Thursday, December 26, 2019

தமிழர்களின் அந்தக்கால ஏ.டி.எம். மெஷின்!

மணி ஸ்ரீகாந்தன்.

லகிலேயே தமிழர் நாகரிகம் மிகவும் தொன்மையானது என்று கீழடி ஆய்வுகள் மீண்டும் உலகுக்கு நிரூபித்திருக்கிறது.
ஆங்கிலேயேர்கள் ஆதிவாசிகளாக காடுகளுக்குள் வாழ்ந்த காலத்தில் தமிழர்கள் நாங்கள் வீட்டு மனைகள், மாட மாளிகைகள், கோயில் கோபுரங்கள் என்று நாகரிகமாக வாழ்ந்தார்கள் என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது.
பழந்தமிழர் நாகரிகம் படிப்படியாக அழிந்து இன்று கடைசி விளிம்பில் நிற்கிறது. இன்றைய தமிழ் குழந்தைகளுக்கு அம்மி, ஆட்டுகல், உரல், உலக்கை, முறம், திருகைக்கல் என்று நம் முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்கள் எதுவுமே தெரியாது. அதற்கான வாய்ப்பும் இல்லை.
சொன்னால் ‘அப்படியா’ என்று ஆச்சரியப்படுகிறார்கள். இந்தப் பொருட்கள் நம் வீடுகளிலிருந்து மறைந்து இப்போது 20 வது ஆண்டுகள் மட்டுமே ஆகிறது. இதனையே மறந்துவிட்ட நம்மவர்களுக்கு எங்கே, சங்க காலத்தில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்கள் தெரியப் போகிறது!
‘கல்வெட்டு, வரிகயிரு, தாம்புக்கயிறு, வடகயிறு, பூட்டாத்தல, ஒலவாரம்,  மோத்தடி, வாங்கருவா, மட்டப்பலகை, பரம்புசெட்டு, தாருகுச்சி, கடமலக்குச்சி, கருக்கருவா,’ இந்த வார்தைகளை படிக்கும் நீங்கள் நம் நாட்டில் வைக்கப்பட்டுள்ள ஏதோ தமிழ் கொலை பதாகை என்று எண்ணியிருப்பீர்கள்.
ஆனால் இவைகள் எல்லாம் நம் முன்னோர்கள் விவசாயத்தில் பயன்படுத்திய பொருட்களின் பெயர்கள் என்பதுதான் உண்மை.

இப்படி நாம் பயன்படுத்திய ஆயிரக்கணக்கான பொருட்கள் அழிந்து போய்விட்டதை மீண்டும் தேடிக் கண்டுபிடித்து உங்களுக்கு அடையாளப்படுத்தவே இந்தக் கட்டுரைத் தொடரை எழுதுகிறோம்.
சமீபத்தில் தமிழ்நாட்டில் ஆரணியை அடுத்துள்ள கள்ளப்புலியூர் என்ற கிராமத்துக்குச் சென்றிருந்தேன். அது ஒரு விவசாய மண். பழங்கால தமிழர் அடையாளம் ஏதாவது இருக்குமா என்று அந்த மருத நிலத்தில் நடந்தேன்.
அப்போது ஒரு பழங்கால வீடு என் கண்ணில் பட்டது. நிச்சயம் அந்த வீட்டில் ஏதாவது கிடைக்கலாம் என்ற நம்பிக்கையில் அந்த வீட்டுக்குள் எட்டிப்பார்த்தேன்.
என்ன ஆச்சர்யம் அங்கே நான் புத்தகங்களில் படித்து தெரிந்து கொண்ட ‘குதிர்’ ஒன்று கவனிபாரற்று கிடப்பதை கண்டேன்.  வீட்டுமுற்றத்தில் உள்ள ‘குதிர்’ யானையின் கால் போன்று இருப்பதாக ஒரு சங்ககால புலவன் பாடியிருப்பது என் நினைவுக்கு வந்தது.


பணத்திற்கு பதிலாக தானியங்கள் பயன்படுத்தப்பட்ட காலத்தில் தானியங்களை சேமித்து வைக்கும் கொள்கலன் பெட்டகமாக இந்த ‘குதிர்’  இருந்திருக்கிறது. குறிப்பாக எல்லா வீடுகளிலும் இந்த ‘குதிர்’ தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்திருக்கிறது.
வரகு மற்றும் வைக்கோலை பெரிய கயிறாக திரித்து வட்ட வட்டமாக கட்டி நாலடி அகலத்தில் ஆறடி உயரத்தில் ஒரு பெரிய குவளையை செய்து அந்த வைக்கோல் மீது களிமண்ணால் பூசி அதனை திடமான, வட்டமான சுவராக எழுப்பி பிறகு அந்தக் குதிரின் அடிப்பாகத்தில் சாணத்தால் மெழுகி இருக்கிறார்கள். இந்த குதிர்கள் அவரவர் வசதிக்கு ஏற்ப சிறிது, பெரிதாக வடிவமைக்கப்படும்.

இந்தக் குதிரில் விவசாயிகள் நெல் அறுவடையின் போது களத்து மேட்டில் விற்பனையாகும் தானியத்தில் மீதமாக இருப்பதை இந்த குதிரில் கொட்டி மூடி வைப்பார்கள்.
குதிரை மூடுவதற்கு களி மண்ணால் பெரிய வட்டமான மூடியும் செய்து வைத்திருப்பார்கள். தானியங்கள் கெட்டுப் போகாமல் இருக்க கருநொச்சி, வேப்பிலைகளைப் போட்டு வைப்பார்கள்.
அப்படி கொட்டப்படும் தானியங்கள் இரண்டு வருடங்களுக்கு பழுதாகாமல் இருக்குமாம். இந்த குதிர் பெட்டகத்தில், முக்கியமாக நெல், பெரும்பாலும் பாதுகாக்கப்படும்.


வீட்டின் உணவுத் தேவைகளுக்கு இந்தக் குதிரின் அடிப்பாகத்தில் இருக்கும் சிறிய துவாரத்தை திறந்து நெல்லை எடுப்பார்கள். அப்படி எடுத்த பிறகு அந்த துவாரத்தில் தேங்காய் சிரட்டையை வைத்து அடைத்து மண்ணால் மூடிவிடுவார்கள்.
திருமணம், காதுகுத்து, பிள்ளை வயசுக்கு வருதல் என்று வீட்டில் எந்த விசேஷமாக இருந்தாலும் இந்த குதிர் நெல் தான் பணமாக பண்டமாற்றுதலுக்கு கைக்கொடுக்குமாம்.
வீட்டு விஷேசத்துக்கு அணிவதற்காக வாங்கும் தங்கம், சேலை, வளையல் முதல்கொண்டு சிறுவர்கள்; வீட்டில் சாப்பிடும் குச்சு மிட்டாய் வரை இந்த குதிரில் எடுக்கப்படும் தானியத்தால்தான் அந்தக் காலத்தில் காரியம் நடந்திருக்கிறது.

காங்கு, தொம்பைகூண்டு என்று பலப்பெயர்களில் இந்த குதிர் பெட்டகத்தை அழைக்கிறார்கள். வசதியான வீடுகளில் இரண்டு, மூன்று குதிர்கள் இருக்குமாம். இந்தக் குதிரின் எண்ணிக்கையில்தான் அந்தக் குடும்பத்தினர் வசதியானவரா என்று கண்டுப்பிடிப்பார்களாம்.
அந்தக் காலத்தில் கிராமத்தில் நடைபெறும் திருமண பேச்சு வார்தையில் ‘உங்கள் வீட்டில் ‘குதிர்’ இருக்கா’ என்றுதான் கேட்பார்களாம்.
‘குதிர்’ இருக்கும் வீடு செல்வந்த வீடாக இருக்கும் என்று ஒரு நம்பிக்கை இருந்தது.
குதிரோடு
கட்டுரையாளர்
..

“எங்கப் பொண்ணு வாக்கப்பட்டு போன வீட்டுல மூணு ‘குதிர்’ இருக்கு அவ நல்லா சீரும் சிறப்போடு இருக்கா”   என்று கிராமத்தில் பெண்கள், கிணத்தடியில் கதையளப்பார்களாம்.
பணக்காரர்கள், ஏழைகள் என்று எல்லோரிடமும் தானியங்களை சேமித்து வைக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. குறிப்பாக தலித்துகளின் வீடுகள் ரொம்பவும் சிறிதாக இருந்ததினால் அவர்களின் வீட்டினுள் குதிர் வைக்க இடமில்லாததால் வீட்டுக்கு வெளியே ஒரு சிறிய குடிசை அமைத்து அதற்குள் இந்த குதிரை செய்து வைத்திருப்பார்களாம். அதனை ‘சேர்’ என்று அழைத்திருக்கிறார்கள்.

விவசாய நிலம் இல்லாதவர்கள் கூட கூலி வேலைக்கு சென்று ஊதியமாக தானியங்களை பெற்று வந்து இந்த குதிரில் போட்டு சேமித்து வைப்பார்களாம்.
இதில் தானியங்களை போடும் போது நல்ல நேரம் பார்த்து தம் வீட்டு சிறுவர்களின் கையில் ஒரு பிடி தானியத்தை கொடுத்து குதிரில் கொட்டச் சொல்வார்களாம். அப்படிப் போட்டால் தானியம் குறையாமல் இருக்கும் என்பது ஒரு நம்பிக்கை.

‘சேர்’

அதே மாதிரி குதிரில் இருந்து தானியத்தை எடுக்கும் போது நல்ல நேரத்தில்தான் எடுப்பார்களாம். அதே மாதிரி தீபாவளி, பொங்கல் சித்திரை போன்ற பண்டிகை நாட்களில் குதிருக்கு திருநீரு, குங்குமம் வைத்து கற்பூரம் காட்டி கும்பிடுவார்கள். வெள்ளிக்கிழமை தோறும் வீட்டில் விளக்கேற்றும் போது, மறக்காமல் குதிருக்கும் சாம்பிராணி காட்டப்படுமாம்.
சில குதிர்கள் பெரிதாக இருந்தால் அவற்றுக்கு ஒரு ஏணி வைத்து ஏறித்தான் தானியங்களை குதிருக்குள் கொட்டுவார்களாம். குதிரில் தானியம் குறைந்திருக்கிறதா என்று பார்ப்பதற்கு குதிரின் நுனிக்கும், அடிப்பாகத்துக்கு இடைப்பட்ட நடுப்பகுதியில் ஒரு சிறிய துவாரம் வைத்து அதனை திறந்து தானிய அளவை கண்காணிப்பார்கள்.

பெரிய செல்வந்தர்களின் வீடுகளில் குதிருக்கு பதிலாக ‘பத்தாயம்’ இருக்குமாம். இது மா, பலா பலகையில் செய்யப்பட்ட ஒரு பெரிய உயரமான பெட்டி இதில்தான் தானியங்களை சேமித்திருக்கிறார்கள். இந்த பெட்டியின் அடிவாரத்தில் ஒரு சிறிய கதவு இருக்கும் அதை ஒரு பூட்டு போட்டு பூட்டியிருப்பார்கள். அதன் வழியேதான் தேவையான போது தானியங்களை எடுத்துக்கொள்வார்களாம்.
பத்தாயம்

‘இந்த ‘பத்தாயம்’ குதிருக்கு பிறகுதான் புழக்கத்திற்கு வந்திருக்க வேண்டும், சங்க இலக்கியங்களில் ‘பத்தாயம்’ பற்றி எதுவும் குறிப்பிடபடவில்லை’ என்பது ஆய்வாளர்களின் கருத்தாகவும் இருக்கிறது.

அந்தக் காலத்தில் நெல் அறுவடை என்பது வருடத்திற்கு ஒரு முறைதான் நடக்கும். அதனை ஒரு போகம் என்று சொல்வார்கள். அதனால் அவர்களுக்கு நெல்லை சேமித்து வைக்க வேண்டிய கட்டாயம்; இருந்தது. அறுவடைக் காலங்களில் நெல் குறைந்த விலைக்குதான் விற்பனையாகும் ஆனால் கோடை காலத்தில் அதன் விலை பல மடங்காக உயர்ந்து விடும். அந்த சமயத்தில் குதிரில் சேமிக்கப்பட்டிருக்கும் நெல் விவசாயிகளுக்கு நல்ல பலனை கொடுக்கும்.


ஆனால் இன்று நிலமை அப்படி அல்ல. நீர் இறைக்கும் இயந்திரம், ஆழ்துளை கிணறு என்பன வந்து விட்டதால் தமிழகத்தில் வருடத்திற்கு மூன்று போகம் நெல் அறுவடை நடக்கிறது. அதனால் நெல்லை சேமித்து வைக்க வேண்டிய தேவையும் இல்லாமல் போய்விட்டது.
அதனால் தமிழர்களின் அந்தக் கால ஏடிஎம் மெஷினாக பயன் படுத்தப்பட்டு வந்த குதிர், பத்தாயம், தொம்பை உள்ளிட்டவைகளை தமிழர்கள் மறந்து போனார்கள்.🔵
                      

முத்துசாமி வேடத்தில் நடித்த எல்றோய் அமலதாஸ் பேசுகிறார்

 மணி ஸ்ரீகாந்தன்

லங்கையில் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு விரைவில் திரைக்கு வரத் தயாராக இருக்கும் திரைப்படம் ‘கிரிவெசிபுர’. கண்டியின் கடைசி மன்னன் ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கனின் வாழ்க்கை வரலாற்றை கதைக் கருவாக கொண்டு படமாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தில் இராஜாதி இராஜசிங்கனின் மனைவியின் தம்பியான முத்துசாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர்தான் எல்றோய் அமலதாஸ். இவர் பல்வேறு துறைகளில் நுழைந்து அதகளம் செய்யும் ஒரு துடிப்புமிக்க இளைஞர்.
தோள்பையை முதுகில் சுமந்தபடியே காடு, மலை, ஏரி, குளம் என்று அசால்ட்டாக ஏறி, இறங்கி தனது கேமரா கண்ணில் பட்ட காட்சிகளையெல்லாம் அற்புதமாக சுட்டெடுக்கும் நல்லதொரு புகைப்படக் கலைஞனாக இருக்கும் இவர், மிகவும் பின்தங்கிய கிராம பள்ளிகளில் கற்கும் மாணவர்களுக்கு இசையையும் அட்சரம் பிசகாமல் பாடம் நடத்தும் ஒரு நல்லாசனாகவும் இருக்கிறார். பல்கலைக்கழகங்களில் புகைப்படம் பற்றிய விரிவுரை செய்பவராகவும்  பணியாற்றுகிறார்.

அப்புறம் எங்கே ஆளையே காணோம்னு தேடினால் முகத்தில் அரிதாரம் பூசிய நடிகனாக கூத்துக்கட்டி ஆடிக்கொண்டிருக்கிறார்.
இப்படி பன்முக ஆளுமைகளில், அசாத்திய திறமையோடு பம்பரமாக சுழன்று கொண்டிருக்கும் எல்றோய் அமலதாஸை ஒரு இனிய மாலை வேளையில் சந்தித்துப் பேசினோம்.

“எனது கலைப் பிரவேசத்துக்கு முக்கிய காரணமாக இருந்தவர் எனது தந்தைதான். அவர் யாழ் உதவிக் கல்விப் பணிப்பாளராக பணியாற்றியவர். அதோடு மேலேத்தேய வாத்தியங்களை இசைப்பதில் விற்பனராக இருந்திருக்கிறார். அந்தத் துறையில் அவர் நிறைய விருதுகளையும் பெற்றிருக்கிறார். அவரின் பாதிப்புத்தான் என்னை இந்த துறைக்குள் பயணிக்கச் செய்தது.
நான் போரின் வலிகளை சுமந்தவன். நிறைய இடம்பெயர்வுகளை சந்தித்திருக்கிறேன். எனது இடம்பெயர்வின் நெடும் பயணம் என்னை இறுதியாக கொழும்புக்கு கொண்டு வந்து விட்டது.
அங்கேதான் என் கலைப் பயணத்தின் முதல் பிள்ளையார் சுழி போடப்பட்டது.” என்று படபடத்து நிறுத்தினார்.

எல்றோய் அமலதாஸ் கொழும்பில் உள்ள ஒரு முன்னணி தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் நிறைவேற்று தயாரிப்பாளராக பணியாற்றியவர். அதோடு ஒரு தொலைக்காட்சி நாடகத்தின் 54 பாகங்களை இயக்கியதோடு, ஐந்துக்கும் மேற்பட்ட நாடகங்களில் நாயகனாகவும் நடித்திருக்கிறார்.
இசைக் கலைஞரான இவரின்  இசையில் சிங்கள திரைப்படம் ஒன்று விரைவில் திரைக்கு வரவிருப்பதோடு, சில தொலைக்காட்சி நாடகங்களுக்கும் இசையமைத்திருக்கிறார்.
இவரின் கலைப்பயணத்தில் ஜனாதிபதி விருதுகள் முதல் கொண்டு அனைத்து துறைகளிலும் ஏகப்பட்ட விருதுகளை வாங்கி குவித்திருக்கும் இவர், தற்போது ஒரு தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றுகிறார்.

வரலாற்று திரைப்படமான கிரிவெசிபுர பட வாய்ப்பு எப்படி கிடைத்தது என்று கேட்டோம்,
“எனக்கு இந்தப் பட வாய்ப்பை இலங்கையின் முன்னணி நடிகையும் சகோதரியுமான நிரஞ்சனி சண்முகராஜா எனக்கு வழங்கியிருந்தார். ஒரு நாள் அழைப்பில் வந்த அவர் கிரிவெசிபுர படம் பற்றி சொல்லி என்னை பட அலுவலத்துக்குச் சென்று இயக்குநர் தேவிந்த கோங்கஹகேயை சந்திக்கும்படி சொன்னார். இயக்குநரும் என்னை பார்த்ததும் அவருக்கு ரொம்பவே பிடித்துவிட, என்னை முத்துசாமி கதாபாத்திரத்தில் நடிக்கும்படி கூறினார்.
எனக்கு வரலாற்று தேடுதல்களில் ரொம்பவும் ஆர்வம். அதனால் அந்தக் கதாபாத்திரத்தில்  ரொம்பவும் விருப்பத்துடன் நடித்தேன்.” என்றார்.
கண்டி மன்னரின் வரலாற்றுக் கதையின்படி இராஜாதி இராஜசிங்கனின் நான்கு மனைவிகளில் ஒருத்திக்கு ஏழு சகோதரர்கள். அவர்களில் ஒருவர்தான் முத்துசாமி. மன்னருக்கு பிள்ளைகள் இல்லாததால் அவருக்கு பிறகு இந்த சகோதரர்களில் யாராவது ஒருவர் மன்னராக அரியாசனம் ஏறலாம் என்பது நாயக்க வம்சத்தின் வழக்கமாக இருந்தது.

மன்னர் இராஜாதி இராஜசிங்கன் மரணப் படுக்கையில் இருந்தபோது தனக்குப் பிறகு ராணிமார்களின் தம்பிகளில் ஒருவரை அவர்கள் தெரிவு செய்து அரியாசனத்தில் அமர வைக்கும் வரை, தற்காலிகமாக முத்துசாமியை நியமிக்க முடிவெடுத்தப்போது முதலமைச்சராக இருந்த பிலிமத்தலாவை அவனை பதவியேற்க விடாமல் தடுத்து விட்டான்.
பிலிமத்தலாவையின் கைப்பாவையாக வைத்து ஆட்டிப்படைப்பதற்கு கண்ணுசாமியை அரியாசனத்தில் அமரவைத்தான். ஆனாலும் அரியாசனத்துக்கு தகுதியுடைய முத்துசாமி கண்ணுசாமிக்கு எதிராக கலகம் செய்து ஆட்சியை கைப்பற்றலாம் என்று எண்ணி முத்துசாமியை கொல்வதற்கு பிலிமத்தலாவை திட்டம் போட்டான்.

பிலிமத்தலாவையின் சதித்திட்டம் தெரிந்து, அரண்மனையிலிருந்து தப்பிய முத்துசாமி, கொழும்பிலிருந்த பிரித்தானிய தேசாதிபதி நோர்த்திடம் சென்று முறையிட்டான்.
முத்துசாமியின் நிலைமையை புரிந்துகொண்ட நோர்த் அவனுக்கு அபயம் கொடுத்து, செலவுக்கு பணமும் கொடுத்து ஒரு மெய்க்காப்பாளனுடன் யாழ்ப்பாண கோட்டைக்குள் இருந்த அரண்மனையில் போய் தங்குமாறு பணித்தார்.

யாழ். கோட்டைக்குள் முத்துசாமி சிறிது காலம் தங்கியிருந்தான். அப்போது ஒருநாள் விஸ்வநாத சாத்திரியாரை அழைத்து ‘தனக்குரித்தான பட்டம் கிடைக்குமா?’ என்று கேட்டான்.
அதற்கு சாத்திரியார் ‘பட்டம் சமீபத்திலேயே கிடைத்து விடும். ஆனால் பட்டத்துக்கு முன்பும், பின்பும் அரிப்பகை’ என்றாராம். இதனைக் கேட்டு உச்சிக் குளிர்ந்து போன முத்துசாமி சாத்திரியாருக்கு இராஜ ஜோதிடர் என்ற பட்டமும், பணமும் கொடுத்து அவரை கௌரவப்படுத்தினான்.
பதவிக்கு முன்னால் பாம்பு பகையும், அதற்குப் பிறகு தலையை அரியும் பகையும் இருக்கிறது என்று சாத்திரியார் சொன்னதின் அர்த்தத்தை சரியாக புரிந்து கொள்ளாமல் முத்துசாமி மகிழ்ச்சியில் திளைத்தான். அடுத்து வந்த இரண்டு நாட்களில் அவனை நாகம் தீண்டியது. உடனே யாழ்ப்பாணத்தின் பிரபல விஷக்கடி வைத்தியரான இருபாலை செட்டியார் அழைக்கப்பட்டு மரணத்தின் விளிம்புக்குச் சென்ற முத்துசாமி காப்பாற்றப்பட்டான்.
அதன் பிறகு சாத்திரியாரின் வாக்குப்படி முத்துசாமி அரியணை ஏறினான். சில நாட்களிலேயே பிலிமத்தலாவை, கண்ணுசாமியின் சதியால் மீண்டும் பதவியை இழந்ததோடு அவனுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டு சிரச்சேதமும் செய்யப்பட்டது. இதுதான் அந்தக் கதை.

இந்தப் பாத்திரத்தில் எல்றோய் அமலதாஸ் நடிக்கும் போது சில விசயங்கள் முத்துசாமியின் வரலாற்றில் நடந்தது போன்று படப்பிடிப்பிலும்  நடந்திருக்கிறதாம். தனக்கும் முத்துசாமிக்கும் பூர்வ ஜென்ம தொடர்பு எதுவும் இருக்குமோ என்று நினைத்து பூரித்துப்போகும் எல்றோய் அந்த சம்பவங்கள் பற்றி விபரித்தார்.
“ஒரு நாள் படப்பிடிப்பில் இயக்குநர் என்னிடம் வந்து ‘எல்றோய் வெளியே வந்து பாருங்கள் உங்க நண்பர் வந்திருக்கிறார்’ என்று அழைத்தார். அப்போது நானும் ஆவலாக
வெளியே வந்து பார்த்தேன். அப்போது ஒரு பாம்பாட்டி ஒரு நாகத்தை கொண்டு வந்திருந்தான். அதனைப் பார்த்து சந்தோசப்பட்டு போன நான் ‘பாம்புக்கு பல்லு பிடுங்கிருக்கு’ என்று பாம்பாட்டி சொன்னதை நம்பி ரொம்பவும் தைரியமாக பாம்பைப் பிடித்தேன். பிடித்த அடுத்த நொடியே பாம்பு என் கையை தீண்டியது அதன் இரண்டு பற்களும் என் கையின் தசைகளுக்குள் ஆழமாக இறங்கி நின்றது.
அவசரமோ, அதிர்ச்சியோ அடையாத நான் மிகவும் நிதானமாக அந்த பாம்பின் வாயை பிடித்து என் தசைக்குள் அமிழ்ந்திருந்த பற்களோடு வெளியே எடுத்தேன்.
அப்போது பாம்பு சீண்டிய இடத்திலிருந்து இரண்டு சொட்டு இரத்தம் வெளியே வந்து எட்டிப்பார்த்தது. அந்த நாகத்துக்கு பல்லு பிடுங்கவில்லை என்பது அப்போதான் அந்த பாம்பாட்டிக்கே தெரிந்தது.
பாம்பு பிடிப்பதிலும் எனக்கு ரொம்பவும் பரீட்சியம் இருக்கிறது. பல்லு பிடுங்காத பாம்பை எப்படி கையாள வேண்டும் என்பதையும் நான் தெரிந்து வைத்திருந்தேன். ஆனாலும் பாம்பாட்டியின் வார்த்தையை நம்பிதான் அந்த பாம்பை நான் சரியாக கையாளவில்லை.
வைத்தியசாலைக்கு போகலாமா என்று படப்பிடிப்பு குழு பதறிப்போய் கேட்டபோது நான் கொஞ்சம் நேரம் பார்க்கலாம் என்று சொன்னேன். நான் ஒரு நிமிடத்தை கூட சும்மா வெட்டியாக கழிப்பதில்லை, எனக்கு கிடைத்த அந்த சில நிமிட ஓய்வில் போனில் தேடி என்னைக் கடித்த ராஜநாகம் பற்றிய குறிப்புகளையும் எடுத்து அதற்கான முதலுதவிகளையும் தெரிந்து அதனை மேற்கொள்ளவும் செய்தேன்.

ஆனால் சிறிது நேரத்துக்கு பிறகு உடல் நிலையில் ஏற்பட்ட மாற்றம் உணர்ந்து வைத்தியசாலைக்கு போகலாம் என்று முடிவெடுத்தேன். வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட சிறிது நேரத்துக்கு பிறகு என் பார்வைக்கு எல்லாம் இரண்டாக தெரிந்தது அப்படியே மயங்கிப் போனேன். அதன் பிறகு அடுத்த நாள்தான் கண்விழித்தேன்.

முத்துசாமியை போலவே நானும் மரணத்தின் விளிம்புக்கு சென்று திரும்பியிருகிறேன். அந்த இராஜ நாகம் கடித்தால் உயிர் பிழைப்பது கஷ்டம் என்று கூகுலில் படித்தபோது கொஞ்சம் ஆடித்தான் போனேன்.
ஆனாலும் பாம்பு என்னைக் கடித்தபோது நான் அதனை பெரிதாக எடுக்கவும் இல்லை, பயப்படவும் இல்லை. ஒன்று தெரியுமா, பாம்பு கடித்ததும் எமக்குள் ஏற்படும் பயமே அந்த விஷத்தை சில நிமிடங்களுக்குள் உடம்பு முழுவதும் பரவச் செய்து நம்மை கொன்று விடுமாம்.
பாம்புக் கடியை நான் அசால்ட்டாக எடுத்துக்கொண்டதுதான், அதிர்ஷ்டவசமாக நான் உயிர் பிழைக்கவும் காரணமாக இருந்தது.” என்று எல்றோய் தமது அனுபவத்தை மெய்சிலிர்த்து கூறினார்.
ஏழாம் அறிவில் வருவது போல அவருதான், இவரோ? நாமும் நம்ப முடியாத ஆச்சர்யங்களோடு அவரிடமிருந்து விடைப்பெற்றோம்.🔴

Saturday, December 14, 2019

காதல் சந்தியா இப்போது என்ன செய்கிறார்?

mani srikanthan
கே.சுமதி- வவுனியா.

செப்டம்பர் 27ஆம் தேதி 1988 ஆம் ஆண்டு பிறந்தவர் நடிகை சந்தியா. இவரின் தந்தை அஜித் இந்தியன் வங்கியில் பணிபுரிகிறார். இவரின் அம்மா அழகுக் கலை நிபுணராக இருக்கிறார். மேலும், கேரள மாநிலம் கொச்சி தான் இவர்கள் பூர்வீகம். ஆனால், சந்தியா பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில். மேலும், சந்தியாவிற்கு ராகுல் என்ற ஒரு அண்ணனும் இருக்கிறார்.
சந்தியா தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் எனப் பல மொழித் திரைப் படங்களிலும் நடித்து வந்தார். அதுமட்டும் இல்லாமல் இவர் காதல் திரைப் படத்திற்காக தமிழ்நாடு மாநில விருதையும், பிலிம்பேர் விருதையும் பெற்று உள்ளார். தற்போது கூட இவரை (நீங்கள் உட்பட) அனைவரும் ‘காதல் சந்தியா’ என்று தான் அழைப்பார்கள்.
இவர் நடித்த காதல், ‘டிஸ்யும்’ படங்கள் தந்த வெற்றிக்குப் பிறகு வேறு எந்தப் படமும் பெரிய அளவு வெற்றியைத் தரவில்லை. மேலும், இதுவரை 40க்கும் மேற்பட்ட திரைப் படங்களில் நடித்திருக்கும் சந்தியா, பின் சென்னையை சேர்ந்த கம்ப்யூட்டர் துறையில் வேலை செய்யும் சந்திரசேகர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் குருவாயூர் கோயிலில் டிசம்பர் 6 ஆம் திகதி 2015 ஆம் ஆண்டு நடைபெற்றது.
மேலும், இவர்களுக்கு 2016 ஆம் ஆண்டு ஷீமா என்ற ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்தது. தற்போது கணவர், குழந்தையுடன் கேரளாவில் வசித்து வரும் சந்தியா முழுநேர குடும்பத்  தலைவியாக இருக்கிறார்.


பிகில் எப்படி, வெற்றிப் படமா?
என். அஜந்தன்- யாழ்ப்பாணம்.
அட்லிகுமாரின் படம் என்பதால் சில வெற்றிப் படங்களின் தொகுப்பாக பிகில் அமைந்திருந்தது. விசில் அடிக்கும் ரசிகர்களுக்கு நல்ல தீனிதான் ‘பிகில்’ படம். அதுவும் வெற்றிப்படம்தான்.
தற்போது, ‘பாகுபலி 2’ படத்துக்குப் பிறகு தமிழகத்தில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையையும் படைத்துள்ளது. தமிழகத்தில் அஜித் நடிப்பில் வெளியான ‘விஸ்வாசம்’ படத்தின் மொத்த வசூல் 135 கோடி ரூபாய்க்கும் அதிகம். இதனை ‘பிகில்’ படத்தின் மொத்த வசூல் முறியடித்து 140 கோடி ரூபாய்க்கும் அதிகம் என்ற இமாலய இலக்கை எட்டியுள்ளது.

இந்த ஆண்டு இந்திய அளவில் அதிக வசூல் செய்த தமிழ்ப் படங்களின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது ‘பிகில்’. அதே போல் தென்னிந்தியாவிலிருந்து இந்திய அளவில் 200 கோடி ரூபாய் வசூல் செய்த நடிகர்கள் பட்டியலில் ரஜினி, பிரபாஸ், யாஷ் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். அந்தப் பட்டியலில் இப்போது விஜய்யும் இணைந்துள்ளார்.
வெளிநாடுகளில் அதிக வசூல் செய்யும் தமிழ் நடிகர்கள் பட்டியலில் ரஜினிதான் எப்போதுமே நம்பர் வன். தற்போது அந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துவிட்டார் விஜய். ‘பிகில்’ படம் ரஜினி படங்களின் வசூல் பட்டியலுக்கு அப்புறமே இருந்தாலும், பல்வேறு வெளிநாடுகளில் ரஜினி படங்களின் வசூலையும் முறியடித்துள்ளது.
மலேசியாவில் ஷாருக்கானின் ‘தில்வாலே’, ரஜினி நடித்த ‘கபாலி’ ஆகிய படங்களுக்குப் பிறகு அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.
‘பிகில்’ படத்தின் பிரம்மாண்டமான வசூலின் மூலம், ரஜினிக்குப் பிறகு வெளிநாடு, இந்தியா, தமிழ்நாடு என அனைத்து விநியோகிஸ்தர்களுக்கும் வசூல் நாயகனாக வலம் வர ஆரம்பித்துள்ளார் விஜய்.


யோகிபாபுவுக்கு எப்போது திருமணம்?
ஆர். சதுர்ஷன்- கண்டி.
சமீப காலத்தில் திரைப்பிரவேசம் செய்திருந்தாலும் யோகி பாபு அவரின் பெயருக்கு அமைய ரொம்பவும் யோகமானவர்தான்.
கோலமாவு கோகிலாவில் நயன்தாரவுடன் டூயட் பாடியவர், பிறகு தர்மபிரபுவில் நாயகனாக நடித்தார்.
தற்போது, ரஜினிகாந்துடன் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். தற்போது அவர் கைவசம் 18 படங்கள் உள்ளன.
சமீபத்தில்தான் தான் சிறுக சிறுக சேமித்த பணத்தில் சென்னையில் ஒரு வீடு கட்டி குடி புகுந்திருக்கிறார்.
இந்த நிலையில்தான் யோகிபாபுவின் முகநூல் கணக்கில் அவர் யாரோ ஒரு பெண்ணுடன் இருப்பது போன்று ஒரு படம் ‘அவளும் நானும்’ என்ற தலைப்பில் வெளியாகி இருந்தது.
அதை பார்த்த ரசிகர்கள் யோகிபாபு திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண் இவர்தான் என்று பேசினர். அதோடு யோகிபாபுக்கு பலரும் வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்தனர். உங்களுக்கு மனைவியாக வருபவர் அழகாக இருக்கிறார் என்றும் பதிவிட்டனர். செல்போனில் தொடர்பு கொண்டும் வாழ்த்தினார்கள்.
இதுப் பற்றி யோகி பாபுவிடம் நாம் தொடர்பு கொண்டு கேட்டப்போது, “அந்த முகநூல் எனது பெயரில் இயங்கும் ஒரு போலியான கணக்கு, அந்த செய்தியும் உண்மையில்லை. எனக்கு பெண் பார்க்கும் வேலையை எனது பெற்றோர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். எனது திருமணத்தை உங்கள் அனைவருக்கும் அறிவிப்பேன்” என்று அவர் தெரிவித்தார்.
யோகிபாபுவிடமிருந்து வரும் தகவலை சதுர்ஷனுக்கு முறையாக நாம் அறிவிப்போம்.🔴

Thursday, November 28, 2019

எமது நடிகை நிரஞ்சனியுடன் ஒரு பரபரப்பு உரையாடல்

மணி ஸ்ரீகாந்தன்.

‘வடபகுதி தமிழ்ப் பெண்ணாக தோன்றும் என்னை நிர்வாணமாகக் குளிக்கும் காட்சியொன்றில் நடிக்கும்படி என்னிடம் இயக்குநர் கேட்டுக் கொண்டார். தமிழ் பெண்கள் குளியல் ஆடை இல்லாமல் நீராடும் வழக்கம் இல்லை என்றும் அது யதார்த்தத்துக்கு புறம்பானது என்றும் அவரிடம் விளக்கியதும் அவர் காட்சியை மாற்றிவிட்டார்’

லங்கை சிங்கள திரையுலகில் ரொம்பவும் பிஸியாக இருக்கும் நடிகைதான் நிரஞ்சனி சண்முகராஜா, கண்டியை பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஒரு தமிழச்சிதான் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
இலங்கையின் முன்னணி இயக்குநர் சோமரத்ன திஸாநாயக்க இயக்கியுள்ள ‘சுனாமி’ படத்தில் நாயகியாக இவர் நடித்துள்ளார்.
“அடுத்தடுத்து ஐந்து படங்களில் நாயகியாக நடித்திருக்கிறேன். விரைவில் திரைக்கு வரவுள்ள சுனாமியை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். அந்த படத்திற்கு பிறகு நம்ம ரேஞ்சே வேற” என்று நம்பிக்கையோடு கெத்துக் காட்டும் நிரஞ்சனி தனது ‘சுனாமி’ படத்தின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
2000 ம் ஆண்டு சோமரத்னவின் ‘சரோஜா’ திரைப்படம் வெளியானது. அந்தப் படத்தில நித்தியவாணி என்ற ஒரு குழந்தை நட்சத்திரம் அறிமுகமாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து ‘சின்ன தேவதை’ என்று ஒரு படம் அந்தப் படத்திலையும் நித்தியவாணிதான் நடித்திருந்தாள். அப்போ நானும் சின்னப் பொண்ணுதான். எனக்கு நித்தியவாணியை பார்க்கும் போது ஒரு பொறாமை ஏற்பட்டது. ‘அந்தப் பொண்ண விட என்னால நல்லா நடிக்க முடியுமே’ என்று நினைச்சேன்.
ஆனால் நடிகையாவேன் என்று கனவில கூட நினைச்சுப் பார்த்ததில்ல. என் அதிர்ஷ்டம் திடீர்னு நடிகையாயிட்டேன். எல்லோரும் நினைப்பது போல நானும் இயக்குநர் சோமரத்னவின் படத்தில் நடிக்கனும்னு ஆசையோடுதான் இருந்தேன். சினிமா சம்மந்தப்பட்ட நிகழ்வுகளில் சோமரத்னவை சந்திக்கும் போது ‘நாங்களும் நடிப்போம், எங்களுக்கும் ஒரு சான்ஸ் தாங்களேன்’ என்று கிண்டலாக கேட்பதுண்டு.
ஆனால் இவ்வளவு சீக்கிரமாக அவரின் படத்தில நாயகியாவேன்னு நான் கனவிலேயும் நினைக்கவில்லை.
ஒரு நாள் 2017ல் நான் ‘கிரிவெசிபுர’ படத்தின் படப்பிடிப்பு இடைவேளையில் இருந்தபோது எனக்கு ஒரு போன் கோல் வந்தது அழைப்பில் இயக்குநர் சோமரத்ன, “நீ அடிக்கடி கேட்பியே ‘நானும் உங்க படத்தில் நடிக்கலாமா’ன்னு, நீதான் என்னோட அடுத்த படத்தின் நாயகி” என்று அவர் சொன்னதும் நான் அப்படியே ஒரு கனம் ஷொக்காகி நின்னுட்டேன்.

“நான்தான் சோமரத்னவின் படத்தில் கதாநாயகி!!” என்று ‘கிரிவெசிபுர’ படப்பிடிப்பு தளத்திலேயே சந்தோசத்தில் கத்தி துள்ளிக் குதிச்சேன்.
ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இன்னொரு பெரிய இயக்குநரின் படத்தில் எனக்கு கதாநாயகி சான்ஸ் கிடைத்ததை கிரிவெசிபுர படக்குழு என்னை ‘அதிர்ஷ்டசாலி’ என்று பாராட்டினார்கள்.
இலங்கையின் பெரிய டைரக்டரின் படத்தில் நடிக்கப்போவதை நினைத்து எனக்குள் ஒரு கர்வமும் வந்துவிட்டது.
அதன் பிறகு பல மாதங்கள் ஆகியும் சோமரத்னவிடமிருந்து எந்தவித தகவலும் இல்லை, அதன் பிறகு சோமரத்னவை பல நிகழ்வுகளில் நான் பார்த்தாலும் திரைப்படம் பற்றி எதுவும் கேட்கவில்லை. அதன் பிறகு நானும் அதை மறந்துவிட்டேன்.
ஓராண்டுக்கு பிறகு ஒருநாள் சோமரத்னவிடமிருந்து அழைப்பு வந்தது. “திரைக் கதை ஸ்கிரிப்ட் வேலைகள் முடிவடைந்து விட்டன. இனி சூட்டிங்தான். நீ என்னை நேரில் வந்து சந்தி. கோல்சீட் பற்றி பேசணும்”என்றார். என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு தொலைபேசி அழைப்பாகவும் அது அமைந்துவிட்டது" என்று நிரஞ்சனி சிலீர்த்து கொண்டார்.

“நிரஞ்சனி குடும்பப் பாங்கான வேடத்தில் மட்டும்தான் நடிப்பீங்களா, அல்லது கிளாமரும் பண்ணுவீங்களா..?”என்று கேட்டதும்,
“எனக்கு அதில் அப்படியொன்றும் வரையரை கிடையாது. நிர்வாணமா இருந்தால்தான் அந்தக் காட்சிக்கும், அந்தக் கதைக்கும் நூற்றுக்கு நூறு வீதம் உயிரோட்டம் வரும் என்றால் நான் நிர்வாணமாக நடிக்கவும்; தயார்! ஒரு நடிகையோ, நடிகரோ தண்ணீர் மாதிரி இருக்கணும், அப்போதுதான் நாம் நடிக்கும் பாத்திரத்துக்குள் புகுந்து அப்படியே நாங்களும் அந்த பாத்திரம் மாதிரியே மாற முடியும். அப்போதுதான் அந்த முழு வடிவத்தை நாங்கள் திரையில் காட்ட முடியும்.
சமீபத்தில் நான் நடித்த ‘ரது சமனல சிஹினய’ என்ற படத்தில் நான் நிர்வாணமாக குளிப்பது போல ஒரு காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
இயக்குநர் காட்சியை எனக்கு விபரித்தார், ‘இந்த காட்சியின் கதாபாத்திரமான ராகினி ஒரு சுத்த தமிழ்ப் பெண். அதுவும் வடக்கில் போர் சூழலில் வளர்ந்து, இறுதி யுத்தத்தில் தன் தங்கையை தொலைத்துவிட்டு, பிறகு தங்கையை தேடிக்கொண்டு  கொழும்பிற்கு வருகிறாள். அவளுக்கு சிங்களம் பேச வராது. அந்த சூழலில் தமிழ் பேசக்கூடிய ஒரு சிங்கள நண்பனை நம்பி அவன் வீட்டில் வந்து தங்குகிறாள். அந்த வீட்டில் இன்னொரு ஆணும் தங்கியிருக்கிறான்.
ஒருநாள் ராகினி குளிப்பதை அவர்கள் இருவரும் ஒளிந்திருந்து பார்க்கிறார்கள்” என்றார்.
அதற்கு நான் அவரிடம், “வடக்கில் வாழும் ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த தமிழ்ப் பெண் அப்படி நிர்வாணமாக குளிக்க வெட்கப்படுவாள், பொதுவாக நாங்கள் வீட்டில் குளிக்கும் போது மார்பு வரை ஒரு துண்டை கட்டிக்கொண்டுதான் குளிப்போம். தமிழர் கலாச்சாரம் அப்படிதான் சொல்லித்தந்திருக்கிறது. எனவே வேறு ஒரு வீட்டில் தங்கும் தமிழ்ப் பெண் அப்படி நிர்வாணமாக குளிப்பது சாத்தியமில்லை.
எனவே இந்தப் படத்தில் எனக்கு நிர்வாணமாக நடிப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் யதார்த்தத்துக்கு பொருந்தாமல் காட்சி அமைக்கப்பட்டால் நீங்கள் கஷ்டப்பட்டு உருவாக்கிய அந்த ராகினி பாத்திரம் வீணாகிவிடுமே”  என்றேன்.
நான் சொன்னதை கேட்டு உண்மையை உணர்ந்து கொண்ட அந்த இயக்குநர் உன்னோடு பணியாற்ற கிடைத்தது எனக்கு ரொம்ப சந்தோசம். நல்ல நேரத்தில் அந்த காட்சியின் தன்மையை புரிய வைத்தாய் என்று அந்தக் காட்சியில் உடனே மாற்றத்தை ஏற்படுத்தினார்.
எனவே நிர்வாணமாக நடிக்கணும் என்பதற்காக எல்லாக் காட்சியிலும் அவர்கள் சொல்வதை கேட்டு நடித்துவிட முடியாது.” என்று ரொம்பவே தைரியமாகவும், தெளிவாகவும் பேசும் நிரஞ்சனியிடம்,

“தென்னிந்திய திரையுலகுக்குச் சென்று சாதிக்க வேண்டும் என்ற ஆசையில் நம்மவர்கள் தமிழகத்துக்கு செல்வது பற்றி என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டோம்,
“அப்படியான எண்ணத்தோடு போறவங்கள பற்றி தப்பு சொல்லுவதற்கு எனக்கு உரிமையில்லை. அது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம். ஆனால் நிரஞ்சனி என்கிற இந்த மனுஷி பிறந்தது இலங்கையில்தான், எனக்கான அத்திவாரமும், அங்கீகாரமும் இங்கேதான் கிடைத்தது.
எனக்கு கிடைத்த அத்திவாரத்தை உறுதியாக வைத்துக்கொள்வதும், கொள்ளாததும் என் கையில்தான் இருக்கிறது. என்னைப் பொருத்தவரையில் நான் எனக்கான அஸ்த்திவாரத்தை இன்றைய நாள் வரையிலும் நான் ரொம்பவும் உறுதியாக போட்டுவைத்திருக்கிறேன். அதோடு என்னை நடிகையாக்கிய இந்த மண்ணுக்கும், என்னை ஒரு நடிகையாக ஏற்றுக்கொண்ட என் மக்களுக்கும் நான் முதலில் ஏதாவது  ஒன்றை செய்ய வேண்டும் என்பதுதான் என் ஆசை. ஆனாலும் எல்லோருக்கும் இருப்பது போல தென்னிந்திய சினிமா மீதான மோகம் எனக்கும் இருந்தது. நான் அதற்கான முயற்சியையும் செய்தேன்.
ஆனால் பிறகுதான் நான் ஒன்றை புரிந்துகொண்டேன். பெரிய ஒரு கடலில் நான் நெத்திலியாக இருப்பதைவிட, ஒரு சின்னக் குளத்தில் நான் திமிங்கிலமாக இருப்பது எவ்வளவோ மேல். என்பதை இப்போது இந்த சிறிய நாட்டில் ஒரு திமிங்கலமாகத்தானே இருக்கிறேன். இது எனக்கு பெரிய மன நிறைவைத் தருகிறது.
ஆனாலும் நல்ல வாய்ப்புகள், நல்லவிதமாக எந்த நாட்டிலிருந்து வந்தாலும் ஏற்றுக்கொள்வேன்” என்று யதார்த்தம் புரிந்து பேசும் அவரின் முகத்தில் ஆளுமை அப்படியே பளீச்சிடுகிறது….
நிரஞ்சனி திரைத்துறையில் சாதனைகள் பல கண்டு, சரித்திரம் படைத்திட, நெஞ்சார்ந்த எமது வாழ்த்துக்களையும் கூறி விடைப் பெற்றோம்.🔴

Wednesday, November 27, 2019

பிரபல மகப்பேறு மருத்துவ நிபுணர் இலங்கை வருகை



மிழ்நாடு கோயம்புத்தூர் வம்சம் மருத்துவமனையின் பிரபல குழந்தை மகப்பேறு மருத்துவ நிபுணரான டாக்டர் சிலம்பு செல்வி இன்று (28-11-2019) வியாழக்கிழமை இலங்கை வருகின்றார்.

இலங்கை வரும் டாக்டர் சிலம்பு செல்வி மகப்பேறு தொடர்பான கருத்தாடல்களை நடத்தவுள்ளதால் அவரிடம் தமது குழந்தைப்பேறு தொடர்பான பிரச்சினைகள், சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற விரும்புவோர் 0778978792 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.🔵

Sunday, November 24, 2019

இலங்கை வந்திருந்த பகுத்தறிவுப் பெண் சபரிமாலா

சந்தித்தவர்:  மணி ஸ்ரீகாந்தன்

மிழகத்தின் பட்டிமன்ற பேச்சாளர்களில் சபரிமாலா ஜெயகாந்தனுக்கு என்று ஒரு தனியிடம் இருக்கிறது. இதுவரை ஆயிரத்துக்கு மேற்பட்ட பட்டிமன்றங்களில் பேச்சாளராக, நடுவராக களம் கண்டிருக்கிறார்.
சமீபத்தில், ‘பெண்மைதான் பேராற்றல்’ என்ற தொனிப் பொருளில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்வதற்காக இலங்கை வந்திருந்தவரை சந்தித்துப் பேசினோம்.

“பதினைந்து ஆண்டுகளாக அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியிருக்கிறேன். அப்போது பட்டிமன்ற பேச்சாளராக  பல மேடைகளில் பேசியிருக்கிறேன். ஒரு காலகட்டத்தில் நாம் பேசுகிற பேச்சுக்கும் வாழ்கிற வாழ்க்கைக்கும் சம்மந்தமே இல்லாமல் பணத்துக்காக பேசுகிற கூட்டமாகவே இது இருக்கிறது என்பதை புரிந்துகொண்டேன்.
அதன் பிறகு  பட்டிமன்றங்களில் பேசுவதை நிறுத்திவிட்டு, எனது முழு பேச்சாற்றலையும் மாணவர்களுக்காக மட்டுமே பயன்படுத்துவது என்று முடிவெடுத்து, பேச்சாற்றலை மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்து அவர்களையே பேச்சாளராக்கி நடுவர் என்ற பொறுப்பை நான் எடுத்து சமூக விழிப்புணர்வுக்கான பட்டிமன்றங்களை தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறேன் இதுவரை தொண்ணூறுக்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை மாணவர்களை மட்டுமே வைத்து நடத்தியிருக்கிறேன்.
அப்போது ஊடகங்கள் எமக்கு வழங்கிய ஆதரவு எனக்கு ஒரு புதிய உத்வேகத்தை கொடுத்தது. பேச்சு என்பது வெறுமனே பணத்துக்காக அல்ல அது சமூக மாற்றத்துக்கானது என்பதை தெரிந்து கொண்டதோடு, சமூக விழிப்புணர்வு களப்பணிகளுக்காக அதனையே கையில் எடுத்தோம். நான் ஒரு ஆசிரியராக இருந்ததினால் இந்த விடயத்தை மாணவர்கள் மத்தியில் பரப்புவதற்கும், அவர்களை உருவாக்குவதற்கும் எனக்கு பெரிய பலமாக இருந்தது. அதன் பிறகு கல்லூரி மாணவர்கள், உள்ளிட்ட நிறைய பேர் எம்மோடு இணைந்தார்கள்.

அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலை ‘நீட்’ தேர்வுக்கான எதிர்ப்பு போராட்டமாக வலுப்பெற்றிருந்த நேரம் அப்போது நான் ‘நீட்’ தேர்வுக்கு எதிராக அனைவருக்கும் ஏற்றத் தாழ்வில்லாத கல்வி முறை இந்தியா முழுவதும் வேண்டும் என்பதை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்தேன். ஆனால் எனது பள்ளியில் அனுமதி மறுக்கப்பட்டது. அதன்போது எனது குழந்தைகள், மாணவர்களின் கல்வி சிக்கல்களுக்கு குரல் கொடுக்க எனது வேலை தடையாக இருக்குமென்றால் அந்த வேலையே தேவையில்லை என்று எனது அரசு ஆசிரியர் வேலையை இராஜினாமா செய்து விட்டு தொடர்ந்து மாணவர்களுக்காக களம் காணுவது என்கிற இலட்சியத்தோடு கடந்த இரண்டு ஆண்டுகளாக களப் பணியில் இறங்கியிருக்கிறேன்.”
என்ற சபரிமாலா பட்டிமன்ற பேச்சுப்போலவே படபடத்தவர் விடாமல் தொடர்ந்தார்,

“தமிழகத்தில் கடந்த ஓராண்டில் முப்பத்தைந்து பள்ளி வயது பெண் பிள்ளைகள் பாலியல் வன்கொடுமையில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். வெளியில் வராத கொடுமைகள் எத்தனையோ, வழக்கு என்று வராத செய்திகள் எத்தனையோ ஆனால் கொல்லப்பட்டது மாத்திரம் முப்பதைந்து குழந்தைகள். அதற்கு எதிராக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து பள்ளிக் கல்லூரி பிள்ளைகளை சந்தித்து வருகிறேன். எனக்கு நானே வீடு திரும்பாத போராட்டம் என்று அறிவித்துக்கொண்டு வீட்டுக்கே போகாமல், இந்த ஓராண்டில் தமிழகம் முழுவதுமாக ஐந்து லட்சம் பிள்ளைகளை சந்தித்து இருக்கிறேன்.

இலங்கைக்கு இதுதான் முதல் வெளிநாட்டு பயணம். இலங்கை வரும்போதுதான் முடிவு செய்தேன் உலகம் முழுவதும் இருக்கும் தமிழ்க் குழந்தைகளிடமும் பெண்மைதான் பேராற்றல் என்னும் பரப்புரையைச் செய்ய வேண்டும். அந்தப் பரப்புரையைத்தான் தமிழ் நாட்டிலும் செய்திருக்கிறேன். இதை உலகம் முழுவதும் உள்ள தமிழ்க் குழந்தைகளிடம் சொல்ல வேண்டும், ஏனென்றால் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான கொடுமைகள் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறுகிறது.

இலங்கையில்...
கல்வி, சுதந்திரம், உளவியல் சிக்கல்கள் உள்ளிட்ட ஏராளமான பிரச்சினைககள் இருக்கின்றன. இங்கும் மலையகத்து பிள்ளைகளுக்கு இன்னும் சரியாக கல்வி போய்ச் சேரவில்லை என்று சொல்லப்படுகிறது.
இதனை முடிந்த அளவு அடுத்த தலைமுறைக்கு எடுத்து சொல்ல வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. அதனால் எனது முதல் கட்ட வெளிநாட்டு பரப்புரையை உலகத்தின் மிகவும் தொன்மையான ஓலைச் சுவடிகளை கொண்டிருந்த யாழ். நூலகத்திலிருந்து தொடங்குவது என்று முடிவு செய்து. எனது இந்தப் பயணம் யாழ். நூலகத்திலிருந்து தொடங்கப்பட்டிருக்கிறது.

திருகோணமலையில் சென்மேரிஸ் பள்ளி, முள்ளிக்குளம் பள்ளி, தேவிபுரத்தில் உள்ள கணேஷா கல்வி நிலையம் மற்றும் மிகவும் பின் தங்கிய பகுதிகளில் உள்ள குழந்தைகள் என்று மூவாயிரம் பெண் குழந்தைகளை இலங்கையில் சந்தித்து இருக்கிறேன்.” சபரிமாலா முகம் மலர்ந்தார்.
“தங்களின் இலங்கைப் பயணம் திட்டமிட்டப்படி நிறைவுப் பெற்றதா?”என்றதும்,

“உண்மையைச் சொல்லப் போனால் எனக்கு இங்கு யாரையும் தெரியாது. எனது சமூக செயற்பாடுகளை சமூக வலைத்தளங்களில் அறிந்த சமூக ஆர்வலர்கள் இங்கே கொஞ்சம் பேர் இருக்கிறார்கள், அவர்களை சந்தித்து எனது பரப்புரைக்கான திட்டமிடலை செய்து விட்டு பிறகு ஒருநாள் பிள்ளைகளை சந்திக்கலாம் என்றுதான் நினைத்திருந்தேன்.
ஆனால் இங்குள்ள ஆர்வலர்கள் எல்லா ஏற்பாடுகளையும் அதிரடியாக செய்து மூவாயிரம் தமிழ்க் குழந்தைகளுடனும் என்னை கலந்துரையாட வைத்தார்கள். எனக்கு இது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.
எனது அடுத்த பரப்புரை பயணத்தை ஜனவரியில் இலங்கையில் மேற்கொள்ள இருக்கிறேன். அதில் முக்கியமாக மலையகத்தில் உள்ள தமிழ்ப் பிள்ளைகளை சந்திக்க வேண்டும். அவர்களுடன் பத்து நாட்கள் தங்கியிருந்து எனது கல்வி சார்ந்த விழிப்புணர்வு பிரசாரத்தை முன்னெடுக்கணும் என்று நினைக்கிறேன்.” என்றார்
இலங்கை பள்ளியில்..
“சபரிமாலா பகுத்தறிவுவாதியா” என்று எமது சந்தேகத்தை க்ளீயர் செய்தோம்.
“நான் சாதி மதம் கடந்தவள். எல்லோரையும் பார்க்கும்போது மனிதர்களாக தெரிகிறார்கள். அதனால் நாடுகள், கடல், எல்லைகள், இனம், மொழி அனைத்தையும் கடந்து மனிதர்களாக பார்க்கிறேன். குறிப்பாக பெண் குழந்தைகளை பேராற்றல் மிக்கவர்களாக எல்லா இடத்திலையும் பார்க்கிறேன். அந்த மனநிலையில்தான் நான் வளர்ந்து கொண்டிருக்கிறேன். தனிப்பட்ட ரீதியில் இவர்களை பின்பற்றுகிறேன் என்று சொல்லமுடியாது. ஏனென்றால் நான் பெரியாரையும், விவேகானந்தரையும், அன்னை திரேசாவையும், நபிகளையும் பின்பற்றுகிறேன். எனக்கு யாரெல்லாம் நல்ல செய்திகளை தருகிறார்களோ அவர்களிடமிருந்து நிறைய விசயங்களை எடுத்துக்கொள்கிறேன். அவற்றில் மாற்று இருக்கும் போது அதில் சிலவற்றை விட்டுவிடுகிறேன், அவ்வளவுதான்.” என்ற சபரிமாலாவை இடைமறித்து “அப்படியென்றால் உங்களை ஆன்மீகவாதின்னு சொல்லலாமா?”என்றோம்,

“நிச்சயமாக இல்லை, நான் ஆன்மீகத்தை மனிதர்களுக்குள்தான் பார்க்கிறேன் கோயில்களில் இல்லை, ஆன்மாவுக்குள் இருக்கிற கருணையை பார்க்கும் ஆன்மீகவாதி என்று நீங்கள் சொல்லலாம்.” என்று நச்சென்று பேசும் சபரிமாலாவிடம்,
“நடந்து முடிந்த சட்ட மன்ற இடைத்தேர்தல் முடிவை எப்படி பார்க்கிறீர்கள், தமிழக மக்கள் சரியானதை தெரிவு செய்கிறார்களா, அல்லது தடுமாறுகிறார்களா..?
என்று கேட்டதும்,
“இன்னும் அந்த மக்கள் சரியாக அரசில்படுத்தப்படும் சூழலில் இல்லை. இன்னும் நிறைய மூடப்பழக்கம், பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுப் போடுகிற நிலையிருக்கிறது. கல்வி அறிவு போய் சேரவில்லை, இப்படி நிறைய விசயங்களில் அவங்க பின்தங்கி இருக்கும் போது சரியானதைதான் தெரிவு செய்கிறார்கள் என்று எந்த விடயத்திலும் சொல்லிவிட முடியாது. ஓட்டுக்கு காசு வாங்கிட்டு நம் கண் முன்னாலயே அவங்க ஓட்டுப்போடுறதை நாம் பார்க்கிறோம். அதனால் அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு அந்த தலைமுறை, அந்த நிலம் வளருவதற்கு வாய்ப்பில்லை. ஒரு ஐந்து சதவீத மக்கள்தான் தெளிந்த விழிப்புணர்வோடு அரசியலை அணுகுகிறார்கள். அதனால் அரசியல்வாதிகளை திருத்துவது, மாற்றுவது என்பதனைத் தாண்டி மக்களை அரசியல்படுத்துவதுதான் பெரும் பணியாக இருக்கிறது”
இலங்கை பள்ளியில்..
“தமிழக மக்களின் இந்தப் பின் தங்கிய சிந்தனை செயல்பாடுகளுக்கு அடிப்படையாக மதம்தான் இருக்கிறது என்று சொல்லப்படுகிறதே..?”என்று சபரிமாலாவுக்கு இன்னொரு செக் வைத்தோம்.
“சரியான சிந்தனையோடு இருக்கும் அவர்களின் சதவீதம் குறைவுதான். இதற்கெல்லாம் முக்கிய காரணம் கல்விதான் கல்வி இன்னும் அவங்களுக்கு சரியாக போய் சேரவில்லை. ஏழைக்கு, பணக்காரனுக்கு, பெரும் பணக்காரனுக்கு, வெளிநாட்டுக்கு போகணும் என்று நினைக்கிறவனுக்கு என்று இங்கே பலவிதமான கல்வியை இந்த நாடு வைத்திருக்கிறது. இலங்கையை பொருத்தவரையில் எனக்கு பெரிய மகிழ்ச்சியான விடயம் இங்கே எல்லோருக்கும் ஒரே வகையான கல்வி வழங்கப்படுவதுதான். இந்தச் சூழல் இந்தியாவில் இல்லை. கல்வியை இப்படி அவர்கள் பிரித்து வைத்ததினால் மக்களும் பிரிந்து, பிரிந்து இருக்கிறார்கள். கருணையின் அளவீடும் குறைந்துவிட்டது.

மூடப்பழக்கங்களை வளர்க்கணும் என்று நினைக்கும் கூட்டம் அப்படி தமக்கு வசதியாக ஒரு கோட்பாட்டை உருவாக்கி இந்த சமூகத்தை பிடித்து வைத்திருக்கிறது. இன்றைக்கும் கூட பெண்களை மாதவிடாயை தீட்டுன்னு சொல்லி ஒதுக்குகிறார்கள். மற்ற நாடுகளில் எல்லாம் பெண் பிள்ளைகளை படிக்க வைத்து விண்வெளிக்கு அனுப்புவோமா, விண்கலத்துக்கு அனுப்புவோமான்னு பேசிக்கொண்டிருக்கும் போது இவர்கள் இந்த காரணத்துக்காக வீட்டுக்குள் வரக் கூடாதுன்னு சொல்கிறார்கள். இந்த மாதிரி இங்கே ஆயிரம் கிராமம் இருக்கு. அந்த ஐந்து நாளும் வீட்டுக்கு வெளியேதான் இருக்கணும்.
இல்லன்னா மரத்தடியில் இருக்கணும், பொதுக் குளத்தில் குளிக்கணும். வீட்டுக்குள்ளேயே ஏன் எல்லா அறைக்குள்ளும் விடமாட்டேங்கிறீங்க என்று நாங்கள் உரத்து கேட்டுக்கொண்டிருக்கும் போது, அவர்கள் வீட்டுக்கு வெளியேதான் இருக்கிறார்கள். அம்மியும், ஆட்டுரலும் வீட்டுக்குள் இருக்கும்போது ஒரு பெண்ணுக்கு இயற்கையான இந்த விடயம் நடக்கும் போது வீட்டுக்குள் வருவதற்கே அனுமதியில்லேன்னா இது குலசாமிக்கு ஆகாது என்பதிலிருந்துதான் வருகிறது.
இதனை அரசியல்வாதிகள் தங்களுக்கான பெருங் கருவியாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். எல்லாமே ஓட்டாகப் பார்க்கப்படுகிறது. ஆன்மீகமும், அரசியலும் தங்களை வளர்ப்பதற்காக இந்த நிலத்தை கெடுத்து வைத்திருக்கிறார்கள். மடத்தனமாக இவர்கள் இருந்தால்தான் பிழைக்க முடியும் என்று ஒரு அரசியல் கூட்டம். இவர்கள் இப்படியே இருந்தால்தான் தான் வளர முடியும் என்று ஒரு மதக் கூட்டம்…”
என்று சமூகத்தின் மீதான சபரியின் கோபம் வார்த்தைகளாக வந்து விழுந்தது.

“மோடியின் ஒரே நாடு ஒரே தேசம் பற்றி என்ன சொல்கிறீர்கள்” என்றதும், (சபரிமாலா சிரித்து விட்டு தொடர்ந்தார்)
“ஒரே நாடு ஒரே தேசம் என்று சொல்கிறவர்கள் ஏன் ஒரே சாதின்னு சொல்லமாட்டேங்கிறாங்க? ஏன் ஒற்றைக் கல்வின்னு சொல்லவில்லை? ஒரே கல்வி என்பது எந்த நிலத்திலும் சாத்தியமில்லை. ஊருக்கு ஊரு உணவு, கலாசாரம் என்று வேறுபடுகிறது அதனால் ஒற்றைக் கல்வியை கொடுத்துவிட்டு அந்தந்த மாநிலங்கள் அவர்களுக்கு அமைவாக பாடத்திட்டத்தை உருவாக்கலாம் என்பது சாத்தியம், அதனை செய்யலாம் ஆனால் அவங்க அதனை செய்யமாட்டார்கள்.
அதனால் ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு, ஒரே ஆதார் கார்டு என்பதெல்லாம் ஒற்றை ஆளுகைக்கு கீழ் வரணும் மீண்டும் ஒரு சர்வாதிகார போக்கு வரணும் என்பதற்கான திட்டமிடல்தான். ஒரு போதும் அது நடக்காது, வெல்லாது!”
என்று குரலை உயாத்தினார் சபரிமாலா.

“இந்தியும், சமஸ்கிரதமும் ஒரு மொழிதானே அதனை கற்றுக்கொள்வதில் என்ன தவறு இருக்க முடியும்..?”
“தவறு இல்லை, இந்தியை, சமஸ்கிரதத்தை கற்றுக்கொள்ளுங்கள் நீங்கள் உலகத்தில் உள்ள எத்தனை மொழியை வேண்டுமானாலும் உங்களின் அறிவுக்கேற்ப கற்றுக்கொள்ளுங்கள். ஆனால் அவற்றை தானாக கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் இவங்க என்னா செய்றாங்கன்னா, எல்லா மொழிகளையும் எடுத்து துடைத்து தூர வாரிப் போட்டுவிட்டு, இந்தியை மட்டும் தேசிய மொழியாக்கணும் என்கிற வேலை நடைபெறுகிறது. சமஸ்கிரதத்தை மட்டும் கோயில்கள் உள்ளிட்ட இடங்களில்
பொது மொழியாக்கணும் சாமிக்கான மொழியாக இருக்கணும் என்று கொண்டு வருகிறார்கள்.
ஆனால் மாநிலங்களில் அவர்களுடைய தாய் மொழியில்தான் மரபணு கடத்தப்பட்டிருக்கும். இப்போ தமிழ் மொழி பத்தாயிரம் ஆண்டுகளாக எங்களின் மரபணுவில் கடத்தப்பட்டிருக்கிறது. கீழடி ஆய்வு இரண்டாயிரத்து அறுநூறு ஆண்டுகள் என்று ஆதாரப்பூர்வமாக கூறியிருக்கிறது.
இன்னும் பல இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. என்றாவது ஒரு நாள் பத்தாயிரம் ஆண்டுகள் பழமையானது தமிழ் மொழி என்று நிறுவுவார்கள்.

இப்படி எங்களின் மொழிக் கொடுத்த உணர்வு, அது கடந்து வந்த பாதை, பண்பாடு என்றெல்லாம் இருக்கும் போது திடீர்னு இந்தி வந்து ஆதிக்கம் செலுத்துகிறது. இப்போதே தமிழ் நாட்டில் எல்லா துறைகளிலும் இந்திக்காரர்கள் வேலைக்கு வந்துவிட்டார்கள். ‘எங்கள் நிலத்தின் வேலைவாய்ப்பு எங்களுக்கு மட்டும்தான்’ என்பதினை இப்போதுதான் வலியுறுத்தி போராட்டம் நடத்த ஆரம்பித்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில் ஒரு மொழியை வலிந்து திணித்து, எங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது!”
என்ற சபரிமாலா மீண்டும் குரலை கம்பீரமாக உயர்த்தினார்.⚫

கமலின் கனவுப் படம் மருதநாயகம் வருமா?

ஆர். சுமித்திரா- நிவித்திகலை.

1997ல் மருதநாயகம் படத்தின் வேலைகள் தொடங்கப்பட்டு சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்டதோடு, பெரிய பட்ஜெட் படம் என்பதால் கணக்கு போட்டு மலைத்துப் போன மருதநாயகம் படக்குழு படத்தை நிறுத்திவிட்டது.
அந்தப் படத்தை இப்போது தொடர்ந்தால், அதில் நடித்தவர்கள் தோற்றம் மாறி இருக்கும் என்றும் நீங்கள் நினைக்கலாம்.
ஆனாலும் படத்தின் மிகவும் கடினமாக காட்சிகள் முப்பது நிமிடம் படமாக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த காட்சி  12 ஆண்டுகளுக்கு பிறகு என்று காட்சிகள் விரிவதால் அந்தப் படத்தை தொடர்வதிலும் பிரச்சினை இல்லை.
ஆனாலும் கமல் இந்தப் படத்தில் நடிக்க முடியாது என்றும் தனக்கு பதிலாக வேறு ஒருவர் நடிப்பார் என்றும் கூறியிருக்கிறார். சமீபத்தில் ‘கடாரம் கொண்டான்’ படத்தை பார்த்து விட்டு நடிகர் விக்ரமை கமல் பாராட்டியிருக்கிறார். எனவே மருதநாயகமாக விக்ரம் நடிப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. எனவே மருதநாயகம் வெளியாகும்.

இந்த ஆண்டில் கீர்த்தி சுரேஷின் படங்கள் எதுவுமே வெளியாகாததால், அவரின் மார்க்கெட் சரியுமா..?
சி. அட்சயன், அம்பாறை.
கீர்த்திக்கு ‘2018 காட்டில் அடை மழை’ என்றே சொல்லணும். சாமி-2, சண்டைக் கோழி-2, நடிகையர் திலகம், சீமராஜா, தானா சேர்ந்த கூட்டம், சர்க்கார் என்று அடுத்தடுத்து படங்கள் வெளியாகின. ஆனால் அம்மணிக்கு யாரு கண்ணு பட்டுச்சோ 2019இல் தமிழ்ப் படங்கள் எதுவும் அவரின் கைவசம் இல்லை.
‘நடிகையர் திலகம்’ படத்தின் தோல்விக்கு பிறகு கீர்த்திக்கு தமிழில் அதிர்ஷ்டம் இல்லாமல் போய்விட்டது.
இதே வேளை தெலுங்கில் நிதினுக்கு ஜோடியாக ‘ரங்தே’ படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் மோகன்லாலுடன் ஒரு பெரிய பிரமாண்ட படத்திலும் நடித்து வருகிறார். தமிழில் விஜய் நடிக்கும் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடி கீர்த்திதான். கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள அடுத்த படத்திலும் கீர்த்தியைதான் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். எனவே அடுத்த ஆண்டில் கீர்த்தியின் நிறைய படங்கள் வெளியாகும். மாஸ் நடிகர்களுக்கு ஜோடியாக வருவதால், இந்த இடைவெளி அவருக்கு மார்க்கெட் சரிவை ஏற்படுத்தாது.

இந்திய நடிகர்களில் இன்றைய தேதியில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் யார்?
கே.கௌதமன்- வவுனியா.

பொலிவுட்டில் நடிகர்; ஹிருத்திக் ரோஷன் ‘வார்’ படத்திற்கு 100 கோடி வரை சம்பளமாக பெற்றுள்ளார் என்று கூறுகிறார்கள்.
இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் ‘வார்.’ இந்தியில் மட்டுமின்றி, தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் இந்தப் படம் டப் செய்து வெளியிடப்பட்டது. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். அதன்படியே மெகா வெற்றியைப் பெற்றிருக்கிறது ‘வார்’ திரைப்படம். இந்த ஆண்டில் அதிக வசூல் செய்த படமாகவும் பொலிவுட்டில் இந்தப் படம் மாறியிருக்கிறது. படம் வெளியான 15 நாட்களிலேயே ரூ.300 கோடியை தாண்டியிருக்கிறது. இந்தப் படத்தில் நடித்ததற்காக ஹிருத்திக் ரோஷனுக்கு படத்தின் வருமானத்தில் 40 சதவீதம் சம்பளமாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது. படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.170 கோடி. இதுவரை படத்தின் தியேட்டர் உரிமை, டிஜிட்டல் உரிமை, சாட்டிலைட் உரிமை, இன்னும் சில உரிமைகள் என ரூ.350 கோடிக்கும் மேல் வருவதற்கு வாய்ப்பிருப்பதாக கூறுகிறார்கள். இதை வைத்துப் பார்க்கும் போது, ‘வார்’ படத்திற்கு ஹிருத்திக் ரோஷனின் சம்பளமாக எப்படியும் ரூ.100 கோடியாவது போய் சேரும் என்று பொலிவுட் சினிமா உலகினர் அடித்து சொல்கிறார்கள்.

விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி நடிக்கிறாராமே உண்மையா..?
என்.மயூரி- வாழைச்சேனை.
பேட்டையில் ரஜினிக்கு வில்லனாக நடித்ததற்காக எல்லா முன்னணி நடிகருக்கும் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பார் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்.
அதன்படியே விஜய்க்கு, விஜய்சேதுபதியை வில்லனாக்கி பார்க்க ஆசைப்பட்ட ஒரு இயக்குநர் விஜய்சேதுபதியை அணுகி அவரிடம் பேசினாராம். உடனே விஜய்சேதுபதி சம்மதம் சொன்னதால் சந்தோசப்பட்ட இயக்குநர் அவரிடம் சம்பளம் பற்றி கேட்டதற்கு 20 கோடி தாருங்கள் என்று விஜய்சேதுபதி கேட்டதால் தயாரிப்பாளரும், இயக்குநரும் ஆடிப்போய் விட்டார்களாம்.
வில்லனாக நடிப்பதை தவிர்க்கவே அவர் அவ்வளவு பெரிய தொகையை கேட்டதாக சொல்லப்படுகிறது.🔴

Saturday, October 19, 2019

ஜெயலலிதாவின் வாழ்க்கை படமாகிறதாமே, ஜெயலலிதாவின் வேடத்துக்கு நடிகை ஷகீலா பொருத்தமாக இருப்பார் என்பது எனது கணிப்பு…?

MANI SRIKANTHAN
ஆர்.சுதர்ஷன்- வவுனியா.

என்ன சுதர்ஷன் ஜெயலலிதாவை இப்படி சொல்லிட்டீங்களே…
‘ஒரே முறைதான் உன்னோடு பேசி பார்த்தேன்’ என்ற பாடல் காட்சியை பாருங்கள். அப்புறம் உங்களின் கருத்தை சொல்லுங்கள். நீங்கள் சொல்லும் ஷகீலா ஒரு வேளை வயதான ஜெயலலிதாவின் வேடத்துக்கு பொருந்தலாம்.
இயக்குநர் விஜய் இயக்கத்தில் ‘தலைவி’ என்ற பெயரில் படமாகும் ஜெயலலிதாவின் வேடத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் இந்த படம் தயாராகிறது.
கங்கனா ரணாவத் ஜெயலலிதாவின் வேடத்தில் நடிப்பதற்காக 20 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம்.
MANI SRIKANTHAN
தலைவி படத்தில் கங்கனா ரணாவத் நான்கு காலகட்டங்களில் நான்கு விதமான தோற்றங்களில் வருகிறார் என்றும் அவரது தோற்றங்களை ஹங்கர் கேம்ஸ், கேப்டன் மார்வல், பிளேட் ரன்னர் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய ஒப்பனை கலைஞர் ஜேசன் கொலின்ஸ் வடிவமைக்கிறார்.
சமீபத்தில் இவருக்கு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் மேக்கப் போட்டு பார்க்கப்பட்டதாம்.
ஜெயலலிதாவின் வேடம் கங்கனா ரணாவத்துக்கு கனகச்சிதமாக பொருந்தியும் விட்டிருக்கிறதாம். ஆகவே உங்கள் ஷகீலா தெரிவு சரிபட்டு வராது!

திரிஷாவுக்கு அடுத்த இடத்தில் மூத்த நடிகை அந்தஸ்தை யாருக்கு கொடுக்கலாம்.?
ஆர். கீதா- கிராண்பாஸ், கொழும்பு-14

சந்தேகமேயில்லாமல் தமன்னாவுக்கு கொடுக்கலாம். 13 வருடங்களாக திரைத்துறையில் இருக்கிறார். சைரா நரசிம்மா ரெட்டி, பெட்ரோமாக்ஸ், ஆக்ஷன் என்று அடுத்தடுத்து படங்கள் வெளியாக உள்ள நிலையில் இப்போதும் பிஸியாக அவர் இருப்பது சாதனைதானே!
MANI SRIKANTHAN
“எல்லாரையும் போல நானும் லட்சியத்தோடுதான் சினிமா துறைக்கு வந்தேன். அந்த லட்சியத்தை முதல் படத்திலேயே அடைந்து விட்டேன். 13 வருடங்கள் கதாநாயகியாக எனது பயணம் நீடித்துக் கொண்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வளவு பெயரையும் புகழையும் முன்பே எதிர்பார்க்கவில்லை. சினிமா என்றால் எனக்கு விருப்பம். அதனால்தான் நடிகையானேன்.
நட்சத்திர அந்தஸ்து என்பது சினிமாவுக்கு வந்த புதிதில் என் மனதில் இருக்கவில்லை. நடிகையாக கேமரா முன்னால் வந்ததுமே எனது லட்சியம் நிறைவேறி விட்டது. மற்றதெல்லாம் போனஸ்தான். எந்தத் துறையாக இருந்தாலும் செய்கிற வேலையை விருப்பத்தோடு செய்தால் எல்லாமே நம்மை தேடி வரும்.” என்று சமீபத்தில் தமன்னா ஒரு நேர்காணலில் சொல்லியிருக்கும் பொன் மொழிகள்.

வரலாற்று படங்கள் வெற்றிப் பெறுமா..?
கே.எப்.எச். அஸ்னா- கெக்கிராவை.

இந்தியாவில் அதிக பொருள் செலவில் தயாரிக்கப்பட்ட பாகுபலி திரைப்படங்கள் இரண்டும் மெகா வெற்றியை கொடுத்ததே மறந்து விட்டீர்களா…
இப்போது இந்திய பெறுமதியில் 800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை படமாக்கும் வேலையும் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் நடிக்க அனைத்து மொழிகளில் இருந்தும் 14 முன்னணி நடிகர்-நடிகைகள் தேர்வாகி இருப்பதாக கூறப்படுகிறது.
பொன்னியின் செல்வன் படத்துக்காக தலைமுடியை நீளமாக வளர்க்கும்படி கதாநாயகர்களிடம் மணிரத்னம் கேட்டுக்கொண்டு இருக்கிறார். சரித்திர காலத்து கதை என்பதால் மன்னர் உள்பட அனைத்து ஆண் கதாபாத்திரங்களுக்கும் தலை முடி நீளமாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த அறிவுரையை வழங்கி இருக்கிறார். அதன்படி நடிகர்கள் தலைமுடியை நீளமாக வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்களை வைரமுத்து எழுதுகிறார்.
தாய்லாந்தில் உள்ள காடுகளில் 100 நாட்கள் படப்பிடிப்பை நடத்தப் போகிறார்கள்.
MANI SRIKANTHAN
இதே வேளை பாகுபலியை மிஞ்சும் கிராபிக்ஸ் காட்சிகளுடன் அதிக பொருட் செலவில் இராமாயணம் படத்தை மலையாளத்தில்  எடுக்கின்றனர். இது மூன்று பாகங்களாக மூன்று மொழிகளில் தயாராகிறது.
பிரபல தெலுங்கு பட அதிபர் அல்லு அரவிந்த், மது மஞ்சனா, நமித் மல்கோத்ரா ஆகியோர் தயாரிக்கின்றார்கள்.
இந்த படத்தில் இராமன் கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் நடிக்கிறார். சீதையாக நடிக்க சினேகாவிடம் பேசி வந்தனர். தற்போது அவருக்கு பதில் தீபிகா படுகோனே நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ராவணன் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபாசிடம் படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ராவணன் வேடத்துக்கு பிரபாசின் தோற்றம் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறார்கள்.

பராட்டா சூரி நாயகனாக நடிக்கப் போகிறாராமே, சரிபட்டு வருமா?
என்.ரேகா-  மொரட்டுவை.

MANI SRIKANTHAN
கதாநாயகர்களாக மாறிய நகைச்சுவை நடிகர்கள் கவுண்டமணி, வடிவேல், விவேக், கருணாஸ், சின்னி ஜெயந்த், சந்தானம், ஆர்.ஜே.பாலாஜி, யோகிபாபு வரிசையில் இப்போது சூரியும் சேர்ந்து இருக்கிறார்.
நாயகர்களாக நடிக்க ஆசைப்பட்டு காணாமல் போன நகைச்சுவை நடிகர்கள்தான் அதிகம். அந்த லிஸ்டில் சூரி வருவாரா என்பதை காலம் தான் முடிவு செய்யும். ஆனாலும் சூரி ரொம்பவும் உசாரான பேர்வழி, ரொம்ப கவனமாக இருப்பார் என்று கோடம்பாக்க நண்பர்கள் சொல்கிறார்கள்.
வெண்ணிலா கபடிக் குழு படத்தில் அறிமுகமான சூரி இதுவரை 60 பது படங்களில் நடித்துள்ளார். இப்போது வெற்றிமாறன் இயக்கவுள்ள படத்திலேயே இவர் நாயகனாக நடிக்க இருப்பதாகக் கேள்வி.🔴

Saturday, October 5, 2019

பள்ளேகொடையில் முதல் தமிழ் நூலகம்!


-மணி ஸ்ரீகாந்தன்


‘ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்; அவனே எனது வழிகாட்டி!’ என்று ஜுலியஸ் சீசர் குறிப்பிடுகிறார்.
புத்தக வாசிப்பு என்பது ஒரு மனிதனை முழுமனிதனாக மாற்றும் என்பது அறிஞர்களின் ஏகோபித்த கருத்து.

ஆனால் நம்மில் எத்தனை பேர் வாசிக்கிறோம், என்று பார்த்தால் அது மிகவும் குறைவான எண்ணிக்கையே காட்டுகிறது.
நம் நாட்டை பொறுத்த வரையில் சிங்களத்தில் நிறைய வாசிப்பு பழக்கம் இருக்கிறது. தமிழில் மிகவும் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். இலங்கையில் நடைபெறும் புத்தக கண்காட்சிகளுக்கு வரும் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டாலே அதனை புரிந்துகொள்ளலாம்.
mani srikanthan
பள்ளேகொடை நூலகம்
 வடக்கு, கிழக்கு என்று பார்த்தால் அங்கே ஓரளவுக்கு வாசிகசாலைகள் அமைக்கப்பட்டு, வகுப்பறைகளுக்கு வெளியேயும் வாசிப்பு பரவாலாக நடைபெறுகிறது.
ஆனால் மலையகத்தில் பரவலாக இல்லை என்றாலும், விரல்விட்டு எண்ணும் அளவுக்கு ஓரிரு நூலகங்கள் மாத்திரமே உள்ளன.
சிறுதோட்ட பகுதிகளை உள்ளடக்கிய காலி, களுத்துறை, இரத்தினபுரி உள்ளிட்ட மாவட்டங்களை எடுத்துக்கொண்டால் நூலகங்கள் மருந்துக்கும் இல்லை. ஓரிரு பாடசாலைகளில் நூலகங்கள் இருந்தாலும் அவை முறையான பராமரிப்பு இல்லாமலும், நூல்கள் வாசிக்கப்படாமலும் தூசு படிந்து கிடக்கின்றன.

இதெற்கெல்லாம் முக்கிய காரணம் ஆசிரியர்களே! ‘சிலபஸ்’ கல்வி மட்டுமே போதுமானது என்று அவர்கள் கருதுவதால் மாணவர்களை மேலதிக வாசிப்புக்கு அவர்கள் தூண்டுவதில்லை.
இதனாலேயே நம்மில் படைப்பாளர்கள் உருவாகுவதில்லை. தமிழகத்தை எடுத்துக்கொண்டால் ஒரு நகரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்பாளர்கள் இருப்பார்கள். ஆனால் இங்கே அப்படி இல்லை. நமக்கு தெரிந்து மலையகத்தை எடுத்துக்கொண்டால் எழுத்தாளர்களில் தெளிவத்தை ஜோசப், அந்தனி ஜீவா, மு.சிவலிங்கம், பிரமிளா பிரதீபன்,பாலா சங்குபிள்ளை உள்ளிட்ட ஒரு சிலரை மட்டுமே சொல்ல முடியும்.

mani srikanthan
வாசிப்பு பழக்கம் மட்டுமே நல்ல ஆளுமைகளையும், படைப்பாளர்களையும் உருவாக்கும் இதனை நாம் பள்ளிகளில் இருந்துதான் தொடங்க வேண்டும். இதற்கு ஆசிரியர்கள் துணையாக இருக்க வேண்டும். ஆனால் நம்மில் ஆசிரியர்களுக்கும் வாசிப்பு பழக்கம் என்பது பெரும்பாலும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆசிரியர் தொழிலுக்கு வந்துவிட்டாலே அவர்கள் கல்வியில் அனைத்தையும் கற்றுத் தேர்ந்து விட்டதாக நினைப்பதாக ஒரு கூற்று உண்டு.

மேல் மாகாணத்தில் அமையப்பெற்றுள்ள மாவட்டம்தான் களுத்துறை. இந்த மாவட்டத்தில் தமிழர்கள் வசிக்கும் 56 தோட்டங்களும், 37தமிழ் பாடசாலைகளும் இருக்கின்றன.
இங்கெல்லாம் இரு நூறுக்கும் அதிகமான ஆலயங்கள் அமையப்பெற்றுள்ளதோடு, இன்னும் பல ஆலயங்கள் புதிது புதிதாக உருவாகி வருகின்றன.
தோட்ட மக்கள் உழைக்கும் பணத்தில் பெருந்தொகையை ஆலயங்களுக்கே செலவிடுகிறார்கள். ஆனாலும் இந்த மாவட்டத்தில் தமிழர்களின் கல்வி மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறது.

இதில் இன்னொரு வெட்கக்கேடான விடயம் என்னவென்றால் இந்த மாவட்டத்தில் சில பாடசாலைகளில் கோயில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது.
‘கும்பாபிஷேகம் செய்யப்பட்டு இருப்பதால் சாமியை காயப்போடக் கூடாது’ என்று ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பெரிய குருக்கள் வரவழைக்கப்பட்டு சிறப்பு பூஜையும் செய்யப்படுகிறது.
அதோடு வருடந்தோரும் வருசாபிஷேகம் செய்யப்பட்டு ஊரில் உள்ளவர்களுக்கும், மாணவர்களுக்கும் அன்னதானமும் வழங்கப்படுகிறது.
கோயில் கட்டிய அதிபர்களிடம் இதுப்பற்றி கேட்டால்,
‘நம்ம பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்காகத்தான்’ என்று சொல்கிறார்கள். ஆனால் அப்படி ஒன்றும் கோயில் கட்டிய பள்ளிகளில் கல்வி  வளர்ச்சி கண்டுவிட்டதாக தெரியவில்லையே!

mani srikanthan
து.செல்வகுமார்
இதில் கவனிக்க வேண்டிய ஒரு விடயமும் இருக்கிறது. இவர்கள் சொல்லுகிற கடவுள்கள் பிறந்த மண்ணில் (தமிழகத்தில்) பள்ளிகளில் கோயில்கள் இல்லை, சமயம் பாடமாகவும் இல்லை. ஆனால் அவர்கள்தான் மருத்துவத்திலும், அறிவியலிலும் உயர்ந்து இருக்கிறார்கள். நிலவுக்கு ரொக்கட்டும் அனுப்புகிறார்கள்.

“ஒரு  கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது ஒரு நூலகம் கட்டுவேன்” என்றாராம் மகாத்மா காந்தி.
வாசிப்பு என்பது ஒரு ஆத்மார்த்தமான விசயம் என்பதை நம்மவர்கள் இன்னும் புரிந்து கொள்ளாமல், ஆன்மீகத்தால் ஒரு அறிவு சார்ந்த சமூகத்தை உருவாக்கலாம் என்று நினைப்பது மடமை.

இதே வேளை களுத்துறை மாவட்டத்தில் உள்ள மத்துகமை பள்ளேகொடை என்ற தோட்டத்தில் உள்ள சில இளைஞர்கள் ஒன்றிணைந்து ஒரு சிறிய நூலகத்தை அமைத்திருக்கிறார்கள் என்பதை கேள்விப்பட்டு நாம் அந்தப் பகுதிக்கு ஒரு விசிட் அடித்தோம்.

பள்ளேகொடை தோட்ட மைதானத்தில் அமைக்கப்பட்டிருக்கும் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வு அறை கட்டடத்தையே நூலகமாக மாற்றி எமக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார்கள்.
வாசி, வாசிக்கப்படுவாய் என்ற அழகான பேனர் வாசகத்தை கடந்து உள்ளே சென்று பார்த்தோம். ஐநூறுக்கும் மேற்பட்ட புத்தகங்களால் அந்த அறை நிறைந்து காணப்பட்டது.
அம்பேத்கர், பெரியார். பெர்னாட்ஷா, என்று நமக்கு நிறைவான தலைப்புகளில் சில புத்தகங்கள் கண்ணில்பட்டன.

“நமக்கு தெரிந்த அன்பர்களிடம் கேட்டு புத்தகங்களை வாங்கி இங்கே வைத்திருக்கிறோம், இன்னும் இந்த நூலகத்தை விரிவுபடுத்தணும், ஆனால் அதற்கு ஒரு பெரிய கட்டடம் தேவை. இதுக்கு யாராவது நல்ல மனம் படைத்த அரசியல்வாதிகள் உதவினால் நன்றியோடு இருப்போம்” என்று கோரிக்கை வைக்கும் அந்தப் பகுதியைச் சேர்ந்த செல்வா கவியிடம், “நூலகம் அமைக்கும் யோசனை எப்படி வந்தது?” என்று நாம் ஆச்சரியத்துடன் கேட்டோம்.

mani srikanthan
ப.ரொகான்
“ஆனந்தா விளையாட்டு கழகத்தின் பொருளாளர் ரொஹான் என்னிடம் வந்து இந்த நூலகம் அமைக்கும் எண்ணத்தை சொன்னார் உடனே எங்கள் அமைப்பைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் ஒன்றிணைந்து இந்த நூலகத்தை உருவாக்கினோம்.
‘நூலகம் இல்லாத ஒரு ஊரை நான் ஒரு ஊராகவே மதிப்பதில்லை’ன்னு தோழர் லெனின் சொல்லியிருக்கிறாராம். அப்படி பார்த்தால் களுத்துறையில் இருக்கும் ஒரே ஊர் அது எங்க ஊருதாங்க” என்று நெஞ்சு நிமிர்த்தி செல்வா சிரிக்கிறார்.

இந்த நூலகம் உருவாவதற்கு ப.ரொகான்,  து.செல்வகுமார், சா.டிலான்,லோ.நிலேஷ் பிரவீன் உள்ளிட்டோர் தூண்களாக இருந்து செயல்பட்டிருக்கிறார்கள்.அவர்களோடு ஆனந்தா விளையாட்டு கழக தலைவர் பா.குருபரன், செயலாளர் பா.மோகனதாஸ் உள்ளிட்ட பலர் ஆதரவாக இருந்து செயல்பட்டிருக்கிறார்கள்.

களுத்துறை மாவட்டத்துக்கான முன் மாதிரி நூலகம் அமைவதற்கு காரணமாக இருந்த ரொஹானிடம் பேசினோம்,
“கல்வி ரீதியில் இந்த மாவட்டம் மிகவும் பின் தங்கிய நிலையிலேயே இருக்கிறது. இன்றைய காலத்துக்கு நமக்கு தேவையானது கல்வியும் நல்ல கருத்தியல் சிந்தனைகளும் தான். எமக்கு கிடைக்காத இது போன்ற விசயங்கள் எமது வருங்கால சந்ததிகளுக்கு நாம் அமைத்துக் கொடுப்பது ஒவ்வொருவரினதும் கடமைதானே”என்ற ரொஹானின் கண்களில் எதையோ சாதித்துவிட்ட மாதிரி ஒரு பூரிப்பு!
mani srikanthan
இந்த இளைஞர்களின் தூர நோக்கு பார்வையும், சமுதாய அக்கறையும் நம் எல்லோருக்கும் இருப்பது அவசியம், ஆனாலும் இதனை ஊக்கப்படுத்த வேண்டிய ஆசிரியர்கள் எப்படி இருக்கிறார்கள் தெரியுமா? புளத்சிங்கள பகுதியில் உள்ள ஒரு பிரபலமான தமிழ் பாடசாலைக்கு மனோ கணேசனின் அபிவிருத்தி நிதியிலிருந்து 11லட்சம் ரூபாவை நூலக கட்டடம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது.
அந்தக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, இப்போது அந்தக் கட்டடம் ஒரு கணித வகுப்பறையாக இயங்கி வருகிறது. ‘நூலகத்தில் ஏன் நூல்கள் இல்லை, நூல்களுக்கு என்ன நடந்தது?’ என்று ஒரு சமூக தன்னார்வலர் பாடசாலை நிர்வாகத்திடம் கேட்டிருக்கிறார்.
அதற்கு அந்தப் பாடசாலையின் அதிபர் உள்ளிட்ட ஆசிரியர்கள், ‘பாடசாலைக்காக அமைத்து தரப்படும் கட்டடத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை நாம்தான் தீர்மானிப்போம். அதனை யாரும் கேள்வி கேட்கமுடியாது’ என்று பதிலளித்து இருக்கிறார்கள்.
அந்த பாடசாலையின் வாசிகசாலைக்காக இருந்த புத்தகங்களுக்கு என்ன நடந்தது? என்று தேடிப் பார்த்ததில் அந்த நூல்கள் ஒரு ஒதுக்குப்புறமான அறையில் தூசுப்படிந்து அநாதரவாக கிடக்கின்றனவாம்.
‘அக்கறை உள்ள பெற்றோரும், அலமாரி நிறையப் புத்தகங்களும் வாய்க்கப்பெறும் குழந்தையே அதிர்ஷ்டசாலி’
என்கிறார், ஜோன்மெக்காலே. ஆனால் இவர்களின் சிந்தனையும் எண்ணமும் வேறு மாதிரி இருக்கிறதே....🔴