Sunday, September 29, 2019

ராஜகவி ராகில் பேசுகிறார்.

மணி ஶ்ரீகாந்தன்

நான் எத்தனையோ நாடுகளுக்குச் சென்று இருக்கிறேன், பல நாடுகளில் வாழ்ந்தும் இருக்கிறேன். ஆனால் என் தாய் நாட்டுக்கு அடுத்ததாக நான் நேசிப்பது இந்தியாவை. அதிலும் தமிழ் நாடு என் மனசுக்குள் நிறைந்தது. குறிப்பாகச் சென்னை என்னை மிகவும் வசீகரித்த பிரமாண்ட நகரம்.

பலமுறை நான் தமிழ் நாட்டுக்குச் சென்று வந்திருக்கிறேன்.
நான் சென்னைக்கு 1995 ஆம் ஆண்டு தான் முதன் முதலாகச் சென்றேன். சென்னை மணிமேகலைப் பிரசுரம் வெளியிட்ட எனது   நூல்களைப் பெறுவதற்காவும் விருது பெறவும் சென்றேன். வெளி நாட்டவருக்கான விருது பெறும் அந் நிகழ்வு புதுக்கோட்டையில் நடை பெற்றது.

நானும் சந்தப்பா வேந்தர் விருது பெற கொழும்பு விமான நிலையம் சென்றபோது அங்கே சென்னைக்குச் செல்லும் வியாபாரிகள் பலர் சிகரட் மதுபானம் போன்றவற்றை வாங்கி வைத்திருந்ததை
அவதானித்த நான் அவர்களிடம் விசாரித்தேன். நீங்களும் வாங்கினால் சென்னையில் உடனே விற்கலாம் என்றார்கள். என்னிடம் அப்போது 30 ஆயிரம் ரூபாய் இருந்தது. அவ்வளவுக்கும் சிகரட் வாங்கினேன்.

சென்னை விமான நிலையத்தில் சுங்கப் பிரிவினர் என்னைப் பிடித்து
அவ்வளவுக்கும் டியூட்டி கட்டச் சொல்லி சிகரட் பாக்கட்களைப் பறிமுதல் செய்துவிட்டார்கள். 'என்னிடம் பணம் இல்லை, இவற்றை விற்றால்தான் பணம்' என்றேன்.

உடனே சுங்கத்துறை சுப்பிரிண்டனிடம் என்னை அழைத்துச் சென்றார்கள். என்னைப் பற்றிக் கேட்டார்கள். நான் எனது அறிவிப்பாளர் அடையாள அட்டை லேனா தமிழ்வாணன் என்னை வரச் சொல்லி அனுப்பிய கடிதம், புதுக் கோட்டை விருது விழா அழைப்பிதழ் எல்லாவற்றையும் காட்டினேன்.

என்னைப் பாராட்டினார்கள். அவர்களே டியூட்டி கட்ட 7 ஆயிரம் ரூபா இந்திய நாணயம் தந்து கட்டச் சொல்லி பறிமுதல் செய்த சிகரட் பக்கட்டுகளையும் தந்து இலங்கை திரும்பும் போது உங்கள் நூல்களை எந்த வித ட்யூட்டி இல்லாமல் கொண்டு செல்லலாம் என்றும் சொன்னார்கள்.

நான் இதை ஏன் சொல்கிறேன் என்றால், ஓர் எழுத்தாளனை கவிஞனை, கலைஞனை தமிழ் நாடு எவ்வளவு மதிக்கிறது என்பதை
சொல்லத்தான் அதன் பின் நான் பலமுறை சென்னைக்குச் சென்றிருக்கிறேன். வியாபார நோக்கமாக எப்பொருளையும் நான் கொண்டு சென்றதில்லை.

நான் திரைப்படத்துக்குப் பாடல் எழுத முதல் தடவையாக இயக்குனர், வசனகர்த்தா, தயாரிப்பாளர், ஏ.ஆர்.கே. ராஜ ராஜா என்னைச் சென்னைக்கு அழைத்தார். படம் 'மீண்டும் அம்மன்'. எனக்கு கார் தந்து காரோட்டி தந்து உதவியாளர்கள் தந்து தங்க 3 ஸ்டார் ஹோட்டல் தந்து கவனித்தார். இங்கே கூட தமிழ் நாட்டின் விருந்தோம்பலை அனுபவ ரீதியாக அனுபவித்தேன்.

இன்னும் ஒருமுறை சுப தமிழ்வாணன்; அவருடைய திரைப் படத்திற்குப் பாடல் எழுதுமாறு சென்னைக்கு என்னை அழைத்தார்.
நான் விமான நிலையத்தில் வந்து இறங்கி வெளியே வந்ததும் என் உயரத்திற்கு ரோஜாப் பூமாலை அணிவித்து என்னை ஊர்வலமாக அழைத்துச் சென்றதை என் வாழ்வில் மறக்க முடியாது.

மற்றோரு முறை பழம் பெரும் நடிகை ராதிகா, தான் இயக்கும் ‘கூட்ஸ் வண்டியிலே’ திரைப் படத்திற்காக என்னைப் பாடல் எழுதவும் என் மகள் ஹனீக்கா அப்பாடலைப் பாடவும் அழைத்திருந்தார்.
அவர் தன் வீட்டிலே ஒரு வாரம் எங்களைத் தங்க வைத்து
ஆதரித்தார் இப்போதும் ராதிகா குடும்ப நண்பியாக இருக்கிறார்.

வீ.கே.டி.பாலனுடன்
பிரபல தொழில் அதிபர் கலைமாமணி வி.கே.டி. பாலன் அவர்கள்
என்னை அழைத்து விருந்தோம்பல் செய்திருக்கிறார்.
எனக்குத் தனிப்பட்ட முறையில் பொன்னாடை போர்த்தி விருது வழங்கி கௌரவித்திருக்கிறார்.

தமிழ் நாடு மீதான என் அனுபவங்களைப் பொறுத்த வரையில்
நிறையச் சொல்லலாம். ஒருமுறை எனது பாஸ் போட் தொலைந்து விட்டது. நான் பொலிஸில் முறைப்பாடு செய்த போது
உடனே ஆட்டோ சாரதி பொலிஸில் கொண்டு வந்து என்னிடம் ஒப்படைத்தார்.

நான் ஒருமுறை ஆட்டோவில் கொஞ்சம் தூரப் பயணம் செய்து கொண்டிருந்தேன். ஆட்டோ சாரதி என்னைப் பற்றி விசாரித்தான்.
நான் என்னைப் பற்றிச் சொல்லும் போது இலங்கை வானொலி அறிவிப்பாளன் என்று சொன்னேன் என் பெயரைக் கேட்டான்.
சொன்னேன் ‘உங்கள் அகச் சோலையில் மகிழ்ச்சிப் பூக்கள் பூத்துக் குலுங்க விடை பெறுவது ஏ.சி. ராகில்’ என்று சொல்லி,

“அது நீங்கதானா சார்?” என்று கேட்டு என்னை வியப்பில் ஆழ்த்தி எங்கள் வானொலியின் பெருமை சொன்னான். இறங்கும் போது ஆட்டோ கூலியை வாங்க மறுத்து அவனது பேரன்பினை வெளிப்படுத்திச் சென்றான் பாருங்கள். 

இயக்குநர் ஆணைவாரி வெற்றிப் படங்கள் தந்த நல்ல இயக்குநர்.
நான் சென்னைக்குச் செல்லும் போதெல்லாம் அவருடைய மோட்டார் சைக்கிளில் என்னை ஏற்றிக்கொண்டு சென்னையை சுற்றிக் காட்டுவார்
சினிமா பிரபலங்களை அறிமுகம் செய்து வைப்பார் ஏ.வி.எம். ஸ்ரூடியோ தொடக்கம் மெரினா பீச் வரை நாங்கள் சுற்றித் திரிவோம்.

தமிழ் நாட்டில் சைவக்கடைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை.
சைவச் சாப்பாடுகள் மிகவும் சுவை மிக்கவை ஒரு தட்டில் 20 வகை மரக்கறி உணவுகள்! அப்படியான கலையும் சுவையும்
அன்பும் நட்புக்கும் உரிய வந்தாரை வாழ வைக்கும் நாடே தமிழ் நாடு!🔴

Sunday, September 22, 2019

பூட்டுத்தாக்கு டூரிங் டாக்கீஸ்

மணி ஸ்ரீகாந்தன்.

பிலிம் சுருள் யுகத்திலிருந்து க்யூப் வெஸ் டெக்ஸ் புரஜெக்டர் இயந்திரத்துக்கு மாறிய சினிமா, 2டி, 3டி என்று பல பரிணாமங்களை பெற்று விட்டது.
சினிமா புதிய நவீனத்துவம் பெற்றது போலவே சினிமா தியேட்டர்களும் அதி நவீன வசதிகளுடன் பிரமாண்டமான முறையில் மாற்றம் கண்டுவிட்டன.
அதேப்போல் தொலைக்காட்சி, செல்போன் திரைக்காட்சி உள்ளிட்டவைகள் மக்களை ஒரே இடத்தில் கட்டிப்போட்டு விட்டதால் தியேட்டர்களின் எண்ணிக்கையும் குறைவடைந்து விட்டது.

இரண்டாயிரத்துக்கு அதிகமான தியேட்டர்களை கொண்டிருந்த தமிழகத்தில் இன்று வெறும் 860 தியேட்டர்கள்தான் இருக்கின்றனவாம்.
சினிமா தியேட்டர்களின் தொடக்க காலத்தில் கட்டாந்தரை தியேட்டர்களே அமைக்கப்பட்டிருந்தன. தமிழகத்தில் மட்டும் சுமார் 1300 தியேட்டர்கள் இயங்கி வந்திருக்கின்றன. இந்த தியேட்டர்களை டூரிங் டோக்கீஸ், டென்ட் கொட்டாய், கீற்று கொட்டாய் என்று பல பெயர்களில் அழைத்து வந்தார்கள்.
தமிழகத்தைப் போலவே இலங்கையிலும் டென்ட் கொட்டாய்களே இயங்கி வந்திருக்கின்றன.

தார்ப்பாய்களை அல்லது, தென்னம் ஓலையை கூரையாக போட்டு சர்க்கஸ் கூடாரம் போல கம்புகளால் முட்டுக்கொடுத்து அந்தக் கூடாரத்தை நிறுத்தியிருப்பார்கள்.
மணல் தரையில் எல்லோரும் அமர்ந்தும், படுத்துக்கொண்டும் படம் பார்ப்பார்கள். பெஞ்சில் அமர்ந்து பார்ப்போருக்கு கட்டணம் கொஞ்சம் அதிகமாக இருக்கும்.
இப்போது இலங்கையில் டுவரிங் டோக்கீஸ் தியேட்டர்களை எங்கேயும் பார்க்க முடிவதில்லை. தமிழகத்திலும் கால மாற்றத்துக்கு அமைவாக டுவரிங் டோக்கீஸ் விரல் விட்டு எண்ணும் அளவுக்கு சுருங்கி விட்டது. மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட சில இடங்கில் மட்டும் இயங்கி வருகிறது.
டுவரிங் டோக்கீஸ் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? இந்தக் கொட்டகைகள் ஒரே இடத்தில் வைக்கப்படுவதில்லை. சர்க்கஸ் நடத்திவிட்டு கூடாரத்தைக் கிளப்பிக் கொண்டு வேறிடம் செல்வது மாதிரித்தான் ஒரு கிராமத்தில் படம் காட்டி மக்கள் வரவு குறைந்ததும் டென்ட் தியேட்டரைப் பிரித்து மாட்டு வண்டில்களில் ஏற்றிக் கொண்டு தூர கிராமம் அல்லது நகரத்துக்கு படம் காட்டப் போய் விடுவார்கள். இப்படி பயணம் (TOUR) போவதால் தான் டுவரிங் டோக்கீஸ் எனப் பெயர் வந்தது. திரைப்படங்கள் இந்தியாவுக்கு புதிதாக அறிமுகமாகியபோது, முதலில் மௌனப் படங்களும் பின்னர் பேசும் படங்களும் வந்தன. மௌனப் படங்கள் திடீரென பேசும் படங்களானதும் அந்த வகைப்படங்கள் பேசும் TALKIE என அழைத்தார்கள். அவற்றை திரையிடும் கொட்டகைகள் டோக்கீஸ் ஆயின. சரி விஷயத்துக்கு வருவோம்.
இந்த தியேட்டர்களில் சட்டத்துக்கு அமைவாக தரை டிக்கட்டுகள் இல்லை. எல்லோரும் ஆசனத்தில் அமர்ந்துதான் படம் பார்க்க வேண்டும்.
ஆனாலும், டெண்ட் கொட்டாய் என்றால் அந்த மணல் தரையில் அமர்ந்து வேர்க்கடலையை கொறித்துக் கொண்டு படம் பார்ப்பது ஒரு அலாதி இன்பம். அப்படியொரு தியேட்டர் கிடைக்குமா என்று தேடிப்பார்த்ததில் வேலூர் பூட்டுத்தாக்கு கிராமத்தில் ஒரு தியேட்டர் இருப்பதை தெரிந்து கொண்டு அந்த தியேட்டரை நோக்கி பயணித்தோம்.

வேலூரை அடுத்துள்ள சென்னை, பெங்களுரு தேசிய நெடுஞ்சாலைக்கு அருகிலேயே பூட்டுத்தாக்கு என்ற சிறிய கிராமம் அமைந்திருக்கிறது.
அந்தக் காலத்து டென்ட் கொட்டாய் போலவே இரட்டைக் குழாய் ஒலிபெருக்கியில் ‘விநாயகனே விணைதீர்ப்பவனே…’ பாடலை ஒளிபரப்பி ஊரைக் கூட்டிக்கொண்டிருந்தது கணேஸ் திரையரங்கம்.

தார்ப்பாய், தென்னங்கீற்றுக்கு பதிலாக தகர சீட் போடப்பட்டிருந்தது.  மின் விசிறி, டிடீஎஸ் சவுண்ட், 70mm அகன்ற திரை என்று சகல வசதிகளுடன் இருந்த தியேட்டரில் பழமை மாறாத அந்த மணல் தரை டிக்கட்டும் இருந்தது. பெஞ்சுகள் (ஆசனங்கள்) ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக இருந்தன.

அந்த ஆசனங்களில் அமர்வதற்கு ஆண்களும், பெண்களும் தனித்தனி வழிகளில் செல்வதற்கு சிறிய பாதைகளும் அமைக்கப்பட்டிருந்தது.
அந்த தியேட்டரில் மொத்தம் இரண்டு கிளாஸ்கள் மட்டுமே இருந்தன. அதோடு தினசரி மாலை ஆறு மணிக்கும் ஒன்பது மணிக்குமாக இரண்டு காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன.

தியேட்டர் உரிமையாளர்
கணேஸ்
வேலூர் சுற்று வட்டாரத்தில் உள்ள தியேட்டர்களில் சினிமா டிக்கெட் விலை நூற்றி ஐம்பது ரூபாவுக்கு விற்கும் போது இந்த டூரிங் டோக்கீஸ்சில் 25ரூபாவுக்கு டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன.
இது எப்படி சாத்தியமாகிறது என்று டூரிங் டோக்கீஸ் உரிமையாளர் கணேஸ்சிடம் கேட்டோம்.

“கோடிக்காணக்கான ரூபா செலவு செய்து கட்டப்பட்ட தியேட்டர்களின் பராமரிப்பு, சம்பளம் என்பதனால் அங்கே டிக்கெட் விலை ரொம்ப அதிகமாகவே இருக்கும், ஆனால் இங்கே அப்படி அல்ல ஏசி, மின் விளக்கு பிரமாண்டம் என்று எதுவும் இல்லை. இயற்கை காற்று கட்டாந்தரை டிக்கெட் என்று இருப்பதால் குறைந்த விலைக்கு டிக்கெட்டுகளை விற்கிறேன். அதனால் பெரும்பாலானவர்கள் இங்கே வருகிறார்கள்.” என்று நியாயமான காரணத்தை சொல்லும் அவரிடம்,

“குறைந்த விலைக்கு டிக்கெட்டுகள் விற்கப்படுவதால், நீங்கள் எதிர்பார்க்கும் இலாபம் கிடைக்கிறதா..?”என்று கேட்டோம்.
“நான் இந்த தியேட்டர் தொழிலை இப்போ முப்பத்தைந்து வருடங்களாக செய்து வருகிறேன். இந்த சுற்று வட்டாரத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அந்த கிராமங்களை சேர்ந்த சாதாரண ஏழை மக்கள்தான் இந்த தியேட்டருக்கு வருகிறார்கள். பெரிய இலாபம் இல்லைதான் என்றாலும் ஒரு ஆத்ம திருப்திக்காக இந்த தொழிலை தொடர்ந்து செய்து வருகிறேன். 
ஒரு காட்சிக்கு நூறு, நூற்றி ஐம்பது பேர் வரையில் படம் பார்க்க வருகிறார்கள். ஓரளவு புதிய படங்களையும் பழைய படங்களையும் திரையிடுகிறோம். பட  வாடகை ஐந்தாயிரத்தில் இருந்து பத்தாயிரம் வரை. அதோடு போஸ்டருக்கான செலவு ஆயிரம் ரூபா, போஸ்டர் ஒட்டுவதற்கான செலவு ஆயிரம்.  ஒரு நாளுக்கான தியேட்டர் செலவு 1300 என்று செலவாகிறது.
ஐந்து வருடத்துக்கு ஒரு முறை அனுமதி பத்திரம் புதிதாக எடுக்க வேண்டும். இரண்டு வருடத்துக்கு ஒரு முறை பராமரிப்பு தகுதிச் சான்றிதழை புதுப்பிக்க வேண்டும்.
ஆனாலும் முன்னர் போல தியேட்டர் தொழிலுக்கு எந்த தொல்லையும் பிரச்சினையும் இல்லை. அதற்கெல்லாம் காரணம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான். தடையில்லா மின்சாரம் என்று எங்களுக்கு இந்தத் தொழிலில் எந்தக் கஷ்டத்தையும் கொடுப்பதில்லை.
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஜெயலலிதாவைவிட இவர் எவ்வளவோ மேல்” என்று எடப்பாடிக்கு புகழ் சேர்த்தார்!

“பழைய படங்களுக்கான மவுசு எப்படி இருக்கிறது?” என்றோம்.
“போன வாரம்தான் அடிமைப் பெண் படம் போட்டோம். கூட்டம் பரவாயில்லை. நஷ்டமில்லாமல் ஓடியது. சிவாஜிக்கும் நல்ல கூட்டம் வருகிறது. சிவாஜியை சினிமாவில் சேர்த்துவிட்ட பெருமாள் முதலியார் வீடு இந்த ஊருதான், அதனால் அவருக்கும் கூட்டம் இருக்கிறது. ஆனாலும் எம்.ஜி.ஆர்தான் முதலிடத்தில் இருக்கிறார்.

புதியவர்களில் விஜய் முதலிடத்திலும், அஜித் இரண்டாம் இடத்திலும், ரஜினி மூன்றாம் இடத்திலும் இருக்கிறார்கள்.” என்று கணேஷ் தமது தியேட்டரில் யாரெல்லாம் மாஸ் என்று ஒரு பட்டியலை சொல்லி எம்மை அதிரவைத்தார்.
அந்தக் காலத்தில் டெண்ட் கொட்டாய்க்கு படம் பார்க்க வரும் அடித்தட்டு மக்கள் சாமி பாட்டு உக்கிரமாக திரையில் வரும்போது சாமி வந்து ஆடுவார்களாம். அப்போது காட்சியை நிறுத்தி விட்டு அவர்களின் சாமி அருளை நிறுத்துவதற்கு தியேட்டர் நிர்வாகம் படாதபாடுபட்டு முடியாத பட்சத்தில் ஊருக்குள் ஆள் அனுப்பி பூசாரியை வரவழைத்து வேப்பிலை அடித்து சாமியை மலையேறச் செய்வார்களாம்.
சில தியேட்டர் நிர்வாகிகள் புத்திசாலித்தனமாக சாமி படங்களை திரையிடும் போது ஒரு பூசாரிக்கு இலவச பாஸ் கொடுத்து தியேட்டருக்குள் விபூதி, எலுமிச்சை பழத்தோடு அமரவைத்திருப்பார்களாம்.

பெண்கள் சாமி வந்து நாக்கை துருத்திக்கொண்டு, மிரட்டும் முழியோடு  ஆடும்போது, இந்த உள்ளுர் பூசாரி உடனே சாமியை மலையேறச் செய்துவிடுவாராம்.
இந்த விடயத்தை கணேஸிடம் கேட்டப்போது, “இப்போது பரவாயில்லை திருந்திவிட்டார்கள்”என்று சிரிக்கிறார்.
எத்தனையோ பொழுதுபோக்கு அம்சங்கள் வந்தாலும், களியாட்டத்தின்  தவிர்க்க முடியாது முதலிடத்தில் இருப்பது சினிமாதான். அது கடந்து வந்த பாதையை காலத்தின் கண்ணாடியாய் நின்று எமக்கு ஞாபகப்படுத்தி கொண்டிருப்பது எஞ்சி இருக்கும் இந்த டென்ட் கொட்டாய்கள்.🔴

Saturday, September 21, 2019

இலங்கை திரையுலகில் நடிகை ருக்மணி தேவிக்கு பிறகு ஜொலிக்கும் தமிழ் நடிகை பூஜாதானே..?

கே. பிரியதர்ஷனி,  கெக்கிராவை.

இலங்கையின் சிங்கள தாயாருக்கும், பெங்களுரைச் சேர்ந்த தகப்பனுக்கும் பிறந்தவர்தான் நடிகை பூஜா உமா சங்கர். அவர் ஒரு இந்திய நடிகை. இந்திய திரையுலகில் நடித்துக்கொண்டிருந்தவர் அங்கே மார்க்கெட் சரிந்ததும் இலங்கைக்கு வந்துவிட்டார்.

அதனால் அவரை இலங்கை நடிகை என்று சொல்ல முடியாது. அந்த வகையில் தற்போது இலங்கை திரையுலகில் ஜொலிக்கும் நடிகையாக இருப்பவர் நிரஞ்சனி சண்முகராஜா.
இவர் கண்டியை பிறப்பிடமாக கொண்ட ஒரு தமிழச்சி!
நடிகை ருக்மணி தேவிக்கு பிறகு சிங்களப் படங்களில் நாயகியாக வலம் வருகிறார்.
இலங்கை தமிழ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பணியாற்றியவர் ‘இனியவன்’ படத்தின் மூலம் திரையுலக பிரவேசம் செய்தார்.
இனியவன் படத்தில் நடித்ததிற்காக இவருக்கு சிறந்த நடிகைக்கான விருதும் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து ‘ரது சமனல சிஹினய’, ‘கோமாளி கிங்ஸ்’, ‘சன்ஸ் பாதர்ஸ்’, ‘சொப்பன சுந்தரி’, ‘சுனாமி’, உள்ளிட்ட படங்களோடு, இலங்கையில் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள ‘கிரிவெசிபுர’ என்ற வரலாற்று படத்திலும் நாயகியாக நடித்திருக்கிறார்.
இன்றைய திகதி வரையிலும் நிரஞ்சனிதான் முன்னணியில் ஜொலிக்கிறார், யாருக்கு தெரியும் நாளை இவருக்கு போட்டியாக இன்னொருவர் களமிறங்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

நயனுக்கு இந்த மாதம் திருமணம் நடக்கப் போகிறதாமே!
ஆர்.கீர்த்தி, கஹவத்தை.
இன்றைய தமிழ் திரையுலகில் சூடான காதல் ஜோடின்னா அது நயன், விக்னேஷ்சிவன்தான். இவர்கள் இருவரும் செய்யும் காதல் லூட்டிகளை பார்த்து பலரும் புகைந்து போகிறார்களாம், இவர்கள் இருவரும் காதலித்து வரும் நிலையில் இதுவரை தங்கள் திருமணம் பற்றி எந்த ஒரு வார்த்தையையும் தெரிவிக்கவில்லை. ஆனால், இவர்கள் இருவரும் அடிக்கடி ஊர்ச்சுற்றிக் கொண்டும், நெருக்கமாக புகைப்படங்களை எடுத்துக்கொண்டு அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாகவும் வைத்து வருகின்றனர்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற விக்னேஷ் சிவனிடம், நயன்தாரவுடன் எப்போது கல்யாணம் என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த விக்னேஷ் சிவன், இன்னும் தெரியலயே, தெரிந்தது என்றால் சொல்லலாம் தெரியாத விஷத்தை பற்றி கேட்டால் என்ன சொல்வது? என் கல்யாணத்த பத்தி என்னோட அம்மாகிட்ட கேட்டு உங்களுக்கு சொல்றேன் என்று மழுப்பலான ஒரு பதிலை அளித்துள்ளார்.
இதேவேளை சமீபத்தில் அத்திவரதரை இந்த காதல் ஜோடி தரிசித்துவிட்டு வந்திருக்கிறார்கள்.
இருவரும் ஒரே அறையில் தங்குகிறார்களாம் அப்போ அவங்க கணவன், மனைவிதானே இனி என்ன திருமணம்..?

அமலாபாலுக்கு திருமண ஆசை இல்லையா..?
என். கேதீஸ், வவுனியா.

திருமண ஆசை சலித்து விட்டதால்தானே இயக்குனர் ஏ.எல்.விஜயிடமிருந்து விவாகரத்து வாங்கிவிட்டு பிரிந்திருக்கிறார்.
கொஞ்ச காலம் அமலாபால் நினைவாகவே இருந்த இயக்குனர் ஏ.எல்.விஜய் இப்போது ஐஸ்வர்யா என்ற மருத்துவரை திருமணம் முடித்து குடுப்பமாகி விட்டார்.
ஆனால் அமலாபால் ஒரு சுதந்திர பறவையாக பறந்து கொண்டிருக்கிறார்.
திறமையான நடிகையான அமலாபால் திருமண வாழ்க்கைக்கு பிறகு படங்களில் முழுமையாக கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.
‘ஒரு முறை திருமண வாழ்க்கையில் பட்ட அவஸ்தைகள் போதும் இனி அதுல போய் மாட்டிக்க கூடாது’ என்பதில் அவர் ரொம்பவும் கவனமாக இருக்கிறார்.
நீங்க வேற சும்மா அவருக்கு திருமண ஆசையை வளர்காதீர்கள்.


கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு திரைப்படம் வருவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லையே…?
வாத்தியார் ரசிகன் ஆர். ஞானசேகரன், களுவாஞ்சிக்குடி.
எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆன பிறகு உலகம் சுற்றும் வாலிபன் இரண்டாவது பாகமாக எடுக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால் எம். ஜி. ஆருக்கு நேரமின்மை காரணமாக கைவிடப்பட்டது.
அந்த படத்தை தற்போது புதிய அனிமேஷன் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி
கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’ என்ற படத்தை ஐசரி கணேஷ் தயாரித்து வந்தார்.
ஆனாலும் படத்தின் அரைவாசி படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் பணப் பிரச்சினை காரணமாக  பட வேலைகளை நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.
முப்பது ஆண்டுகளுக்கு பிறகு எம்.ஜி.ஆரின் கனவை நனவாக்க சிலர் எடுத்த முயற்சிகள்தான் இந்தப் படம். ஆனால் இந்தப் படமும் இழுப்பறி நிலையில் வரும் ஆனா வராது என்ற நிலையில்தான் இருக்கிறது.

Saturday, September 14, 2019

வியத்தகு வேலூர்


மணி ஸ்ரீகாந்தன்

இந்திய மாநிலங்களில் மிகவும் தொன்மையான வரலாற்றை கொண்ட பெருநிலமாக இருப்பது நமது தமிழகம்தான். வடக்கே கஜினி முகமதுவின் தொடர்ச்சியான படையெடுப்பின் போதும், மொகலாலயர்களின் ஆக்கிரமிப்பின் போதும் இந்திய வரலாற்று சுவடுகள், ஆவணங்கள் அனைத்தும்  அழிந்து போனது.

அஷ்ரப் அலி

இன்னும் தஞ்சை பெரிய கோவில் உள்ளிட்ட வரலாற்று சின்னங்கள் அப்படியே நம் கண்முன்னே நிமிர்ந்து நிற்பதற்கு விஜயநகர பேரரசு நமக்கு துணையாக இருந்திருக்கிறது.
ஆங்காங்கே முன்னெச்சரிக்கையாக நடந்துகொண்டதும் ஒரு காரணம்.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தொன்மையான வரலாறு இருக்கிறது. ஆனாலும் பாதுகாக்கப்பட வேண்டிய பல புராதான சின்னங்கள் அழிந்து விடும் நிலையில
இருக்கிறது.

“இவைகள் வெறும் நினைவு சின்னங்கள் மாத்திரம் அல்ல அவைகள் அனைத்தும் ஒரு காலத்தின் கண்ணாடி நாம் எப்படி வாழ்ந்தோம் என்பதை இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு நமது புகழை பறைசாற்றப்போகும் பொக்கிஷங்கள் என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்” என்கிறார் வேலூரைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர் அஷ்ரப் அலி.

தேசிங்கு நினைவு மண்டபம்

‘வியக்கத்தக்க வேலூர்’ என்ற மிகவும் சிறப்பான வரலாற்று நூலை வெளியிட்டு தமிழக ஊடகங்களின் விமர்சனங்களையும், பலரின் பாராட்டுதலையும் அஷ்ரப் அலி தனதாக்கி கொண்டிருக்கிறார்.

“எனக்கு வரலாறுன்னா ரொம்ப பிடிக்கும், அதனால் இந்த புத்தகத்தை மிகவும் ரசித்து எழுதியிருக்கிறேன். இன்னும் வேலூரை சுற்றியுள்ள பல வரலாற்று உண்மைகளை வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதில் எனது தேடுதல் மேலும் பன் மடங்காக அதிகரித்து உள்ளது.” என்றவர்,

"வேலூர் மாநகரில் பிரமாண்டமாக அமைந்திருக்கும் கோட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் பாளையக்காரர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களின் வாழ்விடம் அமைய பெற்றுள்ள இடங்கள்தான் தோட்டபாளையம், சங்கரன் பாளையம், கலாஸ் பாளையம், ராமநாயக்கன் பாளையம் உள்ளிட்ட பெயர்களில் இன்றும் அழைக்கப்பட்டு வருகிறது.

வேலூருக்கு அருகே இருக்கும் தர்மபுரியின் பழைய பெயர் தகடூர், தொண்டை மண்டலத்தை விவசாய பெருநிலமாக மாற்றும் போது இராஜராஜ சோழன் இரும்பிலான ஏர், தகடுகளை இந்த ஊரில் செய்ததாகவும்  அதனால் இந்த ஊர் தகடூர் என்றே புராண காலத்தில் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது.என்று தர்மபுரிக்கு ஒரு நீண்ட விளக்கத்தை அஷ்ரப் அலி எம்மிடம் பகிர்ந்தார்.
வேலூர் விருதம்பட்டு, புதிய பள்ளி வாசல் வீதியில் அமைந்திருக்கும் இவரின் இல்லத்தில் நிறைய பழைய அபூர்வமான பொருட்களையும் சேகரித்து வைத்திருக்கிறார்.

சோழர்கால போர்வாள்

சோழர்கால நாணயங்கள், அழங்கார பொருட்கள், ஆயுதங்கள் என்று பல இவரிடம் இருக்கிறது. ஒரு பழங்கால துருப்பிடித்த வாளை எடுத்து பார்த்துவிட்டு, அந்த வாள் பற்றி கேட்டதற்கு,
“இது இராஜஇராஜ சோழன் காலத்து வீர வாள் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.
சோழர்களின் இரண்டாவது தலைநகராக இருந்ததுதான் வேலூரில் இருக்கும் சோழவரம். இந்த பகுதியில் உள்ள ஒரு சோழ போர் வீரன் போருக்கு சென்று விட்டு சோழவரத்துக்கு திரும்பியிருக்கிறான். அவன் வரும்போது அடை மழை பெய்து கொண்டிருந்ததாம். சோழவரத்தின் மலையோரம் வழியாக குதிரையில் அவன் வரும் போது ஒரு பெரிய மண் சரிவு ஏற்பட்டு அந்த சோழ போர் வீரன் மண்ணில் புதைந்து போனானாம்.
அப்போது அந்த வீரனின் வாளும், கேடயமும் மலைக்கு பக்கத்திலிருந்தவர்களால் மீட்கப்பட்டு  காலா காலமாக பாதுகாக்கப்பட்டு வந்திருக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பாக நான் சோழவரம் சென்று வரலாற்று தேடலில் ஈடுபட்டிருந்த போது இந்த தகவலும் வாளும் எனக்கு கிடைத்தது.
கேடயம்  மிகவும் மோசமான நிலையில் சிதைவடைந்து இருந்ததினால் அதை நான் வாங்கவில்லை. இந்த வாளை மட்டும் சம்பந்தபட்டவர்களிடம் பணம் கொடுத்து வாங்கி இப்போ நான் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்.”
என்றார்.
தேசிங்கு மண்டபத்தின்
உட்புறம்

தமிழகத்தின் தொன்மையான பல இடங்கள் தனியார்களின் வசம் இருப்பதாக வேதனையை வெளிப்படுத்தும் அஷ்ரப்அலி தேசிங்கு ராஜனின் நினைவு மணை;டபங்கள் கவனிப்பாரற்ற நிலையில் தனியார் வசம் இருப்பதை தெரிவித்தார்.
“இராணி பேட்டை பாலாற்றங்கரைக்கு அருகிலேயே இந்த நினைவு மண்டபங்கள் இருக்கிறது.
செஞ்சியை ராஜா தேசிங்கு ஆட்சி செய்த போது ஆற்காட்டு நவாப் சதாத்துல்லாகான் செஞ்சியை தனது ஆளுகைக்கு கீழ் கொண்டு வர போர் நடத்தியிருக்கிறார். அந்த போரில் மன்னர் ராஜா தேசிங்கு வீர மரணம் அடைந்தார்.
ராஜாதேசிங்கு உயிர் துறந்ததை கேள்விப்பட்ட மன்னரின் மனைவி ராணிபாய் அந்தக் காலத்தில் இருந்த இராஜபுத்திர வழக்கப்படித் தீக்குளித்து உடன் கட்டை ஏறினாள்.
இதனை கேள்விப்பட்ட  ஆற்காட்டு மன்னர் சதாத்துல்லா கான் மன வேதனை அடைந்து, அந்த ராணியின் நினைவாக வேலூருக்கு அருகே ராணிப்பேட்டையை உருவாக்கினார்.

மக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட மன்னர் ராஜா தேசிங்கு, அவரது மனைவி ராணிபாய் இருவருக்கும் இரண்டு நினைவு மண்டபங்களை அழகுற அமைத்திருந்தார். இந்த மண்டபம் கி.பி.1714ம் ஆண்டு அமைக்கபட்டிருக்கிறது.
பச்சை நிறக்கற்களால் அமைக்கப்பட்டிருக்கும் அந்த நினைவு மண்டபம்  மிகவும் மோசமான நிலையில் சிதைவடைந்து காணப்படுகிறது.
சமீபத்தில் இந்த நினைவு மண்டபங்களை பார்த்து வர சென்றிருந்தேன். அப்போது அந்த இடத்திலிருந்த ஒருவர் ‘இந்த இடம் எங்களுடைய பூர்வீக சொத்து இதனை யாரும் பார்க்கவோ, படமெடுக்கவோ முடியாது’ன்னு சொல்லி என்னை விரட்டாத குறையாக வெளியேற்றினார்.
என்ன செய்வது இந்த நிலையில்தான் நமது புராதான சின்னங்கள் இருக்கிறது. எனது இந்த பேட்டி உங்கள் சஞ்சிகையில் வெளியாகும் போது அந்த நினைவு சின்னங்கள் இரண்டும் அந்த தனியாரினால் இடித்து தரை மட்டமாக்கப்பட்டிருக்கலாம். என்று வேதனையோடு தனது நேர்காணலை அஷ்ரப்அலி நிறைவு செய்தார்.

வியக்கத்தக்க வேலூர்

மணி ஸ்ரீகாந்தன்.

இந்திய மாநிலங்களில் தமிழகம் மிகவும் தொன்மையான பெருநிலமாக இருந்து வருகிறது. இதில் அமையப்பெற்றுள்ள பல ஊர்கள் வரலாற்று சிறப்புப் பெற்ற இடங்களாக நமது புராணங்களில் பதியப்பெற்றுள்ளது.
இதில் சில நகரங்கள் அழிந்து விட்டாலும் அதன் எச்சங்கள் இன்றும் நம்மை மிரட்டும் தோரணையோடு நிமிர்ந்து நிற்கிறது.

பண்டைய நகரங்களில் ஒன்றான நமது காஞ்சிபுரத்துக்கு அருகில் இருக்கும் நகரம்தான் வேலூர் தமிழக நகரங்களில் இந்த வரலாற்று மண் பல ஆச்சர்யங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

அஷ்ரப் அலி

வேலூரை சுற்றிலும் எங்குப் பார்த்தாலும் கண்ணுக்கெட்டிய தூரத்துக்கு மலைகள் தெரிகிறது. அதோடு வேலூரின் கம்பீரத்துக்கு இன்னொரு சாட்சியாக இருப்பது வேலூர் கோட்டை இந்த வரலாற்று மண்ணைப் பற்றி சுமார் நாற்பது ஆண்டுகள் ஆராச்சி செய்திருப்பவர்தான் வரலாற்று ஆர்வலர் அஷ்ரப் அலி திருநெல்வேலியை சொந்த ஊராக கொண்ட ஓய்வு பெற்ற தொலைத்தொடர்பு அதிகாரி.
வரலாற்று ஆர்வலரான இவர் மலையேறுதல் மற்றும் நடைப்பயணங்களிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவரின் தேடல்களின் பயனாக ‘வியக்கத்தக்க வேலூர்’என்ற நூலை ஆங்கிலத்தில் வெளியாகும் நெஷனல் ஜியோகிராபி நூலுக்கு நிகராக படைத்திருக்கிறார்.
தமிழக வரலாற்றில் ஒரு ஊரைப்பற்றிய ஆவண படைப்பாக இந்த நூல் முதன் முதலாக வெளியாகி இருக்கிறது. என்பதை பெருமையோடு சொல்லிக்கொள்ளலாம்.


“நான் இருபது வயது வரை திருநெல்வேலியில்தான் இருந்தேன்.திருச்செந்தூருக்கு பக்கத்திலிருக்கும் உடன்குடிதான் என் சொந்த ஊர். எனக்கு இந்த வரலாற்று தேடல்களின் மீதான ஆர்வத்துக்கு காரணம் ஒருநாள் நான் என் தந்தையோடு பள்ளிக்கு பஸ்சில் செல்லும் போது ஆதிச்சநல்லூரில் பாதையை அகலமாக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.
அப்போது பாதையின் ஒரு பக்கத்தில் வெட்டப்பட்ட மண் மேட்டில் பழங்காலத்தில்  சவங்களை அடக்கம் செய்யும் தாழிகளை கண்டேன். எனக்கு அவைகளை அருகில் சென்று பார்க்க வேண்டும் என்று ஆசை, என் தந்தையிடம் என் ஆவலை சொல்ல அவரும் நானும் அந்த இடத்திலேயே பஸ்சிலிருந்து இறங்கிச் சென்று பார்த்தோம்.
அதன் பிறகு நான் வேலூருக்கு பணியின் நிமித்தமாக வந்துவிட்டப் பிறகு ஒருநாள் சென்னை சென்றிருந்த வேளையில் அங்குள்ள மியூசியத்தில் ஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழிகளை கண்டேன். அது நான் சிறுவனாக இருந்த காலத்தில் கண்டதுதான் என்பதை புரிந்து கொண்டேன்.

அதன் பிறகு எனக்கு வரலாறுகளை தேடும் ஆர்வம் என்னுள் வளரத் தொடங்கியது. என்று சொல்லும் அஷாப் அலி வேலூர் விருதம்பட்டில் வசித்து வருகிறார்.
இவரின் குடும்பம் ஒரு புகழ்பெற்ற ஓவிய குடும்பம்.   ‘அப்பாவு சித்திரக்காரத் தெரு’ என்று பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தெருவுக்கு அவரின் தாத்தாவின் பெயரை சூட்டியிருக்கியிருக்கிறார்கள் என்றால் சும்மாவா!
தினத்தந்தியில் கருத்துப் படங்களை வரையும் நிமல் இவரின் சகோதரர்தான். என்பதும் கூடுதல் ஆச்சர்யம்.

கூர்ம மலை

“வேலூர் மிகவும் பழமையான ஊர் கற்கால ஆதி மனிதர்கள் இங்கே வாழ்ந்ததற்கான ஏராளமான ஆதாரங்கள் இங்கே கிடைத்திருக்கிறது. மக்கள் வாழும் இடங்களைதான் ஊர் என்று அழைக்கிறார்கள். வேலூர் புராதான காலத்திலிருந்தே மக்கள் வாழும் உறைவிடமாக இருந்திருக்க வேண்டும்.
வரலாற்றின்படி கி.பி 965ல் கன்னரத்தேவன் என்னும் இராட்டிரக்கூட மன்னனது  கல்வெட்டில் ‘வேலூர்பாடி’என்று குறிப்பிட்டிருக்கிறான். வேலூரில் உள்ள பகவதி மலையில் உள்ள ஒரு கல்வெட்டில் இந்த பெயர் ஒரு பட்டயமாக எழுதப்பட்டுள்ளது.

பினிக்ஸ் என்ற எகிப்திய வரலாற்று ஆய்வாளர் அர்கோடாஸ் என்று ஆற்காட்டை குறிப்பிடுகிறான். அவனின் கூற்றின்படி வேலூரில் குரும்பர்கள் ஆடுமேய்ப்பவர்கள் அதிகம் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.

வேலூரில் பெரிய கோட்டைகள் 20 இருக்கிறது. செஞ்சியிலிருந்து திருப்பத்தூர் வரையிலும் 200 கோட்டைகள் இருக்கிறது. அவற்றில் 130 கோட்டைகளை நான் நேரில் சென்று பார்த்திருக்கிறேன்.
முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக வேலூர் உருவானதாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
அதோடு 2ம் நூற்றாண்டில் சமணர்கள் வேலூருக்கு வருகிறார்கள். இவர்கள் வள்ளிமலை, திருமலை உள்ளிட்ட மலைப்பகுதியில் வாழ்ந்திருக்கிறார்கள்.
அவர்கள் வாழ்ந்த குகைகள், சமணர் படுக்கைகள் பல இன்றும் இருக்கிறது. சமண ஆலயங்கள் பல இந்து ஆலயங்களாக மாறி இருப்பதோடு சமணர்களின் கல்வெட்டுகள் பலவற்றை சாந்து பூசி மறைத்து விட்டார்கள்.

அப்புக்கல்

வேலூர் திமிரி,கரடிக்குடி சமவெளிப் பகுதியில் கற்கால மனிதர்களின் கல் ஆயுதங்கள் பலவற்றையும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.”ன்னு சொல்லும் அஷ்ரப் அலிக்கு மலையேற்றம்  செய்வது மிகவும் பிடித்த விடயமாம்.
“எனக்கு வேலூர் மலைகளில் புதையல் தேடும் ஒரு நண்பரின் நட்பு கிடைத்தது. அவரின் துணையோடுதான் வேலூர் மலைகளைப் பற்றி நான் தெரிந்து கொண்டேன். தமிழக ஊர்களில் வேலூரில்தான் அதிகபட்ச வெப்பம் நிலவுகிறது. இதற்கு முக்கிய காரணம் வேலூரைச் சுற்றியுள்ள மலைகளில் கனிம வளங்கள் நிறைந்து காணப்படுகிறது.
முக்கியமாக வேலூரின் மலைகளில் எல்லாம் இரும்பு தாதுக்கள் இருக்கிறது. அவைகள் வெப்பத்தை உள்வாங்கி வெளியிடுவதால் அதிகபட்ச வெப்பம் ஏற்படுகிறது.

வேலூர் மலைகளில் தங்கம், வைரம், சில்வர் உள்ளிட்ட கனிமங்கள் கிடைத்திருக்கிறது. இன்றும்  தங்க கனிமங்களின் படுகைகளை சில இடங்களில் இருக்கிறது.”னு சொல்லும் அஷ்ரப் அலி தங்கம் கிடைத்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை விபரித்தார்.
“தொண்டை மண்டலத்தில் காஞ்சிபுரத்துக்கு அடுத்ததாக சோழர்களின் இன்னொரு தலைநகராகவும் சோழர்கள் மறைவாக வாழும் இடமாகவும் வேலூர் சோழவரம் இருந்திருக்கிறது. இப்போது அந்த ஊர் ஒரு சிற்றூராக மாறிப்போயிருக்கிறது.

எரிமலை குழம்பால் 
உருவான குரங்குமலை

ஒரு முறை சோழவரம் கோயிலுக்கு எனது நண்பருடன் சென்றிருந்தேன். அந்தக் கோயிலுக்கருகில் இருந்த பாறைகளில் நிறைய கல்வெட்டுகள் இருந்தது. அவைகளை ஒவ்வென்றாக படித்துப் பார்த்தபோது,  ‘கூர்மம் மலையில் பொக்கிசம்’ என்று ஒரு கல்வெட்டில் இருந்தது அது எமக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. ‘அப்போ வேலூரில் இருக்கும் கூர்மையான ஏதோ ஒரு மலையில் பொக்கிஷம் இருக்கும்’னு நினைச்சு கூர்மையான மலைகளில் ஏறி அந்த பொக்கிஷத்தை தேடத் தொடங்கினோம் வேலூரில் இருந்த பாதி மலைகளில் ஏறி களைத்துப்போன போதுதான் ஒரு உண்மையை உணர்ந்து கொண்டோம். நாம் கல்வெட்டில் படித்து புரிந்து கொண்டதில் ஏதோ தவறு இருப்பது மூளைக்கு உறைத்தது. பிறகு தமிழ் அகராதியின் துணையோடு கூர்மம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தேடியபோது ‘ஆமை’ என்று பதில் கிடைத்தது. உடனே மீண்டும் சோழவரத்துக்கு சென்று அந்த பாறையில் உள்ள வார்த்தையை படித்துவிட்டு திரும்பி பார்த்தபோது தூரத்தில் ஆமை ஒன்று மலை உச்சியில் படுத்திருப்பது போன்ற தோற்றத்தில் ஒரு மலைத் தெரிந்து. ‘அப்போ அதுதான் கூர்மம் மலை’ (ஆமை மலை) என்பதை புரிந்து கொண்டு
அந்த மலையில் உச்சிக்கு ஏறினோம். அந்த மலை உச்சியில் உள்ள பாறைகளில் ஒரு பளபளப்பு தென்னபட்டது. ஆனால் புதையல் எதுவும் கிடைக்கவில்லை. எமக்கு முன்னே அங்கே மனிதர்கள் சென்றிருக்கிறார்கள். அவர்கள் அங்கே மண்ணைத் தோண்டியதற்கான தடயங்கள் தெரிந்தது.

கனிம கற்கள்

நாம் அந்த பாறை படிவங்களில் இருந்த பளபளப்பு கற்கள் சிலவற்றை உடைத்து எடுத்து வந்து அவற்றை சயனைட் உதவியுடன் பரிசோதித்ததில் சுத்தமான தங்கத் துகள்கள் கிடைத்தது.
இதேப் போன்று வேலூர் கண்ணமங்களத்துக்கு அருகில் உள்ள ஒரு மலையில் உள்ள கோட்டையில் தங்கத்தை உருக்கியதற்கான சுண்ணாம்பிலான கொப்பரைகள் இருக்கிறது. இங்கேதான் தங்க காசுகள் தயாரித்து இருக்கிறார்கள்.

இப்படி பல ஆச்சர்யங்களை கொண்டிருக்கும் இந்த ஊரில் சில பழங்கால பெயர்கள் புதுமையாக இருக்கிறது.
ஊசூர் பக்கமாக அப்புக்கல் என்று ஒரு கிராமம் இருக்கிறது. இங்கே உள்ள மலையில் கற்கள் பறவைகள் உள்ளிட்ட விநோதமான வடிவங்களில் ஒட்டி வைக்கப்பட்டது போல இருக்கிறது. அந்தக்காலத்தில்  அப்பி வைக்கப்பட்டது போல இருக்கிறது என்ற வார்த்தைதான் அப்புக்கல்; என்ற பெயரில் இன்றும் காட்சியளிக்கிறது. இந்த பாறைகள் முப்பது லட்சம் ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது.

இதே போன்று ‘செத்தவரை’ என்ற ஒரு விநோதமான மலை திருவண்ணாமலை பக்கத்தில் இருக்கிறது. இந்த மலை முழுவதும் பாறைகள் மட்டுமே இருக்கிறது. புல் பூண்டு மருந்துக்குகூட இல்லை. அதனால் இது செத்துப் போன மலை
தூயத் தமிழில் மலையை ‘வரை’என்றுதான் அழைப்பார்கள் அதனால்தான் இது செத்தவரை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
வேலப்பாடிக்கு அருகில் சமணர்கள் தங்கியிருந்த இடம் சமணர்குட்டை இன்று அந்தப் பெயர் மருவி அம்மணகுட்டை என்று அழைக்கப்படுகிறது.
இதுதவிர பூட்டுத்தாக்கு என்ற ஊரில் குரங்குமலை என்று ஒரு மலையிருக்கிறது அந்த மலை எரிமலை வெடிப்பிலிருந்து உருவானதாக சொல்லப்படுகிறது. ஒரே பாறையில் ஒன்றின் மேல் ஒன்றாக வரிசையாக ஐந்து குகைகள் இருக்கிறது. இவைகள் எரிமலை வெடித்து வரும்போது காற்று குமிழ்கள் உருவாகி அது வெடித்து அந்த காலி இடங்கள் குகைகளாக உருவானதாக வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கிறது.
வேலூரில் அஜந்தா ஓவியங்களை ஒத்த குகை ஓவியங்கள் பல இடங்களில் காணப்படுகிறது. இவைகள் பதினைந்தாயிரம் வருடங்கள் பழமையானது.” என்று வேலூரில் வியந்த விசயங்களை பிரமித்து சொன்னவரிடம்,
“வேலூர் பழங்காலத்தில் பசுமையான ஊராக இருந்திருக்குமா?”என்று கேட்டோம்.

“நிச்சயமாக இதற்கு ஆதாரங்களும் இருக்கிறது. பௌத்த நூல்களைத் தேடி யாத்திரை செய்தவர்களில் யுவான் சுவான் தமிழகம் வந்திருக்கிறார். அவரின் பயணக் குறிப்பின்படி பண்டு நாட்டில் கச்சி துறைமுகத்திலிருந்து படகில் பயணித்து விரிஞ்சிபுரம் படகுத் துறையில் இறங்கி கண்ணமங்களம் சிங்ககிரி சமணக்கோயிலிலுக்கு சென்றதாக எழுதியிருக்கிறார். பாண்டிய நாடு என்பதை யுவான் பண்டு நாடு என்றும், காஞ்சிபுரத்தை கச்சி என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.


அப்போ பாலாறு கடல் போன்று ரொம்பவும் பெரிதாக இருந்திருக்கும். அதனால் வேலூர் ரொம்பவும் செழிப்பான ஊராகத்தானே இருந்திருக்கும்.”
என்று சொல்லும் அஷ்ரப் அலி தமது வியக்கவைக்கும் வேலூர் என்ற நூலில் 32 சுற்றுலா இடங்களை அவர் குறிப்பிட்டிருந்தாலும் இன்னும் நாற்பதுக்கும் அதிகமான இடங்கள் இருக்கிறது அவைகளையும் வரலாற்று ஆதாரங்களோடு புத்தகமாக வெளியிட வேண்டும் என்ற யோசனையில் இருக்கிறார்.
தாம் அறிமுகப்படுத்திய 32 இடங்களில் 26 இடங்கள் பராமரிப்பு இல்லாம் அழிவடைந்து வருவதாகவும், இதேப் போல் காஞ்சிபுரத்தில் பல்லவ கால அரண்மனை ஒன்று மண்ணுக்குள் புதைந்து கிடப்பதாகவும் அவைகள் மக்கள் மலம் கழிக்கும் இடமாக பயன்படுத்தப்பட்டு வருதாகவும், பாதுகாக்கப்பட வேண்டிய வரலாற்று சின்னங்கள் பல, தனியார்களுக்கு சொந்தமாக இருப்பதாகவும் அவைகளை அரசு பொறுப்பேற்று பாதுகாப்பது அவசியம்  என்றும் அஷ்ரப் அலி வேதனையோடு எமக்கு தெரிவித்தார்.

Wednesday, September 4, 2019

தமிழர்கள் மறக்கும் தமிழ்

mani srikanthan

மணி  ஸ்ரீகாந்தன்

லங்கைக்கு தமிழர்கள் கூலித் தொழிலாளர்களாக  புலம்பெயர்ந்து வந்த சரித்திரம் இப்போது நூற்றி ஐம்பது வருடங்களை பூர்த்தி செய்திருக்கிறது.
பெருங்காடுகளை அழித்து வளமாக்கிய நம் உறவுகள் இப்போது மூன்று தலை முறைகளை கடந்து இந்த மண்ணின் மைந்தர்களாக மாறிப்போனார்கள்.
சில காலங்களுக்கு முன்னால் வரை வாழ்ந்த வயதான நம் பெரியவர்கள்  “எப்படியாவது ஈந்தியாவுக்கு போகனும்யா” என்ற கனவுகளோடு வாழ்ந்து அந்த கனவு நிறைவேராமலேயே மடிந்து போனார்கள்.

mani srikanthan
நம்மவர்கள் பணம் சம்பாதிப்பதற்காக வெளிநாடுகளுக்கு சென்று சில வருடங்கள் உழைத்து விட்டு வருவதைப்போலவே தமிழகத்திலிருந்து தற்காலிமாக தங்குவதற்காக வந்த இந்த தமிழர்கள் இங்கேயே நிரந்தரமாக தங்கிவிட்டார்கள்.

“வெள்ளைக்காரன் ஆடு,மாடுகளை வளர்க்கும் தொழுவங்களைப் போல லயன்களை அமைத்து விட்டார்கள்” என்று திட்டுவோர்கள் ஒரு புறமிருக்க “வெள்ளைக்காரன் நமக்கான நிரந்தர குடியிருப்புகளை அமைக்கவில்லை தற்காலிக குடியிருப்புகளைதான் அமைத்திருக்கிறான். நாம்தான் வேலையை முடித்து விட்டு தாயகம் திரும்பாமல் இங்கேயே தங்கிவிட்டோம்,தவறு நம்மளோடது” என்று ஆங்கிலேயேனுக்கு ஆதரவாக பேசுவோரும் உண்டு.
வசதியான வீடு, போக்குவரத்துக்கு வாகனம், கோயில், கல்வி, அரச உத்தியோகம் என்று பல மாற்றங்களுக்கு பிறகு, இந்த இந்திய வம்சாவழி தமிழர்கள் தமது கனவு தேசமான தமிழகத்தை அடியோடு மறந்து போனார்கள்.

புதிய தலை முறைக்கு தமிழகத்திலிருந்து வந்தோம் என்பது கூட சிலருக்கு தெரியவில்லை.
“நம்ம நாடு போல வருமாங்க, இது மாதிரி ஒரு நாடு நமக்கு கிடைச்சது நாம் செய்த புண்ணியம்” என்று அவர்கள் சொல்லும் போது எனக்கு மிகவும் பூரிப்பாகவும், பெருமையாகவும் இருக்கிறது.

mani srikanthan
நாம் பிறந்த இந்த தேசத்தை மதிப்பதும், கௌரவிப்பதும் நமது ஒவ்வொருவரினதும் கடமைதானே! ஆனால் எனக்கு ஒன்றும் மட்டும் புரியவில்லை கிரிக்கெட் மேட்ச் இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையே நடைபெறும் போது இந்த தமிழர்களில் அனேகமானவர்கள் இந்தியாவைதான் ஆதரிக்கிறார்கள். இதில் வேடிக்கை என்ன வென்றால் மலையகத்தில் சில தமிழர்கள் தமிழில் உரையாடுவதை அவமானமாக எண்ணி சிங்களத்தில் உரையாடுகிறார்கள். அவர்களும் இந்திய அணியை ஆதரிப்பதுதான் ஏனென்று புரியவில்லை.

சிங்கள கலாச்சார வாழ்வியலோடு கலந்து விட்ட இந்த தமிழர்கள் தங்களின் பேச்சு வழக்காக மணிப்பிரவாள நடைப்போல தமிழோடு சிங்களத்தையும் கலந்து பேசுவதை ஃபேஷனாக்கி விட்டார்கள்.
ஹொரணை வலயத்தில் உள்ள யஹலகெலே என்ற தோட்டத்தில் வாழும் தமிழர்கள் எவருக்கும் தமிழ் பேச்சு மொழியாக இல்லை. அவர்களில் எவருக்கும் தமிழ் தெரியவில்லை என்பது வேதனையான விடயம்.
இப்படியான அவல நிலை மலையகத்தில் இல்லாவிட்டாலும் களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை பகுதிகளில் உள்ள சிறுதோட்டப் பகுதிகளில் நிலவி வருகிறது.

சமீபத்தில் ஒரு சகோதரியை சந்தித்தேன். அப்போது அவர் “எங்க அத்தை சென்னையில இறந்து போய்ட்டாங்க என்ன கொடுமைன்னா ஒரே நாள்ல புதைச்சிட்டாங்களாம். நம்ம நாட்டுலன்னா ஒரு மூணு நாளைக்கு  வச்சிருப்பாங்க என்னா ஊருங்க அது?”ன்னு வேதனைப்பட்டார்.
அவரை பொருத்தவரையில் ஒருவர் இறந்தால் நாலு நாளைக்கு வைத்திருந்து புதைப்பதுதான் முறை, நாகரீகம் என்று நினைக்கிறார். ஆனால் தமிழர் கலாசாரத்தின்படி 24மணி நேரத்தில் அடக்கம் செய்து விடுவார்கள் இன்றும் தமிழகத்தில் இது நடைமுறையில் இருக்கிறது.

எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், அவர் தமிழகத்தை ஆள்பராகவே இருந்தாலும் அவர் இறந்த அடுத்த நாளே அடக்கம் செய்து விடுவார்கள்.
இங்கே நிலமை தலைகீழாக உள்ளது. இறந்த சவத்தை  முணு நாள் கட்டாயம் வைத்தாக வேண்டும் என்பது நியதி.
இப்படி நமது பாரம்பரியமும், மரபுகளும் அழிந்து வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை.

mani srikanthan
சமீபத்தில் சென்னை சென்று வந்த எனது நண்பர் ஒருவரை சந்தித்தேன். ‘எப்படி இருந்தது தமிழக பயணம்?’ன்னு அவரிடம் கேட்டப் போது, “அடப் போங்கய்யா ஊராய்யா அது! சும்மா சினிமாவுல நம்மல ஏமாத்தி இருக்கானுங்க. அங்க ஹன்சிக்கா மோத்வானி, அனுஷ்கா மாதிரி ஒரு பொம்புள புள்ளையையும் பார்க்க முடியலை..எல்லாம் சுடிதாரும், தாவணி பாவடையும் போட்டுக்கிட்டு சுத்தப் பட்டிக்காடு மாதிரி வருதுங்க…
என் மனைவிக்கு ஹன்சிக்கா போடுற மாதிரி ஒரு குட்டை கவுன், பாவடை வாங்கலாம்னு கடைக்கு போனா ‘நீங்க கேட்கிற டிரஸ் வாங்கனும்னா மும்பைக்கு போங்க’ன்னு சொல்லுறானுங்க “போங்கடா நீங்களும் உங்க நாடும்”னு திட்டிட்டு வந்திட்டேன். என்றார். இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்வென்றால் என்னிடம் பேசிய அந்த நபரின் தாத்தாவும் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு வந்தவர்தான். ஆனாலும் அவரின் மூணாவது தலைமுறைக்கு தமிழர் கலாசாரம் முகம் சுளிக்க வைக்கிறது, இங்கே இருக்கின்ற ஆடை, நாகரீகத்தையே முகமலர்சியோடு வரவேற்கிறார்கள்.

சமீபத்தில் நான் கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களுருவில் வசிக்கும் என் உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்றிருந்தேன்.  அவரின் வீட்டிலுள்ள பிள்ளைகளின் பேச்சு மொழி தமிழாக இருந்தாலும்
அவர்கள் படிக்கும் மொழி கர்நாடகமாக இருந்தது. அவர்களிடம் அதுப்பற்றி வினவிய போது ‘இங்கே தமிழ் பள்ளிக்கூடம் இல்லை அதனால் கர்நாடகத்தை கற்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்’என்பதை விளக்கினார்.

mani srikanthan
ஆனால் நம் நாட்டில் இங்கே தமிழ் கற்க கூடிய எல்லா வசதிகளும், வாய்ப்பும் இருந்தும் சில தமிழர்கள் சிங்களத்தில் மட்டும் தமது பிள்ளைகள் படித்தால் போதுமானது என்று நினைக்கிறார்கள். அதை கௌரவமாகவும் கருதுகிறார்கள்.

இப்படி இந்த தமிழர்களின்  அடையாளம் அழிந்து போகும் அபாயகரமான சூழலில் இருக்கும் இந்த நிலை தொடர்ந்தால் அமெரிக்காவின் கௌதமாலா பகுதிகளில் அழிந்து போன மாயன்கள் போல இன்னும் நூறு ஆண்டுகளில் இங்கே வாழும் இவர்கள் அழிந்து போவார்கள் என்று ஆய்வாலர்கள் சிலர் கருத்து தெரிவிக்கிறார்கள்.