ஒரு விடயமாக பார்க்கப்பட்டு வந்தது. எனவே, என்னதான் பண வசதி இருந்தாலும் நாட்டுப்புறக் கலை நிகழ்வுகளுக்காக அந்த அரங்குகளை வாடகைக்கு எடுக்க முடியாத ஒரு சூழல் இருந்தவந்த நிலையில் அதனை ஆளும் திமுகவின் ஆதரவுடன் அந்த பழைமையான கோட்பாடு தகர்க்கப்பட்டு, 'மார்கழியில் மக்கள் இசை” என்றப் பெயரில் பறை இசை உள்ளிட்ட கிராமிய கலைகளை இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கமைப்பு செய்து நடத்தியிருந்தது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், இயக்குநர் பா.இரஞ்சித் ஆகியோர் பறை இசைத்து நிகழ்வினை தொடங்கிவைத்திருந்தார்கள்.
அதோடு, சமீபத்தில் மணிமாறனின் பறை இசை நிகழ்ச்சியில் ஒரு பறை இசை பெண்ணின் கால் சலங்கையை அந்தப் பெண்ணின் காலைத் தொட்டு சலங்கையை கனிமொழி கட்டி விட்ட புகைப்படம் வைரலாக பரவியது.
இத்தனை காலமாக இருந்துவந்த பறை இசை மீதான நீண்டகால ஒடுக்கு முறை, தற்போதைய புரட்சி பிரபலங்களால் தகர்க்கப்பட்டு வருவது, பறை இசைக்கு ஒரு ஆரோக்கியமான காலம் மலர்ந்துள்ளது என்பதை நமக்கு உணர்த்துகிறது.🔴
பறை இசை கச்சேரிகளை நடத்த விரும்பும் அன்பர்கள் பறை இசை கலைஞர் விக்னேஸ்வரனுடன் தொடர்பு கொள்ளலாம்.
அவரின் தொடர்பு இலக்கம்: 076 057 7830
一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一
எனது கட்டுரைப் பதிவு, தமிழன் நாளிதழில் 2022, ,ஜூன், 26 ம் திகதி வெளியானது.







பறை இசை தொடர்பான 🥁🥁🥁சிறந்த சிந்தனையை தொகுத்து வழங்கியமைக்கு நன்றி....🙏🙏🙏
ReplyDeleteதங்களின் அன்பான கருத்து பகிர்வுக்கு நன்றி மேனன்.
Delete