Sunday, September 29, 2019

ராஜகவி ராகில் பேசுகிறார்.

மணி ஶ்ரீகாந்தன்

நான் எத்தனையோ நாடுகளுக்குச் சென்று இருக்கிறேன், பல நாடுகளில் வாழ்ந்தும் இருக்கிறேன். ஆனால் என் தாய் நாட்டுக்கு அடுத்ததாக நான் நேசிப்பது இந்தியாவை. அதிலும் தமிழ் நாடு என் மனசுக்குள் நிறைந்தது. குறிப்பாகச் சென்னை என்னை மிகவும் வசீகரித்த பிரமாண்ட நகரம்.

பலமுறை நான் தமிழ் நாட்டுக்குச் சென்று வந்திருக்கிறேன்.
நான் சென்னைக்கு 1995 ஆம் ஆண்டு தான் முதன் முதலாகச் சென்றேன். சென்னை மணிமேகலைப் பிரசுரம் வெளியிட்ட எனது   நூல்களைப் பெறுவதற்காவும் விருது பெறவும் சென்றேன். வெளி நாட்டவருக்கான விருது பெறும் அந் நிகழ்வு புதுக்கோட்டையில் நடை பெற்றது.

நானும் சந்தப்பா வேந்தர் விருது பெற கொழும்பு விமான நிலையம் சென்றபோது அங்கே சென்னைக்குச் செல்லும் வியாபாரிகள் பலர் சிகரட் மதுபானம் போன்றவற்றை வாங்கி வைத்திருந்ததை
அவதானித்த நான் அவர்களிடம் விசாரித்தேன். நீங்களும் வாங்கினால் சென்னையில் உடனே விற்கலாம் என்றார்கள். என்னிடம் அப்போது 30 ஆயிரம் ரூபாய் இருந்தது. அவ்வளவுக்கும் சிகரட் வாங்கினேன்.

சென்னை விமான நிலையத்தில் சுங்கப் பிரிவினர் என்னைப் பிடித்து
அவ்வளவுக்கும் டியூட்டி கட்டச் சொல்லி சிகரட் பாக்கட்களைப் பறிமுதல் செய்துவிட்டார்கள். 'என்னிடம் பணம் இல்லை, இவற்றை விற்றால்தான் பணம்' என்றேன்.

உடனே சுங்கத்துறை சுப்பிரிண்டனிடம் என்னை அழைத்துச் சென்றார்கள். என்னைப் பற்றிக் கேட்டார்கள். நான் எனது அறிவிப்பாளர் அடையாள அட்டை லேனா தமிழ்வாணன் என்னை வரச் சொல்லி அனுப்பிய கடிதம், புதுக் கோட்டை விருது விழா அழைப்பிதழ் எல்லாவற்றையும் காட்டினேன்.

என்னைப் பாராட்டினார்கள். அவர்களே டியூட்டி கட்ட 7 ஆயிரம் ரூபா இந்திய நாணயம் தந்து கட்டச் சொல்லி பறிமுதல் செய்த சிகரட் பக்கட்டுகளையும் தந்து இலங்கை திரும்பும் போது உங்கள் நூல்களை எந்த வித ட்யூட்டி இல்லாமல் கொண்டு செல்லலாம் என்றும் சொன்னார்கள்.

நான் இதை ஏன் சொல்கிறேன் என்றால், ஓர் எழுத்தாளனை கவிஞனை, கலைஞனை தமிழ் நாடு எவ்வளவு மதிக்கிறது என்பதை
சொல்லத்தான் அதன் பின் நான் பலமுறை சென்னைக்குச் சென்றிருக்கிறேன். வியாபார நோக்கமாக எப்பொருளையும் நான் கொண்டு சென்றதில்லை.

நான் திரைப்படத்துக்குப் பாடல் எழுத முதல் தடவையாக இயக்குனர், வசனகர்த்தா, தயாரிப்பாளர், ஏ.ஆர்.கே. ராஜ ராஜா என்னைச் சென்னைக்கு அழைத்தார். படம் 'மீண்டும் அம்மன்'. எனக்கு கார் தந்து காரோட்டி தந்து உதவியாளர்கள் தந்து தங்க 3 ஸ்டார் ஹோட்டல் தந்து கவனித்தார். இங்கே கூட தமிழ் நாட்டின் விருந்தோம்பலை அனுபவ ரீதியாக அனுபவித்தேன்.

இன்னும் ஒருமுறை சுப தமிழ்வாணன்; அவருடைய திரைப் படத்திற்குப் பாடல் எழுதுமாறு சென்னைக்கு என்னை அழைத்தார்.
நான் விமான நிலையத்தில் வந்து இறங்கி வெளியே வந்ததும் என் உயரத்திற்கு ரோஜாப் பூமாலை அணிவித்து என்னை ஊர்வலமாக அழைத்துச் சென்றதை என் வாழ்வில் மறக்க முடியாது.

மற்றோரு முறை பழம் பெரும் நடிகை ராதிகா, தான் இயக்கும் ‘கூட்ஸ் வண்டியிலே’ திரைப் படத்திற்காக என்னைப் பாடல் எழுதவும் என் மகள் ஹனீக்கா அப்பாடலைப் பாடவும் அழைத்திருந்தார்.
அவர் தன் வீட்டிலே ஒரு வாரம் எங்களைத் தங்க வைத்து
ஆதரித்தார் இப்போதும் ராதிகா குடும்ப நண்பியாக இருக்கிறார்.

வீ.கே.டி.பாலனுடன்
பிரபல தொழில் அதிபர் கலைமாமணி வி.கே.டி. பாலன் அவர்கள்
என்னை அழைத்து விருந்தோம்பல் செய்திருக்கிறார்.
எனக்குத் தனிப்பட்ட முறையில் பொன்னாடை போர்த்தி விருது வழங்கி கௌரவித்திருக்கிறார்.

தமிழ் நாடு மீதான என் அனுபவங்களைப் பொறுத்த வரையில்
நிறையச் சொல்லலாம். ஒருமுறை எனது பாஸ் போட் தொலைந்து விட்டது. நான் பொலிஸில் முறைப்பாடு செய்த போது
உடனே ஆட்டோ சாரதி பொலிஸில் கொண்டு வந்து என்னிடம் ஒப்படைத்தார்.

நான் ஒருமுறை ஆட்டோவில் கொஞ்சம் தூரப் பயணம் செய்து கொண்டிருந்தேன். ஆட்டோ சாரதி என்னைப் பற்றி விசாரித்தான்.
நான் என்னைப் பற்றிச் சொல்லும் போது இலங்கை வானொலி அறிவிப்பாளன் என்று சொன்னேன் என் பெயரைக் கேட்டான்.
சொன்னேன் ‘உங்கள் அகச் சோலையில் மகிழ்ச்சிப் பூக்கள் பூத்துக் குலுங்க விடை பெறுவது ஏ.சி. ராகில்’ என்று சொல்லி,

“அது நீங்கதானா சார்?” என்று கேட்டு என்னை வியப்பில் ஆழ்த்தி எங்கள் வானொலியின் பெருமை சொன்னான். இறங்கும் போது ஆட்டோ கூலியை வாங்க மறுத்து அவனது பேரன்பினை வெளிப்படுத்திச் சென்றான் பாருங்கள். 

இயக்குநர் ஆணைவாரி வெற்றிப் படங்கள் தந்த நல்ல இயக்குநர்.
நான் சென்னைக்குச் செல்லும் போதெல்லாம் அவருடைய மோட்டார் சைக்கிளில் என்னை ஏற்றிக்கொண்டு சென்னையை சுற்றிக் காட்டுவார்
சினிமா பிரபலங்களை அறிமுகம் செய்து வைப்பார் ஏ.வி.எம். ஸ்ரூடியோ தொடக்கம் மெரினா பீச் வரை நாங்கள் சுற்றித் திரிவோம்.

தமிழ் நாட்டில் சைவக்கடைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை.
சைவச் சாப்பாடுகள் மிகவும் சுவை மிக்கவை ஒரு தட்டில் 20 வகை மரக்கறி உணவுகள்! அப்படியான கலையும் சுவையும்
அன்பும் நட்புக்கும் உரிய வந்தாரை வாழ வைக்கும் நாடே தமிழ் நாடு!🔴

No comments:

Post a Comment