Thursday, May 19, 2022

மாயன்கள் தமிழர்களா?




மாயன் என்ற இனம் இன்று வரை மர்மங்கள் நிறைந்த இனமாகவே இருந்து வருகிறது. மாயன்களின் கலண்டரின்படி இந்த உலகம் 2012லேயே அழிந்து விடும் என்று ஒரு சாரார் அடித்துச் சொன்னக் கதைகளை நாம் கேட்டிருக்கின்றோம்.
ஆனாலும் மாயன் கலண்டரில் சொல்லப்பட்ட இரகசியம் இன்று வரை விடைத் தெரியாத புதிராகவே இருந்து வருகிறது.
மாயன்கள் பற்றிய பல புதிர்கள் இன்று வரை உலகம் முழுவது உலா வந்துக்கொண்டுதான் இருக்கிறது. அதில் ஒன்றுதான் மாயன் என்போர் யார் அவர்கள் உண்மையிலேயே அமெரிக்க மண்ணின் பூர்வீக குடிகளா அல்லது தமிழகத்தைச் சேர்ந்த ஆதி திராவிடர்களா என்ற கேள்வியும் பலராலும் இன்று வரை பேசப்பட்டு வருகிறது.

மாயன் இனத்தோடு தமிழர்களை இணைத்து பேசுவதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. தமிழகத்தில் கீழடியில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகளின்படி தமிழர்கள் மிகவும் தொன்மையான இனத்தவர்கள் என்றும் அவர்கள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே நாகரீகத்தின் உச்சத்தில் இருந்திருக்கிறார்கள் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே பெரிய கண்டமாக இருந்த குமரிக்கண்டத்தின் மீது  ஒரு மிகப் பெரிய விண் கல் வீழ்ந்ததால் அதனை கடல் கபளீகரம் செய்து விட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள் இந்த பேரவலத்தின் போது அங்கிருந்த மக்கள் மரக் கலங்களின் உதவியோடு பல் வேறு நாடுகளை நோக்கி புலம் பெயர்ந்து சென்றார்கள் என்று,
‘கர்ணா மிருத சாகரம்’ என்ற இசை நூலை இயற்றிய ஆபிரகாம் பண்டிதரும், ஐயா வைகுந்தரும் பிற்காலத்தில் வந்த தேவநேய பாவணரும் இதனை உறுதிப்படுத்தி சொல்கிறார்கள்.

அதோடு கிரேக்க வரலாற்று ஆய்வாளரான ஹிரோடெட்ஸ் என்பவர் ‘ஹிஸ்ட்ரி’ என்ற நூலில், தமிழர்கள் பழங்காலத்திலேயே கடல் வழி பயணம் மேற்கொள்வதில் திறமையானளர்களாக இருந்தவர் என்றும் அவர்கள் பல்வேறு நாடுகளுக்கு கடல் வழி மற்றும் நில வழியாக பயணம் செய்ததாகவும், பலர் தாயகம் திரும்பாமல் அங்கேயே குடியேறி விட்டதாகவும் அந்தப் புத்தகத்தில் எழுதியிருப்பதாக சொல்லப்படுகிறது.


தமிழில் குமரிக் கண்டம் என்பதை ஆங்கிலேய வரலாற்று ஆய்வாலரான ஸ்கொட் ஹெலியட் என்பவர் லெமூரியா என்று குறிப்பிடுகிறார்.
குமரிக் கண்டத்தை கடல் கொண்டது என்பதை நமது சங்க இலக்கிய நூலான சிலப்பதிகாரமும் கலித்தொகையும் அதற்குப் பிறகு வந்த அடியார்களுக்கு உரித்தான நல்லாரின் விளக்க உரை நூலும் உறுதியாக குறிப்பிடுகின்றன.
குமரிக் கண்டம் அழிந்த போது மரக்கலங்களில் தப்பிய தமிழர்கள் நீண்ட தூர பயணத்தில் அவர்கள் வட அமெரிக்க நிலப்பரப்பில் தரை இறங்கியிருக்கலாம். அங்கே இறங்கியவர்கள் தமக்கான வாழ்விடங்களை அங்கேயே அமைத்துக் கொண்டிருக்கலாம். என்றொரு கோட்பாடு உண்டு.
அவர்கள் வாழ்ந்த இடம்தான் இன்றைய மெக்சிகோ. சுமார் 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக செழுமையாக வாழ்ந்த இவர்கள் கணிதவியல், வானவியல், கட்டடக்கலை உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கினார்கள். அவர்கள் கி.பி.16ம் நூற்றாண்டு வரையும் தமக்கான அடையாளத்துடன் வாழ்ந்ததாக ஆய்வுகளிலிருந்து தெரிய வருகிறது.

mani srikanthan
இதன் அடிப்படையிலேயே மாயர்கள் திராவிடர்களின் பரம்பரையாகத்தான் இருக்க வேண்டும் என்பது சில இந்திய வரலாற்று ஆய்வாலர்களின் கருத்து.
மெக்சிகோவில் வாழ்ந்த இந்த பேரினம் ஸ்பானிய மக்களின் வருகையை அடுத்து அழிந்து போகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பாக ஹொலிவூட்டில் வெளியான ‘அப்பகலிப்டோ’ படத்தின் கடைசி க்ளைமக்ஸ் காட்சியில் ஒரு கப்பல் மாயன்கள் வாழ்விடத்தில் தரை தட்டி நிற்கும். அது ஸ்பானிய கப்பல்தான் என்பதை படத்தின் இயக்குநர் மெல்கிப்ஸன் அழுத்தமாக சொல்லியிருப்பார். அந்தக் காட்சியோடு படம் நிறைவடையும்.
நிஜத்திலும் அப்படிதான் நடந்து இருக்கிறது. ஸ்பானியர்கள் மாயன் இனத்தவர்களில் பல லட்சம் பேரை கூண்டோடு அழித்தாகவும். எஞ்சியவர்களை கிருஸ்தவத்துக்கு மதம் மாற்றியதாகவும் சொல்லப்படுகிறது.இன்று அந்த மக்களில் சிலர் தமது பாரம்பரிய அடையாளங்களை இழந்து மெக்ஸிகோ, கவுதமாலா பகுதிகளில் வாழ்ந்து வருகிறார்கள்.
மாயன்கள் தமிழர்களைப் போலலே கருமை நிறத்திலும், குள்ளமான, திடகாத்திரமான, தடித்த உதடுகளுடன் தமிழர்களின் உருவ ஒற்றுமையிலும் ஒத்துப் போகிறார்கள். அதோடு அவர்கள் மலையோரங்களில் வாழ்ந்து இருக்கிறார்கள். முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பியே அவர்களின் வாழ்வாதாரம் இயங்கியிருக்கிறது. தமிழர்களைப் போலவே அவர்களின் முக்கியமான தானியமாக சோளம் இருந்திருக்கிறது.
தமிழர்கள் பயன்படுத்திய அதே ஏர்கலப்பையை மாயன்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதோடு முக்கியமாக பானை, அம்மிக் குலவி, சட்டி உள்ளிட்டவைகள் பயன்பாட்டில் இருந்திருக்கின்றன.
கீழடி ஆய்வில் கிடைத்த மண் சட்டிகளில் உள்ள ஓவியங்களைப் போலவே மாயன்கள் பயன்படுத்திய மண் பாண்டங்களில் ஓவியங்கள் அமைந்துள்ளன.
பண்டைய தமிழர்கள் சூரியனை வழிப்பட்டவரகள். அவ்வாறே மாயன்களும் சூரியனையே வழிப்பட்டு இருக்கிறார்கள்.
உடலில் பச்சை குத்துவது இந்தக் காலத்தில்  ஃபேஷனாக இருந்தாலும் பண்டைய நாகரீத்தில் பச்சைக் குத்துவது தமிழர்களின் பாரம்பரிய கலாசாரமாக இருந்து வந்திருக்கிறது.
அதேப் போலேவே மாயன்களும் பச்சைக் குத்துவதை தமது பாரம்பரிய கலாசாரமாக கொண்டிருந்தவர்கள். அப்பகலிப்டோ படத்தில் வரும் மாயன்கள் நெற்றியில் பொட்டு வைத்திருப்பதை நீங்கள் அவதானித்து இருப்பீர்கள். இதெல்லாம் அவர்கள் திராவிட இனத்தவர்கள் என்பதையே பறைசாற்றி நிற்கிறது.

சூரிய கடவுளுக்காக மாயன்கள் கட்டியுள்ள கோயில்கள் தஞ்சை பெரிய கோயிலுடன் ஒத்துப்போவதாகவும் சொல்லப்படுகிறது.
மாயன்களின் முக்கிய நகரங்களில் ஒன்றாக விளங்கியது பலே, இங்கு மாயன்களால் எழுப்பப்பட்டுள்ள கோயில்களில் பளிங்கு போன்ற கற்களைப் பயன்டுத்தியிருக்கிறார்கள்.
இந்தக் கோயில்களில் தமிழ்நாட்டில் உள்ளது போலவே சுரங்கப் பாதைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

யுகத்தான் நகரத்தில் தமிழகத்தின் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைப் போன்று ஆயிரங்கால் மண்டபத்தையும் மாயன்கள் அமைத்திருக்கிறார்கள்.
மெக்ஸிகோவின், சியாபஸ் மாகாணத்தில் உள்ள கோணம்பக்கில் தமிழக கோவிலான சித்தன்னவாசல் வடிவில் ஆலயம் அமைக்கப்பட்டு அதேப் போலவே சுவர் ஓவியமும் வரையப்பட்டுள்ளது.
அதில் குறவஞ்சி, கதகளி, ஊர்வலங்கள் உள்ளிட்ட ஓவியங்கள் கோணம்பாக் கோயில் சுவர் ஓவியங்களில் இடம் பெற்றிருப்பது தனிச் சிறப்பு.
இதேவேளை யானைகளே இல்லாத அமெரிக்க கண்டத்தில் இந்திய யானைகளின் சிற்பங்களை மாயன்கள் அமைத்திருக்கிறார்கள்.
மாயன்களின் கட்டடங்களில் யானைகள் விதவிதமான தோற்றங்களில் காட்சியளிக்கின்றன.
அதோடு இந்தியர்களின் சிறப்புகளில் ஒன்றான தாமரை மலர்களை தமது கட்டிடங்களில் மாயன்கள் வடித்திருக்கிறார்கள்.தமிழ் மன்னர்களைப் போலவே வெண்குற்றக் குடையை மாயன்களும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
தமிழர்களின் வாழ்வியலோடு கலந்திருக்கும் பழக்க வழக்கங்கள் மாயன் சமூகத்திடம் காணப்படுவதாலும் மேலும் அவை பெரும்பாலும் ஒத்துப்போவதாலுமே மாயன்கள் பண்டைய திராவிடர்களாக இருக்க வேண்டும் என்பது ஆய்வாளர்களின் கணிப்பாக இருக்கிறது🔴

Saturday, April 23, 2022

கோயில் சொல்லும் கதைகள்- 1

 

மணி  ஸ்ரீகாந்தன்

சித்தர்களின் ஜீவ சமாதிகளுடன் அமையப் பெற்றுள்ள திருக்கோயில்கள் இந்தியாவில் அதிகமாக காணப்படுகின்றன.
இலங்கையில் ஓரிரு இடங்களில் குறிப்பாக வடக்கு, கிழக்கு பகுதிகளில் ஜீவ சமாதிகளுடன் அமையப் பெற்றுள்ள சில கோயில்கள் இருப்பதாக சொல்கிறார்கள்.
ஜீவசமாதி என்றால் உயிருடன் சமாதியாவது என்று பொருள். ஜீவன் என்பது உயிர். சமாதி என்றால் கட்டிடம் என்றோ, புதைத்தவர்களின் மேல் எழுப்பப்படும் கட்டுமானம் என்றோ கருத வேண்டாம்….. சமாதி என்பது சம்- ஆதி என்று பொருள் படும். அதாவது மனம்- ஆதி. ஆத்மாவானது உடலை அடையும் போது எவ்வளவு தூய்மையாக இருந்ததோ அதே தூய்மையை மீண்டும் பெற்று உன்னத நிலையை அடைவது என்று பொருள்.



குறிப்பாக சித்தர்களே ஜீவ சமாதி நிலையை அடைவார்கள்.உலகில் கடவுளை யாரும் நேரடியாக பார்க்க முடியாது. அதனால். நமது கோரிக்கைகள் கடவுளை அடைய ஒரு கருவியாக இருப்பவர்கள்தான் சித்தர்கள். இன்னும் சொல்லப் போனால், கடவுளிடம் கேட்பதை, சித்தர்களே முன்வந்து நமக்கு அளிப்பார்கள் என்பது  அசைக்க முடியாத நம்பிக்கை.
சித்தர் என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்று பொருள். சிவத்தை நினைத்து அகக்கண்ணால் கண்டு, தியானித்து தரிசனம் செய்து, ஆத்ம  சக்தியை எழுப்பி, தெய்வீக செயல்களையும், நினைத்த காரியங்களையும் செய்வர்கள்தான் சித்தர்கள்.


இப்படி அதித சக்தி கொண்ட சித்தர்கள் தமிழர்கள் மத்தியில் நூற்றுக்கணக்கானோர் வாழ்ந்திருக்கிறார்கள்.
இவர்களில் 18 பேர்தான் தலையாய சித்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அருளும், அன்பும், சிவமும், அளவற்ற சக்தியையும் ஒருங்கே பெற்றுள்ள அந்த 18 சித்தர்களின் ஜீவ சமாதிகள் இந்தியாவில் பல்வேறு இடங்களில் அமையப்பெற்றிருந்தாலும் தமிழகத்திலேயே அதிகமான தலையாய சித்தர்களின் ஜீவ சமாதிகள் அமையப்பெற்றிருக்கின்றன.

இலங்கையில் தென் பகுதியில் குறிப்பாக இந்திய வம்சாவளி தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் ஜீவ சமாதியுடன் கோயில்கள்  உள்ளதா என்று தேடிப் பார்த்ததில் களுத்துறை, மாவட்டத்தில் அமைந்திருக்கும் இங்கிரிய, றைகமை தோட்டத்தில் ஒரு கோயில் இருப்பதாக கேள்விப்பட்டு அந்தப் பகுதிக்கு ஒரு விசிட் அடித்தோம்.
70பது வருடங்களுக்கு மேல் புதர் மண்டிக் கிடந்த அந்த ஜீவ சமாதி ஆலயத்தை சில தன்னார்வ இளைஞர்கள் புனர்நிர்மாணம் செய்து இருக்கிறார்கள்.
நொண்டி அழகர் திருக்கோயில் என்ற பெயரை கொண்டிருக்கிறது அந்த ஆலயம்.
ஆலயத்தில் சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாக கருதப்படும் ஒரு பிரமாண்டமான ஆலமரம் முதிர்ந்த விருட்சங்களுடன் மிரட்டுகிறது, அதன் அருகிலேயே ஒரு சமாதி. ஆலமர வேர்களின் ஆக்கிரமிப்பில் சில பகுதிகளே எட்டிப்பார்த்தப்படி காட்சி தருகிறது.
ஆலயத்தில் மூலவராக சமீபத்தில் அமைக்கப்பட்ட அழகரின் திருவுருவம் வெட்ட வெளியில் பிரமாண்டமாக நிமிர்ந்து நிற்கிறது. அதன் கீழ் நம் முன்னோர்கள் வழிப்பட்ட கருங்கல் அழகர் சாமி காணப்படுகிறது. அதன் அருகிலேயே வழிப்பிள்ளையார்.
சமாதியின் முகப்பை மறைத்து வளர்ந்திருக்கும் ஆல வேர்களின் வயது நூறைக் கடந்திருக்கும் என்பதை யாரும் சொல்லாமலேயே புரிந்துக்கொள்ள முடிகிறது.
சந்தனம்

“அந்தக் காலத்துல இந்தக் கோயிலை நொண்டிப் பிச்சை கோயிலுன்னும் நொண்டி அழகர் கோயிலுன்னும் சொல்லுவாங்க. அதுக்கு என்ன காரணம்னு எனக்கு தெரியாது” என்று சொல்லும் நடேசன் சந்தனத்திற்கு இப்போது 81 வயதாகிறது.
“எனக்கு அப்போ ஏழு வயதிருக்கும் அப்போதே இந்த ஆலமரமும் இந்தக் கோயிலும் இப்படியே இருந்தது. இது ஒரு ஜீவ சமாதியாதான் இருக்கணும் ஆனா இந்தியாவில இருந்து பிடிமண் கொண்டு வந்தும் இந்த இடத்தில் நிறுவி இருக்கலாம்.” என்று சொல்லும் சந்தனம், “நான் சின்னப் பையனா இருக்கும் போது அந்த சமாதியின் முகப்பு பக்கத்தில் விளக்கேற்றுவதற்கு இரண்டு வாயில்கள் போன்று சிறிய அளவில் அமைக்கப்பட்டிருந்தது, அதில்தான் விளக்கேற்றுவார்கள். 

முகப்பு பக்கத்தில் ‘கரூர் கிழவி’ என்று எழுதியிருந்ததை நான் பார்த்திருக்கிறேன் அதுவும் முழுமையாக இல்லாமல் அப்போதே சிதிலமடைந்தே காணப்பட்டது. வள்ளிப் பாட்டி என்ற மூதாட்டிதான் இந்தக் கோயிலை அந்தக் காலத்தில் நடத்தி வந்தார்.
வெள்ளி, செவ்வாய் நாட்களில் தவறாமல் சமாதிக்கும், அழகருக்கும் விளக்கேற்றி வழிப்படுவதை நான் பார்த்திருக்கிறேன்.


ஸ்ரீமா- சாஸ்த்திரி ஒப்பந்தத்தில் வள்ளிப்பாட்டி இந்தியாவுக்கு போகும் போது அவர் வாழ்ந்த வீட்டையும் நாலு தென்னை மரத்தையும் அந்த குடியிருப்பு பகுதிகளில் வாழ்ந்த மாரியப்பன்(செட்டி) என்பவருக்கு தானமாக கொடுத்து விட்டு ‘தென்னை மரத்துல கிடைக்கும் தேங்காய்களை விற்று அதில வார பணத்துல எண்ணை வாங்கி அழகருக்கும், சமாதிக்கும் தவறாமல் விளக்கு போடுன்னு சொல்லிட்டுப் போச்சு! நான் பக்கத்து வீட்டுல குடியிருந்ததால அந்த சம்பவத்தை நான் நேரிலேயே பார்த்தேன்”ன்னு சொல்லும் சந்தனம் ஒரு அமானுஷ்யமான சம்பவத்தையும் சொல்கிறார்.

ராஜம்மா

“அந்தக் காலத்துல நாங்க வாழ்ந்த பகுதிகளில அழகரோட நடமாட்டம் இருந்ததாகவும். நடுநிசி வேளைகளில் அழகர் நகைகளையும், சலங்கைகளையும் கிலோ கணக்குல போட்டுக்கிட்டு குடியிருப்பு பகுதிகளில் ஜல்…ஜல்லுன்னு நடந்து சென்றதை எனது தாத்தா பெருமாள் கங்காணி தூக்கத்தில் பல தடவைகள் அசரீரியாக கேட்டதாக அவர் சொல்லக் கேட்டிருக்றேன்.”என்று சொல்லி சந்தனம் சிலீர்த்துப் போகிறார்.
சந்தனம் சொல்லும் தகவல்களின்படி ‘கரூர் கிழவி’ என்பவரின் ஜீவ சமாதிதான் அழகர் கோயில் சமாதி என்று திட்டவட்டமாக சொல்லிவிட முடியாது. தமிழில் ஆண், பெண் என்பதை சங்ககாலத்தில் கிழவன்,கிழவி என்றுதான் அழைத்திருக்கிறார்கள். இப்போதுதான் அந்த வார்த்தை வயதானவர்களை குறிக்கும் வார்த்தையாக மாறியிருக்கிறது.
எனவே கரூர் கிழவி, கரூர் சித்தர் பெண்ணாக இருந்திருக்கலாம். கரூர் பகுதியில் நிறைய ஜீவ சமாதிகள் இப்போதும் நிறையவே காணப்படுகின்றன. அவற்றிலிருந்து பிடிமண் கொண்டு வந்து றைகமையில் ஒரு ஜீவ சமாதியை நிறுவியிருக்கலாம் என்பது ஒரு ஐதீகம்

நிர்வாகக் குழுவினர் :
தியாகராஜா, மனோகரன்,சதாசிவம்,தனலட்சுமி,
மோகன்ராஜ்,லங்கேஸ்வரன்,கனகர், கமல்ரஜ்,


கரூரில் வாழ்ந்த கரூரார் என்ற சித்தர் தலையாய 18 சித்தர்களில் ஒருவர் அவரின் ஜீவ சமாதி இன்னமும் கரூரில் அமைந்திருக்கிறது. எனவே இந்த சமாதிக்கும் அதற்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்பு இருப்பதாகவே தோனுகிறது.
ஒருவேளை கரூரார் பரம்பரையில் வந்த ஒரு சித்தர் பெண்ணின் சமாதியாக கூட அழகர் ஆலய சமாதி இருக்கலாம்.
பெண் சித்தர்களுள் ஒளவையாரும், காரைக்கால் அம்மையாரும் மனித உடலோடு கயிலையங்கிரிக்குச் சென்று இறைவனை நேரில் தரிசித்தவர்களாம். இம்மண்ணுலகில் அவர்களைப் போல் மானிடப் பிறப்பெடுத்து, இறையை நாடிச் சென்று, இறை அனுபவத்தைப் பெற்று, சித்த நிலை கண்டு, ஜீவ முக்தி அடைந்த பெண் சித்தர்கள் பலருண்டு.
கண்ணன் ராஜம்மா (70) என்பவர் எம்மிடம் பேசும்போது, “வள்ளிப் பாட்டி இந்தக் கோயிலில் பூஜை செய்து வந்தததை நானும் பார்த்திருக்கிறேன்.
அந்தக் காலத்துல எங்க ஊரு மாரியம்மா கோயில்ல சாமிக்கு கரகம் பாலித்து சாமி ஆடி வரும் போது இந்த இடத்துக்கு வரும் சாமி ஆடிகள் ஒற்றைக் காலில ஆடுவதை பார்த்திருக்கிறேன். அது ஏன்னு எனக்கு தெரியல,” என்று புதிர் போடும் ராஜம்மா,
“புதர் மண்டிக் கிடந்த இடம் இப்போது புதுப் பொழிவு கண்டிருப்பது மகிழ்ச்சி தருகிறது” என்றார்.
கள்ளழகர், நரசிம்ம அழகர், கேள்விப்பட்டிருக்கிறோம் இது
என்ன புதுசா நொண்டி அழகர் என்பதற்கு விடை இல்லை
சேர நாட்டு துறைமுகங்களில் ஒன்றுதான் ‘தொண்டி’ இந்தப் பகுதியை கரூவூர்ச் சேரன் ஆட்சி செய்ததாக வரலாறுகள் குறிப்பிடுகிறது. எனவே ‘தொண்டி அழகர்’ என்பதே மருவி நொண்டி அழகராக மாறியிருக்கலாம் என்பது ஒரு சிலரின் கருத்தாக இருக்கிறது.

இதேவேளை தமிழக கிராமங்களில் அமையப்பெற்றுள்ள கோயில்களில் பெரும்பாலும் காரணப் பெயர்களாக அமையப் பெற்றுள்ளதை நாம் காணலாம் உதாரணத்துக்கு காட்டு மாரியம்மா, ஊத்துக் காட்டு மாரியம்மா, சடையாண்டி முனி, செவிட்டு முனி உள்ளிட்ட இந்த ஆலயங்கள் போன்றுதான் இந்த நொண்டி அழகரும் ஒரு வேளை ஊனமாக வந்த பக்தனின் நொண்டியை இந்த அழகர் குணப்படுத்தியிருக்கலாம் அல்லது தவறு செய்தவனுக்கு தண்டனையாக ஊனத்தை தந்திருக்கலாம் என்பதும் சிலரின் கருத்தாக உள்ளது.
சித்தர்களின்; ஜீவசமாதிகளில் சிவலிங்கம் பிரதிஸ்டை செய்யப்படுவது வழமையான ஒன்று இந்த அழகர் கோயில் சமாதியிலும் சிவலிங்கம் போன்று அமைக்கப்பட்டிருப்பதை காணலாம். தற்போது ஜீவ சமாதி ஆலயம் மீள் எழுப்பட்டுள்ளதால் இங்கிரியாவில்  நொண்டி அழகருக்கு மவுசு அதிகமாகி வருகிறது.🔴

Wednesday, April 20, 2022

உதயம் இளைஞர் மன்றத்தின் சித்திரை கிரிக்கெட் கொண்டாட்டம்.


 சித்திரை புத்தாண்டை சிறப்பிக்கும் முகமாக உதயம் இளைஞர் மன்றம் நடத்திய பெண்கள் மற்றும் 35 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான மாபெரும் கிரிக்கெட் போட்டி 16ம் திகதி ஏப்ரல், ஞாயிற்றுக்கிழமை காலை றைகம், மேற்பிரிவு, சரஸ்வதி பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.

இங்கிரிய, பிரதேச செயலக இளைஞர் மன்ற பொறுப்பதிகாரி  சின்தக்க மகேஸ் கங்கந்த மற்றும் செயலகத்தின் இளைஞர் மன்ற தலைவர் நுவான் சுஜீவ ரணசிங்க, உதயம் இளைஞர் மன்றத்தின் தலைவர் ராமராஜ் மனோ உள்ளிட்ட மன்ற உறுப்பினர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக ஹொரணை பிரதேச சபை உறுப்பினர்களான எம். நடராஜ், பொன். சரவணராஜா  உள்ளிட்டோருடன் தோட்ட தலைவர்கள் பெருமாள் ராமராஜ், தம்பிராஜா பிரசாத் மற்றும் சர்வதேச ஊடகவியலாளர் மணி ஸ்ரீகாந்தன், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் ஸ்ரீநாத் உள்ளிட்டோருடன் பெருந்திரளான இளைஞர், யுவதிகளும் கலந்து கொண்டிருந்தார்கள்.
நிகழ்வின் இறுதியில் வெற்றிப் பெற்ற அணிகளுக்கு, வெற்றிக் கிண்ணமும், சான்றிதழும் வழங்கப்பட்டது.