Wednesday, April 13, 2022

டைனோசர்களின் பரிணாமமா யாளி?



-மணி ஸ்ரீகாந்தன்.

கோயில் சிற்பங்களில் தவறாது இடம் பிடிக்கும் ஒரு மிருகம் யாளி. தமிழர்களின் கற்பனையில் உருவாக்கம் பெற்றதாகவே இந்த மிருகம் இதுவரை சித்தரிக்கப்பட்டுள்ளது.
சீனர்களின் அடையாளமாக இருக்கும் டிராகன், எகிப்தியர்களின் அடையாளமாக இருக்கும் பீனிக்ஸ் பறவை போன்று தமிழர்களின் அடையாளமாக ஏன் இந்த யாளி மிருகம் இருக்க கூடாது?
யாளி ஒரு கற்பனை கதாபாத்திர விலங்குதான் என்றாலும், இந்த யாளியின் தோற்றம் இந்திய பெரு நிலப்பரப்பில் அமைந்திருக்கும் அனைத்து கோயில்களிலும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இது தவிர இலங்கை, மலேசிய, பிஜி உள்ளிட்ட நாடுகளில் அமைந்துள்ள ஆலயங்களிலும் இந்த யாளி இடம் பெற்றிருக்கிறது.
யாளி ஒருவரின் கற்பனை படைப்புதான் என்றாலும், இதனை ஏன் எல்லோரும் பின்பற்றினார்கள், இந்திய பெரு நிலப்பரப்பில் உள்ள அனைத்து கோயில்களிலும், தேர்களிலும் இந்த யாளி எப்படி இடம் பெற்றது என்பதுதான் புதிராக உள்ளது.


ஆனாலும் சில வரலாற்று ஆய்வாலர்களின் கருத்துப்படி யாளி அழிந்து போன குமரிக்கண்டத்தில் வாழ்ந்த ஒரு இராட்சத விலங்காக இருக்க வேண்டுமாம்.
அந்தக் காலக்கட்டத்தில் வாழ்ந்த சக்தி வாய்ந்த ஒரு மிருகமாக இந்த யாளி இருந்திருக்க வேண்டும் என்பது ஒரு சாராரின் கருத்தாக உள்ளது.
யாளியை சங்க காலத்தில் வியாழம், சர்பம், அலி என்ற பெயர்களிலும் அழைத்திருக்கிறார்கள்.
இதுதவிர யாளிகளில் ஆறு வகையான யாளிகள் இருந்திருக்கின்றனவாம். இதில் சிம்மயாளி, மகரயாளி, கஜயாளி, நமனியாளி, பெருயாளி, யானையாளி உள்ளிட்டவைகளை கோயில் சிற்பங்களில் நாம் காணலாம்.
இந்த ஆறு வகையான யாளிகளில் மிகவும் பயங்கரமான யாளியாக சிம்மயாளியும், கஜயாளியும்  இருப்பதாகவும் இவை மிகுந்த சக்தி வாய்ந்தவை என்றும் சொல்லப்படுகிறது.
இந்த யாளிகளின் தோற்றத்தில் சிங்கத்தைப் போன்ற உடலமைப்பும் யானைகளின் தலையும் சேர்ந்ததாக இருக்கும், சிலவற்றில் சிங்க உடம்பும் ஆட்டின் தலையையும் இணைந்ததாக இருக்கும்.
இது தவிர சங்ககால தமிழர்கள் யாளிகளுக்கு தனியிடம் வழங்கியிருக்கிறார்கள். தஞ்சை பெரிய கோயில், மதுரை மீனாட்சி அம்மன் உள்ளிட்ட ஆலயங்களில் உள்ள தூண்களில் உள்ள யாளிகளை,  யாளி வரிசை என்றே அழைக்கின்றார்கள்.
ஒரு கற்பனை மிருகத்துக்கு ஏன் இந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்? ஒருவேளை இந்த மிருகம் உண்மையிலேயே இருந்திருக்குமோ என்பது கேள்விக்குறியும் இருக்கிறது.

ஆனாலும் சங்க இலக்கியம் யாளிகள் மிகவும் பயங்கரமான மிருகம் என்றும் அது யானையைக் கூட அடித்துக் கொன்று விடும் என்று சொல்கிறதாம்.
சில யாளி சிற்பங்களில் ஒரு போர் வீரன் யாளியை அடக்குவது போல சிற்பங்கள் உள்ளன. எனவே யாளிகளை போரில் பயன்படுத்தினார்களா என்ற சந்தேகமும் எழுகிறது.
யாளியை அடக்குபவன் ஒரு பெரிய மாவீரனாகவே இருந்திருக்க வேண்டும். சங்க இலக்கியத்தில் இதுப் பற்றி ஒரு குறிப்பு இருக்கிறதாம். அதாவது யாளியை அடக்குபவன் பேராற்றல் கொண்ட ஒரு மூலிகையை சாப்பிட்டால்தான் அதனை அடக்க முடியும் என்றும் அப்படியான வீரனை கஜகேசரி என்றும் சங்க இலக்கியம் குறிப்பிடுகிறதாம்.
ஒருவனை நேருக்கு நேர் மோதி வீழ்த்துபவன் வீரன் என்றும், போரில் நூறு பேரை வீழ்த்துபவன் மாவீரன் என்றும், ஆயிரம் யானைகளின் பலம் பொருந்திய யாளியை தனி ஒருவனாக மோதி வீழ்த்துபவன் கஜகேசரி என்றும் சங்க இலக்கியம் யாளியை வென்றவனுக்கு புகழாரம் சூட்டுகிறதாம்.
எனவே சங்கக்கால தமிழர்கள் கூறிச் சென்ற விடயங்களை வெறும் கற்பனை என்றோ விளையாட்டு என்றோ நாம் அவ்வளவு எளிதாக எண்ணிவிடவும் முடியாது. 

நாம் இன்றைக்கு அணு ஆயுதங்கள் பற்றியும் அணு குண்டுகள் பற்றியும் பேசிக் கொண்டு இருக்கின்றோம். ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த ஒளவைப் பாட்டி ‘அணுவைத் துளைத்து ஏழ் கடலைப்பகட்டிக் குறுகத் தரித்த குறள், என்று கூறியிருக்கிறார்.
ஒளவைப் பாட்டிக்கு என்னத் தெரியும், அவர் அப்படி என்ன படித்திருப்பார் என்று நாம்  சாதாரணமாக எண்ணிவிடத்தான் முடியுமா..?
எனவே சங்கத் தமிழர்களின் கருத்துகளை நகைப்புடன் கடந்து சென்றுவிட முடியாது.
‘இடும்படுபு அறியா வலம்படு வேட்டத்து வாள்வரி நடுங்கப் புகல் வந்து ஆளி உயர் நுதல் யானைப் புகர் முகத்து ஒற்றி...’ என்று அகநானூறு பாடல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் புலவர் நக்கண்ணையார்.
அதாவது, வாள் போன்ற வரிகளை உடலில் உடைய புலியானது தான் அடித்து வீழ்த்தும் விலங்குகள் இடப்பக்கம் விழுந்தால் அதை ஒருபோதும் சீண்டாத தன்மை உடையது. அத்தகைய புலியே பயந்து நடுங்கும் அளவிற்கு ஆளி அதாவது யாளியானது பாய்ந்து வந்து, உயர்ந்த நெற்றியையையுடைய யானையின் முகத்தில் தாக்கி அதன் வெண்மை நிறமான தந்தத்தையே பெயர்த்தெடுக்கும் ஆற்றல் வாய்ந்தது என்பது இதன் பொருள்.
இதே போன்று சங்க இலக்கிய நூலான நற்றிணையிலும்  இள நாகனார் பாடிய ஒரு பாடல் இடம்பெற்றுள்ளது.
“அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து,
ஆளி நன் மான், வேட்டு எழு கோள் உகிர்ப்
பூம் பொறி உழுவை தொலைச்சிய, வைந் நுதி
ஏந்து வெண் கோட்டு, வயக் களிறு இழுக்கும்
துன் அருங் கானம்’
என்று முடிகிறது அந்தப் பாடல்,
யாளிகள் பெரும்பாலும் சிங்கம் போன்ற உடல் மற்றும் முகத்துடன், முகத்தில் யானையின் துதிக்கை போன்ற உறுப்பையும் பெற்றிருக்கும். உடல் சிம்மமாக இருந்தாலும் சிலவகையில் யாளியின் முகங்கள் மட்டும் வேறுவேறு விலங்குகளாக மாறுபாடு அடைகின்றன.



யாளிகள் மூன்று வகையாகக் கூறப்படுகின்றன.  சிம்ம யாளி எனப்படும் சிங்க முக யாளி, மகர யாளி எனப்படும் ஆடு முக யாளி மற்றும் யானை யாளி. ஆனால், எல்லா யாளிகளின் வடிவத்தையும் பாம்பின் வால் தோற்றமே முழுமை செய்கிறது.
யானையின் பலத்தையும், சிம்மத்தின் வேகம் மற்றும் ஆற்றலையும், பாம்பின் பய காரணியையும் ஒருங்கே கொண்டது யாளி என்பது இது உணர்த்தும் தத்துவமாம்.
சில ஆண்டுகளுக்கு முன்னாள் ஆனந்த விகடனில் எழுத்தாளர் வெங்டேசன் எழுதிய ‘வேல் பாரி’ என்ற தொடரில் கபிலரும், பாரியும் பேசிக்கொள்வது போல ஒரு உரையாடல் வரும்
அதில், கோயில்களிலும், சங்க இலக்கியத்திலும் வரும் யாளி என்ற மிருகம் உமையிலேயே வாழ்ந்ததா என்பது பற்றிய உரையாடலாகவே அது அமைந்திருக்கும், அதில் கபிலர் “யாளி என்ற மிருகம் வாழ்ந்திருக்க வாய்ப்பில்லை”ன்னு மறுப்பார், அதற்கு பாரி “யாளி உண்மையிலேயே வாழ்ந்த மிருகம்தான்” என்று கூறி அதற்கான ஆதாரம் ஒன்றை குறிப்பிடுவார்.  
அவர் வாழ்ந்த பகுதியில் ‘ஆழி மலை’ என்று ஒரு மலைப்பகுதி உள்ளதாம். அந்தப் பகுதிக்குள் யானைகள் செல்வதே இல்லையாம், ஏனென்றால் அந்தப் பகுதியில்தான் யானைகளை அடித்து சாப்பிடும் யாளிகள் வாழ்ந்ததாகவும். அதனால் இன்றுவரை யானைகளுக்கு ‘ஆழி மலை’ மீது ஒரு பயம் இருப்பதாகவும் மிருகங்களில் யானைகளுக்கு ஞாபக சக்தி அதிகம் என்பதால் யாளிகள் பற்றிய அச்சம் யானைகளின் இரத்தத்தில் இன்றுவரை கலந்துள்ளதாகவும் குறிப்பிடுகிறார்.


குமரிக்கண்டம் பற்றிய குறிப்புகளை இளங்கோவடிகளே அதிகமாக எழுதியிருக்கிறார். குமரிக்கோடு எனும் ஒரு பெரிய காட்டு மலைப் பகுதியை அவர் குறிப்பிடுகிறார். யாளி அந்த காட்டுப் பகுதியில் வாழ்ந்து மறைந்திருக்கலாம் என்பது ஒரு சில ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
யாளி டைனோசரை விடவும் பலம் பொருந்திய ஒரு மிருகமாக இருந்திருக்கலாம் என்றும் யாளி ஒரு இறந்து போன யானையை தன் கால் நகத்தினால் சுலபமாக தூக்கி வருவது போன்றும் கோயில் சிற்பங்களில் செதுக்கியிருக்கிறார்கள். அவ்வளவு பெரிய அடங்கா மிருகத்தையே தமிழர்கள் அடக்கியிருக்கிறார்கள் என்பதையும் கோயில் சிற்பங்களே நமக்கு பறைசாற்றுகிறது.
பழங்காலத்தில் வாழ்ந்த ஆதிச் சோழர்களே இந்த மிருகத்தை அடக்கி ஆண்டதாகவும் அதனாலேயே கோயில்களில் அவற்றுக்கு தனியிடம் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் உள்ள ஆயிரம் தூண்களிலும் இந்த யாளிகளின் சிற்பங்கள் காணப்படுகிறன்றன. எனவே இல்லாத ஒரு மிருகத்துக்கு எதற்காக இப்படியொரு முக்கியத்துவத்தை வழங்கியிருக்கிறார்கள் என்பது இன்று வரை விடை தெரியாத கேள்வியாகவே இருந்து வருகிறது.
ஆரம்பத்தில் டைனோசர் பற்றிய கதைகள் இருந்தாலும் அதனை யாரும் நம்பவில்லை, அதுவும் ஒரு கற்பனை கதைதான் என்று கூறிவந்த நிலையில்தான் அதற்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு டைனோசர் என்ற பிரமாண்டமான உயிரினம் இந்த மண்ணில் வாழ்ந்தது நிரூபிக்கப்பட்டது.
அதேப் போல் இந்த யாளிகள் பற்றிய ஆராய்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் அதுவும் கடலுக்குள் மூழ்கிக்கிடக்கும் குமரிக் கண்டத்திலிருந்து தொடங்கப்பட வேண்டும் என்பதே வரலாற்று ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.  சில சமயம் தமிழகத்தில் வாழ்ந்து மறைந்திருக்கக்கூடிய டைனோசர்கள் தான் யாளியாக குறிப்பிடப்படுகிறதோ என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். 🔴 

No comments:

Post a Comment