மணி ஸ்ரீகாந்தன்
இந்திய மாநிலங்களில் மிகவும் தொன்மையான வரலாற்றை கொண்ட பெருநிலமாக இருப்பது நமது தமிழகம்தான். வடக்கே கஜினி முகமதுவின் தொடர்ச்சியான படையெடுப்பின் போதும், மொகலாலயர்களின் ஆக்கிரமிப்பின் போதும் இந்திய வரலாற்று சுவடுகள், ஆவணங்கள் அனைத்தும் அழிந்து போனது.
| அஷ்ரப் அலி |
இன்னும் தஞ்சை பெரிய கோவில் உள்ளிட்ட வரலாற்று சின்னங்கள் அப்படியே நம் கண்முன்னே நிமிர்ந்து நிற்பதற்கு விஜயநகர பேரரசு நமக்கு துணையாக இருந்திருக்கிறது.
ஆங்காங்கே முன்னெச்சரிக்கையாக நடந்துகொண்டதும் ஒரு காரணம்.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தொன்மையான வரலாறு இருக்கிறது. ஆனாலும் பாதுகாக்கப்பட வேண்டிய பல புராதான சின்னங்கள் அழிந்து விடும் நிலையில
இருக்கிறது.
“இவைகள் வெறும் நினைவு சின்னங்கள் மாத்திரம் அல்ல அவைகள் அனைத்தும் ஒரு காலத்தின் கண்ணாடி நாம் எப்படி வாழ்ந்தோம் என்பதை இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு நமது புகழை பறைசாற்றப்போகும் பொக்கிஷங்கள் என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்” என்கிறார் வேலூரைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர் அஷ்ரப் அலி.
| தேசிங்கு நினைவு மண்டபம் |
‘வியக்கத்தக்க வேலூர்’ என்ற மிகவும் சிறப்பான வரலாற்று நூலை வெளியிட்டு தமிழக ஊடகங்களின் விமர்சனங்களையும், பலரின் பாராட்டுதலையும் அஷ்ரப் அலி தனதாக்கி கொண்டிருக்கிறார்.
“எனக்கு வரலாறுன்னா ரொம்ப பிடிக்கும், அதனால் இந்த புத்தகத்தை மிகவும் ரசித்து எழுதியிருக்கிறேன். இன்னும் வேலூரை சுற்றியுள்ள பல வரலாற்று உண்மைகளை வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதில் எனது தேடுதல் மேலும் பன் மடங்காக அதிகரித்து உள்ளது.” என்றவர்,
"வேலூர் மாநகரில் பிரமாண்டமாக அமைந்திருக்கும் கோட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் பாளையக்காரர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களின் வாழ்விடம் அமைய பெற்றுள்ள இடங்கள்தான் தோட்டபாளையம், சங்கரன் பாளையம், கலாஸ் பாளையம், ராமநாயக்கன் பாளையம் உள்ளிட்ட பெயர்களில் இன்றும் அழைக்கப்பட்டு வருகிறது.
வேலூருக்கு அருகே இருக்கும் தர்மபுரியின் பழைய பெயர் தகடூர், தொண்டை மண்டலத்தை விவசாய பெருநிலமாக மாற்றும் போது இராஜராஜ சோழன் இரும்பிலான ஏர், தகடுகளை இந்த ஊரில் செய்ததாகவும் அதனால் இந்த ஊர் தகடூர் என்றே புராண காலத்தில் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது.என்று தர்மபுரிக்கு ஒரு நீண்ட விளக்கத்தை அஷ்ரப் அலி எம்மிடம் பகிர்ந்தார்.
வேலூர் விருதம்பட்டு, புதிய பள்ளி வாசல் வீதியில் அமைந்திருக்கும் இவரின் இல்லத்தில் நிறைய பழைய அபூர்வமான பொருட்களையும் சேகரித்து வைத்திருக்கிறார்.
| சோழர்கால போர்வாள் |
சோழர்கால நாணயங்கள், அழங்கார பொருட்கள், ஆயுதங்கள் என்று பல இவரிடம் இருக்கிறது. ஒரு பழங்கால துருப்பிடித்த வாளை எடுத்து பார்த்துவிட்டு, அந்த வாள் பற்றி கேட்டதற்கு,
“இது இராஜஇராஜ சோழன் காலத்து வீர வாள் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.
சோழர்களின் இரண்டாவது தலைநகராக இருந்ததுதான் வேலூரில் இருக்கும் சோழவரம். இந்த பகுதியில் உள்ள ஒரு சோழ போர் வீரன் போருக்கு சென்று விட்டு சோழவரத்துக்கு திரும்பியிருக்கிறான். அவன் வரும்போது அடை மழை பெய்து கொண்டிருந்ததாம். சோழவரத்தின் மலையோரம் வழியாக குதிரையில் அவன் வரும் போது ஒரு பெரிய மண் சரிவு ஏற்பட்டு அந்த சோழ போர் வீரன் மண்ணில் புதைந்து போனானாம்.
அப்போது அந்த வீரனின் வாளும், கேடயமும் மலைக்கு பக்கத்திலிருந்தவர்களால் மீட்கப்பட்டு காலா காலமாக பாதுகாக்கப்பட்டு வந்திருக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பாக நான் சோழவரம் சென்று வரலாற்று தேடலில் ஈடுபட்டிருந்த போது இந்த தகவலும் வாளும் எனக்கு கிடைத்தது.
கேடயம் மிகவும் மோசமான நிலையில் சிதைவடைந்து இருந்ததினால் அதை நான் வாங்கவில்லை. இந்த வாளை மட்டும் சம்பந்தபட்டவர்களிடம் பணம் கொடுத்து வாங்கி இப்போ நான் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்.”
என்றார்.
| தேசிங்கு மண்டபத்தின் உட்புறம் |
தமிழகத்தின் தொன்மையான பல இடங்கள் தனியார்களின் வசம் இருப்பதாக வேதனையை வெளிப்படுத்தும் அஷ்ரப்அலி தேசிங்கு ராஜனின் நினைவு மணை;டபங்கள் கவனிப்பாரற்ற நிலையில் தனியார் வசம் இருப்பதை தெரிவித்தார்.
“இராணி பேட்டை பாலாற்றங்கரைக்கு அருகிலேயே இந்த நினைவு மண்டபங்கள் இருக்கிறது.
செஞ்சியை ராஜா தேசிங்கு ஆட்சி செய்த போது ஆற்காட்டு நவாப் சதாத்துல்லாகான் செஞ்சியை தனது ஆளுகைக்கு கீழ் கொண்டு வர போர் நடத்தியிருக்கிறார். அந்த போரில் மன்னர் ராஜா தேசிங்கு வீர மரணம் அடைந்தார்.
ராஜாதேசிங்கு உயிர் துறந்ததை கேள்விப்பட்ட மன்னரின் மனைவி ராணிபாய் அந்தக் காலத்தில் இருந்த இராஜபுத்திர வழக்கப்படித் தீக்குளித்து உடன் கட்டை ஏறினாள்.
இதனை கேள்விப்பட்ட ஆற்காட்டு மன்னர் சதாத்துல்லா கான் மன வேதனை அடைந்து, அந்த ராணியின் நினைவாக வேலூருக்கு அருகே ராணிப்பேட்டையை உருவாக்கினார்.
மக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட மன்னர் ராஜா தேசிங்கு, அவரது மனைவி ராணிபாய் இருவருக்கும் இரண்டு நினைவு மண்டபங்களை அழகுற அமைத்திருந்தார். இந்த மண்டபம் கி.பி.1714ம் ஆண்டு அமைக்கபட்டிருக்கிறது.
பச்சை நிறக்கற்களால் அமைக்கப்பட்டிருக்கும் அந்த நினைவு மண்டபம் மிகவும் மோசமான நிலையில் சிதைவடைந்து காணப்படுகிறது.
சமீபத்தில் இந்த நினைவு மண்டபங்களை பார்த்து வர சென்றிருந்தேன். அப்போது அந்த இடத்திலிருந்த ஒருவர் ‘இந்த இடம் எங்களுடைய பூர்வீக சொத்து இதனை யாரும் பார்க்கவோ, படமெடுக்கவோ முடியாது’ன்னு சொல்லி என்னை விரட்டாத குறையாக வெளியேற்றினார்.
என்ன செய்வது இந்த நிலையில்தான் நமது புராதான சின்னங்கள் இருக்கிறது. எனது இந்த பேட்டி உங்கள் சஞ்சிகையில் வெளியாகும் போது அந்த நினைவு சின்னங்கள் இரண்டும் அந்த தனியாரினால் இடித்து தரை மட்டமாக்கப்பட்டிருக்கலாம். என்று வேதனையோடு தனது நேர்காணலை அஷ்ரப்அலி நிறைவு செய்தார்.


No comments:
Post a Comment