Tuesday, May 31, 2022

தேர்வு என்ற பெயரில் குழந்தைகளை வதைக்க வேண்டாம்!


அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்

என்று சொல்கிறது வள்ளுவனின் குறள். 'அழிவு வராமல் காக்கும் கருவியாகும் அறிவு. அது பகைவரால் அழிக்க முடியாத கோட்டையுமாகும். என்று கல்வியின் முக்கியத்துவத்தை இந்தக் குறள் பறைசாற்றி நிற்கின்றது. கல்விதான் நம் சமூகத்தில் மாற்றத்தை கொண்டுவரப் போகும் பேராயுதம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதன் அவசியம் உணர்ந்துதான் கல்வி அனைவருக்கும் போய்ச் சேரவேண்டும் என்பதற்காக பல நாடுகள் கல்வியை இலவசமாக வழங்கி வருகின்றன.
“பாறையை உடைத்து நீர்
எடுப்பதால்ல கல்வி
ஓடையைத் தோண்டி நீரெடுப்பது
போன்றதுதான் கல்வி"

என்பது போன்று கல்வி மிகவும் இலகுவானதாக இருக்க வேண்டுமே தவிர அது கற்கும் மாணவனை மன உளைச்சளுக்கு ஆளாக்கும் ஒரு வில்லனாக அமைந்துவிடக் கூடாது. ஆனால் இன்று நம் நாட்டில் நடைபெறும் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகளை அவதானிக்கும் போது அப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது. 5ம் ஆண்டு படிக்கும் பத்து வயது சிறுவன் மீது ‘ஸ்கொலசிப்’ எனும் பெருஞ் சுமை ஏற்றப்பட்டு விடுகிறது.

அய்யாக்குட்டி தேவராஜா

மூன்றாம் ஆண்டிலிருந்தே அந்த மாணவனை ஸ்கொலசிப் பரீட்சைக்கு ஆயத்தம் செய்வதற்காக அந்த குழந்தை பருவத்தின் சுதந்திரம் பறிக்கப்பட்டு பெற்றோர்களால் மாணவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள், காலையில் எழுந்து 04 மணி தொடக்கம் அன்றிரவு 09 அல்லது 10 மணி வரையும் மாணவர்களுக்கு கற்பித்தல்கள், பாடசாலை, பிரத்தியேக கல்வி நிலையங்களில் நடைபெறுகிறது. இதனால், கல்வி இலகுவானது என்ற கோட்பாடு உடைக்கப்பட்டு அது மிகவும் கடினமானது, கொடுமையானது எனும் கருத்து ஒரு மாணவனின் எண்ணத்தில் பதிந்து விடுகிறது. விளையாடுவதற்கு, சக உறவினர்களுடன் கதைத்துபேசி மகிழ்வதற்கு, விரும்பிய  இடங்களுக்கு சென்று வருவதற்கு, விரும்பியதை செய்வதற்கு அனுமதியற்றவர்களாக வகுப்பு வகுப்பு, படிப்பு, படிப்பு என்று அதனுள்ளே சிக்கி தமது சுயவிருப்பு வெறுப்பை அடைய முடியாதவர்களாக பெற்றோர்களின் திணிப்பு, போட்டி மாணவர்களின் மனதினை நொறுக்குகின்றது.
காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு

படிப்பு முக்கியம். அதற்காக எப்போது பார்த்தாலும் படித்துக் கொண்டே இருந்தால் மனம் மரத்துப் போய் விடும். மாலை முழுதும் விளையாட்டு - என்று வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா. படிப்பு, பாட்டு, உடல் உழைப்பு என்று இருக்க வேண்டும். அறிவும், மனமும் மட்டும் வேலை செய்தால் போதாது. உடலும் வேலை செய்ய வேண்டும். இல்லை என்றால் வேண்டாத நோய் எல்லாம் வந்து சேரும் என்று சிறுவர்களுக்கான அறிவுரையை மகாகவி பாரதி இப்படிச் சொல்லியிருக்கிறார். இந்த புலமைப் பரிசில் பரீட்சையை இலவசக்கல்வியின் தந்தையாக கூறப்படுகின்ற சீ. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரவினால் 1940ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதிற்கான நோக்கம் வறிய குடும்பங்களைச் சேர்ந்த, திறமையான மாணவர்களை கல்வியில் ஊக்கப்டுத்துவதற்கும், அவர்களை சிறந்த வசதிகளை கொண்டிருக்கின்ற தேசிய பாடசாலைகளில் அனுமதி பெறுவதற்குமே ஆனால் அந்த நோக்கம் நிறைவேற்றப்படவில்லை என்றுதான் கூற வேண்டும்.

மாறாக சமூக அந்தஸ்த்துக்காகவும், பெற்றோர்களின் வெட்டி பந்தாவுக்காகவும் மட்டுமே இந்த புலமைப் பரிசில் பரீட்சை நடப்பதாக எண்ணத் தோன்றுகிறது. தமது பிள்ளை பரீட்சையில் சித்திப் பெற்றால்தான் வெளியில் தலைக்காட்ட முடியும்...என்ற பெற்றோர்களுக்கிடையே ஏற்பட்டுள்ள போட்டி வெறியாக மாறும்போது பிஞ்சுக் குழந்தைகள் கசக்கி பிழிந்தெடுக்கப்படுகிறார்கள். இதனால் ஒரு குழந்தையின் அந்த வயதுக்கான மழலை மனசு சிதைக்கப்பட்டு அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதுடன் தோல்வி மனப் பான்மையினால் உயர்தர கல்வியிலும் கவனம் செலுத்த முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள். மாணவர்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்த வேண்டிய இந்தப் போட்டிப் பரீட்சை பெற்றோர்களின் மத்தியிலேயே அதிகளவில் செல்வாக்கு செலுத்துகிறது.பெற்றோர்கள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் செலுத்தும் ஆர்வம் ஏனைய பரீட்சைகளில் செலுத்தாததினால் எத்தனையோ மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தும் கல்விப்பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை, உயர்தரப்பரீட்சைகளில் கோட்டை விட்டு விடுகின்றனர். மாணவர்களின் மீது புலமைப்பரிசில் பரீட்சைக்காக பெற்றோர் காட்டுகின்ற அக்கறை அனைத்து பரீட்சைகளிலும் காட்டுகின்ற போது ஒவ்வொரு மாணவனிதும் எதிர்கால ஒளிமயமானதாக அமையும். 5ம் ஆண்டு பரீட்சை பெற்றோர்களின் போட்டிப் பரீட்சையாக மாறிப்போனதால் இதனை வைத்து நன்றாகவே பணம் சம்பாதிக்கலாம் என்று கணக்குப் போட்ட கல்வி வியாபாரிகளின் கல்லாப் பெட்டி நிரம்பிக் கிடக்கிறது. 

இலவச் கல்வியை பண மையக் கல்வியாக மாற்றி வரும் சில கல்வி வியாபாரிகளினால் புலமைப் பரிசில் பரீட்சை மாதிரி வினா விடை புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு ஆண்டு தோறும் விற்பனைக்கு விடப்படுகிறது. இதன் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் வசூல் செய்யப்படுவதாகவும் கொழும்பிலுள்ள ஒரு புத்தக  நிலையத்தின் அதிபர் எம்மிடம் தெரிவித்தார். இது தவிர இப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளை நடத்தும் ஆசிரியர்களும் கொள்ளை லாபம் பார்க்கின்றனர். தமது வகுப்புகளில் கற்கும் பிள்ளைகள் அனைவரும் இத் தேர்வில் வெற்றிப் பெற்றால்தான் அடுத்த ஆண்டுக்கான தமது வகுப்பிற்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை மேலும் பல மடங்காக அதிகரிக்கும் என்ற பணத்தாசையினால் தமது வகுப்புகளுக்கு வரும் பிள்ளைகளுக்கு அவர்கள் ஒரு சிறப்பு அனுமதி பரீட்சையை  நடத்தி அதன் மூலம் நன்றாக படிக்கக் கூடிய மாணவர்களை மட்டும் வடிக்கட்டி தேர்வு செய்து தமது தனியார் வகுப்புகளில் இணைத்துக் கொள்கிறார்களாம் ஆசிரியர்கள். இதன் அடிப்படையில் அந்த ஆசிரியரிடம் கல்வி கற்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் போட்டிப் பரீட்சையில் வெற்றிப் பெற்றுவிட அதற்குப் பிறகு சொல்லவா வேண்டும்! “அந்த டீச்சருக்கிட்ட நம்ம புள்ளையையும் படிக்க அனுப்பிச்சா 'கொலசிப்ல வெற்றிப் பெறுவான்" என நம்பி அனைத்து பெற்றோர்களும் அந்த டீச்சரின் வகுப்புக்கு படையெடுக்க அவர் தமது கட்டணத்தையும் இரட்டிப்பாக்கி விடுவாராம்.

இந்த கொலசிப் அவலம் குறித்து களுத்துறை மாவட்டத்தில் கடந்த 36 வருடங்களாக ஆசிரியராக, அதிபராக பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றிருக்கும் அய்யாக்குட்டி தேவாராஜாவுடன் பேசினோம். “உலகில் வெற்றிப் பெற்ற அறிஞர்களும், ஆய்வாளர்களும் ஸ்கொலசிப் பரீட்சையில் வெற்றிப் பெற்றவர்கள் அல்ல என்ற உண்மையை நாம் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். உண்மையைச் சொல்லப் போனால் இது மாணவர்களுக்கான ஒரு தகமையே கிடையாது, இதில் சித்தி பெறும் மாணவன் உயர் தரத்தில் சித்தியடைவான் என்று உறுதியாக சொல்ல முடியாது. இதில் வெற்றிப் பெற்ற எத்தனையோ மாணவர்கள் உயர் தரத்தில் தோல்வியடைந்ததை நான் பார்த்திருக்கிறேன். அதனால் இத் தேர்வு ஒரு தகமையோ, கட்டாயமோ அல்ல. இது மனப்பாடம் செய்து வினாத்தாளில் ஒப்புவிப்பது அவ்வளவுதான், கல்வி என்பது ஒரு மாணவன் சுயமாக சிந்தித்து அறிவை மேம்படுத்துவது, என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
c.w.w.கன்னங்கர

 இதையெல்லாம் விட புலமைப்பரிசில் தேர்வில் வெற்றிப் பெறும் மூன்று பிள்ளைகளும் உயர் பதவியில் இருக்கும் வசதிப் படைத்த ஒருவரின் பிள்ளைகளாக இருக்கும் பட்சத்தில் இதில் எங்கோ ஓர் இடத்தில் இடர் இருப்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே வகுப்பறை கற்பித்தலின் அடிப்படை சரியாக அமைந்தால் நாற்பது மாணவர்கள் கற்கும் வகுப்பில் ஒரு மூன்று பிள்ளைகளாவது சித்தி பெற வேண்டும். மாறாக ஒரு ஆசிரியரின் மகள் மட்டும் சித்திப் பெறுகிறாள் என்றாள் அவளுக்கான கல்வி மேலதிகமாக எங்கோ வழங்கப்படுகிறது என்பதையும், இந்த வகுப்பறை கற்பித்தலில் தவறு இருப்பதையும் இந்த களுத்துறை மாவட்ட பாடசாலைகளிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறதுதானே என்று வெளிப்படையாகவே பேசுகிறார் அய்யாக்குட்டி தேவராஜா.


“நன்றாக மனப் பாடம் செய்யக்கூடிய மாணவன் இத் தேர்வில் சித்திப் பெற்றுவிடுவான். ஆனால் உயர் தரம் என்பது சுயமாக சித்தித்து பதில் எழுத வேண்டிய ஒரு இடம்.எனவே புலமைப் பரிசிலில் சித்தி பெறும் மாணவர்கள் அனைவருமே உயர் தரத்தில் சித்திப் பெறுவார்கள் என்று நிச்சயமாக எதிர்பார்க்க முடியாது. எனவே இவ் விடயத்தில் அரசு நேரடியாக கள ஆய்வு செய்து, போட்டிப் பரீட்சைகளை தவிர்த்து விட்டு நன்றாக படிக்கக் கூடிய, பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் உள்ள மாணவர்களை தெரிவு செய்து அவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்குவது. சிறப்பானதாகவும் அதே நேரத்தில் அரசு எதற்காக இந்தத் திட்டத்தை கொண்டு வந்ததோ அது நிறைவேற்றப்பட்தாகவும் அமையும்!” என்று சொல்லும் ஆசிரியர், ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தையும் எம்மிடம் பகிர்ந்து கொண்டார். “புலமைப்பரிசில் தேர்வின் பெறுபேறுகள் வெளியாகியிருந்த நேரத்தில் நான் வசிக்கும் பகுதியிலுள்ள ஒரு வீட்டுக்குச் சென்றிருந்தேன்.

அந்த வீட்டில் ஒரே ஒப்பாரி சத்தம் கேட்ட வண்ணமாக இருந்தது. என்ன நடந்தது என்ற பதட்டத்துடன் வீட்டுக்குள் நுழைந்து பார்த்தேன். அங்கே ஒரு சிறுவன் ஒருப்பக்கமாக கதறி அழுது கொண்டிருக்க மறுப்பக்கத்தில் அவனது அம்மா, அப்பா, பாட்டி என்று அனைவரும் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்தார்கள். “எங்க நம்பிக்கையில் இப்படி மண்ண போட்டுட்டானே, கொலசிப்ல பெயிலாகிட்டானே"ன்னு அந்த அம்மா அழுதப் போதுதான் எனக்கு விஷயமே புரிந்தது. சரி அந்த சிறுவனையாவது ஆறுதல்படுத்தலாமே என்று, “தம்பி இந்த கொலசிப்ல தோல்வியடைந்திட்டன்னு அழக் கூடாது இன்னும் இதைவிட பெரிய பரீட்சைகள் இருக்கு. அதுக்கு உன்ன தயார்படுத்து" என்று புத்தி சொன்னேன். அதற்கு அவன், “சும்மா இருங்க சேர். இனி எனக்கு எங்கே சைக்கில் வாங்கித் தரப் போறாங்கன்னுதான் அழுகிறேன்"ன்னு பதில் சொல்லி என்னை அவன் அதிர வைத்தான். இரவு பகல் பாராது பிள்ளைகளை மன அழுத்தத்துக்குள்ளாக்கி தாங்களும் மன அழுத்தத்துக்கும் மனச்சோர்வுக்கும் உள்ளானதன் விளைவு கடந்த காலங்களில் உரிய வெட்டுப் புள்ளியைப் பெறாத பிள்ளைகளைத் திட்டித்தீர்த்தமை, விரட்டியடித்தமை, குறைந்த புள்ளிகளைப் பெற்றமைக்காக சூடுவைத்தமை, செல்லப்பிராணிகளை அடைக்கும் கூடுகளில் குறைந்த புள்ளி பெற்றமைக்காக பிள்ளையை அடைத்து வைத்தமை போன்ற பல சம்பவங்கள் இந்த நாட்டில் நடைபெற்றுள்ளன. பரீட்சையில் சாதித்தவர்கள் வாழ்த்தப்படுவதும் சாதிக்காதோர் சாதிப்பதற்காக ஊக்கப்படுத்தப்படுவதும்தான் பரீட்சைப் பெறுபேறுகளின் எதிர்பார்ப்பாகும். மாறாக சித்தியடைந்தோரின் சார்பில் மமதை கொள்வதோ அல்லது சித்தியடையாதோரை ஏறி மிதிப்பதும் ஏற்றுகொள்ளத்தக்கதல்ல. அவை மன அழுத்தங்களையே உருவாக்கும்🔴

Friday, May 27, 2022

சோப்பின்றி குளிக்கலாமா..?




ன்றைய நவீன காலகட்டத்தில் சவர்க்காரம் இல்லாத வீடுகளோ, நாடுகளோ இல்லை என்றுதான் கூறவேண்டும். அந்தளவுக்கு சவர்க்காரம் மனிதர்களின் வாழ்க்கையோடு இன்றியமையாததொரு பொருளாகிவிட்டது.
சவர்க்காரத்தைப் பயன்படுத்தாமல் குளிப்பது ஒரு முழுமையான குளியலாக இருக்காது என்பதுதான் நம் எண்ணமாக இருக்கிறது. பிறந்து சில மாதங்களேயான குழந்தைகளை குளிப்பாட்டுவதற்கும் நாம் சவர்க்காரத்தையே இன்று பயன்படுத்தி வருகின்றோம். ஆனால், சென்ற தலைமுறையின் குளியலில் சவர்க்காரம் இந்தளவுக்கு முக்கியத்துவம் பெறவில்லை என்றே கூறவேண்டும்.

வாகை மரம்

நமது பாட்டனும் பூட்டனும் குளியலுக்கு சவர்க்காரத்தைப் பயன்படுத்தினார்கள் என்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனாலும் சவர்க்காரத்தின் வரலாறு ரொம்பவும் பழசுதான். சவர்க்காரத்தை சுமார் 2,500 ஆண்டுகளுக்கும் மேலாக மனிதர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். பண்டைய பாபிலோனியர்கள் என்னும் தற்போதைய ஈராக்கியர்கள்தான் உலகிலேயே முதன்முதலில் சோப்புகளை தயாரித்து பயன்படுத்தியவர்களாம்.
மெசபடோமிய பிரதேசத்தின் புகழ்பெற்ற பேரரசுகளில் ஒன்றான பாபிலோனிய பேரரசின் தற்போதைய ஈராக்கின் அல்ஹில்லாஹ் மற்றும் பாபில் புரோவின்ஸ் கடைசி அரசரான நபோனிதஸ் (கி.மு.556 - கி.மு.539) ஆட்சிக்காலத்தில் அரண்மனையில் பணிப்பெண்களாக வேலை பார்த்து வந்த பெண்கள், எரிந்த மரங்களின் சாம்பலை பயன்படுத்தி சலவைக்கற்களின் மீது படிந்திருந்த கறைகளை சுத்தம் செய்தனர். இதனை ஒரு நாள் தற்செயலாக பார்வையிட்ட நபோனிதஸ் இது குறித்து தன்னுடைய அரண்மனை ரசவாதிகளிடம் (வேதியியலாளர்கள்) விவாதம் செய்தார். இந்த நிகழ்வுதான் சோப்பு தயாரிப்பிற்கான கருவை வித்திட்டது. 


சவர்க்காரம் குறித்து, மேலும் ஆய்வுகளை மேற்கொண்ட வேதியியலாளர்கள், கறைகளை அகற்றி சுத்தம் செய்வதற்காக ஒரு பொருளை உருவாக்கிட வேண்டும் என்று ஆவல் கொண்டனர். அந்தப் பொருள் தண்ணீரில் கரையக்கூடியதாக இருக்கவேண்டும். அதேநேரம், இலகுவாக கரைந்துவிடாமலும் இருக்கவேண்டும். மிக முக்கியமாக அது கறைகளையும் அகற்றவேண்டும் என்பது அவர்களின் முன்னின்ற சவாலாக இருந்தது.
அதனைத் தொடர்ந்து, சாம்பலுடன் விலங்குகளின் கொழுப்புகளிலிருந்து பெறப்பட்ட கொழுப்பு எண்ணெய், மெழுகு மற்றும் உப்பு இவற்றுடன் தண்ணீரையும் சேர்த்து ஒரு காரகரைசல் தயாரிக்கப்பட்டது. தயாரிக்கப்பட்ட இந்தக் காரகரைசலை சூடுபடுத்தி கொதிக்கவைத்து வற்றச்செய்தனர். காரகரைசல் வற்றி திண்ம நிலையை அடைந்ததும் அவை சிறுசிறு துண்டுகளாக வெட்டப்பட்டன. இதுதான் மனிதன் முதலில் தயாரித்த சவர்க்காரமாகும்.

சீயக்காய்

உலகத்தில் முதன்முதலில் தயாரிக்கப்பட்ட சவர்க்காரம் முதலில் தரையை சுத்தம் செய்யவும் பின்பு ஆடைகளை சுத்தம் செய்யவும் இறுதியாக குளிக்கவும் பயன்படுத்தப்பட்டது.
இந்த சவர்க்காரம் படிப்படியாக வணிகர்களின் வாயிலாக சிரியா, உரோம், எகிப்து மற்றும் மொரோக்கோ வரை சென்றடைந்தது.  Soap என்ற சொல் Sapo என்ற லத்தின் சொல்லிலிருந்து பிறந்ததாகும். கி.மு. 7ஆம் நூற்றாண்டில் உரோமாபுரி பேரரசின் தலைநகரான ரோமில்  Sapo என்றொரு மலை இருந்தது. அந்த மலை எதிர்பாராத விதமாக ஒரு நாள் தீப்பற்றிக்கொள்ள அந்த மலையில் வசித்த விலங்குகள் உட்பட மரங்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாயின. அக்காலகட்டங்களில் சோப்பு தயாரிக்க விலங்குகளின் உடலிலிருந்து எடுக்கப்படும் கொழுப்பு ஒரு முக்கிய மூலப்பொருளாக இருந்த காரணத்தினால், முற்றிலும் எரியாமல் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட விலங்குகளின் உடலிலிருந்து கொழுப்பை நீக்கிய பின்பே அவற்றின் உடல் தகனம் செய்யப்பட்டது. இறந்துபோன அந்த விலங்குகளின் நினைவாக அந்த மலையின் பெயரை சோப்புக்கு Sapo என்று பெயரிட்டதாகவும் கி.பி.78ஆம் ஆண்டளவில் புகழ்பெற்று விளங்கிய உரோமானிய எழுத்தாளரான பிளினி தி எல்டர் 'இயற்கையின் வரலாறு” என்ற தனது நூலில் சோப்பை பற்றி குறிப்பிடுகையில்,  Sapo  என்று குறிப்பிடுவதற்கு பதிலாக, தவறுதலாக Soap என்று குறிப்பிட்டுவிட்டார்,

மன்னர் நபோனிதஸ்

உச்சரிப்பதற்கு Sapo என்பதை விட Soap என்பது மிக எளிதாக இருந்ததால் அன்று முதல் இன்றுவரை அந்த பெயரே நிலைத்துவிட்டது.16ஆம் நூற்றாண்டு வரை மனிதர்கள், துணிகளை துவைப்பதற்கும் குளிப்பதற்கும் ஒரே சோப்புகளைத்தான் பயன்படுத்தி வந்தார்கள்.
கி.பி.1788ஆம் ஆண்டுவரை சோப்பு. தயாரித்தல் என்பது ஒரு குடிசை தொழிலாகவே இருந்து வந்தது. இந்நிலையில், 1789ஆம் ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த ஆண்ட்ரூவ் பியர்ஸ் என்பவர் முதன்முதலில் மிக எளிமையான தொழில்நுட்பத்தில் நறுமணத்துடன் கூடிய மென்சோப்புகளை தயாரிக்கும் தொழில்நுட்பம் ஒன்றைக் கண்டறிந்தார். இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இவரது மருமகனான தோமஸ் ஜே. பார்ட் என்பவர் லண்டனிலுள்ள

Isleworth GTOOTH இடத்தில் 1862ஆம் ஆண்டு சோப்பு தயாரிக்கும் கம்பனி ஒன்றை தொடங்கினார். தயாரிக்கப்பட்ட சோப்புக்கும் அந்த சோப்பு கம்பனிக்கும் தனது மாமனாரின் நினைவாக ‘பியர்ஸ்’ என்று பெயரிட்டார். இதுதான் உலகில் முதன்முதலில் வணிக நோக்கில் தொடங்கப்பட்ட முதல் சவர்க்கார கம்பனியாகும். ஆரம்பத்தில் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இந்த சவர்க்காரத்தை மேல் தட்டு மக்கள் மட்டுமே பயன்படுத்தி வந்தார்கள். ஆனாலும் இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் சவர்க்கார பயன்பாடுகள் வெள்ளையர்களின் ஆட்சிக்குப் பிறகே புழக்கத்திற்கு வந்ததாகவும், அதுவும் குறிப்பாக வெள்ளைக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பயன்படுத்திய ஒரு ஆடம்பரப் பொருளாகவும் சவர்க்காரம் பார்க்கப்பட்டது.


நம் முன்னோர்கள் குறிப்பாக, ராஜராஜ சோழனின் காலப்பகுதியில் குளியலுக்கு மூலிகைகளையே பயன்படுத்தியிருக்கிறார்கள். குளியலுக்காகவும் கேச பராமரிப்புக்காகவும் நம்மவர்கள் பயன்படுத்திய மூலிகைகளில் முதன்மையானதாக கருதப்படுவது, அரப்பு எனும் குளியல் மூலிகை. இது உசிலை என்ற மரத்திலிருந்து கிடைக்கிறது. தமிழ்நாட்டில் உசிலம்பட்டியில் இந்த மரங்கள் அதிகமாக இருந்ததாகவும் அதனாலேயே அந்த இடத்திற்கு அப்படியொரு பெயர் வந்ததாகவும் குறிப்பிடுகிறார்கள்.
இலங்கையில் தேயிலை தோட்டப் பகுதியில் பெருமளவில் இந்த மரங்கள் வளர்ந்திருக்கின்றன. இதனை வாகை மரம் என்றே இங்குள்ளவர்கள் அழைக்கிறார்கள். தமிழகத்தில் இந்த அரப்பு, மூலிகை பொடியை, கருவாகை, ஊஞ்ச, சீக்கிரி, துரிஞ்சில் போன்ற பெயர்களாலும் அழைத்திருக்கிறார்கள்.
இந்த மரத்திலிருந்து கிடைக்கும் இலைகளை பொடி செய்து நம் முன்னோர்கள் தலைக்கு பூசி குளித்திருக்கிறார்கள்.


இதேவேளை, சவர்க்காரத்துக்கு முன்னோடியாக பயன்படுத்தப்பட்ட மூலிகைகளில் சீயக்காயிக்கும் முதலிடம் இருக்கிறது. சிகைக்காய் தலைக்கான காய் என்ற சொல்லே மருவி சீயக்காய் ஆனதாக சொல்கிறார்கள். தமிழ்நாட்டு சீதோஷ்ண நிலைக்கு இந்த சீயக்காய் தாவரம் சரியாக வளராது. அதனால், தமிழகத்தில் காலங்காலமாக சீயக்காய்க்கு மாற்றாக உசிலை (வாகை) அரப்பு பயன்படுத்தப்பட்டு வந்திருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். இந்த குளியலுக்கான மூலிகைகளில் பச்சைப்பயறு, கடலைமாவு, அரிசிமாவு, கேழ்வரகு மாவு போன்றவற்றையும் அரைத்துப் பூசியிருக்கிறார்கள். சோப்புபோல் நுரைப்பதற்காக அதனுடன் வெந்தயம் சேர்க்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.  நம் குளியலுக்காக இயற்கை தந்த பெருங்கொடைகளில் ஒன்றான சீயக்காய் பழத்தின் சதைப்பகுதிகளையே சவர்க்காரம் செய்வதற்கும் பயன்படுத்துகிறார்கள். இதனை ஆங்கிலத்தில் soapnuts என்று அழைக்கிறார்கள்.

பழங்காலத்தில் ஆசியாவைச் சேர்ந்த மக்களும் செவ்விந்தியர்களும் இந்த சீயக்காய் பொடியிலிருந்து கிடைக்கும் திரவத்தைக்கொண்டு அழுக்குகளை கழுவியதாகவும் சொல்லப்படுகிறது.
நமக்குத் தெரிந்து இலங்கையில் மலையகப் பகுதிகளில் வாழும் மக்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு முன்புவரையும் ஆற்றோரங்களில் கிடைக்கும் குலு மணலை உடம்பில் பூசி குளித்திருக்கிறார்கள்,

அதனோடு உடம்பை தேய்ப்பதற்காக சிறிய குண்டான கற்களையும் பயன்படுத்தியிருக்கிறார்கள். அப்போது துணிகளை துவைப்பதற்கு மட்டுமே அவர்கள் சவர்க்காரத்தை பயன்படுத்தியதாகவும் சொல்கிறார்கள். அதன் பிறகுதான் குளிப்பதற்கான வாசனை சோப்புகள் சந்தைக்கு வந்திருக்கின்றன.
சோப்பு எதற்காக கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா? கப்பலில் இயந்திரத்தோடு இயந்திரமாக வேலை செய்வோருக்கு உடலில் திட்டு திட்டாக எண்ணெய் படிந்துவிடும். இந்த கடின எண்ணெயை நீக்குவதற்காக சோப்பு பயன்படுத்தினார்கள். 

கப்பலில் மட்டுமல்ல, எண்ணெய் புழங்கும் மற்ற இடங்களிலும் கூட இது பயன்பட்டது. இப்படி உடலில் படியும் எண்ணெயை அகற்றுவதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்ட சவர்க்காரத்தை பெரிய வியாபாரமாக்கிய வணிகர்கள், பல திட்டம் தீட்டி கிருமி உருவாக்கி, அதன் மேல் பயம் உருவாக்கி நடிகர்களை நடிக்கவிட்டு நம் தலையில் கட்டிவிட்டார்கள். இப்போது சவர்க்காரத்துக்கு விலை உயர்வா, தட்டுப்பாடா என்றதும் நாம் அதிர்ந்துபோய் தலையில் கை வைத்துக்கொண்டு உட்கார்ந்து விடுகின்றோம்.
எனவே, குளியலுக்கு சவர்க்காரம் அவசியம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. குளிப்பது என்பது உடலின் அழுக்குகளை வெளியேற்ற என்பதை விட, உடலில் உருவாகியிருக்கும் சூட்டை வெளியேற்றி உடலை சமநிலையில் வைக்கவே.  அந்தக் கால குளியலில் வெறும் நீரும், தேவையான பட்சத்தில் எண்ணெய்க் குளியலின்போது வெந்நீரையும் பயன்படுத்தி “சனி நீராடு” என்று ஒளவையார் சொன்னதை பின்பற்றி குளித்து குளிர்ச்சி பெற்று ஆரோக்கியமாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதையும் நாம் கவனத்தில்
கொள்ளவேண்டும். உண்மையில் சவர்க்காரம் பயன்படுத்துவதால், சருமம் அதிகம் வறண்டுபோய் விடுவதோடு சருமத்தின் செல்கள் இறந்து அல்லது விரைவில் முதுமையை அடைவதாகவும், முதுமையான தோற்றம் இளமையிலேயே ஏற்படுவதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அத்தோடு, சோப்பு போட்டு நம் தோல்களின் மேல் இயற்கையாக உருவாகும் மெல்லிய பாதுகாப்பு கொழுப்பு படலத்தை நாம் தடுத்துவிடுவதாகவும் நமக்கு வாய், முகத்தில் மட்டுமல்ல, தோலின் மேல் இருக்கும் ஒவ்வொரு வியர்வை துவாரங்களும் சோப்பை போடுவதன் மூலம் வியர்வை துவாரம் வழியே இரசாயன நச்சு இரத்தத்தில் கலந்து கல்லீரலை பாதிப்பதாகவும் அதிர்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் குளத்தில் கிடைக்கும் மண்ணையும் தேங்காய் நாரையும் வைத்து உடல் தேய்த்து குளித்துவிட்டு, ஈரத்துணியோடு அரச மரத்தை சுற்றிவந்து அந்த மரத்திலிருந்து கிடைக்கும் 100வீத சுத்தமான பிராணவாயுவை நமது உடல் தோல் மூலமாக உள்வாங்கிக் கொண்டு நித்தம் பெருவாழ்வு வாழ்ந்திருக்கின்றோம். ஆனால், இன்று சவர்க்காரம் நம்மை அடிமையாக்கிவிட்டது என்பதே நிதர்சன உண்மையாகும்!🔴

一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一
எனது கட்டுரைப் பதிவு, தமிழன்  நாளிதழில் 2022, மே, 22ம் திகதி வெளியானது.

Thursday, May 26, 2022

வேலூர் பூக்காரம்மாவிடம் பேசிய போது…



மிழகத்தில் பூ வியாபாரம் மிகப் பெரியளவில் நடைபெற்று வரும் ஒரு வர்த்தகம். தினமொன்றுக்கு மில்லியன் ரூபா பூ வியாபாரம் நடைபெறும் நாடு அது. சென்னை, கோயம்பேடு சுப்பர் மார்க்கட்டுக்கு அதிகாலை வேளையில் சென்றால் வெளிமாநிலங்களில் இருந்து வரும் பூக்கள் மூடை மூடையாக இறக்கி ஏற்றப்படுவதைக் காணலாம். தமிழர் கலாசாரத்தோடு பூக்கள் இணைந்து பிணைந்திருப்பதால் பூ வியாபாரம் ஒவ்வொரு ஊரிலும் அமோகமாக நடக்கிறது. தமிழ்ப் பெண்கள் ஒவ்வொரு நாளும் தலையில் பூக்களை சூடிக் கொள்வதை வழமையாகக் கொண்டிருக்கிறார்கள்.

தாம்பத்திய வாழ்க்கைக்கும் பூக்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உண்டு. பல சுவையான ரகசியங்களும் உண்டு. இதனால் தமிழகத்தில் பூ வியாபாரம் படுப்பதில்லை. தெருவோரங்களில் கூடையில் பூக்களை கோர்த்து முழம் கணக்கில் விற்பனை செய்யும் பெண்களில் அநேகரை நாம் சென்னைத் தெருக்களில் காணலாம். அதிகாலையில் வீடு தேடிவரும் பேப்பர்காரன், பால்காரன் போன்று அங்கே பூக்காரியும் வந்து விடுவாள். அப்படி பூக்கூடையோடு வேலூர் சங்கரன் பாளையம் வழியாக வந்த பூக்காரப் பெண் அன்னம்மாவை வழி மறித்தோம். சென்னையில் இருந்து 145 கி. மீ. தூரத்தில் வேலூர் அமைந்துள்ளது. “அடுக்கு மல்லியா, குண்டு மல்லியா எத்தினை முழம்?” என்றவாறே தலையில் இருந்தது கூடையை இறக்கினார் அன்னம்மா. ஒரு முழும் எவ்வளவு என்றோம். மூன்று ரூபாய் என்றார். “எங்களுக்கு இரண்டு முழம் தாங்க” என்றோம். இடுப்பில் சொருகி இருந்த கத்திரியை எடுத்து நீளமாக இருந்த அந்த பூமாலையை தனது உள்ளங்கைக்கும் முழங்கைக்கும் இடையே வைத்து இரண்டு முழமாக அளந்து 'கட்” பண்ணிக் கொடுத்தார். 

இருபது ரூபாவை எடுத்து நீட்டினோம். “சில்லறை இல்லியே சாமீ!” என்றவரிடம் “மிச்சத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்” என்று அன்பாகச் சொல்ல, அதிர்ந்து போனார் அன்னம்மா... நாம் பேட்டி காண வந்த விடயத்தைச் சொன்னதைக் கேட்டு, “அதானே பார்த்தேன் என்னடா சோழியன் குடுமி சும்மா ஆடுதேன்னு...” என்றவர் தன் கதையை அவிழ்த்து விட்டாள். “நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே இதே வேலூர்தான். மழைக்காகக் கூட நான் பள்ளிக்கூடப் பக்கமா ஒதுங்கியது இல்லை. எங்க அப்பன், ஆயீ செய்த தவறு அது. என்னை படிக்கவைக்கலை. இல்லன்னா எனக்கும் இன்னைக்கு எழுத படிக்கத் தெரிஞ்சிருக்குமே..... என்ன செய்ய, நம்ம தலையெழுத்து இப்படி அமைஞ்சி போச்சி. புருசனும் செத்து போயி இப்போ ஒரு ஆறு மாசமாகிறது.... என் மகனுக்கு ஒரு பதினைந்து வயதிருக்கும். அவனும் கூலி வேலைக்குத்தான் போறான். படி படின்னு எவ்வளவோ சொன்னேன் கேட்குறான் இல்லை . இன்னைக்கு உள்ள புள்ளைங்க எதுதான் பெத்தவங்க சொல்றத கேட்குது! அது அது நெனச்சபடிதான் எல்லாம் நடக்குது.. எல்லாம் கலிகாலம்...” என்று கைகளை உயர்த்தி விரக்தியில் பேசும் அன்னம்மாவிடம் உங்களுக்கு சொந்த வீடா? என்றோம் “ஆமாங்க ஒரு பொறம்போக்கு  எடத்தை புடிச்சி வீடுகட்டினோம். இன்னைக்கு அது சொந்தமாயிடுச்சி. இங்கே நிறைய பேரு அப்படித்தான் வீடு கட்டுறாங்க. பொறம்போக்கு நிலத்திலே ஒரு குடிசை போட்டுட்டா அடுத்து வரும் அரசாங்கம் பட்டா (காணி உறுதி) கொடுத்திடும்...” என்றவரிடம் “பூ வியாபாரம் எப்படிப் போகிறது? என்றோம், “என்னதான் நாகரிகம் வளர்ந்தாலும் தமிழர்கள் கலாசாரத்தை மறந்து வர்றாங்கன்னு நம்ம ஊரு பத்திரிகையில எழுதுறாங்களாம். ஆனா அதுவெல்லாம் சுத்தப் பேத்தலுங்க...... இன்னைக்கும் நம்மகிட்டே பூ வாங்குறவங்க தொகை அதிகமாத்தான் இருக்கு. எப்படியும் ஒரு நாளைக்கு ஐம்பது ரூபாய்க்கு குறையாமல் இலாபம் கிடைக்கிறது. காலையிலேயே மார்க்கட்டுக்குப் போய் கிலோ கணக்கில் பூக்களை வாங்கி வந்து அதை சிறிய மாலையாகக் கட்டி முழங் கணக்கில் விற்கிறேன். நிறைய துரம் நடக்க வேண்டியிருக்கு. இதைத்தவிர இது நல்ல தொழில்தான். யாருக்கும் நம்ம அடிமையில்லை. நமக்கு நாமே முதலாளி” என்று தனது தொழில் மென்மையை நினைத்துப் பூரிக்கிறார் அன்னம்மா.

“உங்க வீட்டுக்கு கலர் டிவி வந்து விட்டதா?” என்றோம். “தலைவரு செய்றதைத்தான் சொல்லுவாறு சொல்றதைத்தான் செய்வாருன்னு டிவியில் சொன்னாங்க அது மாதிரியே இரண்டு ரூபாய்க்கு அரிசியும் கலர் டிவியும் கொடுத்திருக்காரு. ஆனா நம்ம ஊருக்குத்தான் இதுவரை கலர் டிவி வரலை. கரண்ட் மட்டும் இலவசமா கொடுத்திருக்காங்க. அதுல ஒரு பல்ப் போட்டிருக்கோம். கலர் டிவி வந்திட்டா டிவியை போட்டுப் பார்க்கலாம். ஆனா அந்த டிவியை எப்போ தருவாங்களோ…”ன்னு ஏக்கமாக பேசும் அன்னமாவிடம்,
“இரண்டு ரூபா அரிசி சாப்பிடவே முடியலை என்றும் விதை விதையா சோறு இருப்பதாகவும் சொல்றாங்களே? நீங்க எப்படி சாப்பிடுறீங்க?” என்றதும், “குறை சொல்றவங்க ஏதாவது சொல்லிட்டுத்தான் இருப்பாங்க. பணக்காரங்களுக்கு நல்ல அரிசி தான் சாப்பிட முடியும். ஆனா எங்கள மாதிரி ஏழைகளுக்கு இந்த மாதிரி இரண்டு ரூபா அரிசிதான் அமிர்தம். நம்ம ஊர்ல இருந்து (ரேசன் அரிசியை) இரண்டு ரூபா அரிசியை கேரளாவுக்கும், ஆந்திராவுக்கும் கடத்துறாங்களாம். ருசியில்லா அரிசியை எப்படிக் கடத்த முடியும்?” என்று அவரும் பதிலுக்குக் கொக்கி போட்டார். பின்னர் நிதானமாக எம்மைப் பார்த்த அன்னம்மா, கிளம்புவதற்கு தயாரானார்.
“உங்ககிட்டேயே பேசிட்டிருந்தா நம்ம கிட்டே பூ வாங்குறவங்க வேறுயாரிட்டவாவது வாங்கிடப் போறாங்க. அதனால நான் கிளம்புறேங்க” என்றவர் பூக் கூடையைத் தலையில் சுமந்தவராக மல்லி ... மல்லி... மல்லி.... என்று கூவிக் கொண்டே நடந்தார்⚫

一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一
எனது கட்டுரைப் பதிவு, இலங்கை தினகரன் நாளிதழில் 2008, ஜூன் 15ம் திகதி வெளியானது.

Monday, May 23, 2022

பண்டைய தமிழர்களின் தொடர்ச்சியே மாயன்கள்!

 


கி.மு. 2600 ஆண்டுகாலப் பகுதிகளில் மாயன் நாகரிகம் தோன்றியதாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். அதன் பிறகு கி.பி.1500ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் மாயன்கள் உச்சத்தில் இருந்தார்கள் என்றும்,
ஸ்பானியர்களின் படையெடுப்புக்கு பிறகு மாயன்கள் 90 சதவீதமானோர் கொல்லப்பட்டாலும் அவர்களின் வழி வந்த இனத்தவர்களில் 70 லட்சம் பேர் மத்திய அமெரிக்காவின் பல பகுதிகளில் வாழ்ந்து வருவதாகவும், மாயா மொழிகளில் 31 வகையான மொழிகள் இன்று வரை புழக்கத்தில் இருப்பதாகவும் சொல்கிறார்கள். விவசாயத்தில் தமிழர்கள் எப்படி தன்னிறைவான சமூகமாக இருந்தார்களோ அதேப் போன்று மாயன்களும் விவசாயத்தில் உச்சம் தொட்டிருந்தார்கள் எந்த மாதத்தில் எதை விதைக்காலம் என்பதை மாயன்கள் மிகவும் துல்லியமாக கணித்திருந்தார்கள். பாணன், பறையன், கடம்பன், துடியன் என்ற நான்கு குடிகளைத் தவிர வேறில்லை என்று தமிழர்களின் இனக்குழுவை 2000 ஆயிரம் வருட பழைமையான மாங்குடி மருதநாரின் புறநானூறு குறிப்பிடுகிறது.

அதேப் போன்று மாயன்களிடமும் சாதீய கோட்பாடு இருந்திருக்கிறது. மேல் நிலை, கீழ் நிலை என்று இரண்டு பிரிவுகளில் அந்த மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். மேல்நிலை வர்க்கம் குடிகளை ஆள்பவர்களாகவும், கடவுளுக்கு பூஜை செய்பவர்களாகவும், கீழ் நிலை வர்க்கம் ஏனைய தொழில்கள் செய்பவர்களாகவும் இருந்திருக்கிறார்கள் அதாவது பிராமணரும், சூத்திரரையும் போல. மாயன்களின் பேரழிவுக்கு அவர்கள் நகரங்களை அமைப்பதற்கு காடுகளை அழித்ததால் ஏற்பட்ட வரட்சியும், ஸ்பானிய படையெடுப்புக்குப் பிறகு அந்தப் பகுதியில் ஏற்பட்ட பால்வினை நோய் உட்பட நோய் தொற்று, அவர்களுக்குள் இருந்த ஆண்டான் அடிமை என்ற பாகுபாடு காரணமாக இருந்திருக்கலாம் என்பதையும் மறுப்பதற்கில்லை. மத்திய அமெரிக்காவின் டார்ஜின் என்ற ஊரில் மாயன்களால் அமைக்கப்பட்டுள்ள கோயில்களின் அமைப்பு தமிழகத்தின் குமரி, தூத்துக்குடி, கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் கண்ணனூர், கோழிக்கோடு பகுதிகளில் உள்ள கோயில் கட்டடங்களோடு ஒத்துப்போகிறது.
டார்ஜின் கோயிலின் தோற்றம் மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தின் தோற்றத்தை நமக்கு ஞாபகப்படுத்துவதோடு அதில் உள்ள சிற்பங்களில் ஓகம் என்று சொல்லப்படுகிற யோகக்கலையை பிரதிபலிக்கும் சிற்பம், பத்மாசனம், கந்த பேராசனம் உள்ளிட்டவைகளின் சிற்பங்களும் காணப்படுவதாலும்  அவைகள் தமிழகத்தில் உள்ள யோகக்கலையை சேர்ந்தவையாக இருப்பதும் மாயன்கள் ஆதி திராவிடர்களாக இருப்பதற்கு அதிகமான வாய்ப்பு இருப்பதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றார்கள். மாயன்கள் சூரியனை கடவுளாக வழிபட்டதோடு, இறப்புக்கான கடவுள், மகிழ்ச்சிக்கான கடவுள், மழைக்கான கடவுள் என்று 166 கடவுள்களை அவர்கள் வழிபட்டதாக கூறப்படுகிறது. மத்திய அமெரிக்க பகுதிகளில் சிவலிங்கம் போன்ற தோற்றத்தில் கிடைத்த கற்கள் அவர்கள் சிவனை வழிபட்டார்களா என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது.
சோழர்கள் எப்படி தங்களை சூரிய குலத்தவர்கள் என்று சொன்னார்களோ அதே போன்று மாயன்களும் தங்களை சூரிய குல வம்சமாகவே குறிப்பிட்டிருக்கிறார்கள். பொழுது போக்கு விளையாட்டுகளை எடுத்துக் கொண்டால், தமிழர்களைப் போன்று தாயம், ஆடுப்புலி ஆட்டம் உள்ளிட்ட விளையாட்டுகளை மாயன்களும் ஆடியிருப்பதாகத் தெரிகிறது.
குமரிக் கண்டத்தை கடல் கொண்டபோது, தமிழர்கள் கட்டுமரங்களில் தப்பி பல்வேறு தேசங்களுக்கு புலம் பெயர்ந்திருக்கலாம் என்று கூறப்படும் வரலாற்றுக் கதையில், உலக மொழிகளில் கட்டுமரம் என்ற வார்த்தை மட்டும் அப்படியே மாற்றம் செய்யப்படாமல் இருப்பது தமிழர்கள் பல்வேறு நாடுகளில் பரவியிருந்ததற்கு சான்றாக அமைகிறது. பெரும்பாலான உலக மொழிகள் பேச்சு வழக்கில் மட்டுமே உள்ளன. அவற்றுக்கு எழுத்து வடிவம் இல்லை. ஆனால் மாயன்கள் பேச்சு மொழியை உருவாக்கியதோடு அவற்றுக்கு எழுத்து வடிவத்தையும் உருவாக்கி இருக்கிறார்கள். பூச்சியத்தை இந்தியர்கள் உருவாக்கினார்கள் என்றாலும் மாயன்களே பூச்சியத்தை உலகுக்கு அறிமுகம் செய்தார்கள் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மாயன்கள் நூல்களையும் எழுதியிருக்கிறார்கள். ஸ்பானியர்களின் படையெடுப்பில் அந்த நூல்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. அவற்றில் நான்கு நூல்கள் மட்டுமே தப்பியதாக சொல்லப்படுகிறது அவற்றில் ஒன்றுதான் 'சில்லம்பலம்” (chilam balam) மாயன்களின் நாகரிகம் மர்மங்கள் நிறைந்தது என்பதை விளக்குவதற்கு அவர்கள் சிதம்பரம் (ரகசியம்) என்பதையே சில்லம்பலம் என்று குறிப்பிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

மத்திய அமெரிக்காவின் மெக்சிக்கோ, ஹொன்டுரஸ், கவுதமாலா, எல் சல்வடோ, பெலிஸ் உள்ளிட்ட ஐந்து பெரு நிலப்பரப்புகளில் மாயன்கள் சுமார் 5000 ஆண்டுகளாக வாழ்ந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. மாயன்களின் எழுச்சியில் கி.மு. 700இல் விவசாயத்தில் அவர்கள் முன்னேற்றம் கண்டதாகவும், அதன் பிறகு கி.மு.300இல்
அவர்கள் எழுத்துக்களை உருவாக்கியதாகவும், கி.மு.100லிருந்து அவர்கள் நகரங்களை அமைக்கத் தொடங்கியதாகவும் டியோட்டி வாக்கன் என்ற இடத்தில் தமது முதலாவது நகரத்தை அவர்கள் அமைத்ததாகவும் சொல்கிறார்கள். மாயன்களில் ஒரு பிரிவினர் தமது பெயரோடு முதல் எழுத்தாக ‘எல்’ என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார்கள் உதாரணத்துக்கு, எல் கார்க்கோ, எல் லினர், எல் சலவடோ உள்ளிட்டவைகளை குறிப்பிடலாம். தமிழில் ‘எல்’ என்றால் சூரியன், ஒளி என்று அர்த்தம் உள்ளது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இதேப்போல் மாயன்களில் யுகாட்டோ, சோலன் எனும் இரண்டு பிரிவினர் வாhழ்ந்திருக்கிறார்கள். இவர்களில் கரையோரத்தில் வாழ்ந்த ஒரு பிரிவினர் ‘சேரோ’ என்ற சொல்லை தமது குடும்பப் பெயராகவும் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். மாயன் இனப் பெண்களிடையே சடைப்பின்னி தலையில் பூ வைக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. அதோடு தமிழகத்தில் அந்தக் காலத்தில் போரில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு நடுக்கல் அமைத்து வழிப்படும் முறை அவர்களிடமும் இருந்திருக்கிறது. அதே நடுக்கல் வழிப்பாட்டு முறையையும் மாயன்கள் பின்பற்றி வந்ததாகவும் தெரிகிறது. நாகர்கள்தான் ஆதித் தமிழர்களின் இனம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். நாகர்களின் தலைவன் தச்சன் என்று இந்து புராணங்கள் கூறுகிறது. நாகர் கூடி வாழ்ந்த இடம் நகரம் ஆனதாகவும் நாகரிகம் என்ற தமிழ் வார்த்தைக்கு ‘நாக - அகம்’ நாகர்களின் ஒழுக்கம் என்றும் சொல்கிறார்கள்.

இதேவேளை தமிழ் மன்னன் என்று போற்றப்படும் இராவணனின் தம்பி நாகலோகம் ஆண்டதாகவும், நாகர்கள் வாழ்ந்த இடத்தை அழித்து விட்டு அங்கே இந்திர பிரஸ்தத்தை பாண்டவர்கள் அமைத்ததாகவும் வரலாறுகள் கூறுகின்றது. ஐரோப்பிய நாடுகளிலும் மற்றும் வட நாட்டு புராணங்களிலும் பாம்பு ஒரு கொடூரமான உயிரினமாகவே சித்தரிப்பட்டு வந்திருக்கும் நிலையில் தமிழர்கள் நாக வழிபாடு செய்து வந்திருக்கிறார்கள். தேவர்களுக்கு தேவாமிர்தம் கிடைக்க உதவி செய்த வாசுகி என்ற பெண் நாகர் குலத்தை சேர்ந்த தமிழச்சிதான் என்பது தமிழ் ஆர்வலர்களின் கருத்தாகவும் இருக்கிறது. சங்க இலக்கிய நூல்களில் இருபதுக்கும் மேற்ப்பட்ட பாடல்களில் நாகர்கள் பற்றி கூறப்பட்டுள்ளது. கார்க்கோடகன் என்ற நாகம் வானிலையை  ஆராயும் தன்மை கொண்டிருந்தது என்று வட நாட்டு புராண நூல்கள் குறிப்பிடுகிறதாம். இதேப் போல் கிருஷ்ணன் காலிங்கன் என்ற ஒரு கொடூரமான பாம்பை கொன்றதாகவும் கூறப்படுகிறது. எனவே இவர்கள் புராணங்களில் கூறும் அந்த கொடூர நாகம், நாகர் இன மக்களையே குறிப்பிடுவதாகவும் நாகர்கள் வெறுக்கத்தக்க மக்களாகவே வட நாட்டு புராணங்களில் கூறப்பட்டு இருப்பதையும் வரலாற்று ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். தமிழர்களின் வழிப்பாடுகளில் முருகன், சிவன், இந்திரன் உள்ளிட்ட கடவுளருக்கு மாற்றாக ஒரு கடவுளை உருவாக்கியதாகவும் அவர்தான் கிருஷ்ணன் என்றும் மாயன்களின் கடவுள்களின் தலையில் இறகு இருப்பது போலவே கிருஷ்ணன் தலையிலும் இறகு இருக்கிறது என்பது ஒரு சிலர் முன் வைக்கும் கருத்தாகவும் இருக்கிறது. மாயன் கட்டடங்களில் பாம்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளதாகவும், மாயன்களின் அறிவு வளர்ச்சிக்கு அடிப்படை காரணமாக இருந்தவர் ‘குக்கில்கன்’ என்ற பாம்பு அரசர் என்றும் இவரையே மாயன்கள் கடவுளாகவும் வழிப்பட்டு இருக்கிறார்கள்.


இந்த ‘குக்கில்கன்’ பாம்பு அரசன் கிழக்குப் பகுதியிலிருந்து வந்ததாக கூறப்படுவதால் அவர் ஒரு வேளை சுமேரியாவிலிருந்து வந்திருக்கலாம் அல்லது தென் இந்தியாவிலிருந்து வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிது. மாயன்களின் மன்னர்கள் பாம்பு அரசர்கள் என்று அழைக்கப்படுவதால் அவர்கள் நாகர் இனமாக இருப்பார்கள் என்பதும் ஒரு சாராரின் கருத்தாகவும் உள்ளது. சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் தலைவர் நா. சஞ்சீவி, மாயன்களின் கலாசாரங்களில் தமிழர் மரபு இருப்பதாகவும் அவர்கள் இந்திய நிலப்பரப்பை சேர்ந்தவர்கள் என்பதை மறுக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். அதே போன்று கன்யாகுமரி கடலில் திருவள்ளுவர் சிலை அமைத்த கணபதி என்ற தலைமை ஸ்தபதி மாயன்கள் தமிழர்கள்தான் என்று ஆணித்தரமாக சொல்கிறார். சிவன் புலித்தோல் மீது அமர்ந்து இருப்பது போலவே மாயன்களின் மன்னர்கள் புலியாசனம் அமைத்து அதில் அமர்ந்து ஆட்சி செய்திருக்கிறார்கள்.


இது தவிர மாயன்களின் நாட்காட்டி தமிழர்களின் திருக்கணித பஞ்சாங்கத்தை ஒத்து இருப்பதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இது தவிர தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் கருமாத்தூரில் ஓச்சாண்டம்மன் கோவில் அமைந்துள்ளது. அந்தக் கோவிலில் வழிப்பாடு செய்யும் ஒரு பிரிவு மக்கள் மாயன் என்ற பெயரை தமது குலப் பெயராக கொண்டிருக்கிறார்கள் சின்ன மாயன், பெரிய மாயன், மொக்க மாயன், கூழ் மாயன், நல்ல மாயன், சண்டி மாயன், காசி மாயன்,முத்து மாயன் போன்ற பெயர்களை கொண்டவர்களை இன்றும் அந்தப் பகுதியில் காணலாம். அந்தக் கோவிலில் பூஜை நடக்கும் போது அந்தக் கோவில் பூசாரிக்கு சாமி வந்து ஆடும்போது மாயா... மாயா என்று சத்தம் போட்டு விண்ணைப்பார்த்து சொல்வது இன்று வரை வழமையாக உள்ளதாம். 1514ல் மாயன் இனத்தவர்கள் காணமல் போனதாக சொல்லப்பட்டாலும் இன்று வரை அவர்கள் பற்றிய மர்மக் கதைகள் தொடந்து கொண்டுதான் இருக்கிறது🔵

Friday, May 20, 2022

தொடரும் விவாதங்களுக்கு மத்தியில் ஒரு பகுப்பாய்வு




நாராயணசாமி ஜெயரட்ணம்,  களுத்துறை

இலங்கையில் கஞ்சா பயிர் செய்கையை ஊக்குவித்து அதனை ஏற்றுமதி செய்வதன் மூலம் தற்போது நாட்டில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடி தீர்வுக்கு உதவலாம் என பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே அண்மையில் நாடாளுமன்றத்தில் முன்வைத்த சர்ச்சைக்குரிய யோசனையை பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார சபையில் வழிமொழிந்ததை தொடர்ந்து இன்று கஞ்சா தொடர்பிலான பல்வேறு விமர்சனங்கள், கருத்து முரண்பாடுகள் மற்றும் வாதப் பிரதி வாதங்களுக்கு மத்தியில் நாட்டின் மூலை முடுக்கெங்கும் முக்கிய பேசு பொருளாக மாறியிருக்கிறது. இந்த யோசனை தொடர்பில் பாராளுமன்றத்தின் அனுமதியுடன் சட்டமா அதிபர் திணைக்களம், நீதி அமைச்சு, ஆயுர்வேத வைத்திய சபை, தேசிய போதைப்பொருள் ஆய்வகம் மற்றும் தேசிய அபாயகரமான ஒளடதங்கள் கட்டுப்பாடு சபை என்பன ஆராய்ந்து புதிய சட்டமூலம் ஒன்றை தயாரித்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ள நிலையில் இது தொடர்பாக விரிவான கலந்துரையாடல் ஒன்றை ஆரம்பிக்குமாறு எதிர்க்கட்சியினர் கோரி வருகின்றனர்.

மத்திய ஆசியா மற்றும் இந்திய துணைக் கண்டத்தையும் தாயகமாகக் கொண்டது என நம்பப்படும் கஞ்சா Cannabis குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் இரு வித்திலை தாவரமாகும். கேனபிஸ் சட்டிவா(Cannabis Sativa) கேனபிஸ் இண்டிக்கா (Cannabis Indica) மற்றும் கேனபிஸ் ருடோலிஸ் (Cannabis Ruderalis) எனப்படும் மூன்று சிற்றினங்களைக் கொண்டது. இயற்கையிலேயே இது ஓர் அரியவகை மூலிகைத் தாவரம். இத்தாவரம் இலங்கையில் பொதுவாக எல்லாப் பகுதிகளிலும் காணப்படுகின்ற போதிலும் தனமல்வில, மித்தெனிய, வெல்லவாய, புத்தல மற்றும் எல்பிட்டிய போன்ற பகுதிகளில் நன்கு செழித்து வளர்கின்றது. கஞ்சா சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே பயன்பாட்டில் இருந்ததாக பழங்கால மேற்கு சீன கல்லறைகளில் ஆய்வாளர்கள் மேற்கொண்ட சில ஆய்வுகள் மூலம் கண்டறிந்துள்ளனர். அதேபோல் 483 தனித்தனி வேதிக் கூட்டுப் பொருட்கள் அடங்கியுள்ளதென அறியப்படும் இத்தாவரம் ஆரம்பகாலத்தில் இதன் நார், எண்ணெய் என்பன வாசனைத் திரவியங்கள் தயாரிப்புக்கு பயன்படுத்தப்பட்டன. கிராமப்புற கை மருந்தாகவும், ஆயுர்வேத மற்றும் சித்த வைத்திய மருத்துவ மூலப் பொருட்களாகவும் பொழுதுபோக்கு போதைப் பொருளாகவும், பண்டைய கால போர்க் களங்களில் போர் வீரர்களை ஊக்குவிக்கும் ஊக்க மருந்தாகவும் பயன்பட்டு வந்துள்ளது.

எனினும் காலப்போக்கில் போதை ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு அதிகளவிலானோர் பாவனையில் ஈடுபட்டு வந்ததன் காரணமாகவும் இதனால் ஏற்படும் ஒரு சில பக்க விளைவுகளை கருத்தில் கொண்டும் ஐக்கிய நாடுகள் சபையின் சிபாரிசுக்கு இணங்க இலங்கை உட்பட உலகில் பல நாடுகள் அபாயகரமான போதைப் பொருள் சட்டத்தின் கீழ் கஞ்சாவை தடை செய்து இன்றுவரை
நடைமுறைப்படுத்தி வருகின்றது. இலங்கையில் பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் அவர்களுக்கு எதிராக கண்டி இராச்சியம் எதிர்த்தாக்குதலில் வெற்றிகரமாக ஈடுபட்டு வந்த போது, அவர்கள் போரிடும் முறையை அவதானித்த பிரிட்டிஷார், வீரர்கள் கஞ்சா புகைத்துவிட்டு மரணபயமின்றி யுத்தம் செய்வதை புரிந்து கொண்டார்கள். கஞ்சாவை தடை செய்ய இதுவே காரணமானது. இதற்கு முன்னர் கஞ்சாவுக்கு இலங்கையில் தடை இருக்கவில்லை. மேலும் சிகரட் பாவனையை இலங்கையில் அறிமுகப்படுத்தி அதன் மூலம் பாரிய வருமானத்தை ஈட்டும் இலாப நோக்கிலும் 1929 ஆண்டு திருத்தப்பட்ட அபாயகரமான போதைப் பொருள் கட்டளை எண் 17 என்ற (Poddo) சட்டத்தின் கீழ் அபின் மற்றும் கஞ்சா (Cannabis Sativa) பயிரிடுதல், விற்பனை செய்தல், கைவசம் வைத்திருத்தல், பாவனை, இறக்குமதி  மற்றும் ஏற்றுமதி என்பன தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டது. இத்தகைய குற்றங்களின் அடிப்படையில் (பிரிவு 54 A (C)) உரிய சட்டபூர்வ உரிமம்  அல்லது ஆவணங்கள் மூல அனுமதி BHANG SHOP இல்லாத ஒருவருக்கு ரூபாய் 25,000 தண்டம் அல்லது ஒரு வருடத்திற்கு மேற்படாத எளிய அல்லது கடுமையான சிறை தண்டனை வழங்கப்பட முடியும். அதேவேளை  5 கிலோகிராமுக்கு மேல் கைவசம் இருக்கும் பட்சத்தில் 25,000 - 50,000 வரையிலான தண்டம் அல்லது 5 ஆண்டுகளுக்கு உட்பட்ட சிறைத் தண்டனை வழங்கப்படலாம்.

ஐக்கிய அமெரிக்கா, மொரோக்கோ, ஆப்கானிஸ்தான், மெக்சிகோ, கொலம்பியா, பெரகுவே, ஜமேய்க்கா , கனடா, நைஜீரியா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் பெருமளவில் கஞ்சா உற்பத்தி செய்து அவற்றை ஏற்றுமதி செய்வதன் மூலம் பாரிய அந்நிய செலாவணியை ஈட்டி வருகின்றன. அதேசமயத்தில் கனடா, உருகுவே, கம்போடியா, சிலி ஐக்கிய அமெரிக்காவின் கொலராடோ மற்றும் வாஷிங்டன் மாநிலங்கள், இந்தியாவின் காசி என்றழைக்கப்படும் வாரணாசி பகுதி உள்ளிட்ட மேலும் சில நாடுகளிலும் கஞ்சா பாவனைக்கு சில நிபந்தனைகளின் அடிப்படையில் சட்டபூர்வமான முறையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் 2014 ஆம் ஆண்டில் 15-64 வயதுக்கு இடைப்பட்ட 182.5 மில்லியன் பேர் கஞ்சா பாவனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இது உலக மக்கள் தொகையில் சுமார் 3.8 வீதம் எனவும் ஐக்கிய நாடுகள் சபையின்    (United Nations Office On Drugs and Crime - UNODC) ஆய்வு அறிக்கைகளில் இருந்து தெரிய வருகின்றது. எனினும், மருத்துவ குணங்கள் கொண்ட இந்த மூலிகையை இன்றைய இளைய தலைமுறையினர் பெருமளவில் போதையை ஏற்படுத்தக் கூடிய வகையில் செயற்கையான முறையில் அதிக விஷமூட்டப்பட்ட கேரள கஞ்சா போன்றவற்றை தவறான முறையில் அதிகளவில் பயன்படுத்துவதன் காரணமாக மூளை செயல்திறன் இழந்து மனநிலை பாதிக்கப்படும் நிலைக்கு உள்ளாகின்றனர்.


அதேசமயத்தில் நினைவாற்றலை இழந்து சுயமாக முடிவெடுக்கும் திறனும் பாதிப்புக்கு உள்ளாகிறது. இளமைப் பருவத்தில் ஆண்கள் அதிக அளவில் கஞ்சா பயன்படுத்துவதன் காரணமாக விந்து அணுக்களின் வடிவம், அளவும் மற்றும் அதன் செயல்பாடுகள் மாறுபடுவதால் ஆண்மைத் தன்மையை இழக்க நேரிடுகிறது. இதனைத் தவிர நரம்புத் தளர்ச்சி, பக்கவாதம், கண்பார்வை என்பனவும் பாதிப்புக்குள்ளாவது மட்டுமின்றி கொலை, கொள்ளை, திருட்டு போன்ற பல்வேறு சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர் என வைத்தியர்கள் கூறுகின்றனர். எனினும் வைத்தியர்களின் ஆலோசனைக்கு அமைய விஷம் நீக்கப்பட்ட கஞ்சாவை உரிய முறையில் பயன்படுத்துவதன் மூலம் நுரையீரல் செயற்பாட்டு திறனை மேம்படுத்தலாம். உடல் எடை குறையும். இன்சுலின் மீதான தாக்கத்தால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும். இரத்த அழுத்தத்தைக் குறைத்து இரத்த ஓட்டத்தை சீராக்கும். புற்றுநோயை எதிர்த்துப் போராடும் வேதிப் பொருட்கள் கஞ்சாவில் காணப்படுகின்றன.


மனச் சோர்வு, உற்சாகம் இன்மை மற்றும் மனக்கவலையை (Depression and Anxiety) நீக்கும், எழும்புகளை வலுப்படுத்தும், கண் (Glaucoma) சிகிச்சைக்கு உதவும். மூளை அழற்சியை (Alzheimer's) எதிர்த்துப் போராடும் சக்தி வாய்ந்தது. பார்கின்சன்(Parkinson's and Bowel Disease) நோயால் பாதிக்கப்பட்டவர்களின் நடுக்கம் மற்றும் வலி வேதனையை குறைக்க சிறந்த மருத்துவ குணங்களை கொண்ட மருத்துவ நிவாரணியாக கஞ்சா பெரிதும் உதவுவதாக சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆகையால் போதைப்பொருள் பாவனையாளர்கள் இடையே இருமல் சிரப் வகைகள் மற்றும் நரம்புகள் மூலம் செலுத்தப்படும் ஒரு சில வலி நிவாரணிகளையும் போதைப்பொருளாக பயன்படுத்திவரும் இன்றைய காலத்தில் கஞ்சா ஏற்றுமதியின் மூலம் அந்நிய செலாவணியை பெற முடியும். இன்றைய இளம் தலைமுறையினரிடையே பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் அதிக போதைப்பொருள் பாவனைக்கு தீர்வொன்றை பெற்றுத் தரும் வகையில் விஷம் நீக்கப்பட்ட, மருத்துவ குணங்களை அதிகம் கொண்ட கஞ்சா - உற்பத்தி பொருட்களை அதன்  பாவனையாளர் இடையே அறிமுகம் செய்து அவர்களை ஓரளவாவது அபாயகரமான போதைப் பொருட்களின்
கோரப்படியில் இருந்து மீட்டெடுக்கும் முயற்சிகளை முன்னெடுப்பதில் தவறில்லை என்றொரு வலுவான வாதமும் முன்வைக்கப்படுகிறது🔴

📷  முகப்பு படம்: ஈஸ்வர் ஒளிப்படக் காதலன்